வைதீகப் பார்ப்பனீயம், வர்ண தர்மம் என்ற பெயரில் இந்திய சமூகத்தை நான்கு அடுக்குகளைக் கொண்ட பிரிவுகளாகப் பிரித்து வைத்திருந்தது. தொழிலை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய வர்ண தர்மம் பின்பு பிறப்பை அடிப்படையாய்க் கொண்ட சாதி எனும் சமூக இழிவாக உருவெடுத்தது. இந்த சாதிய அடுக்கில் உயர்மட்டத்தில் இருப்பதாகக் கருதிக்கொண்ட பார்ப்பனர்களில் பெரும்பான்மையோர் மற்றைய மூன்று (பிற்படுத்தப்பட்ட) பிரிவினரை விடக் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தில் முன்னேறிய வகுப்பினராக இருந்தனர். மாறாக இந்த நான்கு வருணத்தையும் சார்ந்திராத “அவர்ணர்களோ” உரிமைகள் மறுக்கப்பட்ட தீண்டத்தாகதவர்களாக, ஒரு அவல வாழ்வினை வாழ சமூகத்தால் நிர்பந்திக்கப்பட்டனர்.

பன்னெடும் கால சாதியக் கொடுமையினால் உரிமைகள் மறுக்கப்பட்ட “தீண்டத்தகாதவர்களுக்கு”, சட்டப் பிரிவு 338-ன் (1952) வாயிலாக ஏற்றம் காண அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வழிவகை செய்தார். அம்பேத்கர் அவர்கள் வகுத்த பாதையின் அடியொற்றி, (இதர) பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கான உரிமையைத் தேசிய அளவில் நிலைநாட்ட அன்றைய பிரதமர் நேரு அவர்களால், காகா காலேல்கர் தலைமையில் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (29-1-1953) அமைக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு காலேல்கர் குழுவின் பரிந்துரைகளைச் (30-3-1955) செயல்படுத்த முன்வரவில்லை. இதன்பிறகாக, ஜனதா கட்சியைச் சார்ந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களால் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமானது B.P. மண்டல் என்பவரின் தலைமையில் (1-1-1979) அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் நோக்கம் “சமூகம் (அ) கல்விரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணுவதாகும்”.

மண்டல் ஆணையமானது, பிற்படுத்தப்பட்டவர்களைக் கண்டறிய, சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகிய மூன்று அளவுருக்களின் கீழ் 11 அளவுகோல்களைக் கொண்ட முறையை உருவாக்கியது. இம்முறையின் வாயிலாக இந்தியாவில் மொத்தமாக 3,743 சாதியினர் பிற்படுத்தப்பட்டவர்களாக இருப்பதாக இந்த ஆணையம் கண்டறிந்து, அது சம்பந்தமான அறிக்கையை 1980 இல் அரசுக்கு அளித்தது. மண்டல் ஆணையம் வழங்கிய அறிக்கையானது, நாடு முழுவதும் 52% பிற்படுத்தப்பட்டவர்களில் வெறும் 12.5 விழுக்காட்டினர் மட்டுமே உயர் பதவிகளில் உள்ளதாகவும் மீதமுள்ள அனைவரும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கிய நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டியது. பின்தங்கிய நிலையை மாற்றுவதற்குப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரை செய்தது. ஆனால் அச்சமயம் ஏற்பட்ட உட்கட்சிக் குழப்பங்களினால், மொரார்ஜி தேசாய் பதவி விலகியதன் காரணமாக மண்டல் கமிசன் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டன.

1989இல் பிரதமரான வி.பி. சிங் அவர்கள் மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்த விரும்பினார். அதன் வெளிப்பாடாக 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மண்டல் கமிசன் பரிந்துரையின்படி நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனை உயர்சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். ராஜிவ் கோஸ்வாமி எனும் உயர்சாதி மாணவர் தீக்குளித்தார். இச்செயல் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக, பாஜக, வி.பி. சிங் அரசுக்குக் கொடுத்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால், ஆட்சி கவிழ்ந்தது. மண்டல் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இடஒதுக்கீடு சம்பந்தமாக, இந்திரா சஹானி vs இந்திய அரசுக்கு இடையிலான வழக்கின் தீர்ப்பு (1992) மற்றும் 1993இல் (25 ஆகஸ்ட்) உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் காரணமாக மண்டல் கமிசன் நிலைபெற்றது. மேலும் மண்டல் கமிஷனின் விளைவாகவே, 1993ஆம் ஆண்டு தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உருவாக்கப்பட்டது.

தேசிய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முன்னெடுப்புகள் 1980 காலகட்டத்தில்தான் அதிகக் கவனம் பெறத் தொடங்கின. ஆனால் இதற்கு மாறாக இந்தியாவின் ஒரு மாநிலத்தில், 1921-லேயே இடஒதுக்கீட்டுக்கான விதை தூவப்பட்டது. அம்மாநிலம் தமிழ்நாடு, அதற்கான தளகர்த்தாக்கள் நீதிக்கட்சியும் அதன் வழிவந்த திராவிட இயக்கங்கமும்தான். நீதிக்கட்சியின் முதல்வர் பனகல் அரசர் அவர்கள், 1921இல் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு 44 சதவீதமும் பட்டியல் இனத்தவர்களுக்கு 8 சதவீதமும் இடஒதுக்கீட்டை வழங்க அரசாணை (G.O. No: 613) பிறப்பித்தார். அப்போதிலிருந்தே இடஒதுக்கீட்டுக் கொள்கை தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட A.N. சட்டநாதன் கமிசன் (1970) வழங்கிய பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31ஆகவும், பட்டியலினத்தார் / பழங்குடியினர் இடஒதுக்கீடு 16இலிருந்து 18 சதவீதம் ஆகவும் உயர்த்தப்பட்டது. மேலும் கலைஞர் அவர்கள் பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு வழங்கும் “கிரீமிலேயர்” முறையை முற்றிலும் நிராகரித்துச் சமூகநீதிக்கு வழிகோலினார்.

விபி சிங் அவர்களின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலுக்கு வர கலைஞர் முக்கியக் காரணமாக இருந்தார். இவ்வாறு அரை நூற்றாண்டு திராவிட அரசியலானது பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் திராவிட இயக்கம் வழங்கிய இடஒதுக்கீட்டால் பயன்பெற்ற சில புல்லர் கூட்டம், இன்று திராவிட இயக்க அரசியலை வீழ்த்த எத்தனிக்கிறது. அத்தகையப் புல்லர்களையும், “வாழ்க வசவாளர்கள்” எனும் மனிதநேய சிந்தனையோடு அரவணைத்து, அவர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுப்பதே “திராவிட மாடல்”. மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலுக்கு வந்து மூன்று தசாப்தங்கள் முடிந்த பின்பும், மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளில் இடம் பெற்றிருக்கும் அனைத்தும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது ஆகப்பெரும் துயரம். இவ்வாறு மறுக்கப்படும் சமூகநீதியை, சனநாயக வழியிலான போராட்டம் எனும் வாள் ஏந்தி மட்டுமே வென்று எடுக்க முடியம் என்பது திண்ணம்.

பேராசிரியர் முனைவர் ரமேஷ் தங்கமணி

Pin It