நான் ஒரு கதையைப் படமெடுக்க முடிவு செய்தால் அந்தக் கதைக் களனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டே அந்த வேலையில் இறங்குகிறேன். அதில் சினிமா மொழியைச் சரியாகப் பயன்படுத்த நேர்மையாக முயல்கிறேன். படம் சில நேரங்களில் விரும்பிய அழகியல் தரத்தை எட்டுகிறது. சில நேரங்களில் எட்டுவதில்லை. வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. - கௌதம் கோஷ்.
ஒவ்வொரு பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கும் ஒரு முறை உலகை மாற்றியே தீருவது என்று முனைந்து நிற்கும் ஒரு தலைமுறை தோன்றும். விரும்பியோ விரும்பாமலோ இந்தப் பிரிவில் சிக்கிக் கொள்பவர்களின் தலையில் உலகத்தின் அத்தனை பிரச்சினைகளும் வந்து இறங்கிவிடும். சரியான அரசியல், மக்களுக்கான கலை, இலக்கியம், சினிமா அனைத்தையும் தேடிக் கண்டு பிடிக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவர்கள் தலையில் சுமத்தப்பட்டு விடும். அல்லது அப்படி அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.
அப்படி சிகரெட்டுகளோடும் டீயோடும் கோவை பேக்கரிகளின் பெஞ்சுகளைத் தேய்த்துக் கொண்டு விடிய விடிய விவாதம் நடத்திக் கொண்டிருந்த ஒரு இரவில் கௌதம் கோஷின் “மாபூமி” பற்றிக் கேள்விப்பட்டோம். இயக்குநர் வங்காளி என்பதை அவர் பெயரே சொன்னது. ஆனால் படம் தெலுங்கு. தெலங்கானாப் புரட்சியை தெலுங்கில் எடுப்பதுதான் சரியானது என்று கருதி படத்தை தெலுங்கில் எடுத்திருப்பதாகச் சொன்னார் ஒரு தோழர். அவருக்கு அது பயங்கரமான புரட்சிப்படம் என்பதற்கு மேல் எதுவும் தெரியவில்லை.
அந்தப் படத்தை அரசு தடை செய்திருக்கிறது என்றார். எதோ ஓரிடத்தில் தோழர்கள் அந்தப் படத்தைப் போட முயன்ற போது போலீஸ் பிடிக்க வந்தது, தோழர்கள் படப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடி தப்பினார்கள் என்றும் சொன்னார். அப்போதே எங்களுக்கு சத்யஜித் ரே, மிருணாள் சென்னைப் பற்றியெல்லாம் ஓரளவு தெரியும். ஆனால் கௌதம் கோஷைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. பின்பு மாற்று சினிமா இதழ்களும் நூல்களும் அறிமுகமான பின்பும் கூட மாபூமியைப் பற்றியும் கௌதம் கோஷைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வங்காள இலக்கியமும், திரைப்படங்களும் முற்போக்கு கலை இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்பட்டன. ஆந்திரா, புரட்சி கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த அதிதீவிர இடதுசாரிகளின் கோட்டையாகக் கருதப்பட்டது. இந்த இரண்டும் வசீகரமான முறையில் இணணந்திருந்த மாபூமி மர்மமான, அதனாலேயே கவர்ச்சிகரமான பிரதேசமாகவே இருந்து வந்தது. மாபூமி என்பதை அன்னை பூமி என்பதாக, தாய் போன்ற நிலத்தைக் காக்க நடக்கும் போராட்டம் என்று நாங்களாகப் பொருள் செய்து கொண்டோம்.
அப்போது தொலைக்காட்சியில் ஞாயிறு மதியம் அகர வரிசையில் மாநில மொழித் திரைப்படங்கள் காட்டப்படும். ஒரு வாரம் அஸ்ஸாமி மொழித் திரைப்படம் காட்டப்பட்டு விட்டால் அடுத்த வாரம் பி அதாவது பெங்காலி. வங்க மொழிப்படம் என்றால் பெரும்பாலும் சென், ரே ஆகியோரின் உலகப் புகழ் பெற்றபடங்களாகத்தானிருக்கும். எனவே வங்க மொழித் திரைப்படம் வர இருக்கும் வாரத்தில் சனி இரவு மறுநாள் நிகழ்ச்சிகளுக்கான அறிவிப்பின் போது மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருப்போம். ஒரு நாள் கௌதம் கோஷ் நிர்தேஷக் மாபூமி என்றார்கள். (கௌதம் கோஷ் இயக்கிய மாபூமி - எனக்குத் தெரிந்த இந்தியில் இதுதான்).
