"வாழ்க்கை ஒரு வட்டம்..." என்று பேசும் வசனம் இங்கே சரியாக இருக்காது... வாழ்க்கை ஒரு முக்கோணம் என்று பேசலாமா என்று யோசிக்கும் போதே முக்கோணம் கொண்ட கோணத்தில் எல்லாம் முக்கோணம் என்றால் அதுதான் இந்தக் கதை...

முக்கோணக் கதை அல்ல.... முக்கோணத்தில் கதை...

ஜெஸ் .... கதையின் நாயகி....அவளின் பின்னால்தான் நாம் போகப் போகிறோம்.. போக போக போவதைப் போல அல்லாமல்..... நின்று கொண்டே போவதைப் போல ஒரு தோற்றம் கிடைத்தால் அதுதான் கதையின் ஓட்டம்... குழம்புவதற்கோ குழப்புவதற்கோ ஒன்றுமே இல்லை.. புரியாத எத்தனையோ இருத்தல்களின் ஒன்றாக இந்த முக்கோணம் இருப்பதைப் புரிந்து கொண்டால் கதை புரிந்து விடும்... புரியாமல் போவது கூட ஒரு வகை புரிதல்தானே என்றுதான் படத்தை திரும்ப ஒரு முறை பார்த்தேன்....

"கெட்ட கனவுகள் வந்த பிறகு... நமக்கு பிடித்த நல்ல விஷயங்களை நினைத்து கண்களை மூடிக் கொள்.. கெட்ட கனவுகளின் தாக்கம், காட்சிகள் மெல்ல மறைந்து போகும்...." என்பதாக ஒரு மாதிரி புரிதலோடு கதை நகரத் தொடங்கினாலும்... கதையின் ஆரம்பம் அதுவல்ல என்பதுதான் என் பார்வை..... பார்வைகள் பலவிதம் என்று சொல்லும் பறவையின் சங்கேத குறியீடாக பறக்கும் சாலையில் ஒரு கோர விபத்தில் மாட்டி இறந்து போகும் தன் குழந்தை டாமியின் நினைவுகளோடுதான் அவளின் ஹார்பர் பயணம் இருக்கிறது...அது கனவென்று கூட அவள் நினைக்கக் கூடும்...

அடுத்தடுத்து நடக்கும் அசம்பாவிதங்கள்.. ஜெஸ்ஐ ஜெஸ்சே பார்ப்பது....கொல்ல முயற்சிப்பது...... ஆள் மாறிக் கொல்வது.... என்று கதையின் போக்கு மிக விசித்திரமாக விநோதமாக நகரும் இடத்தில் நிச்சயமாக கண்களைக் கட்டிக் கொண்டுதான் வருகிறது... பார்வையாளனையும் திரைக்கதைக்குள் புகுந்து சற்றல்ல பலமாக யோசிக்க வைத்த இயக்குனரின் திறமையை மெச்சத்தான் வேண்டி இருக்கிறது... எத்தனை நாள் எடுத்துக் கொண்டாரோ திரைக்கதை அமைக்க...?....அத்தனை கடினமான முடிச்சுகளைக் கொண்ட கதை அமைப்பு... இசைக் கோர்ப்பும், காட்சியமைப்பும் பிரமிப்பு....

