'னவுகள் இல்லையென்றால் பூமியில் தற்கொலை என்பது தடுக்க முடியாத செயலாகி விடும்' என்று என்றோ எழுதிய கவிதை, திரைத்துறைக்கு பொருத்தமாகவே இருக்கிறது.

Ashok kumar producerகனவுலகமான சினிமாவில் எத்தனை தற்கொலைகள்... காதல், வீரம், சோகம், துரோகம் என அத்தனை மசாலாவும் நிறைந்த சினிமா உலகில் ரயில் வண்டியின் தண்டவாளம் போல நீண்டு கொண்டேயிருப்பது தற்கொலைகள் மட்டுமே.

இயக்குநர் சசிகுமாரின் உறவினரான தயாரிப்பாளர் அசோக்குமார், அதற்கு முன்பு இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரர் ஜி.வி என்ற வெங்கடேஸ்வரன் ஆகியோரின் தற்கொலையைத் தொடர்ந்தே உறைந்து கிடந்த தமிழ் திரையுலகத்தின் உதடுகள் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளன. இந்த இரண்டு சாவுகளுக்கும் காரணம் கந்துவட்டி அன்புச்செழியன் என்றுகுற்றச்சாட்டுகள் எழுந்தும் அக்குற்றச்சாட்டுக்கள் வழக்காகி விடவில்லை.

திடீர் தயாரிப்பாளர்
---------------------------

 என்ற ரூபம் கொண்டபோதே, அத்தனை நியாய, தர்மங்களும் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டன.

ரெடிமேட் புளியோதரை போல நான்கு படங்களில் நடித்தவுடனே சொந்த தயாரிப்பு கம்பெனியை அவரது மேனேஜர் பெயரில் பினாமியாக துவங்கும் கதாநாயகன்கள் உருவாகியுள்ள தமிழ் சினிமாவில், அப்படத்திற்கு பணம் முதலீடு செய்யப்போகிறவர்கள் யார் என்ற கேள்வியை திரையுலகம் இன்றுவரை எழுப்பியிருக்கிறதா?

அறிமுகமான படத்தில் இருந்து 4 படங்களிலேயே ஒரு திரைப்படத்தை எடுக்க குறைந்தது 5 கோடி ரூபாயை அந்த நடிகர் சம்பாதித்திருப்பாரா என்ற கேள்வியை இதுவரையும் யாரும் கேட்க தயாரில்லை. வருமான வரித்துறையினரும் அவர்களை நோண்டி நொங்கெடுப்பதில்லை. இதற்கு பின் உள்ள மாயஉலகம் பணத்தால் கட்டமைக்கப்பட்டது. அதற்கு மேனேஜர்கள் அல்ல... அன்புச்செழியன்களே தேவைப்படுகிறார்கள்.

ஏனெனில் லாபம் தரும் தொழிலாய் சினிமா இல்லை என்பது வங்கிகளுக்குத் தெரியும். ஒரு காலத்தில் படம் போட்டவுடன் இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனுக்கு நன்றி கார்டு போடாத திரைப்படமே இல்லை. ஆனால், இன்று எவ்வளவு பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தாலும் 4 நாட்களுக்கு மேல் ஓடுவதில்லை. அப்படி ஓடினாலும்,அப்படத்தின் இயக்குநர், நடிகர்களுக்காக அப்படத்தின் திரைவிநியோகம் திரைமறைவில் சென்று விடுகிறது.

பிழைப்புவாதிகள்
-------------------------
மணிரத்னத்தின் சகோதரர் தற்கொலை செய்து கொண்ட போது இதே போல கந்துவட்டிக்கு எதிராக பொங்கிய சூப்பர்ஸ்டார், கலைஞானி உள்ளிட்டவர்கள், அதற்கு பின் எத்தனையோ நடிகை, நடிகைகள் தற்கொலை செய்து கொண்ட போதும் பொங்கவில்லை.

அசோக்குமார் தற்கொலையில் என்ன பேசினார்களோ, அதையே தான் வெங்கடேஸ்வரனின் மரணத்தின் போதும் அவர்கள் பேசினார்கள். அதன் பின் அவர்கள் பிழைப்பைப் பார்க்க போய் விட்டார்கள்.

அவர்களுக்கு உண்மை தெரியும். ஏனெனில் காவல்துறை, அரசியல்வாதிகளின் கூட்டுத் தொடர்பில் உள்ள கந்துவட்டி முதலைகளை தூண்டில் போட்டு ஒரு போதும் பிடித்திட முடியாது.

இந்த கட்டுரை கந்துவட்டி பற்றியோ, அன்புச்செழியனைப் பற்றியோ எழுதப்பட்டதல்ல.

நூற்றாண்டு கொண்டாடிய தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிகழும் தற்கொலைகளைப் பற்றித் தான். இத்தனை தற்கொலைகள் நடந்தும் நடிகர் சங்கமோ, தயாரிப்பாளர் சங்கமோ, தொழிலாளர் சங்கமோ ஏன் இதுவரை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லையென்ற கேள்வியை முன்வைத்து எழுதப்பட்டது தான்.

