இட ஒதுக்கீட்டின் அடிப்படையைத் தகர்த்து, சமூகநீதிக்கு சாவு மணி அடிக்கும் பாசிச பா.ஜ.க அரசை எதிர்க்கும் வண்ணம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் “சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு” என்ற அமைப்பில் இணையுமாறு வேண்டுகோள் விடுத்து 37 கட்சிகளுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் வி.ஈஸ்வரய்யா, ஒருங்கிணப்பாளராகத் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோரைக் கொண்டு இந்த அமைப்பு உருவானது.

இதன் சார்பில் “சமூக நீதிப் போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வது மற்றும் சமூக நீதி திட்டத்தின் தேசிய செயல்பாடுகளில் இணைவது” என்ற கருப்பொருளுடன் முதல் தேசிய மாநாடு 03.04.2023 அன்று டெல்லியில் நடைபெற்றது. தேசிய அரசியலில் மிகுந்த கவனத்தை ஈர்த்திருக்கும் இந்த நிகழ்வில்

mk stalin 220தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவரும் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பஃரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரெய்ன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேரிலும் காணொலி வாயிலாகவும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஜாதியால் ஒடுக்கப்பட்டவர்களை அதன் அடிப்படையில் முன்னேற்ற வேண்டும் என்பதால் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340 வது பிரிவு மற்றும் பின்னாளில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும் இதையே உறுதி செய்கிறது. இந்நிலையில் பா.ஜ.க அரசு வஞ்சகமாக உயர்ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கியது. அத்துடன் மெரிட் அடிப்படையில் வாய்ப்பு பெறும் இட ஒதுக்கீடு பிரிவினர் திறந்த போட்டி (Open Quota) மூலம் அனுமதிக்கப்படாமல் அவரவர் இட ஒதுக்கீடு பிரிவில் அனுமதிக்கப் படுகின்றனர். இதனால் உயர்ஜாதியினர் கூடுதல் வாய்ப்பை பெறுகின்றனர். இது வரை “We are deserved. Not Reserved” என்றும், இட ஒதுக்கீட்டால் நாட்டின் தகுதியும் தரமும் பாழாகி விட்டது என்றும் சொல்லிக் கொண்டிருந்த உயர்ஜாதியினர், இன்று இவ்வாறு இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் ஏற்படும் தீமைகளை விளக்கி, சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு குறித்த புரிதலை இந்தியா முழுமைக்கும் ஏற்படுத்திட தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மகாத்மா ஜோதிராவ் பூலே ஆகியோரின் பெயர்களில் படிப்பு வட்டங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று இந்த மாநாட்டில் தீர்மானிக்கப் பட்டுள்ளது. உயர்ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான முதல் படியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் செயல்படும் தமிழ்நாடு அரசின் ‘சமூக நீதி கண்காணிப்புக் குழு’ போல் அனைத்து மாநில அரசுகளும் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் இம்மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டமைப்பின் சார்பில் நாடு முழுவதும் மாநாடுகள் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அடுத்த மாநாட்டை பீகாரில் நடத்த அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவின் 44 ஆவது நிறுவன நாள் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி “எதிர்க்கட்சிகள் சமூகநீதி நாடகம் நடத்துகின்றன” என்று புலம்பியிருப்பதைப் பார்க்கும் போது இந்த மாநாட்டின் எழுச்சி ஆட்சியாளர்களை அதிர வைத்து இருக்கிறது என்பதை உணர முடிகிறது. பா.ஜ.கவின் ஊதுகுழலான தினமலர் நாளிதழ் “காங்கிரசை சிறுமைப்படுத்தினாரா ஸ்டாலின்” என்று இம்மாநாடு குறித்து வெளியிட்டுள்ள செய்தி அவர்களின் பயத்தையும், பதட்டத்தையும் காட்டுகிறது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில் திராவிட மாடல் நாயகர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்றிருக்கும் இந்த போர்ப்படை சமூகநீதிக் களத்தில் வென்று சரித்திரம் படைக்கும். “சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல்” என்ற குறள் வழியில் நடுவு நிலைமையோடு அனைத்து மக்களையும் பாதுகாக்கும் அரசு, ஒன்றியத்தில் அமைந்திட

இம்மாநாட்டில் பற்றிய தீ இந்தியா முழுமைக்கும் பரவட்டும். தீமை விலகட்டும்!!

வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It