‘தமிழ்நாட்டின் அரசியல் களம் இனி எவ்வாறு இருக்கப் போகிறது? எப்படி எப்படியெல்லாம் கூட்டணி திடீர் திடீரென மாற வாய்ப்புண்டு? மெல்ல மெல்ல அல்லது அவசர அவசரமாகக் காவி எங்ஙனம் உள்நுழைந்து தன் கோரப் பற்களைக் காட்டிச் சிரிக்கப் போகிறது? சமூகத்தைக் கவலைக்கிடமான நிலைக்குத் தள்ளி எவ்வாறான பின்னடைவைத் தரப் போகிறது?’ என்றெல்லாம் நிகழ்தகழ்வுகள் மற்றும் புள்ளி விபரங்களைக் கொண்டு அலசி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அதை அரசியல் பகுப்பாய்வாளர்கள் சிறப்பாகப் பார்த்துக் கொள்வார்கள். வாக்கு இயந்திரங்களில் குழறுபடி என்பது உண்மையாக இருந்து அப்புதிய கட்சிக்கு வெற்றி பெறும் அளவிற்கான வாக்குகள் விழவில்லை என்றிருந்தாலும் கூட கணிசமான வாக்குகள் அக்கட்சிக்கு விழுந்திருக்கிறது தானே? அசிங்கமாகத் துருத்திக் கொண்டு வெளிப்பட்டிருக்கும் மக்களின் மட்டமான மனநிலையைப் பற்றிய அறச்சீற்றமே இவ்வெழுத்து!
********************
உணவு, உடை, இருப்பிடம், கல்வி என அடிப்படைத் தேவைகள் கிடைக்கப்பெற்ற பாமரர்களுக்கு அரசியல் வெறும் பொழுதுபோக்கு மட்டுமே என்பதைத்தான் இத்தேர்தல் உணர்த்தியிருக்கிறது. அதிலும் அத்தேவைகள் நிறைவாகக் கிடைக்கப்பெற்ற நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்பினரில் பலரும் தமது சோற்றுப்பாட்டுக்கு உடனடியாக எச்சேதமும் வராது என்ற எகத்தாளத்தில் ‘சும்மா ஒரு மாற்றம்’ என இத்தேர்தலைச் சூதாட்டக் களமாக்கியிருக்கிறார்கள். ‘இவர்களுக்கும் ஒரு வாய்ப்பு’ – ஹ்ம்ம்ம். Once fascists win power democratically, they have never been removed democratically. Not once. Ever - எங்கோ வாசித்த ஞாபகம். இதன் உதாரணத்தைத்தான் நடுவண் அரசிடம் காண்கிறோமே? இந்தப் புது அரசியல்வாதி யாருடைய proxy என்று புரிந்திருந்தால்தான் தற்குறி என்ற சொல்லே இப்போது பரவலாகியிருக்காதே?
மாற்றம் மாற்றம் எனக் கதறும் திடீர் அறிவாளிகளிடம் “தினமும் தோசை, இட்லி என மாற்றி மாற்றிச் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும். ஒரு மாற்றத்திற்காக விஷத்தைச் சாப்பிட்டுப் பாருங்களேன்” எனக் கூறலாம் போலிருக்கிறது. கடைசியில் பார்த்தால் அவர்களே அம்முடிவுடன்தான் ஆட்காட்டி விரலில் மை பூசி வந்திருக்கின்றனர். Change – மாற்று என இவ்விடத்தில் தவறாக மொழிபெயர்த்திருக்கிறோம். அவ்வார்த்தைக்குச் சில்லறை என்ற வேறொரு பொருளும் இருப்பதை நாம்தான் மறந்து தொலைத்து விட்டோம்.
ஆட்சி மோசமாக இருக்கும் போதுதானே மாற்றம் எதிர்ப்பார்ப்போம்? முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிர் விடியல் பயணம், SMART வகுப்பறைகள், ஆலயங்களில் அன்னைத் தமிழ், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், …..(அப்பெரிய பட்டியலை இணையத்தில் தேடித் தெரிந்து கொள்ளவும்!), இரு இலக்க GDPயை எட்டியது, இந்தியாவிலேயே வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியது, நீட் எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, மாநில உரிமைகளைக் காக்கப் போராடுவது, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைத் தோற்கடித்தது….. இதுக்கு மேல எப்படித்தான்டா நல்ல ஆட்சி கொடுக்குறது?
