river tamilவிருத்தாசலம் என்கிற பழமலை நகரின் நடுவே செல்லும் மணிமுத்தாறு வரலாற்று சிறப்புமிக்க ஆறுகளில் ஒன்றாகும். கல்வராயன் மலையில் பல்வேறு சிற்றோடைகளாக உற்பத்தியாகி, கோமுகி ஆறாக மலையடிவாரத்திற்கு வந்து சேருகிறது. அப்படி வந்து சேரும் இடத்தில் கோமுகி அணை 1966- ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணையிலிருந்து கோமுகி ஆற்றில் திறந்து விடப்படும் நீர் கடலூர் மாவட்டம் நல்லுர் கிராமத்தில் மணிமுத்தாற்றோடு இணைகிறது.

இந்த இரண்டு ஆறுகளிலும் உள்ள பழைய, ஆயக்கட்டு பகுதிகளில் 46 கிராமங்களில் உள்ள 5680 ஏக்கர் நிலங்களுக்கும், புதிய ஆயக்கட்டு பகுதியிலுள்ள 7கிராமங்களில் உள்ள 5000 ஏக்கர் விளை நிலங்களுக்கும் பாசனத்திற்கான நீரை வழங்குகிறது.

இந்த அணை கட்டப்படாத ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆற்று நீரை விருத்தாசலம் பகுதி மக்கள் விவசாயத்திற்கும், குடி நீருக்கும் ஏரி, குளங்களில் தேக்கி வைத்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

இப்படி கோமுகி அணையினால் விவசாயத்திற்கு பாசன வசதி பெறும் 52 கிராமங்களும், அவற்றில் 10,680 ஏக்கர் விளை நிலங்களும் இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ளது.

இந்த ஆறுகள் இரண்டும் பயணிக்கும் பகுதிகள் முழுவதிற்கும் நிலத்தடி நீருக்கும் கோமுகி, மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு ஆறுகள் மட்டுமே ஒரே ஆதாரங்களாக உள்ளன. குடி நீருக்கும், பாசனத்திற்கும் இதைத் தவிர வேறு வழிகள் ஏதும் இல்லை.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோமுகி மற்றும் மணிமுத்தாற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன.

இதனோடு கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலி நிலக்கரி சுரங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீரினாலும் நிலத்தடி நீர் மட்டம் 600 அடிகளுக்கும் கீழே அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் குடி நீருக்காகவும், விவசாயத்திற்கும் இப்பகுதி மக்கள் வாழ்வா, சாவா என்ற பெரும் போராட்டத்தையே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் கோமுகி அணை நீரை நம்பியிருக்கும் இப்பகுதிகள் முழுவதுமே பாலை வனமாக மாறிவிடும்.

கல்வராயன் மலையில், கள்ளக்குறிச்சி மாவட்டப் பகுதியில் உற்பத்தியாகும் கோமுகி ஆறு, சேலம் மாட்டத்தில் 10 கிலோ மீட்டரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 35 கிலோ மீட்டரும் மலைகளில் மொத்தமாக 29 மலை கிராமங்கள், காடுகள் வழியே பயணிக்கிறது. இந்த மலை கிராம மக்களின் குடிநீர், பாசனம் மற்றும் காடுகள், அவற்றிலுள்ள விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் இந்த ஆறே ஒரே நீராதாரமாகவும் விளங்கி வருகிறது.

இப்பகுதிகளில் மனிதர்கள் வாழ்வதற்கு முன்பிருந்தே பல லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இயற்கையாக உருவாகிய, கோமுகி மற்றும் மணிமுத்தாறு இரண்டு ஆறுகளும் அவைகள் செல்லும் பகுதிகளூக்கு இன்று வரை உயிராதாரமாக விளங்கி வருகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு ஆறுகளையும் முற்றாக மலடாக்கும் திட்டத்தை, தமிழக முதல்வராக உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தற்போது அவசரம், அவசரமாக செயல்படுத்த தொடங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கோமுகியாறு, அங்கிருந்து தென்மேற்கு திசையில் பயணித்து சேலம் மாவட்டம் கைகான் வளைவு என்ற இடத்தில் கிழக்கு நோக்கி வளைந்து மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்ட மலைகளில் பயணித்து மலையடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு வந்து சேருகிறது.

சேலம் மாவட்டம் கைகான் வளைவில் கோமுகி ஆற்றிலிருந்து 500 மீட்டர் கால்வாயை மேற்கு திசையில் தோண்டி சேலம் மாவட்டம் கல்வராயன் மலையடிவாரத்தில் உள்ள கரிக்கோயில் நீர்தேக்கத்திற்கு செல்லும் காட்டோடையில் இணைத்து விட்டால், அதன் பிறகு ஒரு சொட்டு நீர் கூட கோமுகி அணைக்கு வந்து சேராது.

ஏனென்றால் கைகான் வளைவு என்ற இடத்தில் கோமுகி ஆறு மலை உச்சியிலும் கரிக்கோயில் நீர் தேக்கத்திற்கு செல்லும் ஓடையோ மலையடிவாரத்தில் சரிவாகவும் செல்கிறது.

