சினிமா ஒரு போதை, சினிமா ஒரு சூதாட்டம். சினிமா சாதியைக் கட்டிக்காக்கும் கேவலமான கழிவறை. ஆனால் நம்மைப் பொருத்தவரை சினிமா ஒரு பொழுது போக்கு. அது பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமல்ல. பிழைக்க வழியின்றி நிரந்தரமான வேலையின்றி தன்னுடைய உடலை பணயம் வைத்து பிழைக்கத் தயாரயிருக்கும் முகம் தெரியாத பலநூறு நபர்களுக்கு பெரும் புகழையும், பொருளையும் பெற்றுத் தரும் வியாபார சந்தையும் கூட. எண்ணிப் பார்க்கமுடியாத வகையில் வளமான வசதியான வாழ்க்கையையும், சமூக மதிப்பையும் . புதிய முகவரியைக் பெற்றுத் தருகிறது. சினிமாவில் வெற்றியும் பெறுவதற்காக எத்தகைய கீழ்த்தரமான செயலையும் படம் பிடித்துக் காட்டுவதற்கு சமீபகால இயக்குநர்கள் தயங்குவதில்லை.

kumki_635

சினிமாவிற்குள் காலடி எடுத்து வைக்கும் எவரும் அநீதியான சமூகத்தை புரட்டிப்போட்டு புரட்சி செய்வதற்காக யாரும் வருவதில்லை. சினிமா மூலம் தன்னுடைய வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்வதற்காக நுழைகிறார்கள். எதையும் இழக்கவும் தயாரான மனநிலையில் உள்ளவர்களிடம் சமூக சொரணையை எதிர்பார்ப்பது முட்டாள்தனமான செயலாகும். ஆனால் இன்றைய தமிழ்சினிமா இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போனதற்கு நடிகர்களும், நடிகைகளும், இயக்குநர்களும் இதர தொழிற் கலைஞர்களும் மட்டும் காரணமல்ல அவர்களை ஊக்குவித்து தரம் கெட்ட மிக மோசமான படங்களைக் கூட நூறு நாள், இருநூறு நாள் என ஓடவைத்து ஓட்டாண்டிகளாய் நுழைந்தவர்களை கோடீஸ்வரர்களாக மாற்றி வருகிற மானங்கெட்ட சமூகத்திற்கும் பெரும்பங்கு உண்டு.

சினிமா வழியாக தொடர்ந்து இம்மண்ணில் ஒரு பண்பாட்டுச் சீரழிவை துணிந்து செய்து வருவதில் சாதி இந்துக்களே முதலிடம் வகிக்கிறார்கள். தன்னுடைய சாதிப் பண்பாட்டை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்துவதற்காக ஒவ்வொரு இயக்குநரும், நடிகரும் வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்கள். இவர்களின் சினிமா போதைக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களை அவ்வபோது ஊறுகாயாகப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கும் தமிழ் சினிமாவில் நீடித்து வருகிறது. சினிமா படம் எடுப்பவன், நடிப்பவன், இயக்குபவன் எவனாக இருந்தாலும் தன்னை உயர்ந்தவனாக காட்டிக் கொள்ள தாழ்த்தப்பட்ட மக்களை தனக்குக் கீழான அடிமைச் சமூகமாக சினிமாவில் பதிவு செய்வதில் யாரும் தயங்குவதில்லை.

சாதி இந்துக்கள் எல்லோரும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள் என்பதையும் நாங்கள் ஒரு போதும் சுட்டுப் போட்டாலும் எங்களை மாற்றிக் கொள்ள மாட்டோம் என்பதையும் தமிழ்சினிமாவில் உருவாக்கப்பட்டு வெளிவரும் ஒவ்வொரு படமும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருவதைக் காணலாம். அவர்கள், இந்தியச் சமூகத்தைக் கூறுபோட்டு நாறடிக்கும் சாதிச் சிந்தனையை ஒழிக்கும் முயற்சிகளை சினிமாவில் காட்டாமல் மாறாக சாதியின் பெருமைகளைப் படம் பிடித்துக்காட்டி மனிதர்களிடையே முரண்பாட்டை கூர்மைபடுத்தும் எட்டப்பன் வேலையை இவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்

அந்த வகையில் சமீபத்தில் மிகப்பிரபலமாகப் பேசப்பட்டு நூறாவது நாள் கொண்டாடப்பட்ட திரைப்படம் கும்கி.

