பாலியல் ரீதியான குற்றங்கள் அன்றாடம் அரங்கேறுவதைப் பார்க்கிறோம். அப்படி மீண்டும் மிகக் கொடூரமான தாக்குதலுக்குத் தமிழாட்டில் இரு பெண் குழந்தைகள் உள்ளாகியிருப்பதை எண்ணிப் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. பெண் விடுதலையில் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாட்டில் இந்நிலை தொடர்வது நாம் மேற்கொள்ள வேண்டிய பரப்புரையை, விழிப்புணர்வை இன்னும் பன்மடங்கு வீரியமாகக் கொண்டு செல்ல வேண்டியதை உணர்த்துகிறது.

sexual attack on girlசேலம் ஆத்தூர் அருகே இராஜலட்சுமி என்கிற 13 வயதுக் குழந்தைக்கு தினேஷ் என்கிற நபர், பாலியல் தொல்லைகள் கொடுத்ததோடு, இணங்க மறுத்த அந்தக் குழந்தையை வெட்டிக் கொன்றிருப்பது காட்டுமிராண்டி வாழ்க்கையையே நம் கண்முன் கொண்டு வருகிறது. குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பது அதிகரித்து வருவது மனிதநேயம் என்பதாக ஒன்றிருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்புகிறது.

அதே போல் திருச்சி அருகே ஒரு பெண் குழந்தையைக் கட்டி வைத்து, நிர்வாணப்படுத்தி நான்கு அய்ந்து பேர் சேர்ந்து தொடர்ந்து ஆறு மாத காலமாகப் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதும் நாம் வாழும் சமூகம் நாகரிகமான சமூகமாக மாற இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படுமோ என்றே மலைக்க வைக்கிறது.

ஒரு பெண்ணின் உடல் போகப் பொருளாகவும், யார் வேண்டுமானாலும் அதற்கு உரிமை கொண்டாடலாம் என்கிற மனப்போக்கிற்கு உரியதாகவும், மதம் என்ற பெயரில் மக்களைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது பார்ப்பனியம்.

பெண்களையும், பெண்குழந்தைகளையும் பாதுகாப்பாக இருக்க வற்புறுத்துவதைவிட, ஆண் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டிய வழிமுறைகளையே நாம் பெற்றோர்களுக்கும், சமூகத்திற்கும் பரப்புரை செய்ய வேண்டியிருக்கிறது. “அடிடா அவள, வெட்ரா அவள” என்கிற பாடல் வரிகளை இரசிக்கும் சமூகத்தில் வளரும் ஆண் குழந்தைகள் ஆபத்தானவர்களாக உருவாக்கப்படுகிறார்கள். “பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழிய வேண்டும்” -என்றார் தந்தை பெரியார்.

இனி ஒரு இராஜலட்சுமியின் நிலை இங்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்றே மனம் பதறுகிறது. சமூகத்தின் அனைத்துத் துறையில் இருப்பவர்களும், குறிப்பாக மக்களோடு எப்போதும் தொடர்பில் இருக்கும் ஊடகம், கலைத்துறை போன்ற அமைப்புகளும், பாலியல் கொடுமைகள் மீதான உரையாடலை மக்களிடம் தெளிவான முறையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

அடைத்துவிடப்படக் கூடாது பெண்கள் வீட்டிற்குள், - ஆண் ஆதிக்ககத்தை உடைத்து விடுபட வேண்டும்.

Pin It