பீஸ் வஸ்சீலியெவ் எழுதிய “அதிகாலையின் அமைதியில்’ என்ற ரஷ்ய நாவலை அடிப்படையாகக் கொண்டு எஸ்.பி. ஜனநாதன் திரைக்கதை, இயக்கத்தில் வெளி வந்துள்ள திரைப்படம் பேராண்மை.
 
ஐந்து பெண்கள் ஒரு இராணுவத் தளபதி தலைமையில் செர்மன் பாசிஸ்டுகளின் சதித் திட்டத்தை முறியடிக்கும் சாகசம்தான் அதிகாலையின் அமைதியில் கதையின் மையக்கரு. இதே பாணியில் இந்திய அரசிற்கு எதிரான வெளிநாட்டவரின் சதித்திட்டத்தை முறியடிக்கும் கதைதான் பேராண்மை. தமிழகச் சூழலுக்கு ஏற்ப கதையும் களமும் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக வெள்ளிமலையில் இருந்து ‘பசுமை’ என்ற செய்மதி (சாட்டிலைட்) அனுப்பத் தயாராக உள்ளார்கள். பழங்குடி சமூகத்தில் பிறந்த துருவன் (‘ஜெயம்’ ரவி) இடஒதுக்கீட்டில் படித்து முள்ளிமலை கல்லூரியின் என்.சி.சி. பயிற்சியாளராக உள்ளார். இவரிடம் பயிற்சிக்கு வரும் ஐந்து பெண்களை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் ஜீப்பில் செல்கிறார். வாகனம் விபத்துக்குள்ளாகிறது. இதனால் இரவு காட்டில் தங்க நேரிடுகிறது. ஐந்து பேரில் ஒரு பெண் காட்டில் வெளி நாட்டவர் நடமாட்டத்தைப் பார்க்கிறாள். துருவனிடம் சொல்கிறாள்.

வெள்ளிமலையில் இருந்து செலுத்தப்பட உள்ள செய்மதியைத் தடுப்பதற்காக வந்துள்ள வெளிநாட்டு கூலிப்படையினரைத் தடுத்து நிறுத்தத் திட்டம் போட்டு செயல்படுகின்றனர். 16 வெளிநாட்டு கூலிப்படையினரை இந்த 6 பேரும் எப்படித் தாக்கி அழித்து வெற்றி பெறுகின்றனர் என்பதுதான் பேராண்மை படத்தின் மையக்கரு.

இந்தியா ஒரு விவசாய நாடு. பசுமைப்புரட்சி என்ற பெயரில் இரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி மண்ணை மலடாக்கியுள்ளனர். அதிக மகசூல் வரும் என்று பன்னாட்டு கார்கில், மன்சாண்டோ கம்பெனிகளின் விதைகளை அறிமுகப்படுத்தினர். மகசூல் வரவில்லை. மாறாக விதைத்த விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைதான் அதிகமானது.

மரபணு மாற்றப்பட்ட அமெரிக்காவின் மன்சாண்டோ நிறுவனம் தயாரித்த பி.ட்டி காட்டன் என்ற பருத்தி விதை அதிக விளைச்சல் கிடைக்கும் என்ற ஆசையூட்டப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை நம்பி பயிரிட்ட மராட்டிய விதர்பா, ஆந்திராவின் பகுதி விவசாயிகள்தான் கடனாளியாகத் தற்கொலை செய்து கொண்டுமடிந்தனர். இந்தச் செடிகளைத் தின்ற ஆயிரக் கணக்கான கால்நடைகள் இறந்தன.

இயற்கையாக நமது பாரம்பரிய விதைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. எம்.எஸ். சுவாமிநாதனின் தவறான விவசாயக் கொள்கையால் மண்μம் மலடாகி விவசாயிகள் வாழ்வும் கேள்விக்குறியாக உள்ளது. தற்சமயம் மகிகோ என்ற பன்னாட்டு நிறுவனம் தயாரித்துள்ள மரபணு மாற்று கத்திரிக்காய்க்கு மத்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி தந்துள்ளது. மத்திய அரசு ஒப்புதல் தரவேண்டும்.
 
விதைகளற்ற இந்த மரபணு கத்திரிக்காய் விவசாயிகளை மேலும் பாதிக்கும். அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக உழவர்கள் இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாகப் போராடி வரும் சூழலில், இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாக கருத்து களைப் பரப்பும் வகையில் வெளி வந்துள்ள பேராண்மை திரைப்படம் வரவேற்புக்குரியது.
 
மண்ணை மலடாக்கிவிட்டு நம் வாழ்க்கை மட்டும் எப்படிச் சிறக்கும்? என்ற கேள்வி மூலம் இயற்கை வேளாண்மைக்கு மக்களைத் திரட்டுகிறது இப்படம். தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்ற கருத்தை மாற்றி வெளிநாட்டினரைக் காட்டியிருப்பது பாராட்டிற்குரியது.
 
இயக்குநர் ஜனநாதன் தமது உரையாடல் மூலம் தமது சமூக சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார். இடஒதுக்கீடு மூலம் படிப்பவர்கள் திறமை குறைவானவர்கள் என்று கருத்து பரப்பும் திரையுலகினர் நடுவில், பழங்குடி சமூகத்தில் பிறந்த ஒருவன் இடஒதுக்கீட்டில் படித்து எப்படிச் சாதிக்கிறான் என்பதைச் சிறப்பாகச் செய்துள்ளார்.

பெண்களைக் கவர்ச்சிப் பொருளாக மட்டும் காட்டும் திரையுலகில் அவர்களைப் போராளி களாக மாற்றியுள்ளது வரவேற்கத்தக்கது.

உழைப்பை, உழைப்பின் மதிப்பை, உபரி மதிப்பை அரசியல் பொருளாதாரம் தொடர்பான வகுப்பறையில் ஒருசில நிமிடங்கள் விளக்குகிறார். தமிழ்த் திரையுலகில் வகுப்பறை என்றாலே தமிழையும், தமிழாசிரியரையும் கிண்டலடிக்கிற வகையில்தான் பெரும்பாலும் இருக்கும். இந்த நிலையில் இருந்து மாறுபட்டு மார்க்சியப் பாடத்தை எளிய முறையில் விளக்கியிருப்பதற்காக இயக்குநர் ஜனநாதனைப் பாராட்டலாம்.

நீங்க ஏன் ஆங்கிலம் பேசுவதில்லை என்று ஒரு மாணவி கேட்கும்போது, “நான் ஆங்கிலம் பேசினா எங்க சனங்களுக்குப் புரியாது, உங்களுக்கும் பிடிக்காது” என்று பழங்குடிஇனக் கதாநாயகன் துருவன் பேசும் வசனம் அருமை.
 
அரசியல் பொருளாதரத்தைப் புரிந்து கொள்ளாமல் இனம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. பொதுவுடைமை அரசியலைப் படிக்க முடியாது என்பது போன்ற வசனங்கள் நன்று.

துருவன் வேடத்தில் ‘ஜெயம்’ ரவி அற்புதமாகப் பொருந்தியுள்ளார். இதுவரை அவர் நடித்த படங்களில் இருந்து மாறுபட்டு புதிய தோற்றத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கோவணம் கட்டிக்கொண்டு எருமை மாட்டுக்குப் பேறு (பிரசவம்) பார்க்கும் காட்சி இயல்பாக உள்ளது. நாயக பிம்பத்தைப் (ஹீரோ இமேஜ்) பார்க்காது கதைக்காகத் தன்னை மாற்றியிருப்பது நல்லது.

சாதியைச் சுட்டிக் காட்டி உயர்வகுப்பு மாணவிகள் இழிவுபடுத்தும் போதும், உயர் அதிகாரி இழிவுபடுத்தும் போதும் தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

உரையாடலை உச்சரிக்கும் முறை, சண்டைக்காட்சி - என்று இன்னும் பல வகைகளில் மாறுபட்டு நடித்துள்ளார். மாணவிகளாக வரும் ஐந்து பேரும் சரியான தேர்வு. ஊர்வசி, பொன்வண்ணன், ஊனமுற்ற பழங்குடி இளைஞராக வரும் குமர வேலு உள்ளிட்டோர் சிறப்பாக நடித்துள்ளனர். வடிவேலு நடிப்பு ஊறுகாய் போல. ஓவியர் மருதுவும் நடித்துள்ளார். வனத்துறை அதிகாரி பழங்குடி மக்களைத் தாக்குகிற காட்சி, வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை நடத்திய அட்டூழியத்தை நினைவுபடுத்துகிறது.

கல்லூரி மாணவிகளின் வீரச்செயல்கள் ஈழவிடுதலைப் பெண் போராளிகளை பிரதிபலிக்கிறது. மாணவி ஒருத்தி இறந்தவுடன் அவளைப் புதைத்துவிட்டு துப்பாக்கி வைக்கும் காட்சி ஈழத்தை மனக்கண்முன் கொண்டுவருகிறது.

சதீஸ்குமாரின் ஒளிப்பதிவு அருமை. பின்னணி இசையில் வித்யாசாகர் இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாம். சில இடங்களில் வரும் இரட்டைப் பொருள் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.
 
திரைப்படம் என்ற தளத்தைக் கடந்து சிந்தித்தால்... இப்படம் முன் வைக்கும் அரசியல் மிக விரிவானது. பொதுவுடைமைக் கருத்தியல் மட்டுமின்றி, சூழலியல், இயற்கை வேளாண்மை, பெண்ணியம், சாதியம் உள்ளிட்ட தளங்களிலும் கதை நகர்கிறது. இது இயக்குனரின் நேர்மையான பிடிவாதத்தைக் காட்டுகிறது. அவர் விரும்பிப் புகுத்திய இக் கருத்தியல் கூறுகள், உறுத்தலாக இல்லாமல் கதையோடு இயைந்து விட்டன.

இவற்றைத் தவிர, இப்படம் பற்றி நாம் சில மறுப்புரைகளையும் முன்வைக்கிறோம்.

1. இந்தியா ‘இயற்கை வேளாண்மை’க்காக செய்மதி (சாட்டிலைட்) அனுப்பும் என்று இயக்குனர் உண்மையிலேயே நம்புகிறாரா? அமெரிக்காவே அனுமதிக்காத பி.ட்டி விதைகளை அனுமதித்து வேளாண் தொழிலை இரசாயனப் பெருந்தொழிலுக்குப் பலி கொடுக்கும் நாடு அல்லவா இந்தியா!
 
2. ’நாம் ரெண்டு பேரும் அடிச்சிக்கிறதுக்கு நாம காரணமில்ல. மூணாவதா ஒரு சக்தி இருக்கு’ என்று பசுமை விகடன் நேர்காணலில் கூறியுள்ளார் இயக்குனர். பெரும் பொருளாதாரத்தில் எல்லா ஒடுக்குமுறைகளும் ஏகாதிபத்திய நாடுகளின் இறக்குமதிதான் என்ற பார்வை அவருக்கு இருப்பதை இது உணர்த்துகிறது.

இந்தியா எனும் அரச வடிவம் ஓர் ஒடுக்குமுறைக் கருவியாகவும் சுரண்டல் ஆயுதமாகவும் இருப்பதை இயக்குனர் கவனிக்கத் தவறுகிறார். அவரது முந்தைய படமாகிய ஈ-யிலும் இத்தன்மை இருந்தது.

பேராண்மையில் இக்கருதுகோளை மிக விரிவாகவும் வெளிப்படையாகவும் அறிவித்திருக்கிறார். எந்த ஏகாதிபத்தியத்திற்கும் புறக் காரணிகளும் உண்டு; அகக் காரணிகளும் உண்டு என்பதே இயல்பு. அமெரிக்காவின் பெரும்பகுதி மக்கள் இன்று வேலையில்லாமை, வறுமை, மருத்துவ வசதியின்மை ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்காவும் காரணம் ‘சீனா’ உள்ளிட்ட பிற பெருமுதலாளியச் சுரண்டல் நாடுகளும் காரணம்.
 
இந்தியாவிலிருந்து போய்க்குவியும் பிழைப்புதேடிகளும் காரணம்தான். இவர்களும் சேர்ந்துகொண்டுதான் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கின்றனர். அதற்காக... அமெரிக்காவில் நிலவும் வறுமைக்கு அமெரிக்கா காரணமாக இல்லாமல் போய்விடுமா? முதல் குற்றவாளி அமெரிக்காதானே!

இந்தியா எனும் அரச வடிவம் தன்னளவிலேயே ஓர் ஒடுக்கு முறைக் கருவியாகவும் இருக்கிறது. தன் ஒடுக்குமுறையை வலுப்படுத்திக் கொள்ளவும் சுரண்டலைப் பெருக்கிக் கொள்ளவும், தன் வர்க்க-இன நலன்களை நிலை நிறுத்திக் கொள்ளவும் இந்தியா பிற ஏகாதிபத்தியங்களை நாடுகிறது. பிற ஏகாதிபத்தியங்கள் சுரண்டிக் கொள்ள வழி வகுக்கிறது. குறிப்பாகவே கூற வேண்டுமெனில்...

உலகமயப் பொருளாதாரம் எனும் கருத்தியல் ஆதிக்கம் தோன்றும் முன்புதான் ‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரால் இந்தியா இந்திய மரபு வேளாண்மையை ஒடுக்கியது. பசுமைப் புரட்சி எனும் ஆயுதம் இந்திய வேளாண்மை மீது பாய்ச்சப்பட்டதன் காரணம் இந்திய அரச வடிவத்தின் சுரண்டல் தன்மையே தவிர, நேரடி அந்நிய ஏகாதிபத்திய ‘நெருக்குதல்’ அல்ல!
 
இந்திய வர்க்க - சாதி ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் சுரண்டல்களுக்காக வேளாண் துறையில் அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய சக்திகளை அனுமதித்தனர். பசுமைப் புரட்சியில் இந்திய ஏகாதிபத்தியமும் பலனடைந்தது. அது முழுமையான இறக்குமதியோ சதியோ அல்ல!

