valparai locationசினிமா நம் வாழ்வில் இரண்டற கலந்த கலை.

நாம் அதை தவிர்த்து விட்டு நம்மை... நம் நாஷ்டால்ஜியை அசை போடவே முடியாது. அப்படி சினிமா என்ற பிம்பம் ஒரு வகை பிரம்மாண்டத்தைக் கொண்டிருக்கிறது. அந்த பிரம்மாண்டம் நம் ஊரைச் சுற்றி சுற்றி அடிக்கடி படமாக்கப்படுவது நாம் அறிந்ததே. இன்றைய நவீனம்.. ஷூட்டிங்- ஐ போர் ஆன விஷயம் என்று தெளிவுப் படுத்திவிட்டது. ஆனால்... முன்பொரு காலத்தில்... திரையில் நடிகர்கள் எப்படி வருகிறார்கள் என்பதை ஆச்சரியமாக பார்த்த கால கட்டத்தில் ... ஷூட்டிங் என்பது பிரம்மாண்டமான வேடிக்கை. மன பற்கள் சிரிக்க மூளைக் கண்கள் விரிய கொண்டாடிய கொண்டாட்டம்.

கோடம்பாக்கத்தின் செல்ல ஊர்கள் என்றால் ....ஒன்று 'கோபி' சுற்றிய பகுதிகள். இன்னொன்று "ஆழியாறு" சுற்றிய பகுதிகள்.

அப்படி..அதன் நீட்சியாக வால்பாறை......அதை சுற்றிய பகுதிகளில் நிறைய படப்பிடிப்பு நடத்திய படங்கள் இருந்தாலும்.... நினைவில் உள்ளவைகளை...... இங்கே அசை போடுகிறேன்... ஆசை யாரை விட்டது என்ற சினிமாக்காரனின் முதுமொழியோடு.

"வேலுச்சாமி" என்றொரு படம்.

சரத்குமார் நடித்தது. அந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள்......வால்பாறையில் இருந்து 22 கிலோ மீட்டரில் இருக்கும் "சோலையார் டேம்" கெஸ்ட் ஹவுசில் தான் படமாக்கினார்கள். அவர்களின் வீடே அந்த கெஸ்ட் ஹவுஸ்தான் என்பது போல காட்சி அமைப்பு இருந்தது. வாசலில் கூட ஒரு பாடலை படமாக்கினார்கள். கவுண்டமணி.... செந்தில்....சரத்குமார்..... மனோரமா எல்லாரும் ஆடுவது போல.

சோலையார் டேம் நீரை பார்த்து... " நம்ம ஊர் ஆத்து தண்ணிய வெச்சுக்கிட்டே இவ்ளோ வெள்ளாமை பண்ணிட்ட..!" என்று கூட வசனம் வரும். நமக்கு அய்யோன்னு இருக்கும். அது ஆறு இல்ல.. டேம் என்று...வாய் முணுமுணுக்கும்.

அப்படியே உருளிக்கல் கீழ்பிரட்டு தாண்டி மேல் பிரட்டை சார்ந்த நீர்த்தேக்க பகுதியில் சரத்குமார் வினிதா சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி கூட படமாக்கப்பட்டது.

"செம்மீனே.....செம்மீனே.....உன்கிட்ட சொன்னேனே..." பாடல் சோலையார் டேம்- ஐ சுற்றி எடுத்தது தான்.

அடுத்து வேற என்ன படம் என்று யோசிக்கையில்... மனம்... அப்படியே 'புன்னகை மன்ன'னுக்கு பாய்ந்தோடுகிறது.... அதிர்ப்பள்ளி நீராக.

புன்னகை மன்னன் படம் எல்லாருக்குமே தெரியும். அந்த அருவிக்குள் கமலும் ரேகாவும் தற்கொலைக்காக விழும் காட்சியெல்லாம் அதிரப்பள்ளியில் எடுத்தது என்று. "சும்மா அதிருதில்ல" என்று அப்போதே தமிழ் சினிமாவை கலக்கிய காட்சி அது. கமலும் ரேகாவும் மலை உச்சியில் இருந்து குதிக்கும் காட்சியை அத்தனை சீக்கிரம் தமிழ் ரசிகர்கள் மறந்து விடுவார்களா..!

கிளைமாக்சில்.... கார்- பாம் வெடித்து......அதுவும் அதே அருவியில் தானே விழுந்து தன்னைத் தீர்த்துக் கொள்ளும். ஆதலால் காதல் செய்வோம் என்பது கத்தி அழும் ஆலாபனை அன்றும் இன்றும் என்றும் என்று மன உச்சியில் நின்று கத்துகிறேன்.

"காதல் வந்துருச்சு.....ஆசையில் ஓடி வந்தேன்..." பாட்டு உள்பட "கல்யாண ராமன்" படத்தில் பெரும்பாலான காட்சிகள்....வால்பாறையில் இருக்கும் 'கருமலை' என்ற எஸ்டேட்டை சுற்றி...மற்றும் 'இரைச்சல்பாறை' என்ற இடத்தில் உள்ள பங்களாவில் படமாக்கப்பட்டது என்றும் சொல்வார்கள். படத்தில்.... கமலை கொல்வதற்கு வில்லன் கூட்டம் விரட்டிக்கொண்டு வரும் சாலை அட்டகட்டி கொண்டை ஊசி வளைவுகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது. தேயிலை அல்லது மலைச் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தி.... அது..... படமாகவும் வந்திருந்தால் ... அது...... .ஊட்டி. ..... மூணாறு என்று பொது மக்கள் பேசுவதைக் காதில் ரத்தம் வழிய கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம்.....யாரென்று தெரியாதவர்களிடம் கூட நானே சென்று சொல்லி இருக்கிறேன். "இல்ல இல்ல...இது எங்க வால்பாறை....என்று.....!"

"ராஜாதி ராஜா..." படத்தில்.. ரஜினியின் ஒரு கதாபாத்திரம் பெயரே 'வால்பாறை வரதன்'தான்.

"சிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடுக்குது
வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள்
மனம் விட்டு சிரிக்கின்றதே"
இப்படி ஆம்பிக்கும்... இளையராஜா கிறுகிறு.

இன்முகம் சிவக்க ... குருவிகள் கொண்டு ... பறவைகள் கொண்டு .... கிளிகள் கொண்டு ... சிறகசைக்க .... அடுத்த வரியில் ...... மனிதனின் ஆழ்ந்த நிலையை வெளிக்கொணரும் காடும் மலையும் அங்கே ஆகிருதி செய்யும்.

அங்கு மலையும் மௌனமும் திரும்பும் பக்கமெல்லாம் திளைக்கும்... தன்மத்தமும் உன்மத்தமுமென தழைக்கும்.

"மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி
மலமுடியினில் பனி வடியுது வடியுது
மண் மடங்குதம்மா
தலையனயினில் மனம் கரையுது கரையுது
கண் மயங்குதம்மா"... இப்படி காணும் காடெல்லாம் கவிதை பதியும்.

மலையோர கவி பாடும்..... குருவி.. பறவை.. மனிதன்....எல்லாம்.. நம் காட்டுக்குள் எடுத்தது தான்.

"பச்சமலை பூவு .... இது உச்சி மலைத் தேனு ..." பாடல்... ரேவதி ஆடும் ஊஞ்சல் எல்லாமே... ஆழியார் பகுதி தான். ஆழியார் வானத்தில் .... நீருண்டு நிலமுண்டு... நித்தியமுண்டு ... என்றெல்லாம் யோசனையூரும் அற்புத வனம் அங்கே நினைவில் கால்வாய் நிறைக்கும்.

"வானத்தை போல" மற்றும் "சூர்யவம்சம்" படத்தில் வரும் வீடு... ஆனைமலை அடிவாரத்தில்... இருக்கும்... ஷூட்டிங்குக்காகவே ஒதுக்கப்பட்ட வீடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னும் நிறைய படங்களில் இந்த வீட்டை பார்த்திருக்கிறோம். "தனுஷ்" நடித்த "மாப்பிள்ளை" படத்தில் கூட மனிஷா தங்குவதற்காக ஏற்பாடு செய்யும் வீடாக இந்த வீடு வந்திருக்கிறது.

"உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா.... உதவிக்கு வரலாமா... சம்மதம் வருமா.... ஹோ..... சந்தேகம் தானோ..." என்று 'ரவிச்சந்திரன்' 'காஞ்சனா" வையும்..."ராஜ ஸ்ரீ" யையும் வம்பிழுத்து பாடும் பாட்டு... அன்றைய கருப்பு வெள்ளை அட்டகட்டி வளைவுகளில்..... வண்ணம் பூசியது என்றால்....அது கனவு தாண்டிய ஓவியம். அந்த படத்தில் வரும் அவர்களின் வீடே ஆழியார் கெஸ்ட் ஹவுஸ்தான். அந்த கெஸ்ட் ஹவுஸ் நிறைய படங்களில்..... வீடாகவோ.... பங்களாகவோ வந்திருக்கிறது.

aliyar guest house"என் ஜீவன் பாடுது" படத்தில்... கார்த்திக்-ஐ கலாய்த்து பாடும் பாட்டு அங்கு எடுத்ததுதான்.

சத்யராஜ் நடித்த "வண்டிச்சோலை சின்ராசு" படத்தில் வரும் ஒரு சண்டைகாட்சி... வால்பாறை நோக்கி செல்லும் பேருந்துகள் தேநீர் குடிக்க நிறுத்தும் ஆழியாரில் உள்ள ஒரு தேநீர் கடைக்கு முன்னால் தான் படம் பிடித்தார்கள். நானே அதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். கீழே விழுந்திருக்கும் சத்யராஜ் ... மேலே படர்ந்திருக்கும் ஒரு போலீஸ்காரரின் கன்னத்தில் மாறி மாறி அறைவது போல காட்சி. நாங்கள் டீ குடித்து வடை தின்று முடிக்கும் வரை அதே காட்சி தான். அப்பவே போதும் போதுமென்றாகி விட்டது ஷூட்டிங்.

அக்காமாலை புல்வெளிகளில் யாருக்கும் அனுமதி இல்லை என்று தான் நம் அறிகிறோம்.

ஆனால்...அங்கும் நிறைய படங்கள் எடுக்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன்.

"சின்ன பூவே மெல்ல பேசு" படத்தில் வரும் "சங்கீத வானில் சந்தோசம் பாடும்... சிங்காரபூங்குயிலே...." பாடல்...அங்கு எடுத்ததுதான் என்று யோசிக்கிறேன்.

சமீபத்திய "கயல்" படத்தில் கூட கதாநாயகனும்.. நண்பனும்.. கூடாரம் அமைத்து இரவு தங்குவது போல ஒரு காட்சி வரும்... அங்கு எடுத்ததுதானோ என்று ஐயம் எனக்கு உண்டு. அக்கா மலை புல்வெளி கெஸ்ட் ஹவுசில் தான் மந்திரப் புன்னகை படம் எடுத்திருக்கிறார்கள்...என்று வால்பாறை நண்பர் ஒருவர் கூறுகிறார். 'நாட்டாமை' படத்தில் 'கொட்டபாக்கும் கொழுந்து வெத்தலையும்' பாடல் கூட அக்காமலை புல்வெளியில் படமாக்கப்பட்டது. "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா" பாடல் கூட அக்காமலை புல்வெளியில் எடுத்தது தான் என்கிறார் இன்னொரு நண்பர்.

"சாமுராய்" படத்தில்.... மூங்கில் காடுகளே ....பாட்டில்... உருளிக்கல் பெரியகடை- அந்த ஒற்றை மரம் வரும்.

"கேரளா கஃபே" என்றொரு மலையாளப் படத்தில் ஆரம்ப காட்சியே வால்பாறை காந்தி சிலையை காட்டுவார்கள். பேருந்து வந்து காந்தி சிலையை சுற்றி நிற்கும். பேருந்தில் சீனிவாசன் ஏறுவார். பேருந்து ஸ்டான் மோர் தாண்டி உருளிக்கல் வழியே சோலையார் டேம் போவது போல காட்சி இருக்கும். சோலையார் டேமில் காக்கா கடையில் டீ குடித்து விட்டு.. மளுக்கப்பாறை வழியாக செல்வது போல காட்சி நகரும். இப்போது..... மம்மூட்டியும் பேருந்தில் இருப்பார்.

சேரன் கதை நாயகனாக நடித்த கரு பழனியப்பனின் "பிரிவோம் சந்திப்போம் " படம் அட்டகட்டியை சுற்றி எடுத்த படம் என்பது கூடுதல் தகவல். "திருமதி பழனிசாமி" படம்... அட்டகட்டியில் எடுத்திருக்கிறார்கள் என்று இன்னொரு சினிமா நண்பர் கூறுகிறார்.

சினிமாவுக்கான ரம்மியம் நிறைந்த இடம் வால்பாறையும் அதன் சுற்று பகுதிகளும் என்றால் அது மிகை இல்லை.

பனி மழை வெயில் குளிர் என காணும் போதெல்லாம் காட்சிக்குக் காட்சி ரசனை கூட்டும் அத்தனை அற்புதங்களும்.... அங்கே.....அங்கே தான் இருக்கின்றன. கேமரா கண்களின் ராட்சச தனங்களில்.... மெல்லினம் வீசும் வாடை காற்றும் மென் பனி துளிர்க்கும் புல்லின தலையசைவும் மிக இயல்பாய் அதிகாலையை பூக்க செய்யும். அந்தி மாலையில் ஏக்கம் கொள்ளும். பொன் மதியத்தில்.... தன் மயக்கம் கொள்ளும். அதிசயம் என்னவெனில்.... அலையாடும் தலையாட்டல் போல... திரும்பும் பக்கமெல்லாம்... கேமரா கண்கள் தசை ஆட்டும். தவம் பூட்டும்.

இன்னும் இன்னும் சினிமா எடுக்கும் எல்லா தகவமைப்பும் கொண்ட வால்பாறை... பொக்கிஷம்.

கண் சிமிட்டுவதைப் போல படம் பிடியுங்கள். இந்த வரலாறு பதியப்பட வேண்டும்.

- கவிஜி

Pin It

SPB tamilஎல்லாவற்றையும் லாப நஷ்டக் கணக்கு கொண்டு பார்க்கும் முதலாளித்துவ உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒருவரிடம் பேசுவதற்கும், சிரிப்பதற்கும், நட்பு பாராட்டுவதற்கும் நமக்கு ஆதாயமான ஏதோ ஒன்று அவரிடமிருந்து தேவைப்படுகின்றது. அது இல்லாத போது நாம் அனைத்தையும் புறக்கணிக்கின்றோம்.

உன்னிடம் பணம் இல்லையா? உன்னிடம் அதிகாரம் இல்லையா? நீ என் சாதி இல்லையா? நீ என் மதமில்லையா? நீ கருப்பனா? நீ என் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லையா? என ஒவ்வொரு மனிதனையும் அடையாளப்படுத்தி நம் சமூக உறவுகளை கட்டமைத்துக் கொண்டோம் என்றால் அது சுயநலம் சார்ந்த வறட்டுத்தனமான வாழ்க்கையாகவே இருக்கும். அது போன்று தம் வாழ்வை அமைத்துக் கொள்ளும் நபர்கள் இயல்பாகவே தக்கை மனிதர்களாகவே இருப்பார்கள்.

அது போன்ற மனிதர்களை எதுவும் பாதிப்பது கிடையாது. அவர்களின் மூளை எங்கும் காரியவாதம் மட்டுமே மண்டிக் கிடக்கின்றது. தனது பேருக்கோ, புகழுக்கோ, தத்துவத்திற்கோ உதவாத எல்லோருமே இந்த உலகில் வாழ்வதற்கே தகுதியற்ற அற்பப் பதர்கள் என்றே அவர்கள் மதிப்பிடுவதால் சக மனிதனின் மேன்மையான பக்கங்களை அவர்கள் முகம் கொடுத்துப் பார்க்கக் கூட  விரும்புவதில்லை.

நீங்கள் ஒரு நல்ல பாடகராகவோ, இசை அமைப்பாளராகவோ, ஓவியனாகவோ, எழுத்தாளனாகவோ, விஞ்ஞானியாகவோ இருக்கலாம். ஆனால் நீங்கள் அதே தொழிலுக்குரிய மரியாதையோடு, நீங்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகளோடு பொருத்திப் பார்த்துதான் நீங்கள் மதிப்பிடப் படுகிறீர்களா என பார்த்தால் 99 சதவீதமானவர்களுக்கு அந்த மரியாதை ஒருபோதும் கிடைப்பதில்லை.

