aabavananஆறுமுகம் பாவையம்மாள் - அப்பா பெயரின் முதல் எழுத்தையும்.. அம்மா பெயரின் முதல் எழுத்தையும் எடுத்து தன் மதிவாணன் என்ற பெயரை 'ஆபா'வாணன் என்று மாற்றிக் கொண்டவர் "ஆபாவாணன்" என்ற சினிமா சிற்பி.

மூன்றாவதோ நான்காவதோ படிக்கையில்..."செந்தூரப்பூவே" பார்த்து விட்டு இன்னதென தெரியாமல் அந்த படத்தின் கதையை நண்பர்களிடம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

பிற்காலத்தில்... அந்த படம் எனக்குள் நிகழ்த்திய நிரம்பலை எத்தனையோ முறை எழுதி இருக்கிறேன். இம்முறை அதன் பிரம்மா ஆபாவாணனைப் பற்றி... எழுதத் தூண்டியது சமீபத்தில் மீண்டும் பார்த்த "கருப்பு ரோஜா" படம்.

பெரிய பெரிய ஜாம்பவான்கள் மிரட்டிக் கொண்டிருந்த சமயத்தில்.. சத்தமே இல்லாமல்.. ஒரு இளைஞர் கூட்டம் திரைப்படக் கல்லூரியில் இருந்து வெளி வந்து என்னவோ செய்தது. அது இதுவரை இருந்த மாதிரி இல்லை. வேறொன்றாக இருந்தது. சத்தம்... சண்டை.. பாட்டு... என திரை வடிவமே வேறு மாதிரி இருந்தது. முக்கியமாக படத்தின் முக்கியமான காட்சிகளில் அமைதி இருந்தது.

சைலன்ஸ். அது ஏற்படுத்தும்... கிளர்ச்சி... படம் பார்ப்பவனை இன்னும் கூர்ந்து உள்ளிழுத்து விடும் நுட்பம் வாய்ந்ததாக இருந்தது.

"ஊமை விழிகள்" படம் தான் இவர்களின் முதல் படம்.

இந்தப் படம் தமிழ் சினிமாவின் ரசனையை... இன்னொரு படி உயர்த்தியது. இந்த சினிமா இதுவரை பார்த்த சினிமா மாதிரி இல்லை. இது வேறொன்றாக இருந்தது.

படத்தின் முதல் காட்சிலேயே பாட்டு. அதுவே புதிதாக இருந்தது. படத்தில் ஏகப்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள். படம் நீளம் என்றாலும். சலிப்பு தட்டாத திரைக்கதை. முதல் முறையாக அதுவரை அழகான ஹீரோவாக இருந்த ரவிச்சந்திரனை வில்லனாக்கி... இடைவேளை சமயத்தில் விஜயகாந்த் என்ற தூண் கதையைத் தாங்கி பிடித்து இறுதிக் காட்சிக்கு கொண்டு செல்லுமாறு நகரும் திரைக்கதை... திக் திக் சினிமா வகையறாக்களின் முன்னோடி.

இடையே "மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா" என்று நம்ம 'நவரச நாயகன்' வருகிறார். இன்றுவரை துவளும் போதெல்லாம் நிமிர செய்யும் "தோல்வி நிலையென நினைத்தால்... மனிதன் வாழ்வை நினைக்கலாமா..." பாடல் ஜெய்சங்கர்க்கு.

அறிமுக அருண்பாண்டியன் காதல். சந்திரசேகரின் பத்திரிகை வேலை...என்று திரைக்கதை பின்னலில் திகில் திருப்பங்களாக அரங்கேறும் பீச் ரிசார்ட் கொலைகள்.

அந்த கிழவியின் கண்களை சிறுவயதில் கண்டு மிரண்ட கதையெல்லாம் இன்னொரு கட்டுரைக்கானது.