இந்தச் சிக்கலில் இயக்குனர் தீவிரப் பரிசீலனை செய்யாவிட்டால்...

அவரது தொடர் உழைப்பும் ஈகங்களும் ‘இந்தியா எனும் ஒடுக்கு முறை கருவி’யைக் காப்பாற்றவே பயன்படும். உயிரைப் பணயம் வைத்து செய்மதியைக் காக்கும் துருவன் பரிதாபமாக தன் வழமையில் ஈடுபட.. சாதி வெறி பிடித்த கணபதிராம் எனும் அயோக்கியனுக்கு இந்திய அரசு விருது வழங்குவதாக இறுதிக் காட்சியைச் செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.
 
’எங்கள் உயிர்களைக் கொடுத்தேனும் இந்தியாவைக் காப்போம்’ என்று அப்போதும் துருவன் முழங்குவான். இது ஐயமில்லாமல், இந்தியா மீதான சாட்டையடிதான். ஆனால்... இந்தியாவை ஏற்றுக் கொண்டு செய்யும் விமர்சனமாக மட்டுமே இது உள்ளது. இயக்குனர் மார்க்சியம் படித்தவர் என்பதால் அவருக்கும் தெரிந்த மொழியில் சொல்கிறோம்;

‘இந்தியாவை நேச முரணாக அணுகுகிறார் இயக்குனர். மாறாக, இந்தியா தமிழருக்கும் பிற தேசிய இன உழைக்கும் மக்களுக்குமான பகை முரண்’ என்பதை அவர் ஆய்ந்து உணர வேண்டும். இந்தியா எனும் அரச ஒடுக்குமுறை வடிவம் தகர்ந்தால் மட்டுமே...தேசிய இன, வர்க்க விடுதலை கிடைக்கும். இந்தப் பார்வை இன்றி இயங்கினால், நாமும் அப்பாவி துருவன்களாகவே முழங்கிக் கொண்டிருப்போம், இறுதி வரை!

(தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

Pin It

இயற்கை விவசாயத்தை அதிநுட்பத்துடன் பயன்படுத்த ஒரு செயற்கைக் கோளை விண்வெளியில் செலுத்துவதற்கான நேரத்தை குறிக்கிறது விண்வெளி ஆராய்ச்சி மையம். இதைத் தடுக்க சர்வதேச கூலிப்படை தயாராகும் பொழுது ஒரு நாள் பயிற்சிக்காக காட்டிற்குச் செல்லும் ஐந்து என்.சி.சி. மாணவிகளும் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்பாளராகவும் செல்லும் வனக்காவலரும் கூலிப்படையின் முயற்சியை எவ்வாறு தடுத்து நிறுத்துகின்றனர் என்பதுதான் படத்தின் மையக் கருத்து.

புழங்குடி இன மக்களின் வாழ்க்கை, காடு குறித்த அவர்களின் ஞானம், வன இலாக்கா அதிகாரிகளின் கொடுமை, மேட்டுக்குடி வர்க்கத்தினரின் இயல்பு கலாச்சாரம், இடஒதுக்கீட்டில் வேலைக்கு வருபவர்கள் பற்றிய அவர்கள் பார்வை, இடஒதுக்கீட்டில் வேலைக்கு வருபவர்களை அதிகாரிகள் நடத்தும் விதம், சிறுபான்மையினரின் நாட்டுப்பற்று, உழைக்கும் வர்க்கக் காதல், பெண்ணுரிமை, கொரில்லா போர்முறையின் நுணுக்கங்கள், ஏகாதிபத்திய சதி, விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் இத்தனை செய்திகளையும் பிரச்சாரமாக இல்லாமல் கதையின் போக்கில் சொல்லிச்சென்றிருப்பது மிகுந்த பாராட்டுதற்குரியது.

சமூகத்தில் நிலவும் சூழ்நிலைகளை யதார்த்தமான படைப்பாக்கும்போது அவை உயிர்த்துடிப்பு மிக்கவையாக இருக்கின்றன என்பதற்கு திரைப்படமும் விதிவிலக்கல்ல.

கதையின் நாயகன் துருவன் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன். இடஒதுக்கீட்டின் மூலம் வேலைக்குச் சேர்ந்தவன் என்பதால் வன அதிகாரியால் பல முறை அவமானப்படுத்தலுக்குள்ளாகிறான். தலித் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களின் மீதான தங்களது வன்மத்தை பணியிடங்களில் அதிகார வர்க்கத்தினரான ஆதிக்க சாதியினர் எவ்வாறு தீர்த்துக் கொள்கின்றனர் என்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பழங்குடியின மக்களுக்கெதிராக வன அதிகாரிகள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதற்கும் வனச்சரகர் கணபதிராம் கதாபாத்திரம் சிறந்த உதாரணம்.

பொதுவுடைமைவாதியாக படத்தில வரும் வனக்காவலர் துருவன் ஒரு பொருள் உற்பத்தியாவதில உழைப்பின் முக்கியத்துவம் உபரி மதிப்பு மூலதனத்தின் சுரண்டல் மாச்க்சியம் என வகுப்பறையில் என்.சி.சி. மாணவிகளுக்கு நடத்தும் பாடம் அனைத்து மாணவர்களாலும் புரிந்துகொள்ளப்படவேண்டிய ஒன்று ஆகும். எங்களுக்கு இந்தப்பாடம் தேவையில்லை துப்பாக்கி எப்படி சுடுவது என்ற பாடம் நடத்துங்கள் என்று 5 மாணவிகள் கேட்கும்பொழுது ‘அரசியல் பொருளாதாரம் தெரியாமல் இனம் மொழி கலாச்சாரம் எதையும் காப்பாற்ற முடியாது’ என்ற துருவனின் பதிலில் மார்க்சியம் என்ற சமூக அறிவியலை புரிந்து கொள்ளவேண்டியதன் அவசியம் அழுத்தமாக உணர்த்தப்பட்டுள்ளது.

பயிற்சி கொடுக்கும் பொழுது துருவனை கிண்டலடித்தல், துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது விரல்கள் தவறுதலாக படும்போது அருவருப்புடன் தடுத்தல், உணவு பரிமாறும்பொழுது அவன் கைபடும் உணவை உண்ண மறுத்தல், பாலியல் குற்றம் சுமத்தி தண்டனை பெற்றுக்கொடுத்தல், பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவன் எங்களுக்கு பயிற்சியாளனாக வேண்டாம் என மனுப்போடுதல் போன்ற செயல்களை செய்துகொண்டிருக்கும் அந்த ஐந்து மாணவிகளின் (ஒருவர் மட்டும் சம்மதிக்காமல்) செயல்கள் மூலம் மேல்தட்டு வர்க்க ஆதிக்க மனோபாவம் கலாச்சாரம் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. காட்டிற்குச் செல்லும் வழியில் மாணவிகள் காண்டம் வாங்குவதும் மேல்தட்டுவர்க்கத்தில் கலாச்சாரம் எவ்வாறு சீரழிந்து வருகிறது என்பதன் குறியீடுதான்.

இந்த ஐந்து மாணவிகளில் நான்கு பேர் தமிழை ஒரு பாடமாகக் கூட பள்ளியில் படிக்காதவர்கள் என்று காட்டுவதன் மூலம் தமிழ் மொழி புறக்கணிப்பு, ஆங்கில மோகம் ஆகியவை இன்றைய உயர் மத்தியதரக் குடும்பங்களின் மனோபாவம் என்ற யதார்த்தம் பதிவு செய்ய்பபட்டுள்ளது. ஆங்கில வழி பள்ளிகளில தமிழில் பேசினால் தண்டனை என்ற கொடுமை தற்போதும் நிலவி வருவதற்கு பரந்தளவில் எதிர்ப்புகள் இல்லை என்பதன் மூலம் இது நிரூபணமாகியுள்ளது.

அஜீதா என்னும் மாணவி இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவள் என்பது மட்டுமல்லாமல் அவள் தந்தை டெய்லர் என்பதன் மூலம் அவள் உழைக்கும் வர்க்கத்தைச் சர்ந்தவள் என்பதும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நான்கு மாணவிகளும் துருவனுடன் வெறுப்புடன் நடந்துகொள்ளும் பொழுது இவள் மட்டும் காதல் கொள்வதை வர்க்கப்பின்னணியுடன் எடுத்துக்காட்டியிருப்பது யதார்தத்தின் உச்சகட்டம். இன்றைய இந்திய முஸ்லீம்கள் எல்லாம் தேசத்துரோகிகள் என்ற பிரச்சாரத்தை காவிப்படையினர் செய்துகொண்டிருக்கும் வேளையில அந்நிய சக்திகளுக்கு எதிரான நாட்டைக்காக்கும் போராட்டத்தில் உயிரை இழக்கும் இரண்டு மாணவிகளில் ஒருவர் முஸ்லீம் என்று காட்டியிருபது மட்டுமல்லாமல் அவள் பெற்றோர்கள் அஜிதா இறந்தது கவலையாக இருந்தாலும் நாட்டிற்காக உயிர்விட்டிருக்கிறாள் என்பது பெருமையாக இருப்பதாகக் கூறுவது காவிப்படையினரின் மதவெறிப் பிரச்சாரத்துக்கு பதில் கூறுவது போல் உள்ளது.

என்.சி.சி. பயிற்சியின் ஒரு பகுதியாக கருவேல மரங்களை வெட்டிச் சாய்க்க துருவன் ஆணையிடும்பொழுது துப்பாக்கி சுட பயிற்சி கொடுப்பீங்கனா மரத்தை வெட்டச் சொல்றீங்களே என்ற ஒரு மாணவி கேட்பதற்கு விவசாயத்திற்கு ஆபத்து விளைவிப்பதையெல்லாம் களையெடுக்க வேணடும் என்றும் விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்காமல் வல்லரசாக முடியாது என்றும் துருவன் பதில் கூறுவது விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் விவசாயத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்காமல பாதுகாப்புச்செலவுகளுக்கு அதிக நிதி ஒதுக்கும இன்றைய மத்திய அரசின் கொள்கையின் மீதான நேரடியான விமர்சனமாக உள்ளது பாராட்டத்தக்கது. மேலும் இந்த இடத்தில் மரபீணி மாற்றுப் பயிர்களுக்கு எதிராகவும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம் விவசாய நிலங்கள் மலடாகி வருவதையும் பேசியிருப்பது காலத்திற்குப் பொருத்தமானதாக உள்ளது.

‘எதைக் கத்துக்கிட்டாலும் எதைப்படிச்சாலும் சர்வதேச அரசியலைப் படிங்க. பொதுவுடைமை அரசியலை விட சிறந்தது வேறு எதுவுமே இல்லை’ என்று துருவன் தன்னுடைய மாணவிகளுக்கு அறிவுறுத்துவதாக பேசும் வசனங்களின் வாசனையைக் கூட தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் இதுவரை நுகர்ந்திருக்க மாட்டார்கள். இடைவேளைக்குப் பின் துருவன் ஆயுதம் ஏந்தி போராட முடிவெடுக்கும் பொழுது பொதுவுடைமைவாதிகள் என்றால் ஆயுதப்போராட்டக்காரர்கள் என்ற கற்பிதம் உருவாகக்கூடாது என்பதற்காக அவன் மூலமாகவே ‘உலகில் எந்த மூலையிலும் கண்ணிவெடிகள் புதைக்கக் கூடாது என்பதுதான் என் கொள்கை’ என்ற வசனத்தையும் பேசவைத்து ‘பொதுவுடைமையாளர்கள் வன்மைமுறை விரும்பிகள் அல்ல’ என்ற சரியான பார்வையும் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம்.

வெளிநாட்டுச் சதிகளை முறியடித்த பின் ‘காடு மலை மீது உங்களுக்கு இருந்த அனுபவம் நாட்டு மக்கள் மீது உங்களுக்கு இருந்த அக்கறை இதனால்தான் சாதிக்க முடிஞ்சது’ என மாணவி ஒருத்தி துருவனிடம் கூறும் பொழுது ‘நீங்க இல்லைன்னா இதை செய்திருக்க முடியாது. உங்க சக்தியும் தியாகமும் இல்லைன்னா இதை சாதித்திருக்க முடியாது’ என்று துருவன் பேசுவதன் மூலம் பொதுவுடைமைவாதிகள் எந்த ஒரு வெற்றிக்கும் அல்லது தோல்விக்கும் தனிநபரை பொறுப்பாக்க மாட்டார்கள் என்பதனையும் அந்த வெற்றி அல்லது தோல்வி அமைப்புக்கே கூட்டு முயற்சிக்கே என்று கருதும் அவர்களின் ஸ்தாபன செயல்பாட்டு முறையும் விளக்கப்பட்டுள்ளது.

துருவன் மேல் அதிகாரியால் அவமானப்படுத்தப்படும் ஒவ்வொரு காட்சியிலும் அவனுக்கு ஆதரவாக பேசுவதாக கன்னியாஸ்திரியைக் காட்டியிருப்பது ஒடுக்கப்பட்ட மக்களிடம் கிருத்துவம் ஆதரவாக இருந்தது என்பதற்கான மிச்சசொச்சங்களாக இருக்கலாம். மேலும் மாணவிகள் துப்பாக்கி ஏந்திப் போராடுவது படமாக்கப்பட்ட விதத்தைப் பார்க்கும் பொழுது தெலுங்கான போராட்டங்களில் பெண்களின வீரச்செயல் பற்றி படித்ததன் கற்பனையாக்கம் நினைவுக்கு வருகிறது. பழங்குடியின மக்கள் வனச்சரகருக்கு இலவசமாக பழங்களை கொடுக்கவரும் காட்சி கு. சின்னப்ப பாரதியின் சங்கம் நாவலில் அவர்களுடைய வாழ்நிலை பற்றி எழுதியிருப்பது கண்முன் வருகிறது.

