நடந்து முடிந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியின்றி 108 இடங்கள் பெற்று மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது.

எந்தக் கட்சியின் கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று திமுக, அதிமுக பண‌பலமும்,,கட்சி கட்டமைப்பும் உள்ள இரு பெரும் கட்சிகளையும் தாண்டி வெற்றி அடைந்திருக்கிறது. இதன் பின்னணியாக பேசப்படுவது கடந்த காலத்தில் திமுக செய்த லஞ்சம், ஊழல், நிர்வாக திறனின்மை, காவல்துறையின் அடக்குமுறை, லாக்கப் கொலைகள், பெண்கள், பெண் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை, இளைஞர்களிடையே மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் அதிகரிப்பு, கொலை கொள்ளை அதிகரிப்பு, ஆணவ படுகொலை அதிகரிப்பு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. மறுபுறம் சினிமா மோகமும், நாயக பின்பமும் இன்ஸ்ட்டா ரீல்ஸ், ஷார்ட்ஸ் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப பொழுதுபோக்கு சாதனங்களின் வளர்ச்சியும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இளைஞர்களின் சிந்தனைத் திறனின்மை, அரசியல் அறிவின்மையே திமுகவின் தோல்விக்கும் விஜய்-ன்‌ வெற்றிக்கும் காரணமாக கூறப்படுகிறது.

10 ஆண்டுகால அதிமுக ஆட்சி பாஜகவின் மக்கள் விரோதக் குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று வேளாண்மை திருத்தச் சட்டம், நீட், உதய் மின் திட்டம், வெளிமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டின் மாநில அரசு வேலைக்கு அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆதரித்து அமித்ஷா அதிமுகவாக மாறியதும், பாஜகவின் கிளைக் கழகமாக அதன் திட்டங்களுக்கு ஆதரவு கொடுத்ததும் அதன் பாஜக சார்பு, மதவெறி, வெறுப்பு அரசியலும் மக்கள் திமுகவுக்கு மாற்றாக அதிமுகவை நம்பவில்லை.

இவையெல்லாம் விஜய்-யின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறதா என்று கேட்டால் ஆம் என்பதும் நமது பதில் தான். ஆனால் இது அடிப்படையான காரணம் அல்ல. அடிப்படையான அந்தக் காரணம் மாறிவரும் ‘பொருளாதார மாற்றத்தில்’ தான் இருக்கிறது‌.

இந்த தேர்தல் வெற்றி மாற்றம் மட்டுமல்ல வரலாற்றில் இதற்கு முன் நிகழ்ந்த ஒவ்வொரு மாற்றத்திற்க்கும் அதற்கான காரணங்களை அன்றாட சம்பவங்களில், தலைவர்களின் தனிச்சிறப்பில், நாயக பின்பத்தில், தியாகத்தில், துரோகத்தனங்களில் மட்டும் ஆய்வு செய்தால் போதாது உற்பத்தி முறை அதில் ஏற்படும் மாற்றங்களில் தான் தேட வேண்டும்.

இக்கட்டுரையில் தவிர்க்க முடியாத மார்க்சிய கலைச்சொற்கள் வரும் அதற்கான விளக்கமும் வரும் முடிந்த வரை அதை தவிர்க்கிறேன்.

உற்பத்தி முறை– என்றால் என்ன?

மக்களது வாழ்க்கைத் தேவைகளுக்கு பயன்படும் அணைத்து பொருட்களையும் உற்பத்தி செய்யக்கூடிய முறை.

உதாரணமாக; விவசாய‌ உற்பத்தி என்பது நிலம் மற்றும் அதில் பயன்படுத்தும் கருவிகள் யாரின் உடமை என்பதை பண்ணைகள், ஜமீன்கள் உடமை என்பதே நிலப்பிரபுத்துவம்.

அதே போல் பெரிய பெரிய ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அதற்கான கருவிகள் தனி ஒரு நபருக்கோ கூட்டு நபர்களுக்கோ கூட்டு நிறுவனத்திற்கோ சொந்தமென்றால் அது முதலாளித்துவ உற்பத்தி முறை.

அரசு நிறுவனங்கள் ஆவின் BSNL, Railway, Post office, LIC, வங்கிகள் உள்ளிட்டவை அரசு முதலாளித்துவமாக கருத்தப்படும்.

1) புதிய சகாப்தத்தின் தொடக்கம்;

(1770 முதல் 1870 வரை) காலனியாதிக்கத்தின் தொடக்கம்.

பல ஆயிரம் ஆண்டுகளாக இந்திய நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை நீண்ட காலமாக தேங்கியிருந்தது. இந்திய நிலப்பிரபுத்துவ விவசாயப் பொருளாதார உற்பத்தி முறையில் நிலங்களும், அதில் உற்பத்தியாகிய விவசாயப் பொருட்களும், மன்னர்கள், ஜமீன்கள், பண்ணையார்கள் ஆகிய நிலப்பிரபுக்களுக்கே சொந்தம். அவர்கள் ஆதிக்கத்தின் கீழ் நாடும் இருந்தது. வரி விதிப்பது, வசூலிப்பது, பராமரிப்பது, காப்பது, நீதி பரிபாலனை என மொத்த அரசு நிர்வாகமும் அவர்களிடமே இருந்தது.

அப்படி ஒரு நிலையில் தான் 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனி அந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது. இங்கிலாந்தின் முதலாளி வர்க்கம் (வர்க்கம் என்றால் பிரிவினர்) தான் உற்பத்தி செய்த பொருட்களை இந்தியாவில் விநியோகம் செய்து பல நூறு கோடிகள் லாபமும் பெற்றது. அதில் வந்த ‘லாபமே’ பல சிற்றசர்களையும் பின்பு பேரரசுகளையும் கைப்பற்றி மொத்த நாட்டையும் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டும் வந்தது.

