இந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் தவிர்க்கவியலாத இல்லை இல்லை தவிர்க்கப்படாத ஒன்று காதல். காதலை மையப்படுத்திய படங்கள்தான் பெரும்பாலானவை. காதல் என்பது கட்டாயமாக்கப்பட்டு விட்டது போல வணிக சினிமாக்கள் ஒவ்வொன்றும் கதைக்குப் பொருந்துகிறதோ இல்லையோ கதாநாயகியின் கால்ஷீட்டை வாங்கிக்கொண்டு ஒரு காதலாம் அதில் இரண்டு டூயட்டாம். இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது நம் சினிமா.

dhanush_raanjhana

தமிழ் சினிமாவின் பார்வை, சிந்தனை மாறுகிறது என்றெல்லாம் சமீப காலமாக பேச்சு எழுந்து வருகிறது. என்றைக்கு டூயட்டை தவிர்த்து ஒரு படம் எடுக்கப்படுகிறதோ அன்றைக்குத்தான் தமிழ் சினிமா விளங்கும் என்பது இயக்குனர் மகேந்திரனின் ஆதங்கமாய் உள்ளது. வழக்கமான கிளிஷே காதல் காட்சிகளை நிரப்பிய படங்களைப் பார்த்து பார்த்து சலித்துப் போன மக்களுக்கு ஒரு புதிய காதல் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது ராஞ்சனா என்கிற அம்பிகாபதி. இந்தியில் நூறு கோடியைத் தாண்டி வசூலாகி வரும் படம்தான் ராஞ்சனா.

படத்தின் முற்பாதி காதல் கதை வழக்கன கிளிஷே காதல் போன்றுதான் காட்டப்படுகின்றது. வணிக சினிமாவுக்கே உரித்தான ஹீரோயிஸக் காதல் போல் கதை துவங்குகிறது. காசி நகரில் வாழும் புரோகிதரின் மகனான குந்தனுக்கு (தனுஷ்), இசுலாமியப் பெண்ணான சோயா (சோனம் கபூர்) மீது சிறு வயதிலேயே காதல் பற்றிக் கொள்கிறது. பள்ளிப் பருவத்தில் தன் காதலை சொல்லப் போகும் குந்தனை 15 முறை அறைந்த பிறகே சம்மதிக்க ஒப்புக் கொள்கிறாள். தான் இசுலாமிய இளைஞன் என்று பொய் சொல்லும் குந்தன் இந்து என்பது தெரிய வந்தது சோயா பிரிகிறாள். வழக்கம் போல குந்தன் கையை கிழித்துக் கொண்டு சிம்பதி உருவாக்கி காதலிக்க வைக்கிறான். காதல் விவகாரத்தால் சோயாவை ஆக்ராவுக்கு அனுப்பி விடுகின்றனர். குந்தன், சோயாவுக்காக எட்டு ஆண்டுகள் காத்துக் கிடக்கிறான். மீண்டும் காசிக்கு வரும் சோயாவோ டெல்லியில் தன்னுடன் படித்த ஜஸ்ஜித்தை அக்ரம் சைதி என்று இசுலாமிய இளைஞனாக பொய் கூறி திருமணத்துக்கு பெற்றோர்களை சம்மதிக்க வைக்க குந்தனிடம் கோருகிறாள். திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண நாளன்று அக்ரம் சைதி என்பவன் ஜஸ்ஜித் என்ற இந்து என்கிற உண்மை செய்தித்தாள் மூலம் தெரியவரவே அந்த உண்மையை குந்தன் உடைக்கிறான். இது முற்பாதி.

குந்தன் உடைத்த உண்மை எப்படிப்பட்ட மாற்றங்களை எல்லாம் உண்டு பண்ணியது என்பதுதான் பிற்பாதி. குந்தன் சொன்ன உண்மையால் ஜஸ்ஜித் சோயாவின் உறவினர்களால் தாக்கப்பட்டு இறக்கிறான். ஜஸ்ஜித் ஆரம்பித்த ஆல் இண்டியன் சிட்டிசன் பார்ட்டியின் தலைமைப் பொறுப்பை சோயா ஏற்கிறாள். தான் செய்ததை பெரிய குற்ற உணர்வாகக் கருதிய குந்தன் அதற்கு நிவாரணமாய் என்ன செய்தான் என்பதும் சோயா மீதான உண்மையான காதலை எப்படி நிரூபித்தான் என்பது சுவாரசியமான திரைக்கதைப் பின்னலில் சொல்லப்பட்டிருக்கிறது.

