நமது அரசியல் அமைப்பின் தொடக்கத்தையும், குடியரசுப் பொன் விழாவையும் நினைவுகூர்ந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உங்களுடன் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பலநூறு லட்சம் எண்ணிக்கை கொண்ட மக்களின் சுதந்திரத்தையும், நலனையும் பேணிக் காப்பதற்கு, இந்தியாவில் ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவியது, நீங்காப் பெருமை சேர்க்கக்கூடிய ஒன்று என்பதில் அய்யமில்லை. அதே நேரத்தில், பல்வேறு நாடுகளிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்திய ஓர் உலக நிகழ்வாகவும் இது இருந்தது.

K.R.Narayan
உலகம் முழுவதும் ஜனநாயகத்தின் வெற்றிக் குரல்கள் ஒலித்தன. ஜனநாயகத்துக்கு மாறான அமைப்பு முறைகள் எதுவும் இனி வெற்றி பெற முடியாது என்று மக்கள் பேசத் தொடங்கினார்கள். அத்தகைய வெற்றிப் பெருமித வெளிப்பாடுகளுக்கு, இந்திய ஜனநாயகம் தனது அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வேண்டியிருந்தது. அந்தப் பங்களிப்பு இத்தகைய விவாதங்களில் தன்னையும் இணைத்துக் கொள்வது என்பதாக இல்லை. மாறாக, இனி ஜனநாயக அமைப்புகள் உருவாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று செயல்பூர்வமாக உலகிற்கு உணர்த்துவதாகவும் அது இருந்தது.

இந்தியக் குடியாட்சி முறை உருவாக்கம் பெற்ற காலத்தில், அன்றைய பிரிட்டன் பிரதமர் சர் ஆண்டனி ஈடன் கூறிய கருத்து, இப்போது மிகவும் பொருந்தி வருகிறது. அவர் சொன்னார்: ‘காலங்காலமாக எத்தனையோ ஆட்சி முறைகளைப் பரிசோதித்துப் பார்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனாலும், இவை எல்லாவற்றிலும் இப்போது இந்தியா, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குள் அடியெடுத்து வைக்கும் துணிவுமிக்க முடிவுதான் என்னை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. உலகின் பெரிய துணைக்கண்டம் ஒன்று, தனது கோடிக்கணக்கான மக்களுக்கு, ஒரு சுதந்திர ஜனநாயக அமைப்பை வழங்க முயல்கிறது. இது, ஒரு துணிகரமான முயற்சிதான். அதுவும் நாம் இங்கே பின்பற்றும் நடைமுறைகளை, அப்படியே தொடர்ந்து, முலாம் பூசி, ஒரு போலி உள்ளடக்கத்தோடு பின்பற்றும் முயற்சிகளில் அது ஈடுபடவில்லை. மாறாக, இந்த அமைப்பை - தோற்றத்திலும் எண்ணிக்கையிலும் பலப்பல மடங்குகளாக உருப்பெருக்கி, நடைமுறைப்படுத்தும் மகத்தான முயற்சியில் அது இறங்கியிருக்கிறது. இப்படி ஒரு முயற்சியை நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. இந்த முயற்சி வெற்றி பெறும்போது, ஆசியாவிலும் அதன் நன்மைக்கான தாக்கம் மகத்தானதாகவும், அளவிட முடியாததாகவும் இருக்கும். விளைவுகள் எப்படி இருந்தாலும், இந்த முயற்சிகளில் ஈடுபட்டோரை நாம் பெருமையோடு போற்றத்தான் வேண்டும்”.

அமெரிக்காவின் அரசியல் சட்ட நிபுணர் பேராசிரியர் கிரான்வெல் ஆஸ்டின் தெரிவித்த கருத்து, மேலும் அர்த்தமுள்ளதாகும்: ‘1787 இல் பிலடெல்பியாவில் முதன் முதலாக ஜனநாயக முறை தோன்றிய காலத்திலிருந்து பார்த்தால் - இந்தியாவின் ஜனநாயக அமைப்புக்கான முயற்சிதான் மிகப்பெரியதாகும்”.

