ஏப்ரல் 4,2026 அன்று தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியாகி அதில் தமிழக வெற்றிக்கழகம் எனும் கட்சியை தோற்றுவித்த நடிகர் ஜோசப் விஜய் அவர்கள் தனி பெரும் கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று வாகை சூடியுள்ளார். இந்த முடிவு தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெரிய அதிர்ச்சி. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கட்சிக்கே பெரிய வியப்புதான். வெற்றி பெற்ற வேட்பாளருக்கும் மேலும் அதிர்ச்சியாக இருக்க வாய்ப்புள்ளது. வெற்றி பெற்றது நான் தானா என்னும் பேரதிர்ச்சி, இன்பதிர்ச்சியாக மாறியுள்ளது. சொல்லப்போனால் வாக்களித்த வாக்காளர்களுக்குத் தன்னுடைய தொகுதி வேட்பாளர் யார்? அவர் பெயர் என்ன? ஊர் என்ன? என்று தெரிந்திருக்க வாய்ப்புக் குறைவுதான். அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் பெரிய அளவிற்கு இல்லை. அவர்களுக்கு தெரிந்த ஒரே முகம் நடிகர் விஜய். ஒரே சின்னம் விசில். இந்த அடையாளத்தைத் தாண்டி வேறு ஒன்றும் அறிவதற்கு இல்லை. அதற்கு மேல் தேவையும் எழவில்லை. ஆனாலும் தாவெக வெற்றி பெற்றுவிட்டது. அதுவும் கூட்டணி இல்லாமல், ஒரே கட்சி தனிப்பெரும்பான்மையுன் ஒரே ஒரு அடையாள வேட்பாளர் ஒரே ஒரு சின்னம் 108 தொகுதிகளில் வெற்றி. இதை யாரால் தான் நம்ப முடியும்? ஆனாலும் நம்பியாக வேண்டும்.
இதை ஆளும் கட்சியாக இருந்தவர்கள், எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், ஊடகவியலாளர்கள், நடுநிலைமையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட ஏற்றுக்கொள்ள மனமில்லை. சில ஊடகவியலாளர்கள் உடனே 1967க்கு சென்று விடுகிறார்கள். இன்னும் சிலர் 1972ல் எம்ஜிஆர் கட்சி தொடங்கும் பொழுது என்ன ஆனது தெரியுமா? என்று அங்கலாய்க்கின்றனர். அவர்கள் அனைவரும் கடந்த கால வரலாற்றைப் பேசுகிறார்களே ஒழிய நடப்புக் காலத்திற்கு வரமறுக்கிறார்கள். அவர்களுக்கு வரலாறு மட்டும்தான் தேவை இல்லை. புவியலும் வேண்டப்படுகிறது. அறிவியல் வேண்டப்படுகிறது. இதை விடுத்து பழைய பஞ்சாங்கத்தைப் பேசிதிரிவதில் என்ன பெருமை இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களை அரசியல் படுத்தவோ? அரசியல் அறிவு கொடுக்கவும் ஆளுங்கட்சி தவறிவிட்டதோ? என்று நினைக்க தோன்றுகிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆட்சி என்பது அதிகாரத்தை தரும். இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு வாக்களித்த மக்களுக்கு நலதிட்டங்கள் செய்வதைத் தாண்டி வேறொன்றும் இல்லை. ஆனால் அப்படி செயல்பட்டார்களா? அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு வேண்டியதை மட்டும் சாதித்து கொண்டார்கள். அது பணமாக இருக்கலாம், புகழாக இருக்கலாம், சொத்தாக இருக்கலாம் ஆனால் வாக்களித்த மக்களுக்கு பெரிய அளவிற்கு நன்மை விளையவில்லை என்பது வருந்தத்தக்க செயல். திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்திய ஒரு சில திட்டங்களைத் தவிர மக்கள் வாழ்க்கையில் தரம் உயர்த்தப்படவில்லை. எதை செய்தாலும் தேர்தலை மனதில் வைத்து தான் அரசியல் செய்ய தொடங்கினார்கள். சான்றுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுப்பதைக் கூறமுடியும். அரசு கட்டிலில் ஏறிய உடனே வழங்குவதாக கூறியிருந்தார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்தப் பின்பு தான் வழங்கினார்கள். அதேபோன்று தேர்தல் நெருங்கும் வேளையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் வழங்கியது. இது போன்ற செயல்கள் அனைத்தும் தேர்தலை மனதில் வைத்து செயல்பட்டதே ஒழிய வேறு காரணம் இல்லை. மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினியும் தேர்தலுக்கு ஓரிரு வாரத்துக்கு முன்பாக வழங்கப்பட்டது.