ஒரு மாபெரும் புரட்சிப் படத்தைத் தொலைக்காட்சியில் போடுகிறார்களா என்னமோ பிரச்சினை என்று அதிர்ந்து போனோம். தொலைக்காட்சி மகா மகாக் கட்டுப்பாடுகளுடம் இயங்கிய காலம் அது. இது எப்படி சாத்தியம்? அன்று காலையிலிருந்தே தோழர்களால் வீடு நிறைந்து விட்டது. மின்சாரம் போய்விடுமோ? யாராவது செத்துப் போய் சோக கீதம் போட்டுவிடுவார்களோ என்றெல்லாம் பயந்து பயந்து எங்களுக்குத் தலைவலியே வந்து விட்டது. நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. கௌதம் கோஷ் எங்களுக்கு இப்படித்தான் அறிமுகமானார்.
மாபூமி தெலங்கானாப் போராட்டத்தைப் பற்றிய படம். ஹைதராபாத் நிஜாமுக்கும், ராஜாக்கர்களுக்கும், நிலப்பிரபுக்களான துரைகளுக்கும் பட்டீல்களுக்கும் எதிராகத் தொடங்கிய ஏழை, ஒடுக்கப்பட்ட விவசாயிகள் பண்ணையடிமைகளின் புரட்சி ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய அரசு ஆகிரமித்த ஆப்பரேஷன் போலோவுக்குப் பின்பும் தொடர்வதாக முடிந்தது படம். எளிமையான நேரடியான கதை சொல்லும் உத்தி லேசாக ரேவை நினைவு படுத்தியது. ஆனால் ஒவ்வொரு பிரேமும் அதன் உக்கிரமும் நேரடியாகப் பேசப்பட்ட அரசியலும் இது ரே படம் அல்ல என்று தெளிவாகச் சொன்னது.
தெலங்கானாவின் நலகொண்டா மாவட்டத்தில் ஸ்ரீபுரம் என்ற கிராமத்தில் படம் தொடங்குகிறது. மக்கள் துரைகளால் வாட்டி வதைக்கப்படுகின்றனர். பெண்கள் துரைகளோடும் அரசு அதிகாரிகளோடும் இரவுகளைக் கழிக்க வேண்டும் என்பது எழுதாத சட்டமாக இருக்கிறது. இளைஞனான ராமையா தன் காதலி துரையின் வீட்டுக்குச் செல்வதைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாமல் கிராமத்தை விட்டு வெளியேறுகிறான். ஹைதராபாத்தில் கைரிக்ஷா இழுக்கிறான். கடுமையான உழைப்பால் நோய்வாய்ப்படுகிறான். அந்த நிலையிலும் உயிர்வாழ ரிக்க்ஷா இழுக்க வேண்டியிருக்கிறது. அப்போது ஒரு தோழர் அறிமுகமாகிறார். அவனுக்கு இந்த அநீதிகளை எதிர்த்துப் போராடும் ஒரு இயக்கம் இருப்பது தெரிய வருகிறது.
ராமையா ஒரு நாள் தனது கிராமத்திலிருந்து வந்த ஒருவனைப் பார்க்கிறான். அவன் இப்போது கிராமமே மாறிவிட்டது. வண்ணார், நாவிதர், விவசாயிகள், தலித்துகள், கொல்லன் எல்லோரும் சேர்ந்து துரைகளை விரட்டி விட்டோம் என்கிறான். ராமையா கிராமம் திரும்புகிறான். மக்களோடு புதிதாகக் கிடைத்த சுதந்திரத்தைக் காக்க ஆயுதம் ஏந்தி நிற்கிறான். போரிடுகிறான். கிராமத்தை விட்டு ஓடிப் போன துரைகள் இந்திய ராணுவத்துடன் காங்கிரஸ்காரர்களாகத் திரும்பி வருவதைக் கண்டு தொடர்ந்து போரிட முடிவெடுத்து காட்டுக்குள் செல்கிறான் என்று முடிகிறது படம்.
பஞ்சை பராரிகளான ஆண்களும் பெண்களும் நாட்டுத் துப்பாக்கிகள் எந்தி ஒரு காட்டோரம் நிற்கும் படம் தெலங்கானா புரட்சியின் அடையாளம். மக்கள் ஆயுதப் பயிற்சி எடுக்கும் இந்தக் காட்சி படத்தில் காட்டப்பட்டு நிழல்படமாக உறைகிறது. பெரும் மதில்கள் கொண்ட் இருண்மை பூசிய நிலச்சுவாந்தார்களின் வீடுகள் மக்களால் சூறையாடபப்டும் காட்சி . . . பிடிவாதமான நிதானத்துடன் அதன் உக்க்கிரத்தை நாம் முழுமையாக உணர்ந்து கொள்ளும் விதத்தில் மேலிருந்து இருந்து காட்டப்பட்டிருக்கும். ஒரு காட்சியில் கத்தார் தோன்றிப் பாடுவார். மேலும் பல ஜனநாட்டிய மண்டலி கலைஞர்கள் இந்தப் படத்தில் பங்காற்றினர் என்று பின்னர் தெரிந்தது.
