‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே’ என்ற பாடல் வரிகள் தான் குழந்தைகளைப் பற்றி எண்ணும்போது நம் நினைவுக்கு வர வேண்டும். குழந்தை வளர்ப்பு, குழந்தையின் கல்வி, குழந்தையின் ஆசைகள், மதிப்பீடுகள், அதன் தேடல்கள், உறவுகள் இப்படி ஒரு குடும்பத்தில் வளரும் ஒரு குழந்தையுடன் ஊடாடி நிற்கின்ற பல நுணுக்கமான அம்சங்களை மிக அருமையாகக் கையாண்டு, வளர்ந்துவரும் ஒரு குழந்தையின் இயல்பினை அப்படியே பிரதிபலித்திருக்கின்ற ஒரு துணிச்சலான திரைப்படம் தான் “தங்கமீன்கள்”. எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

முதலில், வழக்கமான சினிமாத்தனத்திலிருந்து ஒவ்வொரு அம்சத்திலும் முழுமையாக வேறுபட்டு நிற்கிறது இத்திரைப்படம். குத்துப்பாட்டு, சண்டை, நாயக வழிபாடு, ஆபாசம் என்றே பார்த்துப் பழகியவர்கள் இந்தப்படத்தை ஒருவேளை ரசிக்க முடியாது. இதன் கதை எதார்த்தமாகச் சொல்லப்பட்ட விதம் மிகவும் அருமை. ‘குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தல்’ என்ற ஒரு விஷயத்திற்காக உலகமே பல ஆராய்ச்சிகளையும், பரிசோதனைகளையும் செய்து மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறது.

பள்ளிக்கூடங்கள் அனைத்தும் இந்த சமூகத்திற்கு நல்ல மனிதர்களை உருவாக்குகின்ற, கற்பிக்கும் கல்விக்கூடங்களாக இல்லாமல், கொஞ்சமும் மனசாட்சியற்று மாணவர்களை ‘மெஷின்களைப்’; போல் நடத்தும் தொழிலகங்களாகவோ, அல்லது ‘பிராய்லர் கோழிகளை’ வளர்ப்பது போல குழந்தைகளை அடைத்து வைத்து, வலிந்து திணித்து அவர்களின் இயல்புக்கும், இயற்கைக்கும் மாறான சந்தைப் பொருளாக மாற்றிவரும் ‘பிராய்லர் பள்ளிக்கூடங்களாக’வோ தான் மாறி வருகின்றன.

இச்சூழலில், கற்பித்தலும் கற்றுக் கொள்ளுதலும் எங்கே சாத்தியமாகும்? எப்படி எளிதானதாக அமையும்? என்பதை மிகவும் நாசூக்காக ‘ஆ’ என்றால் என்ன ‘று’ என்றால் என்ன என்பதை இயற்கையோடு கலந்து இயல்பாகக் கற்றுக் கொடுக்கும் தந்தையின் பாங்கு, இறுகிப்போன உதவாக்கரை கல்விமுறைக்கு கொடுக்கப்பட்ட சாட்டையடியாகும்.

நல்லாசிரியர் விருது பெற்ற தாத்தாவின் பாத்திரம் மிக அருமையாகக் கையாளப்பட்டுள்ளது. தனது படிக்காத மகனாகிய ‘கல்யாணி’யைப் பற்றியும், படித்த நாகரீக வாழ்வு வாழும் மகள், மருமகன் பற்றியும் அவர் கொண்டுள்ள மதிப்பீடு, குழந்தை வளர்ப்பு, பணம் படைத்தவர்கள் மீது கொண்டுள்ள மரியாதை, பள்ளிக்கூடம், கல்விமுறை, கற்பித்தல், குடும்பம் போன்றவை பற்றிய அவருடைய மதிப்பீடுகள் - அதை அப்படியே பிரதிபலிக்கும் அவருடைய மனைவி போன்ற யாவும், சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும். பழமையான மரபுகளையும், தவறான கற்பிதங்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டும், நம்பிக் கொண்டும் இருக்கின்ற பழகிப்போன பெரும்பான்மையோரின் வாழ்வை அப்படியே பறைசாற்றுவதாக பாத்திரங்கள் அமைந்துள்ளன.

‘போலச்செய்தல்’ என்பது ஒருவர் தனக்குத்தானே தன்னையுமறியாமல் செய்யும் துரோகச் செயல் என்றார் அம்பேத்கர். ‘போலச்செய்தல்’ என்பது எந்த அளவிற்கு ஒரு மனிதனின் சுய இயல்பையும், தனித்தன்மையையும், படைப்புத் திறன் மற்றும் புதியதாக சிந்திக்கின்ற ஆற்றலையும் இல்லாதொழித்து விடும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அதை அறிந்ததோடு மட்டுமின்றி ஏற்கனவே இருந்துவந்த மரபுகள், பழக்கவழக்கங்கள், கற்பிதங்கள், போக்குகள் அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்தினார். அவற்றிற்கு சரியான அறிவியல்பூர்வமான காரணங்கள் இல்லாது மூடநம்பிக்கையே அடிப்படையாக இருந்தபோது உடனடியாக அவற்றைக் கைவிட்டார். அதனால்தான், வரலாற்று மனிதர்கள் வரிசையிலே அம்பேத்கர் புரட்சியாளராக தனித்துவத்துடன் விளங்குகிறார்.

