கேள்வி: இதுவரை இருந்துவந்த சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்றி, பாஜக அரசு இயற்றிய 10% EWS இட ஒதுக்கீடு சட்டத் திருத்தத்தை செல்லும் என உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வின் பெரும்பான்மை (3:2) தீர்ப்பு உறுதி செய்துள்ளது. தீர்ப்பின் மூலம் இனி விழையவிருக்கும் தாக்கங்கள் என்ன?

அஸ்வினி தேஷ்பாண்டே: ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிக்கும், பட்டியலின (SC), பழங்குடியின (ST) பிற்படுத்தப்பட்ட (OBC) சாதியினர் அல்லாத சாதியினருக்கு EWS என்ற பெயரில் 10% இட ஒதுக்கீட்டை நிர்ணயிப்பதன் மூலம், 1 விழுக்காடு பணக்கார, உயர்சாதியினரைத் தவிர்த்துவிட்டு மற்ற அனைத்து உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை பாஜக அரசாங்கம் சூழ்ச்சிகரமாக EWS என்ற பெயரில் உருவாக்கியுள்ளது. வருமான அடிப்படையில், அதாவது இந்த புதிய 10% EWS இட ஒதுக்கீடு சாதிய அடிப்படையில் அல்ல, பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் என முன்வைக்கப்பட்டாலும், உண்மை என்னவென்றால், இது எந்த சமூகப் புறக்கணிப்புக்கும் ஆட்படாத சாதிகளை இலக்காகக் கொண்ட சாதி அடிப்படையிலான ஒதுக்கீடு. EWS இட ஒதுக்கீடு பெறவிருக்கும் சாதிகள் இந்திய சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளன. அவர்களுக்கு சாதி ரீதியாக எவ்வித அவ மரியாதையும் கிடையாது.

இது ஒரு கேலிக்கூத்து. ஏனெனில் இந்தியாவில் முதல் முறையாக ஏழைகளாக இருக்கும் பெரும்பான்மை சாதிகள், அதாவது வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள், இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இது கொள்கையளவில், பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டது என சொல்லப்பட்டாலும், நடைமுறையில் சாதியை அடிப்படையாக கொண்டது.

கேள்வி: குடும்ப வருமானம் குறித்த உண்மையான சமீபத்திய தரவுகள் இல்லாததால், உண்மையான ஏழைகளுக்கு இந்த தீர்ப்பு உண்மையில் உதவுமா? தற்போதைய விதிமுறைகளின் கீழ் எத்தனை குடும்பங்கள் EWS இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவை?

அஸ்வினி தேஷ்பாண்டே: EWS இட ஒதுக்கீட்டிற்கு வரையறுக்கப்பட்டுள்ள 8 இலட்ச உச்சவரம்பு என்பது வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களை விட மிகக் கூடுதலான குடும்பங்களை உள்ளடக்கியதாக இருக்கும் வகையில் உள்ளது. 'EWS' என்பது ஒரு தவறான பெயராகும், இது உண்மையில் உண்மையான ஏழைகளை இலக்காகக் கொண்டிருக்கவில்லை. உண்மையிலிருந்து விலகி, EWS என்ற பெயரில் கவனத்தை ஈர்க்கும் வகையில் மட்டுமே உள்ளது. EWS என்ற பெயருக்கும் ஏழைகளுக்கும் தொடர்பில்லை.