இப்படி எல்லாவற்றையும் குறைகளாக மட்டும் தான் காரணமாக சுட்ட முடியுமா? என்றால் இல்லை. சில நன்மைகளும் விளைந்தன. அதே மாணவர்களுக்கு நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், இல்லம் தேடிக்கல்வி, பெண் கல்வி முன்னேற்றத்திற்கு கல்லூரி மாணவிகளுக்கு வழங்கிய மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட திட்டங்களால் ஏராளமான படிக்கும் எண்ணம் கொண்ட ஏழை எளிய மாணவர்களை வெற்றி பெற செய்தது. பெண்களுக்கு வழங்கிய குடும்ப உதவித்தொகை விடியல் பயணம் உள்ளிட்டவை பெண்கள் வாழ்க்கையில் ஒரு தன்னம்பிக்கையை தந்தது. ஆனாலும் குடும்ப அட்டைதாரர்க்கான தொகை அனைத்துப் பெண்களுக்கும் முறையாக சென்று சேரவில்லை என்பது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. பெரும்பாலும் ஆளும் கட்சி எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு தானே? அப்படி என்றால் எந்த கட்சியும் நல்ல கட்சி இல்லையே என்று சொல்லிவிட முடியும். அல்லது எந்தக் கட்சி தான் நல்ல கட்சி? அல்லது எந்த கட்சி புனிதமானது? என்ற கேள்வியை எழுகிறது. அப்படி எந்த ஒரு கட்சியையும் புனிதமானது என்று சொல்ல முடியாது. அதனால்தான் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடைபெறுகிறது. இதற்கிடையில் மாற்று என்று வந்தவர்கள் 1. தேசிய முற்போக்கு திராவிட கழகம், 2. மக்கள் நீதி மையம், 3. நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளைக் குறிப்பிடலாம். இந்த மூன்று கட்சிகளும் மக்களின் நன்மதிப்பைப் பெறவில்லை. நடிகர் விஜயகாந்த்திற்கு மட்டும் ஒரு நல்ல வாய்ப்பை மக்கள் கொடுப்பதற்கு தயாராக இருந்தார்கள். அதன்படி ஒரு வாய்ப்பையும் கொடுத்துப் பார்த்தார்கள். ஆனாலும் அவரும் தன்னுடைய அதீத செயல்களால் எதிர்ப்பைச் சம்பாதிக்க தொடங்கினார். மக்களும் அவரை ஓரங்கட்டினர். அதேபோன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், விஜயகாந்தின் வெற்றிடத்தை நிரப்பவே வந்தார்.
ஒரு காலத்தில் நடிகர் ரஜினி காந்தை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள் அந்த வாய்ப்பை தான் நடிகர் விஜயகாந்த்திற்கு கொடுத்தனர். விஜயகாந்த் சொதப்பவே எப்படியாவது அதை மீட்டெடுக்க சீமான் முயற்சி செய்தார். ஆனால் இன்று வரை அவரை மக்கள் நம்பத் தயாராக இல்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான இரண்டு காரணங்கள் 1. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகர். 2. தந்தை பெரியார். தொடக்க காலத்தில் இருவர் மீதும் நன்மதிப்பு வைத்து பேசி வந்தவர் சில கூடாது செயல்களால் இருவரையும் எதிர் எதிர் துருவங்களில் வைத்து அரசியல் செய்தார். குறிப்பாக பெரியாரை பிரபாகரனுக்கு எதிராக நிறுத்தி யாரையோ திருப்திப் படுத்த முயற்சித்தார். ஆனால் மக்கள் வெறுக்கத் தொடங்கினர். இன்னும் சொல்லப்போனால் இவர் வருவதற்கு முன்பு தலைவர் பிரபாகரன் மீது நல்ல மதிப்பையும் மரியாதையும் கொண்டிருந்த வெகுஜன மக்கள் இவரின் பேச்சியின் ஒவ்வாமையின் காரணமாக பிரபாகரன் மீது ஒரு சலிப்பை ஏற்படுத்தி விட்டாரோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அதன் பிறகு தான் சீமானின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்தது.
