அண்மைப் படைப்புகள்

கீற்றில் தேட

1
 
உலகத்திரைப்படங்களில் நடிப்புக்கலையை முன்வைத்து ஓர் உரையாடலை நிகழ்த்தினால் அதன் மையப்புள்ளி ஜெர்மானிய நடிப்பாளுமையான கிளாஸ் கின்ஸ்கியாகத்தானிருக்கும்.
 
AguirreGermanவெறுமனே இயக்ககுனர் சொல்லித்தருவது மட்டமே நடிப்பு என்பதைப் புறம் தள்ளிவிட்டு அக எழுச்சியிலிருந்து வெளித்தோன்றும் காட்சிகளை Aguirre, the Wrath of God படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் உணரலாம். ஜெர்மானிய புதிய அலை சினிமாவின் முன்னோடியான வெர்னர் ஹெர்ஸாக் இயக்கிய அப்படம் 11 ஆம் நூற்றாண்டில் பெருநாட்டின் காடுகளுக்குள் தங்கப்புதையல் தேடிப்போன குழுவைப் பற்றியது. படைத்தளபதியைக் கொன்றுவிட்டு தானே அப்பொறுப்பை ஏற்று வெறிகொண்ட அதிகாரத்தைத் தன் உடல் முழுதும் பூசிக்கொண்ட அகூர் என்னும் பாத்திரத்தில் அவர் வெளிப்படுத்தும் உடல் மொழியின் வன்மம் நடிப்புக்கலையின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். 
 
அவரோடு புதையல் தேடிவந்த அனைவரும் இறந்து போக, மீளவழியற்றுத் தனியனாகி கிடைத்த தங்கப்புதையல்களுடன் வானத்தை நோக்கிக் கத்தும் இறுதிக்காட்சியில் ஆக்ரோஷமும், கையறுநிலையும், பித்தப்பிறழ்வும் மாறிமாறிக் கொப்புளிக்கும் காவிய சோகம் மாபெரும் நடிப்பாளுமையை நம் கண்முன் நிறுத்துகிறது.
 
கின்ஸ்கிக்கு அமைந்தவை இருண்மையான கதாபாத்திரங்களே. மூர்க்கமும் வன்மமும் கொண்ட இருண்ட மனிதர்களின் உள்முகம் நோக்கிய பயணப்படுதலாக அவை அமைந்திருந்தன. மனப்பிறழ்வு கொண்ட, உளவியல் சிக்கல் நிரம்பிய, மனிதஉறவுகளின் மீது மதிப்பீடுகளேதுமற்ற பித்த வெளியில் அலைந்து கொண்டிருக்கும் சவாலான கதாபாத்திரங்கள். இவைகளை உயிரூட்டுவதற்கு தானும் அதுவாகவே நிஜவாழ்வில் மாறிப்போய் நடிப்புஎது அசல்எது எனத் தெரியாமல் இயைந்து போய் நின்றார். 
 
‘கடவுள் பாதி மிருகம் பாதி’ என்கிற படிமம் அவருக்குள் கட்டமைய, கலையையும் வாழ்வையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்திக் காட்டி ஒரு புதிய நடிப்பிலக்கணத்தை உருவாக்கியவர். (இந்தப்படிமத்தின் வார்த்தைகள் தமிழ்நடிகர் கமலஹாசனுக்குப் பிடித்துப்போக அந்த வார்த்தைகளை வைத்து கின்ஸ்கியை ஆளவந்தானாக உருவாக்கிப்பார்க்க முயற்சி செய்தவர் கமல்)
 
அவரது அளப்பரிய நடிப்பாற்றலுக்காகவே ஹெர்ஸாக் படங்களை உருவாக்கினார் என்றெல்லாம் திரைப்பட விமர்சகர்கள் கூறுவதுண்டு. இதேபோன்ற உளவியல் சிக்கல்களும் தகிக்கும் மனகிலைகளும் கொண்டவர்தான் ஹெர்ஸாக். இவரைப்பற்றிய செய்திக்கதம்பங்கள் தமிழில் நிறைய வந்திருக்கின்றன. ‘துப்பாக்கிகள் கடத்தியவர்’, ‘கேமராவைத் திருடிக்கொண்டு போய் படம் எடுத்தவர்’, பந்தயத்துக்காக தனது காலணியைச் சமைத்துச் சாப்பிட்டவர்’...
 
அதேபோல கின்ஸ்கியைப் பற்றியும். ‘படப்பிடிப்பில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டித்தான் நடிக்க வைக்கமுடியும்’, ‘படப்பிடிப்பு தளத்தில் கேமராவை உடைத்தவர்’, ‘தனது நடிப்பை மக்கள் ரசிக்கவில்லை என்று நாடக மேடையைத் தீ வைத்துக் கொளுத்தியவர்’, வெளிப்புறப் படப்பிடிப்பில் தூக்கத்திற்கு இடையூறு செய்கிறார் என்று ஒரு துணைநடிகரைத் துப்பாக்கியால் சுட்டவர்’, ‘டிராகுலாவாக நடித்தபோது நடிகையின் குரல்வளையைக் கடித்தவர்’... இந்த மேலோட்டமான தகவல் குறிப்புகளைத் தவிர்த்து கலைத்துவத்தின் உள்முகம் நோக்கிப் பயணப்பட வேண்டும்.
 
கின்ஸ்கியிடம் உள்ள பித்தம் கொண்ட மனநிலை அகஎழுச்சியிலிருந்து உருவாகி பொதுபிம்பத்தில் வெடித்துச் சிதறுவது; கலையின் புறநிலைத் தோற்றம். ஹெர்ஸாக்கிடம் உள்ள மனநிலையோ உள்நோக்கிய கொந்தளிப்பு; கலையின் அகத்தேடல். அவர்கள் இருவரும் ஒன்றிணையும்போதுதான் அகமும் புறமும் இணைந்து அபூர்வ தரிசனமாக மலருகிறது.
 
முட்டாள்த்தனத்தின் அதிகாரத்தையும் அதிகாரமின்மையின் மேதமையையும் அகூராக ஹெர்ஸாக் உருவகப்படுத்தும் போது அதற்கு வடிவம் கொடுப்பது கின்ஸ்கியின் உடல்மொழியாக இருக்கிறது. இப்படி அகமும் புறமும் இயைந்த ஒரு கலவையோடு நடிப்பிலக்கணத்தின் உச்சத்தை உருவாக்க இரு முனைகள் தேவைப்படுகின்றன. 
 
அதை உணர்ந்ததனால்தான் கின்ஸ்கியும் ஹெர்ஸாக்கும் மிக மோசமாக விதத்தில் அடிதடிகள் விரோதங்கள் கசப்புகள், அவதூறுகள் என்று இருந்தாலும் மீண்டும் மீண்டும் இணைகின்றனர். ‘கின்ஸ்கி முன்னால் நின்றாலே புதிதிபுதிதாய் காட்சிகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன’ என்று ஹெர்ஸாக்கும், ‘எனக்குள்ளிருக்கும் கலையின் ஆதார உணர்ச்சியை உசுப்பியவர்’ என்று கின்ஸ்கியும் நெகிழ்ந்த தருணங்களும் உண்டு.
 
கின்ஸ்கியைப் பற்றி My Best Fiend: Klaus Kinski என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படம் ஒன்றை எடுத்தார் ஹெர்ஸாக். உடனே Yo necesito amor என்ற தனது நூலில் ஹெர்ஸாக்கைப்பற்றி அவமதிப்புடன் எழுதினார் கின்ஸ்கி.
 
ஆனாலும் சின்னப்பசங்க சண்டையைப்போல அடுத்த கணமே அவர்கள் இணைந்து கலையாக மாற்றம் பெறுவார்கள். அதனால்தான் உலகப்புகழ்பெற்ற இயக்ககுனர் கப்போலா உருவாக்கியதை விடவும் பன்மடங்கு வீரியம் கொண்ட டிராகுலாவை ஹெர்ஸாக்கால் உருவாக்க முடிந்தது. 
 
இவர்கள் இருவரையும் ஒரு சேரப் பார்க்கும்போது ஒரே உருவின் இரட்டைகள் (doppelgänger: ஜெர்மானிய மொழியில் கதே போன்ற கவிஞர்களால் உருவாக்கப்பட்ட இலக்கியவகை) என்று தான் மேஜிக்கலாக நான் நம்புகிறேன். இந்த இரட்டை பற்றிய படிமங்களும் கோட்பாடுகளும் நவீன உலக இலக்கியத்தில் பிரசித்தமானவை. ‘தானே அந்த மற்றொரு உருவாக மாறிப்போய் நிற்கும்’ படிமமான இரட்டை (தமிழ்படங்களில் காட்டும் மலினமான இரட்டைவேடங்கள் அல்ல) என்னும் இலக்கியவகை தாஸ்தாவ்ஸ்கியின் (The Double: A Petersburg Poem) நாவலில் நேர்த்தியாக அமைந்திருக்கிறது. எட்கார் அலன்போவின் ‘வில்லியம் வில்சன்’ போர்ஹேயின் ‘மற்றவன்’ போன்ற சிறுகதைகளிலும் விளாடிமிர் நபக்கோவின் ‘Despair’ போன்ற நாவலிலும் இந்தப் படிமங்கள் மிக அழகியலாகக் கட்டமைந்திருக்கின்றன. இந்த நாவலை புகழ்பெற்ற ஜெர்மானியப் புதிய அலை இயக்குனரான பாஸ்பைண்டர் திரைப்படமாக எடுத்துள்ளார்.
 
இந்த அபூர்வமாக பித்த நடிப்புக்கலையை ஜெர்மானிய நாடக அரங்கிலிருந்து வரும் இஸ்த்வான் ஸாபோ என்னும் இயக்குனர் மிக நேர்த்தியாகக் கையாளுகிறார். 1981 ல் உலகஅரங்கில் பலவிருதுகளை வென்ற ‘மெஃபிஸ்டோ’ என்னும் படத்தில் ஹென்றிக் என்கிற நடிகனாக நடித்திருக்கும் கிளாஸ் பிராண்டாயரின் வருகை கிளாஸ் கின்ஸ்கியை ஞாபகமூட்டியது.
 
இந்தப் படத்தை ‘மெஃபிஸ்டோ’ பற்றிய புராணிகக் குறியீடுகளோடு அணுகும்போது இதனுள் மறைந்திருக்கும் ஒரு மாயையான தோற்றம் புலப்படும். 
 
புகழ்பெற்ற ஜெர்மானியக்கவியான கதேயின் உலகப் புகழ்பெற்ற காவியம் ‘ஃபாஸ்ட்’. மெஃபிஸ்டோ ஃபிலிஸ் என்கிற சாத்தானுக்கும் கடவுளுக்கும் ‘நல்லவனைக் கெடுக்க முடியாது’ என்று ஒரு வாதம் வருகிறது. கடவுளுடன் சபதம் செய்து கொண்டு பூலோகத்தில் உள்ள டாக்டர் ஃபாஸ்டைக் கெடுப்பதற்காக வருகிறான் மெஃபிஸ்டோ. ஃபாஸ்டைச் சந்தித்து நீ என்னை ஏற்றுக் கொண்டால் நான் உன்னை உலகம் முழுக்க புகழ் ஓங்கச் செய்வேன் என்கிறான். சிற்சில தடுமாற்றங்களுக்குப் பிறகு மெஃபிஸ்டோ என்னும் சாத்தானை டாக்டர் ஃபாஸ்ட் ஏற்றுக் கொள்ள, அவரது கீர்த்தி உலகெங்கும் பரவுகிறது. ஆனால் முக்கியமான தருணத்தில் மெஃபிஸ்டோவை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விடுகிறார் ஃபாஸ்ட். மெஃபிஸ்டோ தோல்வியடைகிறான். இது ஜெர்மன் மித்.
 
படத்தில் வருகிற ஹென்றிக் என்கிற நடிகன் நனது நடிப்பாற்றல் உலகம் முழுமைக்கும் பரவவேண்டும் என்பதற்காக மெஃபிஸ்டோ என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறான்.அந்த அபாரமான நடிப்பில் உலகமே மயங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாய் புகழின் உச்சியை நோக்கித் தள்ளப்படுகிறான். நாஜிப்படைகளின் முதன்மைத் தளபதி அவனை மிகமிகப் பாராட்டுகிறார். மேலும் அவனோடு நட்பு வைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறார். நாஜிகளின் பிடியில் ஜெர்மனி மாட்டிக் கொண்டிருந்த கால கட்டம் அது. கேள்வி கேட்காமல் அவன் கண்முன்னால் கலைஞர்களையும் அவனது நண்பர்களையும் வதைமுகாம்களுக்கு அழைத்துச் செல்லும்போது கொஞ்சம் கூட எதிர்ப்புத் தெரிவிக்காமல் கண்டுகொள்ளாமல் இருக்கிற சூழல் அவன் மேல் திணிக்கப்படுகிறது. முரண்பாடு மற்றும் எதிர்ப்புணர்வுகளை விழுங்கி விட்டு முழுக்க முழுக்க எல்லாவற்றையும் மறந்து மெஃபிஸ்டோ என்கிற பிம்பத்தை மேலும் மேலும் புகழின் உச்சிக்கு நகர்த்துகிறான். தான் மெஃபிஸ்டோ என்கிற பிம்பமாய் மாறிப்போய்விட்டதாகவும், உலகம் முழுக்க தனது முகம்தான் எஞ்சியிருக்கிறது எனவும், தானே மெஃபிஸ்டோ எனவும் ஆத்மார்த்தமாக நம்புகிறான். சட்டென ஒரு தருணத்தில் உணர்கிறான், மெஃபிஸ்டோ தான் அல்ல, அந்த நாஜித்தளபதிதான் என. உறைந்த இருட்டின் வழியே கசியும் வெளிச்சத்தில் இறுகிப்போய் நிற்கிறான். அதிகாரம் மற்றும் அரசியல் ஒரு கலைஞனை எப்படியெல்லாம் மயக்கிவைத்திருக்கிறது என்பதைக் கவிதைநடையில் சொல்லிப்போகிறது படம்.
 