கிழக்கிந்திய கம்பெனிகளின் உற்பத்திப் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்வது, இங்கிருந்து மலிவான விலைக்கு பருத்தி, சணல் உள்ளிட்ட மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது, வரிபோட்டு நாட்டு மக்களை சுரண்டுவது, மக்களையும் அடிமைகளாக்கி தேயிலைத் தோட்டம் பயிரிட, நாடு விட்டு நாடு கடத்துவது என அதன்‌ சுரண்டல்‌ விரிவடைந்தது. காவல், ராணுவம், நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் உறுப்புகளும் வழுவடைந்து பெருகத் தொடங்கியது. ஏற்கனவே இங்கிருந்த சனாதன முறையான பிறப்பின் அடிப்படையில் இருந்த சாதி ரீதியான வேலைமுறையை சற்று மாற்றி வேலைகளுக்கு கல்வி மற்றும் உடல் தகுதிகளை முன் வைத்தது.

இந்த உற்பத்தி மற்றும் விநியோகம் அதன் மூலம் கிடைக்கும் ‘லாபம்’ இவை தான், தனக்கு அடிபணிந்த இந்திய மன்னர்களை தனது ஆளுகையின் கீழ் உட்படுத்தியது‌,

அடிபணியாத மன்னர் ஆட்சிகளை முடிவுக்கு கொண்டு வந்தது. அது உருவாக்கி புதிதாக விரிவு படுத்திய அரசு இயந்திரத்திற்கான வேலைப் பிரிவினை உள்ளிட்டவை நிலப்பிரபுவத்துவ மன்னராட்சியை ஒழித்துக்கட்டியது. ஆதிக்க சாதி மன்னர்களுடைய போராட்டம் தான் விடுதலைப் போராட்டமாக மாறியது அந்த போராட்டமும் முடிவுக்கு வந்தது. மன்னர்கள், ஜமீன்களின் ஆதிக்கத்துக்கான போராட்டம் முடிவடைந்தது. விடுதலைப் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியது.

2) புதிய சகாப்தத்தின் தொடக்கம் 2 :

1870 முதல் 1945 வரை காலனியாதிக்க வீழ்ச்சி

மன்னர்கள், நிலப்பிரபுக்கள் என பழைய ஆதிக்க வர்க்கம் முடிந்து விடுதலைப் போராட்டம் மக்கள் போராட்டமாகவும், ஒடுக்கபட்ட சாதிகளுடைய, வர்க்கங்களுடைய அரசியல் விடுதலை, சமூக விடுதலைப் போராட்டமாக கிளர்ந்து எழுந்தது. அது அதற்கான தலைவர்களையும், தத்துவங்களையும் அந்த சகாப்தம் உருவாக்கி கொடுத்தது.

1870 க்குப் பின் தொழில்துறையில் ஜெர்மனியும், அமெரிக்காவும் முன்னணிக்கு வந்தது. தனது முதன்மை பாத்திரத்தை இங்கிலாந்து இழந்தது. தனது மேலாதிக்கத்தை தக்க வைக்க 1875-ல்” காங்கிரஸ்”என்ற அரசியல் கட்சியை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மூலம் உருவாக்கியது. இந்தியா விடுதலை அடைந்தாலும் தனக்கான பொருளாதார நலன்களைக் காக்க இந்திய தரகு முதலாளிகளை தன்னுடன் தொழில் செய்ய கூட்டு சேர்ந்துக் கொண்டது.” டொமினியன்”அந்தஸ்த்து,” பூரண சுகந்திரம்”என்ற இரு வேறு கருத்துகள் நாட்டிலும் காங்கிரஸ் கட்சியிலும் தோன்றியது, கூடுதலாக காலனிய இந்திய நாட்டின் அரசு நிர்வாகத்தில், அதிகாரத்தில் அரசுப் பதவியில் முழுமைமாக இருந்து பலன்களை பெற்றுவந்த பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான மூன்றாவது அரசியலும், கோரிக்கையும் அதன் உள்ளே தோன்றியது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சி, பார்வெர்ட் ப்ளாக் உள்ளிட்ட கட்சிகளும் தோன்றியது. காந்தி, நேரு, நேதாஜி, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களும் தோன்றினர். இவர்கள் அரசியல் விடுதலை மற்றும் சமூக விடுதலைக்கு போராடினர்.

விடுதலை பெறுவதற்கு முன்பே காலனி ஆதிக்கவாதிகளோடு தொழில் உறவு வைத்துக் கொண்ட இந்திய நாட்டின் தரகு முதலாளிகள் பிர்லா, டாட்டா, பார்பன, பனியா முதலாளிகள், முதலாளி வர்க்கமாகவும் பிற நாடுகளில் தொழில் தொடங்கி ஏகாதிபத்திய வர்க்கமாகவும் பொருளாதார, அரசியல் வளர்ச்சி அடைந்தனர்.

இங்கிலாந்து, பொருளாதாரத்தில் தனது ஆதிக்கத்தை இழந்ததாலும், பல்வேறு நாடுகளில் உருவாகிய தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ‘புரட்சி’ மற்றும் 2 வது உலக யுத்ததாலும், இந்தியாவில் தோன்றிய புதிய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் காலனியாதிக்க எதிர்ப்பு போராட்டங்களாலும் இந்நாட்டை விட்டு வெளியேறி” இந்தியா”ஒரு நாடாக உருவாகியது. அது தன்னை” ஜனநாயக சோசலிச மதச்சார்பற்ற நாடாக விடுதலை” பெற்றது. பின் அரசியல் அமைப்புச் சட்டம் என்பது அதன் ஆட்சி முறையானது.

3) புதிய சகாப்தத்தின் தொடக்கம்; 3 (1952 முதல் 1990) திராவிடக் கட்சிகளின் தொடக்கம்

காலனி ஆட்சியின் போதும் சுகந்திரத்திற்கு பிறகும் இந்தி திணிப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, இட ஒதுக்கீடு, சமூக நீதி உள்ளிட்ட கொள்கைகளோடு 1920 முதல் நீதிக்கட்சி தொடங்கி 1952 முதல் புதிய ஒரு சகாப்தமான திராவிட கட்சிகளின் சகாப்தம் தொடங்கியது.

