முந்தைய பகுதி: சுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம் (1)

சுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம் (2)

பெரியார் கேட்டார் : “நெருப்பென்றால் என்னவென்று தெரியாத காலத்தில் ‘சக்கிமுக்கி’ கற்களால் நெருப்பை உண்டாக்கியவன், அந்தக் காலத்துக் கடவுள்தான்; ‘அந்தக் காலத்து எடிசன்’தான். அதைவிட மேலான வத்திப்பெட்டி வந்தபிறகு எவனாவது சக்கிமுக்கி கல்லைத் தேடிக் கொண்டு திரிவானா?” (17.10.1948, திருவொற்றியூர்)

ஐம்பூதங்களில் தீண்டாமை

அனைத்து வகைமைகளிலும் ‘இயல்பு’ என்பதற்கு எதிராக ‘மீவியல்பு’ என்கிற தன்மை உண்டு என்பார் மானுடவியல் அறிஞர் விக்டர் டர்னர். அதன்படி மீவியல்பு மனிதர்கள் (Liminal Persons), மீவியல்பு காலங்கள் (Liminal Periods), மீவியல்பு வெளிகள் (Liminal Spaces) ஆகியவை உள்ளன. மந்திரவாதி, பைத்தியம், குஷ்டரோகி முதலிய மனிதர்கள் மீவியல்பு மனிதர்கள். நடுநிசி போன்ற அச்சுறுத்தும் காலம் மீவியல்பு காலம். சுடுகாடு, பாழுங்கிணறு, பாழடைந்த பங்களா போன்றவை மீவியல் இடங்கள். இது உலகெங்கும் காணப்படும் நிலையே. ஆனால் ஆரியவர்த்தத்தில் இது சாதிய கட்டமைப்புகளாக மாறின. இங்கு மீவியல்பு மனிதர்களாக, தீண்டப்படாதோர் அமைந்தனர். அவர்களுக்குரிய மீவியல்பு இடமாகச் சேரிகள் ஒதுக்கப்பட்டன (தி.கு.இரவிச்சந்திரன், 2014).

திசைகளில் சாதியத்தை உறுதி செய்தவாறே இயற்கையின் கூறுகளான ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிலும் சாதியம் தன் தடத்தைப் பதித்தது. நிலத்தை நுகர்தல், நீரைச் சுவைத்தல், காற்றைத் தீண்டுதல், நெருப்பைப் பார்த்தல், வெளியைக் கேட்டல் எனத் தீண்டாமையின் எல்லை விரிவடைந்தது. நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகியவை சாதியக் கருத்தியல் படிந்து அவை மாசடைந்தன.

நிலம்:

சண்டாளர் ஆளைத் தொட்டால் மட்டுமல்ல, நிலத்தைத் தொட்டாலும் தீட்டே. ஊருக்கு வெளியே மரத்தடி, சுடுகாடு, மலையடிவாரம், காடுகளின் ஓரம் போன்றவை பஞ்சமர்களுக்கான வசிப்பிடங்கள் ஆக்கப் பட்டன (மனு,10:39). ஊரின் எல்லைக்குள் சண்டாளர் நுழைந்தால் வேதம் ஓதுவது நிறுத்தப் பட்டது. மனுவின் காலத்தில் தெருவுக்குள் நுழையும் சண்டாளர் தம் முதுகில் ஒரு மரக் கொப்பினைக் கட்டிக் கொண்டு வர வேண்டும். நிலத்தில் படியும் அவர்களுடைய கால் தடத்தை அது துடைப்பம் போல் அழித்துக் கொண்டே வரும்.

தமிழகத்தில் பெருங்கோயிலை மையமாகக் கொண்ட நகரமைப்பிலும் சாதிய நில ஒதுக்கீடு இருந்தது. கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதி பார்ப்பனர்களுக்கு மட்டும் ஒதுக்கப் பட்டிருந்தது. அதற்கடுத்த ரத வீதி வேளாளர்களுக்கும்; அதற்கடுத்த பகுதிகள், சந்துகள் ஆகியவை கோயிலுடன் தொடர்புடைய சேவை சாதிகளுக்கும் இருப்பிடமாக இருந்தன. தாழ்த்தப் பட்டவர்களுக்கான குடியிருப்பு மட்டும் ஊருக்கு வெளியே ‘சேரியாக’ அமைந்திருந்தது என்று இதனை விளக்குவார் தொ.பரமசிவம் (தி.கு. இரவிச்சந்திரன், 2014).

கேரளாவின் புகழ் பெற்ற வைக்கம் போராட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சாலையில் நடக்க ஈழவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அது பொதுப்பணத்தில் அமைக்கப்பட்ட சாலை. அங்கிருந்த சட்டப்படியான நிலை இதுதான்: மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த சாலைகளை A, B என இரு வகைகளாகப் பிரித்திருந்தனர். A வகைச் சாலைகளை அனைத்து வகுப்பினரும் எந்த வேறுபாடுமின்றிப் பயன்படுத்தலாம். ஆனால் B சாலைகளைக் குறிப்பிட்ட சில சாதியினர் மட்டுமே பயன்படுத்தலாம். வைக்கத்தில் கோயிலை ஒட்டியிருந்த சிக்கலுக்குரிய அந்தச் சாலை B வகுப்பு சாலை. எனவே கீழ்சாதி மக்கள் அதைப் பயன்படுத்துவதிலிருந்து தடுப்பது அரசின் கடமை எனக் கூறப்பட்டது (பி.சிதம்பரம் பிள்ளை, 2013).

கேரளத்தில் சென்ற நூற்றாண்டு வரை தீண்டாமை உச்சத்தில் இருந்தது. தாழ்த்தப் பட்டவர் நம்பூதிரிகளிடம் இருந்து நிலத்தில் எவ்வளவு தொலைவு விலகியிருக்க வேண்டும் என்பதற்குக் கணக்கிருந்தது. ஈழவர்கள் 20-36 அடிகள்; செருமான்களும் புலையர்களும் 64 அடிகள்; நாயாடிகள் 72 அடிகள் தள்ளி நிற்க வேண்டும் (ப்ரஜ் ரஞ்சன் மணி, 2018).

கோவில் குடமுழுக்கும் நிலத்தின் தீட்டுக் கழிக்கும் செயலே. கீழ்சாதி மக்களின் உழைப்பில் உருவான கோயில் நிலத்தின் தீட்டினைக் கழிப்பதே அச்சடங்கு. புதுமனை புகுவிழாவிலும் வீட்டுக்குள் மாடு நுழைதல் என்பது நிலத் தீட்டுக் கழிப்பின் அடையாளம் (தி.கு.இரவிச்சந்திரன், 2014). ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் ஏன், இந்திய ஒன்றியக் குடியரசின் தலைவராகவே இருந்தாலும் அவர் ஒரு ‘தலித்’ என்றால் அவர் புனித இடத்துக்கு வந்து சென்றதும் அந்நிலத்தின் தீட்டுக் கழிக்கும் செயல் நடப்பதை இன்றும் காண்கிறோம்.

நீர்:

தூய நீர் மின்சாரம் கடத்தாது. அதில் கரைந்துள்ள அயனிகளால்தான் அவை மின் கடத்தியாக மாறுகிறது. இதேபோல் தூய மானுடம் தீட்டுக் கடத்தாது. ஆனால் அதற்குள் சாதி கரைந்தால் தீட்டுக் கடத்தியாக மாறுகிறது. சாதியம் கரைந்துள்ள சனாதன மதம் நீரையும் தீட்டுக் கடத்தியாக மாற்றியுள்ளது. ஒரு தாழ்த்தப்பட்டவர் நீரைத் தீண்டினால் அது தீட்டாகி விடுகிறது. ஆனால் அதே நீரால் அவரிருந்த இடத்தைக் கழுவினால் தீட்டு நீங்கி விடுகிறது. இந்த அரிய கண்டுப்பிடிப்புக்கு எப்படி இன்னும் நோபல் பரிசு வழங்கப்படாமல் இருக்கிறது என்று தெரியவில்லை ?

‘சண்டாளனுடைய கிணற்று நீரைச் சண்டாளர்களே அனுபவிக்க முடியும்’ என்றது அர்த்த சாஸ்திரம் (1:14). கிணறு மட்டுமல்ல தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிக் குளங்களும் ஒதுக்கப்பட்டு, பொதுக் குளங்கள் தீண்டாமையைக் கடைப்பிடித்தன. மகாராட்டிரா மகார் நகரின் ‘சௌதார் பொதுக்குள’த்தில் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் தலித் மக்கள் திரண்டு நீரெடுத்த வரலாற்றை அறிவோம். அதன் பின்னரும் ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தது. சௌதார் குளத்து நீர் தீட்டானதால் பார்ப்பனர்கள் அக்குளத்திலிருந்து 108 குடம் நீரெடுத்து, சாணம், கோமியத்தை அதில் கரைத்து மீண்டும் குளத்தில் கொட்டி, தீட்டை நீக்கினர் (ஆ.சிவசுப்பிரமணியன், 2016). ஏனெனில் தீட்டான நீருக்கு ‘பஞ்சகவ்யம்’தான் தீட்டுநீக்கி என்று ‘சம்வார்த்த ஸ்மிருதி (183) கூறியுள்ளது (தி.கு. இரவிச்சந்திரன், 2014).

குளங்களில் மட்டுமல்ல ஓடுகின்ற நீரான ஆறுகள் வாய்க்காலிலும் சாதிகள் இருந்தன. தமிழகத்தில் சேரிகள் எப்போதும் பள்ளமான பகுதியிலேயே அமைந்திருந்தன. இதுவும் நீர்த் தீண்டாமையே. ஊரின் மேட்டுப்பகுதியில் வசித்த உயர்சாதியினர் புழங்கிய நீரைதான் பள்ளப் பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்துமாறு வசிப்பிடங்கள் அமைக்கப் பட்டிருந்தன. ஓர் ஊரின் தாழ்த்தப்பட்ட மக்கள் புழங்கிய நீர்தானே அதற்கடுத்த ஊரின் மேட்டுப் பகுதிக்குச் செல்லும்? அங்குள்ள உயர்சாதி மக்கள் அதைத் தானே பயன்படுத்த வேண்டும்? என்ன அறிவோ தெரியவில்லை!

‘அன்று டைனசோர் குடித்த நீரைத்தான் இன்று நாம் குடிக்கிறோம்’ என்கிறது அறிவியல். உலகம் தோன்றியபோது இருந்த நீர் மூலக் கூறுகளே இன்றும் நீர்ச்சுழற்சியில் சுழன்று வருகின்றன. உண்மையைச் சொன்னால் அது டைனசோரின் சிறுநீரில் இருந்த மூலக்கூறாகவும் இருக்கலாம். நாம் குடித்த நீர் மூலக்கூறுகளை விலங்குகளும் குடிக்கலாம். அவ்வகையில் ஒவ்வொரு மனிதரும் பிறர் குடித்த நீரையே குடிக்கின்றோம். இதில் சாதி கலந்த நீர் மூலக்கூறினை எப்படிக் கண்டுப்பிடிப்பது?

நாம் விடும் மூச்சுக் காற்றிலும் நீர் மூலக் கூறுகள் உண்டு. மூச்சுக் காற்று எல்லா மனிதர்களின் மூச்சிலும் புகுந்து வெளிவருகிறது. ஒரு தாழ்த்தப்பட்டவரின் மூச்சில் புகுந்து வெளிவந்த நீர் மூலக்கூறுகள்தான் ஆதிக்கச் சாதியினரின் மூச்சிலும் புகுந்து வெளிவருகிறது. இதற்காக மூச்சு நிறுத்திக் கொள்ளப்படுமா? நீர்த் தீண்டாமை குறித்துப் பேசுவது எல்லாம் வேத இலக்கியம்தான், நம் சங்க இலக்கியங்கள் அல்ல என்பதைச் சாதியத் தமிழர்கள் நினைவு கொள்ள வேண்டும்.

தீ:

வைதீக வழிபாடு என்பது ‘அக்னி’ வழிபாடு. குளிர்ப் பகுதியில் வசித்தபோது ‘சூரிய பகவான்’ இல்லாத நேரங்களில் வெம்மைக்கு ‘அக்னி பகவான்’ உதவியாக இருந்தார். அது வழிபாட்டிலும் எதிரொலித்தது. ஒவ்வொரு வழிபாட்டு நிலைக்கும் தீ மூட்ட வேண்டும். அத்தீயிடையே படையல்கள் கொட்டப்பட வேண்டும். அவை கடவுளர்களால் உண்ணப்படும் (பி.டி.எஸ்.அய்யங்கார், 1989).

அக்னி வழிப்பாட்டின் சடங்கியல் முறை பின்னர்க் கருத்தியல் நிலைக்கு நகர்த்தப்பட்டது. சதி எனும் உடன்கட்டை ஏறுதலில் பெண் தீயில் தள்ளப்பட்டு தெய்வத் தன்மை பெற்றாள். உடன்கட்டை ஏறுதலிலும் அக்னி பகவான் சாதி வேறுபாடு காட்டினார். கி.பி. ஆயிரமாம் ஆண்டளவில் எழுதப்பட்ட பத்ம புராணம் சத்திரியப் பெண்கள் உடன்கட்டை ஏறினால் மேன்மையானவர்கள் என்றது. அதே செயலை பார்ப்பனப் பெண்கள் செய்யக்கூடாது. அவ்விதம் செய்ய உதவுபவர்கள் ‘பிரம்மஹத்தி’ (பார்ப்பனக் கொலை) செய்தவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று அச்சுறுத்தியது. இதுபோல்தான் தீக்குளிக்கும் செயலும் (அல்லது சோதியில் ஐக்கியமாதல்) பறையரைப் பார்ப்பனராக உயர்த்தியது (டோனி வெண்டிகர், 2016).

அக்னிதான் காடுகளை வேளாண் நிலமாக்க அவற்றை எரித்துக் காட்டுயிர்களையும் பழங்குடிகளையும் அழித்தது. பிழைத்தவர்கள் ‘அவர்ணகள்’ ஆக்கப்பட்டனர். இதனாலேயே பழங்குடி மக்களுக்கு அக்கினி வழிபாடான ‘வேள்வித்தீ’ மீது எதிர்ப்புணர்வு இருந்தது. இதை இராமயணத்தில் காணலாம். முனிவர்களின் ஆரண்ய வாசத்தின்போது அவர்கள் நடத்திய வேள்வியைப் பழங்குடிகள் எதிர்த்தனர். இராமனிடம் உதவி கேட்டு சென்ற முனிகள், “தெய்வத் தன்மை வாய்ந்த வேள்வித் தீயில் பலி உணவுகளைப் படைக்கும் நிலையில் யாகக் கலசத்தைத் தூக்கி எறிகின்றனர். தண்ணீர் ஊற்றி வேள்வித் தீயை அணைக்கின்றனர். பானைகளையும் உடைத்தெறிகின்றனர்” என்று புகார் தெரிவித்தனர். இது ஆரியரின் தீ வழிபாட்டு முறைக்கு இருந்த எதிர்ப்பின் பதிவாகும். தொடர் விளைவாகப் பாரதப் போருக்கு பின்னர் ‘தீ’ வழிப்பாட்டு முறை வழக்கிழந்தது என்கிறார் பி.டி.சீனிவாச அய்யங்கார் (பி.டி.எஸ்.அய்யங்கார், 1989).

காற்று:

தீண்டாமையின் முற்றிய நிலை காற்றுத் தீண்டாமை. சண்டாளர் மீது பட்ட காற்று, தம் மேல் பட்டால் தீட்டு எனப்பட்டது. எனவே காற்று வரும் திசையில் அவர்கள் வரக் கூடாது. சண்டாளர்களைத் தொட்ட காற்று ஊருக்குள்ளும் வரக் கூடாது என்பதால் நடைமுறையில் காற்றடிக்கும் திசை பார்த்து ‘சேரி’ உருவாக்கப் பட்டது.

காற்று தீண்டாமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு பிட்சாடனர் உருவம். முன்பு சண்டாளர்கள் ஊருக்குள் வருவதை அறிவிக்க, கால்களில் மணிகளைக் கட்டும் வழக்கம் இருந்துள்ளது. அந்த மணியோசை காற்றில் பரவி சண்டாளரின் வருகையை ஊருக்குள் அறிவிக்கும். உடனே மேல்சாதி மக்கள் தங்களை அவர்களுடைய பார்வையிலிருந்து மறைத்துக் கொள்வர். சோழர் கால வெண்கல படிமங்களில் சிவன் பிட்சாடனர் மூர்த்தியாக வரும்போது அவருடைய ஒரு காலில் மணி கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். பிட்சாடனர் என்பது சண்டாளரின் வடிவம் (டோனி வெண்டிகர், 2016).

வானம்:

வானில் என்ன வகையான தீண்டாமை இருக்க முடியும்? என்ற கேள்வி எழலாம். எல்லா தெய்வலோகங்களும், சொர்க்கமும் நரகமும் அங்கேதானே உள்ளன. இவற்றில் நரகம்தானே சூத்திரர்களுக்கான ‘இட ஒதுக்கீடு’. ஆகாயம் எப்போதுமே பரிசுத்தமான இடம். ஒருமுறை விஸ்வாமித்திரர் சண்டாளன் கையிலிருந்த நாயின் முழங்கால் மாமிசத்தை வாங்குகிறார். ஆனாலும் பாபம் அவரை அண்டவில்லை (மனு.10:97). இதை விளக்கும்போது மனு கூறுகிறார்: “ஆகாசத்தில் வீசப்பட்ட சேறு ஆகாசத்தை அழுக்காக்க இயலுமா? அவ்வாறே பார்ப்பனரும் தூய்மை கெட மாட்டார் (மனு.10:93). இங்குப் பார்ப்பனரின் தூய்மையுடன் வானம் ஒப்பிடப்படுவதை நோக்கவும். அவ்வகையில் வான்வெளி பார்ப்பனருக்குரிய ‘பரிசுத்த’ இடமாக மாற்றப்படுகிறது.

வேதகாலப் பார்ப்பனியத்தின் பிரபஞ்சமாகக் கிராமம், குழுமம், குடும்பம், வேள்வி ஆகியவை இருந்தன. சமகாலப் பார்ப்பனியத்தில் நவீன அரசும் இந்து தேசியமும் அதன் பிரபஞ்சமாக அமைந்துள்ளன. முன்பு அவர்களிடத்து இருந்த வேள்வி செய்யும் உரிமை தற்காலத்தில் உயர் அறிவியல் துறையின் உரிமையாக மாற்றம் பெற்றுள்ளது. உயர் அறிவியல் துறை அவர்களுடைய எழுதப்படாத உரிமையாக மாறியுள்ளது (ராமானுஜம், 2016). குறிப்பாக அணுவாற்றல் துறையில் ஆபத்தான கீழ்மட்ட பணிகளைச் செய்பவர்களை, ‘ஒளிரும் அடிமைகள் (Glow Slaves) என்றழைப்பர். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களாகவோ, ஏழைகளாகவோ உள்ளனர். ஆனால் உயர்பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலோர் பார்ப்பனராகவே உள்ளனர். (சுப.உதயகுமார், 2013). இது வான் தீண்டாமையின் அடையாளமே!

* * *

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் தீண்டாமையும்

தீண்டாமை இரு வடிவங்களில் இயங்கும். ஒன்று அகச்சார்பு (Subjective) தீண்டாமை. மற்றொன்று புறச்சார்பு (Objective) தீண்டாமை. தன்னைப் புனிதமாக்கிக் கொள்ள மற்றமையை விலக்குவது அகச்சார்புத் தீண்டாமை. மலம், மனிதர் போன்றவை அந்த மற்றமையாகும். புறச்சார்புத் தீண்டாமை என்பது புனிதத்தில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வது. கோவில், வழிப்பாட்டுப் பொருட்கள் போன்றவையே அப்புனிதம். இவ்விரண்டிலும் அகச்சார்பு தீண்டாமையே வழக்கத்தில் மிகுந்துள்ளது (தி.கு.இரவிச்சந்திரன், 2014).

இருவகைத் தீண்டாமையிலும் ‘தூய்மை’யே மையப் பங்கு வகிக்கிறது. தூய்மை சுற்றுச்சூழலோடு தொடர்புடையது. காட்டில் வாழும் சில விலங்குகளைத் ‘துப்புரவு விலங்குகள்’ என்றழைப்பர். அவற்றின் பணி சூழல் மாசடையாமல் காப்பதே. புலி தன் இரைவிலங்கை வீழ்த்தினால் அதன் இறைச்சியை முழுமையாக உண்ணாது. பசிக்குப் போக மீதியை வைத்துவிடும். அவ்விலங்கின் பிணம் அப்படியே கிடந்தால் நச்சுயிரிகள் பெருகி மற்ற உயிரினங்களுக்கு ஆபத்தாகிவிடும். இந்நிலையில்தான் ‘துப்புரவு விலங்குகள்’ உதவிக்கு வருகின்றன. செந்நாய்கள் மீதி இறைச்சியைத் தின்னும். அவை மிச்சம் வைத்ததைப் பாறு முதலிய கழுகுகளும் காகங்களும் தின்னும். எலும்பையும் தோலையும் தின்ன கழுதைப்புலி வரும். கடையில் துளியும் தடயமின்றி எறும்புகள் தூய்மையாக்கி விடும். எனவே துப்புரவு விலங்குகளுக்குச் சூழலியலில் பெரும் மதிப்புண்டு. ஆனால் இதே சூழல் காக்கும் துப்புரவுப் பணியை மனிதர்கள் செய்தால் சாதிய சமூகத்தில் அவர்கள் இழிபிறவிகள் ஆக்கப் பட்டனர்.

