anna arivalayam 527மனிதன் காலம் காலமாக கையால் உணவை எடுத்து வாய் வழியாகவே உண்கிறான். மாற்றம் வேண்டும் என்பதற்காக உணவு உண்ணும் முறையே மாறிவிடாது. அதுபோல அரசியல் என்பது அடிப்படையில் கொள்கை சார்ந்ததே. மாற்றம் வேண்டும் என்பதற்காக கொள்கை இல்லாமல் போய்விடாது. அதே நேரத்தில் 2026 தேர்தலில் மக்கள் கொள்கைக்காக வாக்களிக்கவில்லை என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. அதற்கு சான்றாக திமுக கூட்டணிக்கு 1.54 கோடி வாக்குகள் உள்ளன. அதே நேரத்தில், புதியதாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்ற நடிகரின் கட்சிக்கு நம்மைவிட 17.5 லட்சம் வாக்குகள் மட்டுமே கூடுதலாக கிடைத்திருக்கின்றன. இருப்பினும் அவர்கள் ஆளுங்கட்சி, நாம் எதிர்கட்சி. இந்த முரண்பாடே இந்தத் தேர்தலின் முக்கியப் பாடமாகும்.

இந்தத் தேர்தல், திமுகவினருக்கு ஒரு தெளிவான உண்மையை உணர்த்தியுள்ளது. சமூக ஊடகங்களில் நாம் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அரசியல் என்பது களத்தில் மட்டுமல்ல, டிஜிட்டல் உலகிலும் நடக்கிறது. அங்கே நம்முடைய குரல் இன்னும் வலுப்பெற வேண்டியுள்ளது.

நீங்கள் அரசியல் பற்றிய புரிதல் கொண்டவராக இருந்தால், மாதச் சம்பளத்தைத் தாண்டி சமூக நலனில் ஈடுபாடு கொண்டவராக இருந்தால், நாட்டையே ஒரு குடும்பமாகக் கருதுபவராக இருந்தால், வரலாற்றில் ஆர்வம் கொண்டவராக இருந்தால் திமுகவின் இந்தத் தோல்வியை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக நம் தலைவரின் தோல்வி மனதை அதிகமாகப் பாதிக்கிறது.

ஆனால் வரலாறு எதைக் கற்றுக் கொடுக்கிறது? பேரறிஞர் அண்ணா கூட தோல்வியை சந்தித்திருக்கிறார்கள். அது முடிவு அல்ல, ஒரு இடைநிறுத்தம் மட்டுமே. அதே உணர்வோடு நாம் இதையும் பார்க்க வேண்டும்.

நாம் அடங்கிக் கொள்ளும் மக்கள் அல்ல. சூழ்நிலை எப்படியிருந்தாலும், எங்கு இருந்தாலும், நம் கருத்தை வலியுறுத்தும் மனப்பாங்கு திமுகவினரின் அடையாளம். இந்தத் தேர்தல் முடிவு நம்மை பின்வாங்கச் செய்யாது; மாறாக, இன்னும் உறுதியாக நிற்கத் தூண்டும்.

மேலும், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய கட்சியின் நிலைப்பாடுகள் பல முக்கிய பிரச்சனைகளில் தெளிவாக இல்லை. தொகுதி மறுவரையறை, இந்தி திணிப்பு, திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை, நீட் விலக்கு, புதிய தேசிய கல்விக் கொள்கை இவற்றில் அவர்கள் எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதனால், இந்தத் தேர்தலில் மக்கள் உண்மையான மாற்றத்திற்காக வாக்களித்தார்களா, அல்லது ஒரு ஏமாற்றத்திற்காகவா என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கான பதிலை காலமே தரும். ஆனால், அதற்குள் திமுக தன்னைத் தானே சீரமைத்து, வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் தெளிவாக உள்ளது.

- சொக்கலிங்கம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.