சாதி சார்ந்த பின்புலம், அதிகாரம் சார்ந்த பின்புலம் எல்லாவற்றுக்கும் மேலாக ஊடக வெளிச்சம் இவை இல்லாமல் போனால் இவை எல்லாம் கிடைத்த ஒரு முட்டாளைவிட நீங்கள் ஏளனமாகவே பார்க்கப்படுவீர்கள்.

இந்த உலகம் பிரபலங்களின் வாலாக பின்னால் ஓடிக் கொண்டு இருக்கவே விரும்புகின்றது. கோட்பாடுகளால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதைவிட தனி மனிதர்களின் துதிபாடிகளாக அடையாளப் படுத்திக் கொள்வதையே விரும்புகின்றது.

கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை தன் தோட்டத்திற்கும் கொஞ்சம் திருப்பி விடும் அவசரத்தில் வாழ்க்கை முழுக்க ஓர் அற்பவாதியாகவே வாழ்ந்து சாவதையே இயல்பான மனித குணமாக ஏற்றுக் கொண்டு அதன் வழியில் பிசிறு தட்டாமல் வாழ முயற்சிக்கின்றோம். உண்மையில் நாம் இப்படிப்பட்ட மனிதர்கள் மத்தியில்தான் வாழ்கின்றோம்.

ஒரு முதலாளித்துவவாதியும் ஒரு பொதுவுடைமைவாதியும் ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பில்தான் இரண்டு எதிர் எதிர் கருத்து நிலைகளோடே பயணம் செய்துகொண்டு இருக்கின்றோம். இன்னும் சொல்லப் போனால் பொதுவுடைமை சிந்தனை கொண்டவர்களைவிட முதலாளித்துவ சிந்தனை கொண்டவர்கள்தான் நம்மை முற்றிலுமாக சூழ்ந்திருக்கின்றார்கள்.

இதைவிட்டு நாம் எங்கேயும் ஓடிப் போக முடியாது. ஆனால் ஓர் உண்மையான பொதுவுடைமைவாதி நிலவும் அமைப்பு முறையை மாற்ற தொடர்ந்து முயற்சிக்கின்றான். அதன் வழியே தனது சிந்தனையையும் செழுமைப்படுத்திக் கொள்கின்றான். ஆனால் ஒரு முதலாளித்துவ சிந்தனாவாதி இந்த சமூக அமைப்பை மாறா நிலைக் கண்ணோட்டத்தில் இருந்தே அணுகுகின்றான். அவனால் ஒருபோதும் மாறும் சமூக அமைப்பைப் பற்றி சிந்திக்கக்கூட முடிவதில்லை.

அதற்காக நாம் அவர்கள் அனைவரையும் துரோகிகள், முட்டாள்கள் என ஒதுக்கித் தள்ளிவிட முடியுமா? நிச்சயம் முடியாது. காரணம் நாம் அவர்களை மாற்றத்தான் பணி செய்து கொண்டிருக்கின்றோம் என்ற எதார்த்த உண்மையைப் புரிந்து கொண்டிருக்கிறோம். அந்தப் புரிதல் இல்லை என்றால் சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள ஒருவனால் ஒருநாள் கூட தாக்குப் பிடித்து கொள்கையில் நிலையாக நிற்க முடியாது.

மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, பெரியார், அம்பேத்கர் என நாம் சமூக மாற்றத்தின் முன்னணி போர் வீரர்களாக நினைக்கும் அனைவருமே இதில் தெளிவாக இருந்ததால்தான் அவர்களால் எடுத்துக் கொண்ட கொள்கையில் வெற்றிபெற முடிந்தது.

நாம் இந்தச் சமூகத்தின் விளைபொருட்கள். இந்தச் சமூகம் முற்று முழுக்காக ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரு பொதுவுடைமை சமூகமாக மாறும்வரை  அந்தச் சமூகம் நம் மீது செலுத்தும் அனைத்து தாக்கங்களுக்கும் உட்பட்டுக் கொண்டேதான் இருப்போம். அதன் மீதான நமது போராட்டமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இசை ரசனை என்பதும் அப்படித்தான். அது இதயமற்ற உலகின் இதயமாகவும், ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெருமூச்சாகவும், முதலாளித்துவ சமூகத்தின் கொடூர மன நெருக்கடியில் இருந்து தன்னை மறக்கச் செய்யும் ஒரு அபினாகவும் இருக்கின்றது.

பொதுவுடைமைவாதிகளும் ஒரு சமூக மனிதனாக அதை ஒருபோதும் முற்று முழுக்காக புறக்கணித்து விட்டோ, கண்டும் காணாதது போலவோ இருந்துவிட முடியாது. ஆனால் மதத்தைவிட, சாதியைவிட, இனவெறியைவிட, பணக்காரத் திமிரைவிட இசை ஒன்றும் அவ்வளவு கொடூரமான அருவருக்கத்தக்க ஒன்றல்ல.

இசை என்பது போதையாகவும் பொழுதுபோக்காவும் இருக்கின்றது என்பது மெய்தான் ஆனால் அலுத்துப் போன வாழ்க்கையை அது உயிர்ப்புள்ளதாக மாற்றும் வல்லமையைப் பெற்றிருக்கின்றது.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மக்களின் சிந்தனையை மட்டுமே தட்டி எழுப்ப வேண்டும் என்ற நோக்கில் பாடும் ஒரு புரட்சிகரப் பாடகனுக்கும், இசை அமைப்பாளனுக்கும் பாடலாசிரியனுக்கும் உள்ள சுதந்திரம் பணத்துக்காகப் பாடும் பாடகனுக்கோ, இசை அமைப்பாளனுக்கோ, பாடலாசிரியனுக்கோ இருப்பதில்லை.

ஒரு இயக்குநரின் ஆபாசமான சிந்தனைக்கு வடிவம் கொடுக்க ஒரு இசை அமைப்பாளனும், பாடலாசிரியனும், பாடகனும் முற்படும் போது அவர்களின் முன்னால் நிற்பது இந்தப் பாட்டு சமூகத்தில் என்ன மாதிரியான பண்பாட்டு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைவிட இந்தப் பாட்டுக்கு தனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதாகவே உள்ளது.

அதற்காக நிச்சயம் நாம் கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும். சமூகத்தை சீரழிக்கும் கீழ்த்தரமான மலிவான உணர்ச்சிகளை ஏற்படுத்தும் பாடல்களை இசை அமைக்கவோ, பாடல் எழுதவோ, பாடவோ கூடாது என வற்புறுத்தலாம். ஆனால் அவர்கள் இசை அமைத்த, பாடிய, எழுதிய சில ஆபாச பாடல்களுக்காக ஒட்டுமொத்தமாக அவர்களின் ஆளுமையை சிதைப்பதும், ஏற்றுக் கொள்ளாமல் போவதும் தவறானது ஆகும்.

அதுவும் எஸ்.பி.பி ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே அவரின் ஒட்டுமொத்த இசை பங்களிப்பையும் உதாசீனப் படுத்துவது கோட்பாடு அற்ற வறட்டுத்தனமாகும். அவர் ஆபாசப் பாடல்களை பாடினார், ஆம் பாடினார். அதற்காக அவர் உயிரோடு உள்ளபோதே கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இன்று அவர் நம்மோடு இல்லை. இப்போது யாரும் எஸ்.பி.பி.க்கு கோயில் கட்டச் சொல்லவில்லை. அவரின் ஆபாசமான பாடல்களுக்கு கண்டனம் தெரிவிப்பது போல அவரின் பல சிறந்த நல்ல பாடல்களுக்கு வாழ்த்துபவர்களை சபிக்காமல் இருக்கலாம் அல்லவா?

அது எல்லாம் முடியாது, அவர் புரட்சிக்கு பங்களிப்பு செலுத்தவில்லை, அவர் ஒரு பார்ப்பனர், அதனால் அவர் என்ன பாடி இருந்தாலும் அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. பெரும்பாலான மக்களின் மகிழ்ச்சியின், துக்கத்தின் வெளிப்பாடாக அவர்கள் இசையும் பாடலும் இருந்தாலும் அதை மதிக்க வேண்டிய எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை, நாங்கள் சாதியைப் போலவே, மதத்தைப் போலவே தான் இசையையும் மதிப்பிடுவோம் என்றால் நல்லது அவ்வாறே மதிப்பிடுங்கள்.

