பூனா பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அப்பல்கலைக் கழகத்திலுள்ள ‘க்ராந்திஜோதி சாவித்திரிபாய் புலெ பெண்ணிய ஆய்வு மய்ய'த்துடன் இணைந்து செயல்படுகிறார். சமூகவியல், தலித் பெண்ணியம், தலித் மக்கள் பண்பாடு முதலியவற்றைப் பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். அமெரிக்காவின் கறுப்பினப் பெண்ணிய மரபு, சாதி, தந்தைமை வழி சமூகம் குறித்து மராத்திய மொழியில் தொடர்ந்து எழுதி வருகிறார். பெண்ணியச் சிந்தனை வெளியின் எல்லைகளை விரிவுபடுத்தி, அதற்குரிய கருத்தியல்களை சலனப்படுத்தி, பெண்களின் வாழ்வைப் பற்றிய ஆழமான, நூதனமான புரிதலை முன்வைத்து வெளிவந்துள்ள நூல்தான் - சர்மிளா ரெகேயின் Writing Caste/Writing Gender : Dalit Women’s Testimonios

Sharmila Rege
தலித் பெண்களின் வாழ்க்கையின் விவரங்களை, அதன் உள்ளார்ந்த தன்மையை உலகுக்கு, குறிப்பாக அறிவாளர் உலகத்துக்கு உணர்த்தும் வகையில் இந்நூலின் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது. தலித்துகளின் சுயசரிதைகளின் சாரம், முக்கியத்துவம், அவற்றை மய்யமிட்டு எழுந்துள்ள சர்ச்சைகள், தலித் இலக்கியம் அது தோன்றியுள்ள சூழல்களில் தோற்றுவித்துள்ள இலக்கிய, அரசியல் சவால்கள் ஆகியவற்றை அலசும் கட்டுரையுடன் இந்நூல் தொடங்குகிறது. அடுத்து, தலித் பெண்களின் வாழ்க்கையை நுணுக்கமாக அறிவதன் தேவையை, அவர்களது அனுபவங்களினூடாகவும் சிந்தனையி னூடாகவும் விரியும் கருத்துகளை ஆய்ந்தறிவதன் இன்றியமையாமையை விளக்க இந்நூல் முற்படுகிறது.

ஆணாதிக்கம், தந்தைமைச் சமுதாய அமைப்பின் உள்ளார்ந்த அநியாயம், தந்தைமைச் சமுதாய அமைப்பின் உறுதிப்பாட்டுக்கும் சாதியமைப்பின் கட்டுக்கோப்புக்கும் இடையிலான உறவு, சாதி அமைப்பின் ஏற்றத் தாழ்வுகளுக்கும் பெண்ணடிமைத்தனத்துக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பு ஆகிய வற்றை மகாராட்டிரத்தின் வரலாற்றைக் கொண்டு, இந்த நூலின் முன்னுரையின் பெரும்பகுதி ஆராய்கிறது. சாதி எதிர்ப்புக் கருத்தியல்களும், செயல்பாடும் பாலின நீதி குறித்து உரைத்தவை, சாதித்தவை, மகாத்மா புலெ, பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரது சிந்தனையில் துலங்கும் பெண்ணியக் கூறுகள், ஆகியன குறித்து அரிய செய்திகளை இந்நூல் முன்வைக்கிறது.

தலித் இலக்கியம், தலித் பெண்ணியம் என்பன தனி அலகுகளாக மட்டும் அறியப்பட்டால் போதாது, பொது அறிவின் தன்மையை மாற்றியமைக்கவல்ல இவற்றின் பண்புகள், பொது வரலாற்றுப் பாடத்துக்குள்ளும் பெண்ணியச் சிந்தனை குறித்த விளக்கங்களுக்குள்ளும் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்துகிறார். தனது இந்த முயற்சி, இத்தகைய இலக்கை நோக்கிச் செலுத்தப்பட்ட ஒன்றுதான் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

தலித் பெண்களின் சரிதைகளை வரலாற்றுச் சாட்சியங்களாகக் கருதப் படுவதன் தேவையையும் சர்மிளா ரெகே வலியுறுத்துகிறார். தனி மனித வரலாறுகளாக, கதைகளாக மட்டுமின்றி, இவை சாதி சமுதாயத்தின் இருப்பைக் குறித்த விமர்சனங்களா கவும் இருப்பதை விளக்குகிறார். தலித் பெண்களது வாழ்க்கைக் கதை களை அவர்களது அனுபவங்களினூடாக, சொற்களின் வழியாக விளக்கு வதன் பொருட்டு - தான் மேற்கொண்டுள்ள எழுதுமுறையை குறித்தும் பேசுகிறார். அதனைத் தானும் தன்னைப் போன்ற தலித் அல்லாதவர்களாகவும் செய்வதன் காரணங்களை யும் விளக்குகிறார். தீண்டாமைக்கு ஆதாரமான ‘விலக்குதல்' தொடர்பான செயல்பாடு, அறிவு உலகத்திலும் செயல்பட்டு வருவதை சுட்டிக் காட்டி - சாதி எதிர்ப்பு மரபினை அத்தகைய விலக்கலிலிருந்து மீட்டெடுப்பதன் தேவையை, நியாயத்தை விளக்குகிறார்.

வரலாறாகவும், இலக்கியமாகவும், சமூகவியல் விளக்கங்களாகவும் விரியும் அரிய சரிதைகளை உள்ளடக் கியுள்ள இந்நூல், பெண்ணியச் சிந் தனை மரபிற்குரிய வரலாற்றினைப் பற்றிய புதிய பார்வையைப் பதிவு செய்துள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கான ‘மால்கம் ஆதிசேஷையா விருது' சர்மிளா ரெகேவுக்கு வழங்கப்பட்டது. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் இந்த விருதை அவருக்கு வழங்கியது. ‘தலித் முரசு' சார்பில் சர்மிளாவுடன் உரையாடிய போது...

