2010 ஜனவரியிலிருந்து ஏப்ரல் மாதம் இறுதி வரை விதர்ப்பா மாவட்டத்தில் 7 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கடந்த மே 7 அன்று கூறினார். அதே நாள், அதே நேரம் மகாராஷ்ட்ராவின் முதலமைச்சர் அசோக் சௌகான் இதே காலகட்டத்தில் விதர்ப்பா மாவட்டத்தில் 343 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்தார். இது சரத்பவார் சொன்ன எண்ணிக்கையை விட 57 முறை கூடுதலானதாகும். இந்த இரண்டு தகவலுமே பிடிஐ செய்தி குறிப்பில் ஒரே நாளில் வெளியிடப்பட்டவையாகும்.

குழப்பமாக இருக்கிறதா? இதோ இந்த தகவலையும் சற்று கவனியுங்கள் பவாரும், சௌகானும் பேசியதற்க்கு ஒருவாரத்திற்கு முன்பு மகாராஷ்டிரா மாநில விவசாய அமைச்சர் கே.வி தாமஸ் தனது மாநில அரசின் கணக்குப்படி விதர்ப்பா மாவட்டத்தில் கடந்து ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரை 23 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மாநிலத்தின் முதலமைச்சர் 343 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக சொல்கிறார், மாநிலத்தின் விவசாய அமைச்சர் 23 பேர் தான் என்கிறார். அதே சமயம் விதர்ப்பா மாவட்டத்தில் விவசாய சுயநம்பிக்கை குழுவை சார்ந்த வசந்ரோ நாயக்கே ஜனவரியில் மட்டும் 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

இது இத்தோடு முடியவில்லை. கடந்த 2006லிருந்து 2010 ஏப்ரல் வரை விதர்ப்பா மாவட்டத்தில் மட்டும் 5, 574 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் வருவாய்துறை அமைச்சர் மாநில சட்டபேரவையில் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் இதே காலகட்டத்தில் மொத்தம் 7, 786 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாவும் பதிவு செய்துள்ளார். ஆனால் சரத் பவார் அவர்களை கடந்து மூன்றாண்டில் 3, 450 விவசாயிகள் தான் தேசம் முழுவதும் தற்கொலை செய்து கொண்டனர் என்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் 2006, 2007, 2008 சுமார் 50, 000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்றப்பிரிவு மையத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. நாட்டிலேயே விவசாயிகளின் தற்கொலையை பதிவு செய்து தகவல்களை வைத்திருப்பது தேசிய குற்றப் பதிவு மையம் மட்டும்தான்.

கடந்த 1997லிருந்து 2008 வரை 2, 00, 000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்த மையம் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் தற்கொலை சம்பந்தமான தகவல்களை வழங்க ஒரு அதிகாரப்பூர்வ மையம் இருந்தும் கூட ஏன் இப்படி ஒவ்வொருவரும் வேறு வேறு தகவல்களை கொடுக்கின்றனர். குறிப்பாக மகாராஷ்ட்ரா சம்மந்தமான தகவல்கள் மட்டும் ஏன் தவறாக மாற்றி மாற்றி கூறப்படுகிறது? ஏன் என்றால் மகாராஷ்ட்ராவில்தான் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றன. கடந்த 1997 லிருந்து 41, 404 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 12, 493 தற்கொலைகள் 2006_2008ல் மட்டும் நடந்துள்ளது.

2006ல் பிரதமமந்திரி விதர்ப்பா வரும்வரை மாநிலத்தின் முக்கிய அமைச்சர்கள் கூட பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லவில்லை. இன்றுவரை தற்கொலை செய்து கொண்ட குடும்பங்களை அமைச்சர்கள் சாந்திக்கவில்லை. இவர்கள் மக்களுக்காக எதுவும் செய்யத்தயாராக இல்லை. மேல் இடத்திலிருந்து வரும் கேள்விகளை சமாளிப்பதற்காகவே இதுபோன்ற மாறுபாடான தகவல்களை வழங்குகின்றனர்.