சரி விஷயத்துக்கு வருகிறேன்... நீங்கள் இன்று மாலை 7 மணிக்கு உங்களுக்குப் பிடித்த படத்தை பார்க்கத் தொடங்குகிறீர்கள்... 8 மணி வாக்கில் உங்கள் காலம் நின்று போகிறது... அதனால் நீங்கள் அந்த 8 மணியிலேயே தங்கி விடுகிறீர்கள்.... நின்று போன காலம் அதோடு நின்று விட்டால் பரவாயில்லை.... அது, மீண்டும் நீங்கள் படம் பார்க்க ஆரம்பித்த 7 மணிக்கு வந்து விடுகிறது... திரும்பவும் 7 மணியிலிருந்து உங்கள் காலம் நகருகிறது.... இம்முறை உங்களுக்குப் படம் பார்க்க ஆர்வம் இல்லை.. நீங்கள் சமையலறையில் ஏதோ சமைக்கத் தொடங்குகிறீர்கள்... அப்போது சமைத்ததை 8ஐ நெருங்கும் நேரத்தில் எடுத்துக் கொண்டு உங்கள் அறைக்கு வந்தால், ஏற்கனவே முன்பு வந்த 8 மணியில் தங்கிப் போன உங்களின் முதல் வெர்சன் இன்னும் டிவி முன்னால் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறீர்கள்.....

எப்படி இருக்கும்.....?...உங்கள் வெர்சனும் நீங்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால்....?

இரு காலங்களின் கோடு ஒன்றின் மீது ஒன்று ஓடும் இடம் அது... கோடுகள் ஒன்றன் மீது ஒன்றாக மாறி மாறி பின்னி பிணைந்து ஓடுவதில் ஏற்படும் குழப்பங்களை தெளிவு படுத்த நேரம் பிடிக்கும் தானே...? அந்த நேரம்தான் இக் கதையின் கதை நாயகியான... எல்லாரையும் காப்பாற்ற நினைக்கும் ஜெஸ்.....

இதே போல மீண்டும் எட்டு மணிக்கு உங்கள் சமையல் அறையோடு உங்கள் நேரம் நின்று போகிறது..... மீண்டும் 7 மணிக்கு உங்கள் காலம் ஆரம்பிக்கிறது......இந்த முறை நீங்கள் துணி துவைக்கப் போகிறீர்கள்.. அப்போது ஹாலில் இருக்கும் உங்கள் முதல் வெர்சனையும் சமையல் அறையில் இருக்கும் உங்கள் இரண்டாவது வெர்சனையும் பார்த்தால் எப்படி இருக்கும்... என்ன நடக்கும்.... இது தான் கதையின் அடித்தளம்.. இதன் மீது கட்டமைக்கப்பட்ட திரைக்கதையில் ஜெட் வேகத்தில் கதை நகர்வதுதான் இயக்குனரின் மிகப் பெரிய பலம்... இந்த ட்ரையேங்கிள் (2009) சொல்லும் ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு கதை இருப்பதை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஓவ்வொருவரும் ஒரு வாறாக புரிந்து கொள்வது தான் இக் கதையின் ஒருமாதிரி நகர்தல்...

எழுதி இயக்கிவர்....
கிறிஸ்டோபர் ஸ்மித்

ஜெஸ் உள்பட 6 பேர் கொண்ட (கிரேக், டவ்னி, ஹீதர், சாலி, விக்டர் ) கடலுக்குள் ட்ரிப் அடிக்கிறார்கள்...அவர்கள் செல்லும் போட், புயலினால் ஏற்படும் விபத்தில் சிக்கி கடலில் கவிழ்ந்து விடுகிறது..... அனைவரும் ஒரு வழியாக உடைந்த போட்டில் ஏறி உயிர் பிழைக்கிறார்கள்...... ஹீதர் மட்டும் தண்ணீருக்குள் மூழ்கி விடுகிறாள்..... அப்போது அவர்களை நோக்கி ஒரு கப்பல் வர.. தங்களை காப்பாற்றச் சொல்லி கத்துகிறார்கள்.. பிழைத்த ஐவரும்.... கப்பலில் யாரோ ஒருவர் நிற்பதையும் பார்த்து விட்டு நம்பிக்கையோடு ஓடிச் சென்று கப்பலில் ஏறுகிறார்கள்...... ஆனால் உள்ளே செல்ல செல்ல கப்பலில் யாரும் இல்லாததும்...ஏதோ அமானுஷ்யங்களால் சூழப் பட்டது போல இருப்பதையும் ஒருவாறாக உணர்கிறார்கள்.... அதில் ஜெஸ் மட்டும் இந்த இடத்துக்கு, தான் ஏற்கனவே வந்ததாகவும்.. பழகிய இடம் போல இருப்பதாகவும் கூறுகிறாள்.. அவளின் மனதுக்குள் மட்டும் ஏதோ இனம் புரியாத விபரீதங்கள் ஓடிக் கொண்டேயிருக்கின்றன...... திடும்மென அங்கே யாரோ ஒருவர் ஒளிந்து நின்று ஓடுவதாகவும் கூறுகிறாள்... அப்போது ஜெஸ்-இன் சாவிக் கொத்து சற்று தள்ளி கீழே விழும் சத்தத்தோடு கவனம் பெற்றுக் கிடக்கிறது.....ஓடிச் சென்று அதை எடுத்த ஜெஸ் அதிர்ச்சியோடு, "இது என் வீட்டு சாவி... இதில் உள்ள டாலரில் இருப்பது என் மகனின் புகைப்படம்...." என்று படபடப்போடு கூறுகிறாள்...

