“தமிழக வெற்றிக் கழகத்துக்கு” பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆளுநர் ஒன்றிய ஆட்சியின் தூதுவராகி அதிக பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியை ஆட்சி அமைக்க மறுத்து வருகிறார். ஆளுநர் உருவாக்கும் இந்த குழப்பத்தால் பல்வேறு அரசியல் குழப்பங்கள் உருவாகி வருகின்றன. இது தொடர்பாக அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளி வந்திருக்கிறது. மக்களால் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்ட அஇஅதிமுகவை ஆட்சி அமைக்க அனுமதித்து அந்த ஆட்சிக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவைத் தெரிவிக்க முடிவு செய்து இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.இது உண்மையாக இருந்து விடக்கூடாது என்று நாம் அஞ்சுகிறோம்.
இந்திய அரசியலில் கொள்கைக்கான இலட்சியத் தலைவராக மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார். மாநில அடையாளங்களை அழிப்பதற்கு ஒன்றிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக சமரசம் இன்றி அவர் போராடுகிறார். இந்தியாவிலேயே மாநிலங்களுடைய உரிமைக்குப் போராடும் ஒரே தலைவராக இன்றைக்கு பல்வேறு கட்சிகளிலும் அவர் மதிக்கப்படுகிறார். மக்கள் ஆதரவோடு அதிக இடங்களை பெற்று இருக்கிற த.வெ.க ஆட்சி அமைய தடையாக இருக்க மாட்டோம் என்றும், நிலையான ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்றும், ஆறு மாத காலம் இந்த ஆட்சியின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிப்போம் என்றும் மிகுந்த அரசியல் நேர்மையோடு தமிழக முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை பலராலும் பாராட்டப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அஇஅதிமுகவில் குழப்பங்கள் உருவாகி கட்சி பல பிரிவுகளாகப் பிரிந்து நின்றது. அப்போது வலிமையான உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியைக் கவிழ்த்து இருக்க முடியும். ஆனால் அப்படி செய்வதற்கு அவர் தயாராக இல்லை முழுமையாக ஆட்சி காலம் முடியும் வரை காத்திருந்தார். அதே பார்வையோடு தான் இப்போதும் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று சரியான முடிவை எடுத்துள்ளார். ஆனால் இப்போது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கி திமுக வெளியிலிருந்து ஆதரவு தரும் நிலையை எடுத்தால் எதிர்காலத்தில் நிகழக்கூடிய பாதிப்புகளையும் கருதிப் பார்க்க வேண்டும்.
திமுக எடப்பாடிக்கு அளித்து வரும் ஆதரவை கொள்கை அடிப்படையில் திரும்பப் பெற்றால்கூட பிறகு அதிமுகவும் தவெகவும் கூட்டணி சேரும் நிலைதான் உருவாகும். மற்றொரு கசப்பான உண்மையையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தற்போது திமுகவில் கொள்கைக்காக பதவிகளில் இருப்பவர்களை விட அதிகாரத்திற்காக பதவிகளில் இருப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.இப்படி அதிகாரத்திற்காக இருக்கிறவர்கள் தான் இப்படி ஒரு விபரீத யோசனைகளை முன் வைக்கிறார்கள் என்று கருதுகிறோம். அதிகாரத்திற்காக பதவிகளில் இருப்பவர்களை கொள்கைக்காக இருப்பவர்களாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவுக்கு இருக்கிறது. இந்தியாவில் கொள்கை அடையாளத்தோடு நேர்மையான அரசியல் பிம்பத்தோடு நிமிர்ந்து நிற்கும் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிம்பம் குலைந்து விடக்கூடாது என்ற கவலையோடு இதை எழுதுகிறோம். மு.க.ஸ்டாலின் உறுதியாக இந்த விபரீத முடிவுகளை எடுக்க மாட்டார் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு உண்டு."
(குறிப்பு: இடதுசாரிகள், விசிக ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில் அதற்கு முன்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது இந்த அறிக்கை. கழகத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட அறிக்கை என்பதால் கழக இதழில் பதிவு செய்யப்படுகிறது.)
- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்