ashwini deshpandeமுதலில், EWS என்று அழைக்கப்படுபவை குறித்த உண்மை என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆண்டுக்கு 8 இலட்சம் வருமான வரம்பின் நோக்கம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரை இலக்காகக் கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் நம்பகமான குடும்ப வருமானம் குறித்த தரவுகள் இல்லை. ஜிதேந்திர சிங் என்ற ஆராய்ச்சியாளருடன் இணைந்து, இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் நுகர்வோர் பிரமிடுகள் (Centre for Monitoring Indian Economy's Consumer Pyramids Household Survey) வீட்டுக் கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்தி வருகிறேன். 2019 இல் இந்தியாவில் 2.3 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே 8 இலட்சத்தை விட அதிக வருமானம் கொண்டதாக உள்ளன என்பதைக் கண்டறிந்தோம். இந்தியாவின் 98 விழுக்காடு குடும்பங்களின் ஆண்டு வருமானம் ஆறு லட்சம் அல்லது அதைவிட குறைவாக உள்ளது என்று 2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மற்றொரு மதிப்பீட்டுடன் எங்கள் ஆய்வு முடிவுகளும் ஒத்துப் போகின்றன.

வறுமை அல்லது பொருளாதார பின்தங்கிய நிலை என்பது முக்கியமான பிரச்சினை. அதற்கு கட்டாயமாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். கேள்வி என்னவென்றால், அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கும், பொதுத்துறை வேலைவாய்ப்புகளுக்கும் இட ஒதுக்கீடு என்பது வறுமையை போக்க உதவும் சரியான கருவியா? இல்லை என்பதே பதில். வறுமை என்பது ஒரு பொருளாதாரத்தோடு தொடர்புடையது. எனவே பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் தீர்க்கப்படக்கூடியது. இதற்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட பல பொருளாதாரத் திட்டங்கள் வறுமை ஒழிப்பிற்கு உதவியுள்ளன. 1991 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தனியார்மய, தாராளமய பொருளாதாரக் கொள்கை மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உதவும் பொது விநியோக அமைப்பு (நியாய விலைக் கடைகள்) போன்ற நலத்திட்டங்களும் உள்ளன. வறுமையை ஒழிக்க இந்த நடவடிக்கைகள் போதுமா? வறுமை ஒழிப்பின் மீது இந்தியா இன்னும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டுமா? ஆமாம் கண்டிப்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். அது மட்டுமின்றி, மக்களை வறுமையில் தள்ளும் காரணிகளை நாம் கண்டறிய வேண்டும். ஒரு நோய் வந்தால் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படும் நிலையில் தான் இந்தியர்கள் உள்ளார்கள் என அரசியல் ஆய்வறிஞர் அனிருத் கிருஷ்ணா ஒருமுறை குறிப்பிட்டார்.

போதுமான உணவு, உடை, தங்குமிடம், சுகாதாரம், கல்வி, எல்லாவற்றிற்கும் மேலாக, கண்ணியமான வாழ்வாதாரம், வாழ்வுரிமை ஆகியவற்றை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானது. கேள்வி என்னவென்றால் 10% EWS இட ஒதுக்கீடு இந்த இலக்குகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறதா? இல்லை என்பதே பதில்.

கேள்வி: ஆண்டுக்கு 8 இலட்சம் அல்லது அதற்கும் கூடுதலான வருமானம் கொண்டவர்களுடன் சேர்த்து, 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம், 1,000 சதுர அடி மற்றும் அதைவிடப் பெரிய வீடு வைத்திருப்பவர்கள், மாநகரப் பகுதியில் 900 சதுர அடி அல்லது அதற்கும் கூடுதலான வீட்டுமனை வைத்திருப்பவர்கள், அறிவிக்கப்பட்ட நகராட்சிகளில் (Notified Municipalities) 1800 சதுர அடி அல்லது அதற்கும் கூடுதலான வீட்டுமனை வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு EWS இட ஒதுக்கீடு கிடையாது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் EWS இட ஒதுக்கீட்டை பயன்படுத்த முடியுமா?

அஸ்வினி தேஷ்பாண்டே: உண்மையில் இல்லை. 10% EWS இட ஒதுக்கீடு சட்ட ஆவணங்களில் உள்ள தகுதி மற்றும் தகுதியின்மை அளவுகோல் விவரங்களைப் பார்த்தால் EWS இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதையும் (ஏனெனில் நாட்டின் 86 விழுக்காடு விவசாய நிலங்கள் 5 ஏக்கருக்கும் குறைவானவை), வருமானச் சான்றிதழ் பெறுவதற்கான விதிமுறைகள் மிகவும் கடுமையானவை என்பதையும் கண்டறிய இயலும். EWS இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான உண்மையான நபர்களை கண்டறிவதிலும், தகுதியற்றவர்களை விலக்குவதிலும் பிழைகள் இருக்கும். இதன் விவரத்தை விளக்குகிறேன்.