இசை வழக்கம் போல அவரா என்றால்... இல்லை. புதிதாக ஒருவர். இல்லை இருவர். மனோஜ் கியான் என்ற இரட்டையர்கள். மிரட்டி விட்ட ஊமை விழிகள் படத்தின் பாடல்கள் இன்றும் உற்சாகம் தொற்றும் சந்தம் கொண்டவை. குதிரை கால்கள் மண்ணில் உதைத்துக் கொண்டு ஓட தயாராகும் போது உள்ளூர நமக்கு கிர் கிர் என்று எதுவோ செய்யும். அந்த அற்புதம் தான் மனோஜ் கியானின் படைப்புகள்.

அநேகமான ஆபாவாணன்... அவர் படங்களில் பாடல்களையும் அவரே தான் எழுதி இருக்கிறார். இசையிலும் அவரின் பங்கு இருந்திருக்கிறது.

அடுத்து அதே விஜயகாந்தை இரட்டை வேடத்தில் வைத்து "உழவன் மகன்" என்று ஒரு படம். விஜயகாந்த் அவர்களுக்கு அடுத்த ரவுண்டுக்கான அடித்தளம் என்று தான் நினைக்கிறேன். அதில் வந்த ரேக்ளா ரேஸ்... இன்றும் இன்னொரு முறை சிஜி இல்லாமல் படமாக்க முடியுமா என்று தெரியவில்லை. நிஜ ரேக்ளா ரேஸ்- ஐ நிகழ்த்தி காட்டியதில் ஆபாவாணன் என்ற கிரியேட்டர் தனக்கே உண்டான தனித்த சத்தத்தை தமிழ் சினிமாவில் நடத்திக் காட்டினார் என்று தான் சொல்ல வேண்டும்.

"செம்மறி ஆடே... செம்மறி ஆடே... செய்வது சரியா சொல்..." உட்பட எல்லா பாடல்களுமே தனித்த ரகம்... தனித்த ராகம்.

சிறுபிள்ளை வெள்ளாமையும் வீடு வந்து சேரும்... இன்னமும் புது புது கற்பிதங்களோடு... என்று தன் பிலிம் இன்ஸ்டிடியூட் நண்பர்களைக் கொண்டு அடுத்து எடுத்த படம் தான் "செந்தூரப் பூவே.

படம் ஆரம்பித்த இரண்டாவது காட்சியிலேயே ரயில் வருகிறது. ரயிலிலிருந்து இறங்கிய விஜயகாந்த் தொங்கும் சால்வையை எடுத்து தோளில் போட்டபடியே திரும்புவார்.

கேமரா அவரை நோக்கி வேகமாய் சென்று அவர் மிட்- டில் நிற்கும். அப்போது வரும் BGM ஏற்படுத்தும் அதிர்வுக்கு சொற்கள் இல்லை. அதே சமயத்தில்... காட்டுக்குள் இருந்து ராம்கி நிரோஷா ஜோடி.. ஓடி வருகிறது. அதன் பிறகு... பின்னால் வரும் அடியாட்கள் என்று ஒரு படத்தை இடையில் இருந்து ஆரம்பிக்கும் யுத்தி... அபாரம்.

சற்று நேரத்தில் புறப்பட போகும் அந்த ரயிலில் ஏறி அமர்ந்து அமைதியாய் ஒருவரையொருவர் பார்த்து கொள்ளும் பயந்த பார்வைக்கு பின்னணி இசை வெறும் அமைதி மட்டும்தான். அந்த ரயில்வே ஸ்டேசனில் நிலவும் அமைதி அடுத்து நிகழ இருக்கும் களேபரத்தை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும்.

