karan actor"நான் காதலிப்பேன்... ஆனா அந்த காதல் தோத்து போகனுன்னு கடவுள்ட்ட சின்சியரா வேண்டிப்பேன்.. ஏன் தெரியுமா..." என்று சீரியஸான முகத்தோடு கேட்டுவிட்டு..." அப்பதான இன்னொரு பொண்ண காதலிக்க முடியும்" என்று சிரிக்கும் முகம் திரையில் புதிதாக இருந்தது.

"மொத்தத்துல நான் ஹீரோவும் இல்ல வில்லனும் இல்ல" என்று சொன்ன கரண்... கண்டிப்பாக பிற்காலத்தில் அந்த முடிவை எடுத்திருக்கவே கூடாது. இந்த 'ஹீரோ- வில்லன்' என்ற வட்டத்துக்குள் அவர் சிக்கியிருக்க வேண்டாம். கதையை மையப்படுத்தி நகர்ந்திருக்கலாம்.

ஆரம்பத்தில் "நம்மவர்" கமலையே போட்டு வாங்கிய அந்த வட்டு மண்டையன் "யார்ரா இந்த பையன்...!" என்று கவனிக்க வைத்தது. அதே நேரம் அந்த பக்கம் ரஜினியோடு "அண்ணாமலை"யில்... நண்பன் அசோக்கின் மகனாக வரும் போது இளமை பளிச்சிட்டது. இன்முகம் வசீ-கரண் தான் என்று சொன்னது.

"துள்ளித் திரிந்த காலம்" படத்தில்..." எங்கடா போயிட்டு வந்த...?" என்று அப்பா ரகுவரன் கோபமாக கேட்க... "வெளிய" என்று ஒரு விட்டேத்தியான பதில் சொல்லி விட்டு பொதுவாக பார்ப்பார். விரக்தியின் நோக்கு அது. "வெளியன்னா எங்க...?" என்று இன்னும் ரகுவரன் அழுத்த... "வெளியன்னா வெளிய" என்று இன்னும் அழுத்தும் கரண்... "வெளிய" என்று கத்தி விட்டு பட்டென்று துண்டை தோளில் போட்டு விருட்டென்று நகருகையில் ஒரு கணம் ரகுவரனை தூக்கிச் சாப்பிட்டது போல தான் இருந்தது.

திரும்பவும் காலையில் வெளியே கிளம்புகையில்... "எங்கடா போற" என்று மீண்டும் அப்பா வழி மறிக்க.. அதே பதில். திரும்பவும் அதே கேள்வி அழுத்த... அதே "வெளிய..." உள்ளிருக்கும் வேலையில்லாத இளைஞனை கண் முன் நிறுத்தும். கதைகளின் பாத்திரத்துக்கு கனமான கச்சித வடிவைமைப்பு கரண் என்னும் நடிகன். தன் பலம் அறிந்த பாதையில் பயணிக்கையில் தான் தூரம் அருகில் வருகிறது. கரண் பலம் அறிந்தும் பாதை மாறியது ஏனோ.

"தம்பி விட்டோத்தி சுந்தரம்" படத்தில் ஹீரோ. ஆனால் ஒரு ஹீரோவுக்குண்டான வடிவத்தில் மாட்டாமல்.. கதைக்குப் பொருந்திய நாயகனாகத்தான் இருப்பார். அதுவும்.. கண் பறி போகும் காட்சியில்.. முதுகெலும்பு உடைந்து நொருங்குகையில்... உருண்டு புரண்டு தரையில் நெளிந்து துடித்து கத்திக் கதறும் போது இந்தக் கலைஞனுக்கு சினிமா கதவுகள் இன்னும் கொஞ்சம் நன்றாக திருந்திருக்க வேண்டும்... என்று ரசிக மனம் விரும்பியது. "கொக்கி" யில் மாட்டாமல் இருந்திருந்தால்... இன்னும் இன்னும் பல வெரைட்டி கரண்களை கண்டிருக்க முடியும்.

"நிலா மேடம் நிலா மேடம்" என்று இயலாமைக்கும் இருத்தலுக்கும் இடையே தடுமாறும் ஒரு விளிம்பு நிலை இளைஞனை கண் முன் கொண்டு வந்த "கோகுலத்தில் சீதை" கரண்- ஐ மறக்கவும் முடியாது. அந்தப் பாத்திர காத்திரத்தை மறுக்கவும் முடியாது. குடும்ப பாரம் சுமக்கும் முதுகின் வழியே துடிக்கும் ஒரு பாவப்பட்ட இதயத்தை கரண் வெகு நுட்பமாக துடிக்க விட்டிருப்பார்.