வழக்கமான காதல் கதைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு ஒரு புதிய கண்ணோட்டத்தோடு காதலை அணுகிய விதத்தில் இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவர். வணிக சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும் உள் இருந்தாலும் தன் திரைக்கதை நேர்த்தியில் அதை ஒரு நல்ல சினிமாவாகவும் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் எல்.ராய். ராஞ்சனா மீதான எதிர்பார்ப்புக்கு முதன்மைக் காரணம் தனுஷ். இன்றைய நடிகர்களில் தனக்கான உடல் மொழியோடு, எப்பேர்பட்ட கதாப்பாத்திரத்துக்கும் பொருந்தி தன் இயல்பை நடிப்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்ப்பவர் தனுஷ். நம் எதிர்பார்ப்பை சிறிதளவும் ஏமாற்றமாக்காமல் இன்னும் இன்னும் நமது பாராட்டுகளுக்கு சொந்தக்காரராகிறார். பள்ளிப் பருவ மாணவ வேடத்துக்கும் பொருந்திப்போகிறது தனுஷின் உடல் மொழி. ஒரு தலைக் காதலில் திளைக்கும் காட்சியில் நம்மை சிரிக்க வைக்கும் தனுஷ் பிற்பாதியில் நம் உணர்வுகளோடு ஒன்றிப்போகும் ஒரு நடிப்பைக் கொடுக்கிறார். “சோயா நீ திரும்பவும் ஒரு முஸ்லீம் பையனை இந்துன்னு சொல்லிக்கிட்டிருக்க” என்று சொல்லும் க்ளைமேக்ஸ் காட்சியில் அவ்வளவு உணர்ச்சிகள் பீறிடுகின்றன.

சோனம் கபூரும் சளைத்தவரல்ல என்பது போல் தனுஷ்க்கு போட்டியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இரட்டை சடை பின்னிக் கொண்டு துள்ளல் மிகுந்த மாணவியாய் வலம் வரும் இடமாகட்டும், தனுஷின் வளர்ச்சியை ஏற்க மனமின்றி நிராகரிக்கும் இடமாகட்டும், தனுஷை வீழ்த்த நாடகமாடும் இடமாகட்டும் அவ்வளவு இடங்களிலும் நடிகையாக தன்னை நிலை நாட்டுகிறார்.

பின்னணி இசை படத்தின் முக்கிய பலம். அந்த விதத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டுக்குரியவர். தமிழ் ரீமேக்கிங்கில் வைரமுத்துவின் வரிகள். ஜான் மகேந்திரனின் வசனங்கள் என அனைத்திலும் ஒரு நிறைவான அனுபவத்தையே தருகிறது அம்பிகாபதி.

கதாப்பாத்திரங்களுக்கு இடையிலான முரணை பற்றி பேசுவோம். படத்தின் இறுதி வரை குற்றவாளியாக காட்டப்படுபவன் குந்தன். சோயா தான் விரும்பும் ஜஸ்ஜித்தை இந்து என்கிற உண்மையை உடைத்ததால்தான் ஜஸ்ஜித் இறக்கிறான்; எனவே ஜஸ்ஜித்தை கொன்றது குந்தந்தான் என்பது சோயாவின் வாதம். ஆல் இண்டியன் சிட்டிசன் பார்ட்டி என்கிற ஒரு சமூக மாற்றத்திற்கான அமைப்பை கட்டமைக்கும் ஜஸ்ஜித், இந்து- இசுலாமிய மதத்தடைகளை மீறி சோயாவை மணந்திருக்க வேண்டுமே தவிர்த்து இந்த நாடகத்திற்கு ஒப்புக் கொள்ளக் கூடாது. இந்துவை திருமணம் செய்யப் போகிறேன் என்கிற உண்மையை சொல்லக் கூட பயக்கும் சோயாதான் படத்தின் முக்கிய குற்றவாளி. ஒரு தலையாக காதலிக்கும் குந்தனிடம் சோயா, ஜஸ்ஜித் மீதான காதலை மட்டும் விளக்காமல் குந்தனை நிராகரிப்பதற்கான காரணங்களில் குந்தன் ஒரு இந்து என்கிற காரணத்தையும் சேர்க்கிறாள். தன்னை இந்து என்கிற காரணத்தால் புறக்கணித்த சோயா, தான் இசுலாமியன் என்று பொய்யுரைத்ததற்காக பிரிந்து போன அதே சோயா ஒரு இந்துவை இசுலாமியனாக்கி திருமணம் புரிவதை குந்தனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போவதற்கு சோயாவேதான் காரணம்.