இந்தியாவில் நடந்தது ஆட்சி மாற்றம் மட்டுமே. துரைகள் விசுவாசத்தை மட்டுமே மாற்றிக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் துரைகளாகவே இருக்கின்றனர் போன்ற வசனங்களை தூர்தர்ஷனில் மதியம் பார்த்தால் எப்படி இருந்திருக்கும்? உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
மாபூமி என்ற தலைப்பின் பொருள் நாங்கள் நினைத்திருந்தது போல அன்னை பூமி அல்ல. என்னுடைய பூமி. எனது நிலம். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் பொதுவுடமைக் கட்சிகளின் மையமாக இருந்த காலம் அது. நிலங்களை நிலப்பிரபுக்களிடமிருந்து கைப்பற்றுவதையே முக்கிய புரட்சிகர நடவடிக்கையாக பொதுவுடமை இயக்கங்கள் கருதி வந்தன. நாங்கள் மெய்சிலிர்த்துப் போனோம். மாபூமி என்று உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் அது கோபம் கொண்ட விவசாயிகளின் உக்கிர முழக்கமாக எதிரொலித்தது.
இந்தப் படத்தைப் பார்த்த பின்பும் கௌதம் கோஷைப் பற்றி அதிகமாக எதுவும் தெரிந்து கொள்ள் முடியவில்லை. அவர் எங்களுக்கு மர்மமானவராக கவர்ச்சிகரமானவராகவே தொடர்ந்து இருந்து வந்தார். நாங்கள் கௌதம் கோஷின் அதிதீவிர ரசிகர்களாகிப் போனோம். அவரிடம் அஸிஸ்டென்ண்டாகச் சேரச் சில தோழர்கள் விரும்பியது ஒரு தனி சோகக் கதை. ஆனால் கட்டுரை அதைப் பற்றியது அல்ல. கௌதம் கோஷ் பற்றியது. எனவே அவரைப் பற்றி மட்டும்...
கௌதம் கோஷுக்கு மாபூமி முதல் படம். அதற்கு முன்பு அவர் The new earth (-1973), Hungry autumn(1978) என்ற இரண்டு ஆவணப்படங்கள் எடுத்திருந்தார். அவரது அப்பா ஹிமான்சு குமார் ஒரு பேராசிரியர். அம்மா இசைக் கலைஞர். கௌதம் சினிமாவை விரும்பினார். ஆனால் குடும்ப சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்காததால் புகைப்படக்கலைஞராக வேலை செய்ய வேண்டி வந்தது.
நக்ஸபாரி எழுச்சியின் முதல் அலை ஸ்ரீகாகுளத்தில் ஓய்ந்த பிறகு தெலங்கானாவில் மக்கள் யுத்தக் கட்சி தோன்றி வளர்வதற்கான கொந்தளிப்பான சூழல் நிலவிய அந்த எமர்ஜென்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில் தெலங்கானாப் போராட்டத்தைப் பற்றி கிருஷ்ணசந்தர் என்பவர் எழுதியிருந்த ஜப் கேத் ஜகே என்ற உருது நாவலைப் படமாக எடுக்க தோழர் நரசிங்கராவ் விரும்பினார். வழக்கமான தென்னிந்திய மசாலா படமாக இல்லாமல் உண்மையை உண்மையாகக் காட்டும் யதார்த்த பாணி படமாக அந்தப் படம் இருக்க வேண்டும் முடிவு செய்திருந்தார். எனவே அவரும் அவரது நண்பரும் இணைத் தயாரிப்பாளருமான ரவீந்திரநாத்தும் மேற்கு வங்காளம் சென்று மிருணாள் சென்னைச் சந்தித்து இப்படத்தை இயக்கக் கோரினர். படத்தின் பட்ஜெட் வெறும் ஐந்து லட்சம் என்று சொன்ன இவர்கள் சொன்னதைக் கேட்ட சென் படத்தை இயக்க மறுத்து கௌதம் கோஷைச் சந்திக்கும் படி கூறினார்.