இவ்வளவு அற்புதமான கலைஞர்களான இஸ்த்வான் ஸாபோவும் பிராண்டாயரும் அதன்பிறகு காணாமல் போய்விட்டனர். பிராண்டாயர் வேறு சில இயக்குனர்களின் படங்களில் தலைகாட்ட, ஸாபோவும் சிலபடங்களை எடுத்தார். ஆனால் அவை குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவோ, முக்கியமான நிகழ்வுகளாகவோ இல்லாமல் நழுவிவிட்டன. தொடர்ந்து இருவருடைய இணைவுகளும் இல்லாததனால்தானோ என்று நான் யோசித்திருக்கிறேன்.
 
அதன்பிறகு, இந்தவகை நடிப்பின் உடல்மொழியை ஹாலிவுட் மலினமாகப் போலிசெய்தது. எல்லா அற்புதமான கலைகளையும் தனக்குள் பஸ்மீகரம் செய்து நீண்ட அபானவாயுவை வெளிப்படுத்தும் ஹாலிவுட்டின் பார்வையில் ஜிம்கேரி இதை ஒரு கொண்டாட்டமான விடலைத்தனம் கொண்ட மூன்றாந்தர அங்கதத் தன்மையுடன் கையிலெடுத்தார். பேட்மேன், ஜோக்கர் வகையறாக்கள் இந்த அபூர்வமான பித்தவெளியைத் துவம்சம் செய்து தள்ளினார்கள். 
 
2
 
இந்தப் பித்தக்கலையை முழுக்க முழுக்க சுயமாகவும், புத்தம்புதிய ஒரிஜினாலிடியாகவும் உருவாக்கியவர்களாக ஹெர்ஸாக்கையும் கின்ஸ்கியையும் குறிப்பிடும்போது அவர்களுக்கு இருபது வருடங்களுக்கு முன்பாக பித்தநிலையின் வேறு ஒரு வகையை(Genre) அனுபவித்து நிகழ்த்திக் கொண்டிருந்தவர்களாக ஜப்பானிய திரை ஆளுமைகளான டொஷிரோ மிஃபுனேவும் அகிரா குரோசவாவும் இணைந்து நிகழ்த்திய நடிப்பின் முன்னுதாரணத்தையும் பரிசீலனையில் எடுத்துக் கொள்ள வேண்டும். 
 
‘செவன் சாமுராய்’ என்றதும் குரோசவா ஞாபகம் வருவதுபோல, உலகத்திரைப்பட வாசகனுக்கு மிஃபுனேவும் ஞாபகம் வருவார். ஜப்பானிய கலாச்சாரத்திலிருந்து பிரிக்கமுடியாத சாமுராய் என்னும் இன அடையாளத்தை அதன் உள்ளும் புறமுமாகச் செதுக்கியர் என்று குரோசவாவைச் சொன்னால், சாமுராயின் வேகம், கோபம், நளினம், பாவனை, இனஉணர்ச்சிகள் என்று பல்வேறு விதமான மனநிலைகளை உடல்மொழியாகக் காட்சிப்படுத்தியவர் மிஃபுனே.
 
‘தன்னிடமிருக்கும் கத்தியின் நீளத்தைவிட கத்திக்கும் எதிரியின் இதயத்திற்கும் இடையே உள்ள இடைவெளியின் நீளத்தை அறிந்து வைத்திருப்பவன்தான் உண்மையான சாமுராய்’ என்று ஜென்பௌத்தம் சொல்கிறது. இதைத் தனது இடுங்கிய கண்களின் மூலமாகவும், வேடிக்கைத்தனமான கால்அடவுகளிலும், சீற்றம் மிகுந்த வேகமான உடலசைவுகளின் லாவகத்திலும் காட்சிப்படுத்தியிருப்பார் மிஃபுனே. 
 
3-ironஅவரது நடிப்பில் ஆழ்ந்து போய் அவரது நடிப்புக்காகவே கதாபாத்திரங்களை உருவாக்கினார் குரோசவா என்று சொல்வதுண்டு.
 
ஹெர்ஸாக் - கின்ஸ்கி இரட்டைகளிடம் அற்புதமாகச் செயல்பட்ட பித்தக்கலை, குரோசவா - மிஃபுனே இரட்டைகளிடம் என்ன பரிமாணத்தில் செயல்பட்டது என்பதைப் பார்க்கலாம்.
 
ரஷோமான் படத்தில் காட்டுக்கொள்ளையனான டேஜோமரு என்னும் பாத்திரத்தில் உருக்கொண்ட மூர்க்கமும் வன்மமும் கின்ஸ்கியிடம் பித்தக்கலையாக மாறுகிறது. 
 
காட்டுமிருகத்தின் சீற்றமும், மலைக்காடுகளின் செங்குத்தான பள்ளத்தாக்குகளில் பதுங்கிப்பாயும் கால்அடவுகளும், காமஇச்சையும், பெண்ணை அடையத் துடிக்கும் மூர்க்கமும் பித்தநிலையின் நீட்சிகளாக விரிகின்றன.
 
படம் முழுக்க இரையைக் கவ்வும் மிருகத்தின் பாய்ச்சலும், காமம் எரியும் கண்களின் குரோதமும் தனது உடலை எப்படியெல்லாம் வீசிவிளையாட முடியுமோ அத்தனை பரிமாணங்களிலும் உன்மத்த மனோநிலையை நகர்த்திப் பார்க்கிறார் மிஃபுனே. 
 
மின்சாரப் பாய்ச்சலைப் போன்ற மிஃபுனேவிடம் உள்ள அபரிமிதமான வேகம் அவரது நடிப்பாற்றலில் பெரிதும் பங்கு வகிக்கிறது என்பதை வேகமான உடலசைவுகளில் வெளிப்படும் வன்மத்தில் காணலாம். (தமிழில் ரஜினிகாந்திடம் நடிப்பு அம்சம் பெரிதாக இல்லாவிட்டாலும் கூட அவரிடமுள்ள வேகம் நடிப்பின் வீச்சை உயர்த்தியது)
 
ஷேக்ஸ்பியரின் ‘மேக்பெத்’ நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட குரேசவாவின் ‘த்ரோன் ஆப் பிளட்’ படத்தின் வாயிலாக மேக்பெத்துக்கு புதிய வடிவம் கொடுத்தார் மிஃபுனே. ஷேக்ஸ்பியர் நாடக அரங்கத்தினர் நூற்றாண்டுகளாக மேக்பெத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியிருப்பார்கள். ஆனால் அவர்கள் வெளிப்படுத்தியிராத விதத்தில் வன்மத்தையும், குழப்பத்தையும், உள்மன வெளிப்பாடுகளையும் மிஃபுனே வெளிப்படுத்தும்போது பித்தநிலையின் உச்சத்தைத் தொட்டுக் காட்டுவார்.
 
மன்னராகப் போவதைப்பற்றி சூன்யக்காரி சொல்லும்போது ஏற்படும் தீவிரமான உள்ளெழுச்சி, மன்னரைக் கொன்று விட்டுப் புதிய மன்னராக முடிசூடிய பிறகு நடக்கும் விருந்தில் ஏற்படும் மூர்க்கமான குழப்பம், மனைவியின் நோய் தன்னைப்பற்றிக் கொள்ளுமோவென திகைக்கும் அச்சம், படைவீரர்களோடு சண்டையிடும் ஆவேசமான உக்கிரம் என அனைத்து அசைவுகளிலும் ஒரு கழைக்கூத்தாடியின் துள்ளலும் மனப்பிறழ்வாளனின் மூர்க்கமும் புலனுணர்வில் அடர்ந்து கிடக்கின்றன. 
 
மிஃபுனே ஹாலிவுட் படங்கள் உட்பட 182 படங்களில் நடித்துள்ளார். என்றாலும், மிகக்குறைந்தளவிலான குரோசவா படங்களில் நடித்த நடிப்பு மட்டுமே இன்றளவிலும் பேசப்படுவதைப் போல, கின்ஸ்கியும் ஹாலிவுட் படங்கள் உட்பட 130 படங்களில் நடித்திருந்தாலும் கவனப்படுத்துவதென்னவோ ஹெர்ஸாக் படங்களின் நடிப்பைத்தான்.
 
இந்தப் பித்தநிலையின் மற்றொரு பார்வையாக, சமீபகாலத்திய படங்களில், தற்கால கொரிய திரைஆளுமைகளான சோ ஜே ஹையோன் - கிம் கி டுக் இணைந்து நிகழ்த்தும் படங்களை முன்வைக்கலாம். (ஹெர்ஸாக் தனக்குப்பிடித்தமானவர் என்று சொல்லும் கிம் கி டுக், ‘வடக்கு ஜெர்மனிக்குச் சென்றபோது காலியாயிருந்த வீடுகளில் தான் தங்கியிருந்ததாகவும், ஆளற்ற வீடுகளில் எவருக்கும் தெரியாமல் தங்குவது தனக்குக் கைவந்த கலை’ என்று ஹெர்ஸாக் சொல்லியிருந்ததை தனது 3-Iron படத்தில் கதைப்பின்புலமாய் எடுத்திருப்பார்.) 
 
இவை நாம் முன்னர் பார்த்த படங்களைப்போல பித்தநிலையின் ஆவேசமான எழுச்சியோ, திமிறியெழும் உடலின் மூர்க்கமான தாக்குதலோ நிகழ்த்துவதில்லை. மாறாக, உடல்கள் மீது நிகழ்த்தும் வன்மத்தை உடல் ஏற்றுக் கொள்கிறது. உணர்வுகள் கொப்புளிக்கும் குரூரத்தை உள்வாங்கிக் கொள்கிறது. மனித உளவியல் சிக்கல்களின் அறச்சீற்றத்தை மதிப்பீடுகளற்றதாக்குகிறது. 
 
நாம் இதுவரையில் பார்த்த மூர்க்கம், கொலைவெறித்தாக்குதல், மனப்பிறழ்வின் ஆவேசம் போன்ற கலவரக் காட்சிகள் எதையும் முன்வைக்காமல், அவலமான காட்சிகளை முன்னிறுத்தி மிகக் கொடூரமான தாக்குதலை வாசகன் மேல் தொடுக்கிறது. தற்கால மனித இருப்பின் கையறு நிலையை Bad guy படம் குரூரக்காட்சிகளினூடே எதிர்காவியமாக்குகிறது. பித்தக்கலையின் தற்காலப்புரிதல் இதுதான்.
 
விபச்சாரத்திற்காக இளம்பெண்களை விற்பனைக்குக் கொண்டு தள்ளும், பிளவுபட்ட மனநிலை கொண்ட காமத்தரகனாய் வரும் ஜே ஹையோன் உறுமுவதில்லை. ஆவேசப்படுவதில்லை. மூர்க்கமாக வெறியுடன் அலைவதில்லை. அதெல்லாம் இல்லாமலேயே அந்த உணர்வுகளைப் பிரதிபலித்து விடுகிறது அவரது வெறுமையான உடல்மொழி.
 
வெறுமை, வெறுமை, வெறுமை... விபச்சாரத்திற்கு விற்கும் பெண் தப்பிக்கும்போது அவளை வீழ்த்தி மீண்டும் விடுதியில் ஒப்படைக்கும்போதும், அதன்பின் அவள் அவனைக் காதலிக்கும்போது இயந்திரமாகப் புணர்வதும், புதிய வாழ்வை அமைக்கலாம் என்று அவள் அவனை வெளியே அழைத்துச் செல்லும்போது, அவளையே முதலீடாகக் கொண்டு புதிய விபச்சாரத்தொழில் தொடங்குவதும், அவ்வளவு குரூரமான நிதானத்தையும், கொடூரமான வெறுமையையும் ஜே ஹையோன் வெளிப்படுத்தும்போது இது தற்கால நவீனயுகத்தின் பித்தக்கலையாக மாறுகிறது.
 
Crocodile படத்தில் கொரிய நகரமான சியோலில் உள்ள ஹான் நதியில் தற்கொலை செய்து கொள்ளும் மனிதப் பிணங்களை எடுத்துத் தரும் தொழில் செய்யும் குரோக்கடைலாக வரும் ஜே ஹையோன், நதியின் வெறுமையை உருவகப்படுத்துவார். காதல்தோல்வியில் தற்கொலை செய்யவரும் பெண்ணைக் காப்பாற்றி அவளை பாலியல் பலாத்காரம் செய்யும்போது அதே குரூரமான வெறுமை. நவீன வாழ்வில் எதையோ தொலைத்த வெறுமை.
 
இந்த வெறுமையிலும் அவலத்திலும் நவீன காலத்தின் குரூரங்களை உள்வாங்கி வேறுவிதமாய்ப் படிமம் கொள்கிறது பித்தக்கலை.
 
உலகளவில் மிகப்பெரும் சர்ச்சையையும், புகழையும் ஒருசேரக்குவித்து வைத்திருப்பவை கிம்கிடுக் படங்கள். கட்டற்ற பாலியல் வன்முறை, குரூரம் பொதிந்த நெகிழ்ச்சியான காட்சிகள், வன்மத்தின் அழகியல்நுட்பம், பொதுபிம்பம் உருவகப்படுத்தி வைத்திருக்கும் தார்மிகமான அறச்சீற்றங்களுக்கு எவ்விதமான மதிப்பீடுகளும் வழங்காமல் பித்தநிலையின் கடற்ரையில் காவித்திரியும் கிம்கிடுக்கின் வெறுமைகளுக்கு, ஜே ஹையோன் உயிரூட்டுகிறார்.
 