*************************
குடும்பப் பொருளாதாரம் ஓரளவு சீரடைந்து கொண்டு வரும் போது அதற்குக் காரணமாக இருந்த தி.மு.க மீது மக்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பும் வன்மமும்? தமிழ்நாட்டில் இவ்வளவு கோவில்கள் இருந்தும் இந்துத்துவா உள்ளே நுழைய முடியாமல் குழம்பித் தவிக்கிறதே? அதே போன்ற குழப்பம்தான் இப்போதும். எல்லா நலத்திட்டங்களையும் இயல்பான ஒன்றாகக் கருதத் துவங்கிவிட்டார்களோ? திரிபுரா மாதிரி கையாளப்பட்டிருப்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது.
மாண்புமிகு உயர்திரு. ஸ்டாலின் அவர்கள், திரு. பி.டி.ஆர், திரு. அன்பில் மகேஷ், மருத்துவர் திரு. எழிலன், திரு.டி.ஆர்.பி.ராஜா, … - ‘நல்லதோர் பகை’யிடம் இவர்களை விட்டுத் தந்திருந்தால் கூடப் பரவாயில்லை. Their defeat has taken a personal hit for me. வாழ்க்கையின் சமன்பாடுகள் குறித்து ஏகப்பட்ட கேள்விகள். எவ்வளவு நல்லது செய்தாலும் பேரிடி விழும். தீயன செய்தாலும் உயர்வு வரும். அப்புறம் என்னதான் இருக்கிறது வாழ்க்கையில்? நான் ஏற்கெனவே ஒரு முறை எழுதியிருந்தேன் – What’s the point in anything anyway? ஆனால் அப்படி இம்முறை உணர்வற்றுப் போக முடியாத அளவு கோபம் என்னுள். I really long for the existence of Karma.
ஆகச் சிறந்த நிர்வாகிகளை நடிகனின் மீதுள்ள வெறிக்கு இரையாக்கியிருக்கிறார்கள். புற்றுநோயை ஜோசியத்தை வைத்துக் குணப்படுத்தலாம் என்றவர், லாட்டரி தொழிலில் தொடர்புடையவர், பெண்களை அசிங்கமாகப் பேசுபவர்,….. பெயர், முகம் எதுவுமே யாரென்று தெரியாதவர்கள், வாச்சாத்தி/கரூர் கொடூரங்களுக்குக் காரணமானவர் – இவர்களைப் போய் வெற்றி பெற வைத்த தமிழ்நாட்டு மக்களின் பொது அறிவை மிகைப்படுத்தி மதிப்பிட்டுவிட்டோம். மக்கள் என்னும் மாக்கான்கள்! திராவிடக் கட்சிகளின் தோல்வியில் ஒரு சமூகமாக எப்படித் தரங்கெட்டுத் தோற்றிருக்கிறோம் என்பதே புலனாகிறது. ஒன்றுமே செய்யாமல் தோற்றிருந்தால் கூட இவ்வளவு வலித்திருக்காது.
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
இனியும் நமக்காகக் களத்தில் நிற்கப் போவது தி.மு.க.தான்.
தற்போதைய சூழலில் நன்கு படித்தவர்களும் சிறந்த ஆளுமையுடையவர்களும் தி.மு.க. கூட்டணியில் மட்டுமே இருக்கிறார்கள். விசி.க. ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் போன்று
‘நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே’ மிகுந்திருப்போரையெல்லாம்
இங்குதான் காண முடியும். எனவே இவர்கள் தவிர்த்துப் பிற கட்சிகளிலும் மருத்துவர்கள் இருக்கிறார்களே என்று தூக்கிக் கொண்டு வராதீர்கள். உண்மையறிவு வாய்க்கப் பெறின் வேறெங்கும் போகச் சொல்லாது.