சந்திப்பு : வ. கீதா
புகைப்படங்கள் : குட்டி ரேவதி

தலித்தியம், தலித் பெண்ணியம், அம்பேத்கர் சிந்தனை இவற்றில் தங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன?

1980களிலும் 1990களிலும் பலருக்கும் பெண்ணியம் தொடர்பான விவாதங்களில், செயல்பாட்டில், அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது போல் எனக்கும் ஆர்வம் உண்டாயிற்று. ஆனால், அப்போது சாதி, தலித் இயக்கம் ஆகியவற்றைப் பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை. தலித் அரசியல், சாதி மறுப்புக் கொள்கைகள் பற்றி பெண்கள் இயக்கங்களிலும் அதிகம் பேருக்குத் தெரிந்திருக்க வில்லை. ஆனால், மண்டல் குழு பரிந்துரைகள் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள், பாபாசாகேப்பின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நாடெங்கிலும் ஏற்படுத்திய சலசலப்பு, அவை தூண்டி விட்ட தலித் எழுச்சி, மகாராட்டிரத்தில் தலித் பெண்களின் வாழ்வியல், அரசியல் பங்கேற்பு குறித்து வெளிவந்து கொண்டிருந்த தகவல்கள் ஆகியவை - எனது சிந்தனையிலும், புரிதலிலும் மாற்றங்களை ஏற்படுத்தின. பெண்ணியக் கருத்தியல், செயல்பாடு முதலியவற்றை சாதி மறுப்பு செயல்பாடுகளுடனும், சாதி ஒழிப்புக் கருத்தியலுடனும் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டியதன் தேவையை உணர்ந்தேன். தலித் பெண்ணியம் குறித்து சிந்திக்கவும் எழுதவும் தொடங்கினேன்.

உங்களுடைய குடும்பச் சூழல் பற்றிச் சொல்லுங்கள்...

நான் தலித் அல்லாத வகுப்பைச் சேர்ந்த வள் என்றும், சிறு வயதிலிருந்தே பாபாசாகேப்பின் நிழலில் வளர்ந்தேன் என்றும் சொல்லலாம். காரணம், எனது தந்தையார் சித்தார்த்தா கல்லூரியில் படித்தவர்; அக்கல்லூரியின் கிரிக்கெட் அணிக்குத் தலைவராக இருந்தவர். பல கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர். அவர் பாபாசாகேப்பிடமிருந்து பரிசு பெறும் புகைப்படம் எங்கள் வீட்டில் இருந்தது. எனவே, சின்ன வயதி லிருந்தே பாபாசாகேப்பின் ஆளுமையறிந்தவளாய் வளர்ந்தேன். எனது தந்தையார் தனது கல்லூரி நாட்களைப் பற்றிப் பேசுகையில், பாபாசாகேப்பின் அரிய கல்வி தரிசனத்தைப் புகழ்ந்து பேசுவார். அக்காலத்தில் சித்தார்த்தா கல்லூரியில் பயின்ற மாணவர்களில் ஏறக்குறைய அனைவரும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக அல்லது வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். படிக்கும் போதே வேலைக்குப் போகின்ற வர்களாக இருந்தனர். இதனால் கல்லூரி அதிகாலையில் தொடங்கி பிற்பகலுக்கு முன் முடிந்துவிடும் - காரணம், எஞ்சிய நேரத்தில் மாணவர்கள் வேலைக்குப் போகலாம் என்பதற்காக.

கல்லூரியின் ஒவ்வொரு அசைவிலும் பாபாசாகேப் அக்கறை காட்டுவாராம். கிரிக்கெட் அணி எத்தகைய சீருடையை அணிய வேண்டும் என்பன போன்ற சின்னச்சின்ன விஷயங்களிலும்கூட ஆர்வம் காட்டுவாராம். அவர் அடிக்கடி கல்லூரிக்கு வருவதுடன், கூடிய வரைக்கும் மாணவர்களை சந்தித்துப் பேசுவாராம் தலித் அல்லாத மாணவர்களும் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டதுடன் சாதி மறுப்புக் கொள்கையின் நுணுக்கங்கள், கல்லூரியின் சட்டதிட்டங்களில் அன்று இடம் பெற்றிருந்ததை எனது தந்தை சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

சாதி மறுப்பு இயக்கங்கள் பேசிய பெண்ணியம் என்பதன் அடிப்படையான கூறுகள் எவை?

மகாத்மா புலெ, பெரியார், பாபாசாகேப் அம்பேத்கர் ஆகிய மூவருமே சாதி ஒழிப்பு என்பதற்கும் பெண் விடுதலை என்பதற்கும் இடையேயுள்ள உறவைப் பற்றிப் பேசினார்கள். மூவரும் இந்த உறவை அவர்களுக்கே உரிய வகையில் புரிந்து கொண்டனர். பெரியார் பற்றி நான் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

மேற்கிந்திய சாதிமறுப்பு மரபு பேணும் பெண்ணியம் குறித்து சற்று விரிவாகச் சொல்லலாமே...