விலக்குவதின் பிழைகள்:

EWS இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெறத் தேவையான ஆவணங்களை தயார் செய்ய வேண்டிய உண்மையான ஏழையைப் பற்றி சிந்தியுங்கள். வருமானச் சான்றிதழ், சொத்துச் சான்றிதழ் என அனைத்தையும் ஒருங்கிணைத்து "குடும்பம்" என்பதோடு இணைக்க வேண்டும். பல அளவுகோல்களின்படி ஒருவர் தன்னை EWS இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர் என்பதை நிரூபிப்பது இந்தியாவில் அவ்வளவு எளிதல்ல. ஒருவரிடம் ஒரு சொத்து இருப்பதை நிரூபிப்பதை விட சொத்து இல்லை என்பதை நிரூபிப்பது மிகக் கடினமானது. எனது தனிப்பட்ட வாழ்வில், எனது தந்தை இறந்தபோது, ​​அவருடைய சட்டப்பூர்வ வாரிசுகள் என்று சான்றளிக்க நானும் எனது சகோதரனும் வங்கியில் உறுதிமொழிப் பத்திரங்களை வழங்கினோம். எங்கள் இருவரைத் தவிர சட்டப்பூர்வமாக இன்னொரு வாரிசு எங்கள் தந்தைக்கு இல்லை என்பதை நிரூபிக்க வங்கி எங்களிடம் ஆவணம் கேட்டது. எங்களுடன் இன்னொருவர் பிறக்கவில்லை என்பதை நிறுவுவது ஒரு கொடுங்கனவாக இருந்தது.

சேர்ப்பதின் பிழைகள்:

EWS இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்களைக் கண்டுபிடிக்கும் விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளும் தெளிவின்னைகளும், தற்போதைய அளவுகோல்களின் EWS இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெறாத நபர்களுக்கு சாதகமான உள்ளன. இந்த ஓட்டைகளை பயன்படுத்தி ஏழை அல்லாதவர்கள் EWS இட ஒதுக்கீட்டினை பெற இயலும்.

உதாரணமாக, EWS இட ஒதுக்கீட்டின் FAQ ஆவணத்தில் நான்காவது கேள்விக்கான பதிலில், விண்ணப்பதாரரின் பெற்றோருக்கு பகிர்ந்தளிக்கப்படாத ஒரு சொத்தின் உரிமையாளராக ஒருவருடைய தாத்தா அல்லது பாட்டி இருந்தால், அந்தச் சொத்தை அவருடைய "குடும்ப" சொத்தாகக் கணக்கிட முடியாது என்று கூறுப்பட்டுள்ளது. தாத்தா, பாட்டி உயிருடன் இருக்கும் கல்லூரி படிக்கும் மாணவரைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவருடைய தாத்தாவுக்கு 2000 சதுர அடியில் ஒரு இரண்டு மாடி வீடு சென்னை அண்ணா நகரில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலத்தை சட்டப்பூர்வமாக தன் மகனுக்கு (அதாவது கல்லூரி மாணவரின் தந்தைக்கு) எழுதித் தரவில்லை, இதைத் தவிர சொத்துக்களும் தாத்தா பெயரில் உள்ளன. ஆனால் தந்தை பெயரில் எதுவுமில்லை. இப்போதுள்ள EWS விதிமுறைகளின் படி அந்த மாணவர் EWS இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர் என கணக்கிடப்படுவார். மேலும், ஒருவருடைய பெற்றோர் சட்டப்பூர்வமாகப் பிரிந்தால் அல்லது விவாகரத்து செய்தால் என்ன நடக்கும்? இருவருடைய சொத்துக்களுக்கும் இறுதி வாரிசாக அவர் இருப்பார். இதனால் EWS இட ஒதுக்கீடு பெறத் தகுதியற்றவர் ஆகிவிடுவார். ஆனால் ஒரே ஒரு பெற்றோர் மட்டுமே இருந்து, அந்த வருமானம் மட்டுமே கணக்கிடப் படுமெனில், அவர் EWS இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவராக ஆகிவிடுவார்.