இந்தியாவின் புதிய அரசியலமைப்பு எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி மகாத்மா காந்திக்கு ஒரு கண்ணோட்டம் இருந்தது. உலகம் முழுவதும் மதித்துப் போற்றப்படும் கோட்பாடுகளை நாம், நமது நாட்டின் தனித்தன்மையையும், அதன் சிறப்பான சூழலையும் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப நமது அரசியல் அமைப்பில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். 1931ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே காந்தியார், ‘எல்லா வகையான அடிமைத்தளைகளிலிருந்தும் சார்புத்தன்மைகளிலிருந்தும் இந்தியாவை விடுதலை செய்யும் ஓர் அரசியலமைப்பைக் கொண்டுவர அயராது முயற்சிப்பேன். நான் உருவாக்க விரும்பும் இந்தியாவானது, நாட்டின் கடைநிலையிலும் உழலும் ஏழைகளின் குரலுக்கு செவிசாய்ப்பதாகவும், அதன் மூலம் இது தங்களுடைய நாடு என்பதை அவர்களுக்கு உணர்த்தச் செய்வதாகவும் இருக்க வேண்டும்; அதற்காகவே நான் உழைப்பேன். ஏற்றத் தாழ்வற்ற மக்களைக் கொண்ட இந்தியா; எல்லா சமூகத்தினரும் முழு நல்லிணக்கத்தோடு இயைந்து வாழும் ஒரு இந்தியா; தீண்டாமை என்ற சாபக்கேட்டுக்கு இடமே இல்லாத ஒரு இந்தியா; பிற நாடுகளுடன் நல்லுறவைப் பேணி, சுரண்டலுக்கோ, சுரண்டப்படுவதற்கோ இடமில்லாத ஒரு இந்தியா; வாய் பேசாதவர்களாய் அடங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களின் நலன்களுக்கு முரண்பட்டு விடாமல், இந்நாட்டவர், அயல் நாட்டவர் என்ற வேறுபாடு இன்றி எல்லா மக்களின் நலன்களையும் தவறாமல் பேணும் ஒரு இந்தியாவாகும். இதுவே நான் கனவு காணும் எதிர்கால இந்தியா. இத்தகைய இந்தியாவை உருவாக்கவே நான் உழைப்பேன். என்னைப் பொறுத்தவரை, வெளி நாட்டினர், அயல் நாட்டினர் என்று மக்களைப் பிரித்துப் பார்ப்பதையே நான் வெறுக்கிறேன்” என்று எழுதினார்.

காந்தியத்தின் இந்தக் கனவுதான், நமது அரசியல் சட்டத்தில், சமூக நீதி மற்றும் சமூக ஜனநாயகம் எனும் வடிவங்களாக மய்யம் கொண்டிருக்கிறது. பேராசிரியர் கிரான்வெல் ஆஸ்டின், நமது அரசியலமைப்பை ‘முதலும் முதன்மையானதுமான சமூக ஆவணம்” என்று வர்ணிக்கிறார். ‘சமூகப் புரட்சி என்ற இலக்கை நேரடியாகச் சென்று அடைவது அல்லது அந்த இலக்கை வளர்த்தெடுப்பதற்கான சூழலை உருவாக்குவது என்ற நோக்கத்துடனே, இந்திய அரசியல் அமைப்பின் பெரும்பாலான பிரிவுகள் அமைந்துள்ளன” என்று அந்த அமெரிக்கப் பேராசிரியர் மேலும் விளக்குகிறார்.