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் எந்த வேகத்தில் கட்சி தொடங்கினாரோ? அதே வேகத்தில் அவருடைய கட்சி செயலிழக்க செய்துவிட்டது. அவருடைய கொள்கையும் கோட்பாடும் தேர்தலில் செல்லுபடியாகவில்லை. நீர்த்துப் போய்விட்டது. பின்னர் தன்னுடைய கட்சியை திமுகவிடம் இணைத்து (அடமானம்) விட்டார். இதற்கிடையில் நடிகர் விஜய் தனக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து கட்சியைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துசேர்ந்தார்.
இது அவருடைய நோக்கம் மட்டுமன்று. அவருடைய அப்பாவின் நீண்ட நாள் கனவு என்று சொல்ல முடியும். அதன் அடிப்படையில் தான் பெரும்பாலான திரைப்படங்கள் அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் ஆட்சியாளர்களை எதிர்க்கும் எண்ணம் கொண்டவராக கதையின் நாயகர்களைப் படைத்தார். அதன் அடிப்படையில் தன் மகனை திட்டமிட்டு உருவாக்கினார். சில காலங்கள்தந்தை மகன் இருவருக்கும் கருத்து முரண்பாடும் ஏற்பட்டது. அது குடும்பம் மனைவி மக்கள் வரை அதன் தாக்கம் எதிரொலிக்க தொடங்கியது. ஆனாலும் தன்னுடைய குடும்பப் பிரச்சினைகளை வெளியில் தெரியாமல் குறிப்பாக தன்னுடைய ரசிகர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் தேர்தலுக்கு முன்பாக பிரச்சினை வெடிக்க தொடங்கியது. ஆனாலும் அது குறித்து அவர் கவலை கொள்ளவில்லை. இப்படி வீட்டிற்கு வீடு வாசர்ப்பாடி என்பதைப்போல வீடுகள் தோறும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் என்பதை மக்கள் மன்றத்தில் தெளிவு படுத்தினார்.
இப்படி பிரச்சினைகள் இருந்தாலும் ரசிகர்களின் மனநிலை மாறவில்லை. இதற்கு காரணம் ஜென்சி தலைமுறைகள் எதுவும் தவறில்லை என்ற மனப்பான்மை தான் காரணம். பெற்றோர்களே பிள்ளைகள் தவறு செய்த போது அதைச் சுட்டிக் காட்டினால் அதற்கு அவர்களின் வாதம், அது ஒன்றும் தவறில்லை. நான் சரியாகத்தான் செய்தேன். அது தவறாக போகும் என்றா நினைத்த செய்தேன்? என்று சாதிக்கிறார்கள். இந்த மனப்போக்கு எல்லாவற்றையும் நியாயப்படுத்துகிறது. பெற்றோர்கள் பிள்ளைகளின் மனநிலையை உணர்ந்து செயல்படுகின்றனர். பிள்ளைகள் தங்கள் கருத்துகளில் உறுதியாக இருக்கிறார்கள். தவிர, மனவலிமையோடு இருப்பதில்லை. மற்றொன்று பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு 60% பிள்ளைகள் படிப்பதில்லை என்ற கருத்தும் பரவலாக இருக்கிறது. அதற்கு காரணம் அவர்கள் கைகளில் இருக்கும் செல்போன். செல்போன் இன்று ஆறாம் விரலாக அவர்கள் கைகளில் முளைத்துவிட்டது. செல்போனில் குறைந்தது நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை செலவழிக்கின்றனர். இன்னும் சிலர் இரவு நேரத்தில் தூங்குவதில்லை. காலை தூங்கி எழுந்ததும் கழிவறைக்குச் செல்லும் பொழுது கூட செல்போனோடு செல்வது வழக்கமாகி விட்டது.