**********************
ஒரு சிறந்த அரசு வீழ்த்தப்பட்ட அதிர்ச்சியை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியாமல் அன்றாடச் சூழல்களுடன் பொருத்திப் பார்த்து மக்களின் இயலுணர்வை புரிய முற்படுகிறேன்.
மக்களின் இந்த வினோதமான மனநிலைக்கான அறிகுறிகள் வீட்டினுள்ளேயே தென்படுவதுதான்.
உதாரணமாக பெற்ற பிள்ளைகளில் ஒருவர் பெற்றோரைத் தன்னுடன் வைத்துத் தங்கத் தட்டில் தாங்குவார். ஆனால் அப்பிள்ளையிடம் முகத்தை எழுபத்தெட்டு கோணல்களாக்கி உர்ர்ரென்று இருக்கும் அதே பெற்றோர் தம்மை வந்து எட்டிக் கூடப் பார்க்காத, தம்மை கவனித்துக் கொள்ளத் தயாரில்லாத பிற பிள்ளைகளை எப்போதேனும் காண நேர்ந்தால் பாச மழையைப் பொழிவார்கள். இதைப் போன்றே அனைவரின் நலனிலும் அக்கறை கொண்டு பார்த்துப் பார்த்து நலத்திட்டங்களையும் உதவிகளையும் செய்த மன்னனிடம் இருந்து செங்கோலைப் பிடுங்கி மக்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கூடக் கொடுக்காத… ஏன்? தனக்காகக் கூடக் குரல் கொடுக்காத ஒரு ஆச்சர்யக் குறியிடம் தந்திருக்கிறார்கள்.
என் தாத்தா இறந்த செய்தி கேட்டதும் நிலைகுலைந்து அழுது தீர்த்தேன். மருத்துவமனையில் இருந்து தாத்தா வீட்டிற்குக் கொண்டு வரப் பட்டதும் அவர்களை அந்நிலையில் காணச் சகியாது மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது. மறுநாள்தான் இறுதிச் சடங்கு என்று முடிவான நிலையில் ஒன்றரை நாள் அவ்வப்போது நினைத்து நினைத்து அழுது ஓய்ந்து … ஓயவெல்லாம் இல்லை, அழுது அழுது சோர்ந்து போய் இருக்கையில் மறுநாள் நீர்மாலை, சங்கு சத்தம் எனச் சடங்குகளின் போது லேசாக உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது. அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது! தாத்தாவின் இறுதி ஊர்வலம் துவங்கவும் அத்தனை சோர்வுக்கிடையிலும் “அய்யோ! இனிமே தாத்தாவைப் பார்க்கவே முடியாதுல்ல” என்பது உறைத்ததில் பெருங்குரலெடுத்து அழுத ஞாபகம். தனிப் பெரும்பான்மையை அக்கட்சி பெற்ற பிறகும் ஒரு ஐந்து நாள் இழுத்தடிக்கப்பட்டு பின் ஆட்சி அமைந்த நாளும் அதே ‘அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது’ உணர்வு.
ஏதோ Kubler Ross stagesஸாமே! அதில் முதல் படியான denial stageயையே தாண்ட முடியவில்லை. நல்லவர்களின் தோல்வி எவ்வாறு நமக்குத் தனிப்பட்ட முறையில் மனச்சோர்வைத் தந்திருக்கிறதோ அவ்வாறே ஒரு சழக்கனின் வெற்றிக்காகத் தனிப்பட்ட முறையில் பலரும் ஆர்ப்பரித்தது அவரவர் பற்றியிருக்கும் அறத்தை எடுத்துரைக்கிறது. மிருகங்கள் கூட தகுதியற்ற ஒன்றைத் தலைமையாக ஏற்காது. முன்னை விட தற்காலச் சமூகத்தில் மிலேச்சர்கள் பெருகி விட்டார்கள். வேறென்னத்தச் சொல்ல?
***********************
‘தவிட்டுத் தற்குறி’ – ‘சங்கி’யைப் போலவே இதுவும் ஒரு வாழ்வியல்! நாம் நினைப்பது போல் தற்குறியாக வாழ்தல் ஒன்றும் அவ்வளவு எளிதல்ல.