ஜூன் 2005ல் திகம்பர் அகோஸ் என்ற விவசாயியின் தற்கொலையை ஒட்டி மல்வகாட் யவத்மால் போன்ற இடங்களுக்கு சென்றபோது அகோஸ்சின் உறவினர் ஒருவர் சொன்னார். தற்போது நிம்மதியாக கூட சாக முடியவில்லை. 40க்கும் மேற்பட்ட கேள்விகளோடு எங்களை தொலைத்தெடுத்து விடுகின்றனர். அதாவது சாவதற்கு முன்பு நீ விவசாயிதான் என்பதையும் உன் தற்கொலை தகுதியுடைய தற்கொலை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள். அப்போதுதான் உன் குடும்பம் இழப்பீடு பெருவதற்கு தகுதியுடையதாக இருக்கும். தங்கள் பெயரில் நிலம் இல்லை என்ற ஒரே காரனுத்துக்காக விவசாயத்தில் நட்டமேற்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டடோரின் பெயர்கள் விவசாய தற்கொலை என்ற பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அதாவது இறந்துபோன கணவரின் நிலத்தில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் வயதான தந்தையின் பெயரில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வந்த மூத்த மகன்கள் போன்றவர்களும் இந்த பட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் சொந்தமில்லாத நிலத்தில் விவசாயம் செய்து தற்கொலை செய்து கொண்ட தலித் மற்றும் ஆதிவாசி மக்களும் இப்பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு செய்தும் விவசாயிகளின் சாவு எண்ணிக்கை குறைந்த பாடில்லை. ஆகவே, அதிகாரிகள் மேலும் ஒருபடி சென்று தகுதியுடைய,  தகுதியற்ற தற்கொலை என்று வகைப்படுத்தலாயினர். ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டால் மட்டுமே விவசாய தற்கொலையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பல பட்டியல் தயாரிக்கப்பட்டு விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டால் அது விவசாய தற்கொலையாகவோ, தகுதியுடைய தற்கொலையாகவோ ஏற்றுக் கொள்ளப்படாது. இது சற்று எண்ணிக்கையை குறைத்து காட்டியுள்ளது. அரசாங்கத்தின இழப்பீட்டுத் தொகையை பெற வேண்டுமென்றால் அது “தகுதியுடைய’’ தற்கொலைக்கு மட்டும்தான் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தற்கொலையை தகுதியுடையவையா, தகுதியற்றவையா என்பதை ஆய்வு செய்யகுழுக்கள் உட்பட அமைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கு நியாயமான காரணங்கள் இருக்கிறதா? இழப்பீடு கொடுக்க ஏற்றவைதானா என்பவைகளை ஆய்வு செய்வதாக கூறப்படுகிறது. மகாராஷ்ரா மாநில வருவாய்துறை அமைச்சர் பல ஆயிரம் தற்கொலைகள் தகுதியுடைய தற்கொலை அல்ல என்று சட்டமன்றத்தில் நீட்டி முழங்குகிறார். இவர்கள் எவ்வளவு சொன்னாலும், தேசிய குற்றப்பதிவு மையத்தின் புள்ளி விவரங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும் இவர்கள் முழுமையாக இந்த புள்ளி விபரத்தை புறக்கணிக்கின்றனர். மாநிலங்களவையில் பதிலளிக்கும் போதும் இத்தகவல்களை மருந்துக்குக்கூட பயன்படுத்த மறுக்கின்றனர்.

அனைத்து விதமான தற்கொலைகளையும் பதிவு செய்யும் ஒரே ஆதிகாரபூர்வ அமைப்பு தேசிய குற்றப்பதிவு மையம் மட்டும்தான். ஆனாலும் மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் தேசிய குற்றப் பதிவு மையத்தின் புள்ளிவிவரங்களை கணக்கில் கொள்வதே இல்லை. ஒருவேளை அவர்கள் அவர்களுக்கு தேவைப்படும் வகையில் புள்ளிவிபரங்களை தயார் செய்வதில் மும்முரமாக இருந்திருக்கலாம். வறுமைக்கோடு சம்மந்தமான தகவல்கள் பொது விநியோக முறை போன்ற கணக்கு வழக்கு போலவே விவசாயிகள் தற்கொலை கணக்கையும் அரசு அனுகுகிறது. இது உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் மடத்தனமாக இல்லாமல் மக்களுக்கு நம்பிக்கையுட்டும் வகையில் அரசின் அணுகுமுறையிருக்க வேண்டும்.

2011 ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு உண்மையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை விவசாயிகள் உள்ளனர். என்பதை காண்பிக்கும் நிச்சயம் இது கடந்த கணக்கெடுப்பில் கிடைத்த தகவலை விட அதிச்சிதக்கதாகவே இருக்கும். 2001 கணக்கெடுப்பின் போது 10 ஆண்டுகளில் சுமார் 8 கோடி பேர் விவசாயத்தை கைவிட்டு விட்டனர். எத்தனை மோசமான அனுபவங்களை பெற்றாலும் அரசின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 2011 கணக்கெடுப்பு விவசாயம் சார்ந்த பல அதிச்சிகரமான தகவல்களை வழங்குப்போகிறது. அப்போதும் அரசாங்கத்தின் பழைய பல்லவியும், அபந்தமும் தொடர்கதையாகத்தான் இருக்கப்போகிறது.

மொழியாக்கம் : ச. லெனின்

 

Pin It