தமிழ் சினிமா இதுவரை பேச மறந்த பேச மறுத்த பல செய்திகளை இத்திரைப்படம் பேசியிருக்கிறது. கதை திரைக்கதை எழுதி இயக்கம் செய்திருக்கும் திரு.எஸ்.பி.ஜெகநாதன் மிகுந்த பாராட்டுதலுக்குரியவர்.

- சிவசு.முகிலன்

Pin It

‘A Wednesday’ இந்திப் படத்திலிருந்து மறு ஆக்கம் செய்து எடுக்கப்பட்ட உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் இன்னமும் அதிக வன்முறையுடன் நுண்மையான அதிகாரத்தையும் மதவாதத்தையும் பார்வையாளனுள் நுழைக்கும் படமாகச் செயல்படுகிறது.

படத்தின் கதை

தீவிரவாதிகள் குண்டு வைத்து மக்களைக் கொல்கின்றனர். போலீசில் பிடிபட்டால்கூட, பிணைக் கைதிகளாக மக்களைப் பிடித்தோ, பயணிகளைக் கடத்தியோ தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மிஸ்டர் பொதுஜனம் 3 இஸ்லாமியத் தீவிரவாதிகளைப் போலீஸ் உதவியுடன் கடத்தி மக்களைப் பயத்தின் பிடியில் இருந்து மீட்க அவர்களைக் குண்டு வைத்தும் சுட்டும் கொல்கிறார்.

காமன் மேன், யாரப்பா இந்த மன்மதக் குஞ்சு? ‘வெகுஜனம்’ என்று பார்த்தால் இவர் அரசியல் சட்டம் வகுத்துள்ள ஓட்டுப்போடும் வாய்ப்புள்ள ஒரு மனிதனைத்தான் சொல்கிறார். “தக்காளி வாங்கிட்டுப் போய் வீட்டுல நிம்மதியா துன்னனும்” என்பதே இவர் நோக்கம். எண்ணற்ற பிரிவினைகளை ஏற்படுத்தியுள்ள சாதியத்தையோ, அந்த எந்தப் பிரிவிலும் இடம்பெற இயலாத கடைக்கோடி மக்கள், கால் தூசியிலும் கீழாய் மதிக்கப்படும் சூத்திரர்கள், ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலை மக்கள், இவர்கள் காமன் மேன் வகையறாவிற்குள் வருவதில்லை.

‘மக்கள்’ என்று பார்த்தால்...?

மக்கள் என்றால் ஓர் அரசு, நாட்டிற்கு உட்பட்ட ஜனங்கள். இந்த மக்கள் எனும் பதமே அவர்கள் தாழ்நிலையோர், ஒடுக்கப்பட்டோர் என்ற அர்த்தத்தை உரைக்கிறது. இவர்கள் எப்போதும் ஆளப்பட வேண்டியவர்கள். ஆள்பவரைத் தேர்ந்தெடுப்பதே இவர்கள் பணி; அவர்களின் வழிகாட்டுதலுக்கும் அவர்களின் சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் போலீசிற்கும் அடங்கி நடக்க வேண்டிய நபர்களுடைய கூட்டத்தின் ஒரு அலகுதான் இந்தப் பொதுஜனம்.

இந்த அலகுகள் வெவ்வேறு இடங்களில் பாதிக்கப்பட்டு தனக்கான அடையாளத்தை, மதம், உழைக்கும் வர்க்கம், இனம், மொழி என்பதன் கீழ் அரசுக்கெதிராய்த் திரளும்போது, அரசு இவர்களைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தி இவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள் என்று சித்தரித்து இவர்களை அழித்து ஒழிக்கப் பார்க்கிறது.

இந்திய அரசு                       X காஷ்மீர் மணிப்பூர், நாகா தீவிரவாதிகள்

ஜார்கண்ட் (சல்வாஜல்தும்) X மாவோயிஸ்ட்

இலங்கை அரசு                   X புலிகள்

அமெரிக்கா                         X கம்யூனிச, இஸ்லாமியத் தீவிரவாதிகள்

இவர்களைக் கையாள்வதற்கு எந்தச் சட்டமும் நீதி, நேர்மை, தர்மம், நியாயம், வழக்கு, எதுவும் தேவையில்லை என்று கூறுகிறது.

இதைத்தான் நாம்  சனநாயக அழித்தொழிப்பு, மனித உரிமை மீதான தாக்குதல், பாசிசம் என்கிறோம்.

அரசே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. நமக்கு மிச்ச மீதியிருக்கும்... இருப்பதாய்க் காட்டப்படும் சொற்ப உரிமைகளின் கழுத்தை இறுக்கி நசுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் வெட்னஸ்டே இயக்குநரின் வழிவந்த கமலஹாசன் போன்றோர் நீங்கள் இறுக்குவது மென்மையாக இருக்கிறது. பலத்துடன் அழுத்தி ஒரேயடியாக இந்த உரிமைகளைக் கொன்று விடுங்கள் என்கிறார்கள்.

ஒரு நடைமுறைக்காக, அரசுக்கு ஏன் எதிர்ப்பு வருகிறது என்று நியாயமாய்ப் புரிந்து கொள்ளாமல், அதைத் தீர்ப்பதற்கான வழி வகைகளை ஆராயாமல்,

நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என வேர்களைக் கண்டறியாமல், குடல்வாலா? வெட்டிவிடு... கர்ப்பப்பையா? கழட்டிவிடு... மார்பகமா? அறுத்துவிடு... சிறுநீரகமா? மாற்றி விடு... என உடனடித் தீர்வுகளை அள்ளிவீசுகின்றார் அலோபதி மருத்துவம் போல.

“அரசே வன்முறையுடன் செயல்படுகின்றது. மக்கள் விரோத அரசாய் இருக்கிறது. மனித உரிமைகளைக் காலில் போட்டு நசுக்குகின்றது” என்று புலம்பிக் கொண்டிருக்கையில் கொலைஞர் கமல்... “என்ன அரசு இது... கையாலாகாத்தனமாயிருக்கிற அரசு, பிரச்சனை பண்ணினால் ஒழிக்க வேண்டியதுதானே! பூவா தலையா சுண்டி நெற்றியில் போட்டுத்தள்ளி (இரத்தப் பொட்டு வைத்து தலைப்பகுதியில் பிரச்சனை பண்ணும் 200 காஷ்மீர்த் தீவிரவாதிகளைச் சுட்டுத்தள்ள வேண்டியதுதானே) பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்க வேண்டியது தானே...” என்று காமன் மேனாகிச் சாதிக்கிறார்.

சீட்டுக் குலுக்கித் தேர்ந்தெடுக்கும் கனவான் காமன் மேன் அவர்களே...

இனயத்துல்லா, அப்துல்லா, அகமதுல்லா மட்டும் தான் கிடைப்பார்களா? கிடைத்த கரம்சந்தும்... தீவிரவாதிகளுக்கு, அதுவும் இஸ்லாமியத் தீவிரவாதி களுக்கு ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து சப்ளை செய்தவர். ஏன்? அத்வானி, சுப்ரமணிய சாமி, ஜெயேந்திரர், ஹர்சத் மேத்தா, மோடி, சாத்விக் ரிதம்பரா,... கிடைக்க மாட்டார்களா? அரசு நியமித்த கிருஷ்ணா கமிசன் அறிக்கை, கோத்ரா அறிக்கை, தெகல்காவால் அம்பலப்படுத்தப்பட்ட உண்மைகள். ஆனந்த்பட்வர்த்தனின் ராம் கி நாம், கோவை குண்டு வெடிப்பிற்குக் காரணமான நவம்பர் கலவரம் பற்றிய மனித உரிமைக் குழுவின் அறிக்கைகள் என எதுவுமே காமன் மேனுக்குத் தட்டுப்படாதா? ஏகப்பட்ட  சிம் கார்டுகள், மொபைல் போன், ஒரு லேப்டாப், சில மென் பொருள்களைக் கொண்டு அரசு, உளவுத் துறைப் பிரிவுகள் அனைத்துக்கும் டிமிக்கி கொடுப்பவர், போலீசை மிரட்டித் தீவிரவாதிகளைக் கடத்திக் குண்டு வைத்துக் கொல்பவர். தீவிரவாதிக்கு மட்டும்தான் குண்டு கிடைக்குமா? நாலு வாரத்தில் திட்டம் தீட்டி, கொலை செய்து தடயமில்லாமல் தப்பிப்பவர்.

அப்படியே தடயம் கிடைத்தாலும் ஐ.ஐ.டி. டிராப் அவுட் அம்பியும், கடலை தின்னு கொட்டாவிவிடும் இன்ஸ்பெக்டரும் (ஹி ஈஸ் கிரேட்) என்று தேசபக்தி கீதம் பாடி அவரை நழுவ விடுவர்.

கண்டுபிடிக்க வேண்டும் (ஈகோவிற்காக) என்று அலையும் கமிசனர் மோகன்லால், அரசு மற்றும் காமன்மேன் கமலஹாசன் அனைவருக்கும் ஒரே நோக்கம்தான். தீவிரவாதிகள் கொல்லப்படவேண்டும். அரசுக்கெதிராய் மக்கள் கிளர்ந்தெழும் போது அவர்களுக்குத் தலைமையேற்பவர்கள் தீவிரவாதத் தலைமையாகவும் பயங்கரவாதியாகவும் அடையாளம் காட்டப்பட்டு அழித்து ஒழிக்கப்படுவர், பட வேண்டும். அப்போது ஒரே புள்ளியில் இம் மூவரும் (அரசு/போலீஸ்/கொலைகாரன்) ஒன்றிணையும்போது குற்றவாளியான கமல் - கிரேட் மேன், தைரியசாலி, திறமைசாலி வீரனாகி சட்டம், குற்றம், பழி, தண்டனை ஆகியவற்றிலிருந்து மறைக்கப்பட்டு தப்புவிக்கப்படுவார்.

எல்லாக் கமல் படத்திலும்  கக்கூஸ் வருவதும் அங்கே தன் ஜிப்பைக் கழற்றி ஏற்றுவதும் இந்தப் படத்திலும் இருக்கிறது. ( அது என்ன கக்கூஸ் சீன்,  கமலுக்கு சென்டிமெண்ட் சீனா?) என்ன டாய்லெட்டுப்பா அது? போலீஸ்  ஸ்டேசன் டாய்லெட்டா? ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் டாய்லெட் மாதிரி இருக்குது. மக்கள் உள்ளே போனாலே உருவியயடுக்கிற போலீஸ் ஸ்டேசன்ல தலைவர் கமல் பெரிய பையைத் தூக்கிட்டுப் போய் பதட்டமில்லாமல் குண்டு வைக்கிறாராமா? ஏற்கனவே வர்ற மக்களைத் திருடன் மாதிரி பார்க்குற போலீஸ், இனி குண்டு வைக்கிற தீவிரவாதி மாதிரியும்  பார்க்க ஆரம்பிக்கும்.

ஆர்.டி.எக்ஸ் பாமினை ஸ்டேசன்ல கண்டறிஞ்சவுடனே கமலின் வார்த்தைகள்... இப்பத் தெரிஞ்சுதா மாரார்? குண்டு வெச்சவன் குப்பனோ சுப்பனோ இல்லீன்னு... அப்போ காமன் மேன் இல்லன்னு கமலின் வாதம். “பிற்பாடு நான் ரேசன் கடையில் புழுத்த அரிசி வாங்க கடைசியா நிக்கிற முகம்” னு மாறுது.

கமல் நிபந்தனைகளைக் கமிசனருடன் பேசும் போது மாரார், குண்டு, வெடிக்காம இருக்கனும்னா அதுல இருக்கிற வயர்கள்ல பச்சை வயரைக் கட் பண்ணிட்டு மத்த இரண்டையும் கனெக்சன் குடுங்க.

இது தெளிவாக குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பச்சை நிறத்தை (முஸ்லீம் தீவிரவாதம்) வெட்டிவிட்டு பிறவற்றை இணையுங்கள் என்று தொனிக்கும்படியாக வசனங்கள் உள்ளன.

இதில் வெட்னஸ்டே படத்துல வெளிப்படறது அதிகார வர்க்கத்தோட குறுக்கீடு எதுவும் இல்லாம நேரடியாக முதல்வர், கமிசனர் இரண்டு பேருடைய உரையாடல்ல பணயக் கைதிகளை ஒப்படைப்பது, கொலை செய்வது (போலி மோதல் கொலை) என்பது முடிவாகிறது.

ஆனால் உன்னைப் போல் ஒருவன் படத்தில் ரொம்ப செயற்கையாக ஒரு புது முரண் உருவாக்கப்படுகிறது.

ஒரு சமகாலத் தன்மை வாய்க்கவும் கருணாநிதி குரல்ல கரகரன்னு பேசி, தலைமைச் செயலாளரையும் அதே மாதிரி உருவாக்கி யிருக்கிறார்கள். நிர்வாக அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரத்திற்கு அடங்கின மாதிரியும், போலீஸ், சட்டம், ஒழுங்கு அதிகாரத்திற்கு எதிராகவும் இருக்கிற மாதிரி ஒரு ஈகோ மோதல் போலியாக உருவாக்கப்படுகிறது. அரசியலும் நிர்வாகமும் பொறுப்பிலிருந்து நழுவி சமய சந்தர்ப்பத்திற்கேற்ப நடந்து பச்சோந்தித் தன்மை உடையதாய்க் காண்பிக்கப்படுகிறது. அதே நேரத்தில் போலீஸ் துறையோ மக்கள் நலத்திற்காக ஆபத்தை எதிர்நோக்கி உயிரைப் பணயம் வைத்துச் செயல்படத் தயங்காதவர்கள் என்ற ஒரு போலித் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். வாச்சாத்தி/சின்னாம்பதி/பத்மினி கொலை/தாமிரபரணி படுகொலைகள்/ வீரப்பன் கொலை/ போலி மோதல் கொலைகள் என எல்லாப் பிரச்சனைகளிலும் சந்தி சிரித்துப் போன போலீசோட மானத்தையும் தொப்பையையும் தூக்கி நிறுத்துவதற்கான முயற்சியைக் கொலைஞர் கமலஹாசன் செய்திருக்கிறார்.

