அடி, உதை, வெட்டு -ஆணைகள் பறக்கின்றன.
ஐயோ, அம்மா, செத்தேன் - அலறல்கள் தொடர்கின்றன.

மரண ஓலங்களை இப்படிப் பதிவு செய்துள்ள இடம், மராட்டியச் சட்டமன்றம். யார் முதல்வர், யார் துணை முதல்வர் என்னும் இழுபறியில் சில வாரங்கள் ஓடியபின்னர், சட்டப் பேரவை கூடி, உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்ற நாளில்தான் மேற்காணும் கலவரங்கள் அரங்கேறின.

ராஜ்தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா, சட்டமன்னறத்தில் அனைவரும் மராத்தி மொழியில்தான் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கட்டளை இட்டிருந்தது. மீறினால் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கையும் செய்தது.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் அபு அசிம் இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். உடனே, நவநிர்மாண் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் வாஞ்சலே, ஆஸ்மியின் முன்னிருந்த ஒலிவாங்கியைப் பிடுங்கினார். அவரைத் தாக்க முயன்றார். மற்றவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். அவ்வேளையில், நவநிர்மாண் கட்சியின் பிற உறுப்பினர்களும் ஓடி வந்தனர். அவர்களுள் சிலர் அபு அசிமைத் தாக்கினர். தடுக்க முயன்ற பெண் உறுப்பினருக்கும் சில அடிகள் விழுந்தன.
தற்காலிக சபாநாயகர், அடிதடியில் ஈடுபட்ட ரமேஷ் வாஞ்சலே, சிசிர் ´ண்டே, ராம் கடம், வசந்த் கீதே ஆகிய நால்வரையும் நான்கு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்தார். மறுநாள், மராட்டிய மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது.

இதுபற்றிக் கருத்துச் சொன்ன சிவசேனாத் தலைவர் பால்தாக்கரே, இன்னும் ஒரு படி மேலே போனார். ‘அவர்களாவது அடித்ததோடு விட்டார்கள், எங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கையில் சிக்கியிருந்தால், அபு அசிம் தோலை உரித்துத் ‘தந்தூரி சிக்கன்’ போட்டிருப்பார்கள்’ என்றார்.

சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம்சிங், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் மட்டுமின்றி, மராட்டிய முதலமைச்சர் அசோக் தவானும் நவநிர்மாண் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையில் உணர்ச்சி வயப்பட்டு, ஆகா, இதுவல்லவா இன உணர்வு. இந்தச் சூடும் சொரணையும் நமக்கு இல்லையே என்று ஆதங்கப்படுகின்றவர்கள் ஒருபுறமும், ஐயகோ, இந்தியாவின் ஒருமைப்பாடு என்னாவது. இந்திய அரசமைப்புச் சட்டதிற்கே எதிரானதல்லவா இது என்ற புலம்புகின்றவர்கள் மறுபுறமுமாக உள்ளனர்.

மிக நிதானமாக அணுக வேண்டிய சிக்கல் இது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நடைபெற்ற கலவரத்தை மூன்று கோணங்களில் நாம் ஆராய வேண்டியுள்ளது.

1.தேசிய இனங்களின் உரிமை மற்றம் மொழி உணர்வு
2.சிறுபான்மையினரின் உரிமை
3.வன்முறையின் செல்வாக்கு

முதலில் தேசிய இனச் சிக்கலை நாம் எடுத்துக் கொள்ளலாம். தேசிய இனங்களின் கூட்டரசாக இருக்க வேண்டிய இந்தியா, தேசிய இனங்களின் சிறைக்கூடமாகவே இன்று வரை உள்ளது. அதனால், தேசிய இனங்கள் தங்களின் மொழி,பண்பாட்டு உரிமையை இழந்து நிற்கின்றனர். ஒரே நாடு, ஒரே பண்பாடு என்னும் முழக்கமும், இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி என்னும் சட்டமும், மேலும் மேலும் இந்தியாவில் பகை உணர்வையே ஊட்டி வருகின்றன. அதன் விளைவாகவே இது போன்ற நிகழ்வுகள், ஒவ்வொரு நாளும் கூடி வருகின்றன என்பது உண்மை.

வேற்றுமையில் ஒற்றுமை மிகச் சிறந்ததுதான். ஆனால்,வேற்றுமையே இல்லாத ஒற்றுமை நடைமுறைக்கு ஏற்றதன்று என்பது மட்டுமல்லாமல், அது எதிர் விளைவுகளையே உருவாக்கும் என்பது வரலாற்று உண்மை. அந்த உண்மையின் பலவடிவங்களில் ஒன்றுதான், மராட்டியச் சட்டமன்ற நிகழ்வு. எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலத்தில் வழங்கப்படும் மொழியே ஆட்சி மொழியாகவும், சட்டமன்ற மொழியாகவும், பிற துறைகளின் மொழியாகவும் இருக்கவேண்டும் என்பது எல்லா விதத்திலும் நியாயமானது. அந்த நியாயம் இன்று இந்தியா முழுவதும் ஏற்கப்படத் தொடங்கியுள்ளது என்பது மகிழ்ச்சி தரும் செய்தியே.

எனினும், மராட்டியத்தில் நடைபெற்ற நிகழ்வில் இன்னொரு கூறும் இருப்பதை மறந்துவிடக்கூடாது. அபு அசிம், இந்தியில் உறுதிமொழி எடுத்தமைக்கான காரணம், அது அவரின் தாய்மொழி என்பதால்தான் என்று கூறியுள்ளனர். அவ்வாறாயின், அவர் மராட்டியத்தில் வாழும் மொழிச் சிறுபான்மையினர் ஆகின்றார். அந்த வகையில் சிறுபான்மையினரின் உரிமை மதிக்கப்பட்டாக வேண்டும் அதுவே ஜனநாயகம்.