இதன் பொருளாதார அடித்தளமாக விவசாயமும், வரம்புக்குட்பட்ட தனியார் உற்பத்தி நிறுவனங்களும் (கம்பெனிகள்) இருந்தது, அரசு பணிகளும், வரம்புக்குட்பட்ட தனியார் சேவைத் துறைகளும், அரசு பொதுப்பணித்துறைகளும் (ரயில்வே, மின்சாரத்துறை) தான் இருந்தது.

காலனியாதிக்க எதிர்ப்பு முடிவுற்றதும். அரசியல் அமைப்பு சட்டத்தை பின்பற்றும் மையப்படுத்தப்பட்ட அரசாக இந்தியா உருவாகியது‌. பிறகு அதன்‌ ஒற்றை அதிகார மையத் தலைமைக்கும் அதன் பிராமணிய கலாச்சாரம், இந்தி மொழியை முன்நிறுத்தி இந்து, இந்தி, இந்தியாவனது. பிற மாநில மொழிகளை அழிப்பது மாநிலங்களுக்கான உரிமையை பறிப்பது, தேசிய இன அடையாளத்தை அழிப்பது என மத்திய அரசுக்கும் மாநில உரிமைகளுக்குமான முரண்பாடு தோன்றி வளர்ந்தது. அந்த முரண்பாடும் மக்கள் தேவைகளும் தனக்கு ஏற்ற தலைவர்களை உருவாக்கியது. அண்ணாதுரை, கலைஞர் உள்ளிட்டோரை வரலாறு தலைவர்களாக்கியது.

1967-ல் ஆட்சிக்கு வந்த திமுக இந்தி திணிப்பு, இட ஒதுக்கீடு, சமூகநீதிக் கொள்கை மற்றும் மக்கள் நலத்திட்டங்களால் ஆட்சிக்கு வந்தது. மக்கள் நல அரசானது.

விவசாய உற்பத்திக்கு மானியம், பசுமைப்புரட்சியான மரபணு மாற்றப்பட்ட விதைகள் உரங்கள் அதற்கான மானியம், தடுப்பணைகள் கட்டுவது என விவசாயத்தை விரிவு படுத்தி விவசாயிகள், கூலி ஏழை விவசாயத் தொழிலாளர்கள் வர்க்கத்திற்கான வேலைகளையும் பெருக்கியது.

அரசு பணிகளில் கவனம் செலுத்தி, ஆசிரியர், மருத்துவர், போக்குவரத்துத் தொழிலாளர்கள், VAO, தாசில்தார், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிரந்தரமான அரசு வேலைகளை அதிகப்படுத்தியது.

தகுதியான நல்ல சம்பளம், உத்தரவாதமான ஒரு எதிர்காலம் என்று உருவாக்கி ஒரு சலுகை பெற்ற அரசு ஊழியர்களை, புதிய சலுகை பெற்ற தொழிலாளர் வரக்கமாக உருவாகினர்.

மாறிவரும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு ஏற்ப பள்ளிக் கல்வி, தொழில் துறை சார்ந்த கல்விகளை விரிவு படுத்தியது. அதன் மூலம் புதிதாக படித்த முதல் தலைமுறையை உருவாக்கியது‌. படித்தால் அரசு மற்றும் தனியார் துறையில் நிரந்தரப் பணியும், வாழ்க்கை உத்திரவாதமும் கிடைக்கும் சாத்தியமும், வாய்ப்பும் தோன்றியது.

விவசாயம் மட்டும் இருந்த நாட்டில் தொழிற்துறை உற்பத்தியும் பெருகத் தொடங்கியதால் கிராமப்புறங்களில் நிலம்படைத்த ஆதிக்கசாதிகளை சார்ந்து வாழ வேண்டியத் சமூகத் தேவை மாறி பிற பணிகளை நோக்கி பயணித்ததால் தீண்டாமைக்கு எதிரான சாதி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் இன்னும் அதிகரித்தது.

1990 புதிய பொருளாதாரக் கொள்கையின் வருகை;

தனியார்மயம், தாராளமயம், உலகமயத்திற்கு பின் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் நகரமயமாக்கல் மூலம் வேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்தது. நாட்டில் பொருளாதாரத்தில் விவசாயம் ஆற்றிய முதன்மை பங்கு பின்னுக்கு போகத்தொடங்கி தொழிற்துறையின் பங்கு முன்னணிக்கு வரத்தொடங்கியது.

இதன் மூலம் பெரும் எண்ணிக்கையில் நடுத்தர வர்க்கத்தின் தோற்றம் உருவாகியது. பல்வேறு உட்கட்டமைப்பு வேலைகளும் தொழிற்துறை பெருக்கமும், புதிய காண்ட்ரக்ட்டர்கள், முதலாளிகளை உருவாக்கினர்.

சிறிய நகரங்கள் தோறும் ஆயிரக்கணக்கான கடைகள் வியாபாரிகள் உள்ளிட்டு பெரும் எண்ணிக்கையில் குட்டி முதலாளித்துவ வர்க்கம் ஒன்று உருவாகியது. அரசு மற்றும் தனியார் துறையில் பெரும் நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்வுக்கு ஏற்ப நிரந்தர வேலை மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் எண்ணிக்கை உயரத்தொங்கியது. உத்திரவாதமற்ற தற்காலிக வேலையுள்ள தொழிலாளர்களின் (உதிரிப்பாட்டாளி வர்க்கத்தின்) எண்ணிக்கை மிகக் குறைவே.

தொழிற்துறையால் பெரும் அளவில் நேரடியாகப் பயனடைந்த முதலாளி வர்க்கத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகளின் அரசுகள் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் தள்ளுபடி, வரிச்சலுகையும், பொதுத்துறை வங்கிகளின் வட்டி குறைவான கடன், மலிவு விலை குறைந்த வாடகை நிலம், மின்சாரம் உள்ளிட்ட பிற சலுகைகளும் வழங்கியது. இதில் பெரும் அளவுக்கு பயனை அனுபவித்திராத விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர், நிரந்தர வேலையற்ற உதிரிப் பாட்டாளிகள் உள்ளிட்ட மக்களுக்கும் சில சலுகைகள், இலவசங்களையும் வழங்கதொடங்கியது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி, கூட்டுறவு கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பாட்டாளிகளுக்கும், நிரந்தர வேலையற்ற (உதிரி) பாட்டாளிகளுக்கும், விவசாயத்தொழிலாளர்களுக்கும்”இலவசங்கள்”ரேசன் பொருட்கள்.

