பதின் வயதுகளில் வீட்டுக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருந்த குமார் அண்ணன் எஸ்பி.பாலசுப்ரமணியத்தின் வெறியர். புதுப்புது அர்த்தங்களில் ‘குருவாயூரப்பா’ பாடலின் இரண்டவது பல்லவியை சித்ரா பாடி முடிக்கும் போது, எஸ்பிபி சிரிக்கும் அந்த சிரிப்பை அப்படியே சிரித்துக் காட்டுவார். கேசட்டுகளில் ஏதும் தொலைந்து விடாமல் இருக்க நம்பர் போட்டு வரிசையாக அடுக்கி வைத்திருப்பார். மட்டுமின்றி SPB இதுவரை பாடிய பாடல்களை ஒரு நோட்டில் வருடவாரியாக எழுதி வைத்திருப்பார். ஒரு படத்தில் எல்லா பாடல்களுமே SPB பாடியிருந்தால் அதை சிகப்பு வண்ணத்தின் எழுதி தனியாகக் காட்டுவார். இதுதவிர பாடலின் இடையே SPB செய்யும் குறும்புகளை நண்பர்களுடன் தீவிரமாக விவாதிப்பார். ஆகவே ஒரு கேசட் முழுவதும் ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ பாடலைப் பதிந்து வைத்ததை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இவரது நண்பர் முத்துகிருஷ்ணன் தீவிர இளையராஜா தொண்டர். இருவருக்கும் நடக்கும் விவாதங்கள் தெருவில் பிரசித்தம் பெற்றது. SPBயிடம் வீட்டு மளிகை சாமான் லிஸ்டை குடுத்தாக் கூட அதை பாட்டாகப் பாடி இந்த உலகத்தையே முணுமுணுக்கச் செய்து விடுவார் என்று அண்ணன் கை நீட்டி ஆவேசமாகப் பேசுவது எப்போதும் நடக்கும்.
அண்ணனின் இசை அட்டூழியம் அதிகமாகவே குடும்பத்தார் கடையை மூடிவிட்டு இவரை துபாய் அனுப்ப ஏற்பாடுகளைச் செய்தனர். ஒரு நல்ல நாளில் விசா வரவே கடையை பேக்கிங் செய்யும் படலம் தொடங்கியது. அண்ணனின் இசை ரசிகர்கள் கடையில் குழுமியிருந்தனர். அது பாட்ஷா படத்தில் ரஜினியின் சேதமடைந்த ஆட்டோவை சீர்படுத்த அவரது பாம்பே தம்பிகள் உதவும் காட்சி போலிருந்தது. கடையில் இருந்த கேசட்டுகளை தன் தோழர்களுக்கு பிரித்துக் கொடுத்தார். மீதம் உள்ளதை ஊருக்குக் கொண்டு செல்ல உத்தேசித்த போது, “அங்கயும் கிறுக்கு புடிச்சு திரியப் போறியா?” என்று அவரது மூத்த சகோதரி எஞ்சிய கேசட்டுகளை கைப்பற்றியதாக கேள்வி.
துபாய்க்குச் சென்றவர் எட்டு வருடங்கள் ஊருக்கே வரவில்லை. நாங்களும் வாடகைக்கு மூன்று வீடு மாறியிருந்தோம். பாடலின் ஊடே SPBயின் அந்த குறும்பு சிரிப்பு தென்படும்போதெல்லாம் குமார் அண்ணனின் நினைவு வந்துபோகும். தற்செயலாக இதை எழுதிக் கொண்டிருக்கும்போது SPBயின் நினைவு நாள் இன்று. அவர் இறந்தபோது இசையே சாராதவர்கள் கூட அதிர்ந்துதான் போனார்கள். குமார் அண்ணன் இதை எப்படி கடந்திருப்பார் என்று நினைக்கும்போது இன்னும் பாரமாக இருக்கிறது.
தொன்னூறுகளின் தொடக்கத்தில் டிவி என்கிற அதிசயப் பொருள் வீட்டுக்கு வீடு வரத் தொடங்கினாலும் டேப்ரிக்கார்டுக்கு உண்டான மரியாதை அப்படியே தான் இருந்தது. திரைப்படத்தின் பாடல் உரிமையைப் பெறும் நிறுவனத்தின் ஒரிஜினல் கேசட்டுகளை வாங்குவது இசை சார்ந்த சமூகத்தில் கௌரவமான விஷயமாக கருதப்பட்டது. எதிர்வீட்டுக்காரன் ‘சிங்காரவேலன்’ கேசட்டை ஓசி வாங்கிச் சென்று திரும்பிக் கொடுக்கும்போது அது ‘கரகாட்டக்காரன்’ கேசட்டாக மாறிய சம்பவம் இரு குடும்பங்களுக்கு இடையேயான கலவரமாகக் கூட மாறியிருக்கிறது.