தற்கொலை முடிவு சரியா?

--------------------------------------

ஒருவரின் தனிப்பட்ட தற்கொலைக்கு இவர்கள் எப்படி பொறுப்பேற்க முடியும் என்ற கேள்வி இயல்பாக எழும். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தற்கொலை செய்து கொண்டால், நாளிதழ்களில் 2 காலமோ, சிங்கிள் காலமாகவோ செய்தியாக வரும். ஆனால், சினிமா பிரபலங்களில் தற்கொலை அப்படியல்லவே. அவர் ஏன் செத்தார், எதற்கு செத்தார் என்ற பல நாட்கள், ஏன் பல ஆண்டுகள் வரை அச்செய்தி அச்சேறும். இதில் நடிகைகளாக இருந்தால் சொல்லவே வேண்டும்.

இதுவரை தமிழ் சினிமாவில் அதிகமாக தற்கொலை செய்து கொண்டது நடிகைகள் தான். இதில் பலரது மரணங்கள் இன்னனும் துப்பு துலங்காமல் மர்மமம் நிறைந்ததாகவே இருக்கிறது. என்றாவது இதுகுறித்து விசாரணை கமிஷன் வைக்கச்சொல்லி திரைப்பட தயாரிப்பாளர் சங்கமோ, நடிகர் சங்கமோ கேட்டிருக்கிறதா? தற்கொலை முடிவு சரியா, தவறா என்ற பட்டிமன்றத்திற்கு போகாமல் அதை உருவாக்கும் காரணிகளைக் கண்டறிந்துள்ளதா?

கவர்ச்சியில் துவங்கிய சாவு
---------------------------------------
தமிழ் திரையுலகில் தற்கொலையென பரபரப்பு உண்டானது 1974ம் ஆண்டு தான். நான் , உலகம் இவ்வளவு தான் , அதே கண்கள், குலவிளக்கு , பாபு, தெய்வ மகன், தெய்வம் பேசுமா, நான் யார் தெரியுமா, சித்தி போன்ற படங்களில் நடித்த விஜயஸ்ரீ திடீர் என தற்கொலை செய்து கொண்டார். தமிழ் , மலையாளப் படங்களில் அப்போது பிரபலமாக நடித்துக் கொண்டிருந்தவர். கவர்ச்சி நடிகை தற்கொலை என்ற செய்தியோடு முடிந்தது அவரது சாவு.

கொலையா, தற்கொலையா?
-----------------------------------------

ரஜினிகாந்த் நடித்த 'தர்மயுத்தம்' படத்தில் இடம் பெற்ற 'தங்கரதத்தில் ஓர் மஞ்சள் நிலவு' பாடலை அவ்வளவு சீக்கிரமாக மறந்திட முடியாது. அப்படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தவர் லக்ஷ்மிஸ்ரீ. 1979ம் ஆண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலில் கொலையென பேசப்பட்டது, கடைசியில் தற்கொலை வழக்கமாகவே மாறியது.

 அழிந்த கோலம் 
------------------------
ஒரு கதாநாயகியின் மரண ஊர்வலத்தை தமிழ் சினிமா முதல் முதலில் பதிவு செய்தது ஷோபாவிற்கு தான். அவர் தற்கொலை செய்து கொள்ளும் போது வயது 18 தான்.பசி படத்திற்காக தேசிய விருது பெற்றவர். மத்திய அரசின் ஊர்வசி விருது பெற்றவர். 1966ம் ஆண்டு சந்திரபாபுவின் இயக்கத்தில் வெளியான 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற படத்தில் பேபி மகாலட்சுமி என்ற பெயரில் குழந்தை நடிகையாக அறிமுகமானார்.

அவரிடம், ' மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள், பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே' என்று ஒரு நிருபர் கேள்வி கேட்டார்.

"மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் பிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்" என்று ஷோபா பதில் சொல்லியிருந்தார்.

'பூ வண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்', 'அழகு மிகுந்த ராஜகுமாரன் மேகமாகி போகிறான்' என்ற வரிகளுக்கு முக பாவத்தால் உயிரூட்டிய நடிகை. மூடுபனி விலகாத அவரது வாழ்க்கை, தூக்கு கயிற்றின் மூலம் அழியாத கோலமாகிப் போனது.

பட்டென மறைந்த படாபட்
----------------------------------------

'நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய்' பாடலை மறக்காதவர்கள் படாபட் ஜெயலட்சுமியையும் மறந்திருக்க மாட்டார்கள். அவள் ஒரு தொடர்கதை, ஆறில் இருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், காளி,அன்னக்கிளி, ராம் ராபர்ட் ரஹீம், வருவான் வடிவேலன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவர் பேசிய வசனம் மூலமாகவே படாபட் ஜெயலெட்சுமியாக இன்றும் அறியப்படுகிறார். எம்ஜிஆரின் சகோதரர் சக்கரபாணியின் மகன் சுகுமாருடன் 'குங்குமம் கதை சொல்கிறது' படத்தில் சேர்ந்து நடித்தார். அவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாகவே அவர் தற்கொலை முடிவு எடுத்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.