எங்கும் எப்பொழுதும் செல்போனில் ரீல்ஸ் பார்ப்பது, ஸ்டேட்டஸ் போடுவது, ஸ்டோரி போடுவது இதையெல்லாம் பார்த்து மற்றவர்கள் லைக் கொடுப்பது, அப்படி லைக் வரவில்லை என்றால் அன்றைய நாள் அவர்களுக்கு சூனியமாக மாறுவது இப்படியே நாள் முழுவதும் கடந்து சென்று விடுகிறது. இதில் அவர்களுக்கு படிக்கவும் அறிவுப்பூர்வமாக சிந்திக்கவும் ஒரு சிலரை தவிர பெரும்பாலான மாணவர்களுக்கு நேரம் இல்லை. கலைக் கல்லூரி மட்டுமல்லாது, பொறியியல் கல்லூரி, மருத்துவம் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலும் Chat GPT பார்த்துப் படிக்கும் போக்கு வளர்வது அச்சத்தை தருகிறது. வலுவான சிந்தனையும் உண்மையான நோக்கமும் குறைந்து வருகிறது. பெரும்பாலான மாணவர்கள் Apple phone Update version வாங்குவதையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருக்கிறார்கள். இப்படி பட்ட சூழலில் நாட்டை பற்றி சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் ஏது?. குறைந்தபட்சம் தன் வீட்டையோ? பெற்றோர்களையோ? கூட எண்ணிப் பார்ப்பதில்லை என்ற பெருங்குறை நிலவுகிறது. இவர்களிடமிருந்து மக்கள் புரட்சியோ?, விவசாய புரட்சியோ?, மாணவர்கள் புரட்சியோ? எழுவதற்கு வாய்ப்பு இல்லை.
திரைக் கவர்ச்சி மட்டும் அவர்களுக்கு தனி உலகம். தாங்கள் விரும்பும் நடிகர் நடிகைகள் சொல்வதுதான் பெரும்பாலும் வரலாறு. இப்படிப்பட்டச் சிந்தனை கொண்டவர்களை என்னவென்று சொல்வது?. அவர்களுக்கு வாக்குரிமை என்றால் என்ன? வாக்குரிமையின் பலம் பலவீனம் பற்றி தெரிந்திருக்குமா? அப்படி தெரிந்திருந்தால் ஒரே கூட்டமாக சென்று ஒரு நடிகருக்கு இத்தனை பெரிய வாய்ப்பைத் தந்திருப்பார்களா? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுவதை இன்றும் பார்க்க முடிகிறது. இது ஒரு புறம் இருக்க.
மற்றொருபுறம் இந்த அரசியல் கட்சிகளும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்பு ஏதோ தங்களை கடவுளுக்கு நிகரான மனிதர்களாகவும் தங்களையே கடவுளாகவும் நினைத்து கொள்கிறார்கள் என்ற புரட்சியாளர் லெனின் சொன்ன சிந்தனை நினைவுக்கு வருகிறது. உண்மையிலேயே இந்த ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் தந்த ஒரு பரிசு. இது நிரந்தரமானது அல்ல. மாற்றத்திற்கு உண்டானது. மேலும் தங்களை அதிகாரத்தை நுகர்வதற்காக வாக்களிக்கவில்லை. தங்களுக்கு ஒரு நல்ல சேவகனை அல்லது ஒரு பணியாளரை தேர்வு செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் இப்படிப்பட்ட ஒரு மனோபாவம் அரசியல்வாதிகளிடம் இருப்பதில்லை.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அதிகாரம் என்ற ஒரே சிந்தனையில் மட்டுமே இருக்கிறார்கள். அதிகாரம் தான். உண்மையாக ஆழமாக உணர்ந்தாலும் உணரவிட்டாலும் அதிகாரம் தான் அது. மறுப்பதற்கில்லை மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த அதிகாரம் மக்கள் வழங்கிய அதிகாரம். நேற்று வரை தேர்தலுக்காக வாக்கு கேட்டு வந்தவர்கள் சாதி, மதம், மொழி, இனம் பார்க்காமல் வாக்காளர்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரிக்கிறார். சில நேரங்களில் அவர்கள் செய்யும் செயல் வினோதமாகவும் கோமாளித்தனமாகவும் இருப்பதை அனைவரும் அறிவோம். அதே வேட்பாளர் இன்று வெற்றி பெற்று விட்டால் அப்படியே எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது. வாக்கிற்காக கைகால்களைப் பிடித்துக் கெஞ்சிய அதே கரங்கள் மக்களை தள்ளி நிற்க சொல்கிறது ஆணையிடுகிறது.