இதனால் கோமுகி ஆற்றை முற்றாக சேலம் மாவட்டத்தில் உள்ள கரிக்கோயில் நீர் தேக்கத்திற்கு திருப்ப 2013- ம் ஆண்டு ஜெயலலிதா அரசில் பொதுப் பணித்துறை மந்திரியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டார். இதை எதிர்த்து கல்வராயன் மலைவாழ் மக்கள் தமது மலையாளிகள் சங்கம் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை மட்டுமே சேலம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப் போவதாக தமிழக அரசின் சார்பில் அப்பட்டமான பொய்யை சொல்லி, நீதி மன்றத்தை ஏமாற்றி தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது. ஜெயலலிதா அரசில் மந்திரி என்ற நரியாக மட்டுமிருந்த எடப்பாடிக்கு இப்போது முதல் மந்திரி என்ற நாட்டாமை பதவி கிடைத்தவுடன் அது கிடைக்கு இரண்டு ஆட்டை கேட்கிறது.

இத்திட்டம் முற்றிலும் இயற்கைக்கு புறம்பானதும், கல்வராயன் மலையில் உள்ள அரிய வகை மரங்கள், மூலிகைகள், வன விலங்குகளையும் இதன் மூலம் சுற்றுச் சூழலையும் முற்றிலும் அழிக்கும் செயலுமாகும். மேலும் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் சட்டவிரோத, சமூக விரோத செயலுமாகும்.

இத்திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்த துடிப்பதற்கு காரணம் அப்பகுதியில் தன்னுடைய பினாமிகள் மூலம் ஏற்கனவே தான் வாங்கியிருக்கும் விளை நிலங்களுக்கும், இனி வாங்கப் போகும் விளை நிலங்களுக்கும் தேவையான நீரை கொண்டு செல்வதற்காகத்தான்.

கைகான் வளைவு திட்டம் நிறைவேறியதும் அப்பகுதியில் 300 ஏக்கர் விளை நிலங்களில் தான் பாக்கு மற்றும் தென்னை விவசாயம் செய்யப் போவதாக எடப்பாடி பழனிச்சாமியே ஒப்புதல் வாக்கு மூலம் தந்துள்ளார்.

தமிழகத்தின் முதல்வராக அனைத்து மாவட்ட மக்களின் வாழ்வையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒருவர், அவரின் சுய நலத்திற்காக கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் பாரம்பரிய உரிமைகளை பறித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் துரோகச் செயலை செய்கிறார்.

கோமுகி ஆற்றில் உபரி நீர் என்று ஒன்று இருந்திருந்தால், அது மணிமுத்தாறு வழியாகத்தான் கடலுக்கு செல்ல முடியும். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீரையே காணாமல் மணிமுத்தாறு வறண்டு கிடக்கிறது.

தமிழக அரசின் அநீதியான இந்த கைகான் வளைவு திட்டத்தால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களுக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல, அதிலும் குறிப்பாக கல்வவராயன் மலைவாழ் மக்களை குடிநீர் கூட கிடைக்காமல் செய்து அவர்களின் நிலங்களையும் பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து அவர்களை விரட்டி விட்டு,

அங்குள்ள கனிம வளங்களை கொள்ளையிடும் சதியும் இதில் அடங்கியுள்ளது. இப்போதே இத்திட்டத்திற்கு தமது நிலங்களை தர மறுக்கும் பழங்குடி மக்களை பொதுப்பணித்துறை, வருவாய் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மூலமும், சமூக விரோதிகள் மூலமும் மிரட்டி பணிய வைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

கோமுகி ஆற்றை சேலம் மாவட்டத்திற்கு கடத்திச் செல்ல முற்படும் எடப்பாடியின் சதியை உடனடியாக நாம் முறியடிக்கா விட்டால் கோமுகி ஆறும், கோமுகி அணையும் நீரின்றி வறண்டு மணிமுத்தாறும் மலட்டாறாக மாறும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தான் பாய்ந்தோடிய இடங்களை எல்லாம் நேரடியாகவும், நிலத்தடி நீர் மூலமாகவும் வளப்படுத்தி, நமது தாயாக விளங்கிய கோமுகி மற்றும் மணிமுத்தாற்றை நாம் இழந்து தாயற்ற பிள்ளைகளாகி விடுவோம்.

காவிரி ஆற்றின் இயற்கையான கடை மடை பகுதியான தமிழகத்திற்கு உரிய நீரை தர மறுக்கும் கர்நாடக மாநிலத்தின் அடாவடித் தனத்திற்கு எதிராக தமிழகம் இன்று வரை போராடி வருகிறது.

ஆனால் தமிழக முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியோ கோமுகி மற்றும் மணிமுத்தாற்றின் மூலம் நீரை பெற்று வரும் இரு மாவட்ட மக்கள் அதிலும் குறிப்பாக கடை மடையான விருத்தாசலம் பகுதி விவசாயிகளின் பாரம்பரிய உரிமையை பறிப்பதன் மூலம், சொந்த மாநில மக்களின் நலன்களுக்கு எதிராகவே செயல்படுகிறார்.

இதன் மூலம் தமிழகம், கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராக போராடும் தார்மீக உரிமையையே இழந்து விடுகிறது. மொத்த கர்நாடக மாநிலமும் தமது சுய நலத்திற்காக தமிழகத்தின் உரிமைகளை பறிக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமியோ தனது சொந்த நலனுக்காக கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் உரிமைகளை பறிக்க அரசு அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார். இப்படி தனது சுய நலத்திற்காக, நாம் வாழும் பகுதிகளை பாலைவனமாக்க முயலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சதியை முறியடித்து, நமது உயிர்வாழும் உரிமையை பாதுகாக்க அணிதிரள்வோம் வாரிர்!

இவண்,

நீர்வள ஆதார மேம்பாட்டு சங்கம்,

பதிவு எண்: 66/2020

விருத்தாசலம் வட்டம்.

 தொடர்புக்கு; 98425 29188

Pin It