41 பேர் மரணத்துக்குக் காரணமானவன் மீது துளியும் தவறே இல்லை என ஓங்கி அடித்துப் பேச வேண்டும்; கொஞ்சமும் பொறுப்பேற்றுக் கொள்ளாத அடாவடித்தனத்தை அபாரமாக ஆர்ப்பரித்துக் கொண்டாட வேண்டும்; தனது எம வாகனத்தின் அருகில் காட்டுத்தனமாக இருசக்கர வாகனத்தில் சீறி வந்து விழுபவர்களைப் பார்த்தும் ஒன்றும் நடக்காதது போல் செல்பவனைச் செல்லங்கொஞ்ச வேண்டும்; சொந்த வாழ்க்கையில் ஒழுக்கமற்றவனாகவும் கேடு கெட்டவனாகவும் இருப்பதைச் சாதாரணப்படுத்த வேண்டும்; சொந்தமாக ஒரு கருத்தைக் கூடப் பேசவோ யோசிக்கவோ தெரியாதவனைத் தங்கத்தேரில் வைத்துத் தாங்க வேண்டும்; எழுதிக் கொடுப்பதைச் சரியா தவறா என்று கூடச் சரி பார்க்காமல் உளறிக் கொட்டுபவனை உற்சாகமாகப் பாராட்டித் தள்ள வேண்டும்; பத்திரிக்கையாளர்களைப் பார்த்தால் ஓடி ஒளியும் அரைவேக்காட்டின் பின் அரக்க பரக்க ஓட வேண்டும்; எரிச்சலடைய வைக்கும் உடல் மொழியைக் கண்டு எக்காளமிட வேண்டும்; ஆக மொத்தத்தில் அரைவேக்காட்டைப் பார்த்தாலே அரைபோதைக்காரனைப் போலப் பரவசமாகிவிட வேண்டும்.
தற்குறிகளின் மண்டையைப் பிளந்து மூளை இருக்க வேண்டிய இடத்தைப் பார்த்தால் ‘இவ்விடம் வாடகைக்கு விடப்படும்’ என்று அவ்வெற்றிடத்தில் எழுதப்பட்டிருக்கும் போலும். அடித்தட்டு மக்களில் உள்ள தற்குறிகள் பெரும்பாலும் இளைஞர்கள். இவர்கள் படித்து முடித்து வேலைக்குச் சென்று குடும்பம் பிள்ளைகள் என்று வரும் போது திராவிடக் கட்சியின் அருமை தெரிய வரலாம். அப்படியாகப் புரிந்து அவர்களுள் மாற்றம் நிகழ்ந்திருக்கும் போது இன்னொரு தற்குறி கூட்டம் தயாராய் நிற்கும். என்ன கண்றாவியான டிசைன் இது!
இந்தத் தவக்களைக் கூட்டத்திற்குப் பல கட்டங்களில் சோதனை(test) நடத்தப்பட்டது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு சதிக் கோட்பாடுகளை இணையத்தில் பரவ விட்டார்கள் – மக்கள் அத்தனையையும் நம்பி ஒவ்வொவரும் CID ஆனார்கள். நான்கு நாட்கள் பொறுத்திருந்து “CM சார்! பழிவாங்காதீங்க!…” காணொளி விடப்பட்டது. அதற்கும் நல்ல வரவேற்பு. அடுத்த கட்டமாக மனசாட்சியற்று நடந்து கொண்டாலும் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பதற்கான பரிசோதனைக்காகத்தான் பாதிக்கப்பட்டவர்களை தன் இடத்திற்கு வரவழைத்தது - அப்போதும் மக்கள் “அய்யோ பாவம்!” என்று அந்த அநாகரிகத்தையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள். தனிமனித ஒழுக்கமற்று நெறி பிறழ்ந்த வாழ்க்கை முறையை வெட்கமின்றி பறைசாற்றிய போதும் மக்கள் ஓரிரண்டு நாள் உருண்டு எழுந்து மீண்டும் “பரவாயில்லை! இதெல்லாம் யார்தான் பண்ணல? யாரும் பண்ணாததையா அவர் பண்ணிட்டார்?” என்று தாங்கிப் பிடித்து எல்லாவற்றையும் சாதாரணப்படுத்தினார்கள். எதைக் கொடுத்தாலும் தின்றார்கள். அவ்வளவுதான்! இதற்கே அசராதவர்கள் இனி என்ன ஆனாலும் தமக்காக ஆர்ப்பரிக்கத்தான் போகிறார்கள் என்று அவர்களுக்கு ஊர்ஜிதமாயிற்று. மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்று ஒவ்வொரு முறையும் எதிர்ப்பார்ப்பவர்களுக்குத்தான் ஏமாற்றம். தூக்கி எறிவதற்கு அம்மக்கள் முதலில் அறம் சார்ந்த மதிப்பீடுகள் வாய்க்கப் பெற்றிருக்க வேண்டுமே?