கோஷ் படத்தை ஒப்புக் கொண்டு கதை நடக்கும் இடங்களை நேரில் காண விரும்பி தெலங்கான வந்து கிராமங்களில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார். அப்போதுதான் நாவலுக்கும் தெலங்கானா கிராமப் புறங்களுக்கும் சம்பந்தமே இல்லை கிருஷ்ணசந்தர் புரட்சி நடந்த இடங்களுக்கு வந்ததே இல்லை என்பது தெரிய வந்தது. கோஷூம் நரசிங்கராவும் கிராமம் கிராமமாக அலைந்து அந்த நிகழ்வுகள் பற்றி நேரடியாகத் தெரிந்த மக்களை அணுகி தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர். நரசிங்கராவ் ஹைதராபாத் நூலகத்திலேயே பழியாகக் கிடந்து போராட்டம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டினார்.
படம் 1980ல் வெளியான போது நாவலிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. முழுக்க முழுக்க தெலங்கானாவின் பண்பாட்டையும் மொழியையும் மக்கள் வாழ்வையும் சித்தரிக்கும் அற்புதமான படமாக அது உருவாகியிருந்தது.
தெலங்கானாவில் பேசப்படும் தெலுங்கு மிக நுட்பமாகப் படம் முழுவதும் பயன்படுத்தப் பட்டிருந்தது. உதாரணமாக படத்தில் மக்கள் நுவ்வு என்ற மரியாதைப் பன்மையிலேயே ஆண்டைகளை அழைப்பார்கள். அதுவரை தெலுங்குப் படங்களில் கடலோர மக்கள் பேசும் தெலுங்கில் வழங்கும் மீரு என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்தது.
இப்படத்தின் உடைகளை அற்புதமாக வடிவமைததற்காக கௌதம் கோஷின் மனைவி நிலஞ்சனா கோஷ் மிகவும் பாராட்டப்பட்டார். இதில் வேடிக்கை பல நேரங்களில் நடிகர்கள் கிராம மக்களின் உடைகளையே கடன் வாங்கி அணிந்து நடித்தனர் என்பதுதான்.
முதல் முதலாக தெலங்கானாவின் அடையாளங்களைக் காட்டிய படமாக மாபூமி கருதப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநில மக்கள் மாபூமியின் 35வது ஆண்டு விழாவை சென்ற ஆண்டு உற்சாகமாகக் கொண்டாடினர்.
மாபூமியை அடுத்து அவர் எடுத்த படங்களான டகால், அந்தர் ஜாலி ஜாத்ரா, பத்மா நதிர் மொஞ்சிர் ஆகிய படங்களில் கோஷின் முழுத் திறமையும் வெளிப்படவில்லை என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக 1830 ம் ஆண்டுகால வங்காளத்தை மையமாகக் கொண்டு அவர் எடுத்த அந்தர் ஜாலி ஜாத்ரா அக்கால வங்காளத்தை முழுமையாகக் காட்டவில்லை என்ற விமர்சனம் வைக்கப் படுகிறது.
ஆனால் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் இந்த விமர்சனங்களில் கடுகளவும் உண்மையில்லை என்பதை உணருவார்கள். அந்தர் ஜாலி ஜாத்ரா, கமல் குமார் மஜும்தார் எழுதி 1962 ல் வெளியான மஹா யாத்ரா என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.
சீதாராம் என்ற பணக்கார பார்ப்பனன் மரணப்படுக்கையில் இருக்கிறான். கங்கைக் கரையில் மரணமடைவது புண்ணியமளிக்கும் என்பதால் அவனது மகன்கள் சீதாராமை ஆற்றங்கரையில் படுக்க வைத்திருக்கின்றனர். மருத்துவர் கிழவன் இப்போதைக்கு சாக மாட்டான் என்று சொன்னாலும், ஊர் ஜோசியன் கிழவன் உடனே இறந்து விடுவான் என்று அடித்துச் சொல்கிறான். ஆனால் ஜோசியன் சொன்னபடி மரணம் வருவதில்லை. எனவே தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்தப் பிணம் தனியாகச் செல்லாது என்று சொல்லி விடுகிறான்.
பிணம் தனியாகப் போகாது என்ற சொல்லுக்கு ஒரே ஒரு பொருள் தானுண்டு. சாகப் போகும் கிழவனுக்கு ஒரு கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து கிழவனோடு சேர்த்து அவளையும் எரித்து சதிமாதா ஆக்குவதுதான் கிழட்டுப் பிணத்துக்குத் துணை சேர்க்கும் வழி. அதற்க்குப் பத்தாண்டுகள் முன்புதான் சதி கிழக்கிந்திய கம்பெனி அரசால் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் அது பெரிதாக எடுத்துக் கொள்ளப் படுவதில்லை என்பதை வசனங்களைக் கொண்டு அனுமானிக்க முடிகிறது.
