1) அனைவருக்குமான கல்வி, சமத்துவத்துக்கான கல்வி பற்றிப் பேசியது எல்லாம் போதும்; சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே அதையே பேச வேண்டுமா? அதைவிட தரமான கல்விதான் இப்போது முக்கியம் என்கிறது - புதிய கல்விக் கொள்கை.
2) போதுமான மாணவர்கள் வராத பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு வேறு பள்ளிகளுடன் இணைத்து விட வேண்டும் என்கிறது புதிய கல்விக் கொள்கை. இராஜகோபாலாச்சாரி பள்ளிகளை மூடிய அதே காலத்துக்கு மீண்டும் இழுத்துச் செல்கிறது, இந்தக் கல்விக் கொள்கை.
3) 5ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு நடத்த வேண்டுமாம்; தேர்ச்சி பெறும் வரை அதே வகுப்பில் குழந்தை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமாம்; இந்தத் தேர்வுக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமாம்; இப்படிக் கூறுகிறது, இந்தக் கல்விக் கொள்கை.
4) 1953இல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிச் சிறுவர்கள், பிற்பகலில் அரை நேரம் அவரவர் பெற்றோர் செய்த குலத் தொழிலை செய்ய உத்தவிட்டார் இராஜகோபாலாச்சாரி. 5ஆம் வகுப்போடு மாணவர்களைப் பள்ளியிலிருந்து விரட்ட அவர் செய்த சூழ்ச்சியை 2019இல் பொதுத் தேர்வு வழியாக நுழைக்கிறது - புதிய கல்விக் கொள்கை.
5) தமிழ்நாட்டில் நடக்கும் அ.இ. அ.தி.மு.க ஆட்சி ஏற்கனவே தமிழ் நாட்டில் 46 பள்ளிகளை இழுத்து மூடிவிட்டது. ஆமாம் புதிய கல்வித் திட்டம் அமுலாவதற்கு முன்பே தமிழ்நாட்டில் செயல்படத் தொடங்கிவிட்டது.
6) பண்டையக் கல்வி முறையின் பெருமை பேசுகிறது. இந்தக் கல்விக் கொள்கை ‘பிராமணர்’ களுக்கு வேதம் கற்பிப்பது மட்டுமே - பண்டைய கல்வி முறை. ‘சூத்திரர்கள்’ படிக்க பள்ளிக் கூடங்கள் உருவானதே பண்டைய முறையான வேத கல்வி முறையை மாற்றியமைப்பதற்குத்தான். பண்டைய கல்வி முறை பெருமைக் குரியது அல்ல; மாறாக சிறுமைக் குரியது.
7) வேத காலத்திலேயே இந்தியர்கள் ஆய கலைகள் அனைத்திலும் சிறந்திருந்ததாகவும், கணிதம், மருத்துவம் உள்ள துறைகளில் உலகுக்கே வழிகாட்டியதாகவும் பெருமை பேசுகிறது. கல்விக் கொள்கை; சமஸ்கிருத மொழியை யும் சமஸ்கிருத இலக்கியத்தையும் பாடத் திட்டத்தில் சேர்த்து, இந்தியக் கலாச்சாரப் பெருமை களை உணர்த்த வேண்டும் என்கிறது - இந்தக் கல்விக் கொள்கை. இது புதிய கல்விக் கொள்கையா? வேத காலத்துக்கு இழுத்துச் செல்லும் அறிவியலுக்கு எதிரான பார்ப்பன கல்விக் கொள்கையே!
8) சமஸ்கிருதக் கல்வி இந்தியாவை என்றென்றும் இருளில் ஆழ்த்தி விடும் என்றார், உடன்கட்டை ஏறும் கொடுமையை ஒழிக்கப் பாடுபட்ட இராஜாராம் மோகன் ராய். இவரும் ஒரு வங்காளிப் பார்ப்பனர்தான். அறிவியலை சிதைக்கும் வேதக் கல்வி - கழுதையைத் தொட்டு விட்டால் அதற்குப் பரிகாரம் செய்வது எப்படி? ஆடு கொல்லப் பட்டால் எந்த வேதப் பாடலைப் பாட வேண்டும் என்று கூறுவதைத் தவிர சமஸ்கிருதக் கல்வியில் வேறு என்ன இருக்கிறது என்று கேட்டார், பிரிட்டிஷ் அதிகாரி மெக்காலே.
9) உயர்கல்வியை கார்ப்பரேட் மயமாக்க பரிந்துரைக்கின்றன. இந்தக் கல்விக் கொள்கை இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை உயர்கல்வியில் அமுல்படுத்தக் கூடாது என்கிறது.
10) எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மண் பாண்டம் செய்தல்; தச்சு வேலை செய்தல் போன்ற தொழிலுக்கு பரிந்துரைக்கிறது - இந்தக் கல்விக் கொள்கை. இது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு உடல் உழைப்புக் கூலித் தொழிலுக்கு விரட்டி அடிக்கும் சூழ்ச்சி அல்லவா?
11) சமூக சேவகர்களை பள்ளிகளில் கல்விப் பயிற்சிக்குப் பயன்படுத்தலாம் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கல்விக் கூடத்தில் நுழைய கதவு திறந்து விடுகிறது இந்தக் கல்விக் கொள்கை.
சமூக நீதி மண்ணான தமிழ்நாடு இதை எப்படி ஏற்கும்?
புதிய கல்வி என்ற பெயரால் புற்றிலிருந்து புறப்பட்டு படம் எடுத்தாடும் வர்ணாஸ்ரமக் கல்வி நகலை கிழித்து குப்பைக் கூடையில் வீசுவோம்.
கல்விப் புரட்சிக்கு வித்திட்ட நமது நன்றிக்குரிய காமராசர் நினைவு நாளான அக்.2ஆம் தேதி புதிய கல்விக் கொள்கை நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம்.
பள்ளிப்பாளையம் மாநாட்டுத் தீர்மானத்தை செயல்படுத்த, தோழர்களே தயாராவீர்!