ஆனால் மார்க்ஸ் அவ்வாறு இருக்கவில்லை. நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்த தனது தாயாரைக் காண்பதற்கு ஜென்னி சென்றிருந்த போது அவரது பிரிவை நினைத்து மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய கடிதத்தில் “உலகில் எத்தனையோ பெண்கள் இருக்கின்றார்கள். அவர்களில் சிலர் அழகாகவும் இருக்கின்றார்கள். ஆனால் மற்றொரு அழகிய முகத்தை அதன் ஒவ்வொரு தோற்றமும் கவர்ச்சிக் கூறும் ஏன் அதன் ஒவ்வொரு திரையும் ரேகையும் கூட என்னுடைய வாழ்கையின் மிகவும் பலமான, மிகவும் இனிமையான நினைவுகளை என்னுள்ளே கிளப்பிவிடக் கூடிய மற்றொரு அழகிய முகத்தை நான் எங்கு காண்பேன்? உனது இனிய முகத் தோற்றத்தில் என்னுடைய முடிவில்லாத துன்ப துயரங்களையும் எனது ஈடும் சீரும்  செய்ய முடியாத நஷ்டங்களையும் கூட நான் காண்கிறேன். நான் உனது இனிய முகத்தில் முத்தமிடும்போது எனது வேதனைகளையும் கூட முத்தமிட்டுத் துடைத்து விடுகிறேன்" என்று தன் அன்புக் காதலியை உருகி உருகி காதலித்து எழுதி இருக்கின்றார்.

அது மட்டுமல்ல மார்க்ஸும் ஜென்னியும் தனது குழந்தைகளுக்கு கிரிம் சகோதரர்கள், ஹாப்மான் போன்றோர் எழுதிய காட்டு தேவதைகளின் கட்டுக் கதைகளைக் கொண்ட மந்திர உலகம், ஆயிரத்தோர் இரவுகள், ஹோமருடைய கவிதைகள், நிபிலுங்ஸ் மற்றும் குட்ரன் ஆகியோரின் பாட்டுகளில் உள்ள காவியக் கதைகள் போன்றவற்றை எல்லாம் அறிமுகப்படுத்தினர்.

அவர்களின் குடும்பங்களுக்கு மிகவும் பிரியமான பிரபலமான எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் ஏயிஸ்சிலுஸ், சோபோக்கின்ஸ், தாந்தே, செர்வென்தேஸ், கோத்தே, பீல்டிங் ராபர்ட் பர்னஸ், ஷேக்ஸ்பியர், வால்டர், ஸ்காட் போன்றோரும் இருந்தனர்.

மார்க்சிடம் ஒரு போதும் வறட்டுவாதம் இருந்ததில்லை. அவர் இயல்பாகவே சிந்தித்தார், இயல்பாகவே செயல்பட்டார். ஆனால் நம்மில் பலர் வறட்டுவாதிகளாய் இருக்கின்றோம். கடுங்கோட்பாட்டுவாதிகளாய் இருக்கின்றோம். விமர்சனம் இரக்கமற்றது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவிற்கு அந்த விமர்சனம் யாரை நோக்கி எதற்கு எதிராக வைக்கப்படுகின்றது என்பதும் உண்மை.

எஸ்.பி.பியை நோக்கிய நம்முடைய விமர்சனத்தையும் குறுகிய மனப்பான்மையில் இருந்து வைக்காமல் முழுமையாக மதிப்பீடு செய்து வைக்குமாறே அன்புடன் கேட்கின்றோம்.

- செ.கார்கி

Pin It

SPB musicஒரு மனிதனால் இத்தனை பேரை சந்தோஷப்படுத்த முடியும் என்றால் இத்தனை பேரை துக்கப்படுத்தவும் முடியும். 

அது தான் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. திரும்பும் பக்கமெல்லாம் துக்க மயம். புலம்பல்கள், மரணம் இயற்கையானது, இயல்பானது. ஆனால்... செய்திக் கேட்டதில் இருந்து சொல்ல... பகிர வார்த்தையற்று வெறும் நினைவுகளோடு மட்டுமே ஐந்து மணி நேரம் வெறிக்கத்தான் முடிந்தது. வெற்றிடத்தில் இருந்து முளைத்து வரும் குரல் வழியே… நிகழ்ந்த மரணத்தை ஒலியற்ற நெடுவழியில் காண்கிறேன். செவியற்ற பொழுதுகள் நடுக்கமானவை.

எங்கிருந்தெல்லாமோ தானாக... ஒரு நானாக.. ஒரு நீயாக.. ஒரு நாமாக வரும் அவரின் பாடல்களில்... லயித்திருந்த பொழுதெல்லாம் தாண்டி வெறித்திருக்கவும்.. தனித்திருக்கவுமாக இருக்கிறது இன்றைய நிமிடங்கள். தலையில்... தவத்தை தூக்கி வைத்து விட்டு காற்றோடு கலந்து விட்ட அவரை... மூளை நழுவ மீண்டும் மீண்டும் தேடும் மனதுக்கு பதில் தெரிந்தாலும்... அவர் அளவுக்கு கேள்வி ஒன்றைச் சுமக்கத் தேவை இருக்கிறது.

வேண்டி விரும்பி அவரை மனதால் சுமக்கும் சுமைக்கு நீண்ட நாட்களுக்கு பின் கண்ணீரும் துக்கமும் பூச்சொரிகின்றன. கொரோனா... மரணங்களுக்கு நம்மை பழக்கி விட்டன... என்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர்ஸ்- ஐ ஒரு ஜென் தத்துவத்தில் கடந்து கொண்டிருந்தோம்.

இல்லை... மரணத்துக்கு நெஞ்சில் அடித்துக் கொண்டு அழும் மண் சார்ந்த மனம் சார்ந்த சக அன்பை மீட்டெடுத்திருக்கிறார் என்று தான் நம்புகிறேன். மனித மனம் ரெம்ப இலகுவானது. ஒருமுறை ஏற்றுக் கொண்டவருக்கு அது தன்னை வருத்திக் கொள்ளும்.

நாம் நம்மையும் அறியாமல் இசையோடு வாழ்ந்திருக்கிறோம். இசையாகவே வளர்ந்து இருக்கிறோம். கிட்டத்தட்ட 45 ஆண்டுகள்... நமக்கும் முன்னும் பின்னுமென நாலைந்து தலைமுறைகளோடு ஒவ்வொரு இரவும்... ஒவ்வொரு பகலும்.. ஒவ்வொரு பொழுதும்... அவரின் குரல்.. பயணித்திருக்கிறது. எப்படி இளையராஜா இல்லாத சமூகம்... பண்பட்டிருக்காதோ... அப்படி SPB குரல் இல்லாத மனமும்.. அமைதி கொண்டிருக்காது. இவையெல்லாம் கால மாற்றத்தின் அடுத்தடுத்த பெருவெடிப்புகள். 

இந்த சமூகத்தின் ஓர் அங்கம் தான் SPB. அதனால் தான் அவரின் மரணத்தைக் கண்டு மனம் பத பதைக்கிறது. ஒவ்வொரு வீட்டு டிவியிலும் ரேடியோவிலும்... தானாக முணுமுணுக்கும் உதடுகளிலும் அவர் இருக்கிறார். அதனால் தான் அவரின் இறப்பை ஏற்க முடியாமல் தவிக்கிறது மனம். அவர் பொது உடைமையாகி விட்டார். அதனால் தான் கூட்டமாய்... தனியாய்... குழுக்களாய்... எப்பக்கமிருந்தும் துக்கம் பீறிட வார்த்தையற்று நடுங்குகிறோம். 

கலைஞன் என்ன செய்வான் என்ற கேள்விக்கு இதோ பதில். நாட்டையே அமைதிப்படுத்தி விட்டான்.