பட்டியலினச் சாதியினரில் ஒரு பிரிவினராகக் குறிப்பிடப்படும் ஆதிவாசி மக்களின் வாழ்வியலே திரைப்படமாக உருக்கொண்டுள்ளது. பொதுவாக பழங்குடி சமூகத்தினரைக் கொண்டு ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது என்றவுடன் என் போன்றவர்களுக்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். ஆனால் படம் பார்த்த பிறகுதான் தெரிந்தது அது பழங்குடி சமூகத்தினரின் பிரச்சினைகளைப் பற்றி பேசுகின்ற படமல்ல என்று. எந்நோக்கத்திற்காக ஆதிக்குடி மக்களை இயக்குநர் இப்படத்தில் பயன்படுத்தியுள்ளார் என்கிற கேள்வியே எனக்குள் ஏற்பட்டது. அம்மக்களின் மொழி, உணவு, உடை, பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், தொழில், பொருளாதார நிலை மற்றும் அம்மக்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் என ஆயிரமாயிரம் பிரச்சினைகள் அம்மக்களை சுற்றியிருக்க கேவலம் ஒரு காட்டு யானையை வைத்து மிரட்டியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

ஆதிக்காடு என்னும் மலைக்கிராமத்தில் வாழக்கூடிய வடுகயின மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் விவசாயம் செய்கின்ற பயிர்களையெல்லாம் கொம்பன் என்கிற காட்டு யானை உள்நுழைந்து நாசம் செய்வதோடு, வயலில் வேலை செய்கிற சில பெண்களையும் வதை செய்கிறது. கொம்பனால் ஆதிக்குடி மக்கள் மட்டும்; சாகடிக்கப் படவில்லை. வனத்துறை ஊழியர்கள் சிலரும் மாண்டு போயுள்ளனர். இதனால் நாளுக்குள் நாள் அச்சத்தால் உறைந்து போகிறது ஒட்டு மொத்த கிராமமே. தன் இனத்து மக்களை காக்கவும் விளைந்த பயிரை அறுவடை செய்யவும் மீண்டுமொரு முறை கொம்பனால் எத்தகைய பாதிப்பும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக ஊர்க்கூடி கும்கி யானையை வரவழைக்கத் தயாராகிறார்கள்;. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் கும்கி யானை கொண்டு வரமுடியாத சூழல் ஏற்படுகிறது. சூழலை சமாளிப்பதற்காக இரண்டு நாட்கள் மட்டும் காட்டில் தங்குவதற்கு மாணிக்கம் என்கிற யானையோடு நுழைகிற பொம்மன், கொத்தல்லு மற்றும் உண்டியல் ஆகிய மூவருக்கும் ஆதிக்குடி மக்களால் ஏகபோக வரவேற்பும் மரியாதையும் செய்யப்படுகிறது. ஆதிகுடிகளின் வரவேற்பையும் மரியாதையும் கண்டு மேற்படி மூவரும் வியப்பில் உறைந்து போகிறார்கள்.

