சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவின் கீழ் திருவாங்கூர் சமஸ் தானத்தைச் சேர்ந்த நாகர்கோவிலில் டிசம்பர் 27, 28-ல் கூடிய அகில திருவாங்கூர் சமுதாயச் சீர்திருத்த மகாநாட்டின் சுருக்கமான நடவடிக்கை களை மற்றோரிடத்தில் வெளியிட்டிருக்கிறோம்.
இம்மகாநாட்டைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் முன், நாம் அதற்குப் போகக் கூடாமல் போனதற்காக நமது சமாதானத்தைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.
இம் மகா நாட்டை நடத்துவதற்காக மாதக் கணக்காய் பெருமுயற்சி எடுத்து ஏற்பாடு செய்து வந்த திருவாளர் பி. சிதம்பரம் பி. ஏ. பி. எல். அவர்களின் விருப்பத்திற்கிணங்க நாமும் வருவதாக ஒப்புக் கொண்டதோடு நமது சவுகரியத்தை உத்தேசித்தே மகாநாடும் 2, 3 தடவை ஒத்திவைக்கப்பட்டதாயினும், திடீரென்று எதிர்பாராமல் மலேயா நாட்டிலிருக்கும் நமது சகோதரர்கள் பெருஞ்செலவில் ஒரு மகாநாட்டை நடத்துவதாக ஏற்பாடு செய்து கொண்டதோடு, நமது சுற்றுப் பிரயாணத்தைப் பற்றிய நீண்ட அறிக்கையையும் வெளியிட்டு விட்டு, நமக்கு அவசரமாக உடனே புறப்படுமாறு தந்திச் செய்தி அனுப்பி விட்டதால், தள்ளமுடியாத நிலையில் நாம் அவர்களைத் திருப்தி செய்யும் பொருட்டும், நமது திருவாங்கூர் சகோதர சகோதரிகளுக்கு நமது நிலைமையைச் சொல்லிக் கொள்ளலாமென்ற எண்ணத்தினாலும் உடனே புறப்பட்டுப் போகும்படி நேர்ந்து விட்டது. ஆகையால், நாகர்கோவில் மகா நாட்டில் நாம் கலந்து கொள்ள வேண்டிய நல்ல சந்தர்ப்பத்தை இழக்க நேர்ந்தமைக்காக மிகுதியும் வருந்துகிறோம்.
நிற்க, நாகர்கோவிலில் நடந்த வரவேற்புத் தலைவர் உபந்நியாசத்தையும் நடவடிக்கைகளையும் நாம் படித்துப் பார்த்த வரையில் இந்தியாவில், சிறப்பாக இந்து சமூகம் என்பதில் ஏதாவது சிறிது சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்கிற ஆசை உள்ளவர்களுக்கு முதலாவதாக வேலை செய்ய வேண்டிய இடம் சுதேச சமஸ்தானங்களே ஒழிய பிரிட்டிஷ் அரசாங்கமுள்ள இடமல்ல என்றும், அதிலும் முதல் முதலாகச் செய்ய வேண்டிய இடம் சுவாமி விவேகா நந்தரால் “பைத்தியக்காரர் நாடு” என்று சொல்லப்பட்ட மலையாள ராஜ்ஜியமா கிய திருவாங்கூர் சமஸ்தானமென்பதே நமது அபிப்பிராயமாகும்.
ஏனெனில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடக்கும் மனிதத் தன்மையற்ற சமூகக் கொடுமைகளைப் பற்றியும், அவ்விடத்திய ராஜாங்கம் எவ்விதம் “ராம ராஜ்யமாகவே” இன்றும் இருந்து வருகிறது என்பதைப் பற்றியும், பார்ப்பன ஆதிக்கம் எவ்வளவு தூரம் அரசாங்க உதவியோடு செலுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பற்றியும் நாம் அடிக்கடி எழுதி வந்திருப்பதுடன் மகாநாட்டு நடவடிக்கைகளாலும் வாசகர்கள் அறிந்திருக்கலாம்.
இந்த நிலையில் இப்போது நடந்த மகாநாடானது எவ்வளவு முக்கியமும் அவசியமுமானது என்பதை நாம் அதிகமாய் வலியுறுத்த வேண்டியதில்லை என்றே நினைக்கிறோம்.