"பச்சை மலை பூவு... நீ உச்சி மலைத் தேனு..." தேன் சொட்டும் நிம்மதியை ஒவ்வொரு முறையும் உணர முடிந்த காரணத்துக்கு அவரின் குரலும் ஒன்றென திரும்ப திரும்ப நினைத்துக் கொள்கிறேன். எப்போதெல்லாம் மனம் சோர்வு அடைகிறதோ... அப்போதெல்லாம்... "எவனுக்கு என்ன பலம்... எவனுக்கு என்ன குணம்... கண்டதில்லை ஒருவருமே... ஒரு விதைக்குள்ள அடைப்பட்ட ஆலமரம் கண் விழிக்கும்... அதுவரை பொறு மனமே..." வரி வழியே குரல் கர்ஜிக்க... தெம்பு கொண்டிருக்கிறேன்.

"நீ போய்ட்ட பாலு. உலகம் சூனியமாகிடுச்சு" ன்னு இசை ராஜா சொல்கையில்... சுழலும் பூமி நின்று சுழல்கிறது. அன்பு அறிவியல் தாண்டியது.

திரும்பும் பக்கமெல்லாம் அவரின் பாடல் வரிகளோடு பித்துப் பிடித்து அலைகிறார்கள்... மனிதர்கள். மௌனமற்ற மலரின் ஒற்றைத் தனிமை இப்படித்தான் பிதற்றித் திரியும் போல. திரும்ப திரும்ப அவரின் பாடல்களையே கேட்க தூண்டும் மனவெழுச்சி... மாய சூனியத்தில்.. மாட்டிக் கொண்டிருக்கிறது. வட்டத்தின் நடுவே ஒற்றைப் புள்ளி தொலைக்கவே ஒவ்வொருவரின் சூதானமும். நாட்கள் நகர அவர் மரணமும் பழகும் தான்.

ஆனாலும்... ஒரு அப்பாவின் மரணத்துக்கு ஈடானது  அது. ஒரு குருவின் மரணத்துக்கு தோதானது அது. மனிதன் இசையின் நரம்பில் ஜனித்தவன்.

6 தேசிய விருதுகள். 25 நந்தி விருதுகள்... 45000 பாடல்கள்... கிட்டத்தட்ட 16 மொழிகளில் - சாதனை சரித்திரமாகி விட்டது. எந்த முகத்துக்கும் பொருந்தும் குரல். ஓ பாசிட்டிவ் ரத்தம் மாதிரி. தகுதி உள்ள பாவனைக்கு அற்புதமாய் தன்னை கோர்த்துக் கொள்ளும். திரையில் மாயம் செய்யும்... நரை கூடாத குரலுக்கு செவி உள்ளோர் அடிமை தான். துக்கமோ... துயரமோ... காதலோ... காமமோ... அன்போ... அரவணைப்போ... எல்லாமும் குரல் வழியே நிகழ்த்த முடியும் என்று நிகழ்த்திக் காட்டிய ஒரு நிகழ்த்துக் கலைஞன். 

அவருள் ஓர் அற்புதமான நடிகரும் இருந்தார் என்று நாம் அறிவோம். "சிகரம்" - "கேளடி கண்மணி" - கொஞ்ச காலத்துக்கு முன்பு "நாணயம்" என்றொரு படம். அலட்டல் இல்லாத அசைவுகள் அவரிடம் காணலாம். அவருள் ஓர் இசையமைப்பாளரும் இருந்தார். சிகரம் அவரின் இசை தான்.  "உன்னை சரணடைந்தேன்" பார்த்திபன் நடித்த "தையல்காரன்"... ரஜினியின் "துடிக்கும் கரங்கள்" அவரின் இசையில் தான். இதில் சிகரம் மனதுக்கு நெருக்கம்.

ஒரு நேர்காணலில் கூட எப்படி ரஜினிக்கு வேறு மாதிரி கமலுக்கு வேறு மாதிரி பாடுகிறீர்கள் என்று கேட்டார்கள். 

"இல்லை அது பொய். நான் அப்படி பாடுவதில்லை. நான் அந்த சூழலுக்குத்தான் பாடுகிறேன்" என்றார். 

எச்சூழலுக்கும் பொருந்தும்... எதார்த்தம் அந்த குரலில் இருக்கிறது. இனி இன்னும் இன்னும் வீரியத்துடன் அவரின் பாடல்கள்... மனித சமூகத்தை ஆட்கொள்ளும். அது தான்... நமக்கும் நிம்மதி. ஆனால் இசை ராஜா சொன்னது போல இந்த துக்கத்துக்கு அளவு இல்லை தான்.

- கவிஜி

Pin It

SP Balasubrahmanyamகடந்த 50 ஆண்டுகளாக தமிழக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரைப்படப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த செப். 25-ம் தேதி. கொரோனா நோயினால் மரணமடைந்து விட்டார்.

சுமார் ஐம்பது ஆண்டுகளாக 16 இந்திய மொழிகளில், இதுவரை 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள பாலுவின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளது தமிழக அரசு. எஸ்.பி.பி.யின் மரணம் அவரது ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கலங்க வைத்திருக்கிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சமூகவலைத் தளங்களிலும் கலந்து கொண்ட பலரும் தங்களது கடந்த கால நினைவுகளையும், அவர் பாடிய பிரபல பாடல்கள், அதன் இசை நுணுக்கங்கள், அவரது அசாத்திய குரல்வளம், சிகரம் தொட்ட பின்னும் அவரிடமிருந்த தன்னடக்கம் ஆகியவற்றை இரண்டு நாட்களாக கவலையுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

“முறையாக செவ்வியல் இசையை கற்றுக் கொள்ளாமலே இவ்வளவு சாதனைகளைப் படைத்திருக்கிறார். பழக எளிமையானவர். தெலுங்கராக இருந்தும் தமிழில் சரியான உச்சரிப்போடு பாடுபவர்” என்பதெல்லாம் உண்மையே! எதுவும் மிகையில்லை.

அவரது பாடல்கள், இனிமையான குரல், குழந்தை உள்ளம், சிரித்த முகம் ஆகிய எல்லைகளுக்குள் மட்டும் எஸ்.பி.பி.யின் பிம்பத்தை அடக்கிவிட முடியாது. தமிழ் சினிமாக்களின் பாடல்கள் மூலம் தமிழக மக்களின் கலைரசனையை வடிவமைத்துக் கொடுத்ததில் எஸ்.பி.பி-யின் பங்களிப்பை அவ்வளவு எளிதில் எவரும் புறக்கணித்துவிட முடியாது.

தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் ஆகியோரின் கூட்டுக்குரல்தான் ஒரு திரையிசைப் பாடகரின் குரலாக வெளிப்படுகிறது. மேற்கண்ட மூவரின் விருப்பத்தை, எதிர்பார்ப்பை தனது குரல்வளத்தின் மூலமும், தனித்துவமான திறமைகள் மூலமாகவும் மேலும் ரசனைக்கு உரியாதாக்கி வெளிப்படுத்துபவர்தான் திரைப்பாடகர்.

உதாரணமாக, “வந்தனம் என் வந்தனம், நீ மன்மதன் ஓதிடும் மந்திரம், புன்னகை சுந்தரம், பூமுகம் பொன்னிறம், உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்” என்ற குடிபோதையுடன் பாடும் சோகப் பாடலில் சுந்த(ரம்), பொன்னி(றம்)” ‘ரம்’ என்ற வார்த்தையை உச்சரிப்பதில் போதையின் தள்ளாட்டத்தை வெளிப்படுத்தி மெருகேற்றியிருப்பார் SPB.

"பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று” பாடலின் இறுதியில் SPB-யின் குரலில் கண்ணீர் வழியும்! இதுதான் ஒரு திரைப்பாடகனின் சிறப்பு, தனித்துவம். இது SPB-க்கு மட்டுமே உரிய திறமை என்று கூறிவிட முடியாது. இவருக்கு முந்தைய, பிந்தைய, சினிமாப் பாடகர்கள் அனைவரிடமும் உள்ள சரக்குதான் இது. SPB என்ற பாடகனின் தனித்துவம் என்பது, தமிழ் சினிமாவின் வளர்சிதை மாற்றங்களில் அடங்கியிருக்கிறது.

எம்.ஜி.ஆர், சிவாஜி-யின் ஆதிக்கம் இறுதிக் காலத்தை எட்டிய 70-80-களில் தமிழ் சினிமாக்களில் மேற்கத்திய டிஸ்கோ கலாச்சாரம் மேலோங்கத் தொடங்கியிருந்தது. பெல்ஸ், பெல்பாட்டம், அகன்ற காலர் சட்டை, பட்டையான பெல்ட், பிடரி வரை சுருண்டு கிடக்கும் தலைமுடி, மற்றும் சிவப்புத் தோலுடன் அன்று இதற்குப் பொருந்தி எழுந்தவர்தான் பிக்பாஸ் கமல்ஹாசன்.