இவையாவும் பெரும் அளவுக்கு இந்த வர்க்கங்களின் வாழ்வாதாரத்திற்கு பலனளித்தது. இத்தகைய பொருளாதாரப் உற்பத்தி முறையும், அது உருவாக்கிய வர்க்கப் பின்னணியும் தான் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அடித்தளம்.

சாதியில் பார்பனர் அல்லாத சாதியினரை தலைமையில் வைத்து FC -யில் உள்ள பிராமணர் அல்லாத பிரிவினரையும் OBC பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. அந்த சாதிகளில் பெரும் எண்ணிக்கையில் பணக்காரர்கள், காண்ட்ரக்டர்கள், முதலாளிகள்”கல்வி வள்ளல்”தோன்றவும் காரணமாக அமைந்தது. .

4) புதிய சகாப்தத்தின் தொடக்கம் 1990 களுக்கு பின் திராவிடக் கட்சிகளின் வளர்ச்சியின் உச்சமும் அதன் வீழ்ச்சியும்;

1990-களில் பிற்பகுதியில் பொருளாதாரக் கொள்கையான தனியார்மயம், தாராளமயம், உலகமயத்திற்கு பின் முதலாளித்துவ உற்பத்தியின் அடித்தளமாகிய தனியார் ஆலைகள் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், நடுத்தர சிறிய ரக ஆலைகள் முதல் மிகப்பெரிய ஆலைகள் வரை ஆயிரக்கணக்கான ஆலைகள் தோற்றமும் வளர்ச்சியும் பெற்றது. இதில் அரசியல்வாதிகளாக ஆட்சியாளர்களாக இருந்த திமுக,அதிமுக திராவிட கட்சிகளின் அரசியல்வாதிகள் முதல் காங்கிரஸ், பாஜக வரை எண்ணற்ற பிரிவினரின் கைகளில் ஆட்சியும், அதிகாரமும் வருமானமும் சொத்தும் மிகப்பெரிய எண்ணிக்கையில் கிடைத்து உயரத் தொடங்கியது.” திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது”.

 சொந்தமாக நிலம்படைத்த விவசாயிகள் ஒரு வர்க்கமாகவும், விவசாய கூலித் தொழிலாளர் ஒரு வர்க்கமாகவும் முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையில் விரிவாக்கத்திற்கு ஏற்ப அதாவது தனியார்மயம், தாராளமயம், உலகமயத்திற்கு ஏற்ப மிகப்பெரிய எண்ணிக்கையில் கோடீஸ்வரர் ஆன அரசியல்வாதிகள் காண்ட்ரக்டர்கள், தொழிலதிபர்கள் எண்ணிக்கையும் உயரத்தொடங்கியது. சில கோடிகள் ஊழல் என்பது பல ஆயிரம் கோடிகளாகவும், லட்சம் கோடிகளையும் தாண்டிய ஊழல்களாக வளர்ந்தது.

வளர்ப்பு மகன் கல்யாணம் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கையை பார்த்து மக்கள் வியந்து போயினர்.

 2000க்கு பிறகு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் கல்வி வேலைவாய்ப்பின் மூலம் மிகப்பெரிய எண்ணிக்கையில் லட்சங்களில் ஊதியம் பெறும் உயர் நடுத்தர, மத்திய நடுத்தர வர்க்கம் பெரும் எண்ணிக்கையில் உருவாகியது. அதனுடன் சேர்ந்து வியாபாரிகள் கடைக்காரர்களான குட்டிமுதலாளித்துவ பிரிவினரும் மிகப்பெரிய எண்ணிக்கையில் உருவாகினர்.

வீழ்ச்சியின் தொடக்கமும்; விஜயின் வெற்றியும்

படித்தால் அரசு மற்றும் தனியார்த்துறையில் நிரந்தர வேலை நல்ல சம்பளம் என்ற நிலை 2000- மாவது ஆண்டுகளுக்குப் பிறகு மாறத் தொடங்கியது. எல்லாத் துறையிலும் காண்ட்ராக்ட் மற்றும் ஒப்பந்தப் பணியாளர் முறை எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது‌. இதன் விளைவாக எந்த விதமான பலனையும் பெரிய அளவில் பெற்றிடாத, உயிர் வாழ்ந்தால் போதும் என அல்லல்படும் ஒரு வர்க்கம் ஒன்று உருவாகியது அதுதான் நிரந்தர வேலையற்ற நாடோடிகளாக உள்நாட்டுக்குள்ளேயே அலைந்து திரியக்கூடிய வாழ்க்கை உத்திரவாதமற்ற உதிரி பாட்டாளி வர்க்கம். (தற்காலிகப் பணியாளர்கள்)

இதன் தொடர்ச்சியாக ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுக்கு எதிரான‌ மாநில மக்களின் மனநிலை அவர்களோடு கூட்டு சேர்ந்து மாநில கட்சி செய்யும் ஊழல் அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கையும், திருமங்கலம், R.K நகர் பார்முலா தேர்தல்களும், மக்களை அரசியல்வாதிகள், அதிகாரிகள் நடத்தும் முறைகளும், நதிநீர் பங்கீடு குறித்த முரண்களில் ஒன்றிய அரசின் செயலின்மையும் மக்களின் ஒன்றிய அரசுக்கு எதிரான எதிர்ப்பை தீவிரமாக்கியது. திமுக, அதிமுக விற்கு மாற்றாக மக்கள் ஒரு புதிய தேர்தல் கட்சியைத் தேடத் தொடங்கினர். அந்த இடத்தை விஜயகாந்த் சிறிது காலத்திற்கு பிடித்தார். பின் அவரின் சில செயல்களால் மக்களின் நம்பிக்கை இழந்தார். ஊடகங்கள் திட்டமிட்டே அவரை கேவலப்படுத்தியதும் பின் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனதும் அவர் செய்த நல்ல காரியங்களை நினைவு கூர்ந்து இப்படி ஒரு நல்ல மனிதரை மதிக்காமல் இழந்து விட்டோமே என மக்கள் கண்ணீர் வடித்தனர், வருந்தினர்.

