paradesi_426

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களில் பரந்த வாசகர் பரப்பை ஒரு மூல தமிழ் நாவல் போல சென்றடைந்து பெரும் வரவேற்பை பெற்றது பி.எச். டேனியல் எழுதிய  ரெட் டீ நாவல், தமிழில் இரா.முருகவேள் அதனை எரியும் பனிக்காடு என்று மொழி பெயர்த்திருந்தார். தமிழ் சூழலில் எழுதப்பட்ட நாவல். அதனை தமிழுக்கு அறிமுகம் செய்த முருகவேளின் பிரதியினையும், அவருக்கு முன்பு  ஈரோடு மருத்துவர் வெ.ஜீவானந்தம் அதன் சுருக்கத்தினை மொழியாக்கம் செய்த போது அதன் பிரதியையும் வாசித்தவன் என்ற முறையில் இந் நாவலின் களம் குறித்து தொடர் விவாதம் செய்து உள்வாங்கி இருந்திருக்கின்றோம். இயக்குனர் பாலா இதனை படமாக்க விரும்பிய போது அவர் போன்ற கலைஞன் இந் நாவலின் களத்திற்கு ஒரு சிறப்பான வடிவம் கொடுப்பார் என எதிர்பார்த்து அவர் இந் நாவலினை படமாக்க இசைவு பெற்றுத்தர ஏதோ சிறு வகையில் என் பங்களிப்பும் இருந்திருக்கின்றது.

நாவல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த சூழலிலும், மருத்துவர் ஜீவானந்தம் சுருக்கமாக மொழிபெயர்த்து அதனை அச்சிடாமல் இருந்த நிலையிலும், ஒரு தமிழ் நாவலாக அது எழுதப்பட்டிருந்தால் எவ்வாறு இருக்குமோ அந்த வடிவத்தை அதற்கு தர இரா.முருகவேள் மிகுந்த சிரமப்பட்டார். நெல்லை மண் வாசனையுடன் துவங்கும் அம் மக்களின் பேச்சு வழக்குகளை நாவலில் பதிவு செய்தது நாவலுக்கு கூடுதல் உயிர்ப்பைத் தந்தது.

நாவலினை படமாக்க ஒப்புதல் பெறப்பட்ட நாளிலேயே மொழிபெயர்ப்பாளர் இரா.முருகவேள் தொடர்புகளை திரைப்பட கலைஞர் பாலா துண்டித்துக் கொண்டார். வசனம் என்று ஒன்று படத்துக்கு தேவை அதற்காக ஒருவர் நியமிக்கக் கூடும். அந்தப் பணியில் ஏற்கனவே இந்த நாவலில் பணிபுரிந்திருந்த மொழிபெயர்ப்பாளரை பயன்படுத்தியிருக்க முடியும் அல்லது ஆலோசனைகளை கேட்க முடியும். ஆனால் இரா,முருகவேள் புறக்கணிக்கப்பட்டார். அது பாலாவின் தனி மனித சுதந்திரம் என்றாலும் கூட நாவலினை அதன் தமிழ் பிரதியான 'எரியும் பனிக்காடு' அளவுக்கோ அல்லது அதையும் தாண்டி சிறப்பாகவோ செய்திருக்க வேண்டும்.

வால்பாறை தேயிலைத் தோட்டம் சென்று பிழைக்க, வாழ்க்கை, கொடிய வறுமை ஒரு இளம் தம்பதியரை நிர்பந்திக்கிறது என விரியும் நாவலின் களம் திரைப்படத்தில் இடைவேளையிலேயே துவங்குகிறது. வறுமை, தலித் மனிதனின் வாழ்வியல் துன்பங்கள் என நாவலின் மையம் அழுத்தமாக பதியப்படவில்லை. தேயிலைத் தோட்டங்களில் நிலவிய கொத்தடிமை முறைக்கு அரசாங்கத்தின் சட்டங்களும் துணை போயின. தப்பி ஓடும் தொழிலாளர்கள் சிறைபடுத்தப்பட்டனர். நாவலின் ஆசிரியர் பல்வேறு இடங்களில் தனது சிறு பதிவுகள் வழி, பெரும் சோகங்களையும் வலிகளையும் வாசகனுக்கு சொல்லியிருப்பார். உதாரணமாக சுகாதாரமற்ற குடிநீர், செத்து விழும் மனிதர்கள், குழந்தை செத்த போதும் அடக்கம் செய்துவிட்டு வேலைக்கு வர வேண்டும் என்ற நிர்பந்தம், குளிர், இயற்கை பதிப்புக்கள் என ஒவ்வொரு நாளும் வாழ்வதாரத்திற்காக போராடி, போராடி தேயிலை செடி காத்த மனிதர்களின் இரத்தம் தேயிலைத் தோட்டம் முழுதும் வியாபித்திருப்பதை கூர்மையாக சொல்லியிப்பார். ஆனால் அது 'பரதேசியில்' நிகழ்ந்திருக்கவில்லை. மேலும் ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தலித் மக்களிடம் கடும் தீண்டாமையைக் கடைபிடித்தார்கள் என்பதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