மகாத்மா புலெயின் ‘சத்திய சோதக் சமாஜம்' பற்றி இங்கு பலர் அறிந்திருக்கக் கூடும். பார்ப்பன மேலாண்மை, சாதி வேறுபாடுகள், விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் சந்தித்த பிரச்சனைகள் ஆகியனவற்றைப் பற்றிய அவரது கருத்துகள் பலரை அவர் பால் ஈர்த்தன. அவரது வாதத் திறமையும் விடுதலை வேட்கையும், சமத்துவம், சமநீதி பற்றி அவர் ஓயாது பேசி வந்தமையும் அவரது கருத்துகளுக்கு நியாயம் சேர்த்தன. பெண்களைப் பொருத்தவரை, இரு முக்கியமான செயல்பாடுகளை அவர் மேற்கொண்டார். பார்ப்பன விதவைகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்காக ஒரு காப்பகம் அமைத்தார். தலித் பெண் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நிறுவி, தனது மனைவி சாவித்திரிபாய் அம்மையாரை ஆசிரியராக நியமித்தார். இவை போக, அவர் வாழ்ந்த காலத்திலும் சூழலிலும் பெண்ணியம் தொடர்பாகப் பேசப்பட்டவற்றை கவனித்து வந்தார். ஆணாதிக்கத்தையும் இந்து மதக் கருத்தியலையும் விமர்சித்த பெண்களைப் போற்றினார், புகழ்ந்தார்.

பண்டித ராமாபாய் இந்து சமயத்தை விமர்சித்தார், கிறித்துவ மதத்தைத் தழுவினார். தாராபாய் ஷிண்டே சமகால இலக்கியச் சித்தரிப்புகளில் பெண்கள் பற்றிச் சொல்லப்பட்ட செய்திகளை கடுமையாக விமர்சித்தார். ஆணாதிக்கச் சொல்லாடல்கள், பெண்கள் மீது அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகள், காட்டிய வெறுப்பு, பாராட்டிய வன்மம் ஆகிய வற்றை வரிசைப்படுத்தி இவை அனைத்திலும் இழையோடிய அதிகாரத்தையும் மெத்தனத்தையும் சுட்டிக்காட்டினார், சாடினார். தாராபாய் போன்றவர்களது எழுத்துகள், பார்ப்பனர்களுக்கு எரிச்சலூட்டியது ஒரு புறமிருக்க, புலெயின் இயக்கத்தில் இருந்த சில ஆண்களுடைய மனத்தையும் உறுத்தியிருக்க வேண்டும். இவர்களுடைய இந்த மன உறுத்தலைப் போக்கவும் பெண்களின் பக்கம் உள்ள நியாயத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் புலெ தனியொரு உரையாடல் வடிவத்தில் இருந்த விளக்கத்தை வெளியிட்டார்.

திருமணச் சடங்கையும் உங்கள் பெரியார் போல புலெ மறுவரையறை செய்தார். ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே பரஸ்பர நட்பு, நம்பிக்கை, மரியாதை ஆகியன நிலவ வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கிய திருமண உறுதிமொழியை உருவாக்கினார். பார்ப்பன புரோகிதர்கள் இல்லாமலேயே திருமணங்கள் நடைபெற வேண்டும் என்றார். புலெயின் சிந்தனையும் செயல்பாடும் பலரது வாழ்க்கை மாறியமைய காரணமாக இருந்தன. மிக முக்கியமாக அன்று ஆங்கில ஆளுகைக்கு உட்பட்ட, ஆனால் தனித்துவமான வகையில் இயங்கிய கோலாப்பூர் சமஸ் தானத்தின் அதிபராக இருந்த சாகு மகராஜ், மிக முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றக் காரணமாகயிருந்தன. அச்சட்டங்களின் சாரத்தை இன்று நினைத்தாலும்கூட பிரமிப்பாக இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இத்தனை தைரியமாக அவர் செயல்பட்டிருக்கிறார் என்பதை எண்ணும்போது உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது.

எப்படிப்பட்ட சட்டங்கள் அவை?

பெண்களது வாழ்க்கைப் பிரச்சனைகளையொட்டி தீட்டப்பட்டவைதான் அவை. சாதி மறுப்புத் திருமணங்களைப் பதிவு செய்ய அனுமதிக்கும் சட்டத்தை சாகு 1919லேயே பிறப்பித்தார். பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறைக்கு எதிராகவும் இதே ஆண்டில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. விதவைகளை மோசமாக நடத்துவோரையும், மருமகளை ஏசும் மாமியாரையும் கணவரையும் பிறரை யும், பெண்களின் கற்பை சந்தேகிக்கும் ஆண்களையும் தண்டிக்கும் சட்டமாக இது இருந்தது. மனம் ஒவ்வாத திருமணங்கள் ரத்து செய்யப்படலாம் என்பதை விவாகரத்து சட்டம் அறிவித்தது. தேவதாசி பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு வாரிசுரிமையை உத்தரவாதம் செய்யும் சட்டமும் சாகு மகராஜாவால் நிறைவேற்றப்பட்டது. பலர் இத்தகைய சட்டங்களை எதிர்த்தனர். குறிப்பாக, திலகரது ‘கேசரி' பத்திரிகை கோலாப்பூர் மன்னரை கடுமையாகத் தாக்கி எழுதியது. வகுப்புரிமையை இவர் ஆதரித்ததும் பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு சமஸ்தானப் பணிகளில் 50% இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தீண்டாமையொழிப்பு, தலித் மக்கள் சந்தித்த பிரச்சனைகள் பற்றி சத்தியசோதக் சமாஜத்தின் பார்வை என்ன?