"உன் சாவிக் கொத்து இங்கு எப்டி"- என்று கேள்விகளோடு 5வர் அணி தடுமாறிக் கொண்டிருக்க.....அதைத் தொடர்ந்து சில காட்சிகளுக்குப் பின்....

யாரோ ஒரு முகமூடி, துப்பாக்கியால் அனைவரையும் கண் மூடித்தனமாக சுட.. ஜெஸ் மட்டும் தப்பித்துக் கொள்கிறாள்.. ஓடி ஓடி.. அங்கும் இங்கும் ஓடி உயிரைக் காப்பற்றிக் கொள்ளப் போராடும்போது..... முகமூடியும் ஜெஸ்ம் நேருக்கு நேராக முட்டிக் கொண்டு சண்டை இட.. அதில் முகமூடியை கடலுக்குள் தள்ளி விடுகிறாள் ஜெஸ்... முகமூடி, கடலுக்குள் விழும் போது..... "அவர்களைக் கொன்று விடு.. அப்போது தான் நீ வீட்டுக்கு போக முடியும்"- என்று சொல்லிக் கொண்டே விழுகிறது.......

அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஜெஸ்....

இப்போது கடலுக்குள் மீண்டும் ஒரு உடைந்த போட்டில் ஐவர் குழு இவள் உள்பட மீண்டும் கப்பலை நோக்கி, காப்பாற்றச் சொல்லி உதவி கேட்டு கை அசைக்கிறார்கள்... கப்பலில் உயிர் பிழைத்து நிற்கும் ஜெஸ்க்கு ஒன்றும் புரியவில்லை... தலை வலிக்கிறது... தலையைப் பிடித்துக் கொண்டு தடுமாறுகிறாள்...... இப்படி பல முறை பல முறை அதே காட்சி திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருக்கிறது...அடுத்தடுத்த முறைகளில் ஒரு வழியாக ஜெஸ் தாங்கள் ஒரு ட்ரையேங்கிளில் மாட்டிக் கொண்டு விட்டதைப் புரிந்து கொள்கிறாள்... ஒவ்வொரு முறையும் கொல்லப்பட்ட சாலி ஒரு இடத்தில் குவிந்து கிடக்கிறாள்.... அவளிடம்... அடுத்த முறை நாம் இங்கு வருவதைத் தவிர்த்து விட்டால் இப்படி சாக வேண்டியது இல்லை என்று ஆறுதலும் கூறுகிறாள்..

