இந்த பாடலை ஏதோ ஒரு கடையில்.... தூரத்தில் கேட்டு விட்டு... மனதுக்குள் இனம் புரியாத பிசைதல். இப்படி ஒரு குரலை இதுவரை கேட்டதில்லையே என்ற தவிப்பு. ஆனால் அப்போதே புரிந்து விட்டது.. இது ராஜாவின் சித்து வேலையாகத்தான் இருக்கும். ஆனாலும்.. முதல் வரி.. மூன்றாம் வரி... என்று எந்த வரியும் நினைப்பில் இல்லை. ஆனால் டியூன் மட்டும் நெற்றியில் பாலிகிராப் கோடுகளாக ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு பாட்டு.... அது அப்டி என்னமோ... இப்படி... என சொல்ல இயலாத உள்ளார்ந்த தெளிவின்மையில் என்னென்னமோ சொன்னாலும்... தலையுமற்ற வாலுமற்ற பிண்டத்தை என்னவென்று சொல்லி அதன் பேர் கேட்பது. உள்ளே முடிச்சு அவிழ காத்திருக்கும் வரிகளை இன்னும் கூர்ந்து உற்று நோக்கி....இல்லாத உருவத்தை விடாமல் பிராண்டி.... "குறிஞ்சி பூக்கும்" வார்த்தையை மட்டும் பிடித்து விட்டேன்.

பிறகு கூகுள் அண்ணாச்சி ஒரு அரை மணி நேரம் அல்லாட வைத்து பிறகு "அள்ளி வெச்ச மல்லிகையே" என்று போட்டு தாக்கினான்.ilamai itho ithoஅண்ணாச்சிக்கு நமஸ்காரம் செய்து விட்டு அதன் பிறகு அறையில் அலற விட்டது அன்று இரவு தூங்கும் வரைக்கும்... அது ஒரு அலாதி பிரிய நேச பதார்த்தம். உள்ளே இதயம் நொறுங்க தலைக்குள் மூளை கிறங்க... நாடி நரம்பில் எல்லாம் நயமாய் வந்து ஊர்ந்தது நம்பிக்கை. உடனே... நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் லிங்க் அனுப்பி நான் பெற்ற இன்பம் பெறுக என் இனம் என்று அது ஒரு கொண்டாட்ட மனநிலை. ஒரு உத்வேக ஜெயிண்ட் வீல் இறக்கம். ஒரு கொண்டை ஊசி வளைவின் ஊதா நிறம்.

பாட்டும் காட்சியும் தொட்டாற்சிணுங்கி அருகே மெல்ல நிகழ்வது போல. உள்ளாரா ஒரு சிறு வெப்பம். அதனூடாக ஒரு காதல் தெப்பம். அந்த ஹீரோவின் வெள்ளந்தி பாவனைகளும் நடையும்.... அந்த ஹீரோயினின் அழகும் முறைப்பும் என பாட்டு முழுவதும் பருவம் பூத்த சிலிர்ப்பு. இசையின் கர்வம் வரிக்கு வரி விதி செய்ய... வினையற்று கேட்பது தவிர வேறென்ன முடியும் நமக்கு.

கிருஷ்ண சந்தர்.... சுசீலாவின் குரல்களில் காலத்துக்குமான கவிதை வழிகிறது. இசைத்த தேவனோ புல்லாங்குழலில் புதிர் செய்திருக்கிறார்.

இருக்கற துக்கமெல்லாம் துக்கடான்னு ஓடி போயிருச்சு. இப்படி ஒரு பாட்டை கேட்ட பிறகு நாம வாழறது தாண்டா வாழ்க்கைன்னு ஒரு துள்ளல்.

"அள்ளி வச்ச மல்லிகையே...."

என்று ஆண் குரல் நந்தவனத்தில் இருந்து எழும்பும் போதே ஆழ்மனதில் இருந்து ஒரு பெண்மை நமக்குள் பூத்து விடுகிறது.

"புள்ளி வச்ச பொன்மயிலே" என்ற அடுத்த வரிக்கு படக்கென்று கண்களில் காதல் பொங்கி விடுகிறது.