‘கல்யாணி’யின் பாத்திரம் எண்ணற்ற இளம் தந்தையர்களின் ‘கனவுப் பாத்திரம்’ என்று சொல்லலாம். கடுமையான போராட்டமிக்க வாழ்க்கை. குழந்தை செல்லம்மாவுக்கு கல்யாணியைப்போல ஒரு உற்றத்தோழன், மற்றும் செல்லம்மாவின் உள்ளக்கிடக்கைகளை எல்லாம் புரிந்து கொண்டு அவள் வளருகின்ற ஒவ்வொரு நிலையிலும், செல்லம்மாவோடு துணை நிற்கின்ற, தோள் கொடுக்கின்ற ஒரு தந்தையை இப்போதெல்லாம் காண்பது அரிது. குழந்தை வளர்ப்பு, குழந்தையின் படிப்பு, குழந்தையின் உடல் உள்ள நலம் பேணுதல், குடும்பம் போன்றவற்றில் ஒரு தந்தையின் பங்களிப்பு என்ன என்பதை கல்யாணியின் கதாபாத்திரம் பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கிறது.

தந்தை தன்னோடு இருக்கிறார் என்ற அபார நம்பிக்கையால், துளியும் அச்சமில்லாத சூழலில் வளர்கிறாள் செல்லம்மா. எதையும் பேசலாம், எதுவும் செய்யலாம். குழந்தை செய்யும் அனைத்தையும் அங்கீகரித்து மெல்ல மெல்ல வாழ்க்கைக்கு உதவாதவைகளை குழந்தையின் மனதில் இருந்து நீக்குகின்ற பாங்கு தந்தையின் உடனிருத்தலாலும், குழந்தை மீது கொண்டிருக்கும் அன்பாலும் சாத்தியமாகிறது.

முதன் முறையாக, இசுலாமியர், கிறித்தவர் போன்ற சிறுபான்மையின மக்களைப் பற்றிய நேர்மறை எண்ணங்களை ‘மரக்கடை பாய்’ மற்றும் ‘எவிட்டா’ பாத்திரங்கள் மூலம் காட்டியிருப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. மேலும், ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ என்ற ஆத்மார்த்தமான குழந்தைகளின் நண்பன் பாத்திரம் அபாரம்.

‘கல்யாணி’ தனது வாழ்வை இயல்பாக வாழ விரும்புகின்ற மனிதர். ஆனால், அப்படி இயல்பாக வாழ்வதற்கு பல முட்டுக்கட்டைகள், நெருக்கடிகள். பைத்தியக்காரர்கள் கூட்டத்திலே நல்ல மனநிலையுள்ள ஒரு மனிதர் வாழ்ந்தால் அவர்தான் மற்றவர்களுக்கு பைத்தியமாகத் தென்படுவார். சமூகம் ‘மனிதன்’ என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒரு வரையறை வைத்துள்ளது. அதன்படி அப்படியே வாழ்ந்தால் பிரச்சினை இல்லை. அதிலிருந்து சிறிது விலகி சுயமாக சிந்தித்து இயல்பாக வாழ முனைந்தால் அம்மனிதர் சமூகத்தில் ஏராளமான நெருக்கடிகளுக்கு உள்ளாக வேண்டும் என்பது கல்யாணியின் பாத்திரத்திலே நயமாக சொல்லப்பட்டுள்ளது. இச்சமூகத்தில் சுயமாக சிந்தித்து இயல்பாக வாழ்வது என்பது ஆண்களுக்கே கடினம் எனும்போது, பெண்களுக்கு சொல்லவா வேண்டும்? அதைத்தான் குழந்தையின் தாயின் பாத்திரம் உணர்த்துகிறது.

தந்தையின் அன்பை முழுமையாகச் சுவைக்கும் ‘செல்லம்மா’ எப்போதும் ஒரு தேடலில் இருக்கிறாள். ‘கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். அச்சமில்லா மனம், தந்தையின் அன்பு, இவையிரண்டும்தான் செல்லம்மாவின் தேடலுக்கும், அவள் மனதில் பட்டதை அச்சமின்றி கேட்பதற்கும் உகந்த சூழலை அமைத்துத் தருகிறது. அதுதான் எல்லாக் குழந்தைகளின் இயல்பும்.