 2009 ஆம் வருடம் இலங்கையில் ஏற்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு போர்க் குற்றங்கள், படுகொலைகள் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையில் திராவிடக் கட்சிகள், தேசிய கட்சிகள் ஆகியவற்றுக்கு எதிரான மனநிலையை மேலும் அதிகப்படுத்தியது. அது பின்நாட்களில் நாம் தமிழர் கட்சியை ஆதாரிப்பது எனும் நிலைக்கு மக்களைத் தள்ளியது.

இந்நிலைமையில் தான் பெரும்பான்மையான மக்களுக்கு கடந்த 2008 முதல் 18 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, நிரந்தர பொருளாதார மந்தநிலை, ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரிக் கொள்கையால் ஏற்பட்ட வேலை இழப்பு, தொழில் இழப்பு மக்களிடம் இருந்த வாழ்க்கையையும் இழக்கச் செய்தது. பெரிய அளவில் அரசு பணியும் வழங்கிடாத மாநில அரசாங்கம், பிழைப்பதற்கு வழி இன்றியும் ஆடம்பர அத்தியாவசிய பொருள்கள் நுகர்வுக்கு வாழ்வுக்கும் வசதிக்கும் வழியின்றி போனது‌. திருட்டு, வழிப்பறி, போதைப் பொருள் கடத்தல் எனத் தொடங்கி அது பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, கொலை என அதன் விளைவுகள் நீண்டு கொண்டே சென்றது.

ஒரு பக்கம் நாடு”வளர்ச்சிப்பாதையில்”செல்கிறது. பொருளாதாரப் புள்ளிவிபரங்கள் உயர்ந்து கொண்டே செல்கிறது. பணக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கிறது ஆனால் நடுத்தர ஏழை மக்கள் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு எனும் எதிர்நிலை பள்ளத்தாக்கில் வீழ்ந்து கொண்டே இருக்கின்றார். தனியார் மூலதனம் ஒரு புறம் செல்வத்தையும் மறுபுறம் ஏழ்மையையும் படைத்தது.

இந்த பள்ளத்தையும் மேட்டையும் சமப்படுத்த முடியாமல் தான் திமுக உள்ளிட்ட அத்தனை ஓட்டுகட்சிகளும் இலவசங்களையும், சலுகைகளையும் வாரி வழங்குகின்றனர். நாம் இலவசங்கள், சலுகைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. இவையாவும் தற்காலிக மற்றும் போதாத தீர்வுகள் என்பதே நம் நிலைபாடு.

இந்த அடித்தளத்தோடு சேர்ந்து தான், மக்களிடம் மன்னர் பரம்பரை போல நடந்து கொள்ளும் தேர்தல் கட்சியினர்”ஓசி ஓசி”என அருவருப்பான உடல் மொழியுடன் பேசுவதும். பொன்முடி, ஸ்டாலின், சேகர் பாபு உள்ளிட்ட ஆளும் வர்க்க அரசியல்வாதிகள், மக்களை மிகக்கேவலமான முறையில் தொடக்கூட தகுதியற்றவர்களாக நடத்துவதும் தான் அதிருப்தி மற்றும் இலவசங்களுக்கு எதிரான மக்களின் ஒரு தரப்பாரது மனநிலையை இலவசங்களே வேண்டாம்” நல்லாட்சி”வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தியது. மக்களின் சுயமரியாதை உணர்வை தூண்டி விட்டது.

சீரழிந்த பொருளாதாரத்தால், விவசாயிகள் போராட்டமும், தொழிலாளர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பணி நிரந்தரம் கேட்டும் போராட்டித் தவிக்கின்றனர். படித்தும் நல்ல வேலை கிடைக்காத இளந்தலைமுறையினர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக Zomato, rapido, ola, uber - போன்ற நிறுவனங்களில் தினக்கூலிகளாக மாறி வருகின்றனர்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஒருவர் மாறி ஒருவர் ஆட்சிக்கு வந்து காடுகள்‌, மலைகள், ஆற்றுமணல் வரை இயற்கை வளங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கொள்ளையடித்து பல லட்சம் கோடிகள் சொத்துகளும் கமிஷனும் சேர்த்தனர். மன்னர்களைப் போல ராஜ வாழ்க்கையும் வாழ்ந்து வருகின்றர். இரு கட்சிகளும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆட்சியில் இருப்பவருக்கு ஒரு தொகையும் எதிர்காட்சியில் இருந்தால் ஒரு தொகையும் கைமாற்றி கூட்டுப் பங்கு கொள்ளையை நடத்தி வருகின்றனர் என மக்கள் கருதுகின்றனர். மக்களின் வெறுப்புக்கு ஆளாயுள்னர். இதன் மூலம் திராவிடக் கட்சிகளுக்கு எதிராக மக்கள் மனநிலை மாறியது.

இதில் இருந்து தங்களை காக்க ஒரு மீட்பர் ஒருவர் வேண்டும் என்ற நிலை மக்களுக்கு வந்தது. அத்தகைய மீட்பரான விஜயகாந்தை சரியாக பயன்படுத்தாமல் விட்டோமே என அவர் இறப்புக்கு பின் மக்கள் வருந்தினர். அதன் பின் கிடைத்த சீமானும் ஒரு”அராஜக லும்பன்”வகையறா என சீக்கிரமே உணர்ந்தனர்.