"என்ன தயக்கம் என்ன மயக்கம்" எனும் போது தானாக புன்னகை வந்து முகத்தில் அமர்ந்து கொண்டு காதலே ஜெயம் என்கிறது எந்த வயதும்.

"என்ன தயக்கம் என்ன மயக்கம்....நீ சிரிச்சா போதும்... குறிஞ்சி பூக்கும்" என்று முதல் வரியை மீண்டும் சொல்லி குறிஞ்சியில் பூத்து நிற்கும் சிரிப்பை விவரிக்க சொற்களுக்கு அலைகிறேன். அப்படி அலைவது தான் இந்த வரிகளுக்கு விருது.

ஆணின் அவசரமும் பெண்ணின் நிதானமும் காதலின் இரு வாசல்கள். ஜன்னல் திறக்க ஆசைப்படும் ஆணுக்கு அவளொரு தீர்த்தம். கதவு மூடும் அவளுக்கோ அவனொரு அருவி. இரண்டும் சேர நேரம் பிடிக்கும் தானே. அந்த நேர அந்தி சாயல் தான் இனி அடுத்தடுத்த வரிகள்.

"ஓ.. ராமனே உன் ஆசை மெய்யானதா..." அவள் கேட்கிறாள். காதல் இருந்தாலும்... கவனம் சரி தானா என்ற சந்தேகம் பெண் குணம் தானே.

"ஏ.. பூங்கொடி....இந்த பூமி பொய்யானதா.." அவன் சொல்கிறான். ஆதி ஏவாளே... இந்த உலகம் பொய்யா... அப்பிடி தான் நானும் என் காதலும் என்பது அவன் சூட்சும சொல்லாடல்.

"காதில் சொன்ன வார்த்தை என்னை காவல் காக்குமா.... நேத்து சொன்ன பேச்சு நெறம் மாறிப் போகுமா " மீண்டும் கொக்கியை சரி பார்க்கிறாள். சொன்னதெல்லாம் சரி தானா.. பேச்சு மாறிட்டா என்ன பண்றது.... என்பதெல்லாம் பெண் மன பூச்சூடல்.

"தங்கம் நிறம் கருக்குமா..... ஊர் உலகம் பொறுக்குமா..." மீண்டும் கொக்கென ஒற்றைக்கால் தவம் தான் அவனுக்கு. நிரூபிக்க... நிறம் கூடி வானவில் செய்து சூட்ட பின் தொடர்கிறான். வார்த்தை ஜாலத்தையே வாழ்க்கை ஆதாரம் ஆக்குகிறான்.

"நம்பித்தானே வந்து விழுந்தேனே..." எனும் போது பெண்மை தயாராகி விட்டது. தாலி எங்கே என்பது தொக்கி நிற்க... தாங்கி பிடிக்கும் வரத்தோடு சிரித்து நிற்கும் காதல்... சிணுக் என நட்சத்திரம் தாவ பார்க்கிறது. காதல் போல தெய்வம் வேறென்ன என்று இன்னும் சத்தமாக நாம் அருவியாய் கூவுகிறோம். காடலையும் குருவியாய் தூவுகிறோம்.

ஓரிடத்தில் முந்தானையை அவன் தான் பிடித்திழுத்து விட்டான் என்று நினைத்து திரும்பி தீ போல முறைத்து விட்டு... பிறகு பிடித்திழுத்தது அவனல்ல.... மரம் என்று தெரிகையில்.. படக்கென பனியாய் சிரித்து விடுவதும்... அப்பப்பா... இந்த நெத்தி மேலேறி இருக்கற புள்ளைங்கள கண்ண மூடிட்டு பிடிச்சிடுது... இந்த புள்ளைக்கும் அப்படித்தான்... இனிக்கும் நெற்றியில் இசைத்த தென்றலை உணர்ந்தேன்.

பாட்டில் கதை சொல்லும் அழகு இந்த பாட்டு முழுக்க மிளிர்வது மினுக் மினுக் கனவுகளின் பிரிண்டெட் காட்சிகள்.

"அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன்மயிலே
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும்
குறிஞ்சி பூக்கும்"

அழுகை அழுகையாய் வந்து விட அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே ஆனந்த புன்னகை நாம் சூடுகிறோம்.

"ஆகாயமும் இந்த மண்ணும் சாட்சியடி" எதுக்காம்... அவள் கொஞ்சம் இடம் கொடுத்து விட இன்னும் கொஞ்சம் தைரியம் கூடினால் வரியில் வலிமையும் சேரும் தானே. சேர்ந்து கொண்டது சேர்ந்து கொண்ட ஆர்வம்.

"யார் கேட்டது... மனசாட்சி போதும் இனி" அதெல்லாம் வேண்டாம் மாமா... மனசாட்சி போதும்.. காலம் உள்ள காலம் வரை காதலினால் ஆவதற்கு என்கிறாள். சதுர முகத்தில் சந்தன நிறத்தில் சாட்சாத் ஓரழகி இந்த நூர் இளமி.

"பாதம் நோகும்போது...உள்ளங்கையால் தாங்கவா..." கற்பனை காலில் சிறகு பூட்டி விட காதலன் கனவில் கலகம் செய்ய ஆரம்பிக்கிறான்.

"பொய்யே சொல்ல வேணாம்....சின்ன கையே தாங்குமா" " அதெப்படி தலைவா... கை தாங்குமா... இதயம் நோகுமே என்று வெட்கம் பூத்து பொய்க்கோபம் தூவி மனதுள் சாமரம் வீச நிற்கிறாள்.

"வெண்ணிலவு உதிருமா.... நட்சத்திரம் நகருமா" நீ இம்மென்றால் உள்ளதடி சொர்க்கம்... நீ இல்லை என்றால் இடுகாடு பக்கம் என்று எழுதிய கவிப்பேரரசு... சும்மா ஒத்தை வரியில் காற்று புரவி செய்து ஓட விட்டிருக்கிறார். நிலா உதிர்ந்தால்... நட்சத்திரம் நகர்ந்தால் என் காதல் பொய்யாகும் பெண்ணே... ஆகாது அதுவென்றால்.. தீராது என் காதல் என்கிறான்.

"உவமை வேணாம் உண்மை சொல்லு மாமா.." என்று கேட்டு நெஞ்சில் சரிந்திருக்கும் அவள் தலையை கொண்டே செல்லமாக அவன் தாடையில் வலிக்காமல் முட்டி கேட்பது காதலின் நுட்பம். உள்ளத்து ரகசியத்தை உண்மையாய் உருகி பார்க்க... உவமை வேண்டாம்... உண்மை சொல்லு மாமா என்று இழுத்து நிறுத்துகையில்... நமக்கு மூச்சில் சூடு. பேச்சில் அமைதி. சிந்தையில் சிரிப்பு. உள்ளத்தில் காதல்.

"அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன்மயிலே
என்ன தயக்கம் என்ன மயக்கம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும்
குறிஞ்சி பூக்கும்"

இந்த வரிகளை எழுதிய வைரமுத்துவை தான் இவரெல்லாம் கவிஞரா என்று ஒரு கூட்டம் தன் புத்தி மட்டை காட்டுகிறது. தனி மனிதன் பற்றிய அக்கறை இங்கே தேவை இல்லை. கவி மனிதன் பற்றிய வரியை அழுத்துகிறேன். அட்சய பாத்திரம் அவர் எழுதுகோல்.

ராஜ இசையில் மகுடம். ராத்திரியில் கேளுங்கள்... அதிகாலை வரை காதல் தான். தாங்கொணா இன்பத்தில் பகிர்கிறேன். வாழ்வது என்பதெல்லாம் இப்படித்தான்.... இந்தப் பாடல் கேட்டு தனக்குள் தானே பூத்து குலுங்குவது.... பிறகு மீண்டும் மீண்டும் இந்தப் பாட்டை கேட்டுக் கொண்டே இருப்பது.

"அள்ளி வச்ச மல்லிகையே..."

- கவிஜி

Pin It