பொதுவாக ரீமேக் படங்களின் வசனத்தைத் தமிழில் மாற்றிக் கொண்டு வருவாங்க. இங்கு கொலைஞர் இதை மட்டும் செய்யலை. அதற்குப் பதிலா, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசியல் தலைமைக்கும் அழுகிப் போன ஈரல் போலீசுக்கும் புதுசா இமேஜ் கிரியேட் பண்றார்.

ஆரிப் என்ற முஸ்லீம் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை மனிதத் தன்மையற்று நடமாடும் ரோபோ போன்று படைத்து, குற்றம் சாட்டப்பட்டவரைச் சித்திரவதை செய்து உண்மை அறிய முயலும்‘பயங்கரவாத ஒழிப்புப் படை’யின் அடியாளாகக் காட்டுகிறார்.

பஞ்சாப், ஆந்திரம், ஒரிஸ்ஸா என்று விளைச்சல் அதிகமாயுள்ள பல மாநிலங்களில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு பஞ்சத்தால் மாள்கையில், 70 கோடி பேருக்கும் மேல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கும் கீழ் சம்பாதித்துக் குடும்பம் நடத்துகையில் கல்வி, மருத்துவம், உணவு, உறையுள் எதுவுமில்லாமல் ஏங்கித் தவிக்கையில், காமன் மேனுக்கு அதைப் பற்றிக் கவலையில்லாமல், ஆடம்பர ஐந்து நட்சத்திர, டாடாவின் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு வருத்தப்பட்டுக் கேட்கிறார். மேற்கு வாசல் பற்றி எரிகிறது. யார் பேசினீர்கள்? என்று

குஜராத் கலவரத்தில் முஸ்லீம் கர்ப்பிணிப் பெண்கள் வயிறு கிழிக்கப்பட்டு, குழந்தை வாள்நுனியில் வெட்டப்பட்டது என்பது அனைத்து கோப்புகளிலும் பதிவாகியிருக்க, கமலோ ( அந்த இடம் குஜராத், அரசு பிஜேபியின் மோடி அரசு, சுற்றி  இருந்தவர்கள் குஜராத் போலீஸ், வன்முறையாளர்கள், ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், வலதுசாரித் தீவிரவாதிகள்) எல்லா உண்மை களையும் மறைத்து, வட இந்தியாவில் ஓரிடம் என்று புகை மூட்டமாய்ச் சொல்லி அந்தப் பெண், ஏன் முஸ்லீம்தானா, பிரிட்டிசாகவோ, பிரெஞ்சாகவோ, ஜெர்மனிப் பெண்ணாகவோ இருந்தால், உங்களுக்குக் காப்பாத்தனும்னு தோணாதா? என்று முஸ்லீம் பெண்ணின் கொலையைச் சாமர்த்தியமாக, பொதுவான ஒரு பெண்ணுக்கு நடந்ததாய்க் காட்டியிருக்கிறார்.

மீடியா பெண், கமிசனர் மோகன்லாலிடம் படம் எடுப்பது என்பது எனது உரிமை எனும்போது அவர் சொல்லும் வசனம்.

“உனது உரிமை எனது செருப்புக்குச் சமம்.”

“நீ யார்?” என்ற கேள்விக்கு அவள் வரிசையாகப் பதில் சொல்கையில்,

“நான் பெண், இந்தியன், ஊடகவியலாளர்.”

அதற்கு இந்திய தேசிய இராணுவத்தின் சிறப்புப் பதவி அந்தஸ்து பெற்ற மோகன்லால் சொல்வது, ஐ லைக் தட் ஆர்டர். அந்த வரிசைக் கிரமம் எனக்குப் பிடித்திருக்கிறது.

ஏன், “படமெடுப்பது எனது உரிமை” என்று சொல்லும்போது கோபப்படுகிற போலீஸ் கமிசனர், இந்தியன் என்று சொல்லும்போது உச்சி குளிர்கிறாராம். அவர்கள் விரும்புவது கேள்வி கேட்காத பிரஜையான ரோபோக்கள், அவர்களுக்குத் தமிழனோ, காஷ்மீரியோ, நாகாலாந்து மக்களோ தேவையில்லை. அந்த வரிசை அவர்களுக்குப் பிடிக்காதது.

ஹே ராம் படத்தில் கமலஹாசன்  காந்தியைச் சுட்ட கோட்சேயின் நியாயங்களை  ஆர்.எஸ்.எஸ் சைவிடச் சிறப்பாகப் பேசறதுக்கான ஒரு வாய்ப்பை உருவாக்கினார். தேசபிதாவைக் கொன்ன கோட்சேவுக்கே வாய்ப்பளிக்கிற கமல், விருமாண்டியில மனித உரிமையாளருக்குப் பேட்டி கொடுக்கிற கமல், கோவை/மும்பை/குஜராத்தில் அப்பாவி முஸ்லீம்கள் பலர் பத்தாண்டுகளுக்கும் மேல் எந்தக் குற்றமும் செய்யாம சிறையில் வாடும்போது, அவர்களுக்கு என்ன வேண்டியிருக்கு புண்ணாக்கு “ஹ்யூமன் ரைட்ஸ்?” என்று போலீஸ் ரைட்ஸ் பேசுகிறார்.

குஜராத்தில் கலவரத்தின் போது, இசுலாமியர் வசிக்கும் இடங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டன. ஊடகங்கள், இந்துக்கள் பலர் கொல்லப்படுகின்றார்கள் என்று பொய்ச் செய்திகளை வெறிகொள்ளும் அளவிற்குப் பரப்பின. அரசு/ போலீஸ்/சமூக விரோதிகள்/மதவெறியர்கள் என்ற கூட்டில் ஊடகங்களும் சேர்ந்து கொள்ள கரப்பான் பூச்சிகள் கக்கூசை விட்டு வெளியேறா வண்ணம் அடிக்கப்பட்டன. (ஏன் கமிசனர் உங்கள் வீட்டில் கக்கூசில் இருக்கும் கரப்பான பூச்சி கிச்சனுக்குள் வந்தா, அடிச்சுக் கொல்லாம என்ன பண்ணுவீங்க?) கொல்லப்பட்டன. எரித்து அழிக்கப்பட்டன. கும்பல் கும்பலாக - குடும்பம் குடும்பமாக - குழந்தை, பெண்கள், வயோதிகர் என்ற பேதமற்று... இலங்கையிலும் அப்படித்தான்... எல்லா மனித உரிமைகளும் அற்றுப்போய் பல நாட்டு இராணுவங்களின் உதவியுடன் விண்ணிலிருந்தும் குண்டு மழை பொழிய இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு சொந்த நாட்டிலே அகதிகளாய், ஏதிலிகளாய் மின் தடுப்பு வளையங்களுக்குள் கண்ணீர் வற்றி, வயிறு உலர்ந்து நடைப்பிணங்களாய், கரப்பான் பூச்சிகளாய்த் திரிகிறார்கள். இவர்களைக் கொல்வோம். இவர்கள் குரல்களை எதிரொலிப்பவர்களைக் கொல்வோம் என்று முழக்கமிடுகிறார் கமலஹாசன் என்னும் கலைஞன்.

தீவிரவாதிகள் கோழைகள், உயிர் பயம் கொண்டவர்கள். ஒரு காமன் மேனைவிட எந்த விதத்திலும் புத்தி அதிகமில்லாதவர்கள், சுயநலமிகள், வாய்ப்புக் கிடைத்தால் கைகழுவித் தப்பியோடுபவர்கள், குற்றவாளிகள், காமவெறியர்கள். இந்த பிம்பங்களைத் துல்லியமாக நான்கைந்து இடங்களில் பதிவு பண்ணியிருக்கிறார்கள்.

1.     அப்துல்லாவின் மூணாவது மனைவிக்கு வயது 16. அப்போது       அவருக்கு ஒன்பது மாத கர்ப்பம். அவள் அழகாயிருப்பா.

(அப்துல்லா 15 வயதுப் பெண்ணைக் கட்டிய குற்றவாளி. ஏற்கனவே இரண்டு மனைவி இருக்க, அழகுக்காக மூன்றாவதைக் கட்டி 15 வயதில் கர்ப்பிணியாக்கிய காமாந்தகன்.)

2.     நாலு பேரை ஜீப்பில் ஏறச் செய்யும் போது, ஆரிப் ஒருவரைப் பிடித்து வைத்துக் கொள்ள அவனை விட்டுவிட்டு மூவரும் தப்பிச் செல்ல முடிவு எடுக்கின்றனர்.

(இவர்கள் சுயநலமிகள்/கைகழுவித் தப்பியோடுவார்கள்.)

3.     காமன் மேன் நான்கு வாரத்தில் திட்டம் தீட்டி ஒரு பெரிய பிரச்சினையைப் பண்ணியிருக்கிறார். இதை விடவா தீவிரவாதிகள் இருக்கின்றனர்?

4.     இறுதியாக ஆரிப், அப்துல்லாவைக் கொல்வதற்கு முன் அவன் சாவிற்கு உண்மையிலேயே பயப்படுவதால்தான் வீரமுள்ளவனாகப் பிதற்றுகிறான் என்று உளவியல் ரீதியாகக் கிண்டலடித்துச் சுட்டு வீழத்துகிறான்.

(நினைவு கூரவும்: குருதிப்புனல் படத்தில் இதேபோல் தீவிரவாதி ஒருவன் போலீஸ் அதிகாரியின் மைனர் பெண்ணைக் கெடுக்க முயற்சிப்பதாய் ஒரு காட்சி வரும்.)

செய்யற ஒரு பாத்திரமின்னாலும் அதோட ஒன்றி வித்தியாசம் தெரியாம இருக்கிறதுதான் சிறந்த நடிப்புக்கான அடிப்படை இலக்கணம். தனது தற்பெருமையாலும் அகம்பாவத்தினாலுமே பாத்திரத்தின் பாவத்தைச் சிதைப்பவர் கமல். உள்ளுறை ஆற்றல் ஒன்றுமில்லாமல், கலாச்சார வேரும், அனுபவமும் பிடிபடாமல் வெறும் மேற்கைப் பிரதியயடுத்த இந்த வியாபாரக் குப்பைகளுக்கு, உலக சினிமாவின் முக்கிய வியாபாரக் கேந்திரமான ஹாலிவுட்டில் கூட மதிப்பிருக்காது. இது இங்கிருக்கிற அரைகுறைகளை மிரட்டுவதற்குப் பயன்படுத்தப் படுமே  தவிர, கலையுலகின் உரைகல்லில் தேய்த்தால் நிற்காத படைப்புக்களாகவே இனங்காணப்படும்.

உண்மையாக மக்கள் சார்ந்தும், மண் சார்ந்தும் படங்கள் எடுப்பதைத் தவிர்த்த மணிரத்னம் போன்றோர் திட்டமிட்டு அகில இந்திய தேசியச் சந்தை உருவாக்கும் பொருட்டு உருவாக்கிய நாயகன், பாம்பே, உயிரே, ரோஜா, ஆய்த  எழுத்து போன்றவை தமிழ் இன உணர்வுக்கு எதிராகவும் இந்திய தேசியப் பார்ப்பனிய பனியாக் கட்டமைப்புக்கு ஆதரவான படங்களாகவும் இருந்தன. குறிப்பாக, தமிழ் திராவிட அரசியலுக்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் எதிராக வெறுப்பைக் கக்கிய படங்களாக இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் வெளிவந்தன.

வட இந்தியாவில் கமலஹாசன் ஊடுருவ முடியாததால் முதலிலிருந்தே தென்னிந்திய மொழிப் படங்களான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் ஒரு திராவிட தென்னிந்தியச் சந்தையை கமல் திட்டமிட்டு உருவாக்கினார். இதனாலேயே மற்றவர்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகின்ற காவிரி, பாலாறு, கிருஷ்ணா, முல்லைப் பெரியாறு, நீர்ப் பிரச்சினைகளைப் பேசும்போதும் இலங்கைத் தமிழர் நிலை குறித்துப் பேசும் போதும் அவைகளைச் சாமார்த்தியமாகத் தவிர்த்துவிட்டு என்.ஜி.ஓ. ஸ்டைலில் கண்தானம், உடல்தானம், எய்ட்ஸ் விளம்பரம் என்று சந்தை வியாபாரத்திற்குக் குந்தகம் வராமல் பார்த்துக் கொண்டார்.

Battle of Algiers, Night over Chile, Apocalypse Now, Missisippie Burning, Battleship Potomkin என தீவிரவாதம், மக்கள் போராட்டம், அரசு உளவுத் துறையின் முறைகேடுகள், மனித உரிமை சூறையாடப்படல் எனப் பல்வேறு பிரச்சினைகள் குறித்த மிக அற்புதமான படங்கள் அரசு அதிகாரத்தையும் ஒடுக்கப்பட்டோர் சோகத்தையும் விவரிக்கையில், கமல் அரசின் அதிகாரக் குறைவையும் ஒடுக்குபவரின் தாமதத்தையும் கண்டு பொங்கியயழுகிறார்.

(பூனை பையை விட்டு வெளியே வந்தது என்பது போல, கடைசியாய் உச்சரிக்கிற வரிகள்...)

எது நடந்ததோ அது சரியாகவே நடந்தது.

இத எங்கிருந்து பிடித்து உருவி இங்கு ‘காப்பி பேஸ்ட்’ செய்கிறாய்?