வீட்டுக்குப் போக வேண்டும் என்று மனதுக்குள் அழும் ஜெஸ் தடுமாறி நகர்தலில் அங்கிருந்த துப்பாக்கி இருக்கும் அறைக்குள் சென்று விடுகிறாள்... அங்கே.. அவளின் முன் வெர்சன்களால் எழுதப்பட்ட, "எல்லாரையும் கொன்று விடு" என்ற காகிதக் குவியல் கிடப்பதைக் காண்கிறாள்... அவளும் ஒரு முறை எழுதிப் பார்க்கிறாள்... ஜெஸ்சின் காதில் ஆமானுஷய கத்தல்கள் பயங்கரமாக ஒலிக்க... அவளையும் மீறி துப்பாக்கியைக் கொண்டு தன் நண்பர்களை கொல்கிறாள்....(ஒவ்வொரு முறையும் கொல்கிறாள்... இரண்டாவது முறை சண்டை போடும் போது முகமூடியைக் கழற்றிய முகத்தில் தானே இருப்பதைக் காண்கிறாள்...) இதை எல்லாம் ஒரு மாதிரியாக புரிந்து கொண்ட ஜேஸ் (முதல் காட்சியில் கப்பலுக்குள் நுழையும் 5வரில் ஒரு ஜெஸ்- காப்பாற்றுபவள்-கதை நாயகி ) அவர்களைக் கொல்லும் தன் அடுத்த அல்லது முன்பிருந்த வெர்சன்களிடன் சண்டையும் போட்டு கொல்லவும் செய்கிறாள்......கப்பலில் ஒரு இடத்தில் தன் மகனின் புகைப் படம் இருக்கும் டாலர் குவிந்து கிடப்பதும் இப்போது மீண்டும் ஒரு முறை விழுவதும் திரும்ப திரும்ப ஒரே முறைகள் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொள்கிறாள் ஜெஸ்..... ஒரு கட்டத்தில் தங்கள் வந்த போட் விபத்துக்கு உள்ளாகும் சமயத்தில் உதவி கேட்டு போனில் பேசிய கிரேகின் குரலைக் கூட இப்போதும் உதவி கேட்டு அழைக்கப்பட்ட பிரீகுன்சியில் கேட்கிறாள்.. அதாவது கடந்த காலத்தில் பேசிய குரல் இன்று இருக்கும் நிகழ்காலத்தில் வந்து சேர்கிறது..... அதாவது... அவர்களின் முக்கோணத்தில் ஒரு கோணம் திரும்ப திரும்ப அதற்குள்ளாகவே சுழன்று கொண்டிருக்கிறது.......அதாவது முந்தின வெர்சன் ஜெஸ் பிந்தைய 5வர் அணியைக் கொல்கிறாள்(அதில் பிந்தைய ஜெஸ் தப்பித்துக் கொண்டு முந்தின வெர்சன் ஜெஸ்ஐக் கொன்று விடுகிறாள்... ஆனால் சாகும் தருவாயில் முந்தின வெர்சன் ஜெஸ்.. "அவர்களைக் கொல்.. அப்போது தான் நீ வீட்டுக்கு போக முடியும்" என்று கூறு விட்டு சாக... அதன் பின்னால் வரும் 5வர் அணியைக் கொல்ல இப்போது தப்பித்துக் கொண்ட ஜெஸ் காத்திருக்கிறாள்...கொல்கிறாள் ... இப்போதும் தப்பித்துக் கொண்ட இப்போது வந்த ஜெஸ் முந்தின ஜெஸ் ஐ கொன்று விட்டு.......

இது அப்படியே தொடர்கிறது.... படம் ஆரம்பிக்கும் போது வந்த ஜெஸ் (கதை நாயகி... )இதை புரிந்து கொண்டு எல்லாரையும் காப்பற்ற முயற்சிக்கிறாள்...