எனவே, EWS இட ஒதுக்கீட்டிற்கு பல்வேறு தகுதி அளவுகோல்களை வரையறுத்துள்ளதால், இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான நபரை கண்டறிவது மிகக் கடினம். EWS இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான நபர்களைக் கண்டறிவதிலும், தகுதியற்ற நபர்களை விலக்குவதிலும் பல்வேறு பிழைகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன.

கேள்வி: 1950 இல் இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் நோக்கம் என்னவெனில், ​​ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான சமூக நீதி மற்றும் அவர்கள் மீது வரலாற்று ரீதியாக காட்டப்பட்ட பாகுபாட்டிற்கான இழப்பு. என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. EWS இட ஒதுக்கீடும் இந்த அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதா?

அஸ்வினி தேஷ்பாண்டே: நான் இதை 10% இட ஒதுக்கீடு என்று அழைக்கப் போகிறேன், ஏனென்றால் நான் முன்பு விளக்கிய காரணங்களுக்காக, அதை பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான (EWS) இட ஒதுக்கீடு என்று அழைப்பது தவறானது. இந்த நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் முற்றிலும் தவறானது. ஏனெனில் இந்த 10% இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கான வாழ்நிலையை முன்னேற்றுவதாக இல்லை. மாறாக இது இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கத்தை முற்றிலுமாக மாற்றியமைக்கிறது. பல நூற்றாண்டுகளாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட, தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட, சமூக அவமரியாதைக்கு உட்படுத்தப்பட்ட மக்களுக்கு தரப்படும் குறைந்தபட்ச இழப்பீடு என்ற வகையில் இட ஒதுக்கீடு என்ற கொள்கை வடிவமைக்கப்பட்து. கடந்த காலம் முதல் இன்று வரை தொடர்ந்து காட்டப்படும் பாகுபாடு மற்றும் களங்கம் காரணமாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்கள் எதிர்கொள்ளும் சமகால குறைபாடுகளை ஈடுசெய்யும் கொள்கையாக இட ஒதுக்கீடு கருதப்பட்டது.

ஆனால் 10% ஒதுக்கீட்டின் அடிப்படையாக பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை எடுத்துக்கொள்ளப்படுகிறது. பொருளாதார நிலை என்பது நிலையற்ற அம்சமாகும். ஒருவரின் பொருளாதார நிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். அதாவது தனிநபர்கள் விரைவில் வறுமையில் விழலாம் அல்லது விரைவில் வறுமைக்கோட்டில் இருந்து வெளியேறலாம். எனவே, இந்தியாவிற்கு சாதி அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட பாகுபாட்டை சரிசெய்ய இட ஒதுக்கீடு எனும் இழப்பீடு தேவை என்ற பி.ஆர்.அம்பேத்கரின் கருத்தை இது முற்றிலும் புறக்கணிக்கிறது. இந்திய சமூகத்தில் ஆழமாக நிலைபெற்றுவிட்ட சமத்துவமின்மையை சரிசெய்து, ஒரு மனிதர் ஒரு வாக்கு என்ற முறைப்படுத்தப்பட்ட சமத்துவத்தை நோக்கி முன்னேற சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு தேவைப்பட்டது. சாதி அமைப்பின் ஒரு முக்கியமான, ஆனால் மோசமான அம்சம் என்னவென்றால், சாதி ரீதியாக மிகவும் கீழ்நிலையில் இருப்பதாக கருதப்பட்டவர்கள், அவர்களுடைய பிறப்பின் காரணமாக சமூக களங்கத்திற்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களைப் பொறுத்தவரை, தீண்டாமை நிலையானது. தீண்டாமைக் கொடுமையில் இருந்து தப்பிக்க வாய்ப்பில்லை. ஏனெனில் சாதீத் தீண்டாமை பிறப்பு சார்ந்தது. இது சமத்துவமின்மையின் சிறந்த எடுத்துக்காட்டு. இந்த பிறப்பு சார்ந்த சமத்துவமின்மையை சரிசெய்து, இந்திய சமூகத்தை அனைவருக்கும் சமமாக மாற்றுவதற்கான ஒரு கருவியாக இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது.