***************************
நடுவண் அரசின் எந்த அராஜகத்தையும் கடிந்து கொள்ளாமல், ஓயாமல் ‘தி.மு.க ஊழல் கட்சி’ என்று மீண்டும் மீண்டும் பிளிறியதில் மக்களும் mere exposure effectஆல் கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க.வை எதிரியாக மனதில் இருத்திக் கொண்டனர். எளிதாக தி.மு.கவின் நலத்திட்ட செயல்பாடுகளை ஆழப் புதைத்தவாறே வெறுமனே சமூக ஊடகங்களில் ஜிகினா வேலை காட்டும் ஒருவனைத் தலைவனாக தேர்ந்தெடுக்கிறார்கள் எனில் மக்களே தங்களின் தகுதியையும் தரத்தையும்தான் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ‘தற்குறி’ என்றழைத்தால் கோபம் வேறு வருகிறது. பிரச்சாரத்திற்குக் கூட ஒழுங்காகச் செல்லாமல் தனது உருவப் படத்தையும் உருவ பொம்மையையும் வைத்து வேட்பாளர்களைப் பிரச்சாரம் செய்ய விட்டதெல்லாம் தவக்களைகளைப் பொறுத்த அளவில் தலைமைப் பண்பின் வரையறைக்குள் வந்துவிடுகிறதாம்.
அவர்களுடன் பேசிப் பாருங்களேன். பேச்சும் செயலும் முரணாக இருப்பது ஒரு வகை. பேச்சிலேயே முன்னுக்குப் பின்னாக முரண்கள் இருப்பதைக் கூட அவதானிக்கத் தெரியாத அளவு மழுங்கிய மூளை கொண்டவர்களிடம் அவர்களுக்குப் புரிய வைக்க முயல்வதும் போராடுவதும் தற்கொலைக்குச் சமம். தலைமை அணில் ‘ஆம்’ என்று சொன்னால் அதற்கு ஒரு முட்டு. ‘இல்லை’ என்று சொன்னால் அதற்கும் ஒரு முட்டு. வருமானத்தை மறைத்த வழக்கு, வாகன வரி ஏய்ப்பு…. இன்னும் வரப் போகும் குற்றச்சாட்டுகளுக்கும் தற்குறிகளின் ஒரே பதில் – ‘அவரே பாவம்! ஊர் உலகத்தில் நடக்காததா?’ அச்சச்சோ! இப்படியெல்லாம் கேட்க முடியாது. ஏனெனில் நீங்கள் தூய சக்தி. இனி தமிழ்நாட்டில் நடக்கும் குற்றங்கள், ஊழல்கள், சட்ட சீர்கேடுகள் எல்லாவற்றுக்கும் நீங்கள் ‘அந்த ஆட்சியிலும் நடந்ததே?’ என்று தூக்கிக் கொண்டு வர இயலாது. ஏனெனில் நீங்கள் மாற்று அரசியலைத் தருவதாக உறுதியளித்திருக்கிறீர்கள். சென்ற ஆட்சியில் குற்றத்திற்கான நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் ‘ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?’ என்றுதான் கேட்டோம். ஒரு தனி மனிதனின் தவறையும் குற்றத்தையும் அந்த அரசின் மீது பூச இயலாது என்ற அடிப்படையெல்லாம் புரியாத உங்களிடம் இனி ‘ஏன் இக்குற்றம் நிகழ்ந்தது?’ என்று கேட்போம். ஏனெனில் உங்களதுதான் சிறந்த ஆட்சியாயிற்றே?
