கும்கி - பிரபுசாலமன் படம் என்றதும் மனதளவில் ஒரு பெருத்த எதிர்பார்ப்பு. கிங், லீ, லாடம், கொக்கி என எடுத்த படங்களெல்லாம் சறுக்கி விட, மைனாதான் இன்று பிரபுசாலமனைத் தூக்கி நிறுத்தியது. தேனி காட்டுப்பகுதியில் நிகழும் ஒரு காதலின் அழகியலை தெளிவாய் மைனா வர்ணித்தது. இந்த எதிர்பார்ப்புதான் கும்கி படம் என்றதும், அதுபோக வனம் சார்ந்த ஒரு பதிவு, கும்கி என்பது ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளை விரட்டியடிக்கும் பழக்கப்படுத்தப்பட்ட யானை - அது சார்ந்த ஒரு பதிவு என்றெல்லாம் கும்கியை எதிர்பார்த்து படம் பார்க்கப் போனேன். இங்கு கும்கி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.

kumki_601

ஆதிக்காடு- ஆதிக்குடிகள் வசிக்கக்கூடிய ஒரு மலைக்கிராமம். ஆதிக்குடிகள் இனத்தின் தலைவனின் மகள்தான் அல்லி (லட்சுமி மேனன்). கொம்பன் என்கிற காட்டு யானை பயிர்களை நாசம் செய்து, அங்குள்ள மக்களைக் காவு வாங்குகிறது. இந்தக் கொம்பனின் பாய்ச்சலுக்கு வனத்துறை ஆட்கள் சிலரும் மாண்டு போக, கொம்பனை கருப்பு பிசாசு என்றே அழைக்கின்றனர். நாளுக்கு நாள் இந்த கொம்பனால் உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்க விவசாயம் செய்யவே அச்சப்படும் சூழ்நிலையில் அந்த கிராமமே தத்தளிக்கிறது. வனத்துறை அதிகாரிகள் வேறு இடம் தருவதாகக் கூறி ஊரை காலி செயக்ச் சொன்னாலும் சொந்த மண்ணை விட்டுக் கொடுக்க அவர்களும் தயாரில்லை.

கொம்பனுக்குப் பயந்து அறுவடை செய்யவே தயங்கி வரும் நிலையில் காட்டு யானைகளை அடக்க பயிற்சி பெற்ற கும்கி யானையை வைத்துக் கொண்டு இந்த ஆண்டு அறுவடையை நடத்தத் திட்டமிடுகிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பொம்மன் (விக்ரம் பிரபு) தனது கோவில் யானையான மாணிக்கத்தை கும்கி யானையாக இரண்டு நாட்கள் சமாளிக்க காட்டிற்கு வருகிறான். அங்கு இவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதைகளும், உபசரிப்புகளும் இவர்களை வியப்புக்குள்ளாக்குகின்றன. அப்போது அல்லி மீது காதல் கொள்கிறான் பொம்மன். வழக்கமாக தமிழ்சினிமாவில் சொல்வது போலத்தான் ஆதிக்காடும் ஒரு கட்டுப்பாடான கிராமம். காதலை அறவே எதிர்ப்பவர்கள். இரண்டு நாள் சமாளிப்புக்காக வந்த பொம்மன் அல்லி மீதான காதல் மயக்கத்தில் அங்கேயே தங்கி விடுகிறான். இந்த நகர்த்தலில் கொம்பனை மாணிக்கம் வென்றதா? இவர்களது காதல் வென்றதா? என்பதுதான் க்ளைமேக்ஸ்.

ஆதிக்குடிகளின் கிராமத்தை களமாக வைத்து, கதையின் மையப்புள்ளியாக கும்கி என்றவொரு யானையை நிறுத்தியிருப்பது ஒரு வித்தியாசமான முயற்சி. இயற்கை அழகை வாரி இறைக்கும் மலைப்பகுதிகளை இன்னும் அழகாக்கிக் காட்டியிருக்கிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. படத்தின் பெரிய பலம் இமானின் இசை. ‘கையளவு நெஞ்சத்திலே’ - இது இன்னொரு 'ஜிங்கிலி...ஜிங்கிலி’. காதல் மலரும் தருணமாகட்டும், கொம்பன் வரும் சூழலாகட்டும் நம்மை உள்ளே இழுத்துச் செல்கிறது இமானின் இசை.

விக்ரம் பிரபு, கலை வாரிசின் அறிமுகப்படம். லட்சுமி மேனன் மீதான காதலில் கிறங்கிக் கிடப்பதாகட்டும், மாணிக்கம் இறந்த பின் கதறி அழுவதாகட்டும் நல்ல ஒரு நடிப்பை நம் முன் நிறுத்தியிருக்கிறார். கையில் அங்குசத்தை மட்டும் கொடுத்து விட்டால் பாகன் கெட்டப் வந்து விடும் என்று இயக்குனர் நினைத்தார் போலும். பாகனின் வாழ்க்கையைச் சொல்லும் உண்மையான பதிவுகள் மிஸ்ஸிங்.