‘பாட்ஷா’ படத்திற்கு ஆடியோ கேசட் வாங்க காலையில் இருந்தே கடையில் வரிசையில் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். வாங்கிய கையோடு ஏதாவது ஒருவர் வீட்டில் பாடல்களை ஒலிக்கவிட்டு அந்த பாடல் எப்படி காட்சியாக வந்திருக்கும் என்பது விடிய விடிய விவாதமாக ஓடும். டீக் கடைகளில், “தலைவர் பாட்டை போட்டு விடு” என்று சொல்லிவிட்டுத் தான் டீ ஸ்ராங்கா, லைட்டா, சக்கரை இல்லாமலா என்று சொல்வார்கள்.
இன்னும் சொல்லப் போனால் 90 காலகட்டம் இசையின் பொற்காலம் என்றே கூறலாம். அந்த காலகட்டத்தில் ஒருவர் பேப்பர் பேனாவோடு அமர்ந்தால் அது கவிதை எழுதுவதற்கானதாக மட்டும் இருக்காது. பிடித்த பாடல்களை வரிசையாக எழுதி அதை கேசட் கடையில் கொடுத்து ரெக்கார்டிங் செய்வதற்கானதாக இருக்கும். அதை எந்த தொழில்நுட்பத்தில் ரெக்கார்டிங் செய்வார்கள் என்று அப்போது ஆச்சர்யமாக இருக்கும். சிறிய பெட்டியின் உள்ளே பாடலை ஒலிக்கவிட்டு அதை இன்னொரு டேப்ரிக்கார்டரில் பதிவதாக ஒருமுறை குமார் அண்ணன் சொன்னபோது ஆராய விரும்பாமல் ஆச்சர்யமாக கேட்டுக் கொண்டிருந்தோம்.
பாடல் வெளியீட்டு நிறுவனம் வெளியிடும் கேசட்டை விட கடையில் கொடுத்து பதியும் கேசட்டில் பாடல்கள் இன்னும் தரமாக இருக்கும் மாயம் அப்போது விளங்கவில்லை. நண்பரது வீட்டில் மூத்த அண்ணன் பேப்பரும் கையுமாக உட்காந்திருக்க வீட்டில் உள்ள அனைவரும் ஆஜராகி தனக்குப் பிடித்த இரண்டு பாடல்களை பட்டியலில் கொண்டுவர படாதபாடு கொண்டிருப்பார்கள். அப்பாவுக்கு டி.அர், அம்மாவுக்கு மோகன், அக்காவுக்கு ஸ்வர்ணலதா, மூத்த அண்ணனுக்கு இளையராஜா குரலில் ஒரு பாடல் என்று அந்தப் பட்டியலே விசித்திரமாக இருக்கும். அந்தப் பாடல்கள் அப்படியே பதிவேற்றம் செய்யப்படுமா என்றால் இல்லை. கடைக்காரர் கலெக்சனும் நம் செலக்சனும் ஒற்றுமையாக இருந்தால் தான் அந்த அற்புதமும் நிகழும்.
பட்டியல் அளித்த மூன்று நாட்களில் கேசட் தயாராகி விடும். அதை கடையில் இருந்து வாங்கி வந்து எப்போது விடியும் என்று காத்திருப்பதே ஒரு அலாதியான அனுபவம். விடிந்ததும் கேசட்டைப் பொருத்தி ப்ளே பட்டனை இயக்கியதும், “துல்லியமான பாடல் பதிவுகளுக்கு செல்வம் மியூசிகல்ஸ், காரைக்குடி” என்ற பெண் குரலைக் கேட்கும்போது எழும் உணர்வு எழுத்தில் மாளாது.
பெரும்பாலும் அன்றைய காதல் தோல்விகள் பாடல்களாலே ஆற்றுப்படுத்தப்பட்டன. தோல்வி தந்த சோகத்தை தாடி வளர்த்துக் கொண்டாட விரும்பாத பலர் அதற்கேற்ற பாடல்களைத் தேர்வு செய்து ஆறுதல் தேடினர். கேசட் கவரில் ‘காதல் தோல்விப் பாடல்கள்’ என்று அழகான எழுத்தில் எழுதி, கீழே தன் பெயரை எழுதி அம்பு விட்டுக் கொள்வது அன்றைய மரபு. ரைஸ்மில் வைத்திருந்த முத்துமணி அண்ணன் அவர் தாய் இறந்து போன மறுவாரத்தில் இளையராஜாவின் அம்மா சோகப் பாடலை பதிந்து வைத்து அரவை இயந்திரத்திற்கு மத்தியில் ஒளிபரப்பி மிளகாய்த்தூள் நெடிக்கு மத்தியில் ஆறுதல்படுத்திக் கொண்டார். காதல் பிரிவோ, தாயார் மறைவோ அத்தனையும் சிறந்த முறையில் பழுது நீக்கி தரப்படும் பாட்டு மருத்துவராக இரண்டு தலைமுறைக்கு ராஜா ஒருவரே இருந்தார்.