நடிகர் மோகனுக்கு முன்பே ‘மைக்பிடி மன்னன்’ பட்டம் பெற்றவர் இவர். இவரின் டிஸ்கோ ஆட்டத்திற்காகவே இவரது படங்களில் தவறாமல் ஒரு மேடைப் பாடல் காட்சி இடம்பெறும். அந்த துள்ளல் இசைப் பாடல்களுக்கு இளமையான குரலாகப் பொருந்தி நின்றது எஸ்‌பி‌பி-யின் குரல்வளம்! ‘நடிகனின் காதலி... நாடகம் ஏனடி’, ‘என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு', ‘எங்கேயும் எப்போதும்’, ‘இளமை இதோ இதோ’, ‘வேதாளம் வந்திருக்குது’ போன்ற கமல்பட துள்ளலோசைப் பாடல்கள் மூலம்தான் அன்றைய இளைஞர்களின் உள்ளம்கவர் பாடகரானார் SPB.

வேறு சில நடிகர்களுக்கும்கூட இதுபோன்ற பாடல்களைப் பாடியிருக்கிறார். பாடல்களின் இடையே குரலை மாற்றிப் பாடுவது, ’ஊ’...’ஹா’...’ஹே’... என்று கத்துவது போன்ற எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளால் சினிமா கதாநாயகனுக்கு இணையாக SPB-யும் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.

பாரதிராஜா, பாலுமகேந்திரா, டி.ராஜேந்தர் வருகையினால் தமிழ் சினிமா காதல்நோயில் வீழ்ந்தது. ‘வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது’, ‘அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது’, ‘தோகை இளமயில் ஆடி வருகுது…’ என்று தனது மெல்லிய குரலால் காதல் கனிரசத்தை இவர்களுடன் இணைந்து பிழிந்தெடுத்தார் எஸ்பிபி. பின்பு காதலில் கொஞ்சம் சலிப்பு தட்டியதும், ஒரு சுறுசுறுப்புக்காக கவர்ச்சியை தொட்டுக் கொள்ளத் தொடங்கியது தமிழ் சினிமா.

அனுராதா, சிலுக்கு சுமிதா, டிஸ்கோ சாந்தி போன்ற கவர்ச்சி நடிகைகள் முன்னிலைக்கு வந்தனர். இவர்களுடன் கதாநாயகன் ஒரு ஆட்டமாவது போடாவிட்டால், படம் கல்லா கட்டாது எனுமளவுக்கு தமிழ் சினிமா பரிதாப நிலைக்கு ஆளானது. ‘நேத்து ராத்திரி யம்மா... தூக்கம் போச்சுடி யம்மா...’ இந்த ரகப் பாடல்.

இதன்பிறகு கதாநாயகிகளே கவர்ச்சி வேடம் போட்டுக் கொண்டபோது, ‘நான் பூவெடுத்து வக்கனும் பின்னால’, ‘விளக்கு ஏத்தட்டும்… பகல் வெளிச்சம் ஏறங்கட்டும்’, ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ’, ‘அடுக்கு மல்லிக... இது ஆள்பிடிக்குது’ என்று பாடத் தொடங்கினார்கள். இந்த ஆபாசப் பாடல்களுக்கு முக்கல்-முனகல், செல்லச் சிணுங்கல், 'ச்சீ’ போன்ற கலவையுடன் சுவையூட்டி இளைஞர்களை வெறிகொள்ளச் செய்தவர் நமது SPB!

கமலுக்காக பாடிய ‘பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே’, ‘மீண்டும் மீண்டும் வா’ போன்ற பாடல்கள், சில்க் - சுருளிக்காக பாடிய ‘வா மச்சான் வா வண்ணாரப்பேட்ட’ போன்ற பாடல்கள் தனித்துவமான குரலால் விரசத்தின், ஆபாசத்தின் உச்சத்தை எட்டின. 'அம்மன் கோவில் கிழக்காலே' படத்தில் வரும் ‘கடவீதி கலகலக்கும் அக்கா மக அவ நடந்து வந்தா’ போன்ற பாடல்கள் பெண்களை சீண்டும் விதமான பாடலாக வெளியானது.

உச்சமாக, கமல் தயாரிப்பில் வெளியான ‘மகளிர் மட்டும்’ படத்தில் இடம்பெற்ற ‘காள மாடு ஒண்ணு... கறவ மாடு மூணு’ என வாலி எழுதிய பாடல். பெண்களை இழிவுபடுத்தும் இந்த ஆபாசப் பாடலுக்கு எதிராக அன்று இடதுசாரி கட்சிகளின் மகளிர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துப் போராடினார்கள். அப்போது, பாடலைப் பாடிய SPB, “இனிமேல் இரட்டை அர்த்தம் தொனிக்கும் மற்றும் ஆபாச வரிகள் உள்ள பாடல்களை பாட மாட்டேன்” என்று பேட்டியளித்தார். பேட்டி மாத்திரம் தான் அளித்தாரே தவிர தொழிலில் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை எஸ்பிபி.

                                      ***

மெலடிக்கு பேர் போனவர் எஸ்பிபி. கமகங்களை இழுத்து பாடும் போதும் சரி, சங்கதிகளை காட்சிகளுக்கு இணையாகப் பார்த்துப் போடுவதிலும் சரி முற்போக்காளர்களையே மயங்க வைக்கும் திறன் கைவரப் பெற்றவர். ‘ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது’, ‘மஞ்சப்பொடி தேய்க்கையிலே என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள’, ‘அபிசேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க’, ’நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது’, ‘வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா’, காலை நேரப் பூங்குயில்', 'மடை திறந்து', 'அந்திமழை பொழிகிறது', 'இளமை எனும் பூங்காற்று', 'பேரைச் சொல்லவா', 'இது ஒரு பொன்மாலைப் பொழுது', 'கண்மணியே காதல் என்பது', 'ஜெர்மனியின் செந்தேன் மழையே', 'காத்தோடு பூ உரச', 'ராமன் ஆண்டாலும்', 'நான் பொல்லாதவன்', 'நதியோரம்', 'காதல் வைபோகமே', 'கீதம் சங்கீதம்', 'இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு', 'மழைக்கால மேகம் ஒன்று' போன்ற பாடல்கள் எண்பதுகளின் இளைஞர்களை சொக்க வைத்திருந்தன. அந்த சொக்குப் பொடியைப் போட்டவர்களில் முதன்மையானவர் காந்தர்வக் குரல் மன்னன் எஸ்பிபி.

அது எம்ஜிஆரும், இந்திராவும், ராஜீவும், மண்டல் கமிசனுக்கெதிரான போராட்டங்களும், கரசேவையும் நடந்து கொண்டிருந்த காலம். புதிய கல்விக் கொள்கையை கோத்தாரிக்குப் பிறகு இருபதாண்டு கழித்து ராஜீவ் அறிமுகம் செய்கிறார். ஈழப் போராட்டமும், தலித் எழுச்சியும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது.

அமைதிப்படையின் அட்டூழியம் தலைதூக்கி திரும்பி வருகிறது. எஸ்பிபி-யோ மூச்சு விடாமல் ‘மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ’ எனப் பாடிக் கொண்டிருந்தார்.

'கூவுங்கள் சேவல்களே', 'பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசியைக் கொஞ்சம் மறந்திருப்போம்', 'புஞ்சையுண்டு நஞ்சையுண்டு' போன்ற இடதுசாரி சாயல் கொண்ட பாடல்களையும் எஸ்பிபி பாடி இருக்கிறார் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அளவில் சொற்பமே.

                                **

தொன்னூறுகளில் ‘போவோமா ஊர்கோலம்’ என்ற சின்னத்தம்பியின் சிறப்பான பாடலும், கிழக்கு வாசல் படத்தில் வரும் ‘தளுக்கி தளுக்கி உடல் குலுக்கு குலுக்கி வரும்’ பாடலையும், 'பாடிப் பறந்த கிளி' பாடலையும் ஒருங்கே எஸ்பிபியால் பாட முடிந்தது. தளபதி படத்தின் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' சிறந்த பாடல்களில் ஒன்றாக வெளியானது.

