valparai busகுத்து பாட்டுமில்லாமல்... மெலடி ஆகவும் இல்லாமல் இடையே ஒரு வகை அடி பாடல் இருக்கிறது. 

பெரும்பாலும்... பேருந்துகளில் இந்த பாடல்கள் தான் நம்மை போட்டு தாக்கும். மினி பஸ்களில்... கிராமத்து வேன்களில்... இந்த வகை பாடல்கள்… நிஜத்துக்கும் கற்பனைக்கும் இடையே நிறுத்தங்களில் இறங்கி ஏறி என்று ஊர் ஊராய் ஊற்றெடுக்கும். 

என்ன மனநிலையில் நாம் பயணத்தை ஆரம்பித்திருந்தாலும்... அது மெல்ல மெல்ல காணாமல் போய்... பாடல்களின் வழியே அந்த பயணத்தில் வாழ கற்றுக் கொள்வோம்.

புன்னகை… ரொமான்டிஸம்... கண்களில் பேசி பார்ப்பது… என்று முகத்தின் பாவனைகளை அகத்தில் செய்து பார்க்கும் அந்தரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும். சட்டென பேருந்து அல்லது வேனுக்குள் அமர்ந்திருக்கும் ஏதாவது ஒரு பெண்ணை அந்த பாடலில் பொருத்தி பார்க்கும் மனநிலை பேருந்து வேகத்தை விட அதிக வேகத்தில் நிகழ்ந்திருக்கும். 

பரீட்சை ஹாலில் அமர்ந்திருக்கும் கூரிய கவனிப்போடு பாடல்களில் லயித்திருக்கையில்... பக்கத்து சீட்காரர் சட்டென தெரிந்தவர் போல ஆகி இருப்பார். காணும் காட்சியெல்லாம் அழகாகி முகத்தில் மோதும் ஜன்னல் காற்றில் எல்லாம் சமாதானம் மட்டுமே. அமைதி… புன்னகை... சாந்தம்... கனிவு என்று அந்த பயணத்தில் கொள்ளும் இசைச் செருகல்கள் தேஜஸை கூட்டி இருக்கும்.

அது மட்டுமல்லாமல்... பயணங்களில் நடுவே ஏதாவது ஓர் ஊரில் தேநீருக்காக வண்டியை நிறுத்தும் போது... பச்சை பல்பெரிய புள் வால்யூமில்... இந்த மாதிரி பாடல்களை அங்கே இருக்கும் தேநீர் கடைகளில் ஒலிக்க விட்டிருப்பார்கள்.

பெரும்பாலும் இளையராஜா பாடல்கள் தான்... நிறம் மாறி மாறி தெறித்துக் கொண்டிருக்கும். இசை ராஜாவின் இசை நுணுக்கத்தை ஜன்னல் திறந்த பெருவெளியில் இரவு அள்ளி வீசும் நட்சத்திரங்களிடையே உணர முடியும். நள்ளிரவு கூட கூட பாடல்களின் அடர்த்தி பரந்து விரியும். பளிச்சென வெளிச்சம் பூசிய இசையில்... குட்டி பகல் ஜிகினாவில் மினுங்கும்.

காதோரம் லோலாக்கு... கதை சொல்லுதடி.... 

வெச்சாலும் வெக்காம போனாலும்... மல்லி வாசம்... 

ஒரு கோல கிளி ஜோடி தன்னை தேடுது தேடுது... மானே...

பூவான ஏட்டத்தொட்டு... பொன்னான எழுத்தாலே... கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி... போட்டேனே...

நின்னுக்கோரி வர்ணம்... வர்ணம்... இசைத்திட என்னைத் தேடி வரணும்...

என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி...

சீவி சினுக்கெடுத்து... பூவை முடிஞ்சு வந்த புது பொண்ணே...

அழகிய நதியென.. அதில் வரும்...  

போன்ற பாடல்கள்… உள்ளிருந்து கிளர்த்தி மயக்கும் இளமை செய்து கொண்டிருக்கும். அத்தனை நேரம் இருந்த பயண களைப்பு பட்டென நீங்கி விடும். பயண களைப்பின் ஆசுவாசத்தில்... பரபரவென தென்றல் பூசியது போல உடலும்... மனமும்... பூரித்து போகும். 

இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே அமர்ந்து விடலாமா என்று கூட தோன்றும். அதுவும் அந்த பச்சை வெளிச்ச சூழல் அங்கே தனி தனியாக தவங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும்.

ஆங்காங்கே நிற்கும் பேருந்து முகத்தில் எல்லாம் பச்சக் என்று பருவம் பூத்தது போல தோன்றும். டீ குடிப்போர்… காபி குடிப்போர்... ஸ்னேக்ஸ்... கூல் ட்ரிங்க்ஸ்... எது சாப்பிடுவோரும்... மனதில் பாடல்களை அசை போட்டுக் கொண்டுதான் இருப்பார். பெரும்பாலும் அந்த சூழலில் யாரும் யாரிடமும் பெரிதாக பேசிக் கொள்ள மாட்டார்கள். கவனம் முழுக்க பாடலில் தான் இருக்கும். முகத்தில் கூட காதுகள் முளைத்தது போல பார்ப்பார்கள்.

பேருந்து… நிறுத்தத்தில் நிற்கையில்... வேறு எங்கோ ஏதேச்சையாக இருக்கையில்... நம்மை கடந்து போகும் பேருந்தில் இதே போல ஒரு பாடலின் நடு வரி சட்டென உள்ளம் புகுந்து படபடவென பூத்து விடும்.

பிறகு அது என்ன பாடல் என்று கண்டு பிடிக்கும் வரை இசை வண்டின் ராஜ ரீங்காரம் விடாது கருப்பு தான். இறங்கும் முன் பேருந்தில் கேட்ட பாடலோடு அன்றைய தினம் முழுக்க முணங்கிக் கொண்டே எத்தனையோ நாட்கள் இருந்திருக்கிறேன். 

பாடல்கள் மனித கண்டுபிடிப்பில் மகத்தானது. மனோ நிலையை மாற்றி விடும் வல்லமை அதற்கு உண்டு. மெல்லிய நீரோடையில்... மிதக்கும் நினைப்பில்... வரி வரியாய் நிகழும் பயணங்களில்... பாடல்களின் வலிமை மிக துல்லியமாய் அனுபூதி செய்து விடுகிறது.

பறப்பது தான் நிம்மதி பறவைக்கு என்பதாக எண்ணங்களை கிளறி விடும் பாடல்களின் நிலையில் நித்திரைக்கு பதில்... நீக்கமற நாமே இருப்போம். அடுத்த முறை கவனித்து பாருங்கள்... உற்று நோக்கலில்... நாம் தான் அது. பச்சை பூத்திருக்கும் இசை.

- கவிஜி

Pin It