vijay 457கடந்த 'திராவிட மாடல்' ஆட்சியின் போது திமுக அரசையும், அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் கடுமையாக விமர்சித்த பாஜக, தவெகவின் இன்றைய ஆட்சியைப் பற்றி அப்படி எல்லாம் விமர்சனம் செய்வதில்லை. ஏதோ பட்டும்படாமல் அவ்வப்போது பேசுவார் நயினார் நாகேந்திரன்.

மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய பாஜக அரசு பறிக்கும் போதுகூட பாஜகவுக்கு எதிராக ஒருவார்த்தை கூடப் பேசுவதில்லை, இன்றைய முதல்வர் விஜய்.

அவரின் பதவி ஏற்பின்போது முதலில் வந்தேமாதரம், இரண்டாவது ஜனகனமன பாடியபின் கடைசியில்தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. இங்கு தமிழ்த்தாய் வாழ்த்து என்பது அடிப்படையில் மாநில உரிமை.

இந்தி மொழிவழியாக சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியில் பாஜக ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டது புதிய கல்விக் கொள்கை. பேரறிஞர் அண்ணாவின் இரு மொழிக் கொள்கையில் உறுதியாய் இருக்கும் திமுக அரசு, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாகக் கூறிப் புறக்கணித்து விட்டது. விஜயின் இன்றைய அரசு, நாங்கள் இருமொழிக் கொள்கையை ஏற்கிறோம். ஆனால் புதிய கல்விக் கொள்கையைப் பரிசீலனை செய்கிறோம் என்கிறது. இருமொழி என்பது அடிப்படையில் மாநில உரிமை.

 துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியைச் சேர்க்க அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியதை திமுக அரசு மறுத்து விட்டது. பல்கலைக்கழக வேந்தராக மாநில முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றியது திமுக அரசு.

ஆனால் இன்றைய தவெக அரசு துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினரைச் சேர்க்க ஒப்புதல் தந்து, ஆளுநரின் அதிகாரத்திற்கு வழிவகுத்து விட்டது.

காவிகளுக்காகத் தமிழ்நாட்டின் கதவுகள் 'திறந்திடு சீசே' எனத் திறக்கப் படுகின்றன.

இது குறித்து முதல்வர் நேரடியாக வாயே திறக்காமல் இருக்கிறார், ஏன்?

- கருஞ்சட்டைத் தமிழர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.