பிறகு ரகுமானின் காலம் வந்தது. 'காதல் ரோஜாவே' பாடலும் பாடி, 'எரானி குரானி கோபாலா' பாடலும் பாடினார் எஸ்பிபி. 'ராக்கம்மா கையத் தட்டு' பாடல் உலகப் புகழ்பெற்ற அதே நேரத்தில், சாதியை அபத்தமாக புரிந்து கொண்டு எடுக்கப்பட்ட படமான இந்திராவில் ‘ஓடக்கார மாரிமுத்து ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க சவுக்யமா?’ என்று பாடி விசாரிப்பார் எஸ்பிபி. 'பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட' என்றும் அவரால் பாட முடிந்தது.

அந்த வகையில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கொச்சையான காதல் மயக்கத்திலும், ஆபாசப் போதையிலும் இளைய தலைமுறையை கட்டிப் போட்டதற்கு எஸ்பிபி-யின் குரல் வளமும் ஒரு முக்கிய காரணம். புரட்சிகர இயக்கங்கள் மக்களை, குறிப்பாக இளைஞர்களை அணுக முடியாமல் போனதில் எஸ்பிபி பாடிய பாடல்களில் உள்ள அவரது சேட்டைகளுக்கும், கமகங்களுக்கும் முக்கிய பங்கிருக்கிறது.

வரலாறு, தமிழ் போன்று கேட்க இனிமையாக இருக்கும் எஸ்பிபி-ன் பாடத்தை ஒரு மாணவன் விரும்புவானா அல்லது கோவன் போன்றவர்களது பாரதிதாசன் பாடல்களை விரும்புவானா? கோவனது பாடல்கள் கணக்கு பாடம் போல கேட்பதற்கு கடினமாக இருக்காதா? அந்த வகையில் எல்லாவகை முற்போக்கு இயக்கங்களும் பாவப்பட்ட பெந்தேகோஸ்தே குழுவினர் போலவே வலம் வருகிறார்கள் என்பது உண்மைதானே!

அந்த கோவனே இன்று விவசாயிகள் போராட்டம் உச்சத்தில் இருக்கையில் குறைந்தபட்சம் ‘புஞ்சையுண்டு நஞ்சையுண்டு’ பாடலைச் சொல்லாமல் வேறு ஒரு நோஸ்டால்ஜியாவைக் கிளறிய ’ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது’ பாடலை தனது அரண்செய் நேர்காணலில் (https://www.youtube.com/watch?v=K9bnfwQ5ubI) தெரிவித்துள்ளார். புரட்சிகரக் கட்சியில் இருந்தவராகக் கருதப்படும் இவருக்கே இந்த நிலைமை என்றால் பெரும்பான்மை மக்களின் நிலைமையை எப்படி கணிப்பது?

தேவர் மகன் திரைப்படத்தில் வரும் பாடல் ‘வானம் தொட்டுப் போனான் மானமுள்ள சாமி’ என்ற சோகப் பாடல் வரும். அதில் ‘பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு? தங்கத்துக்கு மாற்று வேறு யாரு கூறு?’ என சாதிய பரம்பரை அதிகாரத்தை தனது குரலின் தனித்துவத்தால் புனிதமான சரக்காக மாற்றியிருப்பார் எஸ்பிபி. அதிலும் ‘போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே’ வரிகள் வரும். தொன்னூறுகளில் வெளியான இந்தப் பாடலை கூம்பு ஒலிப்பெருக்கிகளின் வழி தலித் குடியிருப்புகளை நோக்கி கட்டி வால்யூமைக் கூட்டி வைத்து சண்டை இழுக்காத தேவர்கள் வாழும் கிராமங்கள் ஏதேனும் இருக்கின்றதா?

பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் பொறுப்புகள் முதன்மையானவை என்றாலும் பாலுவின் தனித்துவமான பாடும் முறை அதற்கு தனது பங்களிப்பினை வழங்கவில்லையா? இதுவும், தொன்னூறுகளில் உருவான லிபரலைசேசன் உருவாக்கிய தலித் மக்கள் மத்தியில் தோன்றிய புதுப் பணப்புழக்கமும், அதன் மீதான ஆதிக்க சாதிகளின் காழ்ப்புணர்ச்சியும் இணைந்து தானே கொடியங்குளம் போன்ற சாதிக் கலவரங்களை நடத்தின.

1997ல் வெளியான மின்சாரக்கனவு திரைப்படத்தில் வரும் ‘தங்கத்தாமரை(றை) மகளே’ பாடல் எஸ்பிபிக்கு தேசிய விருதினை பெற்றுத் தந்தது. அதில் ஒரு தலைக் காதலில் இருக்கும் கதாநாயகன் காதலியை காமத்துக்கு அணுகும் போது ‘நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை’ எனப் பாடுகிறார் பாலு. ’நோ என்றால் நோ தான்’ என பெண்கள் சொல்வதை நாகரீகம் என்று கொச்சைப்படுத்தியது பாடல்.

தாராளமயமாக்கல் துவக்கத்தில் வந்த காதலன் படத்தில் பிரபுதேவாவுக்கு லிபரல் அப்பாவாக ’நவீன’ தந்தையாக நடித்திருப்பார். அதாவது அப்பாவும் மகனும் ஒண்ணா உக்காந்த்து வீட்டுக்குள்ள வச்சு தண்ணியடிப்பாங்க. நானும் அப்போது பதின்ம வயதில் இருந்ததால் இப்படி ஒரு அப்பா நமக்குக் கிடைக்கவில்லையே என ஏங்கியிருக்கிறேன். இவையெல்லாம் பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

                                     **

டால்ஸ்டாயின் உலகப் புகழ்பெற்ற நாவல் அன்னா கரீனினா. அதில் வரும் லெவின் பாத்திரத்தை ‘1861-1905 காலகட்டத்தின் இயல்பான வரலாற்றுத் திருப்புமுனைகளின் பிரதிநிதி’ என்று வர்ணிப்பார் தோழர் லெனின். விவசாயத்தில் சீர்திருத்தங்களை செய்ய முற்படும் லெவின் பாத்திரம் அப்படிப்பட்டதாகத்தான் இருக்கும்.

எஸ்பிபி-யை டால்ஸ்டாய்க்கு நிகராக நிறுத்திப் பார்க்க பலரும் ஆசைப்படுகிறார்கள். லெவின் பாத்திரத்தை ஏற்பதற்கு இயேசுவின் கடைசி நேரப் பதற்றம் வேலைக்கு ஆகாது. எஸ்பிபி அதற்கு சற்றும் பொருத்தமானவர் அல்ல.

என்ன செய்வது, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!

- தளபதி சண்முகம்

Pin It

goundamani senthilகவுண்டமணி சினிமாவுக்குள் வந்த பாட்டை பாக்யராஜ் சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் செந்திலின் நிலைமையை யோசித்து பாருங்கள்.

சினிமா பிழிந்தெடுத்து தான் உருமாற்றும். வாய்ப்புக்கு வாய் திறந்து காத்திருக்கும் கொக்கு போல. முகம் காட்டி விட மாட்டோமா... குரல் வந்து விடாதா... கதையின் போக்குக்கு முக்கிய திருப்பத்தில் தான் நின்று விட மாட்டோமா என்று தான் கலைஞன் தவித்திருப்பான்.

நாடகம்... நடிப்பு.....கூத்து... விவாதம்... பேச்சு... ஒத்திகை... ஒப்பனை...என்று எல்லாமும் கூடும் எல்லையில்... இல்லாத ஒன்றிலும் இருப்பவனாகவே இருக்கும் கலைஞன் பின் வாய்ப்பு கிடைக்கையில் அதை சரியாக பயன் படுத்திக் கொண்டு மிக மிக சுயநலமாக தன்னை முன்னேற்றிக் கொள்வது தான்.... வெற்றி.

அது செந்திலுக்கும் நடந்தது.

இரு வேறு துருவங்கள் தன் தன் போக்குகளில் தகவமைப்பை நிறுவிக் கொள்கையில்... ஒரு புள்ளியில் ஒரு சேர சேர்ந்தது ஆச்சரியம். கவுண்டமணி என்ற அற்புதப் புதையலோடு தன்னை அண்டாகா கசமாக்கி கொண்டது செந்திலின் சாமர்த்தியம்.