இந்தப் புரட்டுதல்கள், இந்த ஊழல், இந்த அதிகாரம், இந்த துரோகம், இந்த அநியாயம் (தற்போதைய வார்த்தையில் பாசிசம்) இதுதானே 2000 ஆண்டுகளாய்த் தொடர்ந்து வருகிறது.

வரட்டும் இனியும்; எத்தனை நாள் என்று பார்த்து விடுவோம்.

இது உன்னைப் போல் ஒருவனல்ல. ஒரு அவதாரம், தசாவதாரம், நூறு அவதாரம் எடுத்தாலும் சாதிக்க முடியாததால் புதிதாக காமன் மேன் அவதாரம்.

Pin It

மனிதர்கள் அவசரமான வாழ்க்கைக்கு பழகிக்கொண்டிருக்கும் உலகில், நுட்பமான உணர்வுகள், பாசம், தனிமை, ஏக்கம், உறவுகளுக்கான துடிப்பு, ஆத்மாத்தமான நட்பு என்பவைகள் எல்லாம் கேள்விக் குறியாக மாறிக்கொண்டிருக்கிறது. தன் அளவில் மனிதநேயத்திற்காக ஏங்கும் மனித வாழ்க்கை சுற்றும் முற்றும் பார்க்க மறுக்கிறது. பிழைப்புக்கான வாழ்வாதார போட்டியை உலகமயம் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது நம்பிக்கை உள்ளவர்களின் கடவுள் போல..

நீங்கள் செல்லும் சாலைகளில், பேருந்தில், மின்சார தொடர்வண்டியில், திரையரங்குகளில் சோகத்தை மறைக்கும் சுருக்கம் விழுந்த முகங்களுடன், நரைகூடி, கண்களில் மெல்லிய தேடல் கொண்ட வயதானவர்களை சந்தித்திருக்கிறீர்களா? அப்போது உங்களுக்கு என்ன தோன்றும்? உங்களது வயதான பெற்றோர்கள் நினைவுக்கு வருவார்களா? அல்லது வெற்றிலைக் கறைபடிந்த அல்லது மூக்குப்பொடியின் வாசம் கமழும் அல்லது திருநீரின் வாசம் நிரம்பிய உங்கள் பிரியமான தாத்தாவை ஏன் அப்பா நம்முடன் வைத்துக்கொள்ள மறுக்கிறார் என்ற எண்ணம் உதித்ததுண்டா? வயதானவர்களின் ஏக்கம் எப்படிபட்டது என்று ஒரு கணமேனும் உங்கள் நினைவுகளில் அசைபோட நேரம் ஒதுக்குவீர்களா? ஆம் எனினும் இல்லை எனினும் உங்களுக்காகத்தான் இந்த வாட் இஸ் தட்? அது என்ன?

**********

சமீபத்தில் என்னுடைய ஆர்குட் வலைதளத்தில் அரவிந் மணி என்ற நண்பர் ஒரு வீடியோக் காட்சியை அனுப்பி இருந்தார். அது மூன்று நிமிடங்கள் மட்டுமே ஓடும் கிரேக்க குறும்படம். 2007ல் வெளிவந்தது. படத்தின் பெயர் ‘அது என்ன? (வாட் இஸ் தட்)’. 

ஒரு படைப்பு அல்லது படைப்பாளி எங்கு வெற்றியடைகிறான் எனில் அவனது படைப்பை வாசகன் அல்லது ரசிகன் பார்த்து அல்லது படித்து முடித்ததும் அவனுக்கு அந்தப் படைப்பில் பேச நிறைய இடம் இருக்க வேண்டும். அதாவது பார்வையாளனை அவனது படைப்பு சார்ந்த பங்கேற்பாளனாக உள்ளடக்க வேண்டும். பார்வையாளனுக்கும் அந்தப் படைப்பில் பேச மிச்சம் வைக்க வேண்டும். உலகின் சிறந்த படைப்புகளில் எல்லாம் இது நிகழ்ந்துள்ளது.

60 - 70 ஆண்டுகளை இந்த மண்ணில் கழித்த, தனது அனுபவத்தில் ஆயிரக்கணக்கான மனிதர்களை கடந்துவிட்ட வயதான மனிதனுக்கு என்ன வேண்டும்? நம்மால் ஆயிரம் பொருட்களை வாங்கிக்கொடுக்க முடிந்தாலும் அவர்களுக்கானது அதுவல்ல. குளிரூட்டபட்ட அறையும் தொலைகாட்சிப்பெட்டியும் அவர்களது தனிமையைப் போக்கிடுமா? இல்லை... அவர்களுக்குத் தேவை, தனது வளர்ந்துவிட்ட குழந்தைகளுடன் தினமும் கொஞ்ச நேரம் பேசவேண்டும் அவ்வுளவுதான். மூன்று மணிநேரம் ஒரு திரைப்படம் சொல்லுவதை இந்தப் படம் ஐந்து நிமிடங்களில் சொல்லி அந்த வெற்றியைப் பெறுகிறது. வாருங்கள் படத்தினுள்..

***********

ஒரு சுவற்றின் மீது கேமிரா மெல்ல மெல்ல நகரும். சுவற்றின் இறுதியில் ஒரு பச்சைநிறக் கதவு, அங்கிருந்து கேமிரா தூரத்தில் தோட்டத்தின் சிமெண்ட் பலகை மீது இருவர் அமர்ந்திருப்பதைக் காட்டும். அடுத்த காட்சி ஒரு முதியவரின் முகம் அருகாமைக் காட்சியாக காட்டப்படும். அதே போல பாதிமுகம் தெரிய ஒரு இளைஞன் செய்தித்தாள் படித்துக்கொண்டிருப்பான். அடுத்த காட்சியில் முதியவரும் இளைஞனும் அமர்ந்திருப்பார்கள். அவர்களின் வலதுபுறம் கேமிரா நகரும். ஒரு செடி. அந்த செடியின் மீது ஒரு குருவி வந்து அமரும்.

அந்த முதியவர் கேட்பார் "அது என்ன"?

செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கும் அவரது மகன் முகம் திருப்பி அந்தக் குருவியைப் பார்த்து "அது சிட்டுக்குருவி" என்று சொல்லிவிட்டு மீன்டும் செய்தித்தாளில் முகம் புதைப்பான்.

அடுத்து அருகாமைக் காட்சியாக அந்த சிட்டுக்குருவி வந்து போகும். குருவியின் பின்னாலிருந்து குருவியும் அந்த இருவரும் சேர்த்து காட்சியாக்கப்படுவர்.

மீண்டும் அந்த முதியவர் கேட்பார் "அது என்ன''?

கொஞம் அலுப்புடன் அவரது மகன் "இப்பதானே சொன்னேன்.. அது சிட்டுக்குருவி" என கூறிவிட்டு செய்தித்தாளை உதறி மீண்டும் படிக்கத்துவங்குவான்.

அந்த குருவி மேலே எழுந்து பறக்கத்துவங்கும். நிமிர்ந்து பார்க்கும் முதியவர் வெய்யிலுக்கு நெற்றியில் கைவைத்து அதை பார்த்துக்கொண்டிருப்பார். அது அவர்களது இடப்புறம் சென்று அமரும்.

அந்த முதியவர் மீண்டும் கேட்பார் "அது என்ன"?

கொஞ்சம் எரிச்சல் மற்றும் கோபத்துடன் அவரது மகன் "சிட்டுக்குருவிப்பா அது சிட்டுக்குருவி சி.ட்.டு.க்.கு.ரு.வி..."

அந்த முதியவரின் சோகமான முகம் அருகாமைக் காட்சி.

அவர் மீண்டும் கேட்பார் "அது என்ன"?

கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் அவரது மகன், முகம் சிவக்க "என்ன செய்றீங்கன்னு தெரியுதா? நான் எத்துணைவாட்டி சொல்லுறேன்... அது சிட்டுகுருவின்னு.. நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா" அவன் உச்சஸ்தாயில் கத்த..

அவர் சோகமாக எழுவார், தளர்ந்த நடையுடன் வீட்டை நோக்கி நடக்கத் துவங்குவார். நொடிப்பொழுதில் கொஞ்சம் நிதானித்த அவன் அவரைப் பார்த்து "எங்க போறீங்க"? என்பான்

அவர் அவனை நோக்கித் திரும்பாமல் பொறு என்பது போல சைகைகாட்டி வீட்டை நோக்கிச் செல்வார்.

அங்கு இருந்த சிட்டுக்குருவி பறந்து செல்லும். அது இல்லாத அந்த இடம் வெறுமையாய் இருக்கும். தான் அப்படி கோபப்பட்டிருக்க வேண்டாமோ என்று அவன் யோசிக்கும் போது அவனது தந்தை கையில் ஒரு டைரியுடன் வருவார். அவன் அருகில் அமர்ந்து அதில் ஒரு பக்கத்தைத் தேடி அவனிடம் கொடுத்து படிக்கச் சொல்லுவார். இடது புறத்திலிருந்து இருவரின் முகமும் அருகாமைக் காட்சியாக திரை முழுவதும் தோன்றும்.

அவன் மௌனமாய்ப் படிக்க அவர் "சத்தமாய் படி" என்பார்.

அவன் அந்த பக்கத்தை படிக்க துவங்குவான். இன்று என் செல்ல மகனுக்கு மூன்று வயது. என்னுடன் தோட்டத்தில் அமர்ந்திருந்தான். எங்கள் முன்னால் ஒரு சிட்டுக்குருவி. எனது மகன் அது என்னவென்று தொடர்ந்து இருபத்தியோரு முறை கேட்டான், நானும் அவன் கேட்ட இருபத்தியோரு முறையும் அது சிட்டுக்குருவி என்று பதில் சொன்னேன்.

நான் பதில் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவன் அதே கேள்வியை என்னிடம் கேட்பான் மீண்டும் மீண்டும்...

அவனுக்கு மூளை கோளாறு அல்ல.. அந்த வயதுக்கான உணர்வுகள், என்மீது உள்ள பிரியத்தால்.. மீண்டும் மீண்டும் என்னோடு உரையாடும் ஆர்வதில் கேட்பான் எனது ஏதுமறியாத செல்ல மகன்.

ஆயிரம் உணர்வுகளை தேக்கி உணர்வற்றது போல் இருக்கும் அவரது முகம் அருகாமைக் காட்சியாய் வந்து போகும்.

அவனது கை அன்னிச்சையாய் நாட்குறிப்பை மூடும். அவனது தந்தையை கட்டியணைத்து முத்தம் கொடுப்பான்.

அவர்களது உருவங்களின் பின்புறத்திலிருந்து கேமிரா பின்னோக்கி நடந்து ஒரு மரத்தின் மேல் நோக்கி ஊர்ந்து செல்லும். உச்சியில் ஒரு கிளையின் மீது சிறகுகள் படபடக்க பறந்து அந்த சிட்டுக்குருவி அமரும்.

படம் முடிந்து பெயர்கள் ஓடத்துவங்கும். பெயர்கள் மட்டுமல்ல நமது சிந்தனைகளும்....

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

 

Pin It

பொதுவான திரைப்பட விமர்சனங்களுக்கும், இடதுசாரித் தன்மை வாய்ந்த விமர்சனங்களுக்கும் இடையில் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. பொதுவான விமர்சனங்களில் ஒவ்வொரு திரைப்படம் குறித்தும் சில நிறைகள்,சிலகுறைகள் முன்வைக்கப்பட்டு ஒட்டுமொத்தத்தில் அத்திரைப்படத்தில் குறைகள் நிறைந்துள்ளனவா அல்லது நிறைகள் அதிகம் உள்ளனவா என்பவை பட்டியிலிடப்படுகின்றன.  மேலும் அத்தகைய விமர்சனங்கள் ஒவ்வொரு திரைப்படத்தையும் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, பாடல்கள், மேலும் பல தொழில்நுட்ப அம்சங்கள் எனக் கூறு போட்டுப் பார்க்கின்றன. ஒட்டுமொத்தத்தில் இவ்வாறு பார்க்கும் முறையில் பல சமயங்களில் விமர்சிக்கப்படும் படத்தின் உள்ளார்ந்த உயிரோட்டமும் ஒருங்கிணைந்த தன்மையும் பறிபோய்விடுகின்றன.

வியாபார ரீதியான விமர்சனங்கள்

இத்தகைய விமர்சன முறை இதனைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஒரு வசதியைச் செய்து தருகிறது. அதாவது இவ்வாறு அனைத்துத் திரைப்படங்களையும் விமர்சனம் செய்ய முடியும். அதாவது குப்பையான ஒரு திரைப்படத்தையும் அதில் சில அம்சங்கள் கோபுரம் போல் உள்ளன எனப் பாராட்ட முடியும். அதைப் போல் கோபுரம் போன்ற ஒரு திரைப்படத்திலும் குப்பையாக சில அம்சங்களைக் கண்டுபிடித்து அவற்றையும் கோடிட்டுக் காட்டமுடியும்.

இந்த வகையில் பணம் செலவு செய்து எடுக்கப்படும் அனைத்துத் திரைப்படங்களையும் ஒன்றில்லாவிட்டால் மற்றொரு அம்சத்திற்காக பார்க்கலாம் என்பது போன்றதொரு பரிந்துரையினை ரசிகர்களுக்குச் செய்ய முடியும். அதே சமயத்தில் இந்த விமர்சனங்கள் மூலம் தங்களின் பக்கங்களை நிரப்பி பத்திரிக்கை வியாபாரத்தையும் இலாபகரமாகப் பராமரிக்க முடியும்.

