ஒவ்வோர் ஆண்டும் உலக சுற்றுச்சூழல் நாள் நம்மை கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பூமியோடு நாம் கொண்டுள்ள தொப்புள்கொடி உறவின் ஆழத்தை, மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கம் செவ்விந்தியத் தளபதி சியாட்டிலின் (சீயல்த்) உரையை மீண்டும் ஒரு முறை படிப்போம்.

இன்று நாம் அமெரிக்கா என்று அழைத்துக் கொண்டிருக்கும் நாடு வெள்ளையர்களுக்குச் சொந்த மானதல்ல. அந்த நாட்டின் பூர்வகுடி மக்கள் செவ் விந்தியர்கள். ஐரோப்பாவில் இருந்து அனுப்பப்பட்ட கைதிகளும் நாடு கடத்தப் பட்டவர்களும், அமெரிக்காவில் புதிதாகக் குடியேற வந்தவர்களும் செவ்விந்தியர்களின் நிலங்களை அபகரிக்கத் தொடங்கினர். இதனை செவ்விந்தியர்கள் எதிர்த்தாலும் துப்பாக்கி, பீரங்கிகள் கொண்ட வெள்ளையர்களை அவர்களால் தோற்கடிக்க முடியவில்லை. இதனால் செவ்விந்தியர்கள் பெருமளவில் கொல்லப் பட்டனர். எஞ்சிய செவ்விந்தியர்கள் சிறிய பகுதிக்குள் ஒடுங்கினர். இந்தப் போரின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருந்தபோது, வடமேற்கு பகுதியின் மதிப்புமிக்க, துணிச்சலான தளபதியாக சியாட்டில் என்ற செவ்விந்தியர் ஒருவர் இருந்தார். அவரது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை வாங்க விரும்பியதாக வாஷிங்டன் நகரத்தில் இருந்த வெள்ளைக்காரர்களின் அரசு கூறியது. இதைக் கேட்டு எழுச்சியடைந்த சியாட்டில், அங்கே கூடியிருந்தவர்கள் மத்தியில் தனது மனஉறுதியை வெளிப்படுத்தும் வகையில், தெளிவான குரலில் கண்கள் ஒளிர இப்படி பேசினார்.

"நான் வானத்தை வாங்க முடியுமா?

மழையையும் காற்றையும் விலைபேச முடியுமா?"

என்ற கேள்விகளுடன் அவர் பேச்சைத் தொடங்கினார்.

என் தாய் கூறினார்:

இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியும் நமது மக்களுக்குப் புனிதமானது.

இந்த ஊசியிலையும், இந்த மணல் நிறைந்த கடற்கரையும் அடர்ந்த காடுகளில் உள்ள மேகமும் ஒவ்வொரு புல்வெளியும் ரீங்காரமிடும் ஒவ்வொரு பூச்சியும் நமது மக்களின் மனதில் புனிதமாகப் பதிந்து போயிருக்கிறது.

என் தந்தை சொன்னார்:

மரங்களின் உடலுக்குள் செல்லும் நரம்பை நான் அறிவேன். எனது ரத்தக்குழாய்களில் ரத்தம் செல்வதைப் போல அது செல்கிறது. நாம் பூமியின் ஒரு பாகம், பூமி நம்மில் ஒரு பாகம். நறுமணம் வீசும் பூக்கள் எல்லாம் நமது சகோதரிகள். கரடி, மான், கழுகெல்லாம் நமது சகோதரர்கள். மலை முகடுகள், புல்வெளிகள், மட்டக் குதிரைகள் அனைத்தும்  ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள்.

எனது மூதாதையர்களின் குரல் இப்படிச் சொன்னது:

ஓடைகளிலும் நதிகளிலும் ஓடும் தெள்ளிய நீரை வெறும் தண்ணீரென்று நினைத்துக் கொள்ளாதே. அது நமது தாத்தாவுக்கு தாத்தாவின் ரத்தம். ஏரிகளின் தெள்ளிய நீரில் தெரியும் ஒவ்வொரு பிரதிபலிப்பும்  எம் மக்களின் வாழ்க்கையின் நினைவுகளை பிரதிபலிக்கிறது. நீரின் முணுமுணுப்பு உனது பாட்டிக்குப் பாட்டியின் குரலே. நதிகள் நமது சகோதரர்கள், அவை உனது தாகத்தைத் தணிக்கின்றன. படகுகளைச் சுமந்து செல்லவும், குழந்தைகளுக்கு உணவு அளிக்கவும் உதவுகின்றன. நமது சகோதரரிடம் காட்டும் மரியாதையையும் அன்பையும் அதனிடம் நாம் காட்ட வேண்டும்.