செல்லம்மா ஒரு வித்தியாசமான குழந்தை. ஏனென்றால் பயமறியா குழந்தை. அச்சமின்றியும் கேள்விகள் எழுப்பிக் கொண்டே இருத்தலும்தான் செல்லம்மாவை ஒரு சிறப்புக் குழந்தையாகக் காட்டுகிறது. அவருடைய கற்பனையைத் தட்டி எழுப்புகிறது. அவள் தேடுகிறாள்! சிந்திக்கின்றாள்! தனது அறிவுக்குட்பட்டு புரிந்து கொள்கிறாள்! மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கின்றாள். அதனால்தான், வெற்றி தோல்விகள், அவமானங்கள், ஒதுக்குதல்கள், துன்புறுத்துதல்கள் இவையாவும் செல்லம்மாவை பலமிழக்கச் செய்ய முடியவில்லை.

குழந்தையை குழந்தையாக சமூகம் பார்க்க மறுக்கிறது. அதுதான் இன்றைய நமது சமூகத்தின் மிகப் பெரும் பிரச்சனை. இங்கு கல்யாணியும், ஆசிரியை ‘எவிட்டாவும்’தான் குழந்தையை குழந்தையாகப் பார்க்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் நம் மத்தியிலே மிகவும் அரிதாகவே இருக்கிறார்கள். பெரும்பாலும், குழந்தைகள்மீது தங்கள் கருத்துக்களையும், தாங்கள் விரும்புவதையும் திணிப்பதற்கு தான் அனைவரும் முயற்சிக்கிறார்கள். குழந்தையின் விருப்பம் என்ன? குழந்தையின் கருத்து என்ன? அதன் மதிப்பீடு என்ன? என்று யாரும் கவனிக்க நேரமுமில்லை, புரிந்துகொள்ள அவகாசமுமில்லை. எனவேதான் சமூக அமைப்புக்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு எதிராகவே இருக்கின்றன.

‘செல்லம்மா’ வகுப்பில் திருடுகிறாள். சமூகம் திருட்டை ஒரு குற்றமாகவே பார்த்துப் பழகிவிட்டது. அந்தக் குற்றத்தை ஒரு குழந்தையோ, நபரோ ஏன் செய்தனர்? என்று அறிய சமூகம் மறந்துவிடுகிறது. ‘செல்லம்மா’ தான் திருடிய விஷயங்களை, அதற்கான காரணத்தை மிக இயல்பாக ‘கிறிஸ்துமஸ் தாத்தா’வோடு பகிர்ந்து கொள்ளும் பாணி, குற்றங்கள் பற்றிய வரையறையை மீண்டும் மறுவரையறை செய்ய நம்மை அழைக்கிறது.

டெல்லி பாலியல் வன்முறையில் இந்தச் சமூகம் குழந்தைகள் ஏன் இப்படிப்பட்டக் குற்றச் செயல்களில் விவாதிக்கவோ, புரிந்துகொள்ளவோ மறுக்கிறது. ஒருவேளை அப்படிப்பட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டு, அவை விவாதிக்கப்பட்டால், குழந்தைகளைப் பற்றி புரிந்து கொள்ள நம் எல்லோருக்கும் கூடுதல் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.

குற்றவாளிகளாக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆத்மார்த்த உற்ற தோழனாக ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ இங்கு இல்லை. அக்குழந்தைகளைப் புரிந்து கொள்ள, அவர்களுடன் பயணிக்க, அவர்களின் உள்ளக்கிடக்கைகளை அறிந்து கொள்ள, அவர்களின் சிந்தனைகளைக் கிளறிவிட, அவர்களின் தேடலுக்கு விடைகாண உதவ, அவர்களுக்குத் தோள் கொடுக்க ‘கல்யாணியைப்’ போல தந்தைகள் அவர்களுக்கு அமையவில்லை. குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்த்து புரிந்துகொண்டு உறவாட ‘எவிட்டா’ போன்ற ஆசிரிய பெருமக்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அப்படி அமைந்திருந்தால் கண்டிப்பாக அக்குழந்தைகள் குற்றங்களை புரிந்திருக்கமாட்டார்கள்;.

ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது என்று 99% பெற்றோர் அறிந்திருக்கவில்லை. பெரும்பாலும் குழந்தைகளை தங்களை எப்படி வளர்த்தார்களோ அப்படியே வளர்க்க முனைகிறார்கள் பெற்றோர். இதன்மூலம் தங்கள் ஆற்றலையும் இழந்து தம் குழந்தைகளின் ஆற்றல்களையும் முடக்குகிறார்கள். குழந்தைகள்பால் ஆசிரியர்களும் கண்டு கற்றுக்கொள்ள வேண்டிய மிகவும் அவசியமான ப(h)டம் “தங்க மீன்கள்”.

Pin It