ஒரு வழியாக வெளியே வந்து கடற்கரையில் கரை ஒதுங்குகிறாள்.. இங்கு நம்மால் வேறு ஒரு கதையைக் கூட கூற முடியும்.. போட் கவிழ்ந்த உடனே அனைவரும் நீரில் மூழி இறந்து போக, ஜெஸ் மட்டும் கரை ஒதுங்குகிறாள்.. அப்போது அவளின் மனதுக்குள் ஏற்பட்ட பிரள்வுகளின் நீட்சியாக இந்தக் கப்பல் கதை முழுக்க ஒரு கற்பனைக் கனவு என்று கூட சொல்ல முடியும்... ஆனால்.. அப்படி ஒரு கதைக்குள் இப்போதைக்கு போக வேண்டாம்.. அவள் கப்பலில் இருந்து கரை ஒதுங்கியதாகவே இருக்கட்டும்...இப்போது வீட்டை நோக்கி ஓடுகிறாள்..

அங்கோ அவளின் முந்தைய வெர்சன் தன் குழந்தையை மிரட்டி, அடித்து... கோபத்தைக் கொட்டிக் கொண்டு இருக்கிறது... வந்த கோபத்தில் சுத்தியல் கொண்டு முந்தைய வெர்சனை அடித்துக் கொன்று பிணத்தை துணி வைக்கும் பேக்கில் வைக்கிறாள்.... இதைக் கண்டு விட்ட மகன் டாமியிடம் கூறும் வசனம் தான் படத்தின் முதல் காட்சி..... "கெட்ட கனவு கண்டால்... கண்களை மூடி நல்லதை நினைத்துக் கொள், நான் அப்படித்தான் செய்வேன்"- என்று கூறிக் கொண்டே இருப்பது....

பிணம் உள்ள பேக்கை கொஞ்சம் துணியும் சேர்த்து அடைத்து வண்டியின் டிக்கியில் போட்டுக் கொண்டு மகன் டாமியையும் கூட்டிக் கொண்டு காரில் பயணிக்கையில் கண்ணாடியில் ஒரு பறவை சொத்தென்று விழுந்து ரத்தம் தெறிக்க சாகிறது.... வண்டியை நிறுத்தி விட்டு ஏற்கனவே எங்கோ இதைக் கடந்தது போல ஒரு மனநிலையில் இறந்து போன அந்தப் பறவையை தூக்கி கடல் கரை ஓரத்தில் போடுகிறாள்.. அவளுக்கும் சேர்த்து நமக்கும் அதிர்ச்சி காத்திருக்கிறது..... அதே போல ஒரு குவியல் பறவைகள் அங்கே கிடக்கின்றன..... அப்படி என்றால் இதுவும் முக்கோணத்தில் சிக்கிக் கொண்ட காலத்தின் நிறுத்தல்கள்தான்...... "கடற்கரையில் இருந்து வீடு வருவது... வீட்டில் அவளின் முந்தைய வெர்சனைக் கொல்வது... பின் காரில் செல்வது அப்போது அடிபடும் பறவையை தூக்கி ஓரமாய் போடுவது....."- மனதின் தலையை பிடித்து கொண்டு வண்டி ஓட்ட வண்டி ஒரு விபத்தில் சிக்குகிறது... டாமி இறந்து போகிறான்... பேக்கில் ஏற்கனவே அடித்து கொன்று வைத்திருந்த ஜெஸின் முதல் வெர்சனின் உடல் பேக்கை விட்டு வெளியே வந்து விபத்தில் இறந்தது போல கிடக்கிறது....

எல்லாவற்றையும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டு நிற்கிறாள் ஜெஸ்...(இந்த விபத்தில் எப்படி தப்பித்தாள் என்பதுதான் மிகப் பெரிய கேள்வி...) அதாவது விபத்து ஏற்படுவதொடு ஒரு காலம் நின்று விடுகிறது... அப்படி என்றால் அங்கு நின்று பயந்து வெறிக்க பார்த்துக் கொண்டிருந்த ஜெஸ்.. ஹார்பர் நோக்கி போகிறாள்.. அது அடுத்த கோணம்.. அவள் போய் சேருமிடம்தான் நாம் முதல் காட்சியில் கண்ட விக்டரின் அறிமுகத்தோடு கொண்ட கதையின் ஆரம்பம்......