கேள்வி: மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு எதிராகவும், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும் நடத்தப்பட்ட போராட்டங்களையும் எழுந்த விமர்சனங்களையும் போலல்லாமல், பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்ட EWS இட ஒதுக்கீட்டிற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதேன்?

அஸ்வினி தேஷ்பாண்டே: 10% EWS இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு இல்லாதது இந்த இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் கடுமையாக எதிர்க்கப்பட்டன. ஏனெனில் இதுவரை அதிகார மையத்தில், முடிவெடுக்கும் பதவிகளில், உயர்பதவிகளில் மிக மிகக் குறைவாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மக்களின் பிரதி நிதித்துவத்தை அதிகப்படுத்துவதற்கு மண்டல் கமிஷன் இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்தது. உயர்பதவிகளில் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைந்த அளவில் இருப்பது, இன்னும் சில வேளைகளில் பிரதிநிதித்துவம் பூஜ்ஜியமாக இருப்பது, தற்செயலானதல்ல அல்லது 'தகுதி' இல்லாததால் ஏற்பட்டதல்ல என்பதைக் காட்டும் ஏராளமான ஆய்வுத் தரவுகள் உள்ளன. இந்தியாவில் தகுதி என்பது உயரம் அல்லது எடை போன்ற ஒரு புறநிலை அளவீடு அல்ல என்பதை நாம் கவனிக்க வேண்டும். 'தகுதி' என்பது எதைக் குறிக்கிறது என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து சலுகைகளையும் வாய்ப்புகளையும் பெற்ற உயர்சாதிக் குடும்பங்களில் பிறந்தவர்களுக்கு கிடைக்கும் சிறந்த கல்வியும், புத்தகங்களும், நல்ல போக்குவரத்து வசதியும், நல்ல ஆரோக்கியத்திற்கான சூழலும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களுக்கு கிடைக்கும் சமூகத் தொடர்புகளும், சமூக மூலதனமும் (Social Capital) அவர்களை மேலும் 'தகுதியுள்ளவர்களாக' மாற்றுகின்றன. அதாவது அவர்களுக்கு ஏற்கனவே உள்ள வாய்ப்புகள் மேன்மேலும் புதிய வாய்ப்புகளைத் தேடித்தருகின்றன. பிறப்பின் காரணமாக இந்த வாய்ப்புகள் மறுக்கப்படுபவர்கள் உண்மையில் தகுதி குறைந்தவர்கள் அல்ல. இதேபோன்ற சூழ்நிலையில், வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறக்கும் குழந்தைகள் குறைந்த தகுதியுள்ளவர்களாக வளர்வார்கள் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. அதேபோல், வரலாற்று ரீதியாக பிறப்பின் அடிப்படையில், அல்லது சமூகத் தொடர்புகள் அடிப்படையில் கூடுதல் சலுகைகளும், வாய்ப்புகளும் பெற்ற குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் தகுதி அல்லது திறன் குறைவாக இருந்தாலும், அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு துணையாக அவர்களின் சாதியும், குடும்பமும், சமூகத் தொடர்புகளும் இருக்கும்.