சத்திய சோதக் சமாஜத்தில் விவசாயக் குடிகளும் கைவினைஞர்களும்தான் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தனர். பார்ப்பனரல்லாதவர்களில் பணவசதி படைத்திருந்தவர்கள், ஒட்டுமொத்தமாக இவ்வியக்கத்தை ஆதரிக்கவில்லை. இருப்பினும், ஒரு சில படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் சேவைப் பணிகளில் ஈடுபட்டு சம்பாதித்தவர்களும் பண உதவி செய்து வந்தனர். இதனாலேயே இவ்வியக் கத்துக்கும் தலித்துகளுக்கும் தொடர்பில்லை அல்லது தலித்துகளை உள்ளடக்காத, இவர்களது பங்கேற்பைப் பெறாத இயக்கமாக இது இருந்தது என்ற தவறான எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒரு விஷயத்தை இங்கு நான் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

எந்த அளவுக்கு பார்ப்பனியத்தை இவ்வியக்கம் எதிர்த்ததோ, அதே அளவுக்கு தீண்டாமையையும் எதிர்த்தது; தலித் தலைவர்களுக்கு ஆதரவளித்தது. தலித் தலைவர்களில் சிலர் சத்தியசோதக் சமாஜத்தின் உறுப்பினர்களது பிரச்சார துணுக்குகளைப் பதிப்பித்தனர். இன்னும் சொல்லப்போனால், சமாஜத்தின் தொடக்க நாட்களில் தலித் மக்களின் அனுபவங்களும் சாதி அமைப்புக்கு எதிரான அவர்களது எதிர்வினைகளும்தான் - அதன் கருத்தியலுக்கும் அதே சமயம் சொல் லாடல்களுக்கும் வலுசேர்த்தன. மேலும், சத்திய சோதக் சமாஜத்தின் செயல்பாடுகள் தோற்றுவித்த புதிய புரட்சிகர பண்பாட்டுக் களமானது, பெண்களுக்கும் தலித்துகளுக்கும் பொதுச் பிரச்சனைகளை அவரவர்களது நிலைப்பாட்டினை முன்வைக்கவும் தோதான பிரச்சார வெளியாகவும் அமைந்தது. காலப்போக்கில் தேசிய அரசியலில் புலெயின் இயக்கத்தின் ஒரு பகுதி ஈடுபடுத்தப்பட்டது. அவ்வியக்கத்திலும் சாதி, வர்க்க முரண் பாடுகள் முளைவிடத் தொடங்கின என்றாலும், அந்த மரபின் உள்ளார்ந்த சாதி எதிர்ப்புக் கொள்கை உயிர்ப்புடன் விளங்கியது. பிற்காலத்தில் அம்பேத்கரது அரசியல் செயல்பாடுகளில் தலித் அல்லாத தலைவர்களும் செயல்வீரர்களும் ஆர்வத்தோடு பங்கேற்றது இதற்கு தக்க சான்றாகும்.

பாபாசாகேப்பின் பெண்ணியப் புரிதல், பார்வை பற்றி சொல்லுங்கள்...

இதனை இரண்டு நிலைகளில் வைத்துப் புரிந்து கொள்ளலாம். அம்பேத்கரது சிந்தனையில் துலங்கிய பெண்ணியப் பார்வை; அவர் கட்டியெழுப்பிய இயக்கங்களில் பங்கேற்ற பெண்களின் செயல்பாடுகளினூடாக, சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்த தலித் பெண்ணியம். ‘அம்பேத்கர் பாலின சமத்துவம் பற்றி சரிவர யோசிக்கவில்லை; இந்து சட்டத் தொகுப்பினை நடைமுறைப்படுத்த போதிய முயற்சிகளை எடுக்கவில்லை' என்பன போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பெண்ணியவாதிகள் சிலர் முன்வைத்துள்ளனர். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், அவரது சிந்தனையில் பெண்ணியக் கூறுகள் பற்றிய அறியாமை பரவலாக, அதுவும் கல்விசார் அறிவாளிகள் மத்தியில் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அம்பேத்கர் சாதிப் படிநிலை வரிசைக்கும் பெண்ணடிமைத்தனத்துக்கும் இடையே உள்ள நுணுக்கமான, ஆழமான உறவினை நன்றாகவே புரிந்து வைத்திருந்தார். அகமண முறைதான் சாதியமைப்பு தொடர்ந்து நீடிப்பதற்குக் காரணம் என்றார். தங்களது வகுப்பைச் சேர்ந்த பெண்கள், அந்நிய ஆண்களுடன் உறவு கொள்வதையும் மணமுடிப்பதையும் தடுப்பதற்காகத்தான் பார்ப்பனர்கள் விதவை மறுமணத்தைத் தடை செய்தனர். பார்ப்பன விதவைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப் பார்த்தனர்; அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்களது வீட்டுப் பெண்கள் வேற்று வகுப்பாருடன் உறவு கொள்வதைத் தடுக்கவே உடன்கட்டை ஏறும் பழக்கம் உருவாக்கப்பட்டது. இத்தகைய கொடூரமான சமூகச் செயல்பாடுகளுக்கு பெண்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமலிருக்க, அவர்கள் இளம் வயதிலேயே மணமுடிக்கப்பட்டதுடன், அவர்களுக்குக் கல்வி உரிமையும் மறுக்கப்பட்டது. இவ்வாறே பாபாசாகேப்பின் வாதம் விரிந்தது.

பின்னாளில் அரசியலமைப்பு அவையில் நடந்த விவாதங்களில் இந்து சட்டத் தொகுப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டியதன் தேவையைப் பற்றிப் பேசினார். இந்து சட்டங்கள் சரிவர தொகுக்கப்பட்டு மறு வரையறை செய்யப்பட்டாலொழிய, பெண்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதே அவரது எண்ணமாக இருந்தது. இத்தகைய சட்டத் தொகுப்பை உருவாக்கி, அதனை விளக்கி வாதம் புரிகையில் அவரது நிலைப்பாட்டுக்கு, பல பெண்கள் ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக, அன்று மக்கள் மன்றத்தில் அங்கம் வகித்தவர்கள் சட்டத் தொகுப்பினை வரவேற்றனர்; அவருடைய நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்து மதமும் சமுதாய ஏற்பாடுகளும் - சாதியையும் பெண் ஒடுக்குமுறையையும் கட்டிக் காப்பவையாக உள்ளதால், சட்ட மாற்றத்தின் மூலமாக மட்டுமே சாதி ஒடுக்குமுறையால் துன்புறுவோருக்கும் பெண்களுக்கும் - சமநீதியும் சமத்துவமும் சாத்தியப்படும் என்பது, அம்பேத்கரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.

