uyirullavarai ushaஒரு கவித்துவ இளைஞனின் கனவு ஒரு பள பள செட்டிங்கில் ஆரம்பிக்கிறது.

ஆரம்பிக்கும் அடியே... ஒரு வண்ண தாளத்தில் தான் நம்மை தயார் படுத்துகிறது. நளினி எனும் பேரழகியின் உடல் வனப்பில் உயிர் அசைய ஆரம்பிக்கும் நடனம்... ஆதுர சலனம். ஆதி மதுர தவமும்.

"ஏலேலம்பற...... ஏலேலம்பற...... ஏலேலம்பற...... ஏலேலம்பற..... ஹோய்...." என்று எதோ ஒரு கண்ணாடி வட்டத்தில் நின்று இடுப்பை ஆட்டி ஆட்டி.... ஒரு அசரடிக்க போகிற ஆடல் பாடலுக்கு நம்மை தயார் படுத்தும் விதமே ரசனையின் தத்துவார்த்த மலரல். அடிச்சாடும் TR. எனும் மகத்தான கலைஞனின் அக்மார்க் ஸ்டைல் அது.

ஒற்றை கண் திறக்கிறது. சிமிட்டுகிறது. அத்தனை கிட்டத்தில் ஒற்றை குளோஸ்... மினுமினுக்கும் பேரானந்தம் பெருமூச்சில் கள்ளத்தனம் கூட நம் முன்னே விரிகிறது.

மேகத்தின் நடுவே வானத்தின் வழியில்... அவள் நளினமாய் ஒரு வான்கோழியின் நடையை பயில..... அதைத் தொடர்ந்து குரல் வழியே குற்றாலம் செய்ய ஆரம்பிக்கிறார் SPB எனும் தங்க குரலோன்.

"இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ... மோகினி போல் காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ..."
இந்திர லோகத்து.... சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ... மோகினி போல் காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ..." - இரண்டாம் முறையும் முதல் வரியே தகிக்கும் இளமையை ஜுவாலிக்க...இருமுறையும் ஒருமுறையாய் மறுமுறைக்கும் ஏங்கும்.

"ரதியென்பேன் மதியென்பேன் விதியென்பேன் நீ வா
உடலென்பேன் உயிரென்பேன் உறவென்பேன் நீ வா" - என்ற அடுத்தடுத்த வரிகளில் ரசனை தமிழ் போட்டு தாக்க... தாக்கும் தகிக்கும் வேர்க்கும் வியக்கும் என்று தமிழின் தாண்டவம்... இந்த மெட்டில் அமர்ந்து தேன் சிந்த துவங்குகையில்... அதற்கு ஒரு படி மேலே சென்று மறுபடி நான் தான் என்று...காட்சி அமைப்பில் பூந்தோட்டம் செய்திருப்பார் தலைவர் TR.

பரதத்தையும் பாவலா இல்லாமல் கனவில் ஆட விட்டு சுலபமாக்கினார் என்றால்... நடன அசைவில்... நாட்டிய இசையில்... இறங்கி ஏறும்... உடல் மொழியில்... வியந்து சிரிக்கும் முக மொழியில்... அம்மாம்மா... ஒரு சொர்க்க பூமியில்.. சுந்தரி சிரிக்கிறாள். ஒரு சித்திர சோலையில்... செந்தூரம் விதைக்கிறாள். பட்டுடலில் பவளம் பூத்தது போல தான் அவள் அணிந்திருக்கும் ஆடை.

இடையே டுக் டுக் டுக் டுக் டுக் என்று தொடர்பற்ற சப்தத்தில்... வழக்கத்தை மாற்றி மீட்டும் கும் கும் இசைக்கு நாம் தம் கட்டி தவம் கலையலாம் போல.

ஆசையாய் ஆசை ஆசையாய் அடுத்த முறையும் பார்க்க வேண்டும் என்று தோன்றும் ஆடை மாறும் லாவகம். பல்பெரியும் பாலத்தில் நாயகன் நிற்க... பம்பர சுழல் சூட்சுமத்தில் நாயகி சிலிர்க்க... மனம் நிறையும் ஹேப்பி வண்ணம் பூசிக்கொண்டு நம் தலைக்குள் வண்டு செய்கிறது. இந்திர லோக புகை நடுவே மேல் எழும்பி ஸ்லோ மோஷனில்... குதித்து இறங்கும் நாயகியை திரை கிழித்து தூக்கி சென்று விடும் அசடு நம்மில் பிராண்டும்.