Halo effectல் சிக்கி எந்நேரமும் trance மனநிலையில் இருப்பவர்களிடம் தர்க்க அறிவு, தரவுகள், உண்மை என எதுவும் எடுபடாது. ஏனெனில்….. No amount of evidence will ever persuade an idiot – Mark Twain. ரசிக மனப்பான்மை என்னும் வில்லை(lens) வழியாகவே உலகைக் காணும் இந்த ஆட்டுமந்தைக் கூட்டத்திடம் “I can only explain it to you. I can’t understand it for you” என்று சொன்னாலும் புரிந்து தொலையாது. கெரகத்த! சில மதக் கூட்டங்களில் பரவச நிலைக்குச் சென்று சாமியாடும் மனிதர்களிடம் சென்று நாத்திகம் பேசுவதைப் போன்றதுதான் அணில்களிடம் சென்று (அரசியல்) பேச முயல்வதும்.
**********************
சமூக வலைதளங்களிலேயே கட்சியை வளர்த்தெடுத்த பெருமைக்குரிய இவர்கள்
சத்தமில்லாமல் செய்த மூளைச்சலவையின் தாக்கம் நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. ஒரு பெரிய குழுவே இதற்காக இயங்குகிறது. அப்படி எவ்வளவு பணத்துக்குத்தான் மனசாட்சியை அடமானம் வைத்தார்களோ? முதலில் ஒரு சினிமா பக்கத்தின் மூலம் ஒரு வதந்தியைக் கிளப்பி விடுவது; IT wing பல்லாயிரக்கணக்கான போலி கணக்குகளைக் கொண்டு அவ்வதந்தியைப் பகிர்ந்து trendingல் கொண்டு வர வேண்டியது; அது viral ஆவதாக ஒரு செய்தி சேனலைக் குத்தகைக்கு எடுத்து அதில் செய்தியாகப் போட வேண்டியது; IT wing மீண்டும் அச்செய்தியை எடுத்துப் போட்டு செய்தியிலேயே வந்துவிட்டதாகக் காட்டி ‘உண்மை’ என பிரகடனப்படுத்துவது. இதெல்லாம் ஒரு பொழப்பு!
இவர்களது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், பொய்யான பரப்புரைகள், வதந்திகள் என இவற்றையே கேட்டுக் கேட்டுப் பழகிப் போன தவக்களைகளுக்கு எந்த ஒரு விஷயத்திற்கும் எவ்வாறு யோசிக்க…. இல்லை! எவ்வாறு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பது அக்காணொளிகளின் மூலம் ஆணித்தரமாக ஆழ்மனதில் பதிந்துவிட்டிருக்கிறது. இதன் வீரியத்தை விளக்க ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். தேர்தல் முடிவு வந்த மறு நாளே அக்கட்சியில் வென்று தொலைத்தவர்கள் இந்தியில் ஊடகங்களை எதிர்கொண்டனர். அதற்கு “அவங்க இந்தியில்தானே கேட்கிறார்கள்? இவர்களுக்கு இந்தி தெரியும். பேசுகிறார்கள். அதனால் என்ன?” என்று மிக இயல்பாகச் சற்றும் யோசிக்காமல் வாந்தி எடுத்தார்கள் அக்கட்சியின் ஆதரவாளர்கள். “இதுவரை இல்லாத நிகழ்வாக கல்வி அமைச்சராக ஒரு பார்ப்பனர்” என்று கூறினால் “அதனால் என்ன? அவர்களை ஒதுக்குவதும் caste discrimination தானே?” என்று ஒரு அறிவார்ந்த பதில் வருகிறது. பல வழக்குகளில் சிக்கியிருப்பதால் அவற்றைக் கொண்டே நடுவண் அரசு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளும் என்பதை ஒரு கற்பனையாகக் கூட கருதாத செம்மறி ஆடுகளிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்? கண்டிப்பாக இந்த இரட்சகரால்தான் தமிழ்நாட்டுக்கு நல்ல்லது நடக்கப் போகிறது என எதன் அடிப்படையில் நம்ப முடிகிறது?