எனது தாத்தாவின் குரல் என்னிடம் கூறியது:

காற்று விலைமதிப்பில்லாதது. அது உயிர் கொடுக்கும் அனைத்து உயிர்களிடமும் தன் உத்வேகத்தைப் பகிர்ந்து கொள்கிறது. எனக்கு முதல் மூச்சுக்காற்றைக் கொடுத்த அதே காற்றுதான், எனது கடைசி பெருமூச்சையும் வாங்கிக் கொண்டது. நிலத்தையும் காற்றையும் எந்த தொந்தரவுக்கும் உள்ளாக்கக் கூடாது, அவை புனிதமானவை. அப்பொழுதுதான், புல்வெளி மலர்களின் தேனால் இனிப்பூட்டப்பட்ட காற்றை நாம் சுவைத்துப் பார்க்க முடியும். கடைசி செவ்விந்திய ஆணும் பெண்ணும் தங்கள் கடைசி காட்டுப் பகுதியுடன் அழிந்து போகும்போது, புல்வெளியின் மீது நகரும் நிழலாக மட்டுமே அவர்களது நினைவு இருக்கும்போது,  இந்தக் கடற்கரைகளும் காடுகளும் எஞ்சியிருக்குமா? அப்பொழுது எம் மக்களிடம் ஏதாவது உத்வேகம் எஞ்சியிருக்குமா?

"எங்கள் அறிவுக்கு எட்டிய வரையில், நாம் பூமியின் உரிமையாளர்கள் அல்ல. நம் அனைவருக்கும் பூமிதான் உரிமையாளர்" என்று மூதாதையர்கள் கூறினர்.

எனது பாட்டியின் குரல் இப்படிச் சொன்னது:

உனக்கு என்ன சொல்லித் தரப்பட்டதோ அவற்றை உனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடு பூமிதான் நமது தாய். பூமிக்கு என்னவெல்லாம் நடக்கிறதோ, அதுதான் பூமியின் மகன்கள், மகள்களான நமக்கும் நடக்கும்.

"எனது குரலையும் எனது மூதாதையர்களின் குரலையும் அனைவரும் கேளுங்கள்" என்று தளபதி சியாட்டில் வெள்ளையர்களை நோக்கிக் கூறினார்.

உங்கள் மக்களின் தலைவிதி எப்படியிருக்கப் போகிறது என்று எங்களுக்கு மர்மமாக உள்ளது. அனைத்து எருமைகளும் வெட்டப் பட்டுவிட்டால் என்ன நிகழும்? அனைத்து காட்டுக் குதிரைகளையும் வேலைக்குப் பழக்கிவிட்டால் என்ன ஆகும்? காட்டின் ரகசிய மூலைகள் மனிதனின் வாசனையால் நிரம்பிவிட்டால் என்ன ஆகும்? செழித்த மலைப்பகுதிகளில் தொலைபேசி கம்பங்களை நட்டுவிட்டால் என்ன நடக்கும்? அடர்ந்த மரக்கூட்டங்கள் எங்கே மறைந்து போகின்றன? கழுகுகள் எல்லாம் எப்படி காணாமல் போகின்றன? அதிவேகமாக ஓடும் மட்டக்குதிரைகளுக்கும் வேட்டை நிகழ்வுக்கும் நாம் விடை தரும்போது என்ன நடக்கும்?

அது வாழ்க்கையின் முடிவாகிவிடும். பிழைப்பதற்கான போராட்டமாக மாறிவிடும். எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இதுதான்: எப்படி நம் உடலின் அனைத்துப் பகுதிகளையும் ரத்தம் இணைக்கிறதோ அதுபோல் உலகில் உள்ள அனைத்து விஷயங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந் திருக்கின்றன. வாழ்க்கை என்ற வலையை நாம் நெய்யவில்லை. நாம் அதன் ஒரு சிறு பகுதி மட்டுமே. இந்த வலைக்கு நாம் என்னவெல்லாம் செய்கிறோமோ,  அதெல்லாமே நமக்கு நாமே செய்து கொள்பவைதான். புதிதாகப் பிறந்த குழந்தை எப்படி தாயின் இதயத் துடிப்பை விரும்புகிறதோ, அதுபோல் நாங்கள் இந்த பூமியை விரும்புகிறோம்.

நாங்கள் எங்களது நிலத்தை உங்களுக்கு விற்பதானால், நாங்கள் அதன் மீது எப்படிப்பட்ட அக்கறையை வெளிப்படுத்தினோமோ அதுபோல் நீங்களும் வெளிப்படுத்த வேண்டும். எங்கள் நிலத்தை வாங்கும்போது, அது எப்படியிருந்ததோ  அதை உங்கள் நினைவில் நன்றாக நிறுத்திக் கொள்ள வேண்டும். நிலம், காற்று, நதிகளை உங்கள் குழந்தைகளின் குழந்தைகளுக்காக பாதுகாப்பாக வைத்திருங்கள். நாங்கள் அவற்றை எப்படி விரும்பினோமோ, அதுபோல் நீங்களும் விரும்ப வேண்டும்.

இப்படி இயற்கையின் முக்கியத்துவம் பற்றியும், உலகில் மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்றும், இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ வேண்டுமே ஒழிய, இயற்கைக்கு எதிராக வாழ்வது மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்வதுதான் என்று கூறியுள்ளார். 200க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அவர் கூறிய விஷயங்கள் எதுவுமே மாறாதது, மனித குலத்தின் துரதிருஷ்டம்.

சியாட்டிலின் கருத்துகளை நாமும் செயல்படுத்த வில்லை என்றால், அவர் கூறியுள்ள அழிவு நம்மை எட்டிப்பார்க்க ரொம்ப நாள் ஆகாது.

தமிழில்: அமிதா

Pin It