3
 
வெறுமனே உலகப்படங்களை மட்டுமே முன்வைத்து பேசிப்போவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் சார்ந்த தமிழ்மொழியின் பெரும்பான்மையான படங்கள் வெகுஜன ரசனையானவையாக இருந்தாலும், உலகத்தரத்தில் உள்ள படங்களோடு வைத்துப் பேசப்படுகின்ற ஒரு விமர்சனச்சூழலை முன்வைக்கவேண்டும். தகுதியானவை தகுதியற்றவைகளுக்கு அப்பால், அவைகளுக்குள் இருக்கும் ஒரு சில காட்சிப்படிமங்கள், நடிப்புக்கலையின் நேர்த்திகள், இயக்கம் சார்ந்த வெளிப்பாடுகளையெல்லாம் கவனப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ் திரைப்பட சூழலில் உள்ள நடிப்பு துறை குறித்தும் பார்க்க வேண்டியிருக்கிறது. 
 
அந்த ரீதியில் பித்தக்கலை என்னும் நடிப்பின் உச்சபட்ச நடிப்பாற்றலை தமிழ்த்திரை மொழி பரிசீலனை செய்ததா, அதுபற்றிய பகுப்பாய்வுக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டதா, அதன் சிறுசிறு அசைவுகளையாவது, ஓர் ஒற்றைப் பரிமாணத்தையாவது தனக்குள் நிகழ்த்திப் பார்த்ததா என்றெல்லாம் தீவிரமான பார்வைத்தேடலை முன்வைக்க வேண்டியிருக்கிறது.
 
தமிழின் பொதுபிம்பத்தில் ‘நடிப்பு’ என்னும் படிமத்திற்கு பல்வேறுவிதமான மலினமான அர்த்தங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறது தமிழ்த்திரைமொழி. ஒரு நடிகர் எல்லாவிதமான பாத்திரங்களின் குணாதிசயங்களையும் வெளிப்படுத்துவதுதான் ஆகச்சிறந்த நடிப்பு என்றும் கட்டமைத்து வைத்திருக்கிறது. ஆனால், அது ஒரு ‘போலிசெய்தல்’ என்னும் நடிப்புத்திறமைதான்; வெகுஜனரசனைப் பார்வைதான்.
 
dhanush Pudhupettaiஒவ்வொரு இயக்குனருக்கும் ஒருவகைமாதிரி(Genre) உண்டு. தமிழில் பாரதிராஜாவால் ‘கிழக்குச்சீமையிலே’ தான் எடுக்க முடியும். பாலுமகேந்திராவால் ‘நீங்கள் கேட்டவை’ எடுக்க முடியாது. ராதாமோகனின் வகை ‘மொழி’ தான். இந்தப்படங்களின் வெற்றி தோல்வி குறித்துப் பேசவில்லை. அவரவர் மனஉணர்வுகள் சார்ந்த விருப்பத்தின் வெளிப்பாடுகளே கலாபூர்வமான நேர்த்தியையும், அழகியலையும் தரும். திரைப்படம் மட்டுமல்லாது, எழுத்து, ஓவியம், இசை போன்ற தளங்களில் செயல்படும் தீவிரமான கலைஞன் ஒவ்வொருவருக்கும் அவர்களது அகஎழுச்சி சார்ந்த வகைமாதிரிகளிலேயே கவனம் செலுத்துவார்கள்.
 
ஒரு தீவிரமான கலைஞன் கலையையும் வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்கமுடியாத முனையில் காலூன்றி நிற்கிறான்.
 
அதுபோல, நடிகர்களின் ஆழ்மனசில் பதுங்கிக் கிடக்கும் மனவெழுச்சியின் வெளிப்பாடுகளே அவர்களது வகைமாதிரியை இனங்காட்டும். கின்ஸ்கி தனது அகஉலகத்தின் நினைவோட்டத்தில் மிதந்து கொண்டிருக்கும் உடைபடாத குமிழியின் பிம்பத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டதால்தான் உலகநடிப்பாளுமையாக முன்நிற்கிறார்.
 
தமிழில் அதுபோன்ற ஒரு தரிசனத்தை நிகழ்த்தும் அடையாளமாக நாசர் மற்றும் கமல்ஹாசன் போன்றோரை சொல்லலாம். இவர்கள் இருவரும் மேற்குறிப்பிட்ட இரு கலைஞர்களுடன் வைத்து பேசப்படக்கூடியவர்கள்தான்..
 
ஆனால், நான் இங்கு விமர்சனப் பார்வைக்கு எடுத்திருக்கும் கருத்தியல், ஒரு தீவிரமான பித்த நிலை எப்படி ஒரு பித்தக் கலையாக உருமாறுகிறது என்ற நோக்கில். 
 
தமிழில் அதுபோன்ற ஒரு தரிசனத்தை நிகழ்த்தும் அடையாளமாக பூரணத்துவம் கொண்ட ஒரு ஆளுமையும் இல்லை. கமல்ஹாசனின் ஆளவந்தான் என்கிற படத்தை இங்கு முன் வைக்கலாம். நாசரின் ஒரு சில கதாபாத்திரங்களை நினைவூட்டலாம்.
 
ஆனால், வாழ்க்கையையும் கலையையும் ஒன்றாக முன் வைத்து, தொடர்ச்சியாக பித்த நிலை போன்ற தனது வாழ்வியலை அதன் நீட்சியோடு பித்தக் கலையாக மாற்றும் இளைய தலைமுறைக் கலைஞனாக மிக மிக மிகக்குறைந்த பட்சமாக நடிகர் தனுஷைச் சுட்டிக்காட்ட முடியும். இந்த இடத்தில கின்ஸ்கியுடன் சரிசமமான விதத்தில் தனுஷின் ஆளுமையை நிறுவுவதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.
 
இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், தனது வாழ்வில் உறைந்து கிடக்கும் பித்த நிலை என்கிற அற்புதமான உளவியலை பித்தக் கலையாக மாற்றுவதில் முன் நிற்பவர் என்று சொல்லலாம். இந்தப் பார்வையிலேயே அவருக்கு முந்தைய தலைமுறையில் வந்த ரகுவரன், பிரதாப்போத்தன் ஆகியோர் இதுபோன்ற பித்தநிலையை நிகழ்த்திப் பார்க்க பெரிதும் முயற்சி செய்திருக்கிறார்கள் என்பதை அவர்களது நிஜத்திலும் நிழலிலும் உணரலாம். அவர்கள் இருவரிடமும் பெரிதும் செயல்பட்டது பித்தநிலை மட்டுமே. அது கலையாக வாய்க்கவில்லை. அதை கலையாக மாற்றத் தவறிவிட்டனர். அவர்கள் தவறிவிட்ட புள்ளியிலிருந்து ஒரு ஆவேசமான வீச்சுடன் மேலெழும்பிப் பயணம் போகிறவராக தனுஷை இனங்காணமுடியும். 
 
‘காதல் கொண்டேன்’ படத்தின் இறுதிக்காட்சியில் சந்தோஷமும், ஆனந்தமும், வெறிக்கூச்சலும், ஆவேசத்தாக்குதலுமாக நிலைமாறுகின்ற கணங்களில் அவரது உடல்மொழி மனப்பிறழ்வின் பிரக்ஞைக்குத் தாவுகிறது. அப்பாவித்தன்மை கொண்ட முகம் நொடிக்கு நொடி வன்மமாகவும், பைத்தியமாகவும், குழந்தைமையாகவும் மாறுகிற காட்சிகளில் தனுஷின் மனச்சீற்றத்தின் நுண்ணுணர்வுகள் அபாரமாக நடித்திருக்கின்றன.
 
‘புதுப்பேட்டை’ படத்தில் வக்கிரம், குரூரம், ஆனந்தம், மூர்க்கம் எல்லாவற்றையும் கலந்த பைத்தியத்தின் உச்சநிலையை சிறையில் அடைபட்டிருக்கும் முதல் காட்சியிலேயே காண்பித்து விடுகிறார். திருமணம் ஆகப்போகிற பெண்ணை காமம்கொண்டு தானே திருமணம் செய்து கொள்வதும், துப்பாக்கியை நீட்டி அவளைப் புணர்வதும், காமத்தின் பின் சற்றே நிலைத்திருக்கும் மகிழ்ச்சியான தருணங்களை தனது சகாக்கள் குலைக்கும்போது ஆவேசமாகக் கத்துவதும், அதிகார வெறிக்காக அலைபடுவதுமாக பித்தப்பிரக்ஞை கொண்ட மனிதனின் உன்மத்தம், உடல்மொழியாக அந்தக்கலையின் மையத்தை நோக்கி நெருங்கிப் போவதை உணரமுடியும். 
 
கின்ஸ்கிக்கும் மிஃபுனேவுக்கும் அதேமாதிரியான மனநிலைகள் கொண்ட இரட்டைகள் இயக்குனர்களாகக் கிடைத்திருப்பதுபோல இவரையொத்த மனநிலை கொண்ட இயக்குனராக செல்வராகவன் கிட்டியிருப்பது இவரது நடிப்பாற்றலுக்கு மாபெரும் கொடை.
 
அகூர் வெளிப்புறப் படப்பிடிப்பில் காட்டிற்குள் சுற்றித் திரிந்த போது, ‘தான் ஒரு பறவையாக உருமாறிப்போனதாகக் கின்ஸ்கி கூறும் சொற்களைச் சுழட்டியடிக்கிறார் தனுஷ் இவ்வாறு: ‘பெரு நகரப் பாதைகளில் அலையும்போதெல்லாம் என்னை ஒரு மிருகமாகவே உணர்ந்தேன்...’ 
 
தமிழ்த்திரைமொழியை உலகத்தரத்துக்கு உயர்த்தும் தரிசனம்!
Pin It

ஒரு கலைப் படைப்பை ஒற்றைத் தன்மையுடன் வெறும் கலை ரசனையோடு மட்டுமே பார்க்காமல் அதனுள் இருக்கும் பல்வேறு நுட்பமான பார்வைகளை பன்முகத் தன்மையுடன் அவதானிக்க வேண்டும் என்று புகழ் பெற்ற கலை இலக்கியக் கோட்பாடான பின்நவீனத்துவம் சொல்கிறது. உலகளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தக் கோட்பாட்டை முன் வைத்து தமிழ்ச் சூழலிலும் நவீன தமிழ் படைப்பாளிகளும், நவீனவிமர்சகர்களும் செயல்பட்டார்கள்.

‘படைப்பாளி என்பவன் யார்?’ என்கிற மிஷேல் ஃபூக்கோவின் பார்வையிலிருந்து ‘படைப்பாளியின் மரணம்’ என்ற ரோலாண்ட் பார்த்தின் பார்வை வரை படைப்புகளில் ஒளிந்திருக்கும் அல்லது மறைந்திருக்கும் பல்வேறு நுட்பங்களைப் பிரித்து மேய்ந்தார்கள்.

Prasanna Vithanageஇதன் நீட்சியாக தற்போது சிங்கள மொழிப்படமான பிரசன்னவிதானகேயின் with you with out you படத்தை முன் வைத்து காரசாரமான விமர்சனப் பார்வைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படைப்புக்கு உள்ளே நுட்பமாகக் கட்டமைத்துள்ள அரசியல் விஷயங்களை முன்வைக்கின்றனர்.

இப்படியான பார்வைகளை முன்வைத்து விமர்சிக்கிறவர்கள் கதைகவிதை எழுதுகின்ற எழுத்தாளர்கள் அல்லாதோர்; இவர்கள் தமிழ் தேசிய அரசியல் பேசும் மாற்று அரசியலாளர்கள்.

ஆனால், கதைகவிதை எழுதும் படைப்பாளிகள், ‘படைப்பைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? மிக அற்புதமான படைப்பு அது, படைப்பை படைப்பாகப் பார்க்காமல் ஏதேதோ உளறுகிறார்கள்’ என்று இவர்களைக் கிண்டலடிப்பதுதான் நகை முரண்.

இந்த இருசாராரின் கருத்துக்களையும் மறந்து படத்திற்குள் புத்துணர்ச்சியுடன் நுழையலாம்:

இலங்கையின் மலையகப்பகுதியில் அமைந்துள்ள தமிழர்கள் வசிக்கும் இடத்தில் நடக்கிறது கதை. தமிழீழப் போரினால் தனது குடும்பத்தை இழந்த செல்வி என்னும் தமிழ்ப்பெண் உறவினர் வீட்டில் வாழ்கிறாள். தனது வாழ்வியலுக்காக தன்னிடமுள்ள சிறுசிறு தங்க நகைகளை அடகு வைத்து வாழ்கிறாள். அடகுக் கடை நடத்தும் சரத் ஸ்ரீ என்னும் சிங்களவன் அவளின் நிலையை உணர்ந்தாலும் தனது வணிக நோக்கிலேயே இருக்கிறான். ஒரு கட்டத்தில் அவளுக்கு ஒரு கிழவரை மணமுடித்து வைக்க உறவினர் வீட்டில் ஏற்பாடு செய்கிறார்கள். அது பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறும் செல்வியை தான் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்கிறான் சரத்ஸ்ரீ. அவளும் சம்மதிக்கத் திருமணம் நடக்கிறது. சந்தோஷமாகப் போகும் அவளது வாழ்வில் தனது கணவன் முன்னால் ராணுவ வீரன் என்கிற விஷயம் தெரிகிறது. அவள் மனமுடைந்து போகிறாள். தனது இனத்தையும் தனது குடும்பத்தையும் நிர்க்கதியாக்கிய சிங்கள ராணுவம் சார்ந்த அவனோடு இணைந்து வாழ முடியாமல் தவிக்கிறாள். இறுதியில் அவனை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், விலகியும் போக முடியாமல் இருக்கும் கையறுநிலையில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறாள்.