வயலில் வேலைசெய்யும் போது கொம்பனால் விரட்டப்பட்டு உயிர் பிழைத்த அல்லிக்கு யானை என்றாலே வெறுப்பும் பயமும் மனதிற்குள் வேரூன்றிப் போய்விடுகிறது. இதனால் ஊருக்குள் வந்துள்ள கும்கி யானையைக் கூட பார்க்க விரும்பாதவளாய் இருக்கிறாள். ஆனால் வழிப்போக்கில் எதிர்பாராமல் அல்லி மாணிக்கத்தை பார்க்க நேரிடுகிறது. மாணிக்கத்தை இவள் பார்க்க, இவளை மாணிக்கத்தோடு வந்த பொம்மன் பார்க்க கதை மற்றொரு கோணத்திற்கு நகர்கிறது. பார்த்தவுடனே காதல் மலர்கிறது. அல்லி மீது பொம்மனுக்கும், மாணிக்கத்தின் மீது அல்லிக்கும். மாணிக்;கத்திற்கு உணவு கொண்டு வரும் போதெல்லாம் அல்லி மீது பொம்மன் அளவு கடந்து காதல் கொள்கிறான். இரண்டு நாள் சமாளிப்பிற்காக வந்த பொம்மா காதல் மயக்கத்தில் அங்கேயே தங்கிவிடுகிறான். அல்லி மீது கொண்ட காதல் தவறு என்பதை பொம்மாவின் மாமா (கொத்தல்லு) பலமுறை எடுத்துக் கூறினாலும் எதையும் காதில் வாங்காமல் உண்டியலின் பேராதரவினால் தன் காதலை நீட்டிக் கொண்டேயிருக்கிறான் பொம்மா. அல்லியும் தான். ஆதிக்காட்டிற்குள் கும்கி யானையாக நுழைந்த கோவில் யானை காட்டு யானையை எதிர்த்து வெற்றி பெற்றதா? இல்லையா? அல்லி பொம்மாவின் காதல் வெற்றியா தோல்வியா? என்பதே கதை.

எரியும் தீயின் முன்பு இசைக்கருவிகள் இசைக்க, பறையிசை முழங்க ஆண்களும் பெண்களுமாய் கூடி நின்று நடனமாடுகிற காட்சியே கதையின் துவக்கமும் கதைமாந்தர்களின் அறிமுகமாய் உள்ளது.; வடுகஇன மக்களின் தலைவன் மாத்தையன் அறிமுகத்தின் முதல் நபராய் காட்சியளிக்கிறார். மாத்தையனின் கதாப்பாத்திரம் இப்படத்தில் முக்கியமான ஒரு கதாப்பாத்திரமாக உள்ளதால் அறிமுகத்திலும் முதல் நபராய் இருக்கிறார். யானையால் பாதிக்கப்பட்டு இறந்துபோன சடலங்களை பார்வையிட வரும் அரசு அதிகாரிகளிடம் “ஒங்க சலுகையும் வேணாம், ஒங்க உதவியும் வேணாம்” என தன்னிகரில்லா அதிகாரத்தோடும் துணிச்சலோடும் எதிர்த்துப் பேசி விரட்டுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் எந்தவொரு பகுதியிலும் வாழக்கூடிய பழங்குடியின மக்கள் அரசு அதிகாரிகளை எதிர்த்துப் பேசியதாகவோ அதனால் அரசு அதிகாரிகள் பயந்து போனதாக வரலாறு இல்லை. காட்டிற்குள் நுழைகிற காட்டு இலாக்கா அதிகாரிகள் பழங்குடியின மக்களை காட்டிற்குள் வாழவிடாமல் காட்டைவிட்டு வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்துவதும், அம்மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடுவதும், பழங்குடியினப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவதும் வரலாற்றின் வழிநெடுகே நடந்த கொண்டிருக்கும் அநீதிகளாகும். இப்படிப்பட்ட கொடுமையை வெளிப்படையாய் மறைத்து மாத்தையனை அதிகாரமுள்ள நபராக காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. அதேபோலவே மாத்தையன் தான் இந்தக் காட்டையும் பாரம்பரியத்தையும் கட்டிக்காக்குற கடைசி மனிதன் என்கிற கர்வம் உடையவனாகவும், தன் மகள் அல்லியே அந்த நம்பிக்கையின் பாத்திரமாகவும் கதைமுழுக்க பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பொம்மாவும், அல்லியும் தனிமையிலமர்ந்து இருவரும் பேசி கொண்டிருப்பதை பார்க்கும் வனத்துறை அதிகாரி அல்லியின் அப்பா மாத்தையனிடம் கூற ஊருக்குள் நுழைகிறான். ஊரே வனத்துறை அதிகாரியை எதிர்த்துப் பேசி விரட்டியடிக்கிறது. அல்லி வீட்டிலுள்ள வயதான பெண்கள் அல்லியின் ஒழுக்கம் குறித்து வசைபாடுவதும், “வீட்டுல இருக்க ஆம்பளங்க அவ எங்க போற எங்க வாரான்னு கவனிக்காமெ விடுறதுனாலா இந்த பிரச்சினை வீட்டு வரைக்கும் வந்திருக்குன்னு” என அல்லியை குறைத்து மதிப்பிடுவதும் காட்சியாக்கப்பட்டுள்ளது. ஆனால் மாத்தையனோ அழுது கொண்டிருக்கும் தன் மகளைப் பார்த்து “அதுக எல்லாம் பழங்கஞ்சிங்க அப்படித்தான் பேசுவாங்க நீ என் இரத்தம்டா தப்பு பண்ண மாட்டே” என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லும் போது அல்லியின் காதலில் விரிசலும் தடுமாற்றமும் ஏற்படுகிறது. இங்குதான் கூர்தீட்டப்படுகிறது சாதியும் பெண்ணடிமைத்தனமும்.