இந்த அதிகார போதை ஐந்து ஆண்டுகள் வரை அவர்களை வைத்திருக்கிறது. பணம், புகழ், கார், பங்களா, சொகுசு வாழ்க்கை இப்படி ஆடம்பரமான வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுக்கிறது. பாவம் அவர்களும் இது நிரந்தரமானது என்று நம்புகிறார்கள். அதனால் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மறுப்பதன் காரணமாகவும் வாழ்க்கை முன்னேற்றம் கேள்விக்குறியாகவும் மாறிவிடுகிறது. இதுவெல்லாம் அந்தப் பதவி தரும் சுகம் இது பொதுவாக எல்லா மாநிலங்களிலும் நடக்கும் நிகழ்வு. சில மாநிலங்களில் இதைவிட மென்மையாகவும் கடுமையாகவும் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வெற்றி சொல்லும் பாடம் மிகவும் வினோதமானது. ஒரு பக்கம் ஆட்சியாளர்களின் பழமையான வறட்டு கௌரவம். மற்றொன்று மக்களை வழிநடத்திய முறை.பழமையான வறட்டு கௌரவம் என்பது ஆண்டாண்டு காலமாக அல்லது வாழையடி வாழையாக ஒரு குறிப்பிட்ட ஆட்சியாளர்கள் மட்டும்தான் அதிகாரத்திற்கு வருகிறார்கள். வயதானபோது அவரது மகனோ? மகளோ?, மருமகனோ? இப்படி ஒருவர் அந்த இடத்தை நிரப்புகிறார்கள் அல்லது அலங்கரிக்கிறார்கள். சில சமயத்தில் இரண்டு பேர் அதாவது மூத்த அரசியல் தலைவரும் இளைய அரசியல்வாதியும் சேர்ந்தே கோலோச்சுகின்றனர். அப்பா மாநில தேர்தலில் பங்கெடுத்து சட்டமன்ற உறுப்பினராகவோ மந்திரியாகவோ இருப்பார். மகன் தேசிய அளவில் பங்கெடுத்து மாநிலங்களவை உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினர் என்ற பதவியில் இருப்பார். இப்படி குடும்ப உறுப்பினர்களே குறிப்பிட்ட கட்சிகளில் இன்றளவும் இருந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் இது நடைபெறுகிறது.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாக ஆகும் ஒரு நாட்டில் வறுமையும் வேலைவாய்ப்பு திண்டாட்டத்தையும் ஒழிக்க முடியவில்லை என்ற ஒரு பெரும் குற்றச்சாட்டுக்கு மத்தியில் சாதி ஏற்றத் தாழ்வை ஒழிக்க விரும்ப மறுக்கின்றனர் என்பதுதான் குன்றின் மேல் இட்ட விளக்காய் தெரிகிறது. சாதியை அழித்து ஒழித்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் அதைக் கூர்மைப்படுத்தும் மதத்தையும் தூக்கிப்பிடிப்பதுதான் கவலை. தமிழ்நாட்டில் 1967க்கு பிறகு திராவிட கட்சி ஆட்சிக் கட்டிலில் அரியணை ஏறி 50 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர். எப்ப கேட்டாலும் எதை கேட்டாலும் இது திராவிடமண், சமூக நீதி மண், பெரியார் மண் என்று வாய் சவால்கள் விட்டு வருகின்றனர். சாறு விட்டு சட்டையைப் பிடித்துக் கொண்டிருப்பதை போன்று தான் இருக்கிறது இன்றைய ஆட்சியாளர்களின் கொள்கை.