ஆதிக்கம் செலுத்தும் உயர்சாதியினர் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களை இயல்பாகவே தாழ்ந்தவர்களாக, குறைவான திறன் கோண்டவர்களாக, குறைவான தகுதி கொண்டவர்களாக பார்க்கின்றனர். உயர்சாதியினரின் இப்போக்கு "தகுதியை" உருவாக்கும் பிறப்புசார் சமூக அமைப்பையும், சாதிசார் கட்டமைப்புகளையும் முற்றிலும் அசட்டுத்தனமாக ஒதுக்கித் தள்ளுகிறது. மேலும் இப்போக்கு வாய்ப்பின் சமத்துவமின்மையை முற்றிலும் புறக்கணிக்கிறது.

இதுவரை தரப்பட்ட சாதி ரீதியான இட ஒதுக்கீடுகள் தகுதி குறைந்தவர்களுக்கு வாய்ப்புகள் தருவதற்கு உதவி செய்கின்றன என்ற அடிப்படையில் எதிர்க்கப்பட்டன. தகுதி குறைந்தவர்களை அனுமதிப்பதன் மூலம் அரசு நிறுவனங்களின் செயல்திறன் (Efficiency) குறைந்துவிட்டது என்ற அடிப்படையில் சாதி ரீதியான இட ஒதுக்கீடு எதிர்க்கப்பட்டது. ஆனால் 10% இட ஒதுக்கீட்டிற்கு இப்படிப்பட்ட எதிர்ப்பு ஏற்படவில்லை. ஏனெனில் இந்த இட ஒதுக்கீடு உயர் சாதியினருக்கானது. பொது நீரோட்டத்தில், அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் உயர் சாதியினர், ஏழ்மை துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் ஏற்பட்டது எனக் கருதுகின்றனர், எனவே இயல்பிலேயே அவர்கள் (உயர்சாதி ஏழைகள்) அனுதாபத்திற்கும் உதவிக்கும் தகுதியானவர்கள் என்பதால் 10% இட ஒதுக்கீட்டிற்கு எதிர்மறையான விவாதங்கள் உயர் சாதியினர் மத்தியில் எழவில்லை. ஆகையால் 10% இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுபவர்கள் தகுதி குறைந்தவர்கள் என்ற கருத்தும் உயர்சாதியினரால் முன்வைக்கப்படவில்லை. சுருக்கமாகச் சொன்னால், இட ஒதுக்கீடு பெறும் ஒடுக்கப்பட்ட சாதியினர் தகுதி குறைந்தவர்கள். 10% இட ஒதுக்கீடு பெறப்போகும் உயர்சாதியினர் தகுதி குறைவானவர்கள் அல்ல. இந்த ஒருதலைப் போக்கின் விளைவாகவே 10% இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புகள் எழவில்லை.

கேள்வி: உச்ச நீதிமன்ற பெரும்பான்மை அமர்வின் தீர்ப்பு 'சாதியற்ற, வர்க்கமற்ற சமுதாயத்தை' உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. மேலும் இட ஒதுக்கீடு காலவரையறையின்றி நீண்ட காலத்திற்கு தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு வலியுறுத்துகிறது. உச்ச நீதி மன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட இந்த இலக்குகள் சாத்தியமா?

அஸ்வினி தேஷ்பாண்டே: உண்மையில், 10% இட ஒதுக்கீடு, வரலாற்று ரீதியான பாகுபாட்டிற்கு தரப்படும் குறைந்தபட்ச இழப்பீடு என்ற கொள்கையிலிருந்து விலகியதால், ”சாதியற்ற இந்திய சமூகத்தை” உருவாக்கும் திசையில் செல்லாது. மாறாக, பல சாதிகளில் உள்ள ஏழைகளை இட ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கி சாதியை வலுப்படுத்தும் வகையில் அமைகிறது. அதாவது சாதியற்ற இந்திய சமூகம் என்ற நோக்கத்திற்கு எதிராகப் பயணிக்கிறது.