காட்டிற்குள்ளான கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையம் கட்டிக்காக்கிற கடமையை மாத்தையன் ஒரு ஆண்பிள்ளை மீது திணிக்காமல் ஒரு பெண்பிள்ளை மீது திணிப்பதற்குக் காரணம் என்ன? மாத்தையன் குடும்பத்தில் எத்தனையோ ஆண் வாரிசுகளிருந்தும் அல்லி மீது சுமத்துவதற்கு காரணம் என்ன? அதுதான் சாதியம். சாதியத்தை கட்டிக்காக்கின்ற பொறுப்பும் கடமையும் காலந்தோறம் பெண்ணுக்குள்ளே திணிக்கப்படுகிறது. ஒரு ஆண் எத்தகு படிநிலையிலிருக்கும் எந்த சாதிப் பெண்ணை திருமணம் செய்தாலும் அவனது சாதி மாறாமல் அப்படியே நிலைத்து நிற்கும் ஆனால் ஒரு பெண் வேறுபடிநிலை ஆணைத் திருமணம் செய்தால் அவளது சாதி மட்டுமல்ல தலைமுறையே மாறிவிடும். ஆகையால் தான் ஆண்களின் காதலை ஏற்றுக் கொள்ளும் இந்தச் சமூகம் பெண்களின் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. சாதியைக் காப்பாற்றுவதற்காகவே காதலிக்கும் பெண்கள் மீது சாதியப்படுகொலைகளை நிகழ்த்திடத் துடிக்கிறது. சாதி; நிலைநிறுத்தப்பட வேண்டுமெனில் அது பெண்ணுக்குள்ளே தான் நட்டு வைக்கப்;பட வேண்டும். ஒரே சாதிக்கருவை பெற்றெடுப்பதன் மூலம் சாதிக்கு சாகாவரமளித்துக் போகிறது பெண்ணுடல்.

இதையே தான் இயக்குநர் பிரபு சாலமன் தன்னுடைய கும்கி படத்தில் “இருநூறு கால சங்கதி, இத யாராலும் மாற்றமுடியாது, மாறவும் விட மாட்டேன” என்று மிக அழுத்தம் அழுத்தமாக தெளிவாக பதிய வைத்திருக்கிறார். எனவே அல்லி ஒட்டுமொத்த பெண்ணடிமையின் வடிவமாகவும் , மாத்தையன் ஒட்டு மொத்த சாதியின் வடிவமாகவும் நிலைநிறுத்திப் போகிறார். மற்றுமொரு இடத்தில்

“வெளிலயிருந்து நாங்க பொண்ணு எடுக்கவும் மாட்டோம், கொடுக்கவும் மாட்டோம். அதான் இன்னும் எங்க பொம்பளங்க சேலை கட்டக் கூட மாத்தாம இருக்கோம். காட்டுக்கு வெளியில வேணுன்னா கலாச்சாரம் மாறியிருக்கலாம் ஆனா இங்க மாறாது, மாத்தவும் விட மாட்டோம்” குறிப்பிட்டுள்ளார்.