மேற்படி மகாநாட்டின் நடவடிக்கைகளில் முதலாவதாக வரவேற்புத் தலைவர் திருவாளர் பி. சிதம்பரம் அவர்களின் பிரசங்கத்தைப் பற்றி சிறிது எடுத்துக் கூறவேண்டியது அவசியமாகத் தோன்றுகிறது. அவர்களது பிரசங்கத்தினின்றும் இதுவரையில் பலர் அறிந்திருக்க முடியாத சில ரகசியங்களும் சில உண்மைகளும் வெளியாகியிருக்கின்றன.
நாகரீக உலகம் ஏளனம் செய்யக் கூடியதும், பகுத்தறிவுடைய எந்த மனிதனும் வெறுக்கக் கூடியதுமான பல செய்திகளுக்கு திருவாங்கூர் சமஸ்தானம் காரணமாக இருக்கிறது என்பது அப்பிரசங்கத்திலிருந்து அறியக் கிடக்கின்றது.
உதாரணமாக, பெண்கள் தங்கள் அரையின் மேல்பாகத்தைத் துணியால் மூடிக் கொள்வதைப் பற்றி எழுதியிருப்பதைக் கவனித்து வாசிப்போருக்கு, திருவாங்கூர் சமஸ்தானத்தின் சமூக ஊழல்கள் நன்கு விளங்காமற் போகாது. அதாவது, மேற்குக் கரையிலுள்ள பெண்கள் தங்கள் அரைக்கு மேற் பாகத்தைத் துணியால் மூடிக்கொள்வது முகமதிய நாகரீகத்தில் ஏற்பட்டதென்று கூறப்படுகின்றது.
திருவனந்தபுரத்தைக் கைப்பற்றிய ஒரு முஸ்லிம் சர்தார் ஆங்குள்ள ‘சூத்திரப் பெண்கள் ஆண்களைப் போலவே உடுத்திக் கொள்ள வேண்டுமென்றும் வட மலையாளத்துப் பெண்களைப் போல் மேலாடையின்றி வெளிச் செல்லலாகாதென்றும் கட்டளை விதித்தார். “சூத்திரர் களில்” உயர் வகுப்புப் பெண்கள் தங்கள் மேற் பாகத்தை அன்று முதல் ஆடையால் மறைத்துக்கொள்ளும் வழக்கத்தைக் கைக் கொண்டனர் என்று சரித்திரம் கூறுகிறது.
கீழ்த்தர “சூத்திரர்கள்” தங்கள் மேற் பாகத்தை மூடிச் செல்லல் கூடாது; மேற் பாகத்தைத் துணிகொண்டு மறைத்துக் கொள்ள தங்களுக்கு மாத்திரம்தான் உரிமையுண்டு என்று உயர்தர “சூத்திரர்கள்” வற்புறுத்தி வந்தார்கள். மேலாடையால் பல சச்சரவுகள் நேர்ந்தன. தென் திருவிதாங்கூரில் லண்டன் கிறிஸ்தவப் பிரசாரச் சங்கம் ஒன்று வேலை செய்து வந்து, நாஞ்சில் நாட்டில் தனது மதத்தைப் பரப்பி நிலை நாட்டியது நாடார் கிறிஸ்தவப் பெண்கள் உயர்தர “சூத்திரப்” பெண்களைப் போல் மேலாடை அணியத் துவங்கிவிட்டார்கள்.
இதனைக் கண்ட உயர்தர வகுப்பைச் சார்ந்த நாயர்கட்கும் மற்ற “சூத்திரர்” கட்கும் கோபம் உதித்தது. அவர்கள் பலாத்கா ரத்தை பிரயோகிக்கலாயினர். “சூத்திரர்கள்” தெருவில் வரும் மேலாடை தரித்த நாடார் பெண்டிரைத் தாக்கினர். 1858-ல் இச்சச்சரவு மிகவும் முதிர்ந்து விட்டது.
திரு. சிதம்பரம் அவர்கள் பின்னும் விளக்கமாகக் கூறுகிறதாவது:-
“இதன் பேரில்தான் திவான் சர். டி. மாதவராவ் பழக்க வழக்கத்தை மீறக்கூடாதென்றும், இதில் மாறுதல் விரும்பினால் சர்க்காருக்கு விண்ணப்பம் செய்து கொண்டு சர்க்காரால் இதற்கெனச் சட்டச் சீர்திருத்தம் செய்து கொண்ட பிறகே அவ்வாறு செய்தல் வேண்டுமென்றும் உத்தரவு போட்டு விட்டார்”.