இன்னொரு ட்ரேக்கில் நிற்கும் விஜயகாந்துக்கு எப்போதும் வரும் தலைவலி வந்து விட... ஜூட்... அங்கு ஆரம்பிக்கும் கதையின் ஓட்டம்... அதன் பிறகு... நம்மையும் கதைக்குள் இழுத்து சென்று விடும் திரைக்கதை முடிச்சு... அட்டகாசமாய் தன்னை நிகழ்த்திக் கொள்ளும். படத்தின் இடைவேளை அருவி சண்டைக்காட்சி... சந்திரசேகர் என்ட்ரி... இறுதி ரயில் சண்டைக்காட்சி அதன் சப்தங்கள்... ஒலிகள்... அதுவே தனி எபிசோட்.

விஜயகாந்த் என்ற ரட்சகன் என்ன மாதிரி சண்டை போடுகிறார்..!

தண்ணீருக்குள் விழுவது... நீந்துவது.. ரயில் மேல் உருளுவது... நடந்து ஓடுவது... சண்டையிடுவது... ரயிலடியில் கீழே விழுந்து புரளுவது... உதைத்துக் கொண்டே கீழே விழுந்து எழுவது... அதுவும்... இறுதிக் காட்சியில்.. "கே...ப்ப்ப்டன்..." என்று இவர்கள் ரயிலில் இருந்து கத்த... தூரத்தில் காட்டுக்குள் சண்டையிட்டுக் கொண்டே ஓடி வரும் கேப்டனை எத்தனை வியந்தாலும் தகும்.

ராம்கி என்ற அற்புதமான அழகான நடிகனை இன்னும் ஆழமாய் மக்களிடம் கொண்டு சேர்த்த படம். சண்டைக் காட்சியில் அவரின் உடல்மொழியும்... அடி தூள் வகையறா. ஒவ்வொரு பாட்டிலும்... ஒவ்வொரு அற்புதம் நிகழும். அதே மனோஜ் கியான்... கூட்டணி.

அடுத்த "இணைந்த கைகள்" என்ற தமிழில் வந்த ஹாலிவுட் சினிமா. அன்றைய காலகட்டத்தில் அது அத்தகைய பிரமிப்பை ஏற்படுத்தியது. தன்னோடு படித்த நண்பர்கள் அதே அருண் பாண்டியன் ராம்கியை ஹீரோக்களாக்கி எடுத்த அசுர படைப்பு. அமர்க்களப்படுத்திய ஒவ்வொரு பாடலையும் வெகு நேர்த்தியாக இடையே வைத்து... ஒரு சாகசக் கதையை விருந்தாக்கி இருந்தார்கள்.

இடைவேளைக் காட்சி... இன்னமும்... சிறப்பு வாய்ந்த காட்சி தான். அப்போதெல்லாம் அப்படி ஒரு காட்சி ஆங்கில படங்களில் தானே வரும். அதை நம்மூர் சினிமாவிலும்... நடத்திய ஆபாவாணன் டீமை அன்னாந்து தான் பார்க்க வேண்டும்.

இப்போது அதே படத்தை "விஷால் - ஷாம்" ஐ வைத்து ரிமேக் செய்யலாம். இப்போது இருக்கும் தொழில் நுட்பம்... மிரட்டி எடுக்கும்.

அடுத்து ஆபாவாணன் டீம் திகிலடிக்க வைத்த படம் "கருப்பு ரோஜா"

பொதுவாக சினிமாவில் அதிகம் தொடாத 'ப்ளேக் மேஜிக்' சப்ஜக்ட்டை இந்த படத்தில் தொட்டிருப்பார்கள். அதிலும் இடைவேளையில் தான் கதைநாயகன் என்ட்ரி. DTS என்னும் ஒலி வடிவம் இந்த படத்தில் தான் அறிமுகம்... என்று நினைக்கிறேன்.

அந்த ராட்சச மின்விசிறி சுற்றிக் கொண்டே வந்து அந்த பியூன் கழுத்தை வெட்டும் காட்சியில்... சருகும் குப்பைகளும்... ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் என்று காற்றில் சுழல... கொலை வெறியுடன்... நோக்கு வர்மத்தில் நிகழ்த்தும் முதல் பலி... நம் இதயத் துடிப்பை எகிற வைக்கும் முதல் புள்ளி.