துக்கித்து..." அன்பே தெய்வமே.. கண்டேன் பூமி மேலே..." கடற்கரையின் நீல பொழுதில்... உள்ளம் மடங்கி பாடும் கரண் சுவலட்சுமியின் முன் கை கட்டி நிற்கும் பாங்கில் தாழ்வு மனப்பான்மையின் உருவமாக தன்னை உருக் கொண்டிருப்பார். காதலின் கருணையற்ற வடிவம் அந்த "ஐசி மோகன்" பாத்திரத்தை சூழ கரண் எனும் நடிகன் நியாயம் செய்திருந்தார்.

பிரபுக்கு பிறகு குண்டாக அழகான நடிகர் கரண் என்றால் நம்பலாம். ஒரு கட்டத்தில் இந்த பக்கம் விஜய் அந்த பக்கம் அஜித் என்று இருவருக்குமே எதிர்மறை நாயகனாக வந்த கரணை அந்தந்த பாத்திரமாகவே ரசிக்க முடியும். உடல்மொழி மாற்றமோ... ஒப்பனைகளில் புதுமையோ எதுவுமே இல்லாமலே... எந்த ஒரு பாவனையையும் முகத்தில் கொண்டு வந்து விடும் கரண்- ஐ எத்தனை பாராட்டினாலும் தகும்.

ஒரே கால கட்டத்தில் "கலர் கனவுகள்" படத்தில் குஷ்பூவுக்கு ஜோடி. "துள்ளித்திரிந்த காலம்" படத்தில் குஷ்பூக்கு தம்பி. எந்தவொரு வளையமும் இல்லாமல்... தான் நடிக்கும் படங்களின் பாத்திரத்துக்கு தனி வடிவம் தந்து விடும் கரண்-ஐ குண்டு ரகுவரன் என்று கூட சொல்லலாம்.

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால்... தனக்கான அடுத்த லெவல் அங்கீகாரத்தை அவர் உருவாக்கி இருக்க முடியும். சினிமாவின் சாபம்... இமேஜ் என்ற வட்டத்துள் எப்போதும் சுழலும் சூனியம் கொண்டது. சிலர்க்கு சூனியம்... மிகக் கடுமையாக வேலை செய்யும். அப்படி சூழ்ந்து கொண்ட வட்டத்தில்... அவர் சிக்கியிருக்க கூடாது.

குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் பல படங்களில் நடித்த கரண்... இரண்டு முறை சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதும் வாங்கி இருக்கிறார்.

"ராமன் அப்துல்லா" வை விட்டு கரண்- ஐ கடக்க முடியாது. பாலு மகேந்திராவின் திரையில்... இளையராஜாவின் இசையில்... "முத்தமிழே முத்தமிழே.. முத்த சத்தம் ஒன்னு கேட்பதென்ன..." பாடலின் கூடல்... பருவத்தின் தேடல். காதலிக்க தோன்றும் போதெல்லாம்.. கரணும் அந்த அழகியும்... மனதுக்குள் வந்து போவதை திரைத் தாண்டியும் தவிர்க்க முடியாது. தவிக்க செய்யும்... புசுபுசு குளிர் அவர்களில் ஊடுருவும்.

மெலிதான மெய்ம்மறத்தல் நிகழும் முகமும் கூட... கரணுக்கு.

தமிழ் நாடு அரசின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை " மலையன்" படத்துக்காக பெற்றார்... என்பது அவருள் எப்போதும் ஒரு நல்ல நடிகன் விழித்துக் கொண்டே இருக்கிறான் என்பதற்கு உதாரணம். ஹீரோ வில்லன் என்ற வட்டம் கரணுக்கு வேண்டாம்.

பாத்திர காத்திரம் இருந்தால்.. இன்னும் அடித்தாடலாம். ஒரு நல்ல நடிகனை ஹீரோ வளையம் போட்டு ஒன்றுமில்லாமல் செய்து விட கூடாது. பளீர் புன்னகையோ... பக்கா கொடூரமோ... மிக லாவகமாக வார்த்தைகளில் வசீகரம் கூட செய்து விடும் கரண்... மீண்டும் திரையில்... தனக்கான இடத்தை... நிரப்பிட வேண்டும் என்பது தான்.. அவரை ரசித்த பொன் மனம் விரும்புகிறது.

- கவிஜி

Pin It