Sharmila Rege
பெண்ணிய நோக்குடன்தான் டிசம்பர் 25 ஆம் தேதியன்று மநுஸ்மிருதியை அம்பேத்கர் கொளுத்தினார். இந்நாளை பெண்ணிய விழிப்புணர்வு நாளாகக் கொண்டாட வேண்டும் என்று தலித் பெண்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், அம்பேத்கரின் கருத்தியலும் சிந்தனையும் சாதித்தவற்றைக் காட்டிலும், அவரது அரசியல் ஆளுமையும் தலைமையும் நிறையவே சாதித்தன என்று சொல்லலாம்.

அம்பேத்கர் காட்டிய பாதையில் நடந்த பெண்கள் சிலரது வரலாறுகளைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்கு அண்மையில் ஏற்பட்டது. அப்பெண்களுடன் உரையாடும் போதும், அவர்களில் சிலரது சுயசரிதைகளைப் படிக்கும்போதுதான் அம்பேத்கர் வகுத்த மரபினை சுவீகரித்து அதனை வளப்படுத்தி, தமக்கேவுரிய பெண்ணியம் ஒன்றை இப்பெண்கள் இயற்றியுள்ளதை என்னால் உணர முடிந்தது. பெண்ணிய வட்டாரங்களில் இதுவரை பேசப்படாத மரபாக இது இருந்து வந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் பெண்ணிய அமைப்புகள், குறிப்பாக பெருநகரங்களில் காணப்படும் அமைப்புகள், சாதிக் கொடுமைகளை பிரச்சனைகளாக அடையாளப்படுத்தவில்லை; இத்தகைய அமைப்புகள் பாலின ஏற்றத்தாழ்வுகள், பெண்கள் சந்திக்கும் வன்முறை, இங்கு நிலவும் பாலியல் பண்பாடு முதலியவற்றை சாதியமைப்புடன் தொடர்புபடுத்திப் பார்க்கத் தவறிவிட்டன.

இதற்கான காரணங்கள் என்ன?

நிறைய காரணங்கள் உள்ளன. ஆனால், அவற்றைப் பற்றிப் பேசுவதற்கு முன் அம்பேத்கரிய மரபில் செயல்பட்ட பெண்களைப் பற்றி சில தகவல்களையும் கருத்துகளையும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இப்பெண்களில் பலர் இன்றும் உயிரோடிருக்கின்றனர். என்னுடைய நூலில் இவர்களுடைய வாழ்க்கையை சித்தரித்துள்ளேன். சித்தரித்துள்ளேன் என்று சொல்வதைக் காட்டிலும் அவர்கள் தங்களது வாழ்க்கையைப் பற்றிப் பதிவு செய்துள்ளவற்றை, அவர்களது நினைவோடைகளை வரலாற்றுச் சாட்சியங்களாக அடையாளப்படுத்தியுள்ளேன். சாதி ஒடுக்குமுறையும் பெண்ணடிமைத்தனமும் தனித்தனியே இயங்குபவை அல்ல; இரண்டும் இணைந்த நிலையில்தான் - நமது சமுதாய வாழ்க்கைக்குரிய உள்ளுரை உருவாகிறது என்பதை இந்த சாட்சியங்களிலிருந்து அறியலாம். எல்லா பெண்களையும் எல்லா நேரங்களிலும் ஒடுக்கும் சமுதாய அமைப்பு, கருத்தியல்கள் பற்றி பேசுவதைக் காட்டிலும் சில பெண்களுக்கு சில சலுகைகளை வழங்கியும், தலித் ஆண்களின் ஆணாதிக்கத்தை அங்கீகரித்தும் (தலித் பெண்கள் மீது ஏவப்படும் ஆதிக்கத்தை அங்கீகரித்தும்) இயங்கும் சாதி அமைப்புக்குரிய பெண்ணடிமைத்தனம் பற்றிப் பேசுவதே பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இந்த சாட்சியங்கள் தனிமனித வாழ்க்கைக் கதைகள் மட்டுமல்ல; வாழ்க்கை, வரலாறு பற்றிய விளக்கங்களாகவும் விரிவுரைகளாகவும் இவை உள்ளன. நம் அனைவருக்கும் பொதுவான, அதாவது நம் அனைவரது வாழ்க்கையையும் ஆட்கொண்டுள்ள வரலாற்றைப் புதிய கோணத்திலிருந்து புரிந்து கொள்ள, விமர்சிக்க இவை வழிவகுக்கின்றன. தலித் சமுதாயத்தின் வரலாறாகவும் இவை உள்ளன. அதே சமயம் தலித் மக்கள் சமூகமாகப் படும் கொடூரங்களை, அனுபவிக்கும் சோதனைகளை, நடத்தும் போராட்டங்களை இந்த சாட்சியங்கள் விமர்சிக்கவும் செய்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களது மத்தியிலும் உயிர் வாழும் ஒடுக்குமுறையை ஆண்கள் ஏவும் அதிகாரத்தைப் பற்றியும் இந்த சரிதைகள் சாட்சியம் உரைக்கின்றன. உயர் வகுப்புகளை சேர்ந்த பெண்ணியலாளரின் சொல்லாடல்களிலும் வரலாறுகளிலும், தலித் ஆண்களின் சரிதைகளிலும் எழுத்திலும் பேச்சிலும் மறைக்கப்பட்டு விட்ட, காணாமல் போய்விட்ட பெண்களின் கதைகள் இவை.