இவ்வுத்திரவைக் கிறிஸ்தவப் பிரசாரகர் நியாயமான தென்று கருதவில்லை. திவான் உயர்தர வகுப்பாரை வெளிப்படையாக ஆதரிப்பதாகவே கருதினர். பிறகு, முதலாக மகாராஜாவுக்கும் பின்னர் சென்னை அரசாங்கத்திற்கும் இக்கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் மனு செய்து கொண்டனர். இதன் பேரில் அக்காலத்தில் சென்னை கவர்னராயிருந்த சர். சார்லஸ் டிரவிலின் என்பவர் பிரிட்டிஷ் ஸ்தானீகருக்கு பின் வருமாறு எழுதினார் :-
“உண்மை, நியாயம், மனித அபிமானம் எல்லாமுமே இதில் நம் புரமிருக்கின்றன. இச்சமயம் நாம் உறுதியாக நிற்காவிட்டால் நாகரீக உலகம் நம்மைத் தூற்றும். பிரிட்டிஷ் குடிகட்கும் திருவிதாங்கூரில் எல்லாவிதமான சுதந்திரங்களும் அளிக்கப்படும் என்னும் மகாராஜாவின் விளம்பரத்தைக் கொண்டே ஒரு வகுப்பினரை மிகவும் கொடுமையாக நடத்த சூழ்ச்சி செய்யப்படுகிறது.
நீர் இந்தக் காலத்திற்கு இது ஏற்றதல்ல வென்றும் ஒரு அறிவுடைய சிற்றரசர் இவ்வாறு செய்தல் கூடாதென்றும் அவருக்கு எடுத்துரைப்பீராக”.
இதன் பேரில் ஸ்தானீகர் மகாராஜாவை வற்புறுத்தி, மகாராஜா மீண்டும் ஓர் விளம்பரம் மூலமாக மேலாடை தரித்துக் கொள்ளுவதில் எல்லோருக்கும் சுயேச்சை உண்டென்றும் ஆனால் கீழ்த்தர வகுப்பினர் உயர்தரப் பெண் களைப் போலவே மேலாடை தரிக்கலாகாது என்றும், பிரசுரம் செய்தார். இதுவே இன்று வரை திருவிதாங்கூரில் சட்டம் என்று நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இவ்விதமாக, உடையணிவதில் கூட சாதி உயர்வு தாழ்வு பாராட்டி வரும் திருவாங்கூர் சமஸ்தானத்தை சுவாமி விவேகானந்தர் “பைத்தியக்காரர் வாழும் நாடு” என்று சொன்னதில் ஏதாவது ஆச்சரியமிருக்கிறதா என்று கேட்கிறோம்? இதர இடங்களில் இருப்பதைப் போலவே, திருவாங்கூரிலும் பார்ப்பனர்களையன்றி சாதி இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களும் தாழ்த்தப்பட்ட மக்களிடத்தில் எவ்வளவு கொடுமையாகவும் மன இரக்கமின்றியும் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.
இந்து மதத்தில் உண்மையாக அக்கரை இருப்பவர்களோ, அல்லது இந்துக்களின் ஒற்றுமையிலும் முன்னேற்றத்திலும் கவலையிருப் பவர்களோ, அல்லது “இந்து மதத்தை”க் காப்பாற்றுவதற்காக இருப்பதாகச் சொல்லப்படும் கொள்ளைக் கூட்டத்தாரைப் போன்ற சங்கராச்சாரிகளோ, ஜீயர்களோ, மடாதிபதிகளோ, பண்டார சன்னிதிகளோ தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் மனிதத் தன்மை இல்லாமல் கொடுமையாகவும் காட்டு மிராண்டித் தன்மையாகவும் நடந்து கொள்கிறார்களேயன்றி சிறிதாவது மனிதத் தன்மையோடு நடக்கிறார்களாவென்று நமது வாசகர்களைக் கேட்கிறோம்.
