paradesi_600

‘பரதேசி’ திரைப்படம் ‘எரியும் பனிக்காடு’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. ‘எரியும் பனிக்காடு’, ‘Red Tea’ எனும் ஆங்கில மூலத்தை அடிப்படையாகக் கொண்டது. இது அனைவருக்கும் தெரியும். இதை ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவும் ஒப்புக் கொண்டிருந்தார்.

‘Red Tea’ எனும் ஆங்கில மூலத்தை எழுதியவர் டாக்டர் டேனியல் ஆவார். ஆக கதை டாக்டர் டேனியலுடையது.

என்ன மாயமோ! மந்திரமோ! தெரியவில்லை. இப்போது கதை பாலா என்று படம் உட்பட அனைத்து விளம்பரங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிக்குப் பெயரென்ன?

'எரியும் பனிக்காட்டை படித்து விட்டு நிம்மதி இழந்துவிட்டேன், என்ன ஒரு வரலாற்று பொக்கிசம், அதை படமாக்க விரும்புகிறேன்' என பாலா எரியும் பனிக்காடு மொழிபெயர்ப்பாளர் இரா.முருகவேளிடம் உருகியிருக்கிறார். டேனியல் குடும்பத்தாரை சந்திக்க உதவுவதாக முருகவேளும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

செய்தி அறிந்த டேனியலின் பிள்ளைகள் பூரித்துப் போயினர். தந்தையின் படைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் அவர்களுக்குப் பெருமையாக இருந்தது. இயக்குனர் பாலா நேரில் வந்து அவரது உணர்வை எப்படி வெளிப்படுத்துகிறார் என காண காத்திருந்தனர்.

ஆனால், தான் நேரில் செல்லாமல் வியாபாரம் பேச மிகத் திறமையான ஒரு பெண்ணை அனுப்பினார் பாலா. அப்பெண் பேரம் செய்த முறை மிக அலாதியானது. அவர் கதை குறித்தோ, பாலாவின் உணர்வு குறித்தோ எதுவும் பேசவில்லை. நேரடியாக ஒப்பந்தத்திலும் இறங்கவில்லை. மாறாக அவ்வீட்டிலுள்ள செல்லப்பிராணியான நாயுடன் வெகு நேரம் விளையாடினார். வேண்டுமென்றே நேரம் கடத்தினார்.

மற்ற அலுவல்களுக்கான நேரம் வீண் போவதை எண்ணி வீட்டில் உள்ளோர் நெளியத் தொடங்கினர். சீக்கிரம் பணிகளுக்கு செல்ல வேண்டி வீட்டார் தவிப்பதை அப்பெண் உணர்ந்தார். நிதானமாக இருக்கையில் அமர்ந்து ‘என்ன செய்யலாம்?’ எனக் கேட்டார். வீட்டில் உள்ளோர் தங்களது அவசரத்தை உணர்த்தினர். ‘சரி சீக்கிரம் ஒப்பந்தம் செய்து கொள்வோம்’ என அப்பெண் பத்திரத்தை நீட்டினார்.

இந்த திட்டமிட்ட வணிக உத்தியானது உங்களுக்கு நிறுவனங்களுக்கு இடையே பேரம் பேசிய நீரா ராடியாவை நினைவூட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். கலை, உள்ளார்ந்த ஈடுபாடு, படைப்பின் மீதான காதல் என்பதெல்லாம் இவர்களிடையே இல்லை என்பதற்கு இது ஆதாரம். இருப்பதெல்லாம் வணிக நோக்கம்தான்.

போகட்டும், இவ்வரலாற்று படைப்பை உருவாக்கிய டாக்டர். டேனியல் ஓர் எழுத்தாளர் அல்ல; நோய் தீர்க்கும் மருத்துவர். அவர் தேயிலைக் காடுகளில் கொடூர நிலைமைகள் தெரிந்தே அங்கு பணியாற்றச் சென்றார். அங்கு அவரின் ரத்தத்தை உறைய வைத்தது தொழிலாளர்களின் நோய் மட்டுமல்ல; அதைக் காட்டிலும் அவர்கள் மீது நடத்தப்பட்ட சுரண்டல் மற்றும் சாதி அடிமைத்தனம்தான்.

ஆம், கடுங்காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்குவதும், அவற்றைப் பராமரிப்பதும் மரண விளையாட்டாகும்.

bala_paradesi_600

சாவு நிச்சயம். பனியானாலும், மழையானாலும் இடைவிடாது கொட்டிக் கொண்டே இருக்கும். அட்டைகள் ரத்தம் உறிஞ்சும். கொசுக்கள் ஆளைக் கொல்லும். காய்ச்சல், மலேரியா, அம்மை என உயிர் போகும் நோய்கள் தாக்கும். இவைகளுக்கு சரியான மருந்து கண்டு பிடிக்காத காலம் அது. கூட்டம் கூட்டமாக மக்கள் செத்து விழுவர். உயர்ந்த மரங்களும், அடர்ந்த செடிகளும் வெட்டி திருத்துகையில் விபத்துகள் உயிர் பறிக்கும். பாம்பு உட்பட அனைத்து உயிர்க்கொல்லி விலங்குகளும் மனித வேட்டையாடும்.

