கீழ்வெண்மணி படுகொலையில் வரலாற்றில் மறைக்கப்படும் பகுதியை சுட்டிக்காட்டுகிறார் பசு.கவுதமன். ‘தடம்’ இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் முழுமையான வடிவம்.
25.12.1968, மனிதகுல வரலாற்றில் மறக்கமுடியாத கருப்பு தினம். 44 மனித உயிர்கள், மனிதர்கள் என்று சொல்லப்பட்டவர்களாலேயே கொளுத்தப்பட்ட கொடும் கோரநாள். ஆயிற்று அய்ம்பது ஆண்டுகள் !
இந்த அய்ம்பது ஆண்டுகளிலும் எப்போதும் , எல்லோராலும் சொல்லப்பட்டது, “அரைப்படி நெல் கூலிஉயர்வு கேட்டதற்காக... ” இது கூலி உயர்வு மட்டுமேயான பிரச்சனையா? அல்லது அந்த மிகப்பெரிய அவலச் சம்பவத்தை – துயர விளைவை அப்படித்தான் குறுக்கி, சுருக்கிவிட முடியுமா?
62களின் இறுதிகளிலிருந்து நாகை தாலுக்காவில் வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டச் சூழலில், ஆய்மழை தங்கவேலு , சிக்கல் பக்கிரிசாமி, இருஞ்சூர் சின்னப்பிள்ளை, கேக்கரை ராமச்சந்திரன் ஆகியோர்களின் உயிர்பலி என்ற தொடர்ச்சியின் உச்சகட்ட வெளிப்பாடுதான் வெண்மணியின் 44 மனித உயிர்களை பலிகொண்ட தீயின் கங்குகள்.!
“ மோதலுக்குக் காரணம் நெல் உற்பத்தியாளர் சங்கத்திற்கும், இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளுக்கும் இடையே உள்ள வெறுப்பும், இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளை சங்கத்திலிருந்து பிரித்து, ‘விசுவாசமான தொழிலாளர்களாக’ மாற்ற நெல் உற்பத்தியாளர்கள் செய்த முயற்சிதான் – இந்த மோதலுக்குக் காரணம் கூலிப்பிரச்சனை மட்டுமே என்று சொல்லமாட்டேன் ” என்று 28.12.1968 தி இந்தியன் எக்ஸ்பிரஸில் அன்றைய அய். ஜி.யின் அறிக்கை கண்ணில்படுவதாக தோழர் மைதிலி சிவராமன் தன்னுடைய நூலில் பதிவு செய்கின்றார்.
இன்னும் அவரே, தான் வெண்மணிக்குப் பக்கத் தில் உள்ள ஆலத்தம்பாடியில் சில மிராசுகளுடன் நடத்திய உரையாடலின் போது, “ முன்னெல்லாம் இங்கே ரொம்ப அமைதியா இருந்திச்சி, தொழி லாளிங்க கடுமையா உழைப்பாங்க, மரியாதையா இருப்பாங்க ஆனா இப்போ? என் வீட்டுப் புழக்கடையில் நின்னு என்னோடு பேசினவன் இப்போ செருப்பு போட்டுகிட்டு என்னோட வீட்டு வாசலுக்கு வந்து, எங்க தலைவர் இன்னிக்கு சாயங்காலம் ஒரு பொதுக்கூட்டத்திலே பேசுறாரு நான் அஞ்சரக்கெல்லாம் போவனுங்கறான். அவன் தலைவரு எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே கூட்டம் போடுறாரு. இவன் செவப்புக் கொடிய எடுத்துக்கிட்டு தெருவெல்லாம் சுத்துறான். இவனுங்க எல்லாருக்கும் திமிரு புடிச்சிப் போச்சு. இதுக்கெல்லாம் காரணம் இந்த கம்யூனிஸ்ட்கள்தான். இப்பல்லாம் இவனுங்க ஒடம்புல பயமுங்கறதே இல்ல ” என்றும் பதிவு செய்கின்றார்.
