எப்போது கேட்டாலும் இப்போது கேட்கிற மாதிரியே இருக்கும் உள்ளுணர்வை உணர்ந்ததால் எழுதுகிறேன்.

பாடலின் உள்ளே வாழ்வின் விரிசல்கள் ஒட்டப்படும். மனம் கசந்து கிடக்கையில்... வானம் நெருங்கி வந்து முத்தமிடுவது போல... இந்தப் பாடல். உடல் வெதும்பி கிடக்கையில்... கடல் சூழ்ந்த காற்றில் கவிதை வார்க்கும் இந்தப் பாடல். இதயம் வலிக்க... மருந்து தான் இந்தப் பாடல். கண்களின் ஈரத்தில் உறவுகளை உற்று நோக்குதல் தான் இந்தப் பாடல்.

"சிகரம்" படத்தின் எல்லா பாடல்களுமே சிகரம் தான் என்றாலும்... இந்த பாடல் சிகரத்தில் அமர்ந்திருக்கும் போதி என்று தான் சொல்ல வேண்டும். இசை SPB என்பது கூடுதல் நம்பிக்கை. கூடட்டும் தன்னம்பிக்கை... என்பது தான் இந்த முறை கேட்கையிலும்.

"அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு…
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு"

காட்சிப்படி கோரஸ் பாடிக்கொண்டிருக்கும் சார்லிக்கு கிடைத்திருக்கும் தனி பாடல் இது. படத்தில் முக்கிய பாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் வாழ்வின் மீதான நம்பிக்கை கூடும் இடமாக இருக்க கையாண்ட திரை நுட்பமாக தான் இந்தப் பாடலை பார்க்கிறேன். "காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு" வரியில் உள்ளாங்குழலில் உயிர் உருளுவதை உணர முடியும். எப்போதுமே புல்லாங்குழல் மீது நம்மை அறியாத பிணைப்பு உண்டு. அந்த வார்த்தை எதனோடு சேர்ந்தாலும் இசை வந்து இறங்கி விடுவதை நினைத்தாலே இனிக்கிறது. காட்டு மூங்கில் வார்த்தையில் ஒரு அட்சய பாத்திரம் மினுங்குவதை உணரலாம். அதன் வழியே வாழ்தலின் இசையை மூச்சாக்கும் வித்தையை அருகலாம்.spb and yesudas"சங்கீதமே சந்நிதி... சந்தோசம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி…சந்தோசம் சொல்லும் சங்கதி…

என்று ஏறி இறங்குகையில்... தோல்வி தோளில் இருந்து இறங்கி வெற்றி கண்களில் ஏறும். இதயம் சுமந்த பாறையில் நீர் கசிந்து பூ பூக்கும்.

"கார்காலம் வந்தால் என்ன
கடும் கோடை வந்தால் என்ன
மழை வெள்ளம் போகும்
கரை ரெண்டும் வாழும்

காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும்
மெய் அன்பு வாழும்"

மழைக்காலமோ வெயில் காலமோ... மழை வெள்ளம் அடித்துக் கொண்டு போகையிலும் இரு பக்கமிருக்கும் கரை.... வாழத்தானே செய்கிறது. எதிர்மறை சம்பவங்களின் வழியாகவும் நேர்மறை சிந்தனையை ஊற்றெடுக்க கற்று கொள் என்று தானே சொல்கிறது. காலமும் கோலமும் போய்க்கொண்டே இருக்கும். அழிந்து கொண்டே கூட இருக்கும். ஆனால் பொய் தாண்டி மெய்யாய் வாழ்வது அன்பின் ஆகிருதி. அதன் அடியில் தான் பூமி சுழலுகிறது. அதன் ஆடையில் தான் மானுட நிர்வாணங்கள் மறைக்கப்பட்டன. அன்பின் தேவை தான் எலும்பு ரத்தம் நரம்பு தசை.... கூடிய தேகமாய் இருக்கிறது. மெட்டில் மொட்டு விடுவது போல... மொட்டில் பூக்கள் தளிர்ப்பது போல... போகிற போக்கில் இதயத்தில் இசை வளர்ந்து போகும் ஜேசுதாஸின் குரல்... குரலா அது... குணம்.

"அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை"

அன்புக்கு ஏது உருவம்... அது ஓர் அரூபம். எங்கிருந்து எங்கும் நீளும். எங்கிருந்து எங்கும் தாவும். ஒரு மழை தேசத்துக்கும் ஒரு வெயில் தேசத்துக்கும் இடையே காலத்துக்குமான பாலமாய் அமையும். அது ஒப்புக்கொடுத்தலின் வழியே நிகழும் பிரார்த்தனை. பாசத்துக்கு வயது ஏது. வயது எண்களில் இருக்க... பருவம் கண்களில் இருக்கிறது. வானுக்கு முடிவு இல்லை... அதை தான் குறியீடாக சொல்கிறது இந்த வாழ்வுக்கும் விடையில்லை என்பது. விடை தேட தான் வாழ்கிறோம். ஆனால்...விடை தராத வாழ்வு தான் இந்த வானுக்கு கீழே வாய்த்திருக்கிறது. வானோடு முடிவும் இல்லை என்று அறிவேறி...அறிவியலை ஆராய்ந்து... பின் அப்படியே பணிந்து... வாழ்வோடு விடையும் இல்லை என்று மெய்ஞானத்தை மலர்த்தி காட்டுதல் தான் இலக்கியம்.

"இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே"

இனிப்பு தூக்கிக் கொண்டு ஊரும் எறும்பு கூட்டத்தை ரசித்து பார்ப்பது போன்ற பிரமிப்பு. ஒரு நீண்ட நெடிய தவத்தின் பின்னிருக்கும் வரம் போல... கேட்க ஆரம்பிக்கையில் இருந்த நாம் கேட்டு முடித்த பிறகு வேறொரு நாம் ஆக மாறி இருப்போம். இன்றென்பது உண்மையே....நம்பிக்கை உங்கள் கையிலே.

"தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே

பசியாற பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்"

கண்ணீர் இன்றி காதல் ஏது. சும்மா சண்டை போடுவதே சதா கட்டிக்கொள்ள தானே. ஊடல்களின் வழியே ஒருவரையொருவர் தேடுவது தானே காதலின் சூட்சுமம். நீரை வெறுக்காத மீன்கள் போல கண்ணீரை துறக்காத காதலே ஜெயம். காதலின் வலி காலத்தின் வழியே கடந்து விடாத கருப்பொருள். அது ஒரு பெரும்பாறையில் அவ்வப்போது ஒரு செடி ஒரு பூ ஒரு இலை என நினைவில் வாழும். பார்த்தால் பசி தீரும். பரிமாற சொற்கள் போதும். மௌனங்கள் கூட மடி சாய்ந்தால் முளைத்து விடும். அழுது தீர்க்கையில் தான் ஆகாயம் தெளிவாகிறது. அன்பும் அப்படியே. தழுவி தீர்கையில் கண்ணீர் பூச்செறிகிறது. காயங்கள் ஆற்றும் மாயங்கள் அன்பை அன்றி வேறென்ன.

"தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவா இல்லை"

கிளாசிக் ஷாட்ஸ் இங்கு தான் தெறிக்கிறது. வைரமுத்து எனும் வாள்.... சீவி செல்லும் இதயத்தில் யுத்தமில்லை. முத்தம்.

தலை சாய்க்க இடமா இல்லை...தலை கோத விரலா இல்லை இளங்காற்று வரவா இல்லை....இளைப்பாறு பரவா இல்லை. தவித்தது போதும். தாகத்தை தணிக்க கொஞ்சம் தலை சாய். இடம் இருக்கிறது. சாய்த்த தலையை கோதி விட விரல்கள் இல்லாமலா போகும். அமிழ்ந்து ஒடிந்து ஒதுங்கி விடாதே. இளங்காற்று வரும். இசையோடு வரும். இளைப்பாறு இதயமே.

ஆறுதல் படுத்தி... சாந்தப்படுத்தி.... தட்டி கொடுத்து.... பிறகு இன்னும் ஒரு வரி மானுட இமயத்தில் இருந்து எடுத்து வந்து உள்ளங்கை விரித்து ஒரு சிலுவையை போல தாங்குகிறது.

எறும்புக்கும் வாழ்க்கை இருக்கு தானே. துளி உணவை பெரும்பாறையாக தூக்கி போகும் எறும்புக்கு இல்லாத பிரச்சனையா. வாசல்.. கடந்தால் தான் உண்டு... வாழ்க்கை. ஆயினும் கடக்கிறதே... அந்த நம்பிக்கையே நல்லது. அன்பு கொண்டு நம்பு மனிதா. நம்பிக்கை அன்புள்ள மனதில் தான் ஆழமாய் வேர் விடும்.

"நம்பிக்கையே நல்லது…
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது…"

- கவிஜி

Pin It