இந்தக் கதைகளை நான் மீளுருவாக்கம் செய்துள்ளேன். அவற்றை ஆங்கிலத்தில் வழங்கியுள்ளதுடன் குறிப்பிட்ட கதைக்கு (சரிதைக்கு) வலு சேர்க்கும், கருத்தை வளர்க்கும் உரையாடல்களையும் எழுத்துகளையும் மொழியாக்கம் செய்துள்ளேன் (மாயா பண்டிட் என்பவர் இந்தப் பணியை இணைந்து செய்துள்ளார்). அதாவது, நான் சந்தித்து உரையாடிய பெண்களின் கூற்றுகளைத் தொகுத்து வழங்கியுள்ளேன். சில இடங்களில் அவர்கள் சொன்னவற்றை அப்படியே மொழிபெயர்த்து தந்துள்ளேன். சில இடங்களில் ஏற்கனவே மராத்தியில் வெளிவந்துள்ள அவர்களது எழுத்துகளிலிருந்து சில பகுதிகளை தேர்ந்தெடுத்து மொழியாக்கம் செய்துள்ளோம். வீடு/குடும்பம், உணவு/பசி, சமுதாயம், சாதி, பண்பாடு, உழைப்பு/உழைப்பு விவரங்கள், பள்ளிக்கூடம், அவமானம்/வன்முறை, எதிர்ப்பு/போராட்டம் இந்தத் தலைப்புகளின் கீழ் கதைகளைத் தொகுத்துள்ளேன்.

இச்சரிதைகளை பேசியவர்கள், எழுதியவர்கள் குறித்துச் சொல்லுங்கள்...

எட்டுப் பெண்களின் வாழ்க்கைக் கதைகள் இதிலுள்ளன. இவற்றில் ஆறு பெண்கள் ‘மகர்' வகுப்பைச் சேர்ந்தவர்கள். இருவர் நாடோடி வகுப்புகளாகக் கருதப்படும் ‘கோபால்', ‘கோந்தாலி' வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். 1920களில் தொடங்கி தற்காலம் வரையிலான காலகட்டத்தைப் பற்றிய சாட்சியங்கள் இவை. இக்கதைகளை, சாட்சியங்களைப் படிப்போருக்கு உடனடியாகப் புலப்படும் விஷயங்கள் இவையாகத்தான் இருக்கும்.

* இப்பெண்கள் யாவரும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்; தீண்டாமையின் பாதிப்புகளை நேரடியாக அனுபவித்தவர்கள்.

* ஆங்கிலேயரது ஆட்சி, குறிப்பாக அவர்கள் நிறுவிய பள்ளிக்கூடங்கள், தலித்துகளுக்கு அரசுப் பணிகளில் இடம் வழங்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள்; தலித் குடும்பங்களில் சில தீண்டாமையின் கெடுபிடியிலிருந்து மீண்டும் ஒப்பீட்டளவில் சுதந்திரமாக வாழ இவையே வாய்ப்புகளை உருவாக்கித் தந்தன.

* சத்திய சோதக் மரபின் தாக்கத்தின் காரணமாகப் படித்து முன்னேற விரும்பிய தலித் பெண்களுக்கு தலித் அல்லாத சமூக செயல்பாட்டாளர்களில் சிலர் ஆதரவு நல்கினர்.

* இவை எல்லாவற்றையும்விட, பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்வும் முன்னுதாரணமும் தமது மக்களுக்கு அவர் விடுத்த அறைகூவல்களும் தலித் பெண்களின் வாழ்க்கையைப் பல நிலைகளில் பாதித்தன அவர்களை மனுஷிகளாக, சமூக ஜீவிகளாக வார்த்தெடுக்க உதவின.

அம்பேத்கரது ஆளுமையையும் சிந்தனையையும் பெண்கள் உணர்ந்த விதம் பற்றி சொல்லுங்கள்...

இதைப் பற்றி சொல்ல நிறையவே இருக்கிறது. ஆனால், ஓரிரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் தருகிறேன்.

சாந்தாபாய் கிருஷ்நாஜி காம்ப்ளெ என்பவர் கூறிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். 1942இல் அம்பேத்கர் கோலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுவதைக் கேட்க இவர் ரயிலேறி பயணம் செய்தாராம். பாபாசாகேப்பை பெண்கள் வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்ற போது இவரும் அங்கிருந்தார் (இவருக்கு அப்போது 19 வயது). ‘நீங்கள் நீடூழி வாழ வேண்டும்' என்று இவர் உணர்ச்சிவசப்பட்டு சொன்னவுடன பாபாசாகேப் கூறினாராம் : “குழந்தாய், எனக்கு எதற்கு நீண்ட வாழ்வு? என்னால் முடிந்த அளவுக்கு எனது தீண்டத்தகாத மக்களுக்காக உழைத்துவிட்டேன்.'' சாந்தாபாய் இதற்குப் பிறகு அவரைப் பார்க்கவில்லையாம். ஆனால், அன்று அவர் பேசிய பேச்சு, அவர் மனதில் அப்படியே உறைந்து போய்விட்டதாகக் கூறினார். அவர் மட்டுமல்ல, அவர் பேசுவதைக் கேட்க வந்த ஆயிர மாயிரம் மக்களும் அவரது பேச்சை அவ்வாறுதான் நெஞ்சில் நிறுத்தியிருப்பர் என்கிறார். அவர் பேசத் தொடங்கியவுடன் அத்தனை நிசப்தமாக ஆகிவிட்டதாம் கூட்டம் நடந்த வெளி. அவருடைய ஒவ்வொரு சொல் லையும் மக்கள் அப்படிக் கேட்டார்களாம். பெண்கள் தங்களை தாங்களே நொந்து கொண்டார்களாம் : “இப்படியொருவர் நமக்காக இருக்க, நாம் ஏன் கல்லையும் மண்ணையும் கும்பிட வேண்டும்?''