paradesi_bala_560

தமிழ் சினிமா உலகம் ஒரு நேர்மையான கதை சொல்லும் அறத்தை இழந்துவிட்டது என்பது என் கருத்து. திருட்டு என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றில்லை என்பது நிதர்சனமாக நிகழ்ந்து வருகின்றது. ஒரு எழுத்தாளர் புதிதாய் வசனம் எழுதிக் கொண்டிருக்கும் சமயம் நான் பாமரத்தனமாக கதையின் பாத்திரங்கள் பேசும் வசனத்தை மட்டும் அவர் எழுதுவார் போலும் என நினைத்து கேட்ட போது சினிமா வசனம் என்றால் கதை, திரைக்கதை, வசனம், காட்சிகளை அமைத்தல் என எல்லாம் சேர்ந்தது எனக் கூறக் கேட்டு அதிர்ந்து போனேன். 'எனில் கதை, திரைக்கதை என இயக்குனர் பெயர் வருகிறதே?' என வினவ 'ஒரு சில வரிகளில் இயக்குனர் சொல்லும் ஒற்றை வரி கதைக்காகதான் இத்தனை பட்டங்களும் இயக்குனருக்கு' என அவர் குறிப்பிட்டார்.

எழுத்தாளர்களாக இருந்து வசனம் எழுதுபவர்களாக மாறிய எழுத்தாளர்கள் தங்களின் சொந்தக் கதைகளிலிருந்து எடுத்து காட்சிகளை அமைக்கின்றனர். நஞ்சில் நாடனும் இதற்கு விதிவிலக்கா என்ன? அவரின் சிறுகதை பாதி படம் ஆக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதனால், கதை என தனது பெயரை இயக்குனர் பாலா போடக்கூடாது என்பது இயக்குனர் சார்ந்த அறம். தனது கதை என திரைப்படத்தில் போடப்பட்ட எழுத்தினை உண்மை என நிரூபிப்பதற்காக உண்மையான நாவல் அல்லது மொழிபெயர்ப்பு நாவல் பெயர் போன்றவை மட்டுமல்ல, இது மலையாள நாவலின் தழுவல் என ஊடகங்களில் நாவலின் உண்மைத் தன்மை மறைக்கப்பட்டது.

இப் படத்தில் நிகழ்ந்துள்ள மற்றொரு சோகம் இந் நாவலின் ஆசிரியரான மதிப்புக்குரிய டாக்டர் டேனியல் புகழப்படவேண்டிய மனிதன். ஆனால் சினிமாவில் வரும் டாக்டர், கிருஸ்துவுக்கு ஆள் சேர்ப்பவர் மற்றும் ஆங்கிலேயருக்கு கொத்தடிமை முறைக்கு உதவியவர், மோசடி நபர் என ஒரு பாத்திரக்கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒரு ஒன்னனரை லட்ச ரூபாய் பணத்தை எரிந்து நாவலின் உரிமையினைப் பெற்றுவிட்டால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற திமிர்த்தனத்தை ஏற்க முடியாது. அது ஒரு வகை வன்முறை. நல்லவேளை பத்தாண்டுகளுக்கு முன்பே மூல நாவலாசிரியர் இறந்து விட்டார்.

இத்தனைக்கும் மீறி இந்த சினிமாவைப் பார்க்கும் சமயம் ஒரு சில காட்சிகளில் பார்வையாளர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்துவிடும் தாக்கம் நிகழ்கிறது. அது நாவலின் கதை வலிமை. நாவலின் தடத்தை மாற்றாமல், அதன் ஆன்மாவை சிதைக்காமல், உரிய ஆலோசனைகள், தரவுகளுடன் பாலா முயன்றிருப்பாரேயானால் ஒரு உலக சினிமாவை நிச்சயம் வழங்கியிருக்கக்கூடும்.

- ச.பாலமுருகன்

Pin It