இத்தகைய தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வளவோ ஆயிர வருஷங்களாக எவ்வளவோ கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு “இந்து” மதத்திலிருந்து வந்துங்கூட, கிறிஸ்தவ மிஷனெரிகள் என்பவர்களும் மகம்மதியர்களும் இல்லாவிட்டால் இப்போதிருக்கும் இந்த நிலைமையைக் கூட அடைந்திருக்க மாட்டார்களென்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் கிறிஸ்தவ மதத்திலுங்கூட சாதி வித்தியாசம் பாராட்டப்பட்டு வருகிறது ஒரு அளவுக்கு உண்மையேயாயினும், “இந்து” மதத்திலிருக்கும் கொடுமையிலிருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களை விடுவித்து அவர்களையும் மனிதர்களாக ஆக்கிவிட்ட பெருமை முற்றிலும் கிறிஸ்த வர்களையும் மகமதியர்களையுமே சாருமென்பதை ஒருவரும் ஆட்சேபிக்க முடியாது.
இது சம்பந்தமாகச் சரித்திரக்காரர்கள் எழுதி வைத்திருக்கும் பல உண்மைகளையும் எப்படி திருவாங்கூர் சமஸ்தானம் முற்றிலும் பார்ப்பனர் களுடைய வாழ்விற்காகவே இருந்து வருகிறது என்பதையும் திருவாளர் சிதம்பரம் அவர்கள் புள்ளி விவரங்களோடு நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
பிறகு இரண்டாவதாக மகாநாட்டுத் தலைவர் சொற்பெருக்கிலும் சில அரிய விஷயங்கள் வெளியாகி இருக்கின்றன. சுயமரியாதை இயக்கம் என்ன வென்பதையும் அதன் தத்துவம், இலட்சியம் முதலியவைகளைப் பற்றியும் எப்படி இது முற்றிலும் ஒரு புதிய இயக்கம் அல்லவென்பதைப் பற்றியும், எப்படி பார்ப்பனர்கள் எவ்வகையான சீர்திருத்தத்திற்கும் எந்தக் காலத்திலும் எதிரிகளாகவே இருந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் உண்மையான “கடவுள்” “உண்மையான கோவில்” இவைகள் எது என்பதைப்பற்றியும், சுயமரியாதை இயக்கம் என்பது முற்றிலும் பகுத்தறிவு இயக்கமே தவிர வேறல்ல என்பதைப் பற்றியும், சமூகக் கொடுமை நிறைந்து சாதி வேற்றுமையும் தீண்டாமையும் தலைவிரித்தாடும் திருவாங்கூர் ராஜ்யத்திற்கு, எப்படி சுயமரியாதை இயக்கம் மிகவும் அவசியம் என்பதைப் பற்றியும் தலைவர் திரு. திவான்பகதூர் எம். கிருஷ்ணசாமி அவர்கள் வெகு தெளிவாகவும் சுருக்க மாகவும் எடுத்துக் காண்பித்திருக்கிறார்.
கடைசியாக மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றியும் நமது அபிப்பிராயத்தைச் சொல்ல விரும்புகிறோம். தீண்டாமையை ஒழிப்பதற்காக கோவில் முதலிய பொது ஸ்தாபனங்களில் இந்துக்களெனப் படுவோர்கள் எல்லாரையும் அனுமதிக்கப்பட வேண்டியதற்காக பொது ஜன அபிப்பிராயத்தைப் பலப்படுத்துவதன் பொருட்டு பல பெரியோர்கள் சேர்ந்த ஒரு கமிட்டி ஏற்படுத்தியிருப்பதுடன் அதையே அரசாங்கம் மூலமாய் அமுலுக்குக் கொண்டு வருவதற்காகத் திருவாங்கூர் சட்டசபையிலும் ஒரு மசோதாக் கொண்டு வருவதாகத் தீர்மானித்திருப்பதை நாம் பெரிதும் போற்றுகின்றோம்.
