சட்டமியற்றும் அரசியல் மன்றங்களில் "மகளிர் இடஒதுக்கீடு" கொண்டு வருவது, ஒன்றிய பா.ஜ.க அரசின் "Census + Delimitation" என்ற சூழ்ச்சியால் தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டு வருகிறது.
19 செப்டம்பர் 2023 அன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. "Census + Delimitation" முடிந்த பிறகே அமல்படுத்தப்படும்" என்ற தந்திரமான நிபந்தனையுடன் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவின் உள்நோக்கத்தை முன்கூட்டியே உணர்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 20 செப்டம்பர் 2023 அன்றே இந்தத் தாமதச் சூழ்ச்சி குறித்து எச்சரித்தார். இருப்பினும், மகளிர் நலனை முன்னிறுத்தி இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன.
16 ஏப்ரல் 2026 அன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியலமைப்புத் திருத்தச் சட்டமாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், பா.ஜ.க 2011 Census கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 543 தொகுதிகளை 850 ஆக உயர்த்தும் 131வது அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதாவை முன்மொழிந்தது. இது வடமாநிலங்களுக்கு அரசியல் அதிகாரத்தை அதிகரித்து, மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தெற்கு மாநிலங்களை, குறிப்பாக தமிழ்நாட்டை, கடுமையாகப் பாதிக்கும் ஆபத்தான சதித்திட்டம். இதனை தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்க்கமாக முறியடித்தன.
இதையொட்டி, பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் "மகளிர் இடஒதுக்கீட்டை தி.மு.க முறியடித்துவிட்டது" என்று பொய்ப் பரப்புரை செய்கின்றன. உண்மை என்னவென்றால், மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் 16 ஏப்ரல் 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. முறியடிக்கப்பட்டது அந்தச் சட்டம் அல்ல. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைச் சுருக்கும் பா.ஜ.கவின் 131வது சட்டத்திருத்தச் சதித்திட்டமே முறியடிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்த "Census + Delimitation" நிபந்தனையை நீக்க வேண்டும் என தி.மு.க எம்.பி. வில்சன் தனிநபர் மசோதா கொண்டுவந்தார். ஆனால் பா.ஜ.க அதை விவாதத்திற்கே எடுத்துக்கொள்ளவில்லை.
பேரறிஞர் அண்ணா "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்று எச்சரித்தார். பா.ஜ.கவின் Delimitation சதி அதை மீண்டும் உண்மையாக்கும் அபாயம் உள்ளதால், இந்த விவகாரத்தில் தி.மு.கவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டை "Census + Delimitation" திட்டத்திலிருந்து பிரித்து (Delink) 543 தொகுதிகளிலும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். OBC, SC, ST, சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு சேர்க்க வேண்டும். Caste Census நடத்த வேண்டும். 1971 Census அடிப்படையிலான Delimitation Freeze மேலும் 25 ஆண்டுகள் நீட்டிக்கப்பட வேண்டும். தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் எல்லைகள் மட்டும் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
மகளிர் நலனில் தி.மு.கவுக்கு அக்கறை இல்லை என்று பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் பொய் பேசுகிறது. 1974 இல் காவல்துறையில் மகளிர் நியமனம், 1989 இல் அரசு வேலையில் 30% இடஒதுக்கீடு, சொத்தில் சம உரிமை, மகளிர் சுய உதவிக்குழு தொடக்கம், 1996 இல் உள்ளாட்சியில் 33% இடஒதுக்கீடு, 2021 இல் அரசு வேலையில் 40% இடஒதுக்கீடு, நகர்ப்புற உள்ளாட்சியில் 50%, விடியல் பயணம், 2022 இல் புதுமைப்பெண், 2023 இல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என நீளும் இந்தச் சாதனைகளின் வரலாறே தி.மு.கவின் மகளிர் அக்கறைக்குச் சான்று.
மொத்தத்தில், "மகளிர் இடஒதுக்கீடு + மாநில உரிமைகள்" என்ற இரட்டைக் கொள்கையை நிலைநாட்டவே, "Census + Delimitation" திட்டத்திலிருந்து பிரித்து, மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக செயல்முறைப்படுத்த தி.மு.க உறுதியாக நிற்கிறது.
- சொக்கலிங்கம்