சீமான் ஒன்றிய அரசுக்கும் மாநிலத்திற்கும் உள்ள முரண்பாட்டை அவ்வப்போது பேசினாலும் பிற தேசிய இனங்களையும், மொழிச்சிறுபாண்மையினரையும் பகைத்துக்கொண்டு வெறுப்பு அரசியல் செய்தார். அவரின் பொறுப்பற்ற, தான் தோன்றித்தனமான பேச்சுக்களால் மக்களிடம் செல்வாக்கு இழந்தார், தமிழ்நாட்டு மக்களிடம் சாதிய மோதலை தூண்டிவிடும் அரசியலையும் செய்தார். மக்கள் அவர் கருத்தையும், கதைகளையும் ஏற்கவில்லை. எல்லா நிகழ்வுகளில் பணம் திரட்டி திரள்நிதி நாயகனானார். முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை மக்கள் மத்தியில் பேசி அம்பலப்பட்டுப் போனார்‌. இவர் குறித்து விவரமாக பார்க்க வேண்டாம். இதுவே போதுமானது.

விஜயின் அரசியல் வருகை;

இந்நிலையில் தான் விஜய் 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் மக்கள் விரும்பும் நாயகனாக இருந்ததும், இடையிடையே பல்வேறு மக்கள் நலப்பணிகள் செய்தும் நல்ல பெயர் எடுத்திருக்கிறார். நூறு கோடிக்கும் மேல் சம்பளம் பெற்றாலும் அனைவரையும் மதிக்கும் மாண்பு. எளிய மனிதர்களிடம் நெருங்கிப் பழகும் பண்பு என மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தின் போது தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்து 14 பேர் மரணமும், கைதுகளும் சிறையில் சித்திரவதைகளும் நடந்து கொண்டிருக்கும் சூழலிலும் உயிரிழந்த ஸ்லோனின் வீட்டிற்கும் பிறரின் வீட்டிற்கும் சென்று வந்திருக்கிறார். நீட் தேர்வால் உயிரிழந்த தங்கை அனிதா வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியிருக்கிறார். அவ்வப்போது இப்படி மக்களோடு தொடர்புள்ள விஷயங்கள் செய்திருக்கிறார். இவையாவும் திரைத்துறையில் வேறு யாரும் செய்யாதது. திரைத்துறையிலும், பெரும்பாலும் நடுத்தர வர்க்க குடும்ப கதாப்பாத்திரங்களையே செய்திருக்கிறார்‌. அண்ணன் தங்கை பாசம், விவசாயிகளுக்காக நாட்டுக்காக போராடும் கதாப்பாத்திரம் என தன் பின்பத்தையும், சிறிய வயதில் தன் தங்கையை இழந்த அவர் துயரத்தையும் திரைக்கதைகளின் மூலம் பெண்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளார். இதன் மூலம்”அண்ணா”வாகவே மாறியிருக்கிறார். லட்சக்காண பெண்கள் அவரை தன் சொந்த அண்ணணாகவும், பிள்ளையாகவும் ஏற்றும் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அந்த பின்மம் மட்டும் அத்தனைக்கும் முன்னணிக் காரணம் என்றால் அது மற்ற புறக்காரணங்களையும், வரலாற்றையும், பொருளாதாரக் காரணங்களையும் மறுக்கும் செயலாகும். இந்த பொருளாதார வர்க்க காரணங்கள் மட்டுமே உண்மையென்றால் அது புறக்காரணிகளை மறுக்கும் அகநிலையான ஆய்வாகவும் மாறிவிடும். இவை இரண்டுமே பங்காற்றியிருக்கிறது. அதில் முதன்மையானதும் தீர்மானகரமானதும் மேலே நாம் கூறிய” பொருளாதாரக் காரணங்களே”.

இப்படி ஒரு‌ வரலாற்று பொருளாதாரப் பின்னணியில் தான் விஜயின் அரசியல் பயணம் தொடங்கியது அதில் அவர் மக்களை அணுகும் முறையும் மக்கள் மனதை கவர்ந்திருக்கிறது. கரூரில் மக்கள், கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தது ஆளும் கட்சிகளின் மீதான கோபமாகவும் மாறியிருக்கிறது.

2026 விஜயின் வெற்றியின் தொடக்கம் என்பது கட்சி தொடங்கி 2.5 ஆண்டுகளில் வெற்றி பெற்ற ஒரு நட்சத்திரத்தின், நாயக பின்பத்தின் வெற்றி மட்டுமல்ல. ஏற்றத்தாழ்வான பொருளாதார வளர்ச்சி, உத்திரவாதமற்ற, நிரந்தரமற்ற, தற்காலிக கூலிகளாய் மக்களை நாடோடிகளாக உள்நாட்டில் அலைய விடும் நிலையை உருவாக்கிய” புதிய பொருதாரக் கொள்கையின்” தோல்வி. அரசியல்வாதிகளின் பல லட்சம் கோடி ஊழல், பல லட்சங்கள் கோடிகளின் விலையில் கைக்கடிகாரம், பல கோடி மதிப்புள்ள கார்களை பயன்படுத்திக்கொண்டே கையில் வெறும் 10000 ரூபாய் தான் உள்ளது என கணக்கு காட்டும்”மாமனிதர்கள்”உள்ளிட்டோருக்கும் எதிரானது. ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஆடம்பர பகட்டு, பண்ணையார் மனநிலையில் மக்களிடம் அவர்கள் நடந்து கொள்ளும் முறைக்கு எதிரானது ஏன், மக்களின் சொந்த வாழ்க்கை நிலைமைகளின் மீதே அவர்களுக்கு ஏற்பட்ட வர்க்க கோவத்தின் வெளிப்பாடே.

விஜய் தற்போது பிரதிநிதித்துவப்படுத்துவது திமுக, அதிமுக வேண்டாம் என்று கூறும் மக்களையும் தன்னை” அண்ணனாக”நினைப்பவர்களை மட்டுமல்ல, நகர்புறங்களில் உள்ள பணக்கார வர்க்கத்தையும், குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கும், நிரந்தர வேலையற்ற வாழ்க்கையே இல்லாத உதிரிப் பாட்டாளி வர்க்கத்திற்கும், லஞ்ச ஊழலை வெறுக்கும் இலவசங்களை வெறுக்கும் லஞ்சம் வாங்காத ஆட்சி என்றால் இலவசங்களுக்கு தேவையிருக்காது என மேட்டிமையாக நினைக்கும் உயர் நடுத்தர வர்க்கத்தையும், சேர்த்து தான் அதன் பிரதிநிதியாக பிரதிபளிக்கிறார். அதனாலேயே விஜயை ஒவ்வொருவரும் தங்கள் அண்ணனாக, தங்கள் வீட்டுப்பிள்ளையாகவும் மனதார எண்ணுகின்றர்.

