ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், 1920ஆம் ஆண்டு சென்னை மாகாணச் சட்டசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று, நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை அமைக்கப்பட்டது. அமைச்சரவையின் முதலமைச்சராக சுப்பராயலு ரெட்டியாரும், இரண்டாவது அமைச்சராக இராமராய நிங்காரும் (பானகல் அரசர்) பதவியேற்றுக் கொண்டனர். அடுத்த ஆண்டில் (1921), சுப்பராயலு ரெட்டியார் உடல்நலக் குறைவினால் மறைந்த பின்னர், பானகல் அரசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று வரை, தமிழகம் சமூக நீதிப் பாதையில் அடைந்துள்ள வளர்ச்சிக்கான அடித்தளம், அந்த அமைச்சரவையில்தான் அமைக்கப்பட்டது.

jusctice party orders 11921ஆம் ஆண்டு, அனைத்துச் சமூகத்தினருக்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதற்கான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணை பிறப்பிக்கப்பட்டது. எனினும், பார்ப்பன- ஆங்கில அதிகார வர்க்கத்தின் கைவரிசை இருந்ததால் அவ்வாணை முடக்கி வைக்கப்பட்டது. (பின்னர் நீதிக் கட்சியைச் சேர்ந்த சுப்பராயன் அமைச்சரவையில் எஸ். முத்தையா அமைச்சராக இருந்தபோது, எல்லா வகுப்பினருக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் அரசுப் பணிகளைப் பங்கிட்டு அளிக்கும் ஆணை (G.O. Ms. No. 1071 / Public, dated. 04.11.1927.) வெளியிடப்பட்டது).

இன்று உலகின் முன்னேறிய நாடுகளாக  அறியப்படுபவை தங்கள் நாட்டுப் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான வாக்குரிமையை அளிப்பதற்கு முன்பாகவே, 1921-ஆம் ஆண்டு நீதிக்கட்சி அரசால் சென்னை மாகாணத்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

பெரும்பாலான அரசுக் கல்லூரிகளின் பொறுப்பு பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்குக் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையே இருந்து வந்தது. அரசுப் பணிகளில் மட்டும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பார்ப்பனர் அல்லாத மக்களுக்குப் பங்களித்தால் போதாது. அரசுப் பணிகளில் நுழையும் தகுதியை உருவாக்கும் கல்வித் துறையிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும். இதற்காக நீதிக்கட்சி அமைச்சரவை ஒரு திட்டத்தைத் தயாரித்தது. அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் கல்லூரிகளில் இடம்பெற்று, படிக்க வாய்ப்பளிக்கும் திட்டமே அது. ஒவ்வொரு கல்லூரியிலும் குழுக்களை அமைத்து அதன் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். கல்லூரித் தலைவர்கள் தங்கள் விருப்பம் போல் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதற்குப் பின்னர்தான் பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்லூரியில் ஓரளவு இடம் கிடைக்கும் நிலை உருவாயிற்று.

jusctice party orders 2தாழ்த்தப்பட்ட மக்களைப் பஞ்சமர், பறையர் என்று அழைப்பதை விட்டு, ஆதி திராவிடர் என்றே அவர்களை அழைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது நீதிக்கட்சி அரசு.

கோயில்களில் நடைபெற்ற நிர்வாகச் சீர்கேடுகளை முடிவுக்குக் கொண்டு வர, அறநிலையத் துறைப் பாதுகாப்புச் சட்ட முன்வரைவு கொண்டுவரப்பட்டது. எனினும், இரண்டாவது அமைச்சரவையில்தான் (1923-26) அது நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறாகப் பல்வேறு சாதனைகளைச் செய்த நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை அமைக்கப்பட்ட நூறாவது ஆண்டு தொடங்கவிருப்பது இந்த நேரத்தில், நாம் பெருமையுடன் நினைவு கூர்வதற்கு உரியது.

(முதல் அமைச்சரவை அமைக்கப்பட்ட நாள் – 17.12.1920)