வரலாற்று ரீதியான பாகுபாட்டை ஈடுசெய்யும் இழப்பீடான, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்த பல காரணிகள் உள்ளன். ஏனெனில் இது பிறப்பு எனும் விபத்தின் காரணமாக பாதிக்கப்படும் தனி நபர்களையும், அவர்களுக்கு ஏற்படும் சமூக குறைபாடுகளையும் அங்கீகரிக்கிறது. தான் பிறக்கும் குடும்பத்தை யாராலும் தீர்மானிக்க இயலாது. ஆனால் ஒருவர் பிறக்கும் குடும்பம் அவரது சூழ்நிலையை தீர்மானிக்கிறது. வசதி, வாய்ப்புள்ள குடும்பத்தில் பிறந்தால், அவருக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லை. கூடுதல் வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனால் வசதி, வாய்ப்பற்ற சாதியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறப்பவருக்கு போதுமான வாய்ப்பு கிடைப்பதில்லை. அதுவே அவரது தகுதிக் குறைபாட்டிற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இந்த வாய்ப்புக் குறைபாட்டையும் அதன்மூலம் ஏற்படும் பாதகத்தையும் இட ஒதுக்கீடு போன்ற முன்னுரிமை கொள்கைகள் ஈடுசெய்கின்றன.

குறைந்த அளவிலான, பொதுத்துறை நிறுவன வேலைகளுக்கும், அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு முறை பொருந்தும் என்பதை கவனிக்க வேண்டும். எனினும், இவ்வாறு குறைந்த அளவில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டினால், கண்ணுக்குத் தெரியும் தலித், பழங்குடியின நடுத்தர வர்க்கத்தை உருவாக்க முடிந்தது. இட ஒதுக்கீடு உருவாக்கிய குறைந்த அளவிலான ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நடுத்தர வர்க்கம் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையும், பிரச்சினைகளையும் எதிர்க்கின்றது. அதன்மூலம் சாதியப் பாகுபாட்டை பொதுப் பார்வையில் படும்படி வைத்திருக்க முயல்கிறது. சாதிப் பாகுபாடு எனும் பிரச்சினை இருப்பதை தலித், பழங்குடியின நடுத்தர வர்க்கம் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு சிக்கலை அங்கீகரிப்பது அதன் தீர்வுக்கான முதல் படியாகும்.

சாதியற்ற சமூகத்தை நோக்கிச் செல்ல, ஓரங்கட்டுதல் மற்றும் இழிவுபடுத்துதல் போன்ற எண்ணற்ற வரையறைகளைப் பற்றிய தெளிவான மற்றும் உணர்ச்சியற்ற பகுப்பாய்வு தேவை: சமூக ஒடுக்குமுறையும் தீண்டாமையும் எவ்வாறு வெளிப்படுகின்றன? எந்தெந்த கோணங்களில் வெளிப்படுகின்றன? என்பன போன்ற பல கேள்விகளுக்கு தெளிவான விடை காண வேண்டும். அதன்பின்னர் சமூக ஏற்றத்தாழ்வையும் புறக்கணிப்பையும் பலமுனைகளில் இருந்து தகர்க்க கொள்கை வகுக்கப்பட வேண்டும். இதில் இட ஒதுக்கீடு ஒரு சிறிய பகுதியாக இருக்கும்.

இந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது இந்திய சமூகத்தில் உள்ள பாகுபாடுகளையும், பிரதிநிதித்துவ குறைபாடுகளையும், சாதீத் தீண்டாமை தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வடிவமைக்கப்பட்ட மந்திரக்கோல் அல்ல என்பதை நமக்கு நினைவூட்டுவதற்கு இது ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாக இருக்கும். மாறாக சாதியற்ற சமூகத்தை அமைக்க உருவாக்க வடிவமைக்கப்படும் தீர்வின் ஒரு பகுதியாக இட ஒதுக்கீடு இருக்கலாம்.