ஓயாத அலை
---------------------

டிஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து அதிக ரசிகர்களைக் கண்களால் கட்டிப் போட்டவர் சில்க் ஸ்மிதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். அவர் இல்லாத படங்களே இல்லையென்ற வகையில் அவருக்காகவே நடன காட்சிகள் இயக்குநர்களால் அமைக்கப்பட்டன.

'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகை அவர். 1996ம் ஆண்டு அவரும் தூக்கு கயிற்றுக்கு தான் உயிரை கொடுத்தார். அவரின் மரணம் இன்று வரை ஒரு ரகசியமாகவே இருக்கிறது. நடிகையின் வாழ்க்கை சரித்திரம் படமாவது அரிது. ஆனால், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து 'தி டர்டி பிக்சர் 'என்ற திரைப்படம் பல மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.இன்று வரை அவர் விட்டுச் சென்ற இடத்தை இட்டு நிரப்ப நடிகைகள் வரவில்லை.

ஒரிஜனலான டூப்
-------------------------
ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் கதாநாயகி தற்கொலை செய்து கொள்கிறார். அவருக்கு டூப் போட்ட நடிகை பிரபலமான கதாநாயகியான வரலாறு தமிழ் சினிமாவில் தான் நடந்தது. 'நிலாப்பெண்ணே' படத்தில் நடித்த திவ்யபாரதி தான் அவர். இவரின் மரணத்தில் நிலவிய மர்மம் நீடிக்கிறது. இந்தி திரையுலகில் பிரபலமாக இருந்த திவ்யபாரதி 1993ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பால்கனியில் இருந்த தவறி விழுந்ததாக கூறப்பட்டது. இவரின் மரணத்திற்கு பின்னணியில் மும்பையின் நிழல் உலக தாதாக்கள் இருப்பதாக பரபரப்பாக புகார் எழுந்தது. ஆனால், பல 1998ம் ஆண்டு இவரது மரணம் விபத்து என்று போலீசாரால் முடிக்கப்பட்டது. 19 வயதில் முடிந்து போனது அவரது வாழ்க்கை. அவருக்கு டூப்பாக நடித்து கதாநாயகியாக புகழ் பெற்றவர் நடிகை ரம்பா.

5 ஆண்டு சிறை  
----------------------

நடிகர்கள் விஜயகாந்த், சத்யராஜ் , முரளி ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்த இந்த நடிகை, உண்மை வாழ்வில் காதலுடன் ஜோடி சேர முடியவில்லையென விஷம் குடித்தார். அவருடன் காதலும் விஷம் குடித்தார். காதலன் தப்பித்தார். காதலி இறந்த போனாள். தற்கொலைக்கு தூண்டியதாக காதலனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. அந்த நடிகை பிரதியுஷா.

இயக்குநர் கங்கை அமரனால் 'கோழி கூவுது' படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் விஜி. 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன் டேப்பில் தற்கொலைக்கு காரணமானவர்கள் என சிலரை சொல்லி விட்டுச் செத்துப்போனார். ஆனால், சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என ஒரு இயக்குநர் உள்பட 3 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

நீளும் பட்டியல்
------------------------

இவர்களைத் தவிர நடிகைகள் மோனல், ஷாலினி, வைஷ்ணவி, விஜயலட்சுமி,ஷோபனா ,சபர்ணா உள்ளிட்ட சின்னத்திரை நடிகைகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நடிகர்கள் குணால், சாய்பிரசாந்த், முரளி மோகன், பாலாஜி யாதவ் உள்ளிட்ட பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்னும் பல பிரபல நடிகர்கள், நடிகைகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

என்ன செய்யப்போகிறது நடிகர் சங்கம்?
----------------------------------------------------------

இத்தனை சாவுகளும் காதல், ஏமாற்றம்,துரோகம், வறுமை, வாய்ப்பின்மை என ஏதோ ஒன்றோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. கந்து வட்டி என்ற கொடுமையான சமூக அவலத்திற்கு எதிராக கொடி தூக்கும் தமிழ் திரையுலகம், தங்கள் துறைக்குள் பலர் இப்படி தற்கொலை செய்து கொண்டதை சத்தமில்லாமல் மௌனமாக கடந்து விட்டது தான் சோகத்திலும் பெரும் சோகம்.

தற்கொலை முடிவுகளை தடுக்க நடிகர்-நடிகைகளுக்கு நடிகர் சங்கம் கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாமலே உள்ளது. தயாரிப்பாளர் அசோக்குமாரின் மரணம் அப்படியான உரையாடலுக்கான வாசலைத் திறந்து வைக்கட்டும்.

- ப.கவிதா குமார்

Pin It