கொத்துக்கொத்தாய் செத்துப்போகும் இவ்வேலைக்குத் தோதானவர்களை வெள்ளையன் தேடினான். செத்தவருக்காக எவ்விதத்திலும் நீதி கேட்கத் துணியாத நாதியற்ற சனங்கள் யாரெனக் கேட்டான். வெள்ளையனோடு உடன் இருந்த பார்ப்பன கங்காணிகள் கை காட்டிய மக்கள்தான் தலித்துகள்.

எஸ்டேட்டுகளுக்கு தலித்துகளே அதிகமாக கொண்டு வரப்பட்டனர். உடம்பில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் கடைசி நொடிவரை வெள்ளையன் அவர்களை உழைக்க வைத்தான். சாதி வெறி பண்ணைகள் கிராமத்தில் நம் பெண்களை வன்புணர்ச்சி செய்வது போல் வெள்ளையனும் செய்தான். தனது பூட்சு காலால் எட்டி உதைத்தான்; எச்சில் துப்பினான்; தேர்ந்தெடுத்த கீழ்த்தர வார்த்தைகளால் அவமானப்படுத்தினான். பார்ப்பனர்களுக்கு குறைவில்லாத அனைத்து ஒடுக்கு முறைகளையும் வெள்ளையன் நம் மக்கள் மீது செலுத்தினான். மனித மாண்பு அங்கு துளியும் இருக்கவில்லை. போதாக்குறைக்கு கங்காணிகளும், கடைக்காரர்களும், மந்திரவாதி போன்ற ஒட்டுண்ணிகளும் நம் மக்களை ஒட்ட சுரண்டினர்.

நரகத்தின் மத்தியில் செத்துக் கொண்டிருந்தவர்களை துணிச்சலோடு நிமிர வைத்து கேள்வி கேட்க வைக்க எண்ணினார் டாக்டர். டேனியல். தனது மருத்துவ தொழிலோடு இணைந்து அம்மக்களுக்கான தொழிற்சங்கத்தையும் உருவாக்கிய போராளி அவர். மக்களின் வாழ்வையும் வரலாற்றையும் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கொடுமையையும் நேர்மையாகப் பதிவு செய்து டாக்டர். டேனியல் நமக்களித்த வரலாற்றுப் பொக்கிசம் ‘Red Tea’.

அவ்வாறு மக்களின் உயிரையும் காத்து, உரிமையை மீட்கவும் கற்றுத் தந்த அந்த மருத்துவரைத்தான் பாலா படத்தில் மதத்தைப் பரப்ப வந்த கைக்கூலியாக சித்தரித்துள்ளார்.

இந்த குரூரத்துக்கும் வரலாற்றுத் திரிபுக்கும் பெயரென்ன?

பாலாவுக்கு வணிகம் தெரிந்த அளவுக்கு வரலாறு தெரியவில்லை. அதனால், அவர் நாவலின் சாரத்தை உதாசீனப்படுத்தியுள்ளார். எஸ்டேட் அடிமைகள் என்பது தலித் மக்கள் என்பதாக அழுத்தத்தோடு பதிவு செய்ய மறுத்திருக்கிறார். அதுபோலவே, காடுகளின் சோகமும், அதன் இயற்கை சீற்றமும், அதனால் ஏற்படும் இழப்புகளும் என்னவென சரியான வகையில் பதிவு செய்யத் தெரியாமல் தடுமாறியிருக்கிறார். மக்களை ஒட்ட சுரண்டி, உயிர் பறித்த வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கொடுமைகளை மறந்தே போயிருக்கிறார்.

bala_paradesi_640

பாலாவுக்கு தான் செய்வதெல்லாமே சிறப்பானதென அகந்தை இருக்கும்போல. நம் மண்ணோடு ஒட்டிய நிறமும் முகச்சாயலும் கொண்ட நாயகியைத் தேடுவதிலும் கூட அலட்சியம் உள்ளது. சிவப்பு பெண்ணுக்கு கருப்புச் சாயம் பூசி, கரிச்சட்டியில் விழுந்து எழுந்த வெள்ளைப் பூனையைப் போல கதாநாயகியைக் காட்டுகிறார். கிராமம் என்றால் ஆண்-பெண் சேட்டையும், கொச்சையான வசனமும்தான் என யார்தான் சொல்லிக் கொடுத்தார்களோ!

அதுபோலவே, இருவேறு இடங்களில் நடக்கும் கதையில் வேறுபடுத்திக் காட்ட, ஒரே படத்தில் சில காட்சிகளை கருப்பு வெள்ளையாகவும், மீதியை வண்ணமயமாகவும் காட்டுவது ஒரு மலிவான சினிமாத்தனம். அதே அபத்தம் இப்படம் முழுவதும் உள்ளது. ஒரு வகை நிறக்குருட்டுத் தனத்துடன் ஒளிப்பதிவு செய்து, இது பழைய காலத்துக் கதையாக்கும் என உணர்த்தும் அதிமேதாவித்தனம் சகிக்கவில்லை.

போகட்டும், படைப்பாளியின் சுதந்திரம், வணிக நோக்கம் என எல்லா கேடுகளுக்காகவும் பாலா படத்தை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், ஒரு வரலாற்றை தவறாகப் பதிவு செய்வதற்கான அதிகாரத்தை பாலாவுக்கு யார் கொடுத்தது? 

- குணா, தேசிய முன்னணி இதழ் குழு

Pin It