தேர்தலில் நின்று வெற்றி பெற சாதி, மதம் மற்றும் பணம் முக்கிய தேவை என்பதை இந்த தேர்தல் மாற்றிவிட்டது எனக் கூறுகிறார்கள். அது உண்மையல்ல. கடந்த கால சமூக பொருளாதாரத்தில் சாதி, மதம், பணம் ஆகியவை நிச்சயமாக தேவைப்பட்டது. அந்த தேவையும், சூழலும் தற்போது மாறியிறுக்கிறது. அதாவது புதிய சமூக சூழலும் அதன் தேவையும் தோன்றியிருக்கிறது. அது தன்னை பூர்த்தி செய்யக்கூடிய அரசியலையும் அதன் வரலாற்றுத் தலைவர்களையும் உருவாக்கியிருக்கிறது.

பாசிச பாஜக எதிர்ப்பில் விஜய் மீது நம்பிக்கை இன்மைமையே அவர் தனிப்பொரும்பான்மைக்கும் சற்று குறைவான இடங்களை வென்றது. வருங்காலங்களில் அதையும் நிருபித்தால் அசைக்க முடியாத இடம் கிடைப்பதும் உறுதி.

புதிய சூழல்;

திமுக, அதிமுக, ஆகிய கட்சிகளின் தேவைகள் தற்போது பூர்த்தியடைந்து விட்டன அல்லது நிறைவடைவதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

திராவிடக்கட்சிகள் தங்களுக்கான சவக்குழியை தாங்களே தோண்டும் முனைப்புடன்

108 இடங்களை பெற்ற விஜயை வீழ்த்த திமுக, பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக உடன் கூட்டணி வைக்கவும் துணிந்து விட்டது. விசிகவும் அதற்கு உடன்படத் தொடங்கியது. ஆனால் அதில் கெடும் வாய்ப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் 4 இடங்களைப் பெற்றதும் திமுகவின் திட்டத்தை எதிர்த்ததும், அதிமுகவிற்குள்ளே தோன்றிய முரண்பாடான கருத்துமே அதிமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்திருக்கிறது. அந்த கட்சிகளின் நிரந்தர முடிவுரையை சற்றுத் தள்ளிப் போட்டிருக்கிறது. திமுக, அதிமுக உடன் சேர்ந்து விசிகவும் தற்போதைய அரசியல் சூழலில் நம்பிக்கையும், மதிப்பையும் இழந்திருக்கிறது.

CPI, CPI (M) கட்சிகளின் செயல்பாடு இக்கட்சிகளின்‌ அரசியல் நேர்மையும், மதிப்பும் மக்கள் மத்தியில் உயர்ந்திருக்கிறது. 08.05.26 அன்று விஜயின் கட்சிக்கு நிபந்தனையின்றி ஆதரவு கொடுத்தது. அரசியல் செய்வதே அதிகாரத்திற்காகத் தான் அந்த அதிகாரம் நம் கையில் இருந்தால் தான் நம் வர்க்கத்திற்கு சட்டரீதியாக, உறுதியாக, கூடுதலாக நன்மை செய்ய முடியும். அமைச்சரவையில் இடம் கொடுக்க தவெக தயாராய் இருந்தும் கம்யூனிஸ்ட் கட்சி அதை மறுத்தது அதன் அரசியல் போதாமையையும்” அதிகாரத்தை கண்டு பயப்படும் கோழைத்தனத்தையும் காட்டுவதாகும்”. தொழிலாளர் நலத்துறை மற்றும் கல்வித்துறை போல முக்கியமான துறைகளைப் பெற்று அமைச்சரவையில் தனித்துவமாக பங்காற்றியிருக்க முடியும். கூட்டணி சேர்த்த திமுகவிடம் நன்றி, விசுவாசம், தனிபட்ட நபர்களின் நற்பெயருக்காக எந்த வர்க்கத்திற்க்கு சேவை செய்ய அரசியல் செய்கிறோமோ அதையே கைவிட்டுள்ளனர்.

பாஜக அதிமுகவுடன் திமுக கேடுகெட்ட சந்தர்பவாத கூட்டணி அமைக்க முயன்று, மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கும் வேலையில் திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறி தனித்து முடிவு எடுத்து அமைச்சரவையை பெற்றிருக்க வேண்டும். ஆனால் திமுகவின் கிளைக் கழகம் போல இந்த சூழலில் தேங்கி நின்று தன் இயக்கத்தின் முன் நகர்வை தவறிவிட்டிருக்கிறார்கள் அதன் தலைமைத் தோழர்கள். இது குறித்து அவர்கள் மீண்டும் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்.

விஜயால் மாற்றாக முடியுமா?

சிறிது காலத்திற்கும் ஏன் பல காலத்திற்கும் கூட முடியும் என்பது தான் நமது பதில்.

இருக்கக்கூடிய அரசு பணிகளை நிரந்தரப் பணிகளாக வழங்குவது. அரசு பொதுத்துறை நிறுவனங்களை உயர்த்துவதன் மூலம் நிரந்தர வேலை வாய்ப்புகளை உயர்த்துவது. தொலைத்தொடர்பு, இண்டர்நெட் சேவைகளை அரசே வழங்குவது, சேவை Appகளை ஓலா ஊப்பர், சொமோட்டோ, உள்ளிட்ட மாற்று பொருளாதாரத் திட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவது. முடிந்த அளவுக்கு தனியார் நிறுவனங்களை மட்டுப்படுத்துவது என”அரசு முதலாளித்துவத்தின்”மூலம் தன்னை தக்கவைத்துக் கொள்ள முடியும். லஞ்ச ஊழல்களை ஒழிப்பது, காவல்துறை உள்ளிட்ட அரசு பணியாளர்களை மக்களை மதிப்போடு நடத்த சொல்வது, போதை கலாச்சாரம் டாஸ்மார்க் உள்ளிட்டவற்றை ஒழிப்பது, உள்ளிட்ட ஒரு நல்ல மக்கள் நல அரசாங்கத்தின் மூலம் இன்னும் ஒரு சகாப்த காலத்திற்கு விஜயால் நிரந்தர ஆட்சி அமைக்க முடியும்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் இயக்கங்கள் என்ன செய்வது?