பேபி கோண்டியா காம்ப்ளெ என்பவரது அனுபவமும் இப்படித்தான் இருந்ததாகத் தெரிகிறது. 1930களில் நடந்த ஒரு கூட்டத்தை அவர் அருமையாக விவரித்துள்ளார். முழு நிலவு இரவாம். ஊர்ச்சாவடியில் படித்த ஆங்கிலம் தெரிந்த மகர் இளைஞர் பேசப் போவதாகக் கேள்விப்பட்டு, ஊர் மக்கள் அனைவரும் திரண்டிருந்தனராம். ஊர்த் திருவிழாவாக இருந்ததால், அன்று நல்ல கூட்டம். அம்பேத்கர் வந்ததும் அவரது வடிவத்தைப் பார்த்து மக்கள் அப்படியே அதிச யித்துப் போனார்களாம். வெள்ளைக்காரர் அணியும் உடுப்பில் இருந்தாராம். காரில் வந்து இறங்கினாராம். வந்து இறங்கியதும் பேசத் தொடங்கி விட்டாராம். கஷ்டப்பட்டு உழைத்தும் கடவுள் உங்களுக்கு என்ன வைத்துள்ளார்? உங்கள் நலத்தில் அக்கறை காட்டுகிறாரா? உங்களுக்கு அவரால் எதையும் செய்ய முடியா விட்டால், அவருக்காக நீங்கள் ஏன் இத்தனை பிராயத்தனங்களை செய்ய வேண்டும் என்று கேள்வி மழை பொழிந்தாராம்.

குறிப்பாக, பெண்களிடம் பேசினாராம். சாதிக்குரிய வேலையை செய்யாதீர்கள்; சாதி அடையாளத்தைக் காட்டும் வகையில் சேலையை அணியாமல் பிறரைப் போல் அணிந்து கொள்ளுங்கள்; விட்டெறியப்படும் மாட்டுக்கறியை உண்ணாதீர்கள்; சுகாதாரப் பணிகளை செய்யாமல் இருங்கள், அப்போதுதான் ஊருக்கு உங்கள் அருமை புரியும். பிள்ளை பெறும் உங்களுக்கு பிறப்பில் தாழ்வுயர்வு இல்லை என்று தெரியும். சாதி இழிவை நீக்குவதும் சாதிக் கட்டுப்பாடு களை உடைப்பதும் உங்கள் கையில்தான் உள்ளது. இவரது பேச்சைக் கேட்டவுடன் தனது சித்தி உடனடியாக மனம் மாறியதாக பேபி காம்ப்ளெ குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல நிறைய கதைகள் உள்ளன. அம்பேத்கரை தங்களுக்குரியவராக, தோழராக, தலைவராக, ஆசானாக, தந்தையாக பெண்கள் வரித்துக் கொண்டனர். அவரைப் பற்றிப் பாடல்களை எழுதினர்; நாடகங்கள் இயற்றினர். பூனா ஒப்பந்தம் தொடர்பாக பெண்கள் இயற்றியுள்ள இசைப்பாட்டில் கஸ்தூரிபா அம்மையார் அம்பேத்கரை சந்தித்து கணவர் உயிருக்கு மன்றாடியதாகவும், இதனால்தான் அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது. அம்பேத்கரது ஆளுமை, பெண்கள் மனதை எப்படியெப்படி எல்லாம் ஆட்கொண்டிருந்தது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

அம்பேத்கரின் பெண்ணிய சிந்தனையை நீங்கள் மிக அருமையாக உங்கள் நூலில் விளக்கியுள்ளீர்கள். அதன் சாரத்தைக் கூற முடியுமா?

பெண்கள், குறிப்பாக தலித் பெண்கள் தன்மானத்துடன் சாதி இழிவை மறுப்பதை அம்பேத்கர் முக்கியமாகக் கருதினார். பெண்கள்தான் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார். பிள்ளைகளைப் படிக்க அனுப்ப வேண்டும், கணவர், குடும்பம் என்றில்லாமல் ஒட்டுமொத்த சமுதாய நிவாரணத்துக்காகவும் உழைக்க முன்வர வேண்டும் என்றார். பல பெண்கள் இவரது சொல்லுக்கு இணங்கி, பல்வேறு நிலைகளில் சமுதாயத்துக்காகப் பணிபுரிந்தனர். கல்லூரிகளில் மாணவர் விடுதிகள், பள்ளிக்கூடங்கள், நூலகங்கள், மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களைத் தாமே தொடங்கி நடத்தினர். தாம்பத்திய வாழ்வை மய்யப்படுத்தாமல் சமுதாயத்தை உய்விக்க, இவர்கள் பணிபுரிய முன்வந்ததை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். பெண்ணடிமைத்தனம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவதற்குக் காரணமாக உள்ள தாம்பத்தியத்தை விமர்சிக்கும் தைரியத்தையும் தமக்கென ஓர் அரசியல், சமுதாய அடையாளத்தை பெண்கள் தருவித்துக் கொள்ளத் தேவையான தன்னம்பிக் கையையும் அம்பேத்கர்தான் அல்லலுற்ற தலித் பெண்களுக்கு வழங்கினார்.

இப்படியிருந்தும் அம்பேத்கரது சிந்தனை, பெண்ணிய வட்டாரங்களில் பேசப்படாதது ஏன்?