மதிப்பீட்டுத் தன்மை கொண்ட விமர்சனம்

ஆனால் நமது விமர்சனங்கள் இப்போக்கிலிருந்து வேறுபட்டவை. ஒரு திரைப்படம் அது முன்வைக்கும் ஒருங்கிணைந்த உள்ளார்ந்த வாழ்க்கையின் மூலம் சமூகத்தில் பராமரிக்கப்பட வேண்டிய நல்ல மதிப்புகளை கலைநயத்துடன் உயர்த்திப் பிடிக்கிறதா, சமூகத்தின் மையமான பிரச்னையைப் பிரதிபலிக்கிறதா என்பவையே நாம் அவற்றை விமர்சிக்கக் கையாளும் வழிமுறைகள்.

அடிப்படையில் மிகப் பெரும்பான்மையான அம்சங்களில் மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்களைக் கொண்டதாக ஒரு படம் இருந்தால் அப்படத்தின் தொழில் நுட்ப அம்சங்களில் இருக்கும் சிற்சில குறைகளைப் பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்து அவற்றைக் கோடிட்டுக் காட்டுவதையோ அதன்மூலம் நமது பாண்டித்யத்தைப் பறை சாற்றுவதையோ நாம் செய்வதில்லை.

நமது விமர்சனத்தின் நோக்கம் சமூகத்தாக்கமுள்ள நல்ல திரைப்படங்களின் உயர்ந்த அம்சங்களை உயர்த்திக்காட்டி அதனை இன்னும் தெளிவாக ரசிகர்கள் முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதே. அவ்வகையில் நாம் செய்வதை விமர்சனம் என்று கூறுவதைக் காட்டிலும் மதிப்பீடு என்று கூறுவது பொருத்தமுடையதாக இருக்கும்.

புறநிலை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் எந்தத் திரைப்படமும் அவை உண்மை நிலையைப் பாரபட்சமின்றி வெளிக் கொணரும் விதத்தில் எடுக்கப்பட்டால் நிச்சயமாக தன்னையறியாமலேயே கூட சமூகத்தின் ஏதாவது ஒரு அடிப்படையான பிரச்னையையும் அது சார்ந்த வேதனையையும் பிரதிபலிக்கவே செய்யும்.

திரைப்பட ரசிகர்களின் மேலோட்டமான பார்வைக்குத் தப்பிவிடும் அந்த விசயத்தைப் பார்ப்பவர் முன் நிறுத்த வேண்டும் என்பதே நமது மதிப்பீட்டின் நோக்கம். அந்த அடிப்படையில் நமது மதிப்பீடுகள் அத்தகைய நல்ல திரைப்படங்களின் பங்கும் பகுதியுமானவை. சுருக்கமாகச் சொன்னால் இந்தவகை விமர்சனத்தின் வரையறைக்குள் அனைத்து திரைப்படங்களும் வருவது சாத்தியமல்ல. மேலும் இது முதலாளித்துவ வியாபார யுக்திகளுக்குத் துணை போவதுமல்ல; இதைத் தாங்கி வரும் நமது இதழ் வியாபார யுக்தியுடன் நடத்தப்படுவதுமல்ல.

ஒரு இடதுசாரி அரசியல் ஊழியன் என்பவன் அடிப்படையான சமூகமாற்றத்தை வலியுறுத்தப் போராடுபவன். அவன் வலியுறுத்தும் சமூக மாற்றம் இந்த அல்லது அந்தவகைச் சீர்திருத்தங்கள் மூலம் சாதிக்கப்பட முடியாதது. அத்தகைய சமூக மாற்றம் ஒரு மகத்தான மக்கள் எழுச்சியின் மூலமே சாதிக்கப்பட முடிந்தது. அந்த எழுச்சிக்கான தேவையினை உணர்ந்து, இன்றுள்ள சமூக நிலையை அப்படியே தக்கவைக்கப் பாடுபடும் அரசியல்வாதிகளின் ஏமாற்று முழக்கங்கள், தந்திரங்கள், சூழ்ச்சிகள், சூதுகள் ஆகியவற்றை புரிந்து சாதாரண மக்களும் கூட அத்தகைய மகத்தான மக்கள் எழுச்சியில் பங்கேற்க இன்றில்லாவிட்டால் நாளை முன்வருவர். முன்வந்தே ஆக வேண்டும். அதைத் தவிர வேறு வழியேயில்லை.

ஆனால் அத்தகைய எழுச்சியை வழிநடத்த வல்ல கருத்துக்களை முன்கூட்டியே அறிந்து அதன் அடிப்படையில் வாழ்ந்து வழிகாட்ட முயலும் ஊழியர்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் உடனடியாக சமூகத்தில் உருவாகிவிட மாட்டார்கள். அவ்வாறு உருவாகும் உணர்வுபெற்ற மிகச் சிறு பகுதியினர் அவர்களைப் போன்றவர்கள் மென்மேலும் உருவாகத் தேவைப்படும் சமூக மதிப்புகளை உருவாக்கவல்ல இலக்கியங்களையும், திரைப்படங்களையும் தேடிக் கொண்டிருப்பர். ஏனெனில் நல்ல இலக்கியங்களும் திரைப்படங்களும் சமூக மாற்றக் கருத்துக்களை விதைக்கத் தேவைப்படும் வகையில் சமூகத்தைப் பரந்த அடிப்படையில் பண்படுத்த வல்லவை. அத்தகையவையாகத் தென்படும் திரைப்படங்களை அவற்றில் உள்பொதிந்துள்ள சமூக மாற்றத்திற்குத் தேவைப்படும் கருத்துக்களை வெளிக்கொணர்ந்து ரசிகர்கள் முன் வைப்பது அவர்கள் சிரமேற்கொண்டுள்ள சமுதாயக் கடமைக்கு உகந்ததும் உதவக்கூடியதும் ஆகும்.

அந்த அடிப்படையில் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் நட்பு மற்றும் காதலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நாடோடிகள் திரைப்படத்தின்மீது நமது பார்வையைச் செலுத்துவோம்.

சுயநலம் கடந்ததாக இருப்பதே நட்பின் சிறப்பு

அப்பா என்றால் அப்பா மட்டும் தான்; அம்மா என்றால் அது மட்டுமே. ஆனால் நண்பன் என்ற உறவிற்குள் அனைத்தும் அடக்கம் என்று இப்படத்தின் கதாநாயகன் தன் நண்பனது காதலியின் தகப்பன் முன் கூறும் வார்த்தைகள் நட்பு குறித்து நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது. அம்மா, அப்பா இவர்கள் இருவருமே குடும்ப உறவுகளில் முதன்மை யானவர்கள். ஆனால் அவர்களைக் காட்டிலும் நட்புரீதியான உறவு மேலான அனைத்தும் என்றால் அதற்கு அத்தனை சிறப்பிருப்பதன் காரணம் என்ன? ஆம் அதன் காரணம் நட்பு என்னும் உறவில், குடும்ப உறவுகளில் இருக்கும் அத்தனை சுயநலம் இல்லாமல் இருப்பதே.

மனிதன்-சமூகம்-நட்பு-காதல் கண்ணோட்டங்கள்

அத்தகைய சுயநலமில்லாத நட்பு என்ற கண்ணோட்டமும் தன்னினப் பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பாலியல் உணர்வு காதல் உணர்வாக மெருகேறி அதன் விளைவாக உருவான காதல் கண்ணோட்டமும் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கின் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தோன்றியவை. அதாவது இயற்கையை எதிர்த்த தனது போராட்டத்தில் மிருகங்களிலிருந்து மாறுபட்டு மனிதன் தன்னை ஒத்த பிற மனிதர்களோடு இணைந்து ஒருவகை உறவினை ஏற்படுத்திக் கொண்டு ஈடுபட்டான். அதன் மூலம் மற்ற விலங்குகளிலிருந்து வேறுபட்ட ஒரு வாழ்க்கை, அதாவது சமூகவாழ்க்கை அவனுக்கு அமைந்தது.

ஆனால் அச்சமூகத்தில் ஒரு காலகட்டத்தில் தனிச்சொத்து தோன்றி அதன் விளைவாக சொத்துடையவர், இல்லாதவர் என்ற ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டன. அந்த சமூக அமைப்பில் சொத்துடைமை வர்க்கங்கள் தங்களது தனியுடைமையைப் பாதுகாப்பதற்காக அடக்குமுறைப் போக்குகளைக் கையாண்டன. மேலும் தாங்கள் பிறரின் உழைப்பால் உருவாக்கி கையகப்படுத்திக் கொண்ட தனிச்சொத்துக்களை முழுக்க முழுக்க தங்கள் வாரிசுகளே ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருதார மணத்தையும் ஏற்படுத்தின.

போராட்ட ஒற்றுமையின் விளைவாகத் தோன்றியதே நட்பு

அடக்குமுறையினைப் பிற உழைக்கும் மக்களுக்கு எதிராகப் பிரயோகிப்பதற்காக உடைமை வர்க்கங்கள் அடக்குமுறைக் கருவியான அரசை ஏற்படுத்தின. இந்நிலையில் அடக்குமுறைகளை எதிர்த்த பாதிக்கப்பட்ட மக்களின் போராட்ட ரீதியிலான ஒற்றுமையின் விளைவாகவே நட்புக் கண்ணோட்டம் தோன்றியது.

அடிமை எழுச்சிக்குத் தலைமை தாங்கியவன் ஸ்பார்டகஸ். அவனுடன் உடைமைவர்க்க சீமாட்டிகளை மகிழ்விப்பதற்காக ஆயுதந்தாங்கிய போட்டியில் ஈடுபட்ட கறுப்பர் இனத்தைச் சேர்ந்த அடிமை டிராபா, போட்டியில் ஸ்பார்ட்டகஸ் தோல்வியுற்று ஆயுதம் இழந்து நிற்கையில் அவன் போட்டியின் நியதிப்படி ஸ்பார்டகஸ்ஸைக் கொன்றிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் அவன் தன் கைவசம் இருந்த சூலாயுதத்தை வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த பிரபுக்கள் மீது வீசினானே - அதனால் தன் உயிரையும் இழந்தானே அப்போது வெளிப்பட்டதே நட்புணர்வின் மிக உயர்ந்த உன்னத வடிவம்.

தனிச் சொத்தும் -ஒரு தார மணமும்

அதைப்போல் காதல் உணர்வின் தொடக்கமும் ஒரு தாரக் கண்ணோட்டத்தோடு தொடர்புடையது. ஒரு தாரமணம் நாம் ஏற்கனவே கூறியதுபோல் மனித சமூகத்தில் தனிச் சொத்துடைமை தோன்றிய பின்னரே தோன்றியது. அதாவது தான் சேர்த்து வைத்துள்ள சொத்தினை முழுக்க முழுக்க தனது வாரிசாக உள்ள பிள்ளைகள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஒரு தார மணம் உடைமை வர்க்கத்தால் உருவாக்கப் பட்டது. அதனால்தான் கற்பு என்பது ஒருதாரமணம் ஆரம்பித்த காலத்தில் பெண்களுக்கு மட்டும் என்பதாக இருந்தது.

உழைக்கும் வர்க்கமே காதலை திருமணத்தின் அடிப்படையாக்கியது

அத்தகைய மோசமான தொடக்கத்தைக் கொண்டிருந்த - சொத்துடைமை வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தாரமணத்தை, இழப்பதற்குச் சொத்து என்று எதுவுமே இல்லாத உழைக்கும் வர்க்கமே ஒரு உன்னதமான உயரத்திற்குக் கொண்டு சென்றது. அதாவது தனிச்சொத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒருதார மணத்தைப் பரஸ்பர விருப்பத்தை அதாவது காதலை அடிப்படையாகக் கொண்டதொரு உன்னத உறவாக ஆக்கியது உழைக்கும் வர்க்கமே. இந்தவகையில் சமூகத்தின் உன்னதமான கண்ணோட்டங்கள் அனைத்தின் தொடக்கங்களுமே உழைக்கும் வர்க்கத் தொடர்புகளுடனேயே நடந்திருக்கின்றன என்பதை அறிய முடியும்.

இவ்வாறு காதலை அடிப்படையாகக் கொண்ட உன்னத உறவாக உழைக்கும் வர்க்கத்தால் ஆக்கப்பட்ட காதல் கண்ணோட்டம் ஜனநாயக நெறிகள் ஓரளவு நிலை கொண்ட மேலைநாட்டு சமூகங்களில் இயல்பானதாக ஆகிவிட்டது. ஆனால் திருமணபந்தம், நமது சமூகத்தைப் போன்ற சமூகங்களில் இன்னும் பெரும்பாலும் அப்பட்டமான சொத்துடைமை உறவாகவே தொடர்கிறது. குடும்பச் சொத்து வெளியே போய்விடக்கூடாது என்பதற்காக அக்கா, தங்கை இருவரையும் ஒரே ஆண் மணப்பது போன்ற அநாகரீக முறைகளும்கூட நமது சமூகத்தில் ஆங்காங்கே நிலவுகின்றன.

சொத்துடைமை மனநிலை ஊறிப்போன பழைய தலைமுறையினர் காதல் திருமணங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். இளைய தலைமுறையினரில் பெரும்பாலோர் “தாம் தான் காதலிக்கவில்லை இவர்களது காதலாவது கைகூடட்டும் என்ற எண்ணத்தில், தன் காதல்தான் நிறைவேறவில்லை இவர்களது காதலாவது நிறைவேறட்டும் என்ற நோக்கத்தில், தன் காதலைப்போல் இவர்களது காதலும் வெற்றி பெறட்டும் என்ற நல்லெண்ணத்தில், தன் காதலுக்கு இதுபோல் உதவிகள் வரும் என்ற எதிர்பார்ப்பில்” -காதலுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

நட்பின்றி உண்மையான காதல் இல்லை

பரஸ்பர விருப்பத்தை அடிப்படையாகக் கொண்ட காதல் என்று நாம் கூறும்போது அது உருவப் பொலிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாவதல்ல. உருவப் பொலிவு மட்டும் அடிப்படையானதாக இருந்தால் இத்திரைப்படத்தில் அந்தத்தொழில் முதலாளியின் மகளுக்கும், அரசியல் முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக வரும் மாஜி எம்.பி.யின் மகனுக்கும் இடையிலான காதலில் பிரச்னையே வந்திருக்கக்கூடாது. உருவப் பொலிவோடு கூட காதலில் நட்புணர்வும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல நட்பே தோன்ற இயலாத இருவருக்கிடையில் உயர்ந்த காதல் நிச்சயமாக இருக்கவே முடியாது.