நாம் கோருவது வர்க்க சமரசம் அல்ல, வர்க்க ஒழிப்பு. ஆனால் தற்போது உள்ள நிலையில் இருந்து நேரடியாக செல்வதற்கு முன் இந்த இடைநிலை கட்டமான வர்க்க சமரச கட்டத்தை மிக வேகமாக, கவனமாக கடப்பதற்கு கம்யூனிஸ்டுகளால் வினையாற்ற முடியும். திமுக, அதிமுக உள்ளிட்ட முதலாளித்துவ கட்சிகளுக்களோடு கூட்டணியாகத் தொடர்வதை நிறுத்திவிட்டு அக்காட்சிகளுக்கு மாற்றாக கம்யூனிஸ்ட் கட்சிகளை முன் நிறுத்த வேண்டும். திமுக, அதிமுக நலனுக்காக மக்கள் விரோதமாக தங்களுக்குள்ளே கூட்டணியை ஏற்படுத்த முயன்றதை மக்கள் மத்தியில் மறைக்காமல் அம்பலப்படுத்த வேண்டும்.

அடுத்தடுத்த மக்கள் நல கோரிக்கைகளை வேகமாக வைத்து ஒரு பொருளாதார உயர்வு நிலைக்கு செல்லும் போதும், அதில் ஏற்படும் முதலாளித்து நெருக்கடிகளின் போதும் வர்க்க விடுதலையே சரியானது. ”சோசலிசமே மாற்று”என முன்வைக்க வேண்டும்.

முதலாளித்துவ பொருள் உற்பத்திமுறை சமூக மயமாக இருக்கும் போது, அதன் விநியோகிக்கும் முறையும் (உபரியும்) இலாபமும் தனி ஒரு சில நபர்களிடம் இருப்பது மட்டுமே இந்த முரண்பாடுக்கு மக்களுடைய ஏழ்மைக்கு அனைத்து சமூகப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும், இதை தீர்ப்பதற்கு சமூக மயமாகி விட்ட உற்பத்தி முறையில் மூலதனமும், வினியோகமும், லாபமும் சமூகமயம் ஆக வேண்டும். அதாவது உழைக்கும் மக்களின் தலைமையில் அமைந்த அரசின் உடமைகளாக (சோசலிசம்) ஆக வேண்டும் அது ஒன்றே நிரந்தரத் தீர்வு என மாற்றை மக்கள் முன் வைக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கூறுகின்ற ஒரு”ஜனநாயக சோசலிச குடியரசை” நோக்கி நாம் முன்னேற வேண்டும்.

“சோசலிசம் ஒன்றே மாற்று” எனும் முழக்கம் மக்கள் முழக்கமாக வேண்டும். பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயர்த்த வேண்டும். அந்த இடத்திற்கு கம்யூனிஸ்ட்கள் உயர வேண்டும்.

பார்க்க கீற்றில் இதற்கு முன் வெளியான எனது கட்டுரை; கம்யூனிஸ்ட்களுக்கு ஓர் கடிதம்.

தேர்தல் புறக்கணிப்பு குழுக்களுக்கு;

முதலாளித்துவ சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் வர்க்கங்களையும், வர்க்க பகைமைகளையும், வர்க்கப் போராட்டத்தையும் ஒழிப்பதற்கானது அல்ல. வர்க்க சமரசங்களையும், சில சலுகைகளையும், பெயரளவிற்கான உரிமைகளையும் மட்டுமே வழங்குகிறது. அதில் உள்ள அதிகாரங்களில் நாம் பங்கு பெற்று சில சலுகைகளை, தேவைகளை நாம் பெறவும் வேண்டும்.

“முதலாளித்துவ சட்டமன்றங்களும் பாராளுமன்றங்களும் முதலாளித்துவத்தின் நிர்வாக மற்றும் அடக்குமுறை கருவிகளே” என்று மார்க்சியம் கூறியபோதும். எல்லா சூழ்நிலையிலும் மாறாத தத்துவம் போல் அதை புறக்கணிக்க சொல்லவில்லை. புரட்சிகரமான மக்களின் கொந்தளிப்பு உள்ள சூழலில் மட்டுமே புறக்கணிக்க கோரியிருக்கிறது.

“பிற்போக்கு நிறுவனங்களை அழித்துவிடும் பலம் உங்களிடம் இல்லாதவரை நீங்கள் அதில் பங்குபெற்றே தீர வேண்டும்”என்கிறார் தோழர் லெனின்.

பங்கு பெறுவோம். வெல்வோம்.

திமுக வீழ்ந்தது போல விஜயும் வீழ்வார், அதற்காக இன்னும் ஒரு 50 ஆண்டு காத்திருக்க தேவையில்லை.

விஜய்-க்கு மாற்று திமுகவோ அதிமுகவோ அல்ல. விஜயால் வர்க்க சமரசத்தை, வர்க்கப் போராட்டத்தை நீண்ட காலம் தடுக்கவோ, தள்ளிப் போடவோ முடியாது.” சந்தர்ப்பவாத திமுக” கூட்டணியிலிருந்து வெளியேறி உண்மையான, சரியான எதிர்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்பட வேண்டும். வரும் காலம் மட்டுமல்ல நிகழ்காலமும் கம்யூனிஸ்ட்களுக்கானதே.

மார்க்சியமே மாற்று; சோசலிசமே வெல்லும்.

மார்க்சியத்தை உயர்த்திப் பிடிப்போம்.

- தர்ஷன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.