துவக்க காலகட்டங்களில் ‘பண்ணை ராஜ்யாதிபதிகளுக்கு’ – நிலப்பிரபுக்களுக்கு எதிரான போராட்டத்தில் பொது உடைமை இயக்கம், தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்த சாதியக் கட்டுப் பாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டுதான் இயக்கத்தைக் கட்டமைத்தது. கட்சி வேறு, நாட்டாண்மை – சாதிய முறைகள் வேறு என்று இருந்த நிலை மாறி, “சாதிக்கட்டுப்பாட்டுக்குள் இருந்த கிராம நிர்வாகங்கள், கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் வந்ததற்குப் ” பின்னால் நாட்டாண்மைகள் கட்சியின் தலைவர்களாகவும், சாதிய உணர்வுகள் , கொள்கை உணர்வுகளாக உருமாற்றம் பெறுகின்றது. இவைகளெல்லாம் 64களில் நாகை தாலுக்காவில் முழுவீச்சாக நடைபெற்று “நாகை தாலுக்கா ஒரு செக்டேரியன் போக்கில் போகிறது ” என்று பேசப்படக்கூடிய – பேச வேண்டிய நிலை ஏற்பட்டது ஏன்?
54களில் பெரியாரால் துவக்கப்பட்ட திராவிடர் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினை நாகை மாவட்டத்தில் மிகப்பெரும் இயக்கமாக வளர்த்தெடுத்தத் தோழர்கள் பாவா நவநீத கிருஷ்ணன் மற்றும் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் ஆகிய இருவரும் தந்தை பெரியாரிடம் உண்டான கருத்து வேறுபாட்டால் இயக்கத்திலிருந்து விலகுகின்றனர். அதில் தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் மிகப் பெரும் பாலான திராவிடர் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தோழர்களோடு பொதுஉடைமை இயக்கத் தின் தமிழ்நாடு விவசாயசங்கத்தின் செங்கொடி அமைப்பில் இணைகின்றார். அதற்குப் பின்னால் கீழைத் தஞ்சையின் வயல் வரப்புகளில் மார்க்ஸும், பெரியாரும் இணைந்தே நடக்கின்றார்கள். இதை தோழர் ஏ.ஜி.கே,
“சரியான அனுபவ அறிவும், ஆராய்ச்சி அறிவும், பட்டறிவும், படிப்பறிவும் உள்ளவர்களால் ‘செழுமைப்படுத்தப்பட்ட மார்க்ஸியமே பெரியாரி யம்’ என்ற இவ்வுண்மையினை நாம் நமது நடவடிக்கைகளால் முன் வைத்தோம். அதுவும் கூட, நாம் தனித்து எதையும் செய்யவில்லை. செயல்திட்டத்தைக் குழுக் கூட்டத்தில் முன் வைத்து விவாதித்த பிறகே முடிவுக்கு வருவது வழக்கம். கமிட்டியில் தீர்மானிக்கப் படாத எந்த ஒரு போராட்டமும் நடைமுறைப் படுத்தப்பட்டதில்லை. தனிநபர் முடிவு எடுப்பது என்பது ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை. அந்த அடிப்படையில் முதலில் வாழ்வாதாரம், கூடவே தன்மான வாழ்விற்கான நடவடிக்கை என்ற நிலைப்பாட்டில் நடவடிக்கைகளை அமைத்தோம்” என்று சொல்கின்றார். அந்த செயல் திட்டங்களின், போராட்டங்களின் விளைவுகள்தான்,
“விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேர்ந்துவிட வேண்டு மென்று” சொல்லப்பட்ட உத்தரவு, தன் சொந்த ஊரிலேயே செவிடன் காதில் ஊதிய சங்காய் மாறிப்போய் தன்னுடைய அதிகாரநிலையிலிருந்து தான் கீழே விழுந்துவிட்ட மனநிலையில் உண்டான அதிகாரவெறி, பண்ணை ராஜ்ஜியத்திற்கே உரிய கவுரவப்பிரச்சனை, அத்தோடு சாதித் திமிர் இத்தனையும் சேர்ந்து ஒரு பேட்டை ரவுடியைப் போல கைகளில் தீப்பந்தத்தினை தூக்க வைத்ததினால் தான் ராமையாவின் குடிசை கொழுந்துவிட்டு எரிந்து 44 உயிர்களை பலி கொண்டதில் முடிந்தது.