உன்னத உணர்வுகளைப் பராமரிக்கத் திராணியற்ற உடைமை வர்க்கங்கள்

ஆனால் உன்னதமான உணர்வுகளைப் பராமரித்து மென்மேலும் அதி உன்னதத் தன்மை வாய்ந்தவையாக அவற்றை வளர்த்தெடுக்கத் திராணியற்றதாக ஏற்றத்தாழ்வுகள் உள்ள சமூக அமைப்புகள் ஆகிவிடுகின்றன. அதன் விளைவாக திருமணம் என்ற பெயரில் நிறுவனமயமாக்கப்பட்டு விடும் காதல் உணர்வு நெருக்கடி சூழ்ந்த வாழ்க்கை நிலையினாலும், பொறுப்புகளின் தாங்கொண்ணாச் சுமையினாலும் பொலிவிழந்ததாகவும், செக்குமாட்டுத் தன்மை கொண்டதாகவும் ஆக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் எத்தனை முட்டுக்கட்டைகள் வந்தாலும் உழைக்கும் மக்கட் பகுதியினராலேயே நட்பு, காதல் போன்ற உணர்வுகள் முற்றாக அழிந்துவிடாமல் பாதுகாக்கப் படுகின்றன. பெரும்பான்மையான சமயங்களில் உடைமை வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் அவை தரம் தாழ்த்தப் படுகின்றன; பொலிவிழந்தவையாக ஆக்கப்படுகின்றன.

இத்திரைப்படத்திலும்கூட மற்ற அனைத்து நண்பர்களும் எவ்வாறு நிலையானதொரு வாழ்க்கையினை அமைத்துக் கொள்வது என்பதற்காக அயர்வின்றி முயன்று கொண்டிருக்கையில் தன்னை நம்பி வந்தவளைக் காப்பாற்றுவதற்காகத் தொடர்ச்சியாக வேலைக்குக் கூடச் செல்லமுடியாத சோம்பேறியாக அரசியல்வாதிப் பெண்மணியின் மகன் இருக்கிறான்.  படத்தில் கதாநாயகனால் மாமா என்று அழைக்கப்படுபவர் தன்னை நம்பி வந்தவர்களைப் பராமரிப்பதற்காகத் தன் சம்பளத்தில் பாதியைச் செலவழிக்கிறார். அந்நிலையில்கூட அவர்படும் சிரமம் அறியாது ஒரு ஃபேசியல் செய்வதற்கு கூட பணம் போதவில்லை என்று தொழிலதிபரின் மகள் அலுத்துக் கொள்கிறாள்.

காதலை ஒன்று சேர்க்கச் செல்கிறார்கள் என்றவுடன் தான் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை டீசல் செலவிற்காவது பயன்படட்டும் என எடுத்துக் கொடுக்கும் கதாநாயகனின் தங்கை பிரதிபலிக்கும் நல்ல உணர்வும், பாதிக்கப்பட்டு நிற்கிறார்கள் என்று அறிந்தவுடன் தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை முழு மனதோடு கொடுக்கத் தயங்காத கதாநாயகனின் தங்கை மற்றும் அவன் காதலியின் நற்குணங்களும் எங்கே? ஃபேசியலுக்கு பணம் இல்லை என்று பிறரின் எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாத அந்தப் பணக்காரப் பெண்ணின் தன்னலப் பகட்டு எங்கே?

தங்களது பருவ உணர்வை காதல் என்று கருத வைத்து அதற்காக நட்பைப் பயன்படுத்திவிட்டு அதைக் கைகூடச் செய்வதற்காக தங்களது வாழ்க்கையையே தொலைத்துவிட்டு வந்து நிற்கும் நண்பர்களைப் பார்க்கக்கூடத் தயாராக இல்லாதிருக்கும் அந்தப் பணக்காரப் பையனின் பாத்திரம், உண்மையான நட்புணர்வுடன் ஒத்துப்போகாத மேட்டுக்குடி மக்களின் மேலோட்டமான போக்கின் ஒரு குறியடையாளமாக விளங்குகிறது.

குறியடையாளங்களாக படைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள்

இதைப்போல் பல பாத்திரப் படைப்புகள் அவை சார்ந்துள்ள சமூகப் பின்னணிகளின் குறியடையாளங்களாக உள்ளன. காதல் வயப்பட்ட இருவருமே மேட்டுக்குடி மக்களாக இருந்த போதிலும் அவர்களின் பெற்றோருக்கிடையில் நிலவும் முரண்பாடுகளை அதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தொழில் முதலாளியாக வரும் பெண்ணின் தந்தை ஒரு தொழிலை அதற்கு தேவையான சிரத்தையினை எடுத்துத் தொடங்கி நிர்வகித்து அதன் மூலம் பொருள் சேர்த்த பின்னணியைக் கொண்டிருப்பதால் அதன் விளைவாகத் தோன்றும் குணங்கள் அவரால் சரியாகப் பிரதிபலிக்கப்படுகின்றன. காதலரைச் சேர்த்து வைக்க வந்த நண்பன் ஒருவன், வீட்டை நோட்டம் பார்க்க வந்து பிடிபட்டு அடி உதை பட்டுக் கெஞ்சும் போது அவன் மேல் அனுதாபப்பட்டுப் பணம் கொடுத்து அனுப்பும் அவரது பாங்கும், தன்னுடன் ஓடிவந்தவனைப் பிரிந்து தன் வீட்டிற்குத் தன்னுடைய பெண் திரும்பிய பின்னர் அவர்கள் பிரிந்ததைக் கேள்வியுற்று வெகுண்டெழுந்து வந்த நண்பர்களை அவளுடன் பேச அனுமதிக்கும் செயலும், அவர் அரசியலை முதலீடாகக் கொண்டு சம்பாதிக்க விரும்பும் பையனின் தாயாரைக் காட்டிலும் மேலான கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஆனால் ஒரு கொலைகார முதலாளித்துவப் போக்கின் பிரதிநிதியாக வரும் அந்த அரசியல்வாதிப் பெண்மணி, பையனின் கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் ஒரு மரியாதையும் தராத போக்கையும், பதவியிலிருக்கும் அரசியல்வாதிக் குடும்பத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளத் துடிக்கும் மனநிலையையும், யாரையும் எடுத்தெறிந்து பேசும் அலட்சியப் போக்கையும் தன் மகனின் நண்பர்களாக இருந்தபோதும் பொருளாதார ஏற்றத் தாழ்வை மனதில்கொண்டு “அடுத்த மாதம் 16-ம் தேதி திருமணம் வைத்திருக்கிறேன். வந்து தின்னுவிட்டுப்போங்கள்” என்று கேவலமாக பேசும் கலாச்சாரமற்றத் தன்மையையும் பிரதிபலிக்கிறார். இது மற்றொரு சரியான சமூகக் குறியடையாளமாக விளங்குகிறது.

தலைமைப் பண்புகள்

அரட்டை அடித்துக் கொண்டு திரிவது என்பதைத் தாண்டி உருப்படியாகத் திட்டமிட்டு எதையாவது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது அவ்வாறு செய்வது நட்பு வட்டமாகவே இருந்தால்கூட அதற்கு ஒரு ஸ்தாபன அணுகுமுறை தேவைப்பட்டு விடுகிறது. அவ்விதத்தில் தன்னலம் இல்லாது நண்பன் ஒருவனின் நலனுக்காக ஒன்றுசேரும் நண்பர்கள் குழுவும் ஒரு ஸ்தாபனமாகவே நடைமுறையில் விளங்குகிறது. எந்த ஒரு ஸ்தாபனத்திற்கும் தலைமை வேண்டும் அந்த நண்பர்கள் குழுவிற்கு இயற்கையான தலைவனாக கதையின் நாயகன் கருணாகரன் விளங்குகிறான்.

சிறு விசயங்களைப் பொருட்படுத்தாமல் நட்பினைப் பராமரிப்பதற்காக வரும் கஷ்டங்களையும் சிரமங்களையும் வெளிக்காட்டாமல் இருக்கும் அவனது பக்குவம் பெற்ற மனநிலை ‘நீ பார்த்தாலும் பார்க்காதது மாதிரி தானடா இருப்பாய், நீ தெரிந்தாலும் தெரியாத மாதிரி தானடா இருப்பாய்’- இது அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் ‘நீ வலித்தாலும் வலிக்கலை யினுதானடா சொல்லுவாய்’ என்ற வசனங்களின் மூலம் மிகவும் உருக்கமாக முன் வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிநாட்கள் முதற்கொண்டே அந்த பணக்காரப் பையனுக்காக பலரை அடித்து நட்புக்காக எந்த சிரமத்தையும் எதிர்கொள்பவனாக அவன் சித்தரிக்கப்படுகிறான். ஒரு குழுவிற்குத் தலைவனாக இருப்பவனின் பல குணாம்சங்கள் சிற்சிறு காட்சி அமைப்புகள் மூலம் ஆழமாகப் பார்ப்பவர் மனதில் பதிக்கப்படுகின்றன. தன்னுடைய முறைப் பெண் தன்னை முத்தமிடச் சொல்லும் காட்சியில் ஒரு வகையான மனப்பக்குவம் மற்றும் முதிர்ச்சியுடன் அவன் காட்டும் தயக்கமும் சுயவிருப்பமின்றி அவளின் கட்டாயத்திற்காக அதனைச் செய்ய நேர்வதால் அவன் வெளிப்படுத்தும் செயற்கையான அசைவுகளும் சுவையானவையும், சிரிக்கவைப்பவையும் மட்டுமல்ல ; அவனது மனப் பக்குவத்திற்கு எடுத்துக்காட்டாகவும் உள்ளது.

அதைப்போல் அவர்களை ஒன்று சேர்ப்பதற்காக தங்கள் பட்ட கஷ்டங்கள் எதையும் பொருட்படுத்தாது பிரிந்துவிட்ட காதலர்களை தனித்தனியே கடத்திக் கொண்டு வந்து வைத்துள்ள இடத்திலும் காதலனான தனது மாஜி நண்பனைத் தயங்காமல் அடிக்கும் அவனது கரம் அந்தப் பெண்ணை அடிக்கத் தயங்கி ஓங்கிய கை ஓங்கிய படியே நிற்கும் காட்சி அவனது பெண்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்துவது தவறு என்ற பண்பு நலனைப் பக்குவமாக எடுத்துரைக்கிறது. தலைமைப் பொறுப்பு ஏற்பதற்குத் தேவைப்படும் அவனது ஓரளவிலான பற்றற்ற தன்மையும் மிக நாசூக்காக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

தனது தங்கைக்கும் நண்பர்களில் ஒருவனுக்கும் காதல் இருப்பதைத் தெரிந்த நிலையிலும் அதை அவ்வளவு துVரம் தெரிந்ததுபோல் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் போக்கு, சந்தர்ப்பம், விளைவித்த சூழ்நிலையில் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனதை மனதில் நிறுத்தி தனது விருப்பத்தையும் காதலையும் இழந்து சோகத்தை உள்வாங்கி நிற்கும் அவனது மனநிலை பார்ப்பவர் உள்ளத்தை நெருடுவதாக உள்ளது.

தனது வயதினை ஒத்தவர்கள் மீது மட்டுமல்லாது அவன் வைத்திருக்கும் பிற சமூகத் தொடர்புகளும் அவனது பாத்திரத்திற்கு மெருகூட்டுகின்றன. பெரிய மீசை வைத்திருக்கும் சமையல்காரப் பெரியவர், காதலுக்கு என்றவுடன் தயங்காமல் வாடகையின்றி கார் வழங்க முன்வரும் டிராவல்ஸ் நடத்துபவர் போன்றவர்கள் உடனான அவனது மேலோட்டமானது போல் காட்சியளித்தாலும் கூட ஆழமானதும் அழுத்தமானதுமான தொடர்புகள் அதற்கான எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

இறுதியில் காதல் என்ற பெயரில் ஏமாற்றிய இருவரையும் கொன்று விடுவோம் என்று தன் நண்பர்களில் ஒருவன் கூறும்போதும், ஏன் நாம் செய்ததற்கு கூலியா என்று கூறி எந்தத் தன்னலமும் கருதாது காதலுக்காகத் தாங்கள் எதிர்கொண்ட பாதிப்புகள் பழிவாங்கும் உணர்வாக மாறிவிடக் கூடாது என்ற விதத்தில் அவனால் பிரதிபலிக்கப்படும் உயர்பண்பு அவனது தலைமைப் பாத்திரத்தை இன்னும் ஒளியுடன் மிளிரச் செய்கிறது. இத்தகைய மனநிலைகள் அனைத்தும் ஒவ்வொரு இடதுசாரி இயக்கத்திலும் இருப்பவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டியவை யாகும்.

பொதுவாக இடதுசாரி அமைப்புகளில் வேலைசெய்யும் இளைஞர்களுக்கு அவர்களது குடும்பம் ஒரு பிரச்னையாகவே இருக்கும். ஒருசிறு சுயநலவட்டம் என்ற ரீதியில் ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர் பணரீதியாக எந்தப் பலனும் தராத பொது வேலைகளில் தங்களது பிள்ளைகள் ஈடுபடும்போது அவர்களைத் திட்டிக்கொண்டும் நோகடித்துக் கொண்டுமே இருப்பர். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வது பிள்ளைகள் மேல் உள்ள வெறுப்பினால் அல்ல. அவர்களை எப்படியாவது அவர்கள் பாணியில் உருப்படியானவர்களாக ஆக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான்.