கேள்வி: தலித் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் பட்டியல் (SC) பிரிவின் கீழ் சேர்ப்பது குறித்து முடிவெடுக்க ஒன்றிய அரசினால் உருவாக்கப்பட்ட குழுவின் முடிவுகளில் இந்தத் தீர்ப்பு ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

அஷ்வினி தேஷ்பாண்டே: தலித் கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீடு வழங்க கூடாது என ஒன்றிய அரசு (09 நவம்பர் 2022) வாதிட்டது. இஸ்லாம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகள் தீண்டாமையும், பாகுபாட்டையும், சமூக களங்கத்தையும் எதிர்கொள்வதில்லை. ஏனெனில் இந்த மதங்களில் சாதி அமைப்பு இல்லை. எனவே அம்மதங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது பாஜக ஒன்றிய அரசின் வாதம். கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கும் ஜாதிக்கும் தொடர்பில்லை என்பது உண்மைதான் என்றாலும், இந்தியாவில் (தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளிலும்) கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் இடையே இந்து மதத்தை ஒத்த சாதிப் பிரிவுகள் உள்ளன. இது பல ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைபாடுகளையும், பாகுபாடுகளை சரியாக மதிப்பிடுவதற்கான ஒரே வழி, தரவுகளையும் ஆதாரங்களையும் முறையாக ஆய்வு செய்வது மட்டுமே. இந்த வழிமுறையைக் கூறியது பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தான். சமூகப் பாகுபாடு என்ற அம்சத்தை முழுமையாக ஆராயாமல், மதமாறியவர்கள் அனைவருக்கும் தன்னிச்சையாக இட ஒதுக்கீடு வழங்கினால், அது தலித் மக்களுக்கு கடுமையான அநீதியை ஏற்படுத்தும். மேலும் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் குற்றச்செயல். அதன் விளைவாக தலித் மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசு மேற்சொன்ன வழக்கில் தெரிவித்தது.

இந்த தர்க்கத்தின்படி, தரவுகளின் அடிப்படையில் முறையான மதிப்பீடு இல்லாமல் இட ஒதுக்கீட்டை மறுப்பது நியாயமற்றதாக இருக்கும்.

மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்த விவாதம் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையின் படி, தீண்டாமையின் தீராத இழிவால் பாதிக்கப்பட்டவர்களை இலக்காகக் கொண்டதாக இட ஒதுக்கீடு என்ற கருவியின் நோக்கமாக இருந்தது. காலப்போக்கில், இட ஒதுக்கீடு பல குழுக்களுக்கு விரிவுபடுத்தப்பட்டதால், இந்த தொலை நோக்குப் பார்வை நீர்த்துப் போனது.

தேவையான, சாத்தியமான ஆதாரங்களைத் தொகுப்பதற்கும், பல்வேறு குழுக்களின் உண்மையான சமூகப்பொருளாதார நிலையை மதிப்பிடுவதற்கும் இது சரியான காலமாகும். சரியான நேரத்தில் எடுக்கப்பட்டிருந்தால், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு நமக்கு மிகவும் தேவையான தரவுகளை வழங்கியிருக்கும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கிடப்படும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு நுகர்வு செலவின கணக்கெடுப்புத் (NSSO's Consumer Expenditure Survey) தரவுகள் வெளியிடப்பட்டிருந்தால் உண்மையான வறுமை நிலையை மதிப்பிடுவதற்கு ஆய்வாளர்களுக்கு உதவியிருக்கும். உறுதியான ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில், ஊகங்களையும், முன்முடிவுகளயும் மட்டுமே ஆய்வாளர்கள் கைக்கொள்ள வேண்டியுள்ளது. எனவே சரியான தரவுகளும் முறையான ஆய்வுகளும் இன்றி வடிவமைக்கப்படும் கொள்கைகளால் சாதியற்ற சமூகத்தையும், பாகுபாடுகளைக் களைந்து சமத்துவத்தையும் உருவாக்க இயலாது.

நன்றி: indiaspend.com (2022, நவம்பர் 10 இல் வெளிவந்த நேர்காணல்)

தமிழ் மொழியாக்கம்: லோகநாயகி

Pin It