இதே கருத்தைத்தான் அழகான சொற்றொடர்களில் டாக்டர் அம்பேத்கரும், பண்டித நேருவும் விரித்துரைக்கிறார்கள். நமது நாட்டின் சூழலுக்கும், பிரச்சனைகளுக்கும், வளரும் நாடுகளுக்கும், நமது அரசியலமைப்பு பொருந்திப் போவதற்குக் காரணம், அதன் கருப்பொருளாக இருக்கும் பொருளாதார விடியலுக்கான ‘நோக்கம்'தான்! இவற்றோடு மேற்கத்திய ஜனநாயகத்தின் தாராள உரிமைகள் மற்றும் சுதந்திரக் கோட்பாடுகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருப்பது, நமது அரசியலமைப்பின் தனித்தன்மையாகும்.

நமது அரசாங்கத்துக்கான வடிவத்தையும் தத்துவத்தையும், ஆழ்ந்த சிந்தனையுடன், விரிவான விவாதங்களை நடத்திய பிறகுதான், நமது தலைவர்கள் தேர்வு செய்தனர். அரசியல் சட்டவரைவுக் குழுவில் டாக்டர் அம்பேத்கர் பேசும்போது, ‘இந்த அரசியலமைப்பு செயலாற்றல் மிக்கது; நெகிழ்வு கொண்டது; போர்க் காலத்திலும், அமைதியான நேரத்திலும் நாட்டின் ஒற்றுமையை நிலைப்படுத்தி பாதுகாக்கும் வலிமை கொண்டது. இதற்கு அப்பாலும் இந்தப் புதிய அரசியலமைப்பின் கீழ் தவறுகள் நிகழுமானால், அதற்கு நமது அரசியலமைப்பு மோசம் என்றாகி விடாது; அந்தத் தவறுகளுக்குக் காரணம், மனிதன் இழிந்தவனாகி விட்டான் என்பதுதான். இப்படித்தான் நாம் சொல்ல வேண்டியிருக்கும்” என்றார்.

அரசியலமைப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இன்னும் ஒரு படி மேலே சென்று புதிய அரசியலமைப்பையே உருவாக்க வேண்டும் என்றும், இன்றைக்கு அதிகம் பேசப்படுகிறது. இந்த நிலையில், அரசியல் அமைப்பு நம்மைத் தோல்வி அடையச் செய்து விட்டதா அல்லது அரசியலமைப்பை நாம் தோற்கச் செய்து விட்டோமா என்பதைப் பரிசீலிக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். அரசியல் நிர்ணய சபையின் தலைவர் என்ற முறையில் டாக்டர். ராஜேந்திர பிரசாத் ஒரு கருத்தைச் சுட்டிக் காட்டினார்: ‘தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் நல்லொழுக்கமும், நேர்மையும் கொண்டிருந்தால், குறைபாடுகள் நிறைந்த ஓர் அரசியலமைப்பிலிருந்தேகூட, மிகச் சிறந்த செயல்களை செய்ய முடியும். ஆனால், அவர்களிடம் இத்தகைய பண்புகள் இல்லாவிட்டால், ஓர் அரசியலமைப்பால் நாட்டுக்கு எந்த உதவியும் செய்துவிட முடியாது” என்றார். இவை, நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அறிவார்ந்த கருத்துகள் என்றே நான் நம்புகிறேன்.

நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வடிவத்தை நமது தலைவர்கள் ஆழ்ந்து சிந்தித்து, விரிவான விவாதங்களை நடத்திய பிறகுதான் தேர்வு செய்தார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வடிவத்தை, அரசியலமைப்பு வரைவுக் குழு தேர்வு செய்தது ஏன் என்பதை டாக்டர் அம்பேத்கர் விளக்கினார். அரசாங்கம் நிலையாக இருக்க வேண்டும் என்பதைவிட, (தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்) பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்கு, அரசியலமைப்பை எழுதியவர்கள் முன்னுரிமை அளிக்க விரும்பியதால்தான், ஒவ்வொரு நாளும் சோதனைக்குட்படுத்திக் கொள்ளக் கூடிய நாடாளுமன்ற ஜனநாயக முறையை தேர்வு செய்தார்கள் என்றார் டாக்டர் அம்பேத்கர்.