****************************
எங்கோ யாரோ மடத்தனமாகப் பேசும் காணொளிகளைக் காணும் போதெல்லாம் “ச்சை! கருமம்!” என்று கடந்துவிட்டேன். ஆனால் சுற்றத்திலேயே இக்கட்சிக்குக் காவடி எடுக்கப்படும் பைத்தியக்காரத்தனத்தை எதிர்கொள்ள நேர்கையில் “யாரு? இவரா இப்படி?” என்று மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உறவுகள், நட்பு வட்டம் என அனைத்திலும் ஸ்லீப்பர் செல்களாகக் கிடந்த ஒவ்வொரு தற்குறியும் வெளியே வந்துவிட்டன.
இவர்களிடம் கொஞ்சம் விளக்கம் கொடுக்க முனைந்தால் சொல்லி வைத்தாற் போல் வெறி நாய்க்கு வியர்த்ததைப் போன்ற மனநிலையில் சங்கைக் கடித்துக் குதற வருகிறார்கள். என்ன ஒரு மூர்க்கத்தனம் முட்டு கொடுக்கும் போது! படிப்பு, பட்டம், நல்ல வேலை, உயர் பதவி ஆகியவற்றுக்கும் ‘அறிவு’க்கும் துளி கூட சம்பந்தமில்லை என்று தமது ஆக்ரோஷமான கண்மூடித்தனத்தின் மூலம் நிறுவியிருக்கின்றனர். ஒருபடி மேலே சென்று ‘அடிப்படை அறிவு கூட இருத்தல் கூடாது’ என்பதைத் தமது அடிப்படைத் தகுதியாகவும் அகமகிழ்வோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுத்து ‘யோசித்தல் தொழிலை’ப் பற்றி நினைப்பதையே தம் தானைத் தலைவனுக்குச் செய்யும் துரோகமாகக் கருதுகின்றனர்.
எவ்வளவு நெருங்கியவராக இருப்பினும் அரசியல் கோட்பாடுகளில் கருத்து முரண்பாடு இருப்பின் அவ்வுறவைத் தூக்கி எறியவே விரும்புகிறேன். ஏனெனில் அக்கோட்பாடுகள்தாம் ஒருவரது விழுமியங்களை எடுத்துரைக்கிறது. And I choose to hold my circle to a reasonably good standard. உலக அளவில் ட்ரம்ப்பும் இந்திய அளவில் மோடியும் இருப்பது போதவில்லை. தமிழ்நாட்டிலும் சர்க்கஸ் வேண்டும்! பிள்ளைக்கறி கொண்டவனுக்கு அமுது படைக்கும் இவ்வினத்தைச் சார்ந்த எவரது முகத்திலும் விழிக்க வேண்டிய சூழலே எனக்கு அமையக் கூடாது என்று அறத்திடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். Bloody bampots! உலகின் அனைத்து கெட்ட வார்த்தைகளும் இந்த cult கூட்டத்திற்குத்தான். தேர்தல் அன்று தங்கள் நாயகனுக்கு வாக்களித்து வந்ததில் ஒரு cheap dopamine hit கிட்டியிருக்கும். அந்நடிகன் பதவியேற்றது ஒரு theatre experience. அவ்வளவே! இனி என்ன செய்வது என்று இவைகளுக்குத் தெரியாது.
Each cell in my body is spewing hatred on every single one of you who supports someone with no sense of humanity and zero knowledge.