இந்த முடிவு எடுக்கப்பட்டவுடன் ஒரு பார்ப்பனர் ஓடி வந்து என் பெண்ணை சீதாராமுக்குத் திருமணம் செய்து வையுங்கள் என்று மன்றாடுகிறார். அவரது பெண் வயதுக்கு வந்தும் திருமணம் ஆகாமல் இருக்கிறாள். இதனால் ஏற்படும் பாவத்தை அவளை சீதாராமுக்குத் திருமனம் செய்து வைப்பதன் மூலம் போக்கிவிடலாம். குடும்பத்தில் ஒரு பெண் உடன் கட்டை ஏறுவதால் தனது மகன்களுக்கு வருங்காலத்தில் பெரும் மரியாதை கிடைக்கும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.
மணப்பெண் பல்லக்கில் சீதாராமிடம் கொண்டு வரப்படுகிறாள். அவளைப் பொருத்தவரை அது மரண யாத்திரை. சீதாராமின் உறவினர்கள் அவனிடம் கேலியும் கிண்டலுமாக ‘பொண்ண நல்லா பாத்துக்கோ, காட்டிக்கிறயா?’ என்கின்றனர். யஷோவதிக்கு சிதையில் வேகாமல் தப்ப ஒரே வழிதான் இருக்கிறது. உயிர் வாழும் விருப்பத்தையெல்லாம் தன் கண்களில் தேக்கி கிழவனைப் பார்வையால் இறைஞ்சுகிறாள். ‘மறுத்துவிடு’ என்று அவளது பார்வை கெஞ்சுகிறது.
சீதாராம் தன் பொக்கை வாயை அசைத்து திருமணத்திற்கு சவரம் செய்ய வேண்டும் என்கிறான். திருமணம் நடக்கிறது. மணமக்கள் இருவரும் ஆற்றங்கரையில் தனித்து விடப்படுகின்றனர். கிழவன் செத்த பிறகு சொல்லி அனுப்பச் சொல்லி விட்டு மகன்கள் போய் விடுகின்றனர். இதற்கிடையில் சுடுகாட்டில் வெட்டியானான பைஜு(சத்ருகன் சின்ஹா) அடிக்கடி வந்து பெரியவர் போய்விட்டாரா, சிதைக்கு விறகு கொண்டு வரலாமா என்று விசாரித்துச் செல்கிறான். ஒரு பெண்ணையும் சீதாராமோடு சேர்த்து எரிக்கப் போகிறார்கள் என்றதும் இரட்டை வேலை என்று ஆரம்பத்தில் குதூகலமடைகிறான். பின்பு அந்த பெண்ணைப் பார்த்ததும் அந்தச் செயலின் முட்டாள் தனமும் குரூரமும் அவனை உக்கிரமாகத் தாக்குகின்றன.
பல வழிகளில் யஷோவதியைத் தூண்டி அங்கிருந்து ஓடிவிடச் சொல்கிறான். இந்த செயலில் யஷோவதியும் பைஜூவும் காதல் கொண்டு ஒன்றிணைகின்றனர். கங்கை பொங்கி வந்து மூவரையும் முழுகடிக்கிறது. படத்தில் மனம் பதற வைக்கும் காட்சி ஒன்று இருக்கிறது. தான் சதி மாதா ஆகப் போவதாக பெருமையுடன் சொல்லும் யஷோவதியை பைஜூ இழுத்துச் சென்று சதிமாதா என்றால் என்னவென்று ஏளனமாகக் காட்டுகிறான்.
பைஜு ஒரு புதரை விலக்குகிறான். முழங்கால் உயரத்திற்கு பல கற்கள் நிற்கின்றன. ஒவ்வொன்றிலும் மெல்லிய நீண்ட விரல்களைக் கொண்ட கரங்கள் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளன.
“இந்த ஒவ்வொரு கையும் ஒரு சதி மாதா தான். நீயும் இப்படியொரு உருவமில்லாத சதிமாதா ஆகிவிடுவாய். அவ்வளவுதான்”.
பசுமை பூத்த ஆற்றோரத்தில் யஷோவதி உலவும் கொஞ்சம் இறுக்கம் குறைந்த காட்சிக்குப் பிறகு வரும் இந்தக் காட்சி ஒரு மொன்னையான ஆயுதத்தால் திடீரென்று தாக்கப்பட்டதைப் போன்ற அதிர்ச்சிக்குப் பார்வையாளர்களை உள்ளாக்குகிறது.
