கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மண்டல் பரிந்துரை செயல்பாட்டுக்கு வந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகும், 27 சதவீத இடஒதுக்கீட்டில் மத்திய அரசுப் பணிகளில் பாதியளவைக்கூட எட்டிப் பிடிக்க முடியாத நிலையில் தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் நிலை உள்ளது. சமூக நீதி செயல்பாட்டாளர் முனைவர் ஈ. முரளிதரன், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ள தகவல்களை இதே இதழில் வெளியிட்டிருக்கிறோம்.

காங்கிரஸ் ஆட்சியானாலும், பா.ஜ.க ஆட்சியானாலும் சமூக நீதிக்கான கதவுகள் அடைக்கப்பட்டே இருக்கின்றன. முடிவெடுக்கும் அதிகார மய்யத்தில் கோலோச்சும் பார்ப்பன அதிகார வர்க்கம் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினரோடு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மறுத்து வருகிறது. இதைத் தட்டிக் கேட்கும் துணிவு கொண்ட ஆட்சியாளர்களோ, சக்தி வாய்ந்த சமூக நீதித் தலைவர்களோ இல்லை என்பதுதான் அவலம். இருக்கும் நிலையைப் பார்த்தால் இந்த நூற்றாண்டில்கூட 27 சதவீத இடஒதுக்கீட்டில் முழுமையாகப் பிற்படுத்தப்பட்டோர் அமரப்போவது கனவாகத்தான் இருக்கும்.

இந்துத்துவா சக்திகள் பெரும்பான்மைவாதம் பேசுகிறார்கள். இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில் இந்துத்துவா ஆட்சியே நடக்க வேண்டும் என்று வாதிடுகிறவர்கள், அவர்கள் கட்டமைத்துள்ள ‘இந்து’ மதத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகாரத்தில் உரிய பங்கு வழங்க மறுப்பதை, ஏன் தட்டிக் கேட்காமல் வாய்மூடிக் கிடக்கிறார்கள்? இவர்கள் பேசும் பெரும்பான்மைவாதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பொருந்தாதா என்று கேட்கிறோம்.

சிறுபான்மையினர் என்றும், தேசபக்தி இல்லாதவர்கள் என்றும், இந்த மண்ணின் மைந்தர்களாக வாழும் இஸ்லாமிய மக்களை குற்றம்சாட்டுகிறவர்களைக் கேட்கிறோம். ‘இந்து’ மதத்துக்குள்ளே சிறுபான்மை யினராக இருந்து கொண்டு சமூக, கலாச்சார, அரசியல் அதிகாரத்தைத் தங்கள் இரும்புப் பிடிக்குள் வைத்திருக்கும் ‘பார்ப்பன சிறுபான்மை ஆதிக்கக் கொடுமை’யை அப்படியே பெருமையோடு ஏற்றுக் கொண்டு அடிபணிந்து கிடப்பது என்ன நியாயம்? பார்ப்பன வேத கலாச்சாரம் தான் பெரும்பான்மை பார்ப்பனரல்லாத ‘இந்து’ கலாச்சாரமா?  மோடி அமைச்சரவையில் இப்போதும் முக்கிய அமைச்சர் களாக “சிறுபான்மை” பார்ப்பனர்கள் தானே அமர்த்தப்பட் டிருக்கிறார்கள்?

அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாடும் நாடகத்தை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அவ்வப்போது ‘இடஒதுக்கீட்டுக்கு’ ஆதரவாகப் பேசி வருவது உண்மையானது என்றால், பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக்கீடுகள் அமுல்படுத்தப்படா மலிருப்பதை தட்டிக் கேட்க முன் வருவாரா என்று கேட்கிறோம்.

தமிழ்நாட்டில் பல ஜாதித் தலைவர்கள், ஜாதி சங்கங்களை வைத்துக் கொண்டு அதை அரசியல் மூலதனமாக்க துடிக்கிறார்கள். சமூக நீதிக்குப் போராட வேண்டிய பிற்படுத்தப்பட்ட ஜாதி அமைப்புகள், தங்களை ‘ஜாதி இந்துக்களாக’ உருமாற்றிக் கொண்டு தலித் மக்களோடு முரண்பாடுகளையும் மோதல்களையும் உருவாக்கி  வருகிறார்கள். இந்த ஜாதி சங்கத் தலைவர்கள் இந்திய பார்ப்பன அதிகார அமைப்புக்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக நீதி மறுக்கப்பட்டவர்களாக உரிய பிரதிநித்துவ மற்றவர் களாகக் கிடப்பதைக் கண்டு கொதித்தெழ வேண்டாமா?

ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என்று எந்தப் பிரிவினராக இருந்தாலும், பார்ப்பன அதிகார மய்யத்தை நெருங்க முடியவில்லை. முடிவெடுக்கும் அதிகாரமற்ற ஒரு இந்தியாவுக்குள் சமூக நீதியை மறுக்கும் பார்ப்பன ஜனநாயக அமைப்புக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலை உணர்ந்து ஓரணியாய் போர்ச் சங்கு ஊதிப் புறப்பட்டால், ஆதிக்கக் கோட்டைகளைத் தகர்த்து எறிய முடியாதா? அத்தகைய ஒற்றுமையைக் கட்டமைக்க வேண்டாமா?

இடஒதுக்கீட்டுக்காக இந்தியாவில் முதன்முதலாக அரசியல் சட்டத்தைத் திருத்தச் செய்த பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. அதற்கான போராட்டக்களம் பெரியார் தலைமையில் அமைந்தது.

மண்டல் பரிந்துரையை செயல்படுத்துவதற்கான நிர்ப்பந்த சக்தியாய் எழுந்து நின்றது இதே தமிழ்நாடு தான். 27 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்தி அதற்காக தனது பிரதமர் பதவியையே விலையாகக் கொடுத்த சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கிற்கு ஆதரவுக் கரம் நீட்டி அரவணைத்ததும் தமிழ்நாடுதான்.

அந்த மண்டல் அறிக்கை இப்போது முடங்கிப் போய் கிடக்கிறது. தமிழகம் தனக்கான ‘சமூகநீதி’ தனித்துவத்தோடு  ஓரணியாகி ஜாதிய உணர்வுகளைத் தூக்கி எறிந்து கரம் கோர்த்து களமாட வேண்டாமா? நாம் என்ன செய்யப் போகிறோம்?