இந்திய திருநாட்டிற்கே தமிழ்நாடு தான் வழிகாட்டுகிறது அல்லது இந்தியாவின் முகமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் இன்றைய திமுகழகம் மக்கள் மனதை வென்றெடுக்கவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது. முதல் வேலையாக முதலமைச்சராக இருந்த திரு. மு. க. ஸ்டாலின் தன்னுடைய மகனை எப்படியாவது அடுத்த முதலமைச்சராக கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முனைப்பிலேயே செயல்பட்டார். அதன் அடிப்படையில் தான் உதயநிதி ஸ்டாலினை தொடக்கத்தில் இளைஞர் அணி தலைவராக கொண்டுவரப்பட்டார். இளைஞர் அணி தலைவராக இருந்தவரை மெல்ல மெல்ல அதிகாரத்திற்கு கொண்டுவர விரும்பினர். சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவியை அவருக்கு கொடுக்கப்பட்டது. இல்லாத ஒரு துறையை அவருக்காக உருவாக்கி அமைச்சராக அழகு பார்க்கப்பட்டது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் என்பது தமிழ்நாட்டு அரசியலில் புதிய பதவி. அதன் பிறகு கட்சி மறு சீரமைப்பு என்னும் பெயரில் பெயரளவிற்கு மூத்த தலைவர்களுக்கு கட்சிக்குள் ஒரு சிலருக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டு தன்னகட்டினர். இவை எல்லாவற்றுக்கும் காரணம் தன்னுடைய மகனுக்கு துணைமுதல்வர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அரியணையில் அமர்த்துவதற்கு தான் என்பது எல்லோருக்கும் தெரியும். இது அவர்களின் உட்கட்சிப் பிரச்சனை என்று கடந்து போக முடியவில்லை. இது அவர்களுடைய கட்சியாக இருந்தாலும் மூத்த தலைவர்கள் அறிவுஜீவிகள் என்று திமுக கழகத்தில் இருப்பதை அனைவரும் அறிவர். திருச்சி சிவா, ஆ. ராசா உள்ளிட்ட தலைவர்கள் இருந்த போதும் தன்னுடைய மகன் என்ற அடையாளத்தை தாண்டி வேறு எந்த ஒரு அடையாளமோ அல்லது ஆளுமையோ இல்லை என்றாலும் அவர்தான் துணை முதல்வர் ஆனார். உம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்பதைப் போன்று இருந்தது. இந்த பழக்கம் திமுக கழகத்தை தாண்டி வெளியில் எதிரொலிக்க தொடங்கியது. ஒருவேளை இரண்டாவது முறை திமுக கழகம் வெற்றி பெற்றிருந்தால் உதயநிதி ஸ்டாலின் தான் முதல்வர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் எந்த அளவிற்கு மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தார்களோ? அதே அளவிற்கு சுயம்நலம் மிக்கவர்களாகவும் இருந்துள்ளனர். அதேபோன்று வாய்க்கொழுப்பு அதிகமானதும் உண்மை. குறிப்பாக அமைச்சராக இருந்த திரு. பொன்முடி, சட்டத்துறை அமைச்சராக இருந்த திரு. ரகுபதி உள்ளிட்ட பல அமைச்சர்கள் பொதுவெளியில் பேசிய பேச்சுக்கள் பொதுமக்களின் தன்மானத்தை சீண்டிப் பார்க்கும் தன்மையில் அமைந்திருந்தது. விமர்சனத்திற்கும் உள்ளானது. ஓசி பஸ், நீ எஸ்சி தானே? இந்த வசை சொற்களும் இந்த ஆட்சியை ராமனுடைய ஆட்சி தான் போன்ற சொல்லாடல்கள் வெகுஜன மக்களிடம் முகசுளிப்பை ஏற்படுத்தியது.