எப்படி, பெண்களின் கல்யாண வயதை உயர்த்துவதற் காகப் பல வருஷங்களாக, பல பெரியோர்கள் முயற்சி செய்தும் அது சமயத் தில் சட்டமாகச் செய்யப்பட்ட பின்பே அது நடைமுறையில் வருவதற்கு மார்க்கம் ஏற்பட்டிருக்கிறதோ அதுபோலவே, தீண்டப்படாதார் விஷயத்தி லும் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் பல சீர்திருத்தக்காரர்கள் முயற்சி செய்தும் இன்று வரை ஒரு பலனையும் அளித்ததாக நாம் பார்க்க முடிய வில்லையாதலால் அது சம்மந்தமாக உடனே சட்டம் செய்தாலன்றி பார்ப்பனர்களுக்கும் ஜாதி இந்துக்களுக்கும் சற்றாவது இரக்க புத்தியோ நல்லறிவோ வராதென்று உறுதியாய் கூறுவோம்.
தவிர, குற்றங்களுக்கு தண்டனை விதிக்கும் பீனல் கோடில் கொலைக் குற்றம் செய்தால் மற்றவர்களைத் தண்டிப்பது போலவே பார்ப்பனர்களையும் தண்டிக்க வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், பார்ப்பனர்கள் யாரைக் கொன்றாலும் எத்தனைப் பேர் களைக் கொன்றாலும் மற்றவர்களைப் போல் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்பதாக இப்போது திருவாங்கூரில் சட்டமிருக்கின்றது.
ஏனெனில் மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளபடி திருவாங்கூர் ராஜ்யம் அரசாளப்படுவதால் இம்மாதிரியான சட்டம் அங்கு இருக்க வேண்டியிருக் கிறது. இதனால் திருவாங்கூரில் பார்ப்பனர்கள் யாரைக் கொலை செய்தாலும் செய்யலாம். ஆனதால் அம்மாதிரி இனி நடவாமல் இருக்கும்படி கொலைக் குற்றம் செய்தால் பார்ப்பனராயிருந்தாலும் மற்றவர்களுக்கு விதிப்பது போல மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.
இது சுயமரியாதையை உத்தேசித்து அவசியம் செய்து தீர வேண்டியதாகும். தவிர பார்ப்பனர்களுக்கு மாத்திரம் சாப்பாடு போடவும் முறை ஜெபம் (அரச ருக்கு பிராமணனைக் கொன்ற தோஷம் தீர என்று) செய்யவும், திருவாங்கூர் ராஜ்யத்தின் பணத்தை செலவழிக்கக் கூடாது என்கின்ற தீர்மானம் மற்றெல்லாவற்றையும் விட முக்கியமான தீர்மானமாகும்.
ஏனெனில், இதே ராஜாங்கத்தில் இரண்டு நாளைக்கு ஒரு வேளை கஞ்சி இல்லாமலும் தொழில் இல்லாமலும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடி மடியவும், நாட்டை விட்டுக் கூலிகளாக கடல்கடந்து ஓடவுமானக் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது பார்ப்பான் என்று பிறந்தவர்களுக்கெல்லாம் தினப்படி அரசாங்கப் பணத்தில் மூன்று வேளை வெட்டிச் சாப்பாடும் ஐம்பத்தாறு நாளில் எட்டு லட்ச ரூபாய் பாழாகும்படியான முறை ஜெபமும் (“வைதீகச் சடங்கும்”) ஒரு அரசாங்கம் செய்வதென்றால் அது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமும் முட்டாள்தனமுமான காரியமுமாய் இருக்கும் என்பதை வாசகர்களே யூகித்துக் கொள்ளலாம்.
ஆகவே திருவாங்கூரில் கூடிய சீர்திருத்த மகாநாடானது மிகவும் அவசியமும் முக்கியமுமானதென்பதைப் பற்றியும் அது மிகவும் அவசிய மான தீர்மானங்களைச் செய்தது பாராட்டுதற்குரியது என்பதும் மகாநாட்டின் வேகத்தை அநுசரித்து இப்போது அங்கு ஏற்பட்டிருக்கும் கோவில் பகிஷ்கார நடவடிக்கையாலும் தெரிந்து கொள்ளலாம்.
கடைசியாக, இவ்வளவுக்கும் காரணமாயிருந்தது உயர்திருவாளர் பி. சிதம்பரம் அவர்களுடையவும் அவர்களது உண்மை நண்பர்களுடையவும் முயற்சியும் ஊக்கமும் என்பது நாம் சொல்லாமலே விளங்கும்.
(குடி அரசு - தலையங்கம் - 19.01.1930)