தமிழகத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமான கோவில்களில் நாயக்கர், கால ஹொய்சாலர் கால கை சிற்பங்களைப் பார்த்தவர்களால் மட்டுமே இந்த அதிர்ச்சியை உணர முடியும்.
அந்தர் ஜாலி ஜாத்ரா பார்பனியத்தின் குரூரமான ஆணாதிக்க முகத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டிய படம். உயர்சாதியினர் இன்று வரை தங்களது பெண்களை பல்வேறு காரணங்களுக்காக இரக்கமின்றி பலி கொடுத்துவரும் அயோக்கியத் தனத்தை முதன்முதலாக காட்டிய படம். சதிமாதா ஆகும் ஆசையுடன், நளினமாக, மென்மையாக, போலிப் பெருமிதத்துடன் வீற்றிருக்கும் உயர் குலத்துப் பெண்ணும், பாதி விலங்கைப் போல சித்தரிக்கப்படும் சண்டாளனுமே உண்மையில் நண்பர்களாகக் கூடியவர்கள் என்பதை முதலில் காட்டிய படம்.
படத்தின் மீது சொல்லப் படும் விமர்சனம் படம் அந்த கால வங்காளத்தை காட்டவில்லை. சண்டாளானுக்கும் பார்ப்பனப் பெண்ணுக்குமான காதல் எதிபார்க்கக் கூடியதாக இருக்கிறது என்பதாகும். இதை விட ஒரு அபத்தமான விமர்சனம் இருந்துவிட முடியாது. அந்தக் கால வங்காளம் தத்ரூபமாக அமைக்கப் படும் செட்டுகளில் இல்லை. சொற்களில் இருக்கிறது. காட்சிகளில் இருக்கிறது.
சதி அக்பரால் தடை செய்யப்படுகிறது. மொகலாய அரசு சிதறியதும், அந்த இடத்திற்கு ஆங்கிலேயர் வந்ததும் தாங்கள் எதிரிகளாகக் கருதிய இஸ்லாமியரை பலவீனப்படுத்த, இந்து உயர் சாதியினரை ஆதரிக்கவும், தூண்டிவிடவும் செய்கின்றனர். இந்த கால கட்டத்தில் தான் ஒடுங்கிக் கிடந்த சதி போன்ற பழக்கவழக்கங்கள் திரும்பவும் முழுவீச்சில் வெளிவருகின்றன. பெண்கள் தீயில் வீசப்படும் எண்ணிக்கையைப் பார்த்து கிழக்கிந்தியக் கம்பெனியே திகைத்துப் போய் இதை தடை செய்கிறது, ஆனாலும் கூட கம்பெனியின் ஆதரவு பெற்ற உயர் சாதியினர் அதை நடைமுறைப்படுத்தித் தான் வந்தனர். இந்த வங்காளம் படத்தில் இருக்கிறது.
படத்தில் காட்டப்படுவது வெறும் காதல் அல்ல. இயல்பான நட்பு சக்திகள் ஒன்றிணைவதுதான் அதன் அடிநாதம். அது விரும்பம், கனவு கற்பனை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு கலைஞன் காணக்கூடிய அற்புதமான கனவு அது.
ஒடுங்கியோடும் நதி, அதில் மிதக்கும் படகில் வரையப்பட்டிருக்கும் கண்கள், பரந்து விரிந்த மணலோடிய நதிக்கரை படத்தின் சூழலுக்குத் தக்கபடி பல கோணங்களில் காட்டப்பட்டு நம்மைக் கட்டிப் போடுகிறது. படம் முழுக்க வெறுமையும் மூர்க்கமும் விரவிக் கிடக்கும் அந்த நிலப்பரப்பு லாங் ஷாட்கள், அண்மைக் காட்சிகள் மூலம் நம்மோடு பேசுகிறது. அழுகிறது சிரிக்கிறது... இறுதியில் பொங்கி வரும் நதி... இவ்வளவு உயிர்ப்புடன் ஒரு நிலக்காட்சியை திரைப்படத்தில் காட்ட முடியுமா?
