seetha 2நான்காவது ஐந்தாவது படிக்கையில்... ஒரு நாள் டிவி டெக் வாடகைக்கு எடுத்து மேல் வீட்டு மணியண்ணன் ஒரு படம் போட்டார்.

நான் பால் வாங்கிக் கொண்டு ஓடிய போது.. (எப்போதும் ஓட்டம் தான்- அதுவும் கையை ஸ்டியரிங் மாதிரி வளைத்துக் கொண்டே வாயில் வண்டி ஓட்டிக் கொண்டு ஓடும் ஓட்டம்) திரும்பி ஓடி வருகையில்... என் கண்ணில் பூச்சி விழுந்து விட்டது. எத்தனை முயன்றும் பூச்சி வெளியே வரவில்லை. கண்கள் குளமாகி அங்கும் இங்கும் தடுமாறித் துடிக்கிறேன். அழுது கொண்டே ஒற்றைக் கண்ணோடு வீடு வந்து பூச்சியை எடுக்க தண்ணீரில் நீர் ஊற்றி கண்களை விழிக்கச் சொல்கிறார்கள். இன்னும் என்னென்னவோ நடக்கிறது. ஆனால் நண்பன் வெள்ளைப்பாண்டி.... "விஜ்........ஜீ ..........படம் போட்டாச்சு" என்று கத்திக் கொண்டே ஓடுகிறான். எங்கிருந்தோ வந்தது வேகம்.. படக்கென்று எழுந்து நானும் ஓட ஆரம்பித்து விட்டேன். அடித்துப் பிடித்து 1 ரூபாய் குடுத்து மணியண்ணன் வீட்டுக்குள் செல்லும் போது அந்தப் படம் போட்டாச்சு.

பக்கத்தில் இருந்த பிரசாத் அண்ணனிடம் படத்துப் பேர் கேட்டேன்.

"புதிய பாதை" என்றார்.

அப்படித்தான் அந்த "எதிர் வீட்டு ஜன்னல்" எனக்கு அறிமுகம். எல்லார் வாழ்விலும் இப்படி ஒரு எதிர் வீட்டுப் பெண் இருந்திருப்பாள். எதிர் வீட்டுப் பெண்ணுக்கெல்லாம் சீதாவின் சாயல் என்பது தான் என் வீதி தத்துவம்.

படம் பார்க்கையில் எனக்கு பார்த்திபன் (பார்த்திபன் என்றெல்லலாம் தெரியாது) மீது அப்படி ஒரு கோபம். "நானும் சொல்கிறேன்" என்று பார்த்திபனிடம் சீதா பேசும் போது, பார்த்திபனை ஒளிந்து ஒளிந்து பார்க்கும் போது... பார்த்திபனுக்காக அழும் போது..... பார்த்திபனைக் கொஞ்சும் போது... சீதாராமன் என்று பார்த்திபனுக்கு பேர் வைக்கும் போது....(சீதாவுக்கு அந்தக் குரல் அத்தனை பொருத்தம்) எனக்கு முன் ஜென்மம் நினைவு வந்து விட்டது போல. இன்னும் நெருங்கி டிவி பக்கமே சென்று விட்டேன். அத்தனை பிடித்து விட்டது. காரணமே இல்லாமல்தான் காதல் வருமாம். எனக்கு அப்படித் தான் வந்தது சீதாவின் மேல் காதல்.

பார்த்திபன் இறுதிக் காட்சியில் நாசரைக் கொல்லாமல் விட்டதில் அத்தனை அழுகை எனக்கு வந்தது. அதன் பிறகு ஊருக்குள் நான் சொல்லித் திரிந்த எல்லா கதைக்கும் கதாநாயகி சீதாவாகவே இருந்தது.... இன்னும் மலரும் நினைவுகள் தான். அதன் பிறகு "தாயம் ஒன்னு" படம் பார்த்தேன். "மனதிலே ஒரு பாட்டு...மழை வரும் அதைக் கேட்டு..." எனும்போது மனதுக்குள் மழை தான். மழைக்கு கண்ணும் வாயும் முளைத்தது போல... அதீத கற்பனைக்கு அவர் சரியாகப் பொருந்தினார். என் சீதாவனத்தில் (முதல் நாவல் ) சீதையும் நானே. ராமனும் நானே. ராவணனும் நானே.

