vidharth actorமாதவனின் நண்பனாக ஒரு சின்ன பாத்திரத்தில் "மின்னலே" படத்தில் தான் முதல் சினிமா பிரவேசம். "லாடம்" படத்தில் அடியாள் நண்பர்களோடு ஒருவனாக ஒரு நண்பன் பாத்திரம். கதாநாயகனைப் பார்த்து... "நான் என்னடா பண்றது... நானே ஒட்டிக்கிட்டு இருக்கேன்..." என்பது போல ஒரு வசனம்.

பிற்பாடு... விதார்த் என்ற நடிகனை சினிமா உலகம் கண்ட பிறகு தான் நம் கவனத்துக்கே மேற்சொன்னக் காட்சி வந்தது. அப்படி ஒரு துக்கடா ரோல். பிரபு சாலமோனின் "கொக்கி" யில் கூட சிறு வேடத்தில் சிருங்காரம் செய்திருப்பார். தளபதியின் "குருவி"யில் கூட ஓர் அடிமை பாத்திரம்.

ஆனால்... "மைனா" என்றொரு படம்.. எல்லாவற்றையும் மாற்றிப் போட்டது. நடிக்க தெரிந்த... தியேட்டர் தெரிந்த ஒரு கலைஞனை நமக்கு அறிமுகப்படுத்தியது.

"மைனா" படத்தில் கூட ஆரம்ப காட்சியில்... யார்டா இந்த புது முகம்... என்னவோ மாதிரி இருக்கே என்று தான் இருந்தது. ஆனால் படம் அடுத்த அரை மணி நேரத்தில் அடுத்த முக்கால் மணி நேரத்தில் விதார்த்தோடு நாம் ஒன்ற ஆரம்பித்தோம்.

ஸ்டார் வேல்யூவைத் தேடி ஓடும் பொதுவான சினிமா அமைப்பிலிருந்து விலகி.. தனக்கென ஒரு தகவமைப்பை உருவாக்கிக் கொண்டவர் விதார்த்.

"குற்றமே தண்டனை" யில்... ஒரு சிறு வட்ட அளவில் மட்டுமே கண் தெரியும் வினோதமான பார்வைக் குறைபாடு உள்ள பாத்திரத்தில் பார்த்துப் பார்த்து நகர்ந்திருப்பார். படத்தில்... கண் பார்வையைச் சரி செய்ய ஆரம்பத்தில் நிகழும் ஒரு கொலையில் இருந்து எடுத்துக் கொள்ள தோன்றும் தன் வாழ்வின் மீதான தன்னியல்பை பிறகு எதுவரைக்கும் சென்று மாற்றியமைக்க முடியும் என்று மெல்ல மெல்ல கொலைக் குற்றத்துக்குள் செல்லும் பாத்திரத்தில் ஆடாமல் அசையாமல்.. தேனீர் குடித்துக் கொண்டே நடத்தியிருக்கும்... லாவகம்... எளிய மனிதனின் தன்னிறைவுக்கு செய்யும் தற்காப்பு போராட்டமாகவே இருக்கும்.

தஸ்தாவெஸ்கியின் "குற்றமும் தண்டனையும்" நாவலின் மூலத்தில் எடுக்கப்பட்ட "குற்றமே தண்டனை" ... சட்டத்திடமிருந்து புத்திசாலித்தனமாக தப்பித்துக் கொண்டாலும்... நாயகன் செய்த குற்றமே தண்டனையாக மாறுவதை சிறந்த திரைக்கதை மூலமாக காட்சி படுத்தி இருப்பார்கள்.

விதார்த் என்ற நடிகனை முழுமையாக வெளிப்படுத்திய பாத்திரம். மெல்ல மெல்ல தன் இயல்பிலிருந்து விலகி... சூழலுக்குள் தன்னை பொருத்திக் கொள்ளும் குற்றத்தின் நீட்சியை இயலாதவன் உடல்மொழியில் கொண்டு வந்திருக்கும் வித்தை... விதார்த்துக்கு நன்கு வரப்பற்றிருக்கிறது.

"ஒரு கிடாயின் கருணை மனு" படத்தில்... திருமணம் ஆன கையோடு குல தெய்வத்திற்கு கெடா வெட்ட கிளம்பும் சொந்தக்கார கூட்டத்தில்..... சிக்கி கொண்டு படும் பாடு... படம் முழுக்க எளிய மனிதர்களின் எளிய வாழ்வின் தொன்று தொட்ட தொடரை நக்கலாகவும் பகடியாகவும் போட்டு பிளந்திருப்பார்கள்.