உருண்ட விழிகளை உருட்டியபடியே அந்தக் கண்களில் யானை நெருங்கும்போது காட்டும் பய உணர்ச்சிகளிலும், ஊசி பாசிகளோடு அதே கலாச்சாரத்தில் அம்சமாய் பொருந்திப் போகிறார் லட்சுமி மேனன். ஊர்க் கட்டுப்பாட்டின்படி வளர்ந்த இவருக்கு விக்ரம்பிரபுவின் யானை மேல்தான் ப்ரியம் என்பது போலத்தான் அமைந்திருக்கிறது. விக்ரம் பிரபு மேல் காதல் மலர்ந்ததற்கான காரணக் கரு மிஸ்ஸிங்.

kumki_600

நாயகன், நாயகிக்கு அடுத்த கட்டமாய் கொத்தல்லியாக நடித்திருக்கும் தம்பி ராமையாவைச் சொல்லலாம். இவரது ஒவ்வொரு அசைவிற்கும் ஊர்மக்கள் பில்ட் அப் கொடுப்பதைப் பார்த்தால் கைப்புள்ள வடிவேலுதான் கண் முன் வந்து நிற்கிறார். எனக்கென்னவோ இந்தக் களத்தை இன்னும் அழுத்தமாய் பதியாததற்கு காரணம் இவரது பாத்திரம்தான் என நினைக்கிறேன். தம்பி ராமையா சில நேரங்களில் நம்மை சிரிக்க வைத்தாலும் சில நேரங்களில் எரிச்சலூட்டுகிறார். எதற்காக இந்த காட்சி என்று திரையரங்கில் ஒருவரையொருவர் மாறி மாறி, கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். மைனா படத்தில் தேசிய விருது பெற்று விட்ட குறைக்கு தம்பி ராமையாவை கதாநாயகராகவே நடிக்க வைத்து விடுவார் போல.

வனப்பகுதிகளுக்குள் எடுக்கப்படும் படங்களை ஆதரிப்பதா? எதிர்ப்பதா?. வனப்பகுதிகளுக்குள் படப்பிடிப்பு என்று செல்லும் சினிமா குழுவினரின் கூத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல. சமீபத்தில் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு படப்பிடிப்புக்கு வந்த ஒரு குழு பியர் பாட்டில்களை விட்டெறிந்து, மரங்களை வெட்டி குளிர்காய்ந்து, வனத்தையே சூறையாடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதனால்தான் இந்தத் தடுமாற்றமே.

காடுகளின் அழகைக் காட்டும் படத்தின் திரைக்கதையில் அழகுணர்ச்சி இல்லை என்பதுதான் வருந்தத்தக்கது. ஆறாயிரம் ஆண்டுகள் வரலாறுள்ள பழங்குடி இனத்தவர்களின் கலாச்சாரச் சின்னமாக அரைவேக்காடாய் நிற்கும் மரத்தை மட்டுமா காட்டுவது? ஊர்த்தலைவர் ஒரு இடத்தில் சொல்வார் "நாங்கள் இன்னும் கலாச்சாரம் மாறாம இருக்கோம்" என. ஊசி, பாசி மாலை அணிந்து மார்பளவு புடவை கட்டியிருப்பது மட்டும் அவர்களது கலாச்சாரமா என்ன? ஆதிக்குடிகள் என்றொரு இனத்தை பதிவில் வைக்கும்போது பார்வையாளர்களுக்கு ஆதிக்குடிகளுடன் வாழ்கிற உணர்வே வரவில்லையே?

எதார்த்த வாழ்க்கையில் வனத்துறையினருக்கு பழங்குடியின மக்கள் அடங்கித்தான் போகிறார்களே தவிர யாரும் எதிர்த்து நிற்பதில்லை. ஆனால் ஆதிக்காடு தலைவர் அரசு அதிகாரிகளிடமே சீறுவது நம்பகத்தன்மையற்றது. கொம்பன் என்ற யானையை மிகக்கொடூரமாக விவரிக்கும் கதையில் மாணிக்கம், கொம்பனை வீழ்த்தியதற்கு மதம் பிடித்ததுதான் காரணம் என்கிற லாஜிக் கொஞ்சம் உதைக்கிறது.

காதலர்களை பிரித்து வைத்தால் அது பேசப்படும் படமாகி விடும் என்கிற நினைப்பை இயக்குனர் எப்போதுதான் மாற்றப் போகிறாரோ? காடு, காடு சார்ந்த மக்கள், மக்கள் சார்ந்த கலாச்சாரம், பாகனின் எதார்த்த வாழ்க்கை என்று எத்தனையோ சொல்ல வேண்டியிருந்தும் காதலைக் கூட அழுத்தமாகப் பதியாமல் சொதப்பும் திரைக்கதை மைனஸ்.

திரைக்கதை சுணக்கம், வளவள காமெடி, லாஜிக் இல்லா காட்சிகளை சீர்திருத்தியிருந்தால் இந்த கும்கியில் ஏறி சவாரி செய்யலாம்.

Pin It