கௌதம் கோஷின் அடுத்தடுத்த படங்களும் ஏதோ ஒருவிதத்தில் நதிகளோடு பின்னிப் பிணைந்துதானுள்ளன. பெரும் புகழ் பெற்ற இந்திப் படமான பார் (நசீருதீன் ஷா, ஷப்னா ஆஸ்மி) தனது இறுதிக் காட்சிகளில் ஒரு அகண்டு விரிந்த ஆற்றை மையப்படுத்தி நகர்கிறது. கிராமத்தில் நடந்த படுகொலைக்குத் தப்பி வந்த ஷாவும் ஆஸ்மியும் ஊர் திரும்ப இருக்கும் ஒரே வழி சில பன்றிகளை நதியைக் கடந்து அக்கரைக்குக் கொண்டு சேர்ப்பதுதான். பன்றிகளை படகில் ஏற்றிக் கொள்ள மறுப்பதால் நசீருதீன் ஷாவிடம் இந்த வேலை ஒப்படைக்கப்படுகிறது. நதியின் ஒரு புறம் பசி, நம்பிக்கையின்மை, விரக்தி, வேதனை, மறுபுறம் பணம், நம்பிக்கை, வாழ்க்கை . . .
கணவனும் கர்ப்பிணீயான மனைவியும் நதியோடு போராடுகின்றனர். மனைவி தன் குழந்தையை இழந்து விட்டதாக உணர்கிறாள். கடும் போராட்டத்துக்குப் பிறகு பன்றிகளோடு அக்கறை சேர்கின்றனர். கணவன் மனைவியின் வயிற்றில் காதை வைத்துக் கேட்கிறான். குழந்தை உதைக்கிறது. நம்பிக்கை மீதமிருக்கிறது!.
அவரது அடுத்த படமான பத்மா நதிர் மஞ்சி படமும் நதியை மையப்படுத்தியதுதான்.
கங்கையும் பிரம்மபுத்ராவும் வங்காளத்தின் வடபகுதியில் இணைந்து பத்மா என்ற மாபெரும் நதியாக மாறுகின்றன. பத்து கிலோமீட்டருக்கு மேல் அகலம் கொண்டது பத்மா நதி. பத்மா நதி கடலை நெருங்கும் போது பலநூறு கிளைகளாகப் பிரிந்து சுந்த்ரவனக்காடுகள் எனப்படும் தீவுகளை உருவாக்குகிறது. அடர் காடுகளும் புலிகளும் மற்ற விலங்குகளும் நிறைந்த, மக்கள் வாழ முடியாத அந்தத் தீவுகளில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் திட்டத்துக்காக மக்களைக் கொண்டு சென்று குடியேற்றும் வேலையில் ஈடுபட்டிருக்கும் ஒரு வியாபாரி. அவனிடம் படகோட்டும் ஒரு படகோட்டி. அவனுக்கும் அவனது மனைவியின் தங்கைக்கும் ஏற்படும் காதல் . . . தீவுகளிலிருந்து தப்பி வரும் மக்கள், அங்கே நடக்கும் கொடுமைகள், வினோத உறவுகள் என்று நீள்கிறது படம்.
படம் முழுக்க ஈர வாடை அடிக்கும். எல்லையற்றுப் பரந்து விரிந்த பத்மா நதி, சிறு புள்ளிகள் போன்ற படகுகள், இருபுறமும் கரைகளில் வெகுதூரம் சேறும் சதுப்புமாக சாம்பல் பூத்திருக்கும் விரக்தியூட்டும் நிலப்பரப்பு, சகதியில் நிற்கும் குடிசைகள் . . . ஒரு பிரம்மாண்டமான படம் எடுக்க பணம் தேவையே இல்லை. நல்ல புகைப்படக் கலைஞரும் கருவியும், புத்திசாலித்தனமும் ரசனையும் இருந்தாலே போதும் என்பதைக் காட்டும் காட்சிகள் இவை.
ஆனால் பத்மா நதிர் மஞ்சிர்-ல் ஒரு குறை உண்டு. படம் தீவுகளில் குடியேற்றப்பட்ட மக்கள் சந்தித்த கொடுமைகளைவிட படகோட்டிகளின் வாழ்வையே அதிகம் தொட்டுச் செல்கிறது. இந்தப் படம் பத்மா நதிப் படகோட்டி என்ற மாணிக் பந்தோபாத்யாவின் நாவலை அடிப்படியாகக் கொண்டது. அவர் இந்த வாழ்க்கை குறித்த நேரடி அனுபவம் கொண்டவர் அல்ல. எனவே படகோட்டியின் வாயிலாகக் கதை சொல்கிறார். எனவே குறைக்குக் காரணம் மூல நாவல்தான். வேறு சரியான நாவல் இல்லாததாலும் இதை கௌதம் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.
