சமச்சீர்க் கல்வியில் கைவைத்து நீதிமன்றக் கண்டனத்திற்கு ஆளானது தமிழக அரசு என்றால், மாணவர்களின் பாடங்களில் கேலிப்பட நச்சு விதைகளைத் தூவி, மக்களின் கண்டனங்களுக்கு ஆளாகிக் கொண்டு இருக்கின்றன மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகமும், அமைச்சர் கபில்சிபலும்.

அண்மையில் இத்துறையின் கீழ் இயங்கும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் வெளியிட்ட 11ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் இந்திய அரசியல் சிற்பியும், பேரறிஞருமான அம்பேத்கரை அவமதித்துக் கேலிப்படம் இடம் பெற்றது. நாடே கொந்தளித்தது. நாடாளுமன்றம் நிலை குலைந்தது. அதனால் அப்படத்தைத் திரும்பப் பெறுவதாக அமைச்சர் அறிவித்தார்.

இப்பொழுது 12ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட நூலில், தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த 1965ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திக் கேலிப்படம் வெளியிட்டுள்ளது.

153ஆம் பக்கத்தில் "விடுதலைக்குப் பிறகு இந்திய அரசியல்" என்ற தலைப்பில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் கேலிப்படத்தில் எப்படி வர்ணாசிரமச் சிந்தனை வெளிப்படுகிறதோ, அப்படியே இந்தி எதிர்ப்புப் போராட்டக் கேலிப்படத்தில் இந்தி ஆதிக்க வெறி வெளிப்படுகிறது.

1938ஆம் ஆண்டு இராஜாஜியால் நுழைக்கப்பட்ட இந்தித் திணிப்பைத் தந்தை பெரியார், மறைமலையடிகளார், கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட தமிழர்களின் எதிர்ப்பால் பின்வாங்கியது இந்தி ஆதிக்கம். 1956ஆம் ஆண்டு இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை அவர்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். 1965ஆம் ஆண்டு பக்தவச்சலம் ஆட்சியின் போது மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது.

இந்தி(திணிப்பு) என்பது ஏதோ கூடுதலாக ஒரு மொழி படிப்பதற்காக என்பதன்று பொருள். செத்துப் போன சமற்கிருதத்தை மீண்டும் உயிர்ப்பித்து, அதன் மேலாண்மையை இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் நிறுவி இராமராஜ்ஜியத்திற்கான அஸ்திவாரமே இந்தித் திணிப்பு.

இதனை நன்கு உணர்ந்தவர்கள்தான் தமிழக மாணவர்கள். மாணவர்கள் மொழிப்பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்தக் கேலிப்படம் சொல்வது, தமிழக மாணவர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதாகும்.

இந்தியா ஒரு மொழி கொண்ட நாடன்று. பன்மொழிகளின் நாடு. அவரவர்க்கு அவரவர் தாய் மொழியே முதன்மை. தமிழர்களின் மொழி தமிழ். தமிழை ஆதிக்கம் செய்யவோ, அழிக்கவோ தமிழர்கள் ஒருநாளும் அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழுக்கு இருக்கின்ற மொழிவளம், இலக்கண வளம், இலக்கிய வளம் போன்றவை இந்திக்கு இல்லை. வாழை இலை, தென்னை ஓலை, தாழை மடல் என்று மரத்தின் இலைகளுக்குத் தமிழில் வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியில் "பத்தா" என்ற ஒரே பெயர்தான் இருக்கிறது. மொழியில் வளம் இல்லை. இலக்கண, இலக்கியச் செறிவு இல்லை.

இந்திய மக்கள் தொகை அடிப்படையில் இந்தி பேசும் மக்கள் வெறும் சிறுபான்மையினர்தாம். ஆகவே இந்தியா முழுமைக்கும் இந்தி ஆட்சி மொழி ஆகும் தகுதி இல்லை என்பது ஊரறிந்த உண்மை. அப்படியிருக்க குடியரசுத் தலைவரின் ஆணையை ஏற்றுத் தமிழர்களும், தமிழ் மாணவர்களும் இந்தித் திணிப்பை எப்படி ஏற்பார்கள்.

மொழிப் பிரச்சினையை மாணவர்கள் புரிந்து கொண்டதால்தான் 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு "போர்" ஆக மாறியது. மொழிப் பிரச்சினையை மாணவர்கள் புரிந்து கொண்டதால்தான் 1967ஆம் ஆண்டு, இந்தியைத் திணித்த காங்கிரஸ் ஆட்சியை அடியோடு அகற்றினார்கள் மாணவர்கள்.

மாணவர்களைக் கேலி செய்வதைப் போலத் தமிழர்களையும், தமிழர்களின் உணர்வுகளையும் இழிவுபடுத்தும் வேலையை இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது.  உடனடியாக அக்கேலிப்படத்தைப் பாடநூலில் இருந்து நீக்க வேண்டும்.

Pin It