"காக்கிச் சட்டை போட்ட மச்சான்..." என்று அர்ஜுனோடு ஆடுகையில்... நானும் ஆடினேன். பள்ளியில் ஒருத்தியோடு காதல் வந்தது. சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அவளுக்கு அப்படியே சீதா சாயல். அவளிடம் சீதா மீதிருக்கும் காதலை சொல்லித் தான் ஓகே வாங்கினேன். "பெண்மணி அவள் கண்மணி"யில்.... 'மூங்கில் இலை காடுகளே....' என்று அழுது கொண்டே பாடுகையில்... திரைக்குள் சென்று காப்பாற்றி விடலாம் என்றெல்லாம் தோன்றி இருக்கிறது. சீதாவை அழ விடுவதை சகித்துக் கொள்ளவே முடியாது.

seet aanpavam 1985"வண்ண விழி அழகி வாசக் குழலழகி மதுரை மீனாட்சி தான்..." என்று ஆடிவெள்ளி படத்தில் பார்க்கையில் சீதா எனக்குள் ரகசிய குறியீடுகளை விதைக்க ஆரம்பித்தார். கண்களில் தேங்கி இருக்கும் குறும்பு சிரிப்பை சிமிட்டாமல் பார்த்துக் கொள்ளலாம். சிமிட்டினாலும் பார்த்துக் கொள்ளலாம். "உன்னால் முடியும் தம்பி" யில்.... கொஞ்சம் பூசினாற் போன்ற அழகு. கூந்தல் நீளம். அந்த கனத்த உதட்டில் அத்தனையும் செவ்வரிகள் தான் என்று இப்போது கவிதை எழுதத் தோன்றும். மூளைக்குள் படபடக்கும் பட்டாம்பூச்சிகளை அவர் சிரிக்கையில் நான் உணர்ந்திருக்கிறேன். எப்போதும் அற்புதம் செய்யும் ஒரு முகம். அம்மு என்ற செல்லப் பெயருக்கு சீதா தான் பொருத்தம் என்று நானாகவே ஒரு முடிவுக்கு வந்து விட்டிருக்கிறேன்.

"ஆண்பாவ"த்தில் தான் அறிமுகம் என்று நினைக்கிறேன். படத்தில் பாண்டியனோடு அந்தக் கோவிலில், "குயிலே குயிலே....." பாடலில் சிரிக்கும் சிரிப்பு போதும். மனம் நிறைந்த சிரிப்பு. வனம் நிறைந்த வனப்பு. பதினாறில் பழச்சாறு என்று ஒரு கவிதை இருக்கிறது. அதன் மொத்தம் அந்த முகம். தாவணி பாவாடைக்கு மிகப் பொருத்தமான உருவம் என்றால் அது சீதா தான். கொஞ்சம் குள்ளம் தான் என்றாலும், அதில் தான் நிறைவு பேரழகு. இவர் முகத்திலும் படர்ந்திருக்கும் மென் சோகம் எனக்கானது என்ற கற்பனைக்கு நானே பொறுப்பு.

சீதாவும் பார்த்திபனும் பிரிந்தபோது எனக்கு அத்தனை வருத்தமாக இருந்தது.

சீதாவுக்கு வயதானதெல்லாம் சிண்ட்ரெல்லாக்கள் செய்யும் துரோகம்.

கண்ணில் விழுந்த பூச்சி இப்போது மனதுக்குள் விழுந்திருந்தது.

சிண்ட்ரெல்லாக்கள் தொடரும்...

- கவிஜி

Pin It