இப்படத்தின் மையக்கதையம்சம் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாவ்ஸ்கியின் A Gentle Creature சிறு கதையாகும். இக்கதையை ஏற்கனவே புகழ்பெற்ற பிரெஞ்ச் இயக்குனர் ராபர்ட் ப்ரஸோன் The Gentle Woman என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். அதேபோல, நம்நாட்டிலும் வங்காள இயக்குனர் மணிகௌல் ‘Nazar’ என்னும் தலைப்பில் படமாக்கியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

இந்த இரு படங்களையும் ஆண்-பெண் என்கிற பொதுவான உணர்வுகளிலேயே கதையை நகர்த்தியிருக்கிறார்கள் அந்த இயக்குனர்கள். இந்தப் படங்களில் இனம், மொழி, மதம் போன்ற விஷயங்கள் இடையீடு செய்வதில்லை. தனது மனைவி தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் ஏன் அவ்வாறு செய்தாள் என்ற பின்னோக்கிய நினைவு அடுக்குகளில் அதற்கான முகாந்திரத்தைத் தேடும் கணவன் என்பது போன்ற காட்சியமைப்புகளாகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

கணவனுக்கும் மனைவிக்குமான அதீதமான மன அழுத்தங்கள் சார்ந்த குற்ற உணர்வுகளில் பீடிக்கப்பட்டிருக்கும் மைய ஓட்டம் தான் இப்படங்களின் கதைக் கரு.

ஆனால், சிங்களப்படத்தில் அந்தக் குற்ற உணர்வுகளை இனத்தின் மீதும் மொழியின் மீதும் பொருத்திப் பார்த்திருக்கிறார் விதானகே. இது ஒரு ‘குற்ற உணர்வுகளின் அழகில்’ சார்ந்த படம் என்கிறார்.

குற்ற உணர்வுகளின் அழகியல் வெறுமனே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நிகழ்வது என்பது வேறு. இனம் சார்ந்த, மொழி சார்ந்த, மதம் சார்ந்த கதாபாத்திரத்திரங்களுக்கு நிகழ்வது என்பது வேறு என்பதை உணரத் தவறிவிட்டார் இயக்குனர்.

அமெரிக்கா போன்ற ஐரோப்பிய ஆதிக்க நாடுகள் கட்டமைத்த உலக சினிமா பம்மாத்தெல்லாம் என்றைக்கோ முடிந்து விட்டது. இன்றைக்கு தங்களது நாட்டின் அடையாளங்களை, பண்பாடுகளை, அதிகார மீறல்களை, சிதைவுகளை முன் வைத்து மூன்றாம் உலகநாடுகளின் கலைஞர்கள் பயணப்படத் துவங்கிவிட்டனர். மேற்குலக ஆதிக்க நாடுகளின் இஸங்களினாலும் புதிய அழகியல் போக்குகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தப் பின்காலனிய நாடுகளின் பார்வை, கலைக்கும் மனித வாழவியலுக்குமிடையிலான நிரப்ப முடியாத இடைவெளியை தங்களது அரசியல் பார்வைகளால் நிரப்பிக் கொண்டிருக்கிறது.

நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு கோட்பாட்டுக் கருத்தை மீண்டும் இங்கே முன்வைக்க வேண்டியிருக்கிறது.

ஒரு கலைஞன், தற்காலத்திய உலக மயமாக்கலின் வருகைக்குப் பிறகு கலை இலக்கியங்களைப் படைக்கும் போக்கு என்பதை மிகமிக நுட்பமாக அவதானிக்க வேண்டியிருக்கிறது. படைப்பாளிக்கே தெரியாமல், தான் படைக்கும் படைப்பில் பல்வேறு அரசியல் கட்டமைப்புகள், வரலாற்றுத் திரிப்புகள், ஆதிக்க அழகியல்கள், நுட்பமாக தங்களது படைப்பின் சட்டங்களுக்குள் நுழைந்து ஒளிந்து கொள்கின்றன.

இந்த நுட்பமான கூறுகள் என்பவை ஒரு படைப்பாளி உலகளாவிய படைப்புகளை மேற்கு நாடுகளின் படைப்புகளை அவதானித்து வருவதால் நிகழும் ரசனை மாற்றங்கள். இவை ஆழ்மன உளவியலில் கிடந்து மெதுவாக ஒரு கட்டத்தில் படைப்பாளியின் ரசனை மாற்றத்தை வாஸ்தவமாக மாற்றி படைப்பில் வந்து கம்பீரமாக உட்கார்ந்து கொள்ளும். இந்த நுட்பமான கூறுகளுக்குள் இயங்கும் நுண்ணரசியல்களை இனங்கண்டு அவைகளை நெறிப்படுத்த வேண்டும். இதுதான் இன்றைய மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த படைப்பாளிகளின் சவால்.

இந்தப் பார்வையில்தான் விதானகேவை அணுக வேண்டியிருக்கிறது.

ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் குரலை ஆதரிப்பவர் என்கிற அடையாளத்துடன் இயங்குபவர். இடதுசாரிக் கருத்துக்களால் புடம் போடப்பட்டவர். தொடர்ந்து இலங்கை இனப்பிரச்சினைகளை தனது படங்களில் விமர்சித்துக் கொண்டிருப்பவர். இவரது Death of a full moon day என்னும் படம் எளிய சிங்கள மக்களின் வாழ்வியலைச் சிதைக்கும் போரின் கொடூரத்தைப் பற்றிப் பேசுகிறது.

எளிய குடும்பத்தைச் சேர்ந்த சிங்களக் குடிமகன் தனது குடும்பத்தின் வாழ்வியலுக்காக ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிகிறான். யுத்தத்தில் இறந்து போகிறான். சிங்கள ராணுவத்தினர், போரில் இறந்துபோன உடல்களை அப்படியே போர்க் காலத்திலேயே விட்டு வந்துவிடுகின்றனர். அவர்களது பெற்றோர்களுக்கு ஒரு சவப்பெட்டியில் வெறும் செங்கற்களை வைத்து மூடி, ‘இதுதான் உடல்’ என்று அனுப்பி விடுகின்றனர். சவப்பெட்டியை யாரும் திறந்து பார்க்கக் கூடாது என்ற கடுமையான உத்தரவுடன். தனது மகன் போரில் இறக்கவில்லையென்று நம்பும் அப்பா, சவப்பெட்டியை உடைத்துப் பார்க்கிறார். பிறகு தனது மகன் என்றாவது ஒரு நாள் வந்து சேருவான் என்கிற நம்பிக்கையில் வாழ்கிறார்.

இக்கதை, ஒரு பார்வையில் சிங்கள அரசு, ராணுவ வீரர்களுக்குச் செய்யும் கொடுமையைப் பற்றிப் பேசினாலும், மறு பார்வையில் வேறொரு உள்ளீடு ஓடுகிறது: இந்த பாழாய்ப்போன யுத்தம் என்கிற நிர்ப்பந்தத்தின் அடிப்படையே, யுத்தம் விளைவித்த பொருளாதாரச் சீர்கேடுகளே, தங்களது வாழ்வியலைச் சிதைப்பதற்கான முன்னோட்டங்கள் என்று எளிய சிங்கள மக்களின் மனத் தோற்றத்தில் பதிவாகிறது. எனில், யுத்தகளத்தில் நிற்கும் தமிழினப் போராளிகளை வெறுத்து ஒதுக்கும் மனநிலை கட்டமைகிறது.

யுத்தம் ஏன் வந்தது? யுத்தத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் யார்? என்கிற நுட்பமான நுண்ணரசியலை நோக்கிப் படம் நகர்வதில்லை. ஒரு பறவைப் பார்வையுடன், வெகுஜன மனத்தின் வாஸ்தவமான நியாயத்துடன், அறத்துடன் கலைப்படைப்பாக முன் வைக்கிறது.

இவரைப் போலவே ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உளவியலுக்குள் நின்று இப் பிரச்னையை விமர்சித்த சிங்களத் திரைப்படக் கலைஞர்களாக அசோக ஹந்தகமா, விமுக்கி ஜயசுந்தரா, தர்மசேன பத்திராஜா... போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்கள் இந்த யுத்தத்திற்காகக் கற்பிக்கப்பட்ட நியாய தர்மத்தின் மீது பலத்த விமர்சனங்களை முன் வைத்தவர்கள்.

தேசநலன்தான் முக்கியம் என்கிற மையக் கருத்தைக் கொண்ட ஹந்தகமாவின் ‘இது என் நிலா’ படம் பேசும் கருத்துக்களைப் போலவே, மேலும் ஆணித்தரமாக தற்போது எடுத்திருக்கும் ‘இனி அவன்’ என்கிற படத்தில் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார் அவர். இனநல்லிணக்கம், தேசநலன், போரில் ஏற்பட்ட வாழ்வியல் சிதைவுகள், நடந்து போன விஷயங்களை மறந்து விடுதல் என்று நுட்பமாக இலங்கைப் பேரினவாதத்தின் கருத்துக்களைக் கலையாக முன் வைக்கிறார். எளிய கருத்துக்கள் கொண்ட தமிழர்களிலிருந்து, புலி ஆதரவு/ புலி எதிர்ப்பு கருத்துக்கள் கொண்ட தமிழர்கள் வரை எல்லாத் தரப்பினரிடமிருந்தும் இப்படத்திற்கு மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

‘ஈழப் போராட்டத்தை பயங்கரவாதம்’ என்று தனது நேர்காணலில் குறிப்பிடுகிறார் ஹந்தகமா.

அதே போல, இங்கு வேறு சிலரையும் நினைவு கூறலாம். சமகால அரசியல் விமர்சகரான நோம் சாம்ஸ்கி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அறிவு சீவி. சமகால அரசியல் கொள்கைகளை அரசியல் நடத்தைகளை தெளிவாய் தைரியமாய் விமர்சிப்பவர், அமெரிக்க மேலாதிக்கம் , அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளின் பயங்கரவாத தன்மை மற்றும் அமெரிக்க அரச அடக்கு முறைகள், அமெரிக்க , இஸ்ரேலிய உறவு , இஸ்ரேலிய பலஸ்தீன் அராஜக அடக்குமுறை போன்றவற்றை பற்றி 1970களின் தொடங்கி இன்றுவரை தனது நூல்கள், கட்டுரைகள், உரைகள், பேட்டிகள் ஊடாக உலகிற்கு பகிரங்கமாக வெளிபடுத்துபவர்.

இவர், இலங்கை விவகாரம் குறித்து லங்கா கார்டியனுக்கு அளித்த நேர்காணலில், இலங்கை இனப்படுகொலைகள் பற்றி, மீண்டும் மீண்டும் வன்முறைகளில் ஈடுபடுகிறவர்களும் யுத்தக் குற்றவாளிகளும் கண்டிக்கத்தக்கவர்கள் என்று திருவாய் மலர்ந்திருந்தார்.. உடனே தமிழ் நவீன இலக்கிய அறிவு சீவிகள் பொங்கியெழுந்து விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தார்கள்.

அதன்பிறகு வளைகுடா நாட்டில் பணியில் இருந்த எழுத்தாளர் ஹெச். பீர்முஹம்மது, அந்த நாட்டுக்கு வந்திருந்த சாம்ஸ்கியிடம் உன்னதம் இதழுக்கு பிரத்யேகமான நேர்காணல் (ஜூலை 2009) எடுத்தபோது இந்த விவகாரத்தைக் கேள்வியாக வைத்தார். அதற்கு அவர் அளித்த பதில்:

ஹெச். பீர்முஹம்மது:- அதிகாரம் குறித்த உங்களின் பார்வை சார்பு நிலையாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். மன்னிக்கவும். நீங்கள் இலங்கை விவகாரம் குறித்து லங்கா கார்டியன் பத்திரிகைக்கு நேர்காணல் அளித்திருந்தீர்கள். என்ன நிகழ்ந்தது என்றே தெரியவில்லை. அவர்கள் உங்களை வென்று விட்டார்கள். இலங்கை விவகாரம் பாலஸ்தீன் போன்றே இரு நூற்றாண்டுகளின் துயரம். அதற்கு மறுப்பாக என் நண்பர்கள் சிலர் (நாகர்ஜுனன், ஜமாலன், பெருந்தேவி) அறிவுத்துறையை சார்ந்த பலரின் கையெழுத்து அடங்கிய விளக்க அறிக்கை ஒன்றை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்கள். நானும் அதில் கையெழுத்திட்டிருந்தேன். பாலஸ்தீன் குறித்த ஆழ்ந்த அனுதாபமும், அவதானமும் கொண்ட நீங்கள் ஏன் தெற்காசிய விவகாரங்களிலிருந்து உங்களை துண்டித்து கொள்கிறீர்கள்.? (Disconnect from South Asian Affairs)

சாம்ஸ்கி:- இலங்கை விவகாரம் குறித்து லங்கா கார்டியனுக்கு நான் அளித்த நேர்காணல் தவறாக பிரதியாக்கம் செய்யப்பட்டதாகவே கருதுகிறேன். எனக்கு அந்த விவகாரம் குறித்த விரிவான அகன்ற படிப்போ அல்லது பார்வையோ இல்லை. இதை நான் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்கான பதிலிலும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் சொன்னது போன்றே அது ஒரு துயரம் தான். அது தீர்க்கப்பட வேண்டும். அங்குள்ள சிறுபான்மையினர் எல்லா வித சம உரிமைகளை பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.

(இந்த விஷயம் தமிழிலோ பிற மொழிகளிலோ வேறு எந்தப் பத்திரிகைகளிலும் வெளிவரவில்லை. மிகக் குறைவான வாசகர் எண்ணிக்கை கொண்ட உன்னதம் இதழில் மட்டுமே வெளிவந்தது.)

இதுதான் பல லட்சம் உயிர்களை காவு வாங்கிய தமிழினத்திற்கான நியாயமான அவரது பதில். இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஒடுக்கப்படும் இனத்திற்காகக் குரல் கொடுக்கும் அறிவுசீவியின் கடைக்கண் கடாட்சம்..