எதிர்பாராமல் நடக்கும் விபத்து எப்படி ஒரு கிடாயை கடைசி வரை காப்பாற்றுகிறது என்பதை பல கட்டுடைப்புகள் மூலமாக நிகழ்த்திக் கொண்டே இருக்கும் திரைக்கதை யுக்தி அபாரம்.

தனக்கான வட்டத்துக்குள் இறங்கி மிக லாவகமாக நடிக்க விதார்த்திற்கு நன்றாக வருகிறது. உடல் மொழியில்.... பெரிதாக அலட்டிக் கொள்தல்... பாடி ஏற்றி இறக்குதல் போன்ற எந்தவிதமான உடல் ஒப்பனைகளும் இல்லாமல்... முகபாவனையில்... வசன போக்கில்... தன் பாத்திரத்தை நிலை நிறுத்தி விடும்... ஆற்றல் விதார்த்திற்கு வாய்த்திருக்கிறது.

"குரங்கு பொம்மை"யில்.. அப்பாவைத் தேடி அலையும் மகனாக நகரத்தில் நரகம் சுமக்கும் உடல் தேர்ந்த நடிப்புக்கு சல்யூட் அடிக்கலாம். படத்தில் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க... கதையின் வேகம் சூடு பிடிக்கும் விதமாக... விதார்த் பாத்திரத்தின் கோபம் உச்சத்துக்கேறும்.

துண்டு துண்டாக்கின அப்பா உடலைத்தான் படம் நெடுகிலும் அந்த பேக்கில் சுமந்தலைந்தோம் என்று... தெரிய வருகையில்... அழுகையும் ஆத்திரமுமாக அமைதியாக நேர்மை செய்திருப்பார். சிறந்த திரைக்கதைகள் வெகு நுட்பமாக நாயகன் முதுகில் சிறகுகளைப் பொருத்திக் கொள்ளும் என்பதை விதார்த் அறிந்திருக்கிறார்.

இறுதியாக வில்லனுக்கு தரும் தண்டனையில்... அப்பாவை இழந்த துக்கமும் அப்பாவின் கொலைக்கு பழி எடுக்கும் வெப்பமும்... வில்லன் மனதுள் இருக்கும் குரங்கு பொம்மையைக் குலை நடுங்கச் செய்யும். நாமும் கூட பதறலோடு தான் படத்தைப் பார்த்து முடிப்போம்.

கதாநாயகன் என்ற வட்டத்தை விதார்த் எப்போதோ உடைத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். கதை தான் நாயகன். பாத்திரத்துக்கு தன்னை பொருத்திக் கொள்ளும் நடிப்பு வேட்கை... தியேட்டரில் இருந்து வந்ததால் அவருக்கு அதிகமாகவே இருக்கிறது.

"வீரம்" படத்தில் அஜித்க்கு தம்பியாக... நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த "காற்றின் மொழி" படத்தில் நாயகனாக... "ஜன்னல் ஓரம்" படத்தில்... எதிர்மறை பாத்திரத்தில்... திரையை சக நடிகர்களோடு பகிர்ந்துக் கொள்ளும்... "விழித்திரு" போன்ற படத்தில்... என்று ஒரு பாத்திரமாக... எங்கெல்லாம் தனக்கு தீனி கிடைக்கிறதோ அங்கெல்லாம்... தன்னை இணைத்துக் கொண்டு இயங்குகிறார். சினிமாவின் மொழி அறிந்த பிறகு ஸ்டார் பிம்பம் தானாக உடைபடும்... என்பது விதார்த்தின் வெளிப்படை.

விதார்த் நடிப்பில் "காடு" படத்தை முக்கியமான படமாக கருதலாம்.

பொதுவாக... மற்ற நாயகர்கள் நடிக்க தயங்கும் பாத்திரத்தில்... தன்னை கச்சிதமான பொருத்திக் கொண்டு பாத்திரத்துக்கு நேர்த்தியும் நேர்மையும் செய்யும் கலைஞன் விதார்த். கூத்துப் பட்டறையில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் இயல்பாகவே ஏற்பட்ட பக்குவமாக இருக்கலாம்.

ஓட்டுநராக இருந்து வாழ்வை துவங்கிய ரமேஷ் என்ற இளைஞன் விதார்த் என்ற நடிகனாக உருவாக காரணமாக இருந்தவர் "கூத்துப்பட்டறை முத்துசாமி அவர்கள்" என்றால் அது தகும்.

தொடரட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கும் பக்குவம். நல்ல கதைகள் இருக்கும் வரை நல்ல நடிகர்கள் இருந்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

அந்த வகையில் விதார்த் படங்கள் மெல்ல பேசும். ஆனால்... ஒரு போதும் ஊமையாகாது.

- கவிஜி

Pin It