உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே, அவர்களையும், அவர்களின் ஆட்சி அரசியல் குழப்பங்களையும் மகாராஷ்டிரத்தில் பார்த்தோம். எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம், இவர்களையும், இவர்களின் கட்சி அரசியல் குழப்பங்களையும் தமிழகத்தில் பார்க்கிறோம்.

இந்தக் குழப்பங்களுக்கு என்ன காரணம், யார் காரணம் என்பது இலைமறை காயாக, திரைக்குப் பின்னால் இருப்பதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

eknath shinde and epsபன்முகத் தன்மைகள் கொண்டுள்ள மக்கள் வாழும் இந்திய ஒன்றியத்தை ‘ஏக’ இந்தியா, ‘ராம’ ராஜ்யம், ‘இந்து நாடு’ என்ற ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கையை, அந்தக் குறிக்கோளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் தில்லு முல்லுகளில் இப்போது மகாராஷ்டிர ஆட்சியரசியலும், தமிழக எதிர்க்கட்சி அரசியலும் சிக்கிக் கொண்டிருக்கின்றன.

மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 288. இதில் ஆட்சி அமைக்க 145 உறுப்பினர்கள் வேண்டும். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. 105 இடங்களைப் பெற்றது. சிவசேனாவுடன் கூட்டு வைத்து தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்கி ஆட்சியைக் கைப்பற்ற முயன்றது பா.ஜ.க.

ஆனால் வெறும் 56 உறுப்பினர்களைக் கொண்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி தமக்கு வேண்டும் என்ற உறுதியோடு இருந்தார். பா.ஜ.க விட்டுத் தரவில்லை.

ஒரு கட்டத்தில் 54 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ், 44 உறுப்பினர்கள் கொண்ட தேசியவாதக் காங்கிரஸ் இரண்டுடன் “மகா விகாஸ் அகாடி “ என்ற பெயரில் கூட்டணி அமைத்து, மகாராஷ்டிரத்தின் முதல்வர் ஆனார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் அவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு திடீரென்று ஒரு ஞானோதயம் ஏற்பட்டது, உத்தவ் தாக்கரே இந்துத்துவா வழியில் ஆட்சி செய்யவில்லை என்று. முதல்வருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்.

பா.ஜ.க. வுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வேண்டும் சிவசேனா, இதுதான் ஏக்நாத் ஷிண்டேவின் ஞானோதயத்தின் விளைவாக எழுந்த கோரிக்கை. இது குறித்துப் பேசி முடிவெடுக்கலாம் என்று உத்தவ் தாக்கரே சொல்லியும் கேட்கவில்லை ஷிண்டே.

தனக்கு ஆதரவான 40 சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட்டிக் கொண்டு “பா.ஜ.க. ஆளும்’’ அஸ்ஸாம் மாநிலத்தின் கெளகாத்திக்குச் சென்று சொகுசு வசதிகளுடன் தங்க வைத்தார் ஷிண்டே.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு புறம் உத்தவ் தாக்கரேவைக் கவிழ்க்க முயற்சி செய்தார் பா.ஜ.க வின் மாநிலத் தலைவர். மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கூறியிருந்தார். சொன்னது நடந்தது. நினைத்தது நடந்தது. சிவசேனா ஆட்சியைக் கவிழ்த்தது பா.ஜ.க. உத்தவ் தாக்கரே பதவி விலகினார். மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க தலைமையில் ஆட்சி, முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே. வென்றது சூழ்ச்சி.

தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக் கூடிய பெரிய கட்சிகளில் அ.தி.மு.கவும் ஒன்று.

“அ.தி.மு.க., உட்கட்சி மோதலை உருவாக்கியவர்களே பா.ஜ.க தலைவர்கள்தான். ஒற்றைத் தலைமையாக இருந்தாலும் சரி, இரட்டை அல்லது மூன்று தலைமையாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் அ.தி.மு.க., இனி, பா.ஜ.க.வின் கைப்பாவையாகத்தான் இருக்கும். ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில், அமித் ஷாவின் தலையீடு இருந்து வருகிறது “ என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது இங்கே நினைவுகூரத்தக்கது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி கலைவாணர் அரங்கிற்கு வந்தார் வெங்கைய நாயுடு. அதற்குப் பின்னர்தான் அ.தி.மு.கவில் குழப்பங்கள், பிளவுகள், அணிகள், கூவத்தூர், தர்மயுத்தங்கள், இரட்டைத் தலைமை என்று நிலை தடுமாறத் தொடங்கி, இப்பொழுது ஒற்றைத் தலைமை என்று வானகரம் பொதுக்குழுவில் வந்து நிற்கிறது அக்கட்சி.

அப்பொதுக்குழு கூடவிருந்த சில நாள்களுக்கு முன்னர் அ.தி.மு.கவில் பா.ஜ.க தலையீடு இல்லை என்று அண்ணாமலை அடித்துச் சென்னார். பொதுக்குழு முடிந்த ஜுன் 23 அன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில், எந்த அதிகாரமும் இல்லாத ‘துணை முதல்வர்’ பதவியை, பிரதமர் நரேந்திர மோடி சொன்னதால்தான் ஏற்றுக் கொண்டேன் என்று பா.ஜ.க வின் தலையீட்டைச் செய்தியாளர்களிடம் வெளிப்படுத்திய ஓ.பன்னீர்செல்வம், அன்றே பிரதமரைப் பார்க்க டில்லிக்குப் புறப்பட்டார்.

அ.திமு.கவில் அமைதி நிலவுவதை பா.ஜ.க ரசிக்கவில்லை. அங்கே நிலவும் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணிகளின் குழப்பங்களுக்குப் பின்னணியில் பா.ஜ.க இருப்பது தெரிகிறது.

முன்னாள் அமைச்சர் பொன்னையன், “தமிழக அரசியலில் அ.தி.மு.கவின் இடத்திற்கு வர பா.ஜ.க. முயல்கிறது” என்று ஒரு திரியைக் கொளுத்திப் போட்டார்.

2024 பொதுத் தேர்தலில் 22 சீட்டுகளைப் பா.ஜ.க அ.தி.மு.க விடம் கேட்டுப் பெற இருக்கிறதாம். அதனை ஈ.பி.எஸ் விரும்பவில்லையாம். 2024 தேர்தலும், பொன்னையன் பேச்சும் அவரைக் கலங்கடித்துள்ளதாகக் கட்சியினர் கருதுகின்றனராம்.

 ஓ.பி.எஸ், கட்சித் தொண்டர்களின் ஆதரவை இழந்த நிலையில், பெரும்பான்மைத் தலைவர்கள் இ.பி.எஸ் அணியில் இருக்கும் நிலையில், அ.தி.மு.க என்ற துருப்புச்சீட்டின் கயிறை வைத்துக் கொண்டு அக்கட்சியை அசைத்துக் கொண்டு இருக்கிறது, பா.ஜ.க. அ.தி.மு.க எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.

இந்திய ஒன்றியத்தில் ஆக்டோபஸ் போல பரவலாகத் தன் கால்களைப் பரப்பி வைத்துக் கொண்டுள்ள நிலையில், ஒற்றை ஆட்சியைக் கொண்டுவர, பாசிசச் சித்தாந்தம் பா.ஜ.க.வின் செயல்களிலும் இருக்கும் என்பதற்கு இன்றைய மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகியவை சான்றாக அமைகின்றன.

- எழில்.இளங்கோவன்

Pin It