அடுத்து ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த லண்டன் வாழ் ஜான் பில்கர். இவர் அனுமதிக்கப்பட்ட போர்ச்செய்தியாளர். உலகளவில் நடக்கும் இனப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் போன்ற சமூக விழிப்புணர்வு சார்ந்த பல்வேறு விடயங்களில் கவனம் குவித்து அவைகளை ஆவணப்படங்களாக உருவாக்குபவர். (இவரது ஆவணப் படங்களை விடியல் பதிப்பகம் குறுந்தகடு போட்டுள்ளது.)

ஆனால், இவர், இலங்கையில் நடந்த இனப் படுகொலைகள் குறித்தோ, அங்கு இன்றளவிலும் லட்சக் கணக்கான மக்களை அடைத்து வைத்திருக்கும் அகதி முகாம்களின் அவலம் குறித்தோ ஒரு ஆவணப் படத்தையும் உருவாக்கியதில்லை. இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன? என்று கேட்டு உன்னதம் இதழிலும், மின்னஞ்சலிலும் விளக்கம் கேட்டு அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தேன். பதிலில்லை. (உன்னதம் 2009 டிசம்பர்)

இதற்கு அவர் எனக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது, அவர்களைப் போன்றவர்கள் மீது தொடுக்கப்படும் தார்மிகம்.

ஐரோப்பிய அறிவு ஜீவிகள் தமிழினத்துக்காகக் குரல் கொடுப்பதென்பது அவர்கள் போடும் பிச்சை அல்ல. அது தமிழினம் அவர்களுக்குத் தரும் அங்கீகாரம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டாலே போதுமானது.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிறகான தற்போதைய சூழலில் முன்னால் போராளிகளின் பரிதாபமான நிலையை எல்லோராலும் வெறுக்கத்தக்க குற்ற உணர்வுக் காட்சிகளாகப் பதிவு செய்துள்ள ஹந்தகமா காட்டும் யாழ்ப்பாணம் குற்றவுணர்வு மிகுந்ததாக இருக்கிறது. போராளிகள் இன்று மாஃபியாகாரர்களாக மாறுவது போல சித்தரிக்கும் இவர், இதற்கான ரிஷி மூலங்களை முன் வைப்பதில்லை. அப்படியான ரீதியில் பார்வையாளன் யோசிப்பதற்கான தருணங்களை உருவாக்குவதில்லை. இறுதியில் தமிழர்கள் சிங்களர்களோடு சார்ந்து வாழ வேண்டும் என்கிற இன நல்லிணக்கத்தை தெளிவாக முன் வைக்கிறார்.

இதே மாதிரியான ஒரு போக்கைத்தான் விதானகேவும் with you.... படத்தில் பூடகமாக முன் வைக்கிறார். சிங்கள ராணுவம் அல்லது சிங்களப் பேரினவாதத்தின் குற்ற உணர்வுகளாக முன் வைத்து மன்னிப்பும் கேட்கிறார். சரி Past is Past எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். இனி புதிய வாழ்க்கையை ஆரம்பிப்போம், ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ்வோம் என்பது போன்ற ஒரு பார்வையை முன் வைத்துப் பார்க்கிறார்.

இந்தக் குற்ற உணர்வு என்னும் படிமம் அவருக்கு தாஸ்தாவ்ஸ்கியிடமிருந்து கிடைக்கிறது. ஏனெனில், அவரது பதின்பருவம் இடதுசாரிய ரஷ்ய இலக்கியங்களால் கட்டமைக்கப்பட்டது. டால்ஸ்டாயும், தாஸ்தாவ்ஸ்கியும், துர்க்கனேவும், செகாவும் அவருக்குள் பல்வேறு அறரீதியான, தார்மீகமான எண்ண அலைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அதனால்தான் அவரால் ஹந்தகமாவைப்போல வெளிப்படையாக இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியவில்லை. ஒரு கையறு நிலையிலேயே படம் முழுக்க அழைத்துச் செல்கிறார்.

தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றமும் அதன் பண்பாடுகளும் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் இச்சூழலில் அதுகுறித்த விமர்சனமேதுமின்றி, அப்படி எதுவும் நடக்காதது போன்ற ஒரு தோற்றத்தைப் படம் முழுக்கக் கட்டமைக்கிறார். படத்தின் பின்புலத்தில் திரும்பிய புறமெங்கும் கந்தசஷ்டிக் கவசமும் தமிழ் கும்தலக்கிடி பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. உட்டாலக்கிடி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. போரினால் பெரியளவில் தமிழர்களிடையே மனரீதியாக பாதிப்பு எதுவும் இல்லை; பொருளாதார ரீதியிலான பாதிப்பு வேண்டுமானால் உள்ளது என்கிற தோற்ற மாயையை தொடர்ந்து உருவாக்குகிறார்.

தமிழ்ப்பெண்ணின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் சிங்களராணுவ வீரன் என்னும் குறியீடு முழுக்க முழுக்க மேலோட்ட மான வெகுஜனப் பார்வை கொண்டது. இதைக் குற்றவுணர்வுகளின் அழகியல் என்கிறார். ஒரு இனத்தை மிகக் கொடூரமாகக் கொலை செய்த பிறகு குற்றவுணர்வுகளுடன் கூடிய சில சில நல்லிணக்கங்களையும் சமரசங்களும் செய்யும் காட்சிகளை உருவாக்குவதற்குப் பெயர்தான் குற்றவுணர்வுகளின் அழகியலா?

"நாங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து வாழ்ந்து வந்த எங்களது நிலத்தை அபகரித்துவிட்டு, எங்களுடன் வந்து ஒன்று கலவுங்கள் என்று அழைக்கிறீர்களே... நாங்கள் எப்படி வரமுடியும்? எங்களது நிலம், பண்பாடு, வாழ்வு எல்லாவற்றை யும் பறித்துக்கொண்டு நிர்வாணமாக இருக்கும் எங்களை அழைக்கிறீர்கள். உங்களுக்குத் தேவை சக மனிதன் அல்ல; ஒரு அடிமைதான்..." என்று வெள்ளையர்களை நோக்கிக் கேள்வி கேட்ட செவ்விந்திய தலைவரான டேன்ஜார்ஜின் கடித வரிகள், இங்கு ஈழத் தமிழருக்கும் பொருந்தும்தானே....

விதானகே மீது விமர்சனம் வைத்தால், ராஜபக்சேவை போய்க் கேள் என்று கிண்டலடிக்கும் நவீன தமிழ் அறிவுசீவிகளே...

ஒரு இனத்தைக் கொன்றொழித்துவிட்டு எஞ்சியவர்களை, ‘நாங்கள் உங்களை ஏற்றுக் கொள்கிறோம், நாம் அனைவரும் ஒரே மக்கள், வந்து எங்களுடன் சார்ந்து ஒன்று கலவுங்கள்..’ என்று ராஜபக்சே கூறுவதற்கும் விதானகே கூறுவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்: நாங்கள் குற்றவுணர்வில் இருக்கிறோம் என்று விதானகே வாக்குமூலம் கொடுப்பது மட்டும்தான்.

சரி. தமிழ்நாட்டில் உள்ள தமிழ் தேசியம் பேசுகிறவர்கள், இந்தப் பிரச்னையில் நேரடிப் பற்கேற்பாளர்களாக இல்லை. வெறும் பார்வையாளர்கள்தான். அதனுடைய வலிகளோ, பிரச்னைப்பாடுகளோ தெரியாது.

ஆனால் ஹந்தகமாவோ,விதானகேவோ யுத்தத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட இனத்தின் முற்போக்குப் படைப்பாளிகள். தீர்க்க முடியாத வலியாலும் எல்லையற்ற துயரத்தாலும் கிடக்கும் ஒரு இனத்தை தருணம் பார்த்து தங்களுக்கேற்ப மாற்ற நினைக்கும் கருத்தியல்களை விதைக்கும்போது, அவர்களை சிங்களவர்கள் என்ற பொதுப் புத்தியின் கீழ் விமர்சிக்காமல், தடம் தடுமாறும் முற்போக்கான படைப்பாளிகள் என்ற பார்வையில் விமர்சிப்பதுதானே இன்றைய தேவை..

தோற்றவர்களைப் பெருந்தன்மையுடன் நல்லிணக்கம் என்ற சொல் மூலம் மேலும் தோற்கடிக்க வைக்கும் போக்கு அல்லவா இது? இவர்களுக்குத் தேவை நல்லிணக்கம் அல்ல; பல லட்சம் மக்களைக் கொன்று குவித்ததற்கான நியாயம். இனப் படுகொலைகளுக்கான தார்மீகப் பொறுப்பு. செங்குருதி பாய்ந்த முள்ளிவாய்க்காலுக்கான தீர்ப்பு.

13 வது சட்டத் திருத்தத்தை முள்ளிவாய்க்காலில் குழி தோண்டிப் புதைத்துவிட்டு இன நல்லிணக்கம் பேசும் கலை இலக்கியப் பார்வைகளை, ’படங்களை வெறும்படங்களாக மட்டுமே பாருங்கள்’ என்று கூக்குரலிடும் நவீன தமிழ் அறிவுசீவிகளை எந்த ரீதியில் மதிப்பிடுவது?

இதுபோன்ற இன நல்லிணக்கப் பார்வைகள், முழுக்க முழுக்க ஒரு கடந்த கால ஐரோப்பிய வகைப்பட்ட சிந்தனை. காலங்காலமாக கறுப்பின மக்களை அவர்களது பண்பாட்டுக் கூறுகளை, நிலங்களை அழித்தொழித்து விட்டு அதற்கு நியாயம் கற்பிக்கும் விதமாக ஒரு சில அறிவு சீவிகளை முன்னிறுத்தி மேலோட்டமான குற்றவுணர்வு சார்ந்த கலைப் படைப்புகளை முன் வைக்கும் மேற்குலக ஆதிக்க நாடுகளின் அழகியல் எச்சம். இந்தப் பார்வை கொண்ட பல மேற்குலகப் படங்களைக் காணலாம். அந்தப் படங்களை உலகின் உன்னதமான படங்கள் என்று பாராட்டி, யாரெல்லாம் அழித்தொழிப்பு செய்தார்களோ, அந்த மகானுபாவர்களைக் கொண்டே உலகின் உயர் விருதுகளை வழங்குவார்கள்.

இத்தருணத்தில்To Kill a Mockingbird என்னும் படம் குறித்து இங்கு நினைவு கூறலாம். இது அமெரிக்க வெள்ளைப் பெண்மணியான ஹார்பர்லீ எழுதிய நாவல். புலிட்சர் விருது பெற்றது. இதை ராபர்ட் முல்லிகன் என்னும் வெள்ளையின அமெரிக்கர் திரைப்படமாக எடுத்துள்ளார். இதன் கதையம்சத்தைப் பாருங்கள்:

அட்டிகஸ் பிஞ்ச் என்னும் வெள்ளையின அமெரிக்க வழக்கறிஞர், வெள்ளையினப் பெண்ணை வன்கலவி செய்ததாக பொய்க் குற்ற வழக்கில் மாட்டிக் கொண்ட கறுப்பின மனிதனை நிரபராதியென விடுவிக்கப்படும் போராட்டமே இந்நாவல். 1960ல் இந்நாவல் வெளிவந்தபோது கறுப்பினத்தவர் மீதான வெள்ளையினத்தவர்களின் ஆதிக்கம் உச்சத்திலிருந்தது. அந்த நிறவெறியையும் அதிகாரத்திமிரையும் தட்டிக் கேட்டதால் இந்நாவல் கறுப்பினத்தவருடையே மிகுந்த வரவேற்புப் பெற்றது. (பாடும் பறவையின் மௌனம் என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்திருக்கிறது. மொழியாக்கம்: சித்தார்த்தன் சுந்தரம்)

Mockingbird என்பது கறுப்பினத்தின் குறியீடு. யாரையும் தொந்தரவு செய்யாமல் தானாகப் பாடித் திரியும் அந்தப் பறவைகளை வேட்டையாடக் கூடாது என்று தன் குழந்தைகளிடம் பிஞ்ச் சொல்வது போன்ற காட்சிகள் கலையாகவும், இனத்தின் உணர்ச்சிக் கூறுகளாகவும் படத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது நெஞ்சை நெகிழ வைக்கும்.

சிறு உண்மைச் சம்பவமும், கற்பனையும் கலந்தோடும் இப்புதினத்தில் கறுப்பின மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனவாதம் மேலோட்டமாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும். காலங்காலமாக கறுப்பின மக்கள் மீது தொடுக்கப்பட்ட இன அழித்தொழிப்பை முன்வைத்து, ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் என்ற வெள்ளையினத்தவர் எழுதிய uncle Tom’s cabin என்னும் புதினம்தான் முதன் முதலாக இப்படியான ஒரு வகையை (Genre) தோற்றுவித்தது என்று சொல்லலாம். (இது நவீன கலை இலக்கியம் சார்ந்த தற்கால தமிழ்ச் சூழலில் பெரிதும் பேசப்படும் தலித் இலக்கிய வகைக்கும் பொருந்தும்)

இந்த இடத்தில், ரோமன் போலான்ஸ்கியின் The Pianist, மற்றும் ஸ்பீல் பெர்க்கின் Schindler's List போன்ற திரைப்படங்களை இப்படியான பார்வையில் பார்க்க வேண்டுமா என்ற கேள்வியை முன் வைத்தால் அது அபத்தமானது. ஏனெனில், அவை தங்களது யூத இனத்தை அழித்தொழிக்கச் செயல்பட்ட நாஜிகளின் கொடூரமான செயல்களை, பாதிக்கப்பட்ட யூத இனப் படைப்பாளிகள் முன் வைத்த வேறு ஒரு வகை (Genre) திரைப்படப் பார்வைகள்.