சீரியல் பல்புகளால் ஆனா குடையும்.. சித்திர செழுமை நிறைந்த அவள் உடையும்... மெய்ம்மறக்க... மேனாமினுக்கும்.

"தென்றலதன் விலாசத்தை தன் தோற்றமதில் பெற்று வந்தவள்
மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்திற்கே கற்று தந்தவள்
முகத்தை தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு
ஏமாந்த கதைதான் கண்கள்
சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின் குரலில்
ஜொலிப்பதெல்லாம் கண்கள்
பாவை புருவத்தை வளைப்பதில் புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்"

முகத்தை தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு
ஏமாந்த கதைதான் கண்கள்

இந்த வரிக்கே வாரி கொடுக்கலாம். பிறகு எந்த வரிக்கும் சாரல் மழைத்துளி தான். தோற்றத்தில் தென்றல் சூடி...வானமும் மின்னலை அவளிடம் தேடி...முகத்தை தாமரை என்று நினைத்து ஏமாந்து போனதாம்... அது தான் கண்களாம். என்ன மாதிரி கற்பனை இது.. என்ன மாதிரி வர்ணனை இது. ரசனை எனும் திராட்சை தோட்டம் இதயத்தில் வளர்ந்தால் தான் இம்மாதிரி வாக்கியங்கள் சாத்தியம். ரசனை ராட்சஷனுக்கு ரௌத்ரமும் ரப ரப தான்.

"பாவை புருவத்தை வளைப்பதில் புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம் "

கலை... அதை கொண்டவளிடம் கற்கும் வினோதம் காதலில் உண்டு. அதை கலையாக்கி நம்மிடையே செய்யும் லாவகம் கலைஞனுக்கு உண்டு. ஏறி அடிக்கும் ஆட்டத்தில் இறங்கி கிறங்கவும் இடமுண்டு என்கிறது இவ்வரி இரண்டும். சாரல் மழை சடசடக்க குடையை மடக்கி போட்டு குதித்தாடவும் வழி உண்டு என்கிறது... இனிக்கும் வரி.

"கலைமகள் ஆடினாள் சலங்கைகள் குலுங்கினாள்
மின்னும் விழியை வைரம் கண்டது
நாணம் தழுவ பூமி உள்ளே ஒளிந்தது
கருவிழி உருளுது கவிதைகள் மலருது
பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது
எழில் நிலா ஆடும் விழா நடக்குது
தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு"

காகிதத்தை விட்டெடுக்காமல் எழுதினால் தான் இசைக்குள் வந்தமரும் கவிதை. அப்படியே நழுவிக் கொண்டே செல்லும் ஒவ்வொரு சொல்லிலும் ஒவ்வொரு வகை மது. ஊறி... நொதித்து... சேர்ந்து தவித்து.. என்று ஒரு ஏதேன் தோட்டம் கண்டெடுக்கும் நிதானம்.

"பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது" எனும் போது நாயகியின் அசைவில் தாபங்கள் கூடுது.. சாபங்கள் நீங்குது என நாமும் முணுமுணுக்கலாம்.

"பொன்னுருகும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்
இந்த மானிடன் மயங்கி விட்டான் அந்த மானிடம் மனதை விட்டான்"

மானிடன்... மானிடம் என்று போட்டு வாங்கி இருக்கும் கவிஞரை வியக்காமல் எப்படி. சிந்திக்கையிலேயே சித்திரம் அசையும் சித்தனுக்குள்ளும். இதழோரம் நறுமணம் கமழும் புன்னைகையை அடுத்த வரிக்கு சூட்டலாம்.

"அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம்
பாண்டி பேரரசு பார்த்த வியந்ததொரு முத்துச் சரங்கள் இதழோரம் ஹஆ...
பாவை இதழ் அது சிவப்பெனும் போது பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது"

"பாவை இதழ் அது சிவப்பெனும் போது பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது"

சித்திர வேலைப்பாட்டை எழுத்திலும் செய்யலாம் போல. சீக்கிரம் திறந்து விடும் மன கண்ணில் மையூரும் வேளை என்பது இது தான் போல. சரணாகதி தான் இவ்வரியில். சரிந்து விழுவதை தவிர சரிக்கு நிகர் என நிற்க ஒன்றுமில்லை. மீண்டும் மீண்டும் காதுக்குள் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும் இந்த வரியில்.... மிக உச்சத்தில் இருக்கும் ஒரு கவிஞனின் சிம்மாசனத்தை அண்ணாந்து பார்க்கிறோம். அற்புதம் தான் அது.

"பாவை இதழ் அது சிவப்பெனும் போது பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது"

- கவிஜி

Pin It