இந்தப் படத்துக்குப் பிறகு கௌதம் கோஷின் படங்களில் ஒரு மாற்றம் தெரியத் தொடங்கியது. மக்களின் அரசியல் சமூக பொருளாதார வாழ்கையைப் பேசிய அவரது படங்கள் பெரும்பாலும் தனிமனித வாழ்க்கை, ஒரு பெண் பித்தனான கவிஞனின் வீழ்ச்சி, அடுத்த நாவலுக்கான களத்தைத் தேடும் எழுத்தாளன் போன்றவற்றை அவரது படங்கள் மையமாகக் கொள்ளத் தொடங்கின.
கடைசியாக வந்த படம் அபர் அரண்யா. சத்ய ஜித் ரேயின் அரண்ய மே தீன் ரத்ரி படத்தின் இரண்டாவது பாகம் இது என்று கௌதம் கோஷ் சொன்னார். பழங்குடி மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் பேசினாலும் பழைய கௌதம் கோஷைப் பார்க்க முடியவில்லை எனப்து என்னவோ உண்மைதான்.
இந்த கௌதம் கோஷ் எல்லா நம்பிக்கைளையும் இழந்து போன இன்றைய சமூகத்தின் பிரதிநிதி. அன்றைய கோஷ் துடிப்புடன் போராடிக் கொண்டிருந்த மக்கள் வெள்ளத்தோடு கலந்து பயணித்தவர். நமக்கு யார் வேண்டுமோ அவரை எடுத்துக் கொள்ளலாம்.
கோஷ் பல விதங்களில் முன்னுதாரணமாக இருந்தார். நல்ல படங்களின் வியாபார முக்கியத்துவத்தை உயர்த்தியதில் முக்கிய பங்காற்றினார். மாபூமி உட்பட அவரது பெரும்பாலான படங்கள் பெரும் வெற்றி பெற்றவை. வசூலில் சாதனைகள் செய்தவை. கூட விருதுகளும் வாங்கிக் குவித்தன. சத்ய ஜித் ரே போன்றவர்களே தங்கள் படங்கள் ஓடுவதில்லை. இந்தியாவின் மற்ற பகுதிகளில் காலைக் காட்சிகளாகத்தான் காட்டப்படுகின்றன என்று புகார் கூறிய காலத்திலேயே இது நடந்தது.
கோஷ் தனது ஆவணப் பட ஆர்வத்தைக் கைவிடமல் உத்பால் தத், பிஸ்மில்லா கான், சத்ய ஜித் ரே, ஜோதி பாசு பற்றி நீண்ட ஆவணப்படங்கள் எடுத்தார்.
Beyond the Himalayas என்ற ஆவணப்படத்தில் சீன துருக்கிஸ்தான், திபெத் வழியாக நீளும் பட்டு வணிகப் பாதைகளைப் பற்றியும், அந்த எட்டாத பகுதிகளின் பண்பாடு, வரலாறு ஆகியவற்றையும் மிக அழகாகக் காட்டியிருப்பார். இந்தப் படம் டிஸ்கவரில் ஐந்து பாகங்களாகக் காட்டப்பட்டது.
குறைந்த செலவில் ஆனால் காட்சிப் படுத்துதலில் பிரம்மாண்டத்தைக் காட்டுதல், வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களீல் மக்கள் வரலாற்றை, சொல்லப்படாத வரலாற்றைக் காட்டுதல் ஆகியவற்றில் கௌதம் கோஷின் பங்கு மிக முக்கியமானது. அதே போல நல்ல படங்கள் ஓடாது. அது ஒரு சில அறிவாளீகளின் பார்வைக்குத்தான் என்பதை உடைத்ததிலும் கோஷின் பங்கு முக்கியமானது.
இயக்குநராக நடிகராக ஒளிப்படக் கலைஞ்ராக இசையமைப்பாளராக பல்வேறு சாதனைகள் செய்தாலும் கோஷ் ஒருபோது தன்னை ஒரு பிரபலமாக முன்னிறுத்திக் கொண்டதில்லை.
நீங்கள் ஏன் மற்ற சினிமா நட்சத்திரங்கள் போலில்லை என்று அவரிடம் ஒருமுறை கேட்கப்பட்டது.
‘நட்சத்திரங்களை நான் வானத்தில் பார்க்கவே விரும்புகிறேன். (தரையில் அல்ல)” என்று பதிலளித்தார் அவர்.
ஆவணப்படங்களில் ஆர்வம் கொண்டிருந்த கௌதம் கோஷ் பற்றி அவர் ராய் என்ற இளைஞர் The View Finder என்ற ஆவணப்படத்தை எடுத்தார்.
ஆவணப்படம் எடுக்க கௌதம் கோஷை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் “இந்திய கிராமங்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஒரே இயக்குநர் அவர்தான்” .
- இரா.முருகவேள்