nadarasan

நடராசன் (1919 – 15.1.1939)

தமிழக மொழிப்போர் வரலாற்றில் முதல் களப்பலியானவர் நடராசன்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த இவர் 1999இல் பிறந்தவர். வீட்டின் ஒரே மகன். திருமணமாகாதவர். சென்னை பெரம்பூர் பண்ணைக்கார ஆண்டியப்பன் தெருவில் வாழ்ந்தவர். தந்தையர் பெயர் இலட்சுமணன்.

இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த முதல் மொழிப் போர் 3.6.1938 ஆம் நாள் தொடங்கி 21.2.1940 ஆம் நாள் வரை நடந்தது.

சென்னை இந்து தியாலசிகல் பள்ளியின் முன் அரப் போர் மறியல் அன்றாடம் நடந்து வந்தது. இந்தி எதிர்ப்பு மறியல் போரில் 5.12.1938 ஆம் நாள் நடராசன் பங்கேற்றுச் சிறை சென்றார். ஆறுமாதச் சிறையும் அய்ம்பது உருபா தண்டத்தொகையும் இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை வழக்குமன்ற நடுவர் அபாசு அலியால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவருக்கு உடல்நலம் குன்றியது. கடுங்கால் கொடுமையினால் காய்ச்சல் கண்டு சென்னை மருத்துவமனையில் 30.12.1938-ஆம் நாள் சேர்க்கப்பட்டார்.

உயிருக்குப் போராடிய அவரிடம் "மன்னிப்பு எழுதித் தந்தால் விடுதலை செய்கிறோம்" எனக் கூறி மன்னிப்புப் கடிதம் கேட்டது ஆச்சாரியார் அரசு.

 மன்னிப்பு கேட்டு மண்டியிடாத நடராசன் 15.1.1939 ஆம் நாள்  உயிரிழந்தார். மொழிகாக்க உயிர் துறந்த முதல் வீரன் நடராசன்! அவர் இறந்த காரணம் குறித்துச் சட்டமன்றத்தில் விவாதம் வந்தது.

முதலமைச்சர் சி.இராசகோபாலாச்சாரியார் அப்போது இழிவாகச் சொன்னார். "நடராசன் படிப்புவாசனை இல்லாதவர். எழுதப்படிக்கத் தெரியாத அரிசன். அதனால் தான் இறந்தார்".

நடராசன் படிப்பறிவு உள்ளவர். சென்னை ஏழுகிணறு மலையப்பன் தெரு மாநகராட்சிப் பள்ளியில் படித்தவர். உண்மைக்கு மாறான செய்தியை முதலமைச்சர் சட்டமன்றத்தில் கூறினார்.

இந்திக்குச் செல்வாக்கு தேடுவதன் மூலம், வடவர் வல்லாண்மைக்குத் தலைவணங்கச் செய்யும் முயற்சி தமிழ் நாட்டில்தான் தொடங்கியது. 1938 இல் தொடங்கிய இந்த அழிவு முயற்சியை அடையாளம் காட்டும் ஒளிவிளக்கானார் நடராசன்.

தமிழ்வீரன் நடராசன்

   பாவேந்தர் பாரதிதாசன். (பாவேந்தம் -18 பக்கம் 174.)

இந்திஎதிர்ப் புப்போரில் சிறைக்குச் சென்றான்
இளங்காளை நடராசன் சென்னை வாசி
அந்தமுறும் இலக்குமணன் அம்மாக் கண்ணாம்
 அருந்தமிழர் பெற்றெடுத்த மருந்து போல்வான்!

இடரான இந்திமொழி வீழ்க வீழ்க
 என்றுரைத்தான் தமிழரிடம் தமிழ்நாட்டின்கண்!
அடாதசெயல் இது என்றார் இந்தி சர்க்கார்.
 அழகியோன் தான்தன்னைச் சிறையில் கண்டான்
வஞ்சமிலாத் தமிழரெலாம் நடரா சன்பேர்
 வாழ்த்திக்கொண் டிருந்தார்கள் சிலநா ளின்பின்
வெஞ்சுரம்தான் கண்டதுவாம் அதுநாள் தோறும்
 மேலோங்க லாயிற்றாம் மெலிவுற் றானாம்

தனக்கென்று வாழாத தமிழா என்று
 தமிழரெலாம் அவன்பேரைப் பாடா நின்றார்!
தனிப்புகழ்சேர் நடராசன் தன்னைப் பெற்றோர்
 தமிழுக்குப் பெற்றோம்என் றகம்ம கிழ்ந்தார்

தன்னலத்தை எண்ணிஎண்ணித் தமிழர் நாட்டைத்
 தரைமட்டம் ஆக்குகின்றார் அவர்போல் இன்றி
இன்தமிழில் கல்விகற்றான் நடரா சச்சேய்
 எழில்பெற்றான் புகழ்பெற்றான் எல்லாம் பெற்றான்.

- புலவர் செந்தலை ந.கவுதமன் (சூலூர், பாவேந்தர் பேரவை, கோவை)

   (தொடரும்...)

Pin It