சாமிக்கண்ணுவோட வயலில் களையெடுப்பு. பதினோரு சனத்துக்கு டீயும் வடையும் போயாகணும். கோணமுக்கு சிங்காரம் டீக்கடையில் நிற்கிற சாமிக்கண்ணுவுக்கு அவசரம். சாவகாசமாக அஞ்சு பார்சல் டீயை கொதிக்கக் கொதிக்க கலந்து பிளாஸ்டிக் கேரி பையில் போட்டு முடிச்சும் போட்டாயிற்று. பன்னிரெண்டு வடையை இன்னொரு கேரி பையில் போட்டு அதையும் முடிச்சு போட்டாயிற்று. இரண்டு முடிச்சையும் இன்னொரு கேரி பையில் போட்டு கூடவே பன்னிரண்டு பிளாஸ்டிக் கப்பையும் எண்ணிப் போட்டு காசை வாங்கிக் கொண்டான் சிங்காரம்.

எங்கெல்லாம் உடலுழைப்பு நடக்கிறதோ அங்கெல்லாம் பதினோரு மணிக்கு டீயும் வடையும் போயாகணும். சூடான டீயை மலிவான பிளாஸ்டிக் கேரி பையில் கொண்டுபோய் பிளாஸ்டிக் கப்பில் பிதுக்கிக்கொடுப்பது இன்று சர்வசாதாரணம். வேலைசெய்யும் இடம் எதுவாக இருந்தாலும் சரி.அது வயல் வரப்பாக இருக்கலாம். பூமிக்கு மேலே துருத்திக் கொண்டிருக்கும் கட்டிடமாக இருக்கலாம். தொழிற்பட்டறையாக இருக்கலாம். அங்கெல்லாம் இறந்துபோன பிளாஸ்டிக் குப்பைகள் மவுனமாக கிடப்பது அன்றாடக்காட்சி.

ஒரு பார்சல் சாப்பாடு வாங்கப்போனால் பெரிய கேரி பைக்குள் ஒன்பது சிறிய கேரி பைகள். சந்தைக்கு நண்டு வாங்கப்போன கணவன் திரும்பும்போது இரண்டு கேரி பைகள். நண்டுக்கால்கள் பொத்தலிட்ட ஒரு பிளாஸ்டிக் பை. தக்காளியும், பச்சைமிளகாயும், கொத்துமல்லித் தழையும் பிதுங்கிக் கிடக்கும் இன்னொரு பிளாஸ்டிக் பை. டாஸ்மாக் கடைக்கு போனால் குடிகார பற்களால் கடிபட்டு வீசி எறியப்பட்ட காலி தண்ணீர் பைகள், ஊறுகாய் பைகள்.

கிராமப் பள்ளிக்கூடத்தின் வகுப்பறைக்குள் பள்ளிவிட்டபிறகு சென்று பார்த்தால் காலி பாக்குப்பொட்டல உறைகள். உடலுழைப்புத் தொழிலாளிகள் பசியைமறக்க பயன்படுத்திய பான்பராக்கு காலி உறைகள். விளையாட்டு மைதானத்தில்கூட வெற்றியைக் கொண்டாட பான்பராக்கு உபயோகம்.

திருமணக்கூடத்தில் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் கப்புகளும், பைகளும். சித்திரை மாதத்தில் வயல்களில் எரு அடிப்பார்கள். நிலமில்லாதவர்களின் வீடுகளில் இருக்கும் குப்பைமேட்டை விலைபேசி வண்டிகளில் ஏற்றிச் செல்வார்கள். அது குப்பையாக இருந்து உரமாக மாறிய காலம் போயே போய்விட்டது,

இப்போதெல்லாம் எரு அடித்த வயலைப் போய்ப் பாருங்கள். கிழவன் தலை பஞ்சு முடியைப்போல் வயல்முழுவதும் வெள்ளை நிறத்தில் பிளாஸ்டிக் காகிதங்கள். நடவுப்பெண்களின் கால்களில் சிக்கி இழவெடுக்கும் வெள்ளை மாசு.

இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக் உறைகள் பூவுலகில் பிறந்து 150 ஆண்டுகள்தான் ஆயிற்று என்ற செய்தி ஆச்சரியமானது. பத்தாண்டு பழமையானவற்றையே “பரண்மேல் ஏற்று” என்று கூக்குரலிடும் மனிதமனம் இந்த பிளஸ்டிக்கை மட்டும் ஆரத்தழுவி ஏற்றுக் கொண்டது ஒன்றும் தற்செயலானது அல்ல.

இலேசானது, கவர்ச்சியானது, விலைகுறைவானது, என்றெல்லாம் அது பிறந்தபோது போற்றப்பட்டது உண்மைதான்.

இன்றைய தினம் நம்முடைய நகராட்சிகளுக்கு நரகாசுரனாக தோற்றமளிப்பதும் இந்த பிளாஸ்டிக் பைகள்தான். நரகாசுரனாவது தீபாவளிக்கு தீபாவளி வந்து ஒழிந்து போவான். இந்த பிளாஸ்டிக் அரக்கன் ஒவ்வொரு மணித்துளியும் அவதாரமெடுத்து நம்முடைய நகரசபைகளை வதைக்கிறான் என்பதுதான் உண்மை.

சீனாவும், வங்காளதேசமும், உகாண்டாவும் பிளாஸ்டிக் பைகளை ஒழித்துக் கட்டுவதில் முன்னணி நாடுகள். அமெரிக்க மாநிலங்கள், அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான போருக்கு இடுப்புத் துணியை வரிந்துகட்ட ஆரம்பித்துவிட்டன. இங்கெல்லாம் “கடைக்குப் போகும்போது துணிப்பைகளை எடுத்துப் போங்கள்” என்று மக்களை கையெடுத்துக் கும்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

நம்மை ஆளுபவர்கள் கடைசியாக ஓட்டுக் கேட்கும்போது கையெடுத்து கும்பிட்டதாக ஞாபகம். பாலிஎத்திலீன் என்பது எண்ணெயிலிருந்து உண்டாக்கப்படும் தெர்மோ பிளாஸ்டிக் ஆகும். இது கரப்பான் பூச்சிகளால் அரிக்கப்படாதது. நாட்கள் செல்லச் செல்ல இந்த வகையான பிளாஸ்டிக்குகள் தீங்கு தரக்கூடிய நுண்ணிய பெட்ரோ பாலிமர்களாக சிதைவடைந்து மண்ணையும், நீரூற்றுக்களையும் சென்றடைகின்றன. இதன் காரணமாக இன்று பிளாஸ்டிக் நம்முடைய உணவுச் சங்கிலியிலும் ஊடுருவியிருப்பது உண்மை.

பெட்ரோ பாலிமர்கள் நீர்த்தாரைகளின் வழியாக கடலில் எப்போதோ கலந்துவிட்டன. வடக்கே ஆர்க்டிக் முதல் தெற்கே பாக்லண்ட் தீவுகள் வரையில் பெட்ரோ பாலிமர்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கொடுமையான பிளாஸ்டிக் துகள்கள் “வெள்ளை மாசு” என்று பெயரிடப்பட்டுள்ளது.

வனவிலங்குகள், பறவைகள், நீர்வாழ்வன என்ற எல்லா உயிரினங்களிலும் வெள்ளை மாசு பரவி அவற்றின் இனத்தை அழித்தொழிக்கின்றன என்பது முற்றிலும் உண்மை.

ஒரு காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு இருபது மைக்ரான்களுக்கு உட்பட்ட பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான சட்ட முன்வடிவை கொண்டு வந்தது. தொழிலதிபர்களிடமிருந்து பெறப்பட்ட நெருக்குதல் காரணமாக சட்டமுன்வடிவு விவாதப்பொருளாகி வலிமையிழந்துவிட்டது. பெருமளவு தொழிலாளர்கள் வேலையிழப்பர் என்பதை காரணம் காட்டி அரசின் சட்டமியற்றும் எண்ணம் வீரியமிழந்துவிட்டது.

மக்களின் ஒத்துழைப்பின்மை காரணமாக பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் இன்று உச்சத்தில் உள்ளது.

இருபது மைக்ரான்களுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் தடை செய்யப்படுமானால் இருபத்தோரு மைக்ரான் பிளாஸ்டிக்கை ஏராளமாக தயாரிக்க தொழிலதிபர்கள் தயாராக இருக்கின்றனர்.

பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகளின் ஆரோக்கியமற்ற பணிநிலை, குறைந்த ஊதியம் ஆகியவற்றில் அக்கறையில்லாத முதலாளிகள் தொழிலாளிகளின் வேலையிழப்பை மட்டும் முன்னிறுத்தி வெள்ளை மாசை பரப்பிவிடும் பணியில் ஈடுபட்டிருப்பது தமிழ்நாட்டில் ஒன்றும் வியப்பான செய்தியில்லையல்லவா!

இந்த விவாதத்தின்போது பிளாஸ்டிக் குடங்களுக்கு தடைவிதிக்கப்படுமா என்ற கேள்விதான் அரசை அச்சுறுத்தியிருக்க வேண்டும். இருபது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்துவரும் பிளாஸ்டிக் குடங்கள் நீரை சேமித்து வைப்பதற்கு ஏற்றவை அல்ல. அவற்றில் பயன்படுத்தப்படும் வண்ணங்களில் காட்மியம், பாதரசம், ஈயம் போன்ற உலோகங்கள் குடிநீரை நச்சுநீராக மாற்றும் வலிமை கொண்டவை. பிளாஸ்டிக் குடங்களுக்கு தடை விதிக்கப்படுமானால் ஈறைப் பேனாக்கி....பேனைப் பெருமாளாக்கும் பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும்.

சட்டம் போட்ட கட்சி கட்டம் கட்டப்பட்டு பெருமளவு வாக்குகளை இழக்க நேரிடும். மக்களின் உடல் நலமா, ஆட்சி அதிகாரமா என்ற பட்டிமன்றத்தில் ஆட்சி அதிகாரம் வென்றது என்பது சரிதானே!

பிளாஸ்டிக் நாகரிகத்தில் இன்று மக்கள் அதிகமாகப்பயன்படுத்தும் மெல்லிய பிளாஸ்டிக்குகள் ஒழிக்கப்பட முடியாதவை. மறுசுழற்சிக்கு மசியாதவை. அவற்றை எரிக்க முற்படும்போது டையாக்ஸின் என்ற சிக்கலான வேதிப்பொருள் புகைவடிவில் வெளிப்படுக்கிறது. இவை உண்டாக்கும் நோய்களும் சிக்கலானவை.

புற்றுநோய், பிறவிக் குறைபாடுகள் போன்ற சிக்கலான நோய்களைஉண்டாக்கி இன்றைய மருத்துவர்களின் பணச்சிக்கல்களை தீர்த்து வைக்கின்றன.

பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்திசெய்யும் தொழிலதிபர்களே பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சிக்காக வாங்கும்படி அரசு சட்டமியற்ற வேண்டும்.

வேலையிழக்கும் தொழிலாளிகளுக்கு துணிப்பைகளும், காகிதப்பைகளும் செய்யும் வேலையை அரசே ஏற்படுத்தித் தரவேண்டும். இன்று நகராட்சிகள் இந்த பிளாஸ்டிக் குப்பைகளின் முன்னால் கைகட்டி நிற்கின்றன. அவற்றை வெல்லும் வழியறியாது தீயிட்டு கொளுத்துமாறு தன்னுடைய தொழிலாளிகளை நிர்பந்திக்கின்றன.
விளைவு....

ஒவ்வொரு நாளும் வீதியெங்கும் புகை மண்டலம்.

மதுரையை எட்டிவிட்டோம் என்பதை அங்கிருந்து வந்த நறுமணம் கோவலனுக்கும், கண்ணகிக்கும், கவுந்தியடிகளுக்கும் உணர்த்தியதாம். இன்று.....

நகர எல்லையை எட்டிவிட்டோம் என்பதை டையாக்ஸின் புகை நமக்கு உணர்த்துகிறது.

தேவையில்லாதவற்றை தீயிட்டு எரிப்பதுதான் போகிப்பண்டிகையின் நோக்கமாம்.

அய்யா! ஆளப்பிறந்தவர்களே!

மக்களின் ஆரோக்கியத்தை எப்போது சேர்த்தீர்கள் தேவையில்லாதவை என்ற பட்டியலில்?

- மு.குருமூர்த்தி

Pin It