மானுடத்தின் சரிபாதியாக விளங்கும் பெண் ஆணாதிக்கத்தின் கொடுங்கரங்களிலிருந்து அனுபவித்து வரும் பெண்ணடிமைத் தனத்தைப் பற்றியும், அதை ஒழி;ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இவர்கள் தயாரிக்கும் படங்கள் பேசியதுண்டா? பெண்ணின் உடலையே மூலதனமாக் கொண்டு நவீன தொழில் நுட்பக் கருவிகளின் துணையோடு மர்ம உறுப்புகளை பல்வேறு கோணங்களில் படம்பிடித்து கோடி கோடியாய் கொள்ளையடித்து நக்கிப் பிழைக்கத் துடிப்பவர்களிடம் பெண் விடுதலைச் சிந்தனைகளைத் தான் எதிர்பார்க்கமுடியுமா?

prabhu_solomonசரி அதைவிடுங்கள். இந்த நாட்டைக் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய சுரண்டல் பேர்வழிகளை, இந்த மண்ணையும் மக்களையும் அன்னிய முதலாளிகளிடம் அடகுவைத்துக் காட்டிக் கொடுக்கும் கயவர்களை இவர்கள் தயாரிக்கும் படங்கள் அடையாளப்படுத்தியதுண்டா? இவர்களின் அபார சிந்தனையில், சாதிகளால் கட்டமைக்கப்பட்ட இந்தியச் சமூகத்தை துளியளவு சேதாரமின்றி பாதுகாக்கும் திரைப்படங்கள் உருவாக்கப்படும் வரை தமிழ்சினிமா மூலம் உழைக்கும் மக்களுக்கு எவ்விதப் பலனுமில்லை. அந்த வரிசையில் வெளிவந்த ஒரு படம் தான் கும்கி. ஆஹா… ஓகோவெனச் சாதி இந்துக்களின் பாராட்டுப் பெற்ற அந்தப்படத்தில் இயக்குநர் பிரபுசாலமன் என்ன சொல்லியிருக்கிறார்? அந்தப்படத்தின் மூலம் அவர் சாதித்தது என்ன? ஒன்றுமில்லை. அவர் பலகோடிகள் சம்பாதித்துள்ளார். ஆனால் கும்கி வெளிவந்த வேலையில் சமீபத்தில் சாதி இந்துக்களின் தலைவனாக அவதாரம் எடுத்துள்ள சாதிவெறியான இராமதாஸ் திருவாய் மலர்ந்து உதிர்த்த வசனங்களுக்கு இந்தப் படம் வலு சேர்ப்பதாக அமைந்திருந்தது.

எல்லோருக்கும் நினைவிருக்கும் இருப்பினும் மீண்டும் நினைவூட்டுவது என் கடமையாகக் கருதுகிறேன். அதாவது சாதி இந்துக்களின் பெண்கள் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அணியும் ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட் கூலிங்கிளாஸ் கண்ணாடிக்கு மயங்கி விழுந்து அவர்களுடன் காதல் நாடகம் நடத்தி திருணம் செய்யத் துடிக்கிறார்கள் என்றார். காதல் சாதியை ஒழித்துவிடும் என்பதால் சாதியைக் கட்டிக்காக்க காதலை ஒழிக்கவேண்டும் என்று தமிழகமெங்கும் மூலையில் முடங்கிக் கிடந்த கிழடுதட்டிப் போன சாதிகளை ஒருங்கிணைத்து அதன் மூலம் அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்து வருகிறார். கொள்கை, கோட்பாடு, செயல்பாடுகள் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதில் படுதோல்வி கண்ட மரம் வெட்டி ராமதாஸ் சாதியை ஆயுதமாகக் கையிலெடுத்துள்ளார். அதனால் காதலை வன்மையாகக் கண்டித்துள்ளார். ராமதாஸின் அதே கருத்தை வலியுறுத்தம் வகையில் படத்தின் ஒரு காட்சியில் "எம்பாட்டன், முப்பாட்டன் மொத இப்ப நான் வரைக்கும் இந்த தீயை அணையாம பாத்துக்கிட்டு வாரோம்” என்று சாதியெனும் தீயை அழுத்தமாக தெளிவாக கும்கி படத்தில் அல்லி பொம்மன் இடையிலான காதல் வழியாக பிரபுசாலமனும் சாதியை ஒழிக்கமுடியாது எனப் பதிவு செய்துள்ளார்.