அன்று நம்மைப் போல நம் அம்மா, அப்பாக்களும் அதே இசை ரசனையில் இருந்தனர். காலை எழுந்ததும் ரேடியோவில் வரும் பாடல்களுக்கு மத்தியில் செய்யப்படும் விளம்பரங்களும் நம் அனைவர்க்கும் அத்துப்படி. பிடித்த பாடல்கள் ஒலித்தால் எதிர்வீட்டு அக்கா தன் தம்பியை அனுப்பி ரேடியோவில் இன்னும் கொஞ்சம் சப்தத்தை கூட்டச் சொன்னார்கள். பிடித்த பாடலை வானொலி நிலையத்துக்கு அனுப்பிதோடு மட்டுமில்லாமல் தன் பெயர் வாசிக்கப்படுகிறதா என்று வாரக்கணக்கில் காத்த பொறுமையை நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை மதியம் ஒளிபரப்பப்படும் சூப்பர் டென், ‘விடுமுறை முடிந்துவிட்டது, நாளை பள்ளிக்குச் செல்ல வேண்டும்’ என்ற செய்தியை தாங்கி வருவது போலத் தோன்றும்.
பாடலுக்காக தியேட்டருக்கு வந்த கூட்டமும் பாடலுக்காக ஓடிய படங்களும் கணக்கில் அடங்காதது. ஹிட் அடித்த பாடல்களை காட்சியாகப் பார்க்கும்போது இந்த பாடலுக்கா சொக்கி நின்றோம் என்ற சந்தேகமும் கூடவே வந்துவிடும். தனியே கேட்டு உருகியது ராஜா பாடல்கள் என்றால் கூட்டமாக இருந்து கொண்டாட வைத்தது ரஹ்மான் பாடல்கள்.
எதிர்வீட்டு முத்தண்ணன் சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வருகிறார் என்பது செய்தியாக இல்லை. அவர் அதிநவீன ஆடியோ சிஸ்டத்தைக் கொண்டு வருகிறார், அதன் விலை அப்போது இருபத்தி ஐயாயிரம் என்ற போது தான் ஏரியாவின் இசை ஆர்வலர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது வரை 32W ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் பானாசோனிக் டெப்ரிக்கார்டு தான் நாங்கள் பார்த்த வெளிநாட்டு இறக்குமதி. சிலர் இருபத்தி ஐயாயிரத்துக்கு டெப்ரிக்கார்டு என்பது ஒரு வேற்று வதந்தி, தியேட்டரில் இருக்கும் ஸ்பீக்கர் கூட அந்த விலை தேறாது என்றும் ஒரு கருத்து நிலவிவந்தது.
முத்தண்ணன் இரவோடு இரவாக ஊருக்கு வந்தார். அனைவரும் முத்தண்ணனை விட அந்த ஆடியோ சிஸ்டத்தின் குரலைக் கேட்கவே அதிக ஆவலாய் இருந்தனர். யார் யார் பாடல் கேட்க வேண்டுமோ அவர்கள் அன்று மாலை வருமாறு முத்தண்ணன் அழைப்பு விடுக்க அனைவரும் அண்ணன் வீட்டில் கூடியிருந்தோம். அப்போது தான் CD என்கிற வஸ்து அறிமுகமாகியிருந்தது. ஆடியோ சிஸ்டத்தின் அமைப்பே அது இருபத்தி ஐயாயிரம் என்றது. ஆடியோ சிஸ்டத்துக்கு ரிமோட் கொடுக்கப்பட்டது இன்னும் ஆச்சர்யமாக இருந்தது. பட்டனை அழுத்தியதும் சிடி பொருத்த அமைக்கப்பட்டிருந்த ட்ரே வெளியே வந்ததும் எங்கள் மத்தியில் பரபரப்பு.
சிடியை எடுப்பதற்கு முத்தண்ணன் உள்ளே போனதும் எங்களில் சிலர் ஆடியோ சிஸ்டத்தை தடவிப் பார்த்துவிட்டு பழைய இடத்தில் வந்து அமர்ந்து கொண்டனர். உள்ளே சென்ற முத்தண்ணன் உடைந்த சிடியோட வந்தார். லக்கேஜ்ல உடைஞ்சு போச்சு என்றார். காரைக்குடியில் அப்போது சிடி விற்பனைக்கு வரவே இல்லை. ஆகவே மறுநாள் முத்தண்ணனோடு சிடி வாங்க ஒரு குரூப் மதுரைக்கு பஸ் ஏறியது.
