தலைவன் டாப்பா..டூப்பா..என்று சென்ற மாதம் முழுவதும் தடுமாறிய தமிழ் சமூக அவலத்தினிடையில் வியாபாரக் காரணங்களால் நீண்ட நெடிய போராட்டத்தின் பின் வெளி வந்துள்ள தங்க மீன்கள் திரைப்படமானது இயக்குனரின் படமாக இதயம் தொட்டுச் செல்கிறது. ஒளிப்பதிவும், இசையும், அனைத்துக் கலைஞர்களின் அற்புதமான ஒத்துழைப்பும் இயக்குனரின் முயற்சிக்கு உறுதுணையாயுள்ளது.

கல்வி பற்றி தனது மகனின் ஆசிரியருக்கு ஆபிரஹாம் லிங்கன் அவர்கள் எழுதிய கடிதத்தினையும், ஆண்டன் செகாவின் கதையில் வரும் இளம் சிறுவன் தனது கிராமத்துத் தாத்தாவிற்கு கடிதம் எழுதும் நிகழ்வையும் நினைவுபடுத்தும் கதைக்களம்.

கல்வி கைவராத ஆசிரியரின் மகன். பொருளாதாரச் சிக்கலில் மகளின் அனைத்துத் தேவைகளுக்கும் தந்தையின் கையினை எதிர்பார்க்கும் சூழல். காதல் மனைவியின் கையறு நிலை. வியாபாரமாக்கப்பட்ட கல்விச் சூழல். இன்றைய யதார்த்த உலகின் பல சூழல்களை பார்க்க முடிந்த நிலையில், படத்தினை தொய்வடையச் செய்வது வோடபோன் நாய்க்குட்டிக்காக மலைக் கிராமத்திற்குச் செல்லும் சம்பவமும், இன்றைய சூழலில் நான்காயிரம் சம்பளத்திற்காக எர்ணாகுளம் செல்வதும்தான்.

மகள்களின் உலகில் தந்தை என்றும் ஹீரோதான். கதையின் ஆரம்பம் முதலே நமக்குத் தங்க மீனாவதன் பதை பதைப்பினை உருவாக்கியதில் இயக்குனர் வெற்றி பெறுகின்றார். பிரச்னைகளைச் சந்திப்பதை விடவும் அவற்றைத் தவிர்ப்பதும் / நழுவுவதுமான சூழலுக்கு நாம் எப்பொழுதும் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். தோல்வியை நாம் மரணத்துடனேயே தொடர்பு படுத்துபவர்களாயிருக்கின்றோம். தங்க மீனாவதும் சுய முயற்சி, எதிர்த்து வெற்றி பெறுதல் என்பதில்லாமல் அதன் பாதிப்புதான். பூரியால் அது தவிர்க்கப்படுவது போன்ற குழந்தைகளின் அக உலகு அழகாகப் படமாக்கப்படுள்ளது. அதாவது இந்த நழுவல்களின் அபத்தத்தை தோலுரித்துக் காட்டுவதுமாயுள்ளது அந்தப் பூரிக் கதை.

ஸ்டெல்லா எனும் ஆசிரியை பற்றிய காட்சிகளை இயல்பாய் எடுத்துக் கொள்ளும் ப்ளாக்கர்கள் சிலர், அந்த முதல்வர் பற்றிய காட்சி தேவையற்றது என்பது ஆச்சரியமாயுள்ளது. அதைக் கூட சரியென்று கருதினாலும் அவர்களின் கிறித்தவ ஆராய்ச்சி கண்ணோட்டத்தினைக் கண்டு வருந்த வேண்டியதாயுள்ளது.

இந்தியாவின் கல்வி முறை, அது மறுக்கப்பட்ட சமுதாயங்கள், கிறித்தவ வருகை, தாழ்த்தப்பட்ட மற்றும் கடலோர மீனவர்களின் மத மாற்றங்கள், அவர்களுக்கான கல்வி என அந்த வரலாற்றின் பக்கங்களை மறுக்க / மறக்க முயல்வது வேண்டுமென்றே திசை திருப்பும் முயற்சி என்வே கருத வேண்டியுள்ளது.

இது போன்றவற்றால்தான் “தேவதாசிகள் கடவுளின் மனைவியர்” என சில சொக்கத் தங்கங்கள் தங்கள் கலைபற்றிய அரைவேக்காட்டுத் தனத்தினை கல்லூரியில் சென்று அரங்கேற்ற முடிகின்றது. இத்தகைய ஆபாச ஆராய்ச்சியை செய்து மாணவிகளுக்கு மூளைச் சலவை செய்பவர்கள் ஜாதியற்றவர்களா? இது பற்றி இந்த ப்ளாக்கர்கள் எந்தக் கவலையும் கொள்ளவில்லை. ஆனால் ஒரு திரைப்பட இயக்குனர் தனது சிந்தனையில் ஓரிடத்தில் காட்டும் காட்சி, போகிற போக்கில் கூறுவது மட்டும் இந்த ப்ளாக்கர்களின் நெஞ்சில் தைப்பது வேடிக்கையான வாடிக்கையாகி விட்டது. வாழ்க்கையில் மற்றவர்களின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற இந்த ப்ளாக்கர்கள் என்ன செய்து விட்டனர்?

எவிட்டா ஆசிரியை பற்றிய காட்சிகள் கவிதையாய் மலர்ந்துள்ளது. சந்தேகப்படும் கணவன் போல் காட்டப்பட்ட அந்த எவிட்டாவின் கணவர், நட்பாய் மாறுவது நல்ல சிந்தனையோட்டம். அனைவரும் நல்லவர்கள்தான். ஆனால் இந்தப் பொருளாதாரச் சிக்கல்களில் சொந்தங்களுக்குள்ளேயே நிகழும் உணர்வுப் போராட்டங்கள் சரியாகப் படமாக்கப்பட்டுள்ளன. அண்ணன் வாங்கித் தந்த சாக்லேட்டுக்கு, மகனுடன் சண்டையிடும் தங்கை அன்பின் பாடம்.

வசனங்களின் வலிமை பார்வையாளர்களின் கைத்தட்டலாய் வெளிப்படுகின்றது. ‘அந்தப் பள்ளிகளில் வேலை பார்த்துதானே நல்லாசிரியர் விருது வாங்கினீர்கள்’ போன்ற அற்புதமான வசனங்கள். அரங்கில் இளையவர்கள் அதிகமாயுள்ளது மனதுக்கு ஆறுதலாயுள்ளது. அந்தக் காலங்களில் அரசுப் பள்ளிகளில் நமக்குப் போதித்த நம் நெஞ்சம் நிறை ஆசிரியர்களை நம்முன் நிறுத்திய படமாயுள்ளது.

ஆனந்த யாழின் இசையில் நெஞ்சம் நெகிழ ஒரு படம்.

Pin It