ஆனாலும்கூட, பிரச்சனைகளுக்குப் பொறுப்பேற்று, மக்களுக்கு அன்றாடம் பதிலளிக்கும் போக்கை இன்றளவும் கொண்டுவர முடியவில்லை; கடினமாகவே இருக்கிறது என்றார் அவர்! இப்படி, திட்டவட்டமான, தீர்க்கமான முடிவோடு உருவாக்கப்பட்டதே நமது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு. பிரிட்டனில் பின்பற்றப்பட்ட முறை என்பதற்காகவோ, காலனி ஆட்சியின்போது நாட்டில் அறிமுகமாகி இருந்த ஓர் அமைப்பு என்பதற்காகவோ, இந்த அரசியல் அமைப்பு முறை தேர்வு செய்யப்படவில்லை என்பதை நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

நமது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை உருவாக்குவதில் பிரிட்டனுக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம் என்பது உண்மைதான் என்றாலும்கூட, நமது பழங்கால பஞ்சாயத்து அமைப்புகளிலேயே இதற்கான வேர் இருந்திருக்கிறது என்றார் காந்தியார். இன்றைய நாடாளுமன்ற அமைப்பு முறை, நமது பழமைவாய்ந்த பவுத்த சங்கங்களின் அடிப்படையில் செயல்படுபவைதான் என்றும், தற்கால நாடாளுமன்றத்தின் நடைமுறைகளான தீர்மானங்கள், வாக்கெடுப்பு, மான்ய கோரிக்கை போன்ற அம்சங்கள், புத்த சங்கங்களிலேயே வழக்கத்தில் இருந்தவைதான் என்றும் டாக்டர் அம்பேத்கர், சட்டவரைவுக் குழுவிலேயே விளக்கமளித்தார். அத்துடன், டாக்டர் அம்பேத்கர், அங்கேயே சுட்டிக்காட்டியபடி, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைத் தேர்வு செய்ததன் நோக்கம், நிலைத்த அரசு என்பதைவிட, பொறுப்பான செயல்பாடு என்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதால்தான். ஒரு நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு, பொறுப்புகளை உணர்ந்து செயல்படாமல், அதிலிருந்து நழுவும்போது, அது சர்வாதிகாரம் உருவாக வழிவகுத்துவிடும்.

நாம் மனதில் நிறுத்த வேண்டிய மற்றொரு முக்கிய காரணி இருக்கிறது. இந்தியாவின் பெரும் நிலப்பரப்பு; திகைப்படையச் செய்யும் நாட்டின் வேற்றுமைகள்; மாறுபாடுகள்; பெரும் மக்கள் தொகை, சமூகம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் காணப்படும் கடுமையான சிக்கல்கள் ஆகிய இந்தப் பிரச்சனைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் இந்தக் கடும் சிக்கல்களை ஒரு எழுத்தாளர் வர்ணிக்கையில், இது, ‘பல லட்சம் கலகங்களாகக் கருக்கொண்டிருக்கிறது” என்றார். சமூகத்தின் அதிருப்திகள், விரக்திகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் இருக்க வேண்டும். அத்தகைய வாய்ப்புகள் இருந்தால்தான், முன்கூட்டியே கணிப்பதற்கும், திடீரென மக்களிடையே பேரெதிர்ப்புகள் வெடித்துக் கிளம்பாமல் தடுக்கவும் முடியும்.