ஒரு கட்டம் வரை தனியாகவோ.. மற்ற கூட்டணியோடோ நடித்துக் கொண்டிருந்த செந்தில்.. காலத்தின் சூட்சும விதியில்.. கட்டுண்டு.. கவுண்டமணி என்ற துப்பாக்கிக்குள் புல்லட் ஆனார். 

"இதுல எப்டிண்ணே லைட் எரியும்" என கேட்டு பட்டென்று உடைத்து விட்டு ஓடு விடும் செந்திலை 'வைதேகி காத்திருந்தாள்' வெளிச்சம் போட்டு காட்டியது.

"உங்கள மாதிரி இல்லண்ணே உங்க பொண்டாட்டி.." என்று வாய் நிரம்ப கேட்கையில்... டக்கன..." ஆமா.... அவ கொஞ்சம் குள்ளம்..." என கவுண்டர் கொடுக்கும் கவுண்டர் மணி... காலத்தின் இடைவிடாத மணி. அதற்கு ஈடு கொடுத்து.. குண்டக்க மண்டக்க எதையாவது ஒன்றை கேட்டு எக்கு தப்பாக கவுண்டமணியை மாட்டி விட்டு ஓடி விடும் செந்தில்... சரியான ஒத்து. செமத்தையான ஒர்த்.

‘கார வெச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்ப யார் வெச்சிருக்கிறார்’ என்ற கேள்வியெல்லாம் கிரியேட்டிவ் இந்நோவேட்டிவ். எழுதியது யாராக வேண்டுமானால் இருக்கலாம். இருத்தியது செந்தில். கரகாட்டக்காரகாரனுக்கு நான்கு கால்கள் என்றால் நான்காவது கால் செந்திலுடையது.

'வடக்கு பட்டி ராமசாமி' யை மறந்திருக்க மாட்டோம். அதற்கு செந்திலின் முன் குறிப்பு காட்சிகளே பலம். கடனைத் திருப்பி தராதவன் காதை கடித்து கொண்டு வரும் செந்திலின் ரத்தம் வடியும் முகமும்.. பார்வையும்... நினைத்தாலே சிரிப்பு வரும் சித்திரங்கள். ஒரு படத்தில்... செத்த பிறகும் ஆவியாய் வந்து கவுண்டமணியை பாடாய்ப் படுத்தி எடுப்பார். வேறு வழி இன்றி இவரும் செத்து அதன் பிறகு செந்திலைப் போட்டு புரட்டி எடுப்பார்.

கனவில் வந்து படம் முழுக்க சேட்டை செய்த "ஜெய்ஹிந்த்" படத்தின் வெற்றிக்கு இவர்களின் காமெடி கூட்டணியும் ஒரு காரணம் என்றால் தகும். ஒரு படத்தில் பாடகராகும் லட்சியத்தோடு இருக்கும் கவுண்டமணியை ஒரு பெரிய வீட்டில் ஊமை பேரனாக நடிக்க சொல்லி அவரைப் படுத்தி எடுக்கும் செந்தில்... அப்பாவித்தனமான... ஆனால் வில்லங்கமான கேள்விகளை கேட்டு கவுண்டமணியை இக்கட்டான சூழலில் சிக்க வைக்கும் போது நாம் சிரிக்காமல் இருக்க முடியாது.

"நாட்டாமை" - 'டேய் தகப்பா' - இப்போதும் ஆடு திருடின முக பாவனையில் அவர் வரும் காட்சிகளில் கண்கள் மினுங்க சிரித்து விடுவோம்.

எத்தனை அடிகள்... அத்தனையும்... அவருக்கான விருதுகள்.

கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள் என்று எங்கேயோ படித்த செய்தி.

காமெடி மட்டுமல்லாமல் திடீரென அப்பா வேஷத்தில்... குணச்சித்திர வேஷத்தில் என்று செந்தில் தனக்கான இடத்தை மிக நயமாக பதித்திருப்பார். பெரும்பாலும்... ட்ரவுசர் போட்டுக் கொண்டே கவுண்டமணியோடு வம்பிழுத்துக் கொண்டு அலையும் செந்திலின் நடிப்புக்கு... "பாய்ஸ்" இம்பர் மேசன் இஸ் வெல்த் கதாபாத்திரம்.. செந்திலின் சினிமா வாழ்வை சமநிலை செய்திருக்கும்.

கேட்க கூடிய ஒன்றை கேட்டு விட்டு கேட்காதது போல பார்க்கும் செந்தில்... இல்லையென்றால்.. வாழைப்பழ காமெடி இந்த உயரத்துக்கு வந்திருக்குமா எனத் தெரியாது. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் பெர்சனலாக எப்படி என்று தெரியவில்லை. ஆனால் படத்தில்.. அது ஒரு காம்போ. அது ஒரு மேஜிக்.

அது நிகழ்ந்ததுக்கு நாம் சிரித்து மகிழ்ந்தது தான் சாட்சி. இரட்டையர்களின் உலகளாவிய வெற்றி. மாற்றி மாற்றி போட்டு அடித்துக் கொண்டே பந்தை நகர்த்தி சென்று கோல் அடித்து விடும் சூட்சுமம். நகைச்சுவையில்... தங்களுக்கென்று பாணி அமைத்துக் கொண்டமைக்கு செந்திலின் ஒத்துழைப்பு முக்கியமான இடம் வகித்திருக்கும் என்று நம்புகிறேன்.

'நட்பு' படத்தில்... பத்து பைசா வாங்கி கொண்டு காதலுக்கு தூது செல்லும்.. செந்திலை... காதல் ஒரு போதும் மறக்காது.

"ஜெண்டில் மேன்" செந்திலை தவிர்க்கவே முடியாது. "படையப்பா" வில் ரஜினியின் சட்டையை போட்டுக் கொண்டு படும் பாடு செந்திலுக்கு... சிகரம்.

"அண்ணே நீங்க SSLC பெயிலுண்ணே.. நான் ஏழாவது பாசுண்ணே" என்று சொல்லி அவருக்கே உண்டான சிரிப்பும் நக்கலுமான அளவில் வெறுப்பேத்தும் உடல்மொழிக்கு திரையரங்கில் சிரிப்பு கியாரண்டி. 'அண்ணே....அண்ணே' என்று கீச் குரலில் அவர் அழைக்கையிலேயே நாம் சிரிக்கத் தயாராகி விடுகிறோம். பதிலுக்கு கவுண்டமணியின் குரல் வரத் தொடங்குகையில்.... மேஜிக் ஆரம்பம் ஆகி விடும்.

செந்தில் ஓட கவுண்டமணி விரட்ட... தமிழ் சினிமாவில் அது ஒரு சிம்பல்.

எத்தனை படங்கள்.. எத்தனை கதாபாத்திரங்கள். ஒரு கலைஞனாய் முழுதாய் பரிணமித்து விட்ட செந்திலுக்கு அவர் அளவில் அவர் உச்சம் தொட்டார் என்றே நம்பலாம்.

அலுக்கவே செய்யாத விஷமங்கள் அவர்களின் கூட்டணியில் காணத் கிடைத்திருக்கிறது.

கீழ் மட்டத்தில் இருந்து எந்த விதமான ஆடைகளும் போட்டுக் கொண்டு... எந்த விதமான கதாபாத்திரத்திலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட கலைஞன். அவமானம் மனதுக்குள் கொள்ளும் எத்தனையோ நிகழ்வுகள் அவருக்கான கதாபாத்திரங்களுக்கு ஸ்பாட்டில் நடந்திருக்கலாம்.

அதுவும் கவுண்டமணி திட்டுவதெல்லாம் காமெடியாக இருப்பினும் சம்பந்தப்பட்ட செந்திலுக்கு அப்படி இருக்காது தானே. ஆனாலும்... பார்க்க நன்றாக இல்லை என்ற பொதுவான பொது மொழியை வைத்துக் கொண்டு அதையே தனக்கான உடல்மொழியாய் மாற்றிக் கொண்ட செந்திலின் நோக்கமெல்லாம் சினிமாவும் திரையும் தான்.

அது அவருக்கான காலத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது... தக்க வைக்கும் என்று நம்புவோம்.  

- கவிஜி

Pin It