With-You-Withut-Youதற்காலங்களில் கறுப்பினப் படைப்பாளிகளே தங்களது பார்வைகளை முன்வைத்து திரைப் படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாம் உலகநாடுகளின் பார்வையாளன் தற்கால பின்காலனிய அரசியல் சூழலில், இப்படியெல்லாம்தான் ஒரு கலைப்படைப்பை அணுக வேண்டியிருக்கிறது. விதானகேவின் படம் எந்தக் காலச்சூழலில் நடக்கிறதென்ற காலப் பிரக்ஞையேயின்றி முன்வைக்கப்படுகிறது.

ஒரு படைப்பை ‘இரண்டாம் உலகப் போருக்கு முந்திய கதைக்களமா? பிந்திய கதைக்களமா? என்று காலப் பின்னணியில்தான் அணுக வேண்டும் என்கிறது உலகளாவிய விமர்சனக் கோட்பாடு.

இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய சூழலில் நடக்கும் இத்தாலிய இயக்குனரான விக்டோரியா டிசிகாவின் Bicycle thieves படம் போருக்குப் பிந்திய கடுமையான வறுமை, பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, மனிதம் அழிந்துபோன துயரம், இந்நெருக்கடிகளில் வாழ்வியலுக்காகப் போராடும் மனிதஅவலம் போன்றவைகளை முன்வைத்துப் பேசும். வயிற்றுப் பாட்டுக்காக வைத்திருந்த தனது திருடு போன சைக்கிளைத் தேடி அலையும் அவலத்தை, அற்புதமான யதார்த்தப் பார்வை கொண்டகலையாக சொல்லியிருப்பார் இயக்குனர். இதை காலம் பற்றிய ப்ரக்ஞையின்றிச் சொல்லியிருந்திருந்தால் மிகமிகச் சாதாரணமான படைப்பாகத்தான் போயிருக்கும். அதனுடைய பலமே காலப்பிரக்ஞைதான்.

சரி. நவீன தமிழ் அறிவுசீவிகள் சொல்வதுபோல இந்தப் படத்திலுள்ள அரசியலை விடுத்து ‘கலை’யை மட்டுமே பார்க்கலாம்:

முதலில் கதாபாத்திரங்களின் கட்டமைப்பே மிகப்பெரும் முரண்பாடாக இருக்கிறது. போரிலிருந்து விடுபட்டு எளிய வாழ்க்கை வாழ விரும்பும் நாயகன் தேர்ந்தெடுப்பது மிக மோசமான நகை அடகு வியாபாரத்தை. (மூலக் கதையில் இருப்பது போல எடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மேலும் மூலக்கதையை மாற்றியும் அமைத்திருக்கிறார்தானே....) அதில் ஏதாவது எளிய மக்களுக்கு உதவி செய்கிறாரா என்றால் நிச்சயமாக இல்லை. இரக்க மனநிலையில் உள்ள தனது மனைவியைக் கூட ‘எப்போதும் அடகு வைக்கப்படும் பொருளின் உண்மையான மதிப்பில் கால் பங்கை மட்டும் சொல், ஒருநாள் தாமதமானாலும் ஒருமாதத்திற்குரிய வட்டியை வாங்கு’ என்று மாற்றுகிறான். இதுவும் ஒருவித ராணுவ மனநிலைதான்.

இரக்க உணர்வுகள் ஏதும் இல்லாத ஒருவன் சட்டென இரக்கப்பட்டு தமிழ்ப்பெண்ணுக்கு வாழ்வு தருவதற்கான வலுவான காட்சியமைப்புகள் இல்லை. மேலும், அவன் தொடர்ந்து WWF என்கிற மிகமிகக் கொடூரமான மல்யுத்தப் போட்டியைப் படம் முழுக்க ரசித்துக் கொண்டேயிருக்கிறான். ராணுவ உளவியலின் நீட்சி அது. சட்டென காட்சிகள் மாறி புத்தருக்கு முன் தீபம் ஏற்றி மனமுருக வணங்குகிறான்.

அவளுக்கு வீட்டில் வயதான முதியவருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி நடக்கிறது. அதிலிருந்து தப்பித்து வெளியே வந்து ஒரு சிங்களவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். எனில் அங்கு கட்டப்படுவது, ஒரு சிங்களவரோடு கூடி வாழ முடியும் ஆனால், தமிழரோடு வாழ முடியாது என்பதற்கான கருத்தியலா? ‘முதியவரோடு திருமணம்’ என்கிற கருத்தியலை விடுத்து அந்த சிங்களவர் மேல் அன்பு ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வதாக காட்சிகள் அமைத்தால் ‘கலையின் புனிதத்துவம்’ கெட்டுவிடுமோ?

தமிழச்சியைத் திருமணம் செய்த பிறகு முரண்பாடு ஏற்பட்ட உடன், தனது துப்பாக்கியை எடுத்து மறைத்து வைத்துவிடுகிறான். காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் ஒருவனால், என்னைக் கொல்வதுதான் உன் பிரச்னைக்குத் தீர்வென்றால் சுட்டுத் தள்ளு என்று துப்பாக்கியை நீட்டியிருக்க வேண்டிய கவித்துவமான கதைப்போக்கு, கள்ளத்தனம் கொண்டு எடுத்து மறைத்து வைக்கச் சொல்கிறது. எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் தமிழர்களிடம் உஷாராகத்தான் இருக்க வேண்டும் என்கிற கருத்தைச் சொல்கிறது இக்காட்சி. இவை எல்லாமே அக்காட்சிகள் உணர்த்தும் கருதியல்கள்தான்.

தமிழச்சி சரளமாக சிங்களத்தில் உரையாடுகிறாள். ஆனால் சிங்களன் தமிழ் பேசுவதில்லை. இதுதான் பேரினவாதம். என் மொழிதான் நீ பேசப்பட வேண்டும் என்னும் Reconciliation. ‘அவன் அவள் மீது எல்லையற்ற காதல் கொண்டு தமிழ்மொழி கற்றுக் கொள்வது போல ஒரு காட்சி வைக்க முடியாதா? அப்படி வைத்தால் இக்கதையின் ‘கலைப் புனிதத்திற்கு பங்கம் நேர்ந்துவிடுமா? ( தமிழுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் விதானகேவுக்கு தனது மொழியான சிங்களத்தின் சக மொழியான தமிழ் மொழி எழுதத் தெரியாதது மட்டுமல்ல பேசவும் தெரியாது என்பது எவ்வளவு பெரிய நகை முரண் என்பதையும் இங்கு பொருத்தலாம்.)

அவள் சர்ச்சுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது, ‘உன் கடவுள் உனக்கு என்ன தந்தார்?’ என்று கேட்கிறான் அவன். ‘நான்தான் பாதுகாப்புக் கொடுத்தேன்’ என்று சொல்லிவிட்டுப் புத்தரை வணங்கச் செல்கிறான். உனது கடவுள் பயனற்றவர்.எனது கடவுளை ஏற்றுக்கொள் என்றாகிறது அக்காட்சி.

அதேபோல, தமிழ்பெண்ணின் கதாபாத்திரமும் பெரும் முரண்பாடுடனேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. போரின்கொடூரமான தாக்குதலினால் சிங்கள இனத்தின் மீதான ஓயாத மன வெறுப்பாலும், கடும் வறுமையாலும் உழல்பவள். டக்கென்று ஒரு சிங்கள இனத்தவரை திருமணம் செய்து கொள்ள மனம் ஒப்பாது. அடுத்த நொடியே தனது உடலைக் கொடுத்துவிடும் அதிசயமும் நிகழாது. (அந்த உடலுறவுக் காட்சி வெளிப்படையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழின் மூன்றாந்தர மசாலா இயக்குனர்கள் கூட ‘கலை’யாக இக் காட்சியை வடிவமைத்திருப்பார்கள்) மேலும், தேசிய இன அரசியல் பேசும் அப்பெண்ணை ‘விஜய் படங்களின் ரசிகையாக’ மாற்றியிருப்பது பெரும் Irony யாக இருக்கிறது.

இந்தச் சூழலிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு, தமிழ்நாட்டுக்குப் போவதுதான் ஒரே தீர்வாக முன் வைக்கிறார் விதானகே. அப்படியானால், ஈழத் தமிழர்களின் நலனுக்காக முன் நிற்கும் நாடு என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். ஈழத் தமிழர் நலன் சார்ந்த இந்திய வெகுஜன அரசியலும் நுண்ணரசியலும், தமிழ் நாட்டு வெகுஜன அரசியலும் நுண்ணரசியலும் எல்லோரும் அறிந்ததே. சமீபத்தில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் ஈழப் பெண்ணிற்கு ‘அகதி’ என்ற காரணத்துக்காக மருத்துவப் படிப்பு மறுக்கப்பட்ட அலட்சியம் தோய்ந்த பூமிக்கு வரத்தான் அவள் ஆசைப்படுகிறாள். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு NRI இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களை அள்ளிக் கொடுக்கும் அரசு, தனது மொழி பேசும் அகதியை அலட்சியப்படுத்தும் புண்ணியபூமி தான் அவளுக்கு ஆறுதல் கொடுக்குமென எண்ணுகிறாள். ஏன் கனடா, லண்டன் போன்ற நாடுகளுக்குப் போவது பற்றி அவள் கனவு காணவில்லை?

தமிழ்நாட்டுக்கு வர முடிவெடுத்தவுடன் தனது அடகுக் கடையை விற்றுவிட நினைக்கிறான் அவன். அதை வாங்குபவர் மிடுக்கும் செல்வந்தத் தன்மையும் கொண்ட இஸ்லாமியர்!

இலங்கையில் இன்று இஸ்லாமியர்களின் தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் வர்த்தக ரீதியாக பலமாக மாறிக் கொண்டிருக்கிறது. அதன் குறியீடாக இப்படியான ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார். அந்தக் கடையை வேறு ஒரு சிங்களவர் வாங்கிக் கொள்கிறார் என்று ஒரு காட்சி அமைத்தால் கதையின் ஓட்டமோ, கதையின் தன்மையோ எங்கும் மாறுபடப் போவதில்லை. அந்த காட்சியைக் காட்டாவிட்டால் கூட ஒன்றும் இல்லை. வலிந்து திணிக்கப்பட்ட இஸ்லாமியப் பாத்திரம் அது. இதன் அரசியல் என்ன?

August sun என்கிற தனது படத்தில் விடுதலைப்புலிகளால் இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவதை விமர்சனமாக முன் வைத்திருக்கும் விதானகே . தற்போது சிங்களப் பேரினவாதிகளால் தாக்குதலுக்குள்ளாகும் இஸ்லாமியர்களுக்காக எங்குமே குரல் எழுப்பவில்லை என்பதும் நினைவு கொள்ளத்தக்கது.

இப்படிப் பல்வேறு பார்வைகளை இப்படத்தின் மீது வைத்து விமர்சனங்களை முன் வைக்கும் அதேசமயத்தில், அவரது இன்னொரு நிலையை நுட்பமாகப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

படம் முழுக்க காட்சிகள் ஒரு பறவைப் பார்வையிலேயே மேலிருந்து பார்ப்பது போல, தள்ளி நின்று பார்ப்பது போல கட்டமைத்திருக்கிறார். இதுதான் அவருக்குள்ளிருக்கும் கலைஞனின் கையறு மனநிலை என்று கொள்ளலாம். ‘தன்னால் என்ன செய்ய முடியும்? சக பயணியாகப் பகிர்ந்து கொள்வதைத் தவிர’ என்னும் மனநிலை.ஒரு பாசிச நிலப்பரப்பில் அவருக்குள்ள செயல்பாட்டு சுதந்திரம், இதற்குமேல் யோசிக்க வைக்காமல் முடமாக்கி வைத்திருக்கிறது. இலங்கை கவிஞர்கள் மஞ்சுள வெடிவர்த்தன, மகேஷ் முனசிங்க மற்றும் அரசியல் விமர்சகர்களான சுனந்த தேசப்ரிய, பாஷண அபேவர்த்தன போன்றோர் இலங்கையிலிருந்து வெளியே உள்ளதால் அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமாக இருக்கின்றன. ஆகவே இந்தப் பார்வையையும் கணக்கில் கொண்டு அவரை அணுகவேண்டியிருக்கிறது.

அதனால்தான் ஈழப் படைப்பாளிகள் எதிரணியிலிருந்து வரும் மாற்றுக் குரல் என்கிற ரீதியில் அவரை ஆதரிக்கின்றனர். ஆனால். அந்த மாற்றுக் குரல் மேற்குலக திரைப்பட கலைத் தந்திரோபாயங்களுக்கு பலியாகிவிட்டது என்பதுதான் நான் இங்கு வைக்கும் விமர்சனம்.
ஆனாலும் இறுதிக் காட்சியில் அவருக்குள்ளிருக்கும் தார்மீகமான போராளி விழித்துக் கொள்கிறான். தன் இனத்தை அழித்தொழித்தவர்களுடன் இணைந்து அல்லது சார்ந்து வாழவே முடியாது என்பதையும் இலங்கை அரசு பிரச்சாரம் செய்யும் நல்லிணக்கம் குறித்த பார்வைகளையும் கேள்விக்குள்ளாக்கி தமிழ்ப்பெண் செல்வியை தற்கொலை செய்ய வைக்கிறார்.

இது ஒரு கையறு நிலை கொண்ட கலைஞனின் ஆற்றாமை.விதானகேவின் அலை வரிசையை நாம் புரிந்துகொள்ளலாம். இந்த ரீதியில் அவரைப் பாராட்டலாம்.

ஆனால், சிங்களரோடு சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் இல்லையெனில் சாவதைத் தவிர வேறு வழியில்லையென்ற விமர்சனம் இதற்குள் கட்டமைகிறது.

அவர் இன்னும் சற்று விசாலமாக யோசித்திருந்தால், தமிழ்ப் பெண்ணைச் சாகடிக்காது, அவனிடமிருந்து பிரிந்து, தனது நிலத்தில் சுதந்திரமாக அவள் விரும்பும் ‘விஜய் பாடல்களுடன்’ கொண்டாட்டமாக வாழ வைத்திருக்கலாம்.