நமது நாடாளுமன்ற அமைப்பு, மக்கள் தங்கள் அதிருப்திகளைக் கொட்டித் தீர்த்துக் கொள்ளும் ‘வடிகால்களை' வழங்கியிருக்கிறது. வேறு அமைப்புகளைவிட, இதில் இதற்கான வாய்ப்புகள் அதிகம்; காரணம் இந்த அமைப்பு, நிலையான அரசு என்பதைவிட, பொறுப்பான செயல்பாடுகளுக்கும், பொறுப்பை ஏற்று பதில் சொல்ல வேண்டிய கடமைகளுக்கும் முன்னுரிமை அளிப்பதாக இருப்பதால்தான். நமது நாட்டில் நிலையான ஆட்சிகள் அமையாத அனுபவங்களை நாம் அண்மைக் காலமாக சந்தித்து வருவது உண்மைதான். அதற்காக நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையே தூக்கி எறிந்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி முறையையோ அல்லது வேறு ஆட்சி முறையையோ கொண்டு வரலாம் என்பதற்கு, இது போதுமான காரணமாக இருக்க முடியாது. நம்முடைய நிர்வாக முறையில், மிக அதிகமாகப் பின்பற்றப்படும் ‘இறுக்கம்' என்ற பிடிவாதப் போக்கைத் தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து. இத்தகைய இறுக்கமான அணுகுமுறைகளால், சமூகத்தில் எந்த நேரத்திலும் பிரச்சனைகள் வெடித்துக் கிளம்பும் ஆபத்துகள் இருக்கின்றன. ஆட்சி மாற்றங்களுக்கான வாய்ப்புகளும் வசதிகளும் இருப்பதால், அதுவே நம்முடைய ஆட்சி அமைப்பு முறையை நீண்ட காலக் கண்ணோட்டத்தில் நிலைக்கச் செய்வதாக இருக்கிறது.

ஆட்சிகளை மாற்றி அமைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கும்போது, தாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத அல்லது இணைந்து போக முடியாத ஓர் அரசியல் சூழ்நிலையில், எதிர்காலத்தில் ஆட்சியை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மக்கள் பொறுமையோடு காத்திருப்பார்கள். அமைப்பை வழிநடத்திச் செல்கிறவர்களிடம் உள்ள பண்புக் குறைகளை, சட்டத்தைத் திருத்துவதாலோ புதிய சட்டப் பிரிவுகளைச் சேர்ப்பதாலோ, ஒருபோதும் மாற்றிவிட முடியாது என்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறினார்.

அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்வது என்பது முற்றிலும் வேறு பிரச்சனை. இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வழிமுறைகளை, அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களே மிகவும் எளிதாக்கித் தந்துள்ளனர். அதற்குக் காரணம், அரசியலமைப்பின் குறைபாடுகளோ அல்லது தேவைக்கான இடைவெளிகளோ, அதிகக் கடினமின்றி சீர் செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான். தேர்தல் சட்டங்கள், அரசியல் சட்டங்களின் செயல்பாடுகள் போன்ற துறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும் இருக்கின்றன. அரசியல், பொருளாதார அமைப்புகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவரும் உரிமையும் நமக்கு உண்டு. ஆனால், எதைச் செய்தாலும் நம் அரசியலமைப்புக்கு அடிப்படையான தத்துவமும், அடித்தளமான சமூக - பொருளாதாரம் என்ற உயிர் நாடியும் மேன்மையுடையதாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். அந்தப் பாதுகாப்பை நாம் உறுதி செய்தாக வேண்டும். குளிப்பாட்டிய தண்ணீரோடு சேர்த்து குழந்தையையும் வீசிவிடக் கூடாது. ‘ஏதுமறியாத கற்கால மனிதன், விலைமதிப்பு மிக்க முத்துச்சிப்பி ஒன்றைக் கண்டெடுத்தான். அதனைப் பிளந்து அதனுள் இருந்த முத்தை வீசியெறிந்துவிட்டு, சிப்பியை தனது உபயோகத்துக்காக வைத்துக் கொண்டான்” என்று ஷேக்ஸ்பியர் எழுதிய ‘ஒத்தெல்லோ' சோக காவியம் கூறுகிறது. தனது உடைமைகள் அனைத்தையும் விட மதிப்புமிக்க முத்தை வீசி எறிந்த கற்கால மனிதனின் செயலை நாம் செய்யக் கூடாது.

27.1.2000 அன்று, இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் பொன்விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை.
Pin It