கதாநாயகி அல்லியும் கதாநாயகன் பொம்மாவும் காதல் செய்யும் நேரத்தை விட அல்லியும் யானையும் காதல் செய்து கொள்ளும் நேரம் தான் அதிகம். யாருடைய காதலை வெளிப்படுத்த இப்படம் காட்சிபடுத்தப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இறுதிக்காட்சியில் மாணிக்கத்திற்கு மதம்பிடிக்க இரும்புச்சங்கிலியால் இழுத்துக்கட்டி சிகிச்சை மேற்கொள்கிறார்கள். அப்போது அங்கு வருகிற அல்லி மாணிக்கத்திற்கு பழங்களை கொடுக்க முயற்சி மேற்கொள்ளும் போது யானையின் நிலைகூறி தடுத்து நிறுத்தி அறுவடை முடிந்ததும் “நாளைக்கி நாங்க கிளம்புகிறோம் என்ன மறந்துருன்னு” பொம்மா சொல்ல பதிலுக்கு அல்லியும் நினைவலைகளில் “நீ என் இரத்தம்டா தப்பு பண்ண மாட்டே” என்கிற வார்த்தை ஊடாடிப் போக அந்த வார்த்தைக்கு கட்டுப்பட்டு, “நானும் மறந்துட்டேன் அத சொல்லிட்டு போகலான்னுதான் வந்தேன்” என்று இருவருக்குமான காதலை முறித்துக் கொண்டு நகர்கிறார்கள்.

நூற்றாண்டு கால மரபை உடைக்கும் வகையில் பொம்மா அல்லி காதலை அங்கீகரித்து அதன் மூலம் சாதி ஒழிப்புச் சிந்தனையை விதைத்திருக்கலாம். அல்லது கும்கி யானையுடன் மோதி பரிதாபமாக செத்துப் போகும் மாணிக்கத்தை வெற்றி வீரனாக சித்தரித்திருக்கலாம். ஆனால் முடிவை மிகவும் சோகமாக மாற்றி அதன் மூலம் வெகுமக்களின் கழிவிரக்கத்தை தான் கோடிகள் சம்பாதிக்க மூலதனமாக மாற்றியுள்ளார்.

பொம்மா அல்லி காதல் தோல்வியின் வழியாக பிரபு சாலமன் ஒரு கருத்தை ஆணித்தரமாக முன்வைத்துள்ளார். அதாவது சாதியை ஒழிக்கமுடியாது. அது ஆயிரங்காலத்து பண்பாட்டுச் சிந்தனையை சாதி இந்துக்கள் உயிரெனப் போற்றும் உயர்ந்த வாழ்வியல். சாதியே சமூகத்தின் உயிரியக்கமாக, அச்சாணியாக பல நூறாண்டுகளாக இயங்கி வருகிறது. அதைத் தொடர்ந்து கட்டிக்காத்து வரவேண்டுமே தவிர சாதியை ஒழிப்பதற்கான ஒரு சிறு துரும்பைக் கூட எடுத்து நகர்த்திவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமான மனநிலையில் திரைப்படத்தைக் கையாண்டுள்ளார். கும்கியில் அவர் கொடுத்துள்ள முடிவு என்பது அவரும் சாதியை ஆதரிக்கும் ஒரு தமிழன் இந்தியன் என்பதைப் பதிவு செய்துள்ளார்.

யானையை தெரு வழியே கூட்டி வந்து வீடுதோறும் பிச்சையெடுத்துப் பிழைப்பு நடத்தும் யானைப் பாகனைப் போல பிரபுசாலமன் பசுமையான மலைக்காடுகளில் யானையை பல்வேறு கோணங்களில் படம்பிடித்து பிழைப்பு தேடிக் கொண்டுள்ளார். யானைப் பாகன் நிஜ யானையை ஊரில் காட்டி குறைந்த வருமானத்தை ஈட்டுவான். ஆனால் பிரபுசாலமன் பொய் யானையை அகன்ற வெண்திரையில் காட்டி கோடிகளை சம்பாதித்துள்ளார். பாவம் தமிழக மக்கள் சினிமாக்காரன் எதைப் படம் பிடித்துக் காட்டினாலும் பார்க்கத் தயாராக இருக்கும் போது பிரபுசாலமன் போன்ற இயக்குநர்கள் புற்றீசலாய் முளைத்துக் கொண்டுதான் வருவார்கள்.

- வழக்கறிஞர் நீதிமலர்

Pin It