அவரது பெண்ணிய சிந்தனை மட்டுமல்ல, சாதி குறித்த அவரது ஆழமான அறிவார்ந்த புரிதலுமே இன்றும் பலரை சென்றடையவில்லை. சென்றடையவில்லை என்றால், அறிவு வட்டாரங்களிலும் கல்விசார் வட்டாரங்களிலும் அவரது சிந்தனை விவாதிக்கப்படுவதில்லை. பெண்ணிய வட்டாரங்களைப் பொறுத்தவரை பம்பாய், தில்லி போன்ற நகரங்களில் செயல்படும் அமைப்புகள் ‘பெண்கள் பிரச்சனைகள்' என்று பொதுவாக மட்டுமே பேசுகின்றன. சாதி அமைப்பு, பெண்களது பிரச்சனைகளை எந்தெந்த வகைகளில் வடிவமைத்துள்ளது; ‘உயர்' வகுப்புப் பெண்களின் நிலைப்பாட்டினை எவ்வாறு ‘பொது'வான பெண்ணிய நிலைப்பாடாக நிலைநிறுத்த - அவர்களது சாதி தகுதியும், அது ஈன்றளிக்கும் சலுகைகளும் காரணங்களாக இருந்துள்ளன என்பதை இந்தப் பெண்கள் முழுமையாக உணர்ந்ததற்கான சான்றுகளில்லை.

மிஞ்சி மிஞ்சிப் போனால் ‘தலித் பெண்களும் பேசட்டும்' என்றும் ‘அவர்களது பிரச்சனையை நாம் எப்படிப் பேசுவது என்றுதான் இவர்களால் கூற முடிகிறதே தவிர, வேறு நிலையிலிருந்து சிந்திக்க முடியவில்லை. தலித் பெண்ணியப் பார்வையைப் ‘பொது'வான பெண்ணியப் பார்வையாக ஆக்குவதில் தமக்குள்ள பொறுப்பைப் பற்றி இவர்கள் பேசுவதில்லை. தலித் பெண்களிடமிருந்து தாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை இன்னமும் இவர்களில் பலர் ஏற்க மறுக்கின்றனர்.

கல்வி வட்டாரங்களைப் பொறுத்தவரை, குறிப்பாக சமூகவியல் போன்ற துறைகளைப் பொறுத்தவரை, சாதி பற்றிப் பேசுவதென்பதே பிரச்சனையாக உள்ளது. ஒன்று, சாதி என்பது கிராமப்புறங்களில் மட்டும் காணப்படுகிறது. தீட்டு, தீண்டாமை சார்ந்த விஷயம் என்ற ரீதியில் பேசுகிறார்கள்; அல்லது தேசம், வர்க்கம் என்று வந்துவிட்ட பிறகு சாதி அடையாளம் என்பது முக்கியமற்றதாக ஆகிவிட்டது என்கிறார்கள்; அல்லது சாதி தொடர்பான விஷயங்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போல் அரசியல் வெகுமதியுடைய விஷயங்களாகக் கருதப்படுவதில்லை. சமகாலத்தில் சாதி அரசியல் வந்த பிறகும்கூட, சாதியமைப்பின் உள்ளார்ந்த அநீதி குறித்து அரசியல் களத்தில் விறுவிறுப்பான விவாதங்கள் போதிய அளவுக்கு நடைபெறவில்லை.

இன்று மட்டுமல்ல அன்றும்கூட, சாதி உள்ளிட்ட சமுதாயப் பிரச்சனைகளை முன்னிறுத்திய அம்பேத்கரையும் பெரியாரையும் ‘தேசத் துரோகி'களாகவே பலர் கருதினர். இன்றோ சாதி பற்றி கேள்வி கேட்போரை ‘சாதிய வெறியர்'கள் என்கிறார்கள், நவீன வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள், அறிவாற்றல் இல்லாதவர்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். பொது வாழ்க்கையில் தகுதியும், நடுநிலைமையும் நிலவுவதை தாம் விரும்புவதாகக் கூறும் இவர்கள், வீட்டுக்குள், குடும்பத்துக்குள் அடைத்து வைக்க வேண்டிய விஷயமாக சாதியைப் பார்க்கிறார்கள். பொது வாழ்க்கையில், கல்வியில், பணியிடங்களில், தனியார் துறையில், பெரிய நகரங்களில் சாதியமைப்பு தன்னைப் புனரமைத்துக் கொண்டுள்ளதை இவர்கள் காண மறுக்கின்றனர்.

இத்தகைய பார்வையை விமர்சிக்கவல்ல வாதங்களை உள்ளடக்கிய அம்பேத்கர், புலெ, பெரியார் போன்றோரது நூல்களை சமூகவியல் பாடத்தில் இவர்கள் சேர்ப்பதில்லை. பார்ப்பனரல்லாத, தலித் இயக்கங்கள் உருவாக்கியுள்ள அறிவு மரபை இவர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. பார்ப்பனரல்லாத, தலித் அறிவொளி மரபு ஒன்றுள்ளது. அது, நவீன இந்திய சமூகத்தை உருவாக்க வேறுபட்ட திட்டங்களைக் கொண்டிருந்தது, சமமான, நீதியான சமுதாயத்தைப் பற்றி ஆழமான, பகுத்தறிவார்ந்த பார்வையை அம்மரபு கொண்டிருந்ததை பல கல்விசார் அறிவாளிகள் ஏற்க மறுக்கின்றனர். தலித் பெண்ணியம், அம்பேத்கர் மரபு போன்றவற்றை கல்விப்பாடமாக்க வேண்டியதை எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். ஒப்புக்கு செய்யாமல் இந்த மரபை ‘பொது' அறிவாக ஆக்குவதில் ஒரு சிலர் இன்று முனைந்துள்ளோம்.
Pin It