மீண்டும் ஒரு சுழலுக்குள் போய் நிற்கிறது...... ஹார்பர்க்கு போய் அங்கிருந்து கடலுக்குள் போய் விபத்து நிகழ்வதும், பின் கப்பலுக்குள் போய் பின் கரை ஒதுங்குவதும், பின் வீட்டுக்கு போய், வீட்டில் இருந்து ஹார்பர்க்கு வரும் வழியில் விபத்தில் மாட்டுவதும்.. என்று முக்கோணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது....

யோசித்துப் பார்க்கையில்... ஒன்று நன்றாகப் புலப்படுகிறது.. இந்தக் கதை எந்த அளவுக்கு சொல்ல வந்ததை சொல்லி விட்டது என்று என்னால் சொல்ல முடியவில்லை... அது பைபிளை மீண்டும் மீண்டும் படிப்பது போல...ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒரு விதமான புரிதல் இருக்கிறது.... இந்தப் படமும்... அப்படித்தான்..... புரிபவரைப் பொருத்தது... புரிதல்......

triangleஇது வாழ்வைப் பற்றி, வாழ்வின் அபத்தங்கள் பற்றி.... வாழ்வின் நீட்சிகள் பற்றி.. அதனின் மறுபக்கம் பற்றி.. வெளிச்சத்தின் இருண்மைக்குள் சுழலுமும் மனதின் தீவிர வேகத்தை பற்றி, இன்னும் இன்னும் பல காட்சி கோணங்களின் முக்கோணத்தையும் சொல்கிறது.. நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ கற்பனைகளின் கண்கள் நம்மை மேய்ந்து கொண்டேயிருக்கின்றன.....புரிவது எல்லாம் புரிதல்கள் இல்லை என்று புரிந்தும் புரியாத புரிதலின் வாயிலாக மனித குலம் புரிந்து கொண்டேதானிருக்கின்றன.......என்பதாக நீள்கிறது மனதுக்குள் ஒரு படம்...

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் என் காலம் 6 டு 8, நின்று விட்டால்... நான் திரும்ப திரும்ப 6 டு 8 குள்ளுள் திரும்ப திரும்ப இதையே தான் எழுதிக் கொண்டிருப்பேன்...... ஆனால் ஒவ்வொரு முறையும் அடுத்தடுத்த "நான்" எழுதிக் கொண்டிருப்பேன் என்பதுதான் பூமி சுழற்சியின் முடிச்சுக்கள்.. ஒரு கட்டத்தில் என்னைப் போல ஒரு மூட்டை "நான்கள்" என் அறையெங்கும் நிறைந்து கிடப்பார்கள்....திரும்ப திரும்ப, திரும்ப, அதுவே இருப்பதும் அது அது, அது என்று அது அதுவாகவே நிறைந்து கிடப்பதும்.. முக்கோணத்தில் உள்ள ஒவ்வொரு முனைக்குள்ளும் அவை ஒவ்வொரு முறையாக நிறைவதும்தான் இந்த முக்கோணம் நமக்கு சொல்ல வருவது.... ஒருவேளை நான் சொன்ன இந்தக் கதை இல்லாமல் இந்த முக்கோணம் வேறு ஒரு கதையைக் கூட சொல்லி இருக்கலாம்.. சொல்ல வரலாம்... சொல்லாமலே போகலாம்...

ஏனெனில் முக்கோணம்... நாம் உள்ளே சென்று பார்த்துவிட முடியாதது..... பார்த்து விட்டால் வெளியே வந்து சொல்லி விட முடியாதது.... இது புரியாமலே போன புரிதலாக கூட இருக்கலாம்.. மீண்டும் ஒரு முறை ட்ரையேங்கிளைப் பார்க்க போகிறேன்......

* ஜெஸ், ஒரு வேளை போர்டிங் ஆகாமல் இருந்தால் முக்கோணத்துக்குள் மாட்டி இருக்க மாட்டாளோ என்னவோ....?!

- கவிஜி

Pin It