எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் கோடை வெயில் கொதிக்கும் வெயிலாக சுட்டு எரித்துக்கொண்டு இருக்கிறது.

108 டிகிரியைத் தாண்டியும், வெப்பம் அலை அலையாய் இருப்பதைப் பார்க்கிறோம்.

உண்மையில் இந்தக் கொடும் வெப்பத்தைக் கூட தாங்கித் தற்காத்துக் கொள்ளலாம்.

ஆனால் பிரதமர் என்ற நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் மோடியின் வாயில் இருந்து வரும் வெப்ப அலைப் பேச்சைத் தான் தாங்கிக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், காங்கிரஸ் இடஒதுக்கீட்டை ஒழித்து விடும் என்கிறார் மோடி.

தொடக்கத்தில் இருந்தே இடஒதுக்கீடுக்கு எதிராகச் செயல்படும் அரசு பா. ஜ.கவின் மோடி அரசுதான் என்பதை மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.

இப்பொழுது தேர்தல் பிரச்சாரங்களில் முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடிக்கு காங்கிரஸ் ஆட்சியில்தான் ஓபிசி யினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தார்கள் என்பது தெரியாதா?

இரண்டு மாடுகள் வைத்திருந்தால் அதில் ஒன்றைப் பிடுங்கி ஊடுருவி வந்த (முஸ்லிம்களுக்கு) காங்கிரஸ் கொடுத்து விடுமாம்! சொத்து உள்ளவர்களிடம் இருந்து பாதி சொத்தைப் பிடுங்கி அவர்களுக்குக் கொடுத்து விடுவார்களாம்!

இதுபோன்ற மலிவான, மதவாத, பிரிவினை, வெறுப்புணர்வுப் பேச்சுகள் ஒரு பிரதமரிடம் இருந்து வரலாமா?

கடந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் மக்களுக்கு என்பதைப் பேசாமல், போகிற இடங்களில் எல்லாம் பொய்களையும், பிரிவினை, வெறுப்பு வாதங்களையும் பேசிக்கொண்டு இருபது பிரதமர் என்ற பதவிக்கு அழகல்ல.

'நுணலும் தன் வாயால் கெடும்' என்று சொல்வதைப் போல, மோடியும் தன் வாயால் மதிப்பை இழந்து கொண்டு வருகிறார்.

குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் மோடியின் செல்வாக்கு வீழ்ச்சி அடைவதால், மக்கள் அங்கு பா.ஜ.கவுக்கு எதிராகத் திரள்வதால் தோல்வி பயத்தின் உச்சிக்குப் போய்விட்டார் மோடி என்பதன் அடையாளம், மோடியின் அனல் நிறைந்த வெப்ப அலைப் பேச்சில் இருந்து தெரிய வருகிறது.

ஜூன் 4, வரலாறு மாறும். பா.ஜ.கவின் அனல் பேச்சும் சரியும், ஆட்சியும் வீழும்.

இந்தியா கூட்டணியின் ஆட்சி அன்று உதயமாகும்!

- கருஞ்சட்டைத் தமிழர்