ஜனநாயகம் என்பதற்கு நாம் தவறான ஒரு விளக்கத்தையே விடையாகக் கொண்டிருக்கிறோம். பெரும்பான்மையினர் முடிவு செய்வதே ஜனநாயகம் என்று கருதுகின்றோம். பெரும்பான்மையினர் முடிவைச் சிறுபான்மையினர் மீது திணிப்பது ஆதிக்கமேயன்றி, ஜனநாயகம் ஆகாது. இலங்கையில், சிங்களர்கள் தாம் பெரும்பான்மை என்ற எண்ணத்தில்தானே,தமிழினத்தை அழிக்க முயல்கின்றனர். ஆரியர்களே பெரும்பான்மையாக உள்ள நாட்டில் யூதர்களுக்கு இடமில்லை என்று சொல்லித்தானே, இட்லர் அவர்களைக் கொன்று குவித்தான். சிறுபான்மையினராக உள்ள குர்து இன மக்கள் தங்கள் தாய்மொழியில் பேசவே கூடாது என்றுதானே துருக்கிய அரசு கூறியது. இவைகளெல்லாம் ஜனநாயகம் ஆகுமா? சிறுபான்மை மக்களைத் தடி கொண்டு அடக்கும் போக்கையே நாம் பாசிசம் என்கிறோம். அதானல்தான் இட்லர், முசோலினியைப் போல ஆர்.எஸ்.எஸ். காரர்களையும் நாம் பாசிஸ்டுகள் என்கிறோம்.

சிறுபான்மையினரின் கருத்தையும் மதித்து, அவர்களின் தாய்மொழிக்கும், உரிமைகளுக்கும் இடம் கொடுப்பதே ஜனநாயகம். அதனால்தான், ஓசூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், தன் தாய்மொழியான தெலுங்கில் உறுதிமொழி எடுத்தபோது, இங்கு எவரும் எதிர்க்கவில்லை. அந்த மெளனம், தமிழனுக்குச் சூடு, சொரணை இல்லை என்பதைக் காட்ட வில்லை; ஜனநாயக உணர்வு இங்கு இருப்பதையே காட்டுகிறது.

அவ்வாறாயின், கோலார் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், கர்நாடகச் சட்டமன்றத்தில், தன் தாய்மொழியான தமிழில் உறுதிமொழி எடுக்க அவர்கள் சம்மதிப்பார்களா என்று கேள்வி எழலாம். கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார்கள். அதற்காக அந்த பாசிசப் போக்கை நாம் பின்பற்ற வேண்டியதில்லை. எல்லா மாநிலங்களிலும், அந்தந்த மாநிலத்தின் மொழியே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று கோருவதைப் போல, ஒவ்வொரு மாநிலத்திலும் சிறுபான்மையினர் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றும் நாம் போராட வேண்டும். எதிர்மறைக்கு எதிர்மறை தீர்வாகாது.

ஒருவேளை, அபு அசிம் தாய்மொழி இந்தியாக அல்லாமல், இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி என்பதால் நான் அம்மொழியில் உறுதி ஏற்கிறேன் என்று அவர் கூறினால், அது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அப்போதும் கூட, அதனை அரசியல் அடிப்படையில் எதிர்கொள்ள வேண்டுமே அல்லாது, தடி எடுத்துக் கொண்டு ஓடுவதும், தாக்குவதும் ஏற்கத் தக்கதன்று. வன்முறை என்பது இருமுனைக் கத்தி என்பதையும், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்பதையும் மறந்துவிடல் ஆகாது. வன்முறையே கூடாது என்றால், ஆயுதம் ஏந்திப் போராடும் விடுதலைப் போராட்டங்களை நாம் எதிர்க்கிறோம் என்று பொருள் இல்லை. காலகாலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியை, மிக எளிமையாக எல்லாவற்றோடும் கொண்டு பொருத்தக் கூடாது. எடுத்ததற்கெல்லாம் வன்முறை என்று தொடங்கினால், கருத்து விவாதங்களுக்கு இடமே இன்றிப் போய்விடும். பிறகு ஜனநாயகம் பற்றிப் பேசுவது வெறும் கேலிக்கூத்து தான்.

மராட்டிய நிகழ்வில், இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பால்தாக்கரேயும், ராஜ்தாக்கரேயும், தங்களுக்குள் எவருக்குச் செல்வாக்கு கூடுதல் என்பதைத் தீர்மானிக்கவே, இது போன்ற கலகங்களைத் தூண்டி விடுகின்றனர்.அது மொழிப்பற்றோ, இனப்பற்றோ அன்று, வெறும் உள்ளூர் அரசியல்.

‘இட்லர்தான் எனக்கு முன்னோடி’ என்று பால்தாக்கரே ஒருமுறை வெளிப்படையாகவே சொன்னதை நாம் மறந்துவிட முடியுமா? ஆதலால், இன உணர்வு என்று அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, நாமும் நம் இளைஞர்களைத் தூண்டிவிட்டுவிடக் கூடாது. மராட்டியச் சட்டமன்ற நிகழ்வுகள் பின்பற்றப்பட வேண்டியவை அல்ல, கண்டிக்கப்பட வேண்டியவை என்பதை ஜனநாயக உணர்வுள்ள தமிழின உணர்வாளர்கள் உரத்துச் சொல்வோம்!

- சுப.வீரபாண்டியன்

Pin It