நோக்கு வர்மம்... மெஸ்மரிசம்... நரபலி என்று கதையின் போக்கு மானுட சமூகத்தின் மனோ நிலையின் இருள் பக்கத்தை தொட முனைந்திருக்கும்.

"தொட்டு விட நான் தொட்டு விடத் தான் இந்த பட்டு உடல் பூ பூக்கும்....." போட்டு தாக்கும் பாடல். இந்த படத்துக்கு இசை MSV - ன் மகன் என்று விக்கிபீடியா சொல்கிறது.

வழக்கமாக இருக்கும் ஒன்றில் இருந்து மாறுபட்டு... இப்படி பத்தே வருடங்களில் புது புது முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறது ஆபாவாணன் டீம். அதன் பிறகு ஏன் படம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை. இடையே சில படங்கள் விஜயகாந்தை வைத்து எடுத்த 'காவியத் தலைவன்' உட்பட சரியாக போகவில்லை என்று தெரிகிறது.

ஆனால்... மேற் சொன்ன முக்கிய படங்களில்... இசையும் காட்சி அமைப்பும்.. திரைக்கதையும்... புதிதாக தேடுவோருக்கு பிடிக்கும் விதமாக இருந்திருக்கிறது. சவுண்டு தொழில் நுட்பத்தில்.. அதுவரை பார்த்த படங்களில் இருந்த சண்டை காட்சிகள் போல் இல்லை. ஒவ்வொரு அடிக்கும் ச்சக்... ச்சக்....ச்சக்... என்று வித்தியாசமான சத்தம் தந்து... இடை இடையே ஸ்லோமோஷனில் காட்சியை நகர்த்தி... அடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே... BGM ஏற்றி காட்சியின் வேகத்தை இன்னும் அதிகப் படுத்தும் யுக்தியை... துல்லியத்தை முயற்சித்திருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்று தான் நம்புகிறேன்.

"இணைந்த கைகள்" படத்தில் பாலத்தின் மீது அருண் பாண்டியன் போடும் சண்டையில் ஆடுகளின் சத்தம்.. அருவியின் சத்தம்... அடி வாங்குவோரின் "க்கஹா.... க்கஹா" சத்தம்... எல்லாமே எக்கோவில்... ஸ்லோமோஷனில் கேட்கும் துல்லியம்... இடைவேளை காட்சியில்... ராம்கி மலையைக் கடக்க முயற்சிக்கையில் அங்கே நிலவும் அமைதி சத்தம்.. காக்கா குருவிகளின் தனித்த சப்தம்... அருவி சத்தம்... மலைகளில் திறந்து கிடக்கும் மாய சத்தம்... ரயிலின் தூர சத்தம்... குதிரைகளின் குளம்படி சத்தம்... ரேக்ளா ரேஸில் ஓடும் காளைகளின் குளம்படி சத்தம்... வண்டிச் சக்கரத்தின் சத்தம்... மாட்டுக் கழுத்தில் ஆடும் மணிச் சத்தம் என்று ஆபாவாணன் படங்கள் சத்தங்களால் நிறைந்தவை. அந்தச் சத்தங்கள் இன்னமும் நம் சினிமா செவிகளில் மிக நெருக்கமாக கதை சொல்வது தான் அவரது வெற்றி.

லாஜிக் மீறல்கள் இல்லாமல் இல்லை. இருந்தாலும்... மேஜிக் செய்யும்... சினிமாக்கள் இவருடையன. மறுபடியும்... அவர் படம் எடுக்கலாம். இல்லை என்றால்... மறுபடியும்... பார்க்க இருக்கவே இருக்கிறது... செந்தூரப்பூவே என்ற இணைந்த கைகள் என்ற ஊமை விழிகள் என்ற... அழியா சத்தங்களின் அதிரூப அற்புதங்கள்.

- கவிஜி

Pin It