இறுதியில் சோக முடிவு தருவதுதான் ஒரு கவித்துவ சோகத்தையோ, காவியத் தன்மையையோ ஏற்படுத்தும் என்று அவர் நினைத்தாரோ என்னவோ.. அல்லது அரசியல் காரணங்கள் பின்னிப் பிணைந்திருக்கலாம். இந்தக் காவிய அழகியல் பார்வை, ‘அவளைத் தனிமையில் வாழ விடுவதிலும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் மூன்றாம் உலக நாடுகளின் காவிய அழகியலாய் பரிணமித்திருக்கும்.

இப்படி எந்தவிதமான அரசியல் இடையீடுமற்று சுயசிந்தனையாக, கலையாக மாத்திரமே இப்படத்தை அவர் படைத்திருப்பதாகச் சொன்னால், ‘தொடர்ச்சியான மேற்குலகப் படங்கள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள கலைஞர்களின் சிந்தனைப் போக்கை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதற்கு பிரசன்னவிதானகே போன்ற கலைஞர்கள் ஒரு சாட்சி.

- கௌதம சித்தார்த்தன்

Pin It

independant cinema 1

independant cinema 2

independant cinema 3

independant cinema 4

independant cinema 5

independant cinema 6

தொடர்புக்கு - 9944952893, 9894593945, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It

vadivelu"நோ.... இந்தக் கைப்புள்ள கட்டைல போறவரைக்கும் வேற யார் வண்டியிலும் ஏறமாட்டான்...”

“ஏன்டா... இன்னுமாடா இந்த ஊர் நம்மள நம்புது?”

“அடிக்கும்போது ஒருத்தன் சொன்னான் இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான்டா, ரொம்ப நல்லவன்னு சொன்னாம்மா......”

“அது வேற வாயி... இது நாற வாயி...”

“என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு?”‍

“பில்டிங் ஸ்டிராங்கு ஆனா... பேஸ்மட்டம் வீக்கு...”

- கிட்டத்தட்ட தமிழர்களுக்கு மனப்பாடமாகிப்போன வசனங்கள் இவை. இவற்றின் சொந்தக்காரர் நகைச்சுவையில் தனி முத்திரை பதித்த நம்ம வடிவேலு.

தமிழர்களை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கவலைகளை மறந்து சிரிக்கச் செய்த மாயக்காரன் வைகைப் புயல் வடிவேலு. தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. கலைவாணர் தொடங்கி தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ் என்று அந்த வரலாற்றுச் சங்கிலி அறுபடாத ஒன்றாகவே தொடர்ந்தது தமிழ் சினிமாவின் உன்னதங்களுள் மிகமுக்கியமான ஒன்று. தேங்காய், சுருளி, கவுண்டமணி - செந்தில், விவேக் என்று இன்னும் பலரோடு சேர்த்து ஒரு மிக நீண்ட பட்டியலே போடுமளவுக்கு இங்கே நகைச்சுவைக் கலைஞர்களின் பெரும் படையே கோலோச்சியது, கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இந்திய சினிமாக்களில் இப்படிப் பட்டதொரு சிறப்பு தமிழ் சினிமாவைத் தவிர வேறொன்றில் இருக்குமா என்பது சந்தேகமே. தமிழின் நகைச்சுவைக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவர்களாகவே தங்களை நிலைநாட்டியிருக்கின்றனர். அப்படிப்பட்டதொரு அண்மைக்கால தனித்துவ நகைச்சுவை நாயகன் நம்ம வடிவேலு.

மதுரையில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, சொற்ப ஊதியத்தில் வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்த அவருக்கு சினிமாவில் அதிக ஈடுபாடு இருந்தது. எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் எப்போதும் பழைய சினிமாப் பாடல்களைப் பாடிக் கொண்டேயிருக்கும் அவரது வாய். எண்பதுகளின் இறுதி, தொண்ணூறுகளின் துவக்கத்தில் கஸ்தூரி ராஜாதான் வடிவேலுவைக் கண்டுபிடித்து சினிமாவில் சேர்த்தவர். அவரது `என் ராசாவின் மனசிலே’ தான் வடிவேலு அறிமுகமான முதல் படம். காய்ந்துபோன தோலுடன் வெறும் எலும்புதான் உடம்பு. ஆனாலும் அப்போதே ஒருவித தனித்துவம் கொண்ட நடிப்பு அவரிடமிருந்து வெளிப்படத்தான் செய்தது. அப்போதிலிருந்து தன்னை உருவாக்கிக் கொள்வதில் சலிப்பின்றி இயங்கினார் வடிவேலு. கவுண்டமணி --செந்தில் ஜோடியோடு கொசுறுபோல வந்துபோன வடிவேலு எல்லா நகைச்சுவை முன்னோடிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தனக்கென ஒரு நகைச்சுவை ராச்சியத்தையே உருவாக்கிக் கொண்டது தனிக் கதை. அந்த வெற்றிக்கு வடிவேலுவின் வெறித்தனமான கடும் உழைப்பும் உடல்மொழியும் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

ராசாவின் மனசிலேவைத் தொடர்ந்து வடிவேலுவின் மீது ஒரு கவனிப்பை ஏற்படுத்திய படம் காதலன் (1994). அவரது வெற்றியைப் பறைசாற்றிய படங்களாக அதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா, வெற்றிக் கொடி கட்டு, வின்னர், சந்திரமுகி போன்றவை வெளிவந்தன. அவரது இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ஒரு மைல் கல் என்றால் மிகையல்ல. அந்தப் படத்தில் வடிவேலு முதல்முறையாக இரட்டை வேடத்தில் கலக்கினார். ராஜா காலத்துப் படம் போலிருந்தாலும் நவீன ஏகாதிபத்திய எதிர்ப்பு, உலகமயம், தாராளமயம் போன்றவற்றின் மீதான விமரிசனம் போன்றவை வேறு எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு இருந்தது. தரமான நகைச்சுவையும் இந்தப் படத்தை வெற்றிகரமாக ஓட வைத்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து வடிவேலுவை வைத்து எடுக்கப்பட்ட இந்திரலோகத்தில் நா.அழகப்பன் மண்ணைக் கவ்வியது வேறு விஷயம்.

வடிவேலு செய்த பாத்திரங்களின் பெயர்கள் சின்னக் குழந்தைகளின் நினைவில் வந்து கூட அவர்களைக் குஷிப்படுத்தின. கைப்பிள்ளை, வக்கீல் வண்டு முருகன், ஸ்நேக் பாபு, நாய் சேகர் என்று எத்தனை எத்தனை சிரிப்பு காட்டும் கற்பனைப் பெயர்கள்...
வடிவேலுவின் பல நகைச்சுவைக் காட்சிகள் உலகத்தரம் வாய்ந்தவை என்பது என் கருத்து. கற்பனைத் திறன் நிரம்பக்கொண்டு, எவரையும் மெய் மறந்து சிரிக்கவைக்கும் இயல்பு கொண்டவை அவை. யாரையும் மனம் புண்படும்படி தரம் தாழ்ந்த நகைச்சுவையை வடிவேலுவிடம் காண்பது அரிது. அதிலும் குறிப்பாக பெண்களை இழிவு செய்து பண்ணப்படும் காமநெடிக் காமெடியை வடிவேலுவிடம் பார்க்கமுடியாது. அப்படியொரு தேவை வந்தாலும் அதை நாசூக்காகக் கையாளும் கலையில் அவர் வல்லவராகவே இருந்திருக்கிறார். அதில் விரசம் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தத் தன்மை வடிவேலுவுக்கே உரிய சிறப்பு என்றும் கருதுகிறேன். (பாலியல் ரீதியாகப் பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசும் விரச வகை நகைச்சுவையிலிருந்து விவேக்கூட தப்பவில்லை. சந்தானம் இதில் ஒரு சகிக்கஇயலாத சாதனையே புரிந்து வருகிறார்.) ஆனால், வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் என்றும் காணத் தக்கவை, எல்லா வயதினருக்குமான இயல்பு கொண்டவை.

இப்படி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களைக் கவலைகளை மறந்து சிரிக்கவைத்த அந்தப் பெருங்கலைஞனுக்கு மூன்று ஆணடுகளுக்கு முன்னர் ஒரு பெரும் சோதனை வந்தது... தேர்தல் எனும் வடிவில்.

ஏற்கெனவே மக்களின் ஆவேச எதிர்ப்பிற்கு உள்ளாகிப்போன அன்றைய ஆளும் கட்சியான தி.மு.க.விற்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்யக் கிளம்பினார். அப்போது விஜயகாந்த்தோடு அவருக்கிருந்த சொந்தப் பகைமையை தி.மு.க. தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவுசெய்து வடிவேலுவைக் களமிறக்கியது. அவரும் ஜெ. மீது எதிர்ப்பைக் காட்டாமல், விஜயகாந்தை மட்டுமே மேடைகளில் விளாசித் தள்ளினார். சினிமாவில் நாகரீகம் காத்த வடிவேலு, தேர்தல் பிரச்சாரத்தில் தரம் தாழ்ந்துபோனார். அவரின்மேல் அன்பு கொண்டிருந்த சாதாரண ரசிகர்கள் இதைக் கண்டு அப்போதே முகம் சுளித்தனர்.

தேர்தலில் தி.மு.க. (எதிர்பார்த்தபடியே) படுதோல்வியடைந்தது. அப்போது ஆரம்பித்தது வடிவேலுவுக்கான இருண்ட காலம். தி.மு.க.வோடு சேர்ந்த பாவத்திற்காக வடிவேலுவும் வீட்டுக்கு அனுப்பட்ட பரிதாபம் அரங்கேறியது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லவேயில்லை. தமிழ் மக்களைத் தனது கள்ளமற்ற நகைச்சுவையால் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய அந்த உன்னதக் கலைஞனுக்கு இன்று வரையில் பழைய நிலைமை திரும்பாத நிலை. அண்மையில் வெளிவந்த தெனாலிராமன் படமும் அவ்வளவாக எடுபடவில்லை. வடிவேலு மறுபிரவேசம் செய்துவிட்டார் என்று ஆசைஆசையாகச் சென்று படம்பார்த்தால் அந்த இம்சை அரசனுக்கு ஈடாகவில்லை இந்தப் படம்.

இரண்டு தலைமுறைகளாக தமிழர்களை மகிழ்வித்த அந்தக் கலைஞன் மீண்டும் தன் பழைய நிலையை எப்போது எட்டிப் பிடிக்கப்போகிறாரோ தெரியாது. ஆனால், அரசியலில் இறக்கி, தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்ட தி.மு.க. தலைவர் குடும்பத்துத் திரைப்பட நிறுவனங்களே அவரை ஒதுக்கி வைத்திருந்ததுதான் ஏன் என்ற கேள்வி நம்முள் தோன்றி, அதற்கு விடையாக மர்மமே மிஞ்சுகிறது. அது மட்டுமல்ல... இந்த நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில் வடிவேலுவுக்கு தனக்குப் பிடித்த அரசியலைப் பேசவோ, தனக்குப் பிடித்த அரசியல் கட்சியை ஆதரிக்கவோ, அதற்காகப் பிரச்சாரம் செய்யவோ உரிமை இல்லையா? தனது ஜனநாயகக் கடமையைச் செய்த அந்தக் கலைஞனை ஆளும் கட்சி அரசியலுக்குச் சாதகமாகச் செயல்படவில்லை என்ற காரணத்துக்காக ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஒதுக்கி வைத்தது எந்த வகையில் நியாயம்?

சின்னக் குழந்தை முதல் வயதான முதியோர் வரையில், ஆண் - பெண் பேதமின்றி விரும்பி ரசித்த அந்தக் கலைஞனின் எழுச்சி நமக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தந்தது. அவரின் இந்த வீழ்ச்சி அவரோடு முரண்பட்ட சிங்கமுத்துவுக்குக்கூட சந்தோசத்தைத் தந்திருக்காது என்றே நம்புவோம். இந்தக் கால அவகாசம் அவருக்கு ஒரு நிதானத்தையும், பலவகையில் பாடங்களையும் கற்றுத் தந்திருக்கும். அந்த அனுபவ வெளிச்சத்தில் வடிவேலுவின் மறு நுழைவு அழுத்தமாகவும், வீரியத்தோடும் அரங்கேறட்டும். மறுபடியும் தமிழகம் மனம்விட்டுக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்து மகிழட்டும்.

- சோழ.நாகராஜன்

Pin It

balumahindraதமிழ்த்திரையின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளரும், சிறந்த இயக்குநருமான பாலுமகேந்திரா அவர்கள் 13.2.2014 அன்று மூச்சு திணறல் காரணமாக மரணமடைந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகம் மட்டுமின்றி தமிழின உணர்வாளர்களும் அவரது திரைப்பட்டறையில் குழுமியிருந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

பாலுமகேந்திரா அவர்கள், ஒளியால் தமிழ்த் திரைக்கு புதிய வெளிச்சமேற்றிய படைப்பாளி. சமகாலத் தமிழர் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர்.

தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றிய தோடு மட்டுமின்றி தனக்கென ஒரு உத்தியை கையாண்டு தமிழ்த் திரையுலகில் தனியிடம் பெற்றவர்.

1939 மே 19 ஆம் நாள் இலங்கையில் மட்டக்களப்பு அருகிலுள்ள அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர்.பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா.அவரது தந்தை பாலநாதன். கணித ஆசிரியர், கல்லூரி அதிபர்.

பாலுமகேந்திரா இலண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்து புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்றார். 1971இல் ஒளிப்பதிவுக் கலையில் தங்கப் பதக்கம் பெற்றார்.