மதுரைக்குச் சென்ற குரூப் திருப்பத்தூர் தாண்டி சிடியோடு வருவதாக தகவல் வர தெருவில் மறுபடியும் பதட்டம் தொற்றிக் கொண்டது. முத்தண்ணன் கையில் சிடி. அதை வாங்கிப் பார்த்து மகிழ்ச்சி கொண்டோம். இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது, அந்த சிடியில் கமல் நடித்த ‘இந்தியன்’, நெப்போலியன் நடித்த ‘முஸ்தபா’ படப் பாடல்களும் இருந்தன. முத்தண்ணன் பந்தாவாக வந்து ஆடியோ சிஸ்டத்தை உயிர்ப்பித்தார். அதில் உள்ள டிஸ்ப்ளே வெல்கம் என்றது. முதல் பாடல் ‘டெலிபோன் மணிபோல்’ ஒலிக்கத் தயாரானது. அந்தப் பாடலுக்கு முன்பு வரும் வயலின் சப்தம் கேட்டு மெய்சிலிர்த்து, அதன் பின்வந்த பாடலைக் கேட்டு கூட்டத்தில் மூச்சு பேச்சே இல்லை. ‘மாயா மச்சிந்த்ரா’ பாடலுக்கு நாங்கள் வேறு ஒரு உலகத்திற்குப் போய்விட்டோம்.
பலமுறை கேட்ட பாடல் அன்று வேறு ஒரு பரிணாமத்தில் இருந்தது. அந்த சப்தத்தில் இருந்த துல்லியத் தன்மை பரவசத்தில் ஆழ்த்தியது. அந்த சம்பவத்திற்குப் பிறகு தெருவில் பல இளையராஜா ரசிகர்கள் AR.ரஹ்மான் பக்கம் தாவியிருந்தனர். AR.ரஹ்மானுக்குக் கிடைத்த அதே மதிப்பு, மரியாதை முத்தண்ணனுக்கும் கிடைத்தது. தெருவில் நிறைய பேர் பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூர் செல்ல ஆயத்தமானார்கள்.
மெல்ல கேசட்டுகள் வழக்கொழிந்து போய் தட்டையான சிடி வலம் வரத் தொடங்கியது. மஞ்சள் பை நிரம்பிய கேசட்டுகளுக்கு ஒரு MP3 சிடி போதுமானதாக மாறியது. மகளுக்கு சேர்ந்த சீதனப் பொருள் போல ஒவ்வொரு காலகட்டத்திலும் வாங்கிய கேசட்டுகள் இன்று ஏதோ குப்பையில் கிடக்கலாம். லட்சம் பாடல்கள் லட்சியமே இல்லாமல் மொபைலில் கிடக்கிறது. மெல்லிய உணர்வுகளை மீட்டெடுத்த பாடல்கள் இன்று கேட்கும்போதே மனப்பதட்டத்தைத் தருகிறது. 32W என்று எழுதப்பட்ட பானசோனிக் டேப்ரிக்கார்டரை விட அதிநவீன ஹோம் தியேட்டர்கள் கேட்க நேரமில்லாமல் மாதக் கணக்கில் மூடிக் கிடக்கிறது. அப்படியே அதே பழைய துள்ளலோடு கேட்க முனைந்தாலும் எதிர் பிளாட்காரனுக்கு நம் துள்ளல் தொல்லையாக இருக்கிறது. இசையைத் தவிர சத்தம் போட்டு கத்துவது எல்லாமே இசையாகிப் போனது.
சில மாதங்களுக்கு முன்பு பரணில் கிடந்த கேசட்டை எடுத்து பார்த்துக் கொண்டிருந்த போது என் மகள் வந்தாள். கையில் இருப்பதை வாங்கி என்னவென்று கேட்டாள், இதுதான் முந்தய தலைமுறையின் கடைசி ஆதாரம் என்றேன். இதில் எப்படி பாடல் வரும் என்று கையால் நெம்பி பிலிம் ரோலை வெளியே எடுத்தாள். குடலை உருவிய உணர்வு. கேசட்டுகளை அவளிடமிருந்து மீட்டு மீண்டும் பரணில் அடைத்தேன். உறவோடு இல்லாவிட்டாலும் உயிரோடயாவது இருந்துவிட்டுப் போகட்டுமே!
- கா.ரபீக் ராஜா, காரைக்குடி- 630002