ஜஸ்ஜித் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறான் என்றால் மதப்பிரிவினைவாதத்தின் மீது திரும்ப வேண்டிய கோபம் சோயாவுக்கு குந்தன் மீது திரும்புகிறது. குந்தனும் தான் பெரிய குற்றத்தினை செய்து விட்டதைப் போல் குற்ற உணர்ச்சியில் துடிக்கிறான். குந்தனை திருடனாக பிடித்து வைத்துக் கொண்டு அவன் ஏன் திருடனானான் என்பதை கேட்கும் ஒரு காட்சியில் போதாமையற்ற அரசியல் அறிவுடைய அமைப்புகள் குறித்து மெல்லனவே விமர்சிக்கப்படுகிறது. ஊர் மக்களிடமிருந்து போலீஸ் ஒருவரை மீட்டு வந்தது குறித்து குந்தன் விளக்கும் காட்சியில் பார்ப்பனிய அரசியல் ஓரிரு வரிகளில் விமர்சிக்கப்பட்டு நகர்கிறது. ஆல் இண்டியன் சிட்டிசன் பார்ட்டியில் தனுஷ் முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்கும்போது சோயாவின் இன்னொரு முகமும் வெளிப்படுகிறது. காழ்ப்புணர்ச்சி அல்லது சுய நல முகம் என்றே அதனைச் சொல்லலாம். “சத்தியமா எனக்கு இந்த நாட்டைப் பத்தியெல்லாம் கவலை இல்லை என்னைப் பத்தி மட்டும்தான்” என்று தான் சுயநலத்தோடுதான் இயங்குவதாக வெளிப்படையாக பேசுபவன் குந்தன். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே செயல்படுத்துகிறாள் சோயா. குந்தனை ஒழித்துக் கட்ட ஆளும் கட்சியுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்படுகிறாள். இதெல்லாம் தெரிந்தும் கூட குந்தன் சோயாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு பேரணிக்கு செல்லும்போது தாக்கப்படுகிறான். குந்தன் தனக்கு செய்ததாய் எண்ணும் அதே துரோகத்தை சோயா குந்தனுக்கு செய்கிறாள். குந்தனின் உண்மையான காதல் புரியவு குற்றவுணர்ச்சியால் துடிக்கிறாள்.

பேரணியில் சுடப்படும் குந்தன் மரணிக்கிறான். இசுலாமிய நாடகம் போடச்சொல்லி ஜஸ்ஜித்தின் மரணத்திற்கு காரணமாய் இருப்பவளும், சுய நலம் என்கிற போர்வைக்குள் புதைந்து கொண்டு குந்தனைக் கொன்றதும் சோயாவேதான். ஆனால் இறுதிக் காட்சி வரை குற்றவாளியாக்கப்பட்டிருப்பவன் குந்தன். தான் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் கூட பேரணிக்கு செல்லும் குந்தனின் காதலுக்கு முன் மதத்தடையை தகர்த்தெறிய தைரியமற்ற சோயாவின் காதல் தோற்றுப் போகிறது. “ஒரு நாள் திரும்ப வருவேன் கங்கைக் கரையில் உடுக்கை வாசிக்க, காசித்தெருக்கள்ல றெக்கை கட்டிப் பறக்க மறுபடியும் ஒரு சோயாவைக் காதலிக்க" என்று ஓடும் எண்ண அலைகளுடன் முடியும் படம் நம்மிடத்தே சிறு சலனத்தை ஏற்படுத்திச் செல்கிறது.

- கி.ச.திலீபன்

Pin It