அதேபோன்று சிக்கலுக்கு தீர்வு காண்பதைத் தாண்டி, சிக்கலை மீண்டும் சிக்கலுக்கு வழிவகுக்கும் தன்மையில் அமைத்ததும் ஒரு காரணம். தூய்மை பணியாளர் போராட்டம், செவிலியர் போராட்டம், ஆசிரியர்களின் போராட்டம், கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டம், விவசாயிகளின் போராட்டம், இப்படி எண்ணற்ற போராட்டங்கள் நடைபெறும் பொழுது போராட்டக்காரர்களைப் பாரா முகமாக இருந்ததை விட அவர்களை ஒடுக்க நினைத்தனர். வலுக்கட்டாயமாக இரவோடு இரவாக அவர்களை சின்னாபின்னம் ஆக்கப்பட்டனர். அதேபோன்று வேங்கை வயல் பிரச்சனை. அது முக்கியமாக தீவிரம் அடைந்தது. நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்ததை நாடே அறியும். மலம் கலந்ததைக் கண்டுபிடிக்க சொல்லியவரையே காவல் துறையினர் குற்றவாளியாக மாற்றியது பெரும்குறை. தானே மலத்தைக் கொண்டு வந்து குடிக்கும் தண்ணீரில் கலந்து விட்டு அதே தண்ணீரை குடிக்க முடியுமா? இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் ஆட்சியாளர்கள் நடந்து கொண்ட விதம் ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்கியது. இது எல்லாவற்றுக்கும் காரணம் மேல் சாதியைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற மனப்போக்கு தான். இன்று வேங்கை வயல் கிராம மக்கள் ஒருவர் கூட வாக்கு செலுத்தவில்லை. ஒட்டுமொத்தமாக அந்த கிராமமே தேர்தலை எதிர்த்து கருப்பு கொடி ஏற்றி தங்களுடைய எதிர்ப்பையும் வெறுப்பையும் பதிவு செய்துள்ளது.
வட சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர் ஒரு ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் தலைவர் என்பதையும் கடந்து தமிழ்நாட்டில் ஒரு பௌத்த பண்பாட்டு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தலித்துகளை பௌத்தத்தை அணியம் ஆக்கியனார். ஒரு புறம். மற்றொருபுறம் பெரும்பான்மையான இளைஞர்களை வழக்கறிஞர்களாக உருவாக்கி பெருமை அவரை சாரும். அடுத்த தலைமுறையினரை அரசியல் படுத்த நினைத்து நூற்றுக்கணக்கான இளைஞர்களை சட்டக் கல்லூரியில் சேர்த்து அனைவரையும் வழக்கறிஞர்களாக மாற்றியது இன்னொரு புறம். ஒடுக்கப்பட்ட மக்களின் வடசென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டு இளைஞர்களையும் மக்களையும் அரவணைத்து சென்று கொண்டிருந்தவரை திடீரென்று படுகொலை செய்தது ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களிடம் பெரும் அதிர்வலையையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. கொலைக்கான காரணத்தையும் கொலையாளிகளையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று சிபிஐ விசாரணை கேட்டு அந்தக் கட்சி நீதிமன்றத்தை நாடிய பொழுது, தமிழ்நாடு அரசாங்கம் சிபிஐ விசாரணை வேண்டாம் அதற்கு பதிலாக தமிழ்நாடு காவல்துறை அந்த விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் என்று எதிர்த்து மனு செய்தது.
மேலும் ஆணவக் கொலை செய்யும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டி எஸ்சி/ எஸ்டி ஆணையம் அமைக்க பலமுறை மனு கொடுத்தும் பாராமுகமாக அரசு கவனிக்க மறந்தது. அதேபோன்று 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளுக்கு (தொகுதி ஒதுக்கீடு செய்வதிலும் இறுதிவரை அலகழிக்கும் நோக்கத்தில் செயல்பட்டது) குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு லிட்டர் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ததில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டது. கடந்த 10 ஆண்டுகளாக திமுகழகத்தின் ஒரு அங்கத்தினராகவே இந்தக் கட்சிகள் இருந்த போதும் அவர்களின் உணர்வுகளை மதிக்க தவறிய போது தலித் மக்கள் மட்டும் அல்லாமல் பொதுவான மக்களும் இதை ஆழமாக கவனித்தனர். இப்படி எல்லா வகையிலும் திமுகழகம் பட்டியலின மக்களுக்கு செய்த அநீதி தான் அவர்களின் தோல்விக்கான மிக முக்கியமான காரணம்.