**************************
ஆட்சியே அமைத்துவிட்டாலும் இந்தத் தலைமை தற்குறிக்கு வாக்களித்த ஒவ்வொரும் நிச்சயம் தடித்தனமான தற்குறிதான்! மோடியையோ பா.ஜ.க ஆதரவாளர்களையோ இத்தனை வருடங்கள் கழித்தும் தக்கனியூண்டு யோசிப்பவர்கள் கூட அறிவுள்ளவர்களாக ஏற்றுக்கொள்ளவில்லையே! அதேதான் அணில் கூட்டத்திற்கும். ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் இவ்விரு கூட்டங்கள். அதனதன் so called தலைவர்களுக்குத்தான் எத்தனை ஒற்றுமைகள்? கோத்ரா – கரூர், தனி விமானம், orchestrated PR எனத் துவங்கி… எதற்கும் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை; Teleprompterயையோ தாளையோ பார்த்து எதையாவது வாசித்தால் போதும்; தன்னை நோக்கிய விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் இஞ்சித் தேநீர் பருகியவாறே கண்டியின் மேல் மழை பெய்தாற்போல் சொரணையின்றி அமர்ந்திருக்கலாம்.
அத்’தலைவரின்’(!) நிர்வாகத் திறன், சமூகம் குறித்த விழிப்புணர்வு, பொது அறிவு போன்ற இன்ன பிற தகுதிகளைக் கூட விட்டு விடுங்கள். 41 உயிர்களுக்குப் பதறாத மனசுதான் 8 கோடி பேருக்கு நல்லது செய்யப் போகிறதா? அத்தனை மரணங்களுக்குப் பிறகும் கொஞ்சமும் குற்றவுணர்வோ பொறுப்பேற்கும் தன்மையோ இல்லாத ஒருவனை எதன் அடிப்படையில் மனிதன் என்றழைக்க முடியும்? மனிதத்தன்மையே இல்லாத ஒருவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுப்பவர்கள் என்ன மாதிரியான உயிரினங்கள்?
தலைமையைத் தேர்ந்தெடுக்கும் உரிமைதான் உண்டு. இனி அதனால் ஏற்படப் போகும் விளைவுகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அறவே கிடையாது. தற்குறிகளுக்குப் பட்டால்தான் புத்தி வரும் எனத் தூற்றலாம் என்று பார்த்தால், இவர்களது முட்டாள்தனத்திற்குச் சரியான பக்கம் நின்ற நாமும் சேர்ந்துதான் பெரும் விலையைக் கொடுக்கப்போகிறோம். ‘…’ - தமிழ்நாட்டின் முதலமைச்சர் – கோபத்தைத் தாண்டி அருவருப்பே மேலிடுகிறது.
இத்தனை வருடங்களாக நமக்கான மரியாதைக்கும் உரிமைக்குமாகப் போராடினோம். வழிநடத்தவும் முன்னெடுத்துச் செல்லவும் ஆளுமை மிகுந்தவர்கள் நமக்கென இருந்தார்கள். இனி அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் கடுமையாக மீண்டும் முதலில் இருந்துபோராட வேண்டிய சூழலில் கொண்டு வந்து சமூகத்தை நிறுத்திவிட்டு நமக்கு அரணாக நிற்கும் சக்தி படைத்தவர்களையும் புறந்தள்ளியாயிற்று. பிரமாதம்! இன்றுவரை தமிழ்நாட்டில் மசூதியையோ ஒரு இஸ்லாமியரையோ கடந்து செல்லும் யாரும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கத்தியதில்லை. தற்போது தவக்களைகள் தங்கள் கட்சியின் பெயரைச் சொல்லிக் கத்த ஆரம்பித்திருக்கின்றன. வெகு விரைவில் இது ‘ஜெய் சீரக சம்பா’வாக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதுதான் அந்த ஆக்கங்கெட்ட மாற்றமாய் இருக்கப் போகிறது.
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரால் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்ட தமிழ்ச்சமூகம் ஸ்டாலின் அவர்களின் அருமையான நிர்வாகத்திறனில் மென்மேலும் வளர்ந்தது. Such visionaries! குறைகள் நிச்சயம் உண்டு. ஆனால் தோற்கடிக்கப்படும் அளவிற்கு அல்ல. நிறைகள் மிகுந்தே இருந்தன. இவர்களது ஆளுமைகளைக் காணக்கிடைத்த பிறகும் இப்படி ஒரு தேர்வு எனில்….. கலைஞரின் வசனம்தான் நினைவிற்கு வருகிறது,
‘…….இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்!’
Oh my dear TamilNadu! Hope you survive this Kakistocracy.
- சோம.அழகு