திரைப்பட வாழ்க்கை :

அவரது பட்டயப்படிப்புக்காக தயார் செய்த திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' என்ற படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972 இல் சிறந்த ஒளிப்பதிவுக் கான கேரள மாநில விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

கே. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணி முடக்கு' போன்ற படங்களிலும், தெலுங்கில் புகழ்ப் பெற்ற சங்கராபரணம் என்ற படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தார்.

இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித் துவம். ஆதலால் தமிழ்த் திரையுலகம் இவரை கேமரா கவிஞர் என்று கொண்டாடியது. முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்கு னராக மாறினார். இவரது திரைப்படத்தில் விரியும் இயற்கையும் சித றும் ஒளியும் தனித் துவமானவையாகும்.

1977இல் பாலு மகேந்திராவின் முதல் படமான 'கோகிலா' என்ற படத்தை கன்னட மொழியில் இயக்கினார். இவர் ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977இல் வெளியா னது. 1978இல் தமிழில் இவரது முதல் படமான 'அழியாத கோலங் கள்' வெளியாகி வெற்றிபெற்றது.

இயக்குநர் மகேந்திரனின் முள்ளும் மலரும் உள்ளிட்ட பல படங் களுக்கு ஒளிப் பதிவு செய்தார் 15 படங்களுக்கு மேல் இயக்கினார். வீடு, சந்தியாராகம், தலைமுறை உள் ளிட்ட படங்கள் மறக்க முடியா தவைகள். ஓவியர் வீரசந்தானத்தை சந்தியா ராகம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி னார் பாலுமகேந்திரா. சிறந்த படைப்புக்கான விருதை பெற்றது சந்தியாராகம்.

நுண்ணுணர்வும் படைப்பாற்றலும்

படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுகிறார் "ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத் தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடயங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப் படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக் கொண்டிருக் கும். ஏனெனில் நீ அதிகம் எதிர் வினை புரிபவனாய் இருப்பாய்.

அதே போல் நல்ல படைப்பென்பது, பார்ப்பவரையும், கேட்ப வரையும் நெகிழ வைக்க வேண்டும். தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இரு நாட்களாவது உறக்கத்தை கெடுக்க வேண்டும், அது தான், நல்ல படைப்பு. மக்களை சார்ந்த கதைகள்தான் அவர்களிடத்தில் எளிதாய் போய்ச் சேரும். யார் தலையீடும் இல்லாமல், எந்த இடையூறுக்கும் இடமளிக்காமல், இயக்குநர் வழிகளில் விட்டால், அந்த சினிமா, நிச்சயம் வெற்றி பெறும்’’ என்கிறார்.

விருதுகள் :

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலுமகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம், வண்ணவண்ணபூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந் தாராம் விருதுபெற்றது. இம் மூன்று துறைகளிலும் விருது பெற்ற ஒரே திரைப்பட கலைஞர் பாலுமகேந் திரா அவர்கள்.

அரசியல் :

இவர் சின்னஞ்சிறு வயதிலேயே இவர் ஊரில் (இலங்கை) இனக் கல வரம் தொடங்கி விட்டது. சிங்களர் களால் தமிழர்கள் ஒடுக்கப்பட்ட னர். அதையெல்லாம் இவர் சிறு வயதிலேயே அறிந்தவர். உணர்ச்சிக் பாவலர் காசிஆனந்தனும், இயக்கு நர் பாலுமகேந்திராவும் இலங்கை மட்டக்களப்பில் இருந்த போது பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். அதோடு மட்டுமன்றி சிறுவயதி லிருந்தே இருவரும் இணைபிரியா நண்பர்கள். கல்லூரி யில் இருவரும் ஒன்றாகத் தான் படித்தவர்கள். இலங்கையில் இருந்த காலங்களில் “தேனருவி’’ என்ற மாதழ் இதழை தொடங்கி இலக்கி யப் பணியாற் றியவர்.

அய்யா காசிஆனந்தன் சொல் வார் “நானும் பாலுமகேந்திராவும் எங்கள் ஊரில் இனக்கலவரம் பெரிதாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் எங்கள் வீட்டிலிருந்து நான் சைக்கிளை எடுத்துகொண்டு வருவேன், நான் ஓட்டுவேன் பின் இருக்கையில் பாலு மகேந்திரா இருப்பார். இருவரும் அப்படித்தான் ஒருநாள் சைக்கிளிலேயே சென்று இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடக்கூடாது, கொடியேற் றக்கூடாது என்று புறக்கணிப்புப் போராட்டம் செய்தோம். அப் போது ஒரு கல்லூரி மட்டும் கல்லூரி திறந்து கொடியேற்றிருந் தது. இதை அறிந்த நானும் பாலுவும் சைக்கிளில் சென்றோம் பாலு மகேந்திரா சைக்கிளில் இருந்து கொண்டே கல்லூரியை நோக்கி கை குண்டை வீசினார் கல்லூரி சேதமடைந்து பலர் படுகாயம் அடைந்தனர். அதைப் பற்றி நாங் கள் கவலை படவில்லை.’’ என்றார்.

இலங்கையில் பிறந்த தமிழர் பாலு மகேந்திரா என்றாலும் அவர் ஈழப்பிரச்னை பற்றி எதையும் அவர் தன் படைப்புகளில் பதிவு செய்ய வில்லையே என்ற விமர்சனம் நமக்கு உண்டு. அதற்கு பாலு மகேந் திரா சொன்ன பதில்... பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு. ஆனால், அதிகபட்ச நேர்மையுடன் சொல்லப்பட வேண்டிய விடயம் இது. வியாபாரத்தைத் தாண்டியது. படைப்பாளிகள் தயார் தான். அப்படி ஒரு படத்தை தாங்கும் தயாரிப்பாளர் எங்கே என்றார்.

ஆனாலும் இனக்கொடுமை யிருந்து மீள இன உணர்ச்சியாள ராய் இருந்தார். நான் ஒருமுறை சந்தித்து பேசுகிற போது அவர் சொன்னார் “நம்பிக்கையோடு இருப்போம். தன்னம் பிக்கை ஒளிதான் ஒருநாள் விடியலை தரும் என்றார்.

சினிமா என்பது நம் வாழ்வியல் ஒவ்வொன்றோடும் ஒவ்வொரு புள்ளியிலும் இணைந்துதான் செயல்படுகிறது. பாடல்கள், ஓவியங்கள், பேச்சுமொழி, இவை அனைத்துமே ஒன்றோடொன்று இணைந்தே செயல்படுகிறது. மொழியில்லாமல் சினிமா இல்லை.

பாலுமகேந்திரா அவர்கள் பல மேடைகள் தொடர்ந்து ஒரு கருத்தை பதிவு செய்வார் .

அதாவது தமிழ் படைப்புகளை பாதுகாத்து வைக்ககூடிய சேமிப் பகம் எதுவுமே நம்மிடம் இல்லை. நான் நேரடியாக பாதிக்கப்பட்ட வன். என் "வீடு, சந்தியா ராகம்" ஆகிய படங்களின் நகல் என்னிடம் இல்லை. நான் என்ன செய்ய முடியும். புனே சேமிப்பகத்தை பி.கே. நாயர் என்பர் உருவாக்கினார். ஆனால் இங்கு இல்லை.

“நம் அன்றாட வாழ்வினில் அரசியல் என்பது முற்று முழுதாய் பதிந்து போயுள்ளது. ஒரு நடிகனின் பேச்சு ஒரு அரசியல் விளைவையே மாற்றிப் போட்டது. சினிமா என் பது என்ன? அது என்ன கெட்ட வார்த்தையா? இல்லை. அதுஒரு அழகிய வார்த்தை. நாம்தான் அதை கெட்டதாக்கி வைத்திருக்கிறோம். நல்ல சினிமா வேண்டும் என்றும், நல்ல சினிமா பார்க்க வேண்டு மென்றும் ஆசைப்படுகிறோம். ஆனால் அதற்காக நாம் என்ன செய்யவேண்டும் என்பது நமக்கு புரியவில்லை. சினிமாவை பள்ளிகளில் பயிற்றுவியுங்கள் என்றால் என்ன அர்த்தம்? நான் சினிமா எடுக்க கற்றுத்தர சொல்கிறேனா? இல்லவே இல்லை.

சினிமா ரசனை என்றால் என்ன வென்பதை அறிமுகப் படுத்துங்கள். அதைத்தான் வேண்டுகிறேன். நச்சு சினிமா என்றால் என்ன? நல்ல சினிமா என்றால் என்னவென்பதை அப்பொழுது தான் அவர்களால் புரிந்துகொள்ள முடியும். சினிமா நயம் என்பது முக்கியம். நான் படம் பார்க்க சுமார் 30 மைல் வரை போனதாய் ஞாபகம். ஆனால் இப்போது சிடிசன் கேன் என்ற திரைப்படம் வெறும் காய்கறி களுக்கு மத்தியில் ஒரு சுமாரான பல்பொருள் அங்காடியில் கிடைக் கிறது. எவ்வளவு ஆரோக்கியமா னது இந்த விடயம். சினிமாவின் மொழியையும், அதன் இலக்கியத் தையும் என்னால் கற்றுத் தரமுடி யும் என் மாணவர்களுக்கு. நீ என் னருகில் இருக்கும் வரையும் தான் என்னால் கற்றுத்தர முடியும். நீ என்னருகில் இருக்கும் வரை நல்ல சினிமாவுக்கான பாதையை நோக்கி உந்தி தள்ளுவேன்.

நீ ஒரு படைப்பை உருவாக்கு கிறாய் நான் சில வேளைகளில் உனக்கு முத்தமும் தரலாம், செருப் பாலும் அடிக்கலாம். என்னிடம் நீ இருக்கும் வரை நல்ல சினிமாவுக் கான நமது பயணம் தொடரும். நான் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்போது நான் கற்றுக் கொள்கிறேன். என்னை புதுப்பித் துக் கொள்கிறேன்.’’என்கிறார் பாலு.

இலக்கியம் எப்படி சினிமாவாய் மாறுகிறது. அது ஆத்மாவா? இல்லை உருவமா? சிறுகதை என் னுள் ஏற்படுத்திய அதிர்வு ஆத் மாவா? உருவமா?. அழிவது உடல் தான். ஆனால் ஆத்மா பிறந்து கொண்டே இருக்கும். ஒரு பிறவி யில் சிறுகதையாய் இருப்பது, அடுத்த பிறவியில் குறும்படமாய் மாறுகிறது. ஒரு பிறவியில் பாட்டி யின் கழுத்தில் இருக்ககூடிய காசு மாலை அடுத்த பிறவியில் அவளின் பேத்தியின் கழுத்தில் புதிய வகை நெக்ளசாக இருக்கிறது. ஆனால் தங்கம் அதே தங்கம்தான். வடிவம் மட்டும்தான் மாறுகிறது.

நவீன தமிழ் இலக்கியத்தை நான் மதிக்கிறேன். தமிழ் ஆளுமையை மதிக்கிறேன். நீ எழுதும் ஒரு வரியை நான் படமாக்க எனக்கு மூன்று சீகுன்ஸ் தேவைப்படலாம். நீ பக்கம் பக்கமாக எழுதிய ஒரு காட்சியை நான் ஒரு ஷாடில் படமாக்கலாம். சினிமா மொழி வேறு, தமிழ் மொழி வேறு என்பதில்லை நம் மொழியின் ஆளுமையை காட்சி வடிவில் சொல்லுகிறபோது இன்னும் அது கூடுதலாய் சென்றடையும் என்கிறேன்..

மேற்குறிப்பிட்ட கருத்தின் சாரத் தோடுதான் இயக்குநர் பாலுமகேந்திரா பல மேடைகளில் தன் கருத்தை பதிவு செய்வார்.

தமிழின உரிமை சார்ந்த அரங் கக் கூட்டங்கள், நூல்கள் வெளியீடு, குறுப்பட இயக்குநர்களை ஊக்கப் படுத்தும் நிகழ்வு என பலவற்றில் பங்கேற்று தன் இன வழிப்பட்ட கருத்தியலை பதிவு செய்திருக் கிறார்.. இவரது இறுதிப்படமான “தலை முறை’’ தனது இறுதி கனவை செதுக்கி வைத்தது போல இருந்தது. மொழி ஒரு இனத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததென்பதை மிக ஆழமாக சொல்லப்பட்ட படம் அது!. தமிழை யாரும் மறந்து விடாதீர்கள்! என அவரே கதாப்பாத்திரம் ஏற்று தமிழினத்திற்காக அறைகூவல் விட்டுச் சென்ற படம் ”தலைமுறை’’ யாகும்.

ஒரு படைப்பாளி அடுத்த தலை முறையை உருவாக்கிச் சென்றிருக்கி றார் என்றால் அது பாலுமகேந்திரா தான் என்றால் அது மிகை யாகது. தனது திரைப்பட்டறை பயிற்சி முகாமிலிருந்து தமிழ்த் திரை உலகிற்கு எண்ணற்ற படைப் பாளிகளை உருவாக்கித் தந்து விட்டு சென்றிருக்கிறார். அவர் உரு வாக்கிய படைப்பாளிகள் (பாலா, சீனு இராமசாமி, வெற்றிமாறன் உள்ளிட்ட பலர்) இன்று தமிழ்ச் சமூகம் சார்ந்த நல்லப் படைப்புகளை வெளிக்கொணர்கின்றனர்.

செல்லுலாய்டு பிம்பம் இம் மண்ணில் இருக்கும் வரை பாலு மகேந்திரா எனும் ஒளி அணை யாமல் இருந்து கொண்டே தான் இருக்கும்.. புதிய ஒளியை செதுக்கிய உளியாக இருந்த பாலுமகேந்திராவின் மறைவு தமிழினத்திற்கும், திரைத்துறைக்கும் ஓர் பேரிழப் பாகும். படைப்பாளிகள் மறைவ தில்லை. தனது கனவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

(தமிழர் கண்ணோட்டம் மார்ச் 1, 2014 இதழில் வெளியானது)

Pin It