ஆராய்ந்து பார்த்தால் சமூக நீதி கோட்பாடு என்று பேசிய கட்சியில் சமநீதி மறுக்கப்பட்டபோது அந்த மக்கள் வேறு எங்கு செல்வார்கள்?. 50 ஆண்டுகளாக அக்கறைக்கு இக்கரை பச்சை இக்கரைக்கு அக்கரை பச்சை என்று நினைத்து மாறி மாறி வாக்களித்தனர். இதற்கிடையில் தான் இந்த 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி தேர்தலில் வெகுண்டெழுந்து கிட்டத்தட்ட 85 சதவீத மக்கள் வாக்களித்தனர்.
கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி வாக்களித்த போது ஒரு சலிப்பு இருந்து வந்தது. இந்த தேர்தலில் ஒரு புதிய முகம் களமிறங்கும் பொழுது மக்கள் அவர்களை நம்பினர். இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாறாக ஒரு வாய்ப்பை புதிய கட்சி தொடங்கும் திரு. விஜய் அவர்களுக்கு கொடுத்து தான் பார்ப்போமே என்ற மனநிலை ஏற்பட்டதை மறுக்க முடியாது. திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய் அவர்கள் எம்ஜிஆர், ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டவர். கடந்த சில பத்து ஆண்டுகளாகவே திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் எல்லோராலும் கோலோச்ச முடியவில்லை. நடிகர் விஜய் பெரும்பாலான வாக்காளர்களின் மனங்களை வென்றெடுத்ததோடு வாக்குகளாகவும் அறுவடை செய்துவிட்டார். அதன் அடிப்படையில் தான் இன்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளார். ஆனாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி என்று கட்சிகள் ஆதரவு தந்து 1்20 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது.
ஒன்றை நடிகர் விஜய் அவர்கள் தெளிவாக உணர வேண்டும். பெரும்பான்மையான மக்கள் வாக்குகளை பெற்று அரியணை ஏறும் போது மக்களின் மனங்களை உணர்ந்து செயல்பட வேண்டும். 60களில் திமுக ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்து அதற்குப் பிறகு தேசிய கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை என்று மக்கள் அவர்களை புறந்தள்ளனர். அல்லது புறக்கணித்தனர். அதே மனநிலை தான் இன்றைய இளைஞர்களுக்கும். அடுத்து 20, 30 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு வெற்றி கழகத்திற்கு மக்கள் வாய்ப்பளிக்க தயாராக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியும். அதற்கு இந்த ஐந்து ஆண்டு ஆட்சி மிகவும் முக்கியம். அதைவிட முக்கியம் இன்றைய தலைமுறையை ஒரு பெரும் படிப்பாளியாக சிந்தனையாளர்களாக மாற்ற வேண்டியது அவருடைய கடமை. இதற்கு முன்பாக ஜென்சி தலைமுறைக்கு ஒன்றும் தெரியாது அவர்கள் ஒரு ஆட்டு மந்தைகள் ஒரே திசையை நோக்கி சென்று கொண்டிருப்பார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அந்த குற்றச்சாட்டை உங்கள் ஆட்சி கலையும் என்று நம்புகிறோம். தொடக்கத்தில் குறிப்பிட்டதை போல இன்றைய இளைஞர்கள் ஒரு கொண்டாட்டம் மனலமையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை அரசியல் படுத்த வேண்டியது புதிதாக பொறுப்பேற்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு உண்டு.
புதிதாக பொறுப்பேற்கும் புதிய கட்சி எதிர்கொள்ளும் சிக்கல் என்பது மலர் படுக்கையல்ல. மாறாக ஏசுபிரான் தலையில் சூட்டப்பட்ட முள் கிரீடம் போன்றது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
- பேரா. எ. பாவலன்