கூலி உயர்வுதான், ஆனால் அதில் உரிமையும் - சுயமரியாதையும் முதன்மையானதாக மாற்றப் பட்டது. உழைக்கும் விவசாய வர்க்கத்தின் விடுதலை வெறும் கூலி உயர்வால் மட்டுமே வந்துவிடாது என்ற தெளிவும், நியாயமான கூலியில் சமரசமில்லை என்ற உறுதியும், ‘அடிபொலி’ , ‘பட்டறைக்காய்ச்சல்’, ‘குட்டை மரக்கால்’, ‘உயர மரக்கால்’ என்று எதை வேண்டுமானாலும் சொல் ஆனால் அறுவடை செய்த எல்லா நெல்லையும் மூட்டை போடு, அத்தனை மூட்டைக்கும் கூலி கொடு என்ற உரிமையும், அந்தக் கூலியை நீ கொடுக்கும் நேரத்தில் உன் வீட்டுப் புழக்கடையில் நின்று வாங்கமாட்டேன். களத்து மேட்டிலேயே கணக்கை முடித்து விட்டுப்போ என்ற சுயமரியாதையும் சேர்ந்தே இருந்தது மட்டுமல்ல இப்படி கேட்டவர்களில் முன் வரிசையில் பெண்கள் இருந்தார்கள் என்பதும் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதும் உண்மை.
“அரை படி என்ன – இன்னும் கூடுதலாக அரைபடி தருகிறேன் வாங்கிக்கொள். ஆனால் நீ எனக்கு உத்தரவு போட்டு இப்படி அள, இங்க கொடு என்று சொல்லக்கூடாது. நான் போடுவேன் , நீ பொறுக்கிக் கொள்” என்ற பண்ணை ராஜ்ஜியாதிபதிகளின் அதிகார சாதிவெறி . இந்த முரண்பாடுதான் -
வெண்மணி தொடர்பான செயல்பாட்டில் நேரடியான பங்களிப்பைப் பெரியார் நிகழ்த்தா விட்டாலும் தத்துவார்த்தப் பின்புலமாக செயல்பட்டிருப்பதை மறுக்கமுடியாது. வெண்மணி சம்பவம் நடக்கும்போது உடல்நிலை சரியில்லாமையால் மருத்துவமனையில் இருக்கின்றார். அவரிடம் இது குறித்த தகவல் சொல்லப்படுகின்றது. அன்றே மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு வருகின்றார். அதையொட்டி, “ இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மனுதர்மம்தான் ஆட்சி புரியும்” என்னும் தலையங்கத்தினை விடுதலையில் வெளியிடுகின்றார். அதற்குப் பின் செம்பனார்கோவில் கூட்டத்தில் வழக்கம்போல இந்திய கம்யூனிஸ்டுகள் மீதான விமர்சனத்தை அங்கும் வைத்தார். அடுத்த சில மாதங்களில் சாதி ஒழிப்பு மாநாட்டு அறிவிப்பு வெளியிடுகின்றார். அந்த நேரத்தில் அண்ணாவின் உடல்நிலை மோசமாகி, அவர் வெளிநாடு அழைத்துச் செல்லப் படுகின்றார். அவர் வந்தபின் மீண்டும் அம்மாநாட்டு வேலைகள் தொடங்குகை யில் அண்ணா இறந்து விடுகின்றார். இந்தச் சூழ்நிலையால் அந்த மாநாடு நடைபெற வில்லை. அதுவேதான், அதனுடைய வளர்ச்சிப்போக்கில் 1973 ஆம் ஆண்டு ‘ சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடாக’ மாறுகிறது.
வெண்மணிப் படுகொலைக்குப் பின், கோபால கிருஷ்ண நாயுடு அழித்தொழிப்பு நடை பெற்றது. அதில் நேரடியாக புரட்சிகர இடதுசாரி அமைப்பினைச் சேர்ந்த ஏழுபேர் பங்கேற்றனர். அவர்கள் தலைமறைவாகிவிடுகின்றனர். கீழ்வேளூர் காவல் நிலையத்தில் வழக்கு எண் – 254/1980 ல் முதல் தகவல் அறிக்கையில் நந்தன், செல்வராஜ், மணியன், குமார் மற்றும் நான்கு பேர் என்று பதிவு செய்யப்படுகின்றது. பிறகு இதில் தொடர்பில்லாத, சந்தேகத்திற்குரியவர்கள் எனச் சிலரை கைது செய்கின்றனர். அவர்களில் திருப்பணிப்பேட்டை, திராவிடர்கழகத்தைச் சேர்ந்த திராவிடமணியை அடித்துத் துன்புறித்தி அப்ரூவர் ஆக்குகின்றனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் 11பேர்கள் கைது செய்யப்பட்டு வழக்கில் சேர்க்கப்படுகின்றனர். அவர்களில் எட்டு பேர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். திராவிடமணியைச் சேர்த்து ஒன்பதுபேர்.
10.05.1982 அன்று நாகை நீதிமன்றத்தில் திராவிடமணியைத் தவிர்த்து மற்ற அனைவருக்கும் தண்டனை வழங்கப்படுகின்றது. (இதில் மகாலிங்கம் என்ற தி.க. தோழர் வழக்கு நடக்கும்போதே இறந்துவிடுகின்றார். எனவே அவருக்கு தண்டனை இல்லை ) அதை எதிர்த்து இவர்கள் மேல்முறையீடு செய்கின்றார்கள் .
உயர் நீதிமன்றத்தால் மார்ச் மாதம் 1985ம் ஆண்டு அனைவரும் விடுதலை செய்யப்படு கின்றனர். (திராவிடர் கழகத் தோழர்களுக்காக இந்த வழக்கினை தனியாளாக நின்று நடத்தியவர் அன்மையில் மறைந்த குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின் அவர்கள். அவர் அப்போது திராவிடர் மாணவர் இளைஞரணி மாநில, மாவட்டப் பொறுப்பாளர்) ஆனால் இந்த இடைப்பட்டகாலத்தில் இந்தத் தோழர்கள் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். மன மற்றும் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டனர். இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே தலைமறைவாக இருந்த புரட்சிகர இடதுசாரி தோழர்கள் சரணடைந்த பிறகு விடுவிக்கப்படுகின்றனர். இந்த இடத்தில் எனக்கான கேள்விகள் என்னவென்றால், இவ்வளவு இன்னல்களுக்கு உட்பட்டு திராவிடர் இயக்கத் தோழர்கள் சிந்திய ரத்தம் ஏன் இதுவரை பதிவு செய்யப் படவில்லை. அது மார்க்சிஸ்ட் கட்சியானாலும், புரட்சிகர இடதுசாரி அமைப் பானாலும், திராவிடர் கழகமானாலும் சரி, திராவிடர் கழகத்தைக் கேட்கமுடியாது , காரணம் எங்களுக்குத் தொடர்பில்லை என்று சொல்லிவிட்டார்கள். இந்தத் தோழர்கள் பற்றிய பதிவுகளைத் தவிர்த்தது ஏன் என்பதுதான்.
கட்டுரையாளர்
‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்’ உள்ளிட்ட பெரியார் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்