நம் ஊரமைப்பில் ‘கழிப்பிடம்’ வீட்டுக்கு வெளியே அமைந்திருந்தது. இதனால்தான் ‘வெளி’க்கு போவது என்பது மலம் கழிக்கச் செல்வதைக் குறித்தது. புழங்குவெளி மிகுதியாகவும் மக்கள் தொகை குறைவாகவும் இருந்த ஒரு வெப்ப மண்டல நாட்டில் இவ்வழக்கமும் அன்று இயல்பாக இருந்தது. இந்தச் சூழலியல் அமைவுதான் சாதியமாக உருவெடுத்தது. உடலிலிருந்து வெளியேறும் மலம் எவ்வளவு தூய்மையற்றதோ அந்தளவுக்குச் சமூகக் கட்டமைப்புக்கு வெளியிலிருந்த சண்டாளர்களும் தூய்மையற்றவர்கள் ஆக்கப்பட்டனர். அவர்கள் மலத்தோடு ஒப்பிடப்பட்டனர். இந்தத் தீண்டாமை நிலை குறித்துப் பெரியார் வேதனையுடன் சொன்னார்: “மல உபாதைக்குச் சென்றவன் அந்தப் பாகத்தை மட்டும் கழுவிச் சுத்தம் செய்கிறான். ஆனால் இன்னொரு மனிதரைத் தொட்டுவிட்டால் உடல் முழுக்க நனைத்துக் குளிக்கிறான்” (29.09.1929).

உண்மையில் ஈக்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதைகூட மனிதருக்கு வழங்கப்படவில்லை. ஈக்கள் மலத்தில் அமர்பவை. அவற்றுக்கு என்ன தீட்டு வைத்துள்ளனர் என்று பார்த்தால் அவை அழுக்கில் அமர்பவையாக இருந்தாலும் ஈக்கள் மேலே அமர்ந்தால் குளிக்க வேண்டியதில்லை என்கிறார் மனு (5:133).

மலம். சிறுநீர், சளி, எச்சில், மாதவிலக்கு ஆகிய உடல் கழிவுகள் அனைத்தும் தூய்மையற்றவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவற்றுக்குச் சாதி இருந்ததுதான் கொடுமை. பார்ப்பனரின் எச்சிலாக இருந்தால் அதனைச் சூத்திரன் கையேந்தி வாங்க வேண்டும் என்று ஆபஸ்தம்பத் தர்ம சூத்திரம் கூறுகிறது (ஜோசப் இடமருகு, 2017). இந்த அநீதிக் கண்டு ஆத்திரமடையும் ஒரு சூத்திரர் பார்ப்பனரைப் பார்த்து காரி உமிழ்ந்தால் என்ன தண்டனைத் தெரியுமா? அவருடைய உதடுகளை அறுக்க வேண்டும் (மனு. 8:282).

மொத்தத்தில் புனிதம் X தீட்டு என்கிற கருத்தாக்கம் இயற்கையின் சொத்துக்களைக் கைப்பற்றிச் சுற்றுச்சூழலின் மீது ஆதிக்கம் செலுத்தவே உருவாக்கப்பட்டிருப்பது தெளிவு. பார்ப்பனர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இது மற்ற சாதியினரிடையேயும் பரவியதன் விளைவாக இன்று நீர், நிலம் இரண்டுமே ஆதிக்கச் சாதியினரின் உடமையாக விளங்குகிறது. இதனால் இவர்கள் தம்மைப் பார்ப்பனர் தகுதிக்குக் கற்பனை செய்து கொள்கிறார்கள்.

ஒன்றை தெளிவாக அறிதல் நலம். பார்ப்பனர் தூய்மையானவர் என்பதால் ‘சவர்ணர்’ என அழைக்கப்பட்டனர். சதுர்வர்ணத்துக்கு உட்பட்டிருந்தாலும் சூத்திரர் தூய்மையானவர் அல்ல. அவர்ணர் எனப்படும் சண்டாளரைக் காட்டிலும் கொஞ்சம் தூய்மையானவர், அவ்வளவுதான். மொத்தத்தில் இருவரும் இழிபிறப்பே. அதிலும் தென்னிந்தியர்கள் அனைவரும் சூத்திரரே என்று உச்ச நீதிமன்றமே உறுதி செய்துள்ளது.           

(தொடரும்)

- நக்கீரன்

Pin It