மரியாதை கலந்த அன்பை பெற்றோரிடமிருந்து பெறமுடியும்

அவர்களை எவ்வாறு பொதுவாழ்வில் இருப்பவர்களாகிய நாம் சமாளிப்பது என்பது ஒரு பெரும் கேள்வி. அதற்கு ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு இத்திரைப்படக் கதாநாயகனின் நடைமுறையே. கதாநாயகன் செய்யும் செயல்கள் தந்தைக்கு உருப்படியற்றவையாகத் தோன்றினாலும் அவர் மனதில் அவரால் வெளியில் சொல்லப் படாததொரு பாதிப்பை தலைமுறை இடைவெளியையும் தாண்டி அவை அவரிடம் ஏற்படுத்துகின்றன.

அதன் விளைவாகவே அவர் தனது பிள்ளையின் தன்னலமற்ற போக்கையும் நட்பு பாராட்டும் தன்மையினையும் கருத்திற்கொண்டு ஒரு அபிமானத்தையும் மரியாதையையும் அவன்மீது கொண்டிருக்கிறார். அவன் செய்யும் காரியங்களில் தனக்கு உடன்பாடு இல்லாமல் போனாலும் அவன் நல்லவன் என்ற கருத்து அவரிடம் நிலை கொண்டுள்ளது.

குடும்பமே மிகவும் சோதனை வயப்பட்ட நிலையில் இருக்கும்போது அது அவனது தந்தையிடமிருந்து வெளிப்படுகிறது. காவல் நிலையத்திலிருந்து ஜாமீனில் வெளிவரும் அவனைக் காரில் அழைத்து வரும்போது அதாவது அவன்மேல் மிகுந்த கோபம் அடைந்திருக்க வேண்டிய சூழ்நிலையில் அவர் தன் கையை அவன் கைமேல் பதித்து அழுத்தி தனது பரிவையும் நேசத்தையும் வெளிப்படுத்துகிறார்.

நான் விரும்பிய வாழ்க்கைதான் எனக்கு அமையவில்லை தங்கைக்காவது அவள் விரும்பிய வாழ்க்கை அமையட்டும் என தனது சோகத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி தங்கையின் காதலை நிறைவேற்ற செய்யும் அவனது யுக்தி உணர்வுப் பூர்வ உறவுகளை நல்ல விசயங்களுக்காக இப்படியும் பயன்படுத்தலாம் என்பதற்கோர் எடுத்துக்காட்டு.

கற்றுக்குட்டித்தனத்திற்காகக் காவு கொடுக்கப்படும் காதல்

கதையின் மிகவும் மையமான சோகமே ஒரு மேலோட்டமான எந்தவகைக் கருத்தொருமைப்பாடும் இல்லாத பருவக்கவர்ச்சி ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட கற்றுக்குட்டி காதலுக்காக ஒரு வகையில் தேவதாஸ் - பார்வதியின் காதலை ஒத்த கருணாகரன் -நல்லம்மாள் காதல் நிறைவேறாமல் போவதுதான். தேவதாஸில் தேவதாஸின் தந்தை மணமகள் ஜமீன்தார் குடும்பத்துப் பெண்ணாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் இக்கதையிலோ மணமகளின் தந்தை தனக்கு மருமகனாக வரப்போகிறவன் அரசாங்கச் சம்பளம் பெறுபவனாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். தேவதாஸில் இக்காதல் நிறைவேறாது என்பதை உணர்ந்த பார்வதி தனது உல்லாசம் சல்லாபம் நிறைந்த இளமை வாழ்க்கை ஏறக்குறைய முடிந்துவிட்டது என்ற உணர்வுடன் ஒரு கிழட்டு ஜமீன்தாரை மணந்து அவரது குடும்ப பொறுப்புகளில் மனதை ஈடுபடுத்தி தன் வாழ்நாளைக் கழிக்க முற்படுகிறாள்.

அதுபோல் இப்படத்திலும் தந்தை தனது விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தனது உயிரையே மாய்த்துக்கொள்ள என்று துணிந்தாரோ, எந்த வேளை தனது தாய் தாலிப் பிச்சை கேட்டு மகளென்றும் பாராது தனது காலில் விழத் தலைப்பட்டாளோ அந்த நிமிடத்தில் தனது இளமைத் துடிப்பும் துள்ளலும் ஆசைகளும் கனவுகளும் நிரம்பித் ததும்பும் கல்யாண வாழ்க்கை குறித்த எண்ணங்களை குழிதோண்டிப் புதைத்துவிட்டு நல்லம்மாள் நடைப்பிணமாகிறாள். அவளது பழைய துடிப்பும் ஜீவனும் நிரம்பிய குணநலன்களின் துVரத்துச் சுவடுகளைக் கூட அதன் பின்னர் பார்க்க முடியாமல் போகிறது.

தேவதாசுக்கும் இந்தப் படத்திற்கும் உள்ள ஒரே வேறுபாடு தேவதாஸில் தேவதாஸ் பார்வதியின் ஆழமான காதலே முழுக்கதையாக இருந்தது. நட்பின் உயர்வினை உயர்த்திப் பிடிப்பதை மையக் கருத்தாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் கருணாகரன் நல்லம்மாவின் ஆடம்பரமில்லாத அழுத்தமானதாக ஆவதற்கு அனைத்துத் தகுதிகளையும் கொண்ட காதல் ஒரு உபகதையாக மாறுகிறது.

இயல்பும், தத்ருபமுமான நடிப்புகள்

நடிப்பைப் பொறுத்தவரையில் படத்தில் வரும் பெரும்பாலோர் நடிப்பதாகவே தெரியவில்லை. வாழ்க்கையை அப்படியே முன் நிறுத்துகிறார்கள். மிக நீண்ட நாட்களுக்குப்பின் சாவித்திரியின் நடிப்பை நினைவுபடுத்தும் விதத்தில் நல்லம்மா பாத்திரத்தில் நடித்திருக்கும் புது நடிகை அவர் நடிப்பிற்கு புதியவர் என்று கூற முடியாத விதத்தில் ‘நான் நீங்கள் சொல்லுகிறபடி கேட்கிறேன்’ என்று தனது மரண வேதனையை மனதில் புதைத்துக் கொண்டு ஒருமுறைக்கு இருமுறை தன் தந்தையிடம் கூறி அழும் காட்சி ஒரு சகாப்தத்தின் வேதனையை பார்ப்பவர் மனதில் பாய்ச்சுகிறது.

அதைப்போல் பாண்டி எனும் பாத்திரத்தில் நடிக்கும் நண்பர்களில் ஒருவன் கட்டிட வேலைக்குப் பயன்படும் கம்பால் அடிபட்டு கேட்கும்திறன் இழந்த நிலையில் அவனது நடிப்பும், சிக்கலில் மாட்டிக் கொண்டபின் வீட்டிற்கு வரும் வேளையில் அவனது தந்தை அங்கு கிடந்த வாழைமட்டைகளினால் அவனைத் திட்டிக் கொண்டே அடிக்க நீங்கள் பேசுவது ஒன்றும் எனக்கு கேட்கவில்லை என்று கூறிவிட்டு அக்குடும்பத்திலிருந்து பிரியும் நிலை வந்துவிட்டது போன்ற உணர்வில் தன்னால் அத்தருணத்தில் நினைவுகூர முடிந்த ஒரே உறவான இறந்துவிட்ட தன் தாயை நினைத்து அம்மா என்று கூறும் இடத்திலும், சந்திரன் பாத்திரத்தில் நடிப்பவர் கால்வலியால் அரற்றும், துடிக்கும் இடங்களிலும் அவர்களது நடிப்பு அற்புதம்.

சிறுசிறு பாத்திரங்களில் வந்தாலும் கூட சிலர் பார்ப்பவர் மனதில் நிரந்தரமாக நிலை கொண்டுவிடுகின்றனர். அப்படிப்பட்ட பாத்திரம் தான் வசனம் எதுவும் பேசாத கருணாகரனின் நண்பனாக மோட்டார் சைக்கிளில் வரும் வாலிபனின் பாத்திரம். அவனது மெளனம் வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கொச்சைப்படுத்தாமல் உள்ளார்ந்த நட்பின் மேன்மையைப் பக்கம் பக்கமாக பட்டியலிடுகிறது. கருணாகரனின் பாட்டியாக வரும் வயதான பெண்மணியின் கபடமற்ற சிரிப்பு, கதாநாயகனை மட்டுமல்ல படம் பார்க்கும் நம்மையும் அவர் இறந்தபின் அவர் முன்னர் படுத்திருந்த இடத்தில் அவரைத் தேடச் செய்கிறது.

தனிப்பட்ட முறையில் நடிப்பென்று பார்த்தால் அரசியல் வர்க்கத்தின் பிரதிநிதியாக வரும் கன்னியாகுமாரி மாஜி எம்.பி. பாத்திரமேற்று நடிக்கும் நடிகை பெண்தன்மைகள் பலவும் அற்றுப்போன ஒரு சீரழிந்த பெண் அரசியல்வாதியைத் தத்ருபமாகப் பிரதிபலிக்கிறார். அவரது பழனிவேல் ராமன் என்ற குரல் திரையரங்கை விட்டு வெளிவந்த பின்னரும் காதுகளில் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

நாம் வாழும் இந்த சமூகம் எவ்வளவு துVரம் எதிர்காலப் பாதுகாப்பினை எவருக்கும் உறுதி செய்ய முடியாததாக இருக்கிறது என்பது மிக இயல்பான காட்சிகள் மூலம் திரைப்படம் முழுவதும் வெளிப்படுத்தப்படுகிறது. தாங்கள் எவ்வாறு ஒரு நிலையான வாழ்க்கையினைத் தங்களுக்கென அமைத்துக் கொள்வது என்பது குறித்தே பேசிக்கொண்டிருக்கும் நண்பர்கள்; அரசாங்க வேலை, அரசாங்க வேலை என்று அரைப் பைத்தியமாக தன் மகளின் எதிர்கால உத்திரவாதம் கருதி அலையும் கதாநாயகனின் மாமன்; தனக்கு மருமகளாக வரவேண்டும் என தான் விரும்பும் கதாநாயகனின் தங்கையிடம் வீட்டுப் பத்திரம், பயோடேட்டா, வங்கிக் கணக்கு உட்பட அனைத்தையும் காட்டி, தன் மகனால் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அவளுக்கு வழங்க முடியும் எனச் சிரத்தை எடுத்துக் காட்ட முயலும் கதாநாயகனின் நண்பனது முன்னாள் இராணுவ வீரரான தந்தை என இப்பாத்திரங்கள் அனைவருமே இந்தச் சமூகம் எத்தனை பாதுகாப்பற்றதாக உள்ளது என்பதை மிக இயல்பாக வெளிப்படுத்துகின்றன. அதாவது சமூகத்தில் இல்லாத பாதுகாப்பைத் தேடி மக்கள் எவ்வாறு வீணாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துகின்றன.

நண்பனின் காதல் கைகூட உதவுவது என்பதை ஒரு நல்ல சமூகம் எந்த வகையிலும் தவறென்று கூறாது. ஆனால் நாம் வாழும் சமூகத்தில் அதனைச் செய்வதற்காக நண்பர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்தான் எத்தனை. பாசமிகு பாட்டியின் உயிர், உடல் ரீதியான ஊனங்கள், திசைமாறிப் போன எதிர்காலம் என்று பாதிப்புகள் பல ஏற்படுகின்றன. அதைப்போல் நண்பர்களால் சேர்த்து வைக்கப்பட்ட காதலர்கள் தான் தோன்றித்தனமாக எந்த அவசியமும் இன்றிப் பிரிகின்றனர். காதலர்களை ஒன்று சேர்ப்பதற்கு எதிராக சம்பந்தப்பட்ட தாய் தந்தையரின் நேரடித்தாக்குதல் இருந்தது. காதலர்கள் பிரிவதில் அவர்கள் சார்ந்திருக்கும் மேட்டுக் குடித்தனத்தின் மேலோட்டத் தன்மையின் உள்ளார்ந்த சொகுசும், ஆடம்பரம் தேடும் போக்கும் இருக்கிறது. இவை அனைத்தும் இனம் புரியாத விதத்தில் பார்ப்பவர் அனைவருக்கும் இந்தச் சமூகம் நன்றாக இல்லை; அதில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பதை பூடகமாக உணர்த்துகின்றன.

அந்த வகையில் பரந்த அளவில் பார்ப்பவர் மனதை இத்திரைப்படம் பாதிக்கிறது; ஒருவகை வேதனையில் ஆழ்த்துகிறது. இன்றைய தேவை இதுபோல் பார்ப்பவர் மனதை வேதனைக்கு ஆளாக்கும், சங்கடப்படுத்தும் படங்களே. ஏனெனில் அவற்றில் ஒரு சமூக நோக்கு உள்ளது. அவை பார்ப்பவர் மனதில் உருவாக்கும் சிந்தனை ஏன் இப்படி நடக்கிறது என்ற எளிமையான எண்ணத்தில் தொடங்கி, படிப்படியாக அதற்கான காரணங்களை சிந்தித்து அறிய முற்படுகையில் முறையான வழியில் சிந்திக்கும் ஒரு சிலரிடமாவது இந்த சமூகத்தை சரியானதாக மாற்ற வேண்டும் என்ற உறுத்தலை உண்டாக்கும். அதைச் செய்வதன் மூலம் ஒரு முற்போக்கான சமூகப் பார்வையை அப்படம் பிரதிபலிக்கிறது. அந்த வகையில் இத்திரைப்படம் கலைநயத்துடன் ஒரு சமூகக் கடமையினை ஆற